நம் கொள்கை என்ன?
இன்று பெரிய வியாழக்கிழமை. இன்றுதான் இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தினார். இன்றுதான் இயேசு நற்கருணையைக் கொடுத்தார். இன்றுதான் இயேசு புதிய கட்டளையைத் தந்தார்.
குருத்துவம் என்பது பற்றற்றான் பற்றினைப் பற்றுவதற்காக, இயேசுவைப் போல இறுதிவரை உலகை அன்பு செய்வதில் அடங்கியுள்ளது. நற்கருணை என்பது இயேசு உலகின் மீது பொழிந்த அன்பின் இமயமாக விளங்குகின்றது. புதிய கட்டளை என்பது எதையும் எதிர்பாராது மற்றவர்மீது நிபந்தனையற்ற அன்பைப் பொழிவதில் அடங்கியுள்ளது.
இயேசு பெரிய வியாழக்கிழமையன்று நமக்களித்த மூன்று பரிசுகளின் மையமாக விளங்குவது அன்பு. இந்த நாள் நமது வாழ்க்கையில் ஓர் அர்த்தமுள்ள நாளாக அமைய வேண்டுமானால் அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல் : அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல் என்று பாடி. இனி நமது வாழ்வின் அச்சாணி அன்பே (மத் 22:34-39) என்று வாழ முன்வர வேண்டும். ஒரு சாலையின் வழியாக ஒரு குருவும். சீடனும் சென்று கொண்டிருந்தார்கள். திடீரென முரடன் ஒருவன் அவர்கள் முன்னால் தோன்றி அந்தக் குருவின்மீது வசைமாரி பொழிந்தான். துறவற மடத்தை அடைந்ததும் சீடன் குருவிடம், குருவே ஒரு சந்தேகம் என்றான். குரு. என்ன சந்தேகம்? என்றார். நாம் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது. முரடன் ஒருவன் உங்களைச் சபித்தான். நீங்கள் எதிர்த்து எதுவுமே சொல்லவில்லையே! ஏன்? என்று கேட்டான். அதற்குக் குரு. பேசிவிட்டுத்தானே சென்றான். என்னை அடிக்கவில்லையே! என்றார். அடித்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அடித்துவிட்டுத்தானே செல்கின்றான். என்னைக் கொலை செய்யவில்லையே என நினைத்திருப்பேன். கொலை செய்ய நினைத்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என் உயிரைத்தானே எடுத்துச் செல்கின்றான். என் கொள்கையை எடுத்துச் செல்லவில்லையே என்று எண்ணி அமைதியாக உயிர் துறந்திருப்பேன் என்றார் குரு. அதற்குச் சீடன், உங்கள் கொள்கைதான் என்ன? என்று கேட்க, அதற்குக் குரு. பிறர்மீது நிபந்தனையில்லா அன்பைப் பொழிவதே என் கொள்கை என்றார்.
நிபந்தனையில்லா அன்பு என்றால் எதையுமே எதிர்பாராமல் நம்மிடம் உள்ள பொருளையும், அருளையும் தேவைப்பட்டால் உயிரையும் பிறரோடு பகிர்ந்துகொள்ள முன்வருதல். இப்படி வாழ்வது அவ்வளவு எளிய செயலல்ல.
மற்றவர்களைப் பார்த்து, அதிகாலைப் பொழுதில் எழுந்து பாடும் பறவைகள் நாங்கள்! நாங்கள் எதையும் உங்களிடமிருந்து எதிர்பார்த்துப் பாடவில்லை! எங்கள் கடமையைத்தான் செய்கின்றோம். எதிர்பார்த்து எங்கள் வீட்டிற்கு வரும் எறும்புகளுக்கு நாங்கள் வரைந்து வைத்திருப்பது கலர்க்கோலம் அல்ல மாக்கோலம்! என்று சொல்லி வாழ்வது அவ்வளவு எளிதல்ல!
இதை உணர்ந்துதான் அன்பு வாழ்வில் ஏற்படும் தடைக்கற்களையெல்லாம் படிக்கற்களாக மாற்ற, இயேசு உலகம் முடிவுவரை என்றும் நம்மோடு வாழச் சித்தமானார்.
சுயநலம் என்பது ஒரு வியாதி! அதை அழிக்கும் மருந்துதான் நற்கருணை! பிறர்நலம் என்பது ஒரு விளக்கு! அதை எரிய விடும் தீக்குச்சிதான் நற்கருணை!
பழைய ஏற்பாட்டில் ஆட்டின் இரத்தம் பூசப்பட்டிருந்த வீடுகள் கடவுளின் ஆசி பெற்றன (முதல் வாசகம்). புதிய ஏற்பாட்டிலே மனித நேயம் பூசப்பட்டிருக்கும் இதயங்கள் இயேசுவின் ஆசி பெறும்.
பெரிய வியாழனன்று ஆண்டவராம் இயேசு தந்த பரிசுகளின் நோக்கத்தை அறிந்து அவர் ஆசையை நிறைவேற்றி அவர் ஆசிபெற்று வளமுடன் வாழ்வோம்.
மேலும் அறிவோம் :
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் : 80).
பொருள்:
அன்பு நிறைந்த உள்ளத்துடன் இயங்குவதே உயிருடன் கூடிய உடலாகும். அன்பு நெஞ்சம் இல்லாத உடல், உயிரற்ற எலும்புக்கூட்டைத் தோலால் போர்த்திய வெற்றுடல் ஆகும்.
ஓர் இளைஞன் ஓர் இளம் பெண்ணைக் காதலித்தான். திடீரென்று அவளை விட்டுவிட்டு அவள் தங்கையைக் காதலிக்க ஆரம்பித்தான், அவள் அவனுடைய திடீர் மாற்றத்திற்குக் காரணம் கேட்டபோது, அவன், "உன்னைப் பார்த்தபோது என்னை மறந்தேன். உன் தங்கையைப் பார்த்தபோது உன்னை மறந்தேன்" என்று கூறி கைகழுவினான்.
மனிதக் காதல் மாறக்கூடியது. ஆனால் கடவுளுடைய அன்பு என்றும் நிலையானது. இன்றைய நற்செய்தியில் யோவான் கூறுகிறார்: *உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்" (யோவா 13:1). கிறிஸ்து தம் சீடர்களை மட்டுமன்று நம் அனைவரையுமே இறுதிவரை அன்பு செய்கிறார். கிறிஸ்து எவ்வாறு நம்மை இறுதிவரை அன்பு செய்கிறார் என்பதை இன்றைய திருவழிபாடு வெளிப்படுத்துகிறது.
பெரிய வியாழன் திருவழிபாடு மகிழ்ச்சியில் தோய்ந்துள்ளது. அதற்கான காரணம்: 1.இன்றுதான் கிறிஸ்து அன்பின் அருளடையாளமாகிய நற்கருணையைத் திருச்சபைக்கு அளித்தார். 2.இன்றுதான் கிறிஸ்து தமது கல்வாசிப் பலியைக் காலமெல்லாம் நீடிக்கும் வண்ணம் பணிக்குருத்துவத்தை ஏற்படுத்தினார். 3.இன்றுதான் கிறிஸ்து தமது சீடர்களுடைய பாதங்களைக் கழுவி, அன்புக் கட்டளையைக் கொடுத்தார். இம்மூன்று நிகழ்வுகளும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையன. எனினும், இன்று நற்கருணை மறை பொருளைப்பற்றி நமது கவனத்தைச் செலுத்துவோம்.
நற்கருணை மறைபொருளைப்பற்றி புனித அக்வினாஸ் தோமையார் பின்வருமாறு பாடியுள்ளார். ஓ புனித திருவிருந்தே! இவ்விருந்தில் கிறிஸ்து உண்ணப்படுகிறார்; அவருடைய பாடுகள் நினைவுகூரப்படுகிறது; வரவிருக்கும் மாட்சிமையின் உறுதிமொழி அளிக்கப்படுகிறது. இவ்வாறு நற்கருணை இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்தையும் உள்ளடக்கியுள்ளது.
நற்கருணை இறந்தகாலத்தில் நிகழ்ந்தேறிய கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூருகிறது. திருத்தூதர் பவுல் கூறுகிறார்; "நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்" (1 கொரி 11:26), எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற பாஸ்கா இரவை இஸ்ரயேல் மக்கள் ஆண்டுதோறும் நினைவுகூர வேண்டிய நாளாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று கூறுகிறது இன்றைய முதல் வாசகம். (இச 12:1-8, 11-14). அவ்வாறே கிறிஸ்து பெரிய வியாழனன்று தமது இறுதிப் பாஸ்காவைக் கொண்டாடி, நற்கருணையை ஏற்படுத்தி "எனது நினைவாகச் செய்யுங்கள்" (லூக் 22:19) என்று சீடர்களுக்குக் கூறினார். நற்கருணை கல்வாரிப் பலியை நினைவுகூருகிறது. கிறிஸ்து தமது ஒரே பலியால் முற்காலப் பலிகளை நிறைவு செய்தார். அவரே பாஸ்கா செம்மறி (1 கொரி 5:7).
நற்கருணை மறைபொருள் நிகழ்காலப் பரிமாணத்தைக் கொண்டுள்ளது. அதை நாம் உட்கொள்ளும்போது நமது அகம் அருளால் நிரப்பப்படுகிறது. நற்கருணை மூலம் நாம் கிறிஸ்துவால் வாழுகிறோம். அவர் நம்மிலும் நாம் அவரிலும் இணைகிறோம் (யோவா 6:54).
நற்கருணை மறைபொருள் நம்மை எதிர்கால விண்ணக மகிமைக்கு இட்டுச் செல்கிறது. "எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன்" (யோவா 6:54). எனவே நற்கருணை விண்ணக வாழ்வின் பிணையாக, அச்சாரமாக உள்ளது.
இவ்வாறு, நற்ருணை 'நினைவுகூர்தல்' (memorial), 'பிரசன்னப் படுத்தல்' (actualisation), 'முன்னறிவித்தல்' (Prophecy) ஆகிய முப்பரிமாணங்களையும் கொண்டுள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த நற்கருணையானது கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சியுமாக உள்ளது என்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்கம் (திருச்சபை, எண் 11).
நற்கருணைதான் திருச்சபையைக் கட்டி எழுப்புகிறது; திருச்சபைதான் நற்கருணையைக் கொண்டாடுகிறது. நற்கருணையால் திருச்சபை வாழ்கிறது: வளர்கிறது. தொடக்கக்காலத் திருச்சபையில் ‘அப்பம் பிடுதல்’ ஓர் இன்றியமையாதக் கூறாகத் திகழ்ந்தது (திப 2:42). கிறிஸ்து அப்பத்தைப் பிட்டபோதுதான் எம்மாவு சென்ற இரண்டு சீடர்களின் கண்கள் திறக்கப்பட்டன (லூக் 24:31). கிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரை, அவரை அப்பம் பிடுவதில் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
நற்கருணை அன்பின் அருள் அடையாளம்; ஒற்றுமையின் அடையாளம், நற்கருணையின் பண்பும் பயனும் அன்பும் ஒற்றுமையுமாகும். போட்டி பொறாமை, சண்டைச் சச்சரவுடன் நாம் நற்கருணையை உட்கொண்டால், அது நமக்கு நலம் தரும் மருந்தாக அமையாமல், தண்டனைக்குரிய குற்றமாக மாறிவிடும் என்று எச்சரிக்கின்றார் திருத்தூதர் பவுல் ( 1 கொரி 11:27-30).
இன்றைய வழிபாட்டில், "அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கிறார்" என்ற தொன்மையானப் பாடல் பாடப்படுகிறது. இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து அன்பிள் கட்டளையை நமக்குக் கொடுக்கிறார் (யோவா 13:34). "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" (1 யோவா 3:18). பெரிய வியாழன் பசிப்பிணிக்காகக் காணிக்கை எடுக்கப்படுகிறது. அதற்காகத் தாராளமாக நமது காணிக்கையை அளிப்போம்.
'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில், செகத்தினை அழித்திடுவோம்' என்று முழங்கினார் பாரதி. இவ்வுலகில் ஒருவர் பட்டினி கிடக்கும்போது, மற்றவர்கள் நல்ல மனச்சாட்சியுடன் சாப்பிட முடியுமா? "பசியால் மடியும் மனிதருக்கு உணவளி; ஏனென்றால் அவர்களுக்கு உணவு அளிக்காவிட்டால் நீ அவர்களைக் கொன்றவனாவாய்" என்று கூற வத்திக்கான் சங்கம் தயங்கவில்லை (இன்றைய உலகில் திருச்சபை, எண் 69). நமக்குள்ளதை மற்றவர்களுடன் பகிர்ந்து, பல உயிர்களைக் காப்பதே தலையான அறம்.
"பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"(குறள் 322)
நற்கருணை நமது வாழ்வின் மையமாக அமைந்துள்ளதா? நற்கருணை உட்கொள்வதால் நாம் கிறிஸ்துவின் அன்புக் கட்டளையை நிறைவேற்றுகின்றோமா? நற்கருணையைப் பிடுவதால், நமது உணவை மட்டுமல்ல, நம்மையே பிறருக்குப் பிட்டுக் கொடுக்கத் தயாரா? இக்கேள்விகளுக்கு நம்முடைய பதில் என்ன?
இறுதி வரை அன்பு
பெரிய வியாழன் - அன்புக்கு இலக்கணம் வகுத்த நாள்! இயேசு -"உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதி வரையும் அன்பு செலுத்தினார்" (யோ.13:1)
இறுதிவரை அன்பு செலுத்தினார். இறுதி என்ற சொல் கால அளவை மட்டுமன்று, அன்பின் அளவற்ற தன்மையையும் குறிப்பிடும் அதாவது தமது வாழ்வின் இறுதி மூச்சு வரை என்ற கருத்தினை மட்டுமல்ல, எவ்வளவுக்கு அன்பு செய்யக் கூடுமோ அவ்வளவுக்குத் தன்னையே பலியாக்கும் அளவுக்கு, தன் இரத்தத்தை, ஏன் தன் உயிரையே விலையாக்கும் அளவுக்கு - அன்பு செய்தார் என்ற கருத்தும் அழுத்தம் பெறுகிறது.
நம்மீது கொண்ட பேரன்பினால் தான் பாடுபடுவதற்கு முந்திய நாள் இறுதி இரவு உணவு வேளையில் இயேசு அப்பத்தையும் இரசத்தையும் எடுத்துத் தன் உடலாக, இரத்தமாக மாற்றி தன் சீடருக்கு அளித்து “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். எதை நாம் அவர் நினைவாகச் செய்கிறோம்?
இன்றைய சமுதாயத்தில் வாழும் மனிதனுக்கு நற்கருணை அருள்சாதனம் வழங்கும் செய்தி என்ன? இந்தக் கேள்விக்கான பதில் நம் வாழ்க்கையில் இருக்கிறதே தவிர நற்கருணைப் பேழையிலோ, கதிர்ப் பாத்திரத்திலோ, அலங்காரப் பவனிகளிலோ, ஆடம்பர ஆராதனை களிலோ அல்ல.
இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்று இயேசு எதனைக் குறிப்பிடுகிறார்? அன்றாடம் நாம் நடத்தும் அரைமணி நேர வழிபாட்டை மட்டுமா? கடைசி இரவு உணவு வேளையில் தந்த புதிய கட்டளை, காலடி கழுவிய முன் மாதிரி என்ன ஆயிற்று? வாழப்பட வேண்டிய ஒன்று, சாட்சி பகரப்பட வேண்டிய ஒன்று இன்று சடங்காகப் பக்தி முயற்சியாகி யிருக்கிறது. நற்கருணையைச் சடங்காக்கிய பெருமையைத்தான் பீற்றிக் கொள்ள முடியுமே தவிர அதனை எங்கே வாழ்வாக்கி இருக்கிறோம்? வளமான உறவின் வெளிப்பாடாக்கியிருக்கிறோம்? நற்கருணையை வைத்துச் சண்டை போடாமல் இருந்தாலே - சப்பாத்தியா, இட்லியா? இந்தியமயமா மேலைநாட்டு மரபா? போதும் என்று சொல்லத் தோன்றுகிறது.
எதையோ நினைத்து இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்றார் இயேசு. எதையோ நினைத்து எதையோ அவர் நினைவாகச் செய்து திருப்தி அடைகிறோம்.
இலத்தீன் அமெரிக்கா எல்சால்வதோர் மாநிலத்தில் உள்ள ஓர் ஆலயத்தில் கொள்ளையர்கள் புகுந்து நற்கருணைப் பேழையை உடைத்து நற்கருணையைத் தெருப்புழுதியில் வீசி எறிந்தனர். இதை அறிந்து ஆத்திரமடைந்த மக்கள், ஆயர் ஹெல்டர் கமராவைச் சந்திதது மாபெரும் கண்டனப் பேரணியும் பரிகார வழிபாடும் நடத்த வேண்டும் என்றனர். ஆயரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தார்.
பரிகார வழிபாட்டில் “தந்தையே இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று நற்கருணை அவமதிப்புச் செய்தவர்களுக்காகச் செபித்து விட்டு மறையுரையில் சொன்னார்: "மக்களே, உணர்வுப் பூர்வமான உங்கள் எதிர்ப்பை உரத்த குரலில் எழுப்பி இன்றைய நிகழ்வை உயிரோட்ட மிக்கதாக மாற்றியிருக்கிறீர்கள். 'நற்கருணைமீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, பெருமதிப்பு பாராட்டுக்குரியது. நற்கருணை ஆண்டவரைப் புழுதியில் வீசியதற்காக துடிதுடிக்கும் நாம் இதே எல்சால்வதோர் சாலையோரத்தில் எத்தனை ஏழைகள் உணவின்றி, உடையின்றி, உறைவிடமின்றி மடிந்து கொண்டிருக்கிறார்களே. அவர்களில் இயேசுவைக் காண்கிறோமா? இவர்கள் பக்கம் நம் கவனம் திரும்பும்போதுதான் நாம் நற்கருணை ஆண்டவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை செயலுள்ளதாகவும் பொருள் உள்ளதாகவும் அமையும்”.
நற்கருணைக் கொண்டாட்டம் -அன்பின் புதிய கட்டளை இரண்டும் ஒன்றுக்கொன்று ஈடானவை, நிறைவு தருபவை சமஅளவில் முக்கியம் பெறுபவை. ஏன், தெரியுமா?
1. கட்டளைகள் இரண்டும் ஒரே மாதிரி.
- -"இதைப் பெற்று உண்ணுங்கள்" (மத்.26:26)
- -"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" (யோ.13:34)
2. கட்டளைகள் இரண்டையும் கடைப்பிடிக்கக் காரணம் ஒரே மாதிரி.
- -ஏனெனில் “இது என் உடல்" (மத்.26:26)
- ஏனெனில் “இச்சிறியோருக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்" (மத்.25:40)
3. கட்டளைகள் இரண்டையும் மீறினால் கிடைக்கும் தண்டனையும் ஒரே மாதிரி.
- மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்” (யோ.6:53)
- இச்சிறியோரை அன்பு செய்யாதவர்கள் "முடிவில்லாத் தண்டனை அடைவார்கள்"
(மத்.25:46)
நம்மோடு வாழவிரும்பிய இறைமகன், நம்மில் ஒருவராக வாழ்ந்த இயேசு நமக்காகத் தன்னையே தந்த அன்பின் சின்னம் நற்கருணை. இயேசுவின் திரு உடல் நம் உடலோடு உடலாகவும் இயேசுவின் திரு இரத்தம் நம் இரத்தத்தோடு இரத்தமாகவும் ஆகிவிட்டால் வேறு எதையும் நாம் தேட மாட்டோம் அப்போது “நானல்ல வாழ்வது, இயேசு என்னில் வாழ்கிறார்" என்ற நிலை பிறக்கும். இயேசு நம்மை அன்பு செய்ததுபோல நாமும் ஒருவர் ஒருவரை அன்பு செய்வோம்.
இறுதி வரை அன்பு
பெரிய வியாழன் - அன்புக்கு இலக்கணம் வகுத்த நாள்! இயேசு -"உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதி வரையும் அன்பு செலுத்தினார்" (யோ.13:1)
இறுதிவரை அன்பு செலுத்தினார். இறுதி என்ற சொல் கால அளவை மட்டுமன்று, அன்பின் அளவற்ற தன்மையையும் குறிப்பிடும் அதாவது தமது வாழ்வின் இறுதி மூச்சு வரை என்ற கருத்தினை மட்டுமல்ல, எவ்வளவுக்கு அன்பு செய்யக் கூடுமோ அவ்வளவுக்குத் தன்னையே பலியாக்கும் அளவுக்கு, தன் இரத்தத்தை, ஏன் தன் உயிரையே விலையாக்கும் அளவுக்கு - அன்பு செய்தார் என்ற கருத்தும் அழுத்தம் பெறுகிறது.
நம்மீது கொண்ட பேரன்பினால் தான் பாடுபடுவதற்கு முந்திய நாள் இறுதி இரவு உணவு வேளையில் இயேசு அப்பத்தையும் இரசத்தையும் எடுத்துத் தன் உடலாக, இரத்தமாக மாற்றி தன் சீடருக்கு அளித்து “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். எதை நாம் அவர் நினைவாகச் செய்கிறோம்?
இன்றைய சமுதாயத்தில் வாழும் மனிதனுக்கு நற்கருணை அருள்சாதனம் வழங்கும் செய்தி என்ன? இந்தக் கேள்விக்கான பதில் நம் வாழ்க்கையில் இருக்கிறதே தவிர நற்கருணைப் பேழையிலோ, கதிர்ப் பாத்திரத்திலோ, அலங்காரப் பவனிகளிலோ, ஆடம்பர ஆராதனை களிலோ அல்ல.
இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்று இயேசு எதனைக் குறிப்பிடுகிறார்? அன்றாடம் நாம் நடத்தும் அரைமணி நேர வழிபாட்டை மட்டுமா? கடைசி இரவு உணவு வேளையில் தந்த புதிய கட்டளை, காலடி கழுவிய முன் மாதிரி என்ன ஆயிற்று? வாழப்பட வேண்டிய ஒன்று, சாட்சி பகரப்பட வேண்டிய ஒன்று இன்று சடங்காகப் பக்தி முயற்சியாகி யிருக்கிறது. நற்கருணையைச் சடங்காக்கிய பெருமையைத்தான் பீற்றிக் கொள்ள முடியுமே தவிர அதனை எங்கே வாழ்வாக்கி இருக்கிறோம்? வளமான உறவின் வெளிப்பாடாக்கியிருக்கிறோம்? நற்கருணையை வைத்துச் சண்டை போடாமல் இருந்தாலே - சப்பாத்தியா, இட்லியா? இந்தியமயமா மேலைநாட்டு மரபா? போதும் என்று சொல்லத் தோன்றுகிறது.
எதையோ நினைத்து இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்றார் இயேசு. எதையோ நினைத்து எதையோ அவர் நினைவாகச் செய்து திருப்தி அடைகிறோம்.
இலத்தீன் அமெரிக்கா எல்சால்வதோர் மாநிலத்தில் உள்ள ஓர் ஆலயத்தில் கொள்ளையர்கள் புகுந்து நற்கருணைப் பேழையை உடைத்து நற்கருணையைத் தெருப்புழுதியில் வீசி எறிந்தனர். இதை அறிந்து ஆத்திரமடைந்த மக்கள், ஆயர் ஹெல்டர் கமராவைச் சந்திதது மாபெரும் கண்டனப் பேரணியும் பரிகார வழிபாடும் நடத்த வேண்டும் என்றனர். ஆயரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தார்.
பரிகார வழிபாட்டில் “தந்தையே இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று நற்கருணை அவமதிப்புச் செய்தவர்களுக்காகச் செபித்து விட்டு மறையுரையில் சொன்னார்: "மக்களே, உணர்வுப் பூர்வமான உங்கள் எதிர்ப்பை உரத்த குரலில் எழுப்பி இன்றைய நிகழ்வை உயிரோட்ட மிக்கதாக மாற்றியிருக்கிறீர்கள். 'நற்கருணைமீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, பெருமதிப்பு பாராட்டுக்குரியது. நற்கருணை ஆண்டவரைப் புழுதியில் வீசியதற்காக துடிதுடிக்கும் நாம் இதே எல்சால்வதோர் சாலையோரத்தில் எத்தனை ஏழைகள் உணவின்றி, உடையின்றி, உறைவிடமின்றி மடிந்து கொண்டிருக்கிறார்களே. அவர்களில் இயேசுவைக் காண்கிறோமா? இவர்கள் பக்கம் நம் கவனம் திரும்பும்போதுதான் நாம் நற்கருணை ஆண்டவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை செயலுள்ளதாகவும் பொருள் உள்ளதாகவும் அமையும்”.
நற்கருணைக் கொண்டாட்டம் -அன்பின் புதிய கட்டளை இரண்டும் ஒன்றுக்கொன்று ஈடானவை, நிறைவு தருபவை சமஅளவில் முக்கியம் பெறுபவை. ஏன், தெரியுமா?
1. கட்டளைகள் இரண்டும் ஒரே மாதிரி.
- -"இதைப் பெற்று உண்ணுங்கள்" (மத்.26:26)
- -"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" (யோ.13:34)
2. கட்டளைகள் இரண்டையும் கடைப்பிடிக்கக் காரணம் ஒரே மாதிரி.
- -ஏனெனில் “இது என் உடல்" (மத்.26:26)
- ஏனெனில் “இச்சிறியோருக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்" (மத்.25:40)
3. கட்டளைகள் இரண்டையும் மீறினால் கிடைக்கும் தண்டனையும் ஒரே மாதிரி.
- மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்” (யோ.6:53)
- இச்சிறியோரை அன்பு செய்யாதவர்கள் "முடிவில்லாத் தண்டனை அடைவார்கள்"
(மத்.25:46)
நம்மோடு வாழவிரும்பிய இறைமகன், நம்மில் ஒருவராக வாழ்ந்த இயேசு நமக்காகத் தன்னையே தந்த அன்பின் சின்னம் நற்கருணை. இயேசுவின் திரு உடல் நம் உடலோடு உடலாகவும் இயேசுவின் திரு இரத்தம் நம் இரத்தத்தோடு இரத்தமாகவும் ஆகிவிட்டால் வேறு எதையும் நாம் தேட மாட்டோம் அப்போது “நானல்ல வாழ்வது, இயேசு என்னில் வாழ்கிறார்" என்ற நிலை பிறக்கும். இயேசு நம்மை அன்பு செய்ததுபோல நாமும் ஒருவர் ஒருவரை அன்பு செய்வோம்.
பெரிய வியாழன்
வரலாற்றுப் பின்னணி
பெரிய வியாழன் 'அன்பின் நாள்' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாகக் கூடி கிறிஸ்துவின் கடைசி இராவுணவை நினைவு கூறுகிறார்கள். இந்த நாளில்தான் தொடக்க கிறிஸ்தவர்களில் பாவிகள் என்று கருது- பவர்கள், கிறிஸ்தவ சமூகத்திற்கு முன்பு தங்களது பாவங்களை அறிக்கையிட்டு பரிகாரம் செய்து திருப்பலியில் ஒரே குடும்பமாக பங்கு கொள்வார்கள். சிறந்த முறையில் அன்பை வெளிப்படுத்துவது, கிறிஸ்தவ சமூகத்துடன் சமரசம் செய்து கொள்வதே ஆகும்.
முதல் வாசகப் பின்னணி (வி.ப. 12:1-8, 11-14)
எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் துன்பப்படுவதை கண்ட கடவுள் மோயிசனை அனுப்பி அவர்களை மீட்கிறார். பல்வேறு புதுமைகளை நிகழ்த்தி இஸ்ரயேலின் கடவுள் வலிமை மிக்கவர் என்பதை காண்- பிக்கிறார். ஆனால் எகிப்தை ஆண்ட இரண்டாம் ராம்சிஸ் என்ற அரசன் கடின உள்ளம் படைத்தவனாக இருந்ததால் இஸ்ரயேல் மக்களை விடுவிக்கவில்லை. இறுதியில் கடவுள் வானதூதர்களை அனுப்பி எகிப்தியர்களின் தலைபேறான மகன்களைக் கொன்றார். இஸ்ரயேல் மக்கள் தங்களது கதவு நிலையில் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை தடவியிருந்ததால் அவர்களது குழந்தைகளுக்கு எதுவும் நிகழவில்லை. எகிப்து அரசன் இதன் பொருட்டு இஸ்ரயேல் மக்களை விடுவித்தான். இதை நினைவு கூர்ந்த இஸ்ரயேல் மக்கள் வருடந்தோறும் பாஸ்கு விழாவைக் கொண்டாடுவார்கள். இதைத்தான் இவ்வாசகம் எடுத்துரைக்கிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (1கொரி. 11:23-26)
நற்கருணை தொடக்க கிறிஸ்தவர்களின் வழிபாட்டில் மைய- மாகத் திகழ்ந்தது. வழிபாடானது தனிப்பட்ட நபரின் வீட்டில் நடைபெற்- றது. 'ஒரே குடும்பம்' என்ற உணர்வைப் பெற அனைவரும் உணவை தங்களுடன் பகிர்ந்து கொண்டனர். அவ்வாறு பகிரும்போது பணக்- காரர்கள் தங்களுடைய உணவைப் பணகாரர்களிடம் மட்டும்தான் பகிர்ந்தார்கள். ஏழைகள் தங்களுடைய உணவை ஏழைகளிடம் பகிர்ந்தார்கள். இவ்வாறு அவர்களிடம் பிளவு ஏற்பட்டது. எனவே பவுல் அவர்களிடையே நிலவிய பிறிவினை நீக்க இயேசு ஏற்படுத்திய நற்கருணையின் சிறப்பையும் இத்தகைய சிறப்பான உணவில்தான் நாம் ஒவ்வொருவரும் பங்கு பெற்று கிறிஸ்துவில் ஓர் உடல் ஆகிறோம். என்பதை கொரிந்து நகர மக்களுக்கும் இன்று நமக்கும் அறிவிக்கிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 13:1-15)
யோவான் தன்னுடைய நற்செய்தியை இயேசுவின் கடைசி இராவுணவு ஏற்படுத்திய 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எழுதியி- ருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். இருந்த போதும் யோவான் தன்னுடைய நற்செய்தியில் இந்த இராவுணவின் சிறப்பை 13-17 அதிகாரங்களில் தெளிவாக எடுத்துரைக்கிறார். அவர் நற்செய்தி எழுதிய காலத்தில் தொடக்க கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் இராவு- ணவை ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையிலும் நினைவு கூர்ந்து கொண்- டாடினார்கள். இந்த இராவுணவில் அவர் கொடுத்த புதிய கட்டளை: "நான் உங்களை அன்பு செய்வதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்" (யோவான் 13:34). இத்தகைய மேலான அன்புக்கட்டளையை யோவான் நற்செய்தியில் வலியுறுத்துகிறார். இத்தகைய அன்பைதான் இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவி அன்புக்கட்டளையின் மேன்மையை எடுத்துரைக்கிறார்.
மறையுரை
"தன் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:16). மகனாகிய இயேசு கிறிஸ்துவும் தம் வாழ்வாலும் வாக்கினாலும் தந்தை கடவு- ளின் அன்பை பிரதிபலித்தார். இயேசு தனது அன்பை தனக்குரியவர்- கள் மேல் இறுதி வரையிலும் அன்பு செலுத்தினார். அவரின் அன்பு இன்றைய நற்செய்தியின் மூன்று செயல்கள்மூலம் உச்சகட்டத்தை அடைந்திருப்பதை இன்றைய நாள் நமக்கு எடுத்துரைக்கிறது.
1. பாதம் கழுவுதல் 2. நற்கருணை ஏற்படுத்துதல் 3. குருத்துவத்தை ஏற்படுத்துதல்.
இந்த மூன்று அன்பின் செயலைச் சிந்தித்து தியானிக்கத்தான் இன்றைய வழிபாட்டு வாசகங்கள் அழைப்பு விடுக்கின்றன.
1. பாதம் கழுவுதல்
பாதம் கழுவும் சடங்கு தொடக்கத்திலிருந்தே பாலஸ்தீன நாட்டிலிருந்து வந்ததை விவிலியம் எடுத்துரைக்கிறது. பழைய ஏற்பாட்டில் தொ.நூ. 18:4-இல் தன்னை காண வந்த 3 மனிதருக்கு ஆபிரகாம் காலடிகளை கழுவ தண்ணீர் கொண்டு வந்ததை நாம் காண்கின்றோம். மேலும் நீதி தலைவர்கள் 19:21; தொ.நூ. 19:2; இவற்றில் பாதம் கழுவும் நிகழ்வுகள் எடுத்துரைக்கப்படுகின்றன. புதிய ஏற்பாட்டில் லூக்கா 7:44-இல் இயேசு சீமோனை பார்த்து "நான் உம் வீட்டிற்கு வந்தபோது நீர் என் பாதங்களைக் கழுவ தண்ணீர் தரவில்லை. இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தம் கூந்தலால் துடைத்தார்” என்றார்.
இதற்கான பின்னணி என்ன என்பதை பார்க்கும்போது அக்காலத்தில் பாலஸ்தீன நாட்டில் நல்ல சாலைகள் இல்லை. கல்லும், முள்ளும், புல்லும் நிறைந்த சாலைகள்தான் இருந்தன. ஆகவே இத்தகைய சாலைகளில் நடந்து வந்து வீட்டிற்குள் நுழையும் விருந்தாளிகளைக் கழுவ நீர் அளிப்பது வந்தவரை வரவேற்கும் பண்பாக இருந்தது. விருந்தாளிகளின் காலடிகளை கழுவும் செயலை அடிமைகள் தான் செய்தனர். காரணம் பிறரின் காலடிகளை கழுவு- வது மதிப்பற்ற செயல், அடிமைகளுக்கு உரித்தான தாழ்வான வேலை. யூதடிமைகள் விருந்தாளியின் காலடிகளை கழுவுவார்கள். இயேசு யூதராக இருந்தும் இத்தகைய தாழ்வான மதிப்பற்ற வேலை- யைச்செய்கிறார். இதைத்தான் தூய பவுல், பிலி, 2:7-இல் குறிப்பிடு- கின்றார். “தம்மையே வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார்". "பணிவிடை பெற அன்று பணிவிடை புரியவே வந்தேன்" என்ற வாக்கினையும் செயல்படுத்துகிறார்.
இந்தப் பாதம் கழுவும் சடங்கு நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?
1. 'நான் செய்தது போல் நீங்களும் செய்யுங்கள்' என்றார். நான் உங்களை அன்பு செய்தது போல் நீங்களும் ஒருவர் ஒருவரை அன்பு செய்யுங்கள். உங்களுள் முதல்வனாக இருக்க விரும்பு- கிறவன், தொண்டனாக இருக்கட்டும். நம்மிடையே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று இல்லை. முதலாளி, தொழிலாளி என்ற பேதமில்லை. எனவே கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவை போல ஒருவர் மற்றவரைச் சகோதர சகோதரிகளாக அன்பு செய்ய வேண்டும்.
2. தமிழ் நாட்டில் திருமணம் முடித்து மணமகனுடன், மணமகள் வீட்டு வாயிலில் புகுவதற்கு முன், மஞ்சள் நீரால் காலடிகள் கழுவப்பட்டு வீட்டினுள் நுழைவதை காணலாம். இச்சடங்கு உணர்த்துவது என்னவென்றால் தன் கணவன் வீட்டில் அவள் ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவ்வில்லத்தின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள வரவேற்கப்படுகிறாள்.
இதைப் போல இயேசு தான் தேர்ந்து கொண்ட சீடர்களை தான் செல்லவிருக்கும் வான் வீட்டிற்குள் காலடி எடுத்துவைக்க உரிமையுள்ளவர்கள் என்று அவர்களின் காலடிகளை கழுவுகிறார். தம்மிடம் ஒப்படைத்தவர்கள் அனைவரும் தனது மாட்சிமையை காண அவர்களை வரவேற்கிறார். திருமுழுக்கு என்னும் அருட்சாத- னத்தின் வழியாக வான்வீட்டில் காலடி வைக்க நமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் காலடி எடுத்துவைக்க நாம் எந்த அளவு தகுதியுடையவர்-களாக இருக்கிறோம் என்று சிந்திப்போம்.
2. நற்கருணையை ஏற்படுத்துதல்
விருந்து என்பது உறவை வளர்ப்பது. அன்பை ஆழப்- படுத்துவது. மகிழ்ச்சியைப் பெருக்குவது. இன்றைய வாசகங்கள் நமக்கு 2 வகையான விருந்தினை அளிக்கின்றன. பழைய ஏற்பாடு விடுதலை விருந்தினையும் புதிய ஏற்பாடு அன்பின் விருந்தினையும் அளிக்கின்றன. 2 விருந்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதான். இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலே அடிமைகளாய் இருந்து விடுதலை அடைந்த அந்த நாளிலே ஆண்டவரின் கட்டளைப்படி உண்ட உணவுதான் "விடுதலை விருந்து". அதாவது ஆண்டவரின் பாஸ்கா. இவ்விழாவின் நோக்கம் "மக்கள் இறைவனின் அன்பை உணர்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான்", வாழையடி வாழையாக, யூதர்கள் ஆண்டுதோறும் பாஸ்கா விழாவைக் கொண்டாடி வந்தார்கள்.
இயேசுவும் ஒரு யூதர் என்ற முறையில் தம் சீடர்களுடன் தாம் பாடுபடுவதற்கு முந்தைய இரவில் பாஸ்கா விழாவைக் கொண்- டாடினார். ஆனால் இயேசுவினால் கொண்டாடப்பட்ட இந்தப் பாஸ்கா விழா புதிய அர்த்தத்தையும், புதிய நோக்கத்ததையும் கொண்டதாக மாறியது. நம்முடன் அதிக நாட்கள் வாழ்ந்து அன்புடன் பழகி ஒன்றாக உண்டு உறங்கிய ஒருவர் நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் போது நினைவுப் பரிசு கொடுத்து வழியனுப்புவோம். ஆனால் இங்கு இதற்கு எதிர்மாறாக நடக்கிறது. அதாவது பிரிந்து செல்ல இருக்கும் இயேசு தம் சீடர்கள்மேல் வைத்த அன்பின் அடையாளமாக தம்- மையே முழுவதுமாக நற்கருணை வடிவில் அளித்து விட்டு “இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்று பணிப்பதை நாம் பார்க்கிறோம். தான் சென்றபிறகும் தனது பிரசன்னத்தை உணர வேண்டும். தனது அன்பை சுவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயேசு நற்கருணை என்ற அருட்சாதனத்தை ஏற்படுத்தி விட்டுச் செல்கிறார். நற்கருணையில் மேல் நாம் எந்த அளவுக்கு விசுவாசமும் பக்தியும் கொண்டு இருக்கிறோம் என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். முதலில் திவ்ய நற்கருணையில் இயேசு உண்மையாக உறை- கின்றார் என்ற உண்மை நமது உள்ளத்தில் பதிய வேண்டும்.
ஒரு முறை தூய அந்தோணியார் ஊர்தோறும் நற்செய்தி ஆற்றிக் கொண்டே போர்ஜஸ் என்ற நகரில் நுழைந்தபோது கில்லார்டு என்ற யூதன் அவரைச் சந்தித்து நற்கருணையில் இயேசு பிரசன்னமாக இல்லை என்று அவரிடம் வழக்காடினான், “உண்மை- யில் இயேசு அதில் இருப்பாராகில், அதனை என் கழுதை வணங்கும்- படி செய்யும்" என்று சபதம் செய்தான். அந்தோணியாரும் அவரது சபதத்தை ஏற்றுக் கொண்டு அவன்குறித்த நாளில் அவன்குறித்த இடத்திற்கு நற்கருணை நாதரோடு வரவும் ஒப்புக் கொண்டார். அந்த நாளும் வந்தது. தூயவர் தன் அடியவர் புடை சூழ நற்கருணை நாதரை ஏந்திச் சென்றார். கில்லார்டு தன் கழுதையை மூன்று நாட்கள் பட்டினி போட்டான். நடக்கவும் திறனில்லாத அந்த கழுதையுடன் தன் உற்றார், உறவினரோடு அந்த இடத்தை அடைந்தான். அந்தோணியார் நற்கருணை நாதரோடு கழுதையிருந்த இடத்தை அடைந்தபொழுது யூதன் கொள்ளில் நெய் விட்டு கழுதையின் முன் வைத்தான். ஆனால் அக்கழுதை மூன்று நாட்கள் பட்டினி கிடந்து கிடைத்த நல்ல உணவைத் திரும்பிப் பாராமல், மண்டியிட்டு நற்கருணை நாதரை வணங்கியது. யூதரும் அவனது உறவினரும் தனது பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினர். அந்த யூதன் அவ்விடத்தில் அழகிய கோவிலொன்றை கட்டி கழுதை நற்கருணை வணங்கிய காட்சியைக் கல்லில் செதுக்கி சுவரில் கட்டி வைத்தான். அச்சித்திரம் இன்றும் அதற்குச் சான்று பகருகிறது.
நமது வாழ்க்கைக்கு
3. குருத்துவத்தை ஏற்படுத்துதல்
நற்கருணையை ஏற்படுத்திய கிறிஸ்து குருத்துவத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார். குருத்துவத்தால் நற்கருணையும் நற்கருணை- யால் குருத்துவமும் உண்டாகின. இயேசுவே அனைவருக்கும் தலைமை குரு. பலியும் அவரே. பலியிடுபவரும் அவரே. “இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்று சீடர்களுக்கு அளித்த பொன் மொழியைக் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இன்று குருக்கள் அப்பலி- யை நிறைவேற்றுகிறார்கள். இத்தகைய மேலான பணிக்கு நமது பிள்ளைகளை மனமுவந்து அனுப்புகிறோமா?
இன்றைய நாள் நமக்கு அறிவுறுத்துவது மூன்று
1. நம்மிடையே இருக்கும் பிளவுகள், பிரிவினைகள், ஆண்டவரின் திருவிருந்தில் பங்கு கொள்ள தகுதியற்றவர்களாக மாற்றி- விடுகின்றன. எனவே பிறரன்பையும் இறையன்பையும் நமது வாழ்வாக்குவோம். அப்போது நாம் பங்கு கொள்ளும் திருப்பலி அர்த்த முள்ளதாக இருக்கும்.
2. நற்கருணை நாதராகிய இயேசுவின் பிரசன்னத்தை விசுவசித்து தகுதியான முறையில் உட்கொண்டு நல் வாழ்வு வாழ்வோம்.
3. குருத்துவ பணிக்கு நமது பிள்ளைகளை மனமுவந்து அனுப்பி பணிவிடை பெறுவதை விடப் பணிவிடை புரிவதில் நிறைவு கொள்வோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
உலகம் முடிவு வரையிலும் எந்நாளும் நம்மோடு இருக்க விரும்பிய இயேசு, அழிந்துபோகும் அப்பத்தையும், இரசத்தையும் தன் உடலாக இரத்தமாக மாற்றினார். “நற்கருணையில் இயேசுவை காண முடியாது என்றால், ஏழைகளிலும் இயேசுவை காண முடியாது” என்றார் முத்தி பேறுப் பெற்ற அன்னை தெரசாள்.
"வான தூதரையும், குருவானவரையும் நான் காண நேர்ந்தால், என் முதல் வணக்கத்தையும் மரியாதையும் குருவானவருக்கே செலுத்துவேன். ஏனென்றால் அவரால்தான் சாதாரண அப்பத்தை இயேசுவின் உடலாக மாற்ற முடியும்” என்றார் தூய அசீசியார்.
மூன்று அடையாளங்கள்
இன்றைய நாள் நான்கு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: (அ) இந்த இரவில்தான் இயேசு, ‘இது என் உடல், இது என் இரத்தம்!’ என்று சொல்லி, நற்கருணையை ஏற்படுத்துகின்றார். (ஆ) ‘இதை என் நினைவாகச் செய்யுங்கள்’ என்று பணிக்குருத்துவத்தை ஏற்படுத்துகின்றார். (இ) ‘இதை நீங்கள் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்’ என்று தன் சீடர்களின் பாதங்கள் கழுவி அன்பு பாராட்டும் தலைமைத்துவத்தைக் கற்றுக்கொடுக்கின்றார். (ஈ) ‘நான் உங்களுக்கு அன்பு செய்தது போல நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்’ என்று அன்புக் கட்டளையை புதிய கட்டளையாக வழங்குகின்றார்.
இந்த நாளில் மூன்று அடையாளங்களை நாம் கொண்டாடுகிறோம்: ‘இரத்தம்,’ ‘அப்பம்,’ ‘தண்ணீர்.’ இந்த மூன்று அடையாளங்களையும் இவை நமக்கு விடுக்கும் பாடங்களையும் சிந்திப்போம்.
- இஸ்ரயேலரின் முதல் பாஸ்கா – ‘இரத்தம்’
இன்றைய முதல் வாசகம் விடுதலைப்பயண நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரயேல் மக்கள் கொண்டாடுகிற முதல் பாஸ்கா (‘கடத்தல்’) விழாவுக்கான அறிவுரைகளை ஆண்டவராகிய கடவுள் மோசே வழியாக அவர்களுக்கு வழங்குகிறார். இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையைக் கடந்து பாலும் தேனும் பொழியும் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு கடந்து செல்லும் நிகழ்வுக்கான தயாரிப்பாகவும், பார்வோன் மற்றும் எகிப்தியர் முன்னால் தம் வல்ல செயல்களைக் காட்டிய ஆண்டவராகிய கடவுள் ஆற்றிய பத்தாவது கொள்ளை நோயான தலைமகன் சாவை முன்னறிவிக்கும் நிகழ்வாகவும் இருக்கிறது அவர்கள் கொண்டாடிய முதல் பாஸ்கா.
நாள், ஆடு தெரிவு, உண்ணும் ஆள்கள் எண்ணிக்கை, உண்ணும் முறை என விதிமுறைகளைத் தருகிற ஆண்டவராகிய கடவுள், இரண்டு கட்டளைகளைத் தருகிறார்:
ஒன்று, ‘இரத்தத்தில் சிறிதளவு எடுத்து வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.’ ஏனெனில், இது ஆண்டவரின் பாஸ்கா. ‘நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது!’
இரண்டு, ‘இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறைதோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!’
இரண்டாவது கட்டளையை நிறைவேற்றும் முகமாகவே இயேசு தம் சீடர்களோடு பாஸ்கா உணவை உண்பதற்காக எருசலேம் செய்கிறார். பாஸ்கா விழா கொண்டாடுகிற இரவே அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவாக மாறுகிறது. பாஸ்கா விருந்துக்கொண்டாட்டத்தில்தான் (புளியாத அப்பப் பெருவிழாவுடன் இணைந்த கொண்டாட்டம்) நற்கருணையை ஏற்படுத்துகிறார். பாஸ்கா ஆடு போல இயேசு பலியிடப்படுகிறார். திராட்சை இரசத்தை அவருடைய இரத்தமாக நமக்குத் தருகிறார். அவருடைய இரத்தத்தால் நாமும் இறப்பிலிருந்து விடுதலை பெறுகிறோம்.
‘இரத்தம்’ என்னும் முதல் அடையாளம் ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தம் மக்கள் எனத் தேர்ந்துகொண்டதன் முன்னடையாளமாகவும், ஆண்டவர் அவர்களுக்குத் தருகிற பாதுகாப்பு, விடுதலை, வெற்றி ஆகியவற்றைக் குறிப்பதாகவும் அமைகிறது.
- நற்கருணைக் கொண்டாட்டம் – ‘உணவு’
தொடக்கத் திருஅவை நம்பிக்கையாளர்களின் நான்கு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது ‘அப்பம் பிடுதல்’ (மற்றவை, திருத்தூதர்களிடம் கற்றல், நட்புறவு, இறைவேண்டல்) (காண். திப 2:42). இல்லங்களில் கூடி வந்து அப்பம் பிடுதல் நிகழ்வு வழிபாட்டு நிகழ்வாகத் தொடங்கினாலும் காலப்போக்கில் உண்டு குடித்து மகிழும், செல்வந்தர்-ஏழைகள் வேறுபாடு பாராட்டும் இடமாக மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட சூழலில் கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகிற பவுல் – இரண்டாம் வாசகம் – ஆண்டவராகிய இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வை அவர்களுக்கு எடுத்துரைப்பதோடு, அப்பம் பிடுகிற கொண்டாட்டத்தின் நோக்கத்தையும் எடுத்துரைக்கிறார்: ‘நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும் வரை அறிவிக்கிறீர்கள்.’
அப்பம் பிடுதலில் மூன்று காலங்களும் ஒன்று சேர்கின்றன. இயேசு கடந்த காலத்தில் செய்த நிகழ்வை நினைவுகூருதல். நிகழ்காலத்தில் அதைக் கொண்டாடுதல். எதிர்காலத்தில் நிகழவிருக்கிற அவருடைய வருகையை எதிர்நோக்கியிருத்தல். கொரிந்து நகர மக்கள், இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் மறந்துவிட்டு, அதை வெறும் நிகழ்கால உண்டு-களித்தல் கொண்டாட்டமாக மாற்றியிருந்ததைக் கடிந்துகொள்கிறார் பவுல்.
தொடக்கத் திருஅவையினர் பெறுகிற அப்பம் ஆண்டவருடைய இறப்பை – வெறுமையை, தாழ்ச்சியை, தனிமையை, நொறுங்குநிலையை – அறிவிப்பதாக அமைகிறது.
- காலடிகளைக் கழுவுதல் – ‘தண்ணீர்’
காலடிகளை (பாதங்களை) கழுவுதல் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும், உரோமை-கிரேக்க எழுத்துகளிலும் மொழிந்துள்ளபடி, மூன்று பொருள்களைத் தாங்கி நிற்கிறது: (அ) வழிபாடு சார்ந்த தூய்மைப்படுத்துதல் (காண். விப 30:17-21. 40:30-32. 2 குறி 4:6. லேவி 16:24). வழிபாட்டுத் தளத்துக்குள் அல்லது நிகழ்வுக்குள் செல்கிற தலைமைக்குரு, குரு, நபர்கள் தங்கள் கைகளையும் கால்களையும் தூய்மைப்படுத்துகிறார்கள். வழிபாட்டுக்கு உதவி செய்யும் நோக்கத்திற்காகவும், கடவுளின் தூய்மைக்கு முன் செல்லும்போது நாமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்னும் அடையாளத்திற்காகவும் தூய்மைச் சடங்கு நடக்கிறது. (ஆ) வீடுகளில் தூய்மை அல்லது வசதிக்காக கழுவுதல். வெளியில் சுற்றிவிட்டு வரும் நபர் தன் இல்லம் நுழையுமுன் தன் பாதங்களையும், கைகளையும், சில நேரங்களில் முழு உடலையும் சுத்தம் செய்கிறார். தனிநபர் சுத்தம் அல்லது நோய்எதிர்ப்புக்காக இவ்வகை தூய்மை பேணப்படுகிறது. (இ) விருந்தோம்பலின் அடையாளம் (காண். தொநூ 18:4. லூக் 7:36-50. யோவா 12:2-8). விருந்து உண்பதற்கு முன்னதாக உடல் சுத்தம் செய்தல் என்னும் நோக்கமாக இருந்தாலும், வரவேற்பு, ஏற்றுக்கொள்ளுதல், நட்பு ஆகிய பொருள்களும் இங்கே ஒளிந்துள்ளன. பாதங்களைக் கழுவுதல் ஒருவர் தனக்குத் தானே செய்யும் செயலாகவும், அடிமைகள் மற்றவர்களுக்குச் செய்யும் செயலாகவும் இருக்கிறது. ஒருவருடைய பாதங்களைக் கழுவுகிற இன்னொருவர் அவருக்குத் தன்னையே அடிமையாக்கிக்கொள்கிறார்.
கிரேக்க-உரோமைக் கலாச்சாரத்தின் பின்புலத்தில், பாதம் கழுவுதல் நற்செயல்களில் ஒன்று எனக் கருதப்பட்டது. கைம்பெண்களின் பணிகளில் ஒன்றாக இது பரிந்துரைக்கப்படுகிறது (காண். 1 திமொ 5:9-10). ‘நம்மோடு உணவருந்துபவராகவும் நம் பாதங்களைக் கழுவுபவராகவும் கிறிஸ்து இருக்கிறார்’ என்று தெர்த்தூலியனும், ‘ஆயர் தன் அருள்பணியாளர்களின் பாதங்களைக் கழுவ வேண்டும்’ என்று அத்தனாசியுஸூம், ‘ஒருவர் மற்றவருடைய காலடிகளை, அடிமைகளின் காலடிகளையும் சேர்த்து, கழுவுவது அனைத்துக் கிறிஸ்தவர்களின் கடமை’ என்று கிறிஸோஸ்தமும் கூறுகிறார்கள்.
இயேசு தம் சீடர்களின் பாதங்களைக் கழுவுவதை எப்படிப் புரிந்துகொள்வது? பாஸ்கா கொண்டாட்டத்தில் இந்நிகழ்வு நடந்தாலும் வழிபாடு சார்ந்த பாதம் கழுவுதல் அல்ல இது. சுத்தம் அல்லது தனிநபர் தூய்மை சார்ந்ததும் அல்ல. ஏனெனில், விருந்தின் பாதியில் இது நடந்தேறுகிறது. விருந்தோம்பல் சார்ந்ததும் அல்ல. ஏனெனில், இயேசுவே இங்கு விருந்தினராக இருக்கிறார். இந்நிகழ்வு ஓர் அடையாளம். தாழ்ச்சியின், வெறுமையின், தற்கையளிப்பின் அடையாளம். ஆண்டவரும் போதகருமாக இருக்கிறவர் அடிமையாக மாற வேண்டும் என்று செயல்களால் பாடம் கற்பிக்கும் நிகழ்வு. இதைக் கற்றுக்கொள்கிற சீடர்கள் ஒருவர் மற்றவர்களுடைய காலடிகளைக் கழுவ வேண்டும். இதுவே இயேசு அவர்களுக்குக் கொடுக்கும் கட்டளை.
இயேசு சீடர்களின் காலடிகளைக் கழுவுதலுக்குப் பின்வரும் பொருள்களும் தரப்படுகின்றன: (அ) நற்கருணைக் கொண்டாட்டத்திற்கான தயாரிப்பு. (ஆ) திருமுழுக்கின் அடையாளம். (இ) பாவமன்னிப்பின் அடையாளம். (ஈ) திருமுழுக்கையும் நற்கருணையையும் தாண்டிய ஓர் அருளடையாளம். (உ) குருத்துவ திருநிலைப்பாடு. (ஊ) இயேசு மனுவுருவாதலின் அடையாளம்.
காலடிகளைக் கழுவும் நிகழ்வு வழியாக தாழ்ச்சியையும் பணிவிடை புரிதலையும் கற்பிக்கிறார் இயேசு.
இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் காண்கிற, ‘இரத்தம்,’ ‘உணவு,’ ‘தண்ணீர்’ என்னும் அடையாளங்கள் நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?
முதலில், அடையாளங்கள் அவற்றைக் கொண்டாடுபவர்களை, ஏற்றுக்கொள்பவர்களைப் பொருத்தே வடிவமும் அழகும் அர்த்தமும் பெறுகின்றன. அடையாளங்களை நாம் சடங்குகள் என்று குறைத்துக்கொள்ளக் கூடாது.
(அ) நம் நற்கருணைக் கொண்டாட்டம்
திருஅவையின் ஊற்று, மையம், உச்சமாக இருக்கிறது நற்கருணை. நற்கருணைக் கொண்டாட்டமே இறைமக்கள் குழுமத்தை ஒன்றுசேர்க்கிறது. இந்த நற்கருணைக் கொண்டாட்டத்திற்காகவே அருள்பணியாளர்கள் அருள்பொழிவு பெறுகிறார்கள். கடவுளின் உடனிருப்பை நமக்குக் காட்டுகிற இந்நற்கருணைக் கொண்டாட்டம் நாம் ஒருவர் மற்றவருக்கு, குறிப்பாக வலுவற்றவர்களுக்கு, நம் உடனிருப்பைக் காட்ட நம்மைத் தூண்ட வேண்டும். தகுந்த தயாரிப்புடன் நற்கருணைக் கொண்டாட்டத்தில் நாம் பங்கேற்க வேண்டும். நாம் உண்ணும் நற்கருணை, நம் உணவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள நம்மைத் தூண்ட வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் அப்பக் கிண்ணத்தையும் இரசக் கிண்ணத்தையும் கடந்துபோகிறோம். கிறிஸ்துவின் இரத்தத்தை நாம் அணிந்துகொள்வதன் (அருந்துவதன்) வழியாக இறப்பிலிருந்து விடுதலை பெறுகிறோம்.
(ஆ) பாதம் கழுவும் பணிக்குருத்துவம்
‘உங்களை நான் நண்பர்கள் என்று சொன்னேன்’ என மொழிந்த இயேசு, அடிமை போல சீடர்களின் பாதங்களைக் கழுவியபின், ‘நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்’ என்கிறார். பாதம் கழுவும் நிகழ்வில் இயேசு செய்த ஒவ்வொரு செயலுமே அருள்பணியாளர்களுக்கான பாடமாக இருக்கிறது. ‘இயேசு பந்தியிலிருந்து எழுதல்’ – ‘அருள்பணியாளர் தன் அருள்பொழிவு நிலையிலிருந்து எழுதல்.’ ‘மேலுடையைக் கழற்றுதல்’ – ‘திருவுடையை – மக்களிடமிருந்து தம்மை வேறுபடுத்துகிற நிலையை – களைதல்.’ ‘துண்டை இடுப்பில் கட்டுதல்’ – ‘மக்களுக்கும் நமக்கும் பொதுவான வலுவின்மையை, மானுட நொறுங்குநிலையை ஏற்றல்’. ‘தண்ணீர் எடுத்து சீடர்களின் பாதங்களைக் கழுவுதல்’ – ‘மக்களுக்குப் பணி செய்தல்.’ அதிகாரம் செலுத்துவதற்கு அல்ல, மாறாக, பணிவிடை செய்வதற்கே தன் அருள்பொழிவு என்பதை அருள்பணியாளர் உணர வேண்டும். தாமாகவே விரும்பி ஏற்று, அதற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அருள்பணியாளர், ஒவ்வொரு நிலையிலும் கிறிஸ்துவை ஒத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
(இ) தாழ்ச்சியில் கனியும் அன்பு
‘நான் உங்களுக்கு அன்பு செலுத்தியதுபோல, நீங்கள் ஒருவர் மற்றவருக்கு அன்பு செலுத்துங்கள்’ என்பதே இயேசு வழங்கிய புதிய அன்புக் கட்டளை. பாதம் கழுவும் சடங்கு அன்புக் கட்டளைக்கான முன்மாதிரியாகவும் உள்ளது. கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளை, குழும, சமூக உறவுகளில் அன்பு மேலோங்கி நிற்க வேண்டுமெனில், ஒருவர் மற்றவர்க்குத் தன்னையே கீழ்ப்படுத்த வேண்டும்.
இன்றைய நாளில் நாம் கொண்டாடுகிற மூன்று அடையாளங்களும் – ‘இரத்தம்,’ ‘உணவு,’ ‘தண்ணீர்’ – உடனிருப்பு, தற்கையளிப்பு, அன்பு போன்ற செயல்பாடுகளுக்கு நம்மை அழைத்துச் செல்வனவாக!
பெரிய வியாழன்: அன்பின் ஆழமும், வாழ்வின் அர்ப்பணமும்
ஒரு வரலாற்றுத் திருப்பம். இன்று நாம் கொண்டாடுவது வெறும் 'இறுதி இரவு உணவு' மட்டுமல்ல; இது மனித வரலாற்றையே மாற்றிய ஓர் அன்பின் புரட்சி. "மந்தைக்காகத் தன் உயிரைக் கொடுக்கும் நல்ல ஆயன்" (யோவான் 10:11), தன் மந்தைக்குத் தந்துவிட்டுச் சென்ற மாபெரும் சொத்துதான் இந்தத் திருவழிபாடு. இன்று நாம் மூன்று முக்கியமான தூண்களைத் தியானிக்கப் போகிறோம்.
1. நற்கருணை: கடவுள் மனிதனுக்குத் தரும் 'கையெழுத்து'
நற்கருணையை இயேசு ஏற்படுத்தியபோது, அவர் ஏதோ ஒரு பொருளைத் தரவில்லை, தன்னையே தந்தார்.
• பகிரப்படுவதற்காகவே உடைக்கப்படுதல்: இயேசு அப்பத்தை எடுத்தார், ஆசி வழங்கினார், அதைப் பிட்டு (Broken) கொடுத்தார். "உடைக்கப்படாத அப்பம் பசியைத் தீர்க்காது." அதேபோல, ஒரு கிறிஸ்தவன் மற்றவர்களுக்காகத் தன் நேரத்தையும், உழைப்பையும், அன்பையும் 'உடைத்துப்' பகிராதவரை அவன் நற்கருணை வாழ்வை வாழவில்லை என்றுதான் பொருள்.
• நினைவுக்கூர்தல் (Anamnesis): "இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்றபோது, அது ஒரு கடந்த காலத்தைச் சிந்திப்பது மட்டுமல்ல; அந்தத் தியாகத்தை இன்றும், இப்போதும் நம் வாழ்வில் 'நிகழ்த்திக் காட்டுவது'. நாம் நற்கருணையை உட்கொள்ளும்போது, கிறிஸ்து நம் இரத்தத்தில், நம் திசுக்களில் கலக்கிறார். நாம் நடமாடும் நற்கருணைப் பேழைகளாக மாறுகிறோம்.
2. பாதம் கழுவுதல்: அதிகாரத்தின் புதிய முகவரி
யோவான் நற்செய்தியில், இயேசு அப்பத்தை விவரிப்பதை விட, பாதம் கழுவுவதையே முதன்மைப்படுத்துகிறார். ஏன்? ஏனெனில், நற்கருணையின் வெளிப்பாடு 'பணிவிடை' (Service).
• குனிந்து நிற்றல்: அக்காலத்தில் பாதங்களைக் கழுவுவது அடிமைகளின் வேலை. ஆண்டவரும் போதகருமானவர், அடிமையின் கோலம் பூணுகிறார். இது நமக்குச் சொல்லும் பாடம்: "யார் பெரியவர்?" என்ற கேள்விக்கு, "யார் அதிகம் பணி செய்கிறாரோ அவரே பெரியவர்" என்பதே கிறிஸ்துவின் பதில்.
• அழுக்கைப் பொறுப்பேற்றல்: சீடர்களின் பாதங்களில் ஒட்டியிருந்த அழுக்கு, அவர்கள் உலகத்தில் நடந்ததினால் வந்தது. நம் குடும்பத்தில், சபையில் மற்றவர்களிடம் இருக்கும் குறைகளை (அழுக்குகளை) சுட்டிக்காட்டாமல், அவற்றை அன்பால் கழுவ நாம் முன்வருகிறோமா? மற்றவர்களின் காயங்களைத் துடைக்கும் கைகளே, நற்கருணையைத் தொடத் தகுதியுள்ள கைகள்.
3. குருத்துவம் மற்றும் புதிய கட்டளை: "நேசியுங்கள்"
இன்று "புதிய கட்டளையை" (Mandatum - இதிலிருந்துதான் Maundy Thursday என்ற பெயர் வந்தது) இயேசு தருகிறார்: "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" (யோவான் 13:34).
• எல்லைகளற்ற அன்பு: இயேசு யூதாசின் பாதங்களையும் கழுவினார். தனக்குத் துரோகம் செய்யப்போகிறான் என்று தெரிந்தும், அவன் பாதங்களைத் தொட்ட அந்த அன்புதான் 'கிறிஸ்தவ அன்பு'. நம்மைப் பிடிக்காதவர்களுக்கும், நமக்குத் தீமை செய்தவர்களுக்கும் நாம் பணி செய்ய முடியுமா? இதுதான் இன்று நமக்கிருக்கும் சவால்.
• குருக்களின் பணி: இன்று குருத்துவத்தின் பிறந்தநாள். ஒரு குரு என்பவர் நற்கருணையை வழங்குகிறவர் மட்டுமல்ல, கிறிஸ்துவின் பணியைச் சுமப்பவர்.
அவர்களுக்காகச் செபிப்பது நம் கடமை.
நம் வாழ்விற்கான நடைமுறைச் சிந்தனைகள் (Practical Application):
1. பலிபீடமும், இல்லமும்: தேவாலயப் பலிபீடத்தில் நாம் காணும் அதே கிறிஸ்துவை, நம் இல்லத்தில் பசியோடு இருப்பவரிடமும், அழுகையோடு இருப்பவரிடமும் காண வேண்டும். பீடத்தில் காட்டும் பக்தி, வீதியில் காட்டும் கருணையாக மாறட்டும்.
2. மன்னிப்பின் விருந்து: இந்த இரவு உணவு ஒரு 'ஒப்புரவு விருந்து'. யாரிடமாவது மனக்கசப்பு இருந்தால், அதை இன்று சிலுவையின் அடியில் விட்டுவிடுவோம். மன்னிப்பே நற்கருணை வாழ்வின் தொடக்கம்.
3. விழிப்புடன் இருத்தல்: இந்தத் திருப்பலிக்குப் பின், நற்கருணை இடமாற்றம் செய்யப்படும். அன்று இரவு கெத்சமனி தோட்டத்தில் இயேசு அனுபவித்த இரத்த வேர்வையையும், தனிமையையும் எண்ணி ஆராதனையில் இணைந்திருப்போம். "ஒரு மணி நேரமாவது என்னோடு விழித்திருக்க உங்களால் முடியவில்லையா?" என்ற இயேசுவின் கேள்விக்கு நம் செபத்தால் பதிலளிப்போம்.
முடிவுரை:
அன்பார்ந்தவர்களே, இன்று நாம் பெற்றுக்கொண்ட நற்கருணை நம்மை மாற்றட்டும். நாம் கழுவப்பட்ட பாதங்களோடு, மற்றவர்களின் கண்ணீரைத் துடைக்கச் செல்வோம். உடைக்கப்பட்ட அப்பமாக, மற்றவர்களின் பசியைத் தீர்க்கும் கருவியாக மாறுவோம். எல்லாம் வல்ல இறைவனின் ஆசி நம் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
ஆண்டவர் இராஉணவு பெருவிழா
பணக்கார பெரியவருக்கு ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும், தன் வயதான காலத்தில் தன் பிள்ளைகள் யாரும் தன்னை கவனித்துக் கொள்ளாததால், ஒரு வேலையாளை வைத்துக் கொண்டார். அந்த வேலையாள் பெரியவரைக் கண்ணும் கருத்துமாக கவனித்து, வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்தார். தாம் இவ்வுலகைவிட்டு செல்லப் போகிறோம் என்பதை உணர்ந்தவராய், தம் பிள்ளைகளைக் கூப்பிட்டு தம் சொத்தெல்லாம் பங்கிட்டுக் கொடுத்தார். வேலையாள் தனக்கும் ஒரு பாகம் கொடுப்பாரென எதிர்பார்த்து கிடைக்காததால் மனசுகுள்ளே பெரியவரைத் திட்டினான். 'என்ன நன்றிகெட்ட மனிதர்' எனப் புலம்பினான். பெரியவர் கண்ணை மூடுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் வேலையாளைக் கூப்பிட்டு "தம்பி! நீ எனக்குப் பல வருடங்களாகச் சேவை செய்தாய். அதற்குப் பரிசாக ஒரு பொருளை என் தலையணை கீழ் வைத்திருக்கிறேன். நான் இறந்தவுடன் எடுத்துக்கொள். என் நன்றிப்பரிசு அது”, என்றுச் சொல்லி இறந்துவிட்டார். ஆசையோடு பெரியவர் கட்டிலில் இருந்த தலையணையை தூக்கிப் பார்த்தவனுக்கு ஆச்சரியம். அதிர்ச்சி. 'என்ன பைத்தியக்காரர் இவர். இப்படியும் மடையர்கள் இருப்பார்களா' எனப் புலம்பினாள். வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுக் கொண்டே இரு என்பதை குறிக்க இந்தப் பரிசை கொடுத்திருக்கிறாரேயென பெரியவரை திட்டினான். அந்தப் பரிசுப்பொருள் என்ன? மண்சிலுவை. அவர்மீது இருந்த கோபத்தில் இது எனக்கு வேண்டாம்' எனத் தூக்கி எறிந்தபோது அதிர்ச்சி. ஆச்சரியம். இப்படியும் அன்பு பைத்தியங்கள் இருப்பார்களான என பெரியவரை நினைத்து, ஆனந்தக் கண்ணீர் வடித்தான். நடந்தது என்ன? தூக்கி எறியப்பட்ட மண்சிலுவை உடைந்தபோது அதன் உள்ளே இருந்த தங்கம், வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம் போன்ற நவரத்ன கற்கள் சிதறி ஓடின. 'இது உனக்குத்தான்' என்ற குறிப்பும் இருந்தது. பெரியவர் தம்மீது வைத்திருந்த அன்பை எண்ணி ஆனந்தமடைந்தான்.
மண்சிலுவையை மண்சிலுவையாகப் பார்க்கும்போது, அது மண் சிலுவையாக மட்டும்தான் தெரிந்தது. ஆனால் அது உடைந்தபோது அதிலிருந்த விலைமதிக்க முடியாத நவரத்னங்கள் வெளிப்பட்டன. ஆண்டவர் இயேசுவின் இராஉணவு திருவிழாவை ஒரு உணவு நிகழ்ச்சியாக மட்டும் பார்க்கும்போது, நமக்கு உண்மைகள் புரிவதில்லை. அந்தப் பெருநிகழ்வை ஆழமாக உற்றுநோக்கி, தியானிக்கும்போது அதில் உள்ள விலைமதிக்க முடியாத அற்புதங்களை தெரிந்துகொள்ளலாம்.
* ஆண்டவர் இராஉணவு திருவிழாவின் மறைஉண்மைகள்
இன்றைய வழிபாடு, இயேசுவின் இறுதி இராஉணவு திருவிழாவைக் கொண்டாடி, அதில் அடங்கியுள்ள மூன்று முக்கிய மறைஉண்மைகளை தெளிவுபடுத்துகிறது
.
* ஏசுவின் இறுதி இராஉணவு விழா அன்பின் விழா
* தம் ஒரே மகன்மீது நம்பிக்கைக் கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெரும்பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுளின் உலகின் மீது அன்பு கொண்டார். அந்த மகனும், உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரை அன்பு கூர்ந்தார். யோவா 13:1
* இயேசுவின் அன்பு நிலையான, நிச்சயமான, நிபந்தனையில்லாத, நிரந்தரமான அன்பு. கடவுள் அன்பின் வெளிப்பாடுதான் இயேசுகிறிஸ்து கடவுளே நம்மீது கொண்டுள்ள நிலையான அன்பை உறுதிபடுத்துகிறார். "உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன். எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன்". எரே 31:3
+ இயேசுவின் அன்பு முழுமையான அன்பு; தியாகத்துடன் கூடிய அன்பு. "நான் ஆடுகள் வாழ்வு பெறும்பொருட்டும், அதை நிறைவாகப் பெறும் பொருட்டும் வந்துள்ளேன்" யோவா 10:10. "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை”, யோவா 15:3 என்று சொன்ன இயேசு நண்பர்களாகிய நமக்காகத் தம் உயிரைக் கொடுக்குமளவுக்கு அன்பு செய்தார்.
இயேசுவின் அன்பு பணிவிடை பெறுவதில் அல்ல; பணிவிடை புரிவதில் அடங்கியுள்ளது". நான் போதகர்தான்; ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமாகிய நாள் உங்கள் பாதங்களைக் கழுவினேன். நீங்கள் ஒருவர் மற்றவர் பாதங்களைக் கழுவுங்கள்" என்று சொல்லிப் பணிவிடைபுரியும் அன்பை வெளிப்படுத்தி, நம்மையும் அப்படிப்பட்ட வாழ்வுக்கு அழைக்கிறார்.
* கிறிஸ்தவ வாழ்வின் தனிப்பெரும் முத்திரையாக இருக்க வேண்டிய அன்பை, தனது புதிய அன்புக்கட்டளையாக இயேசு தம் சீடர்களுக்குக் கொடுத்த அன்பின் விழா. "நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்துதான் நீங்கள் என் சீடர்கள் என்பதைத் தெரிந்துகொள்வார்கள்" யோவா 13:34-35
"தம் சொந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மீது அன்புகூர்ந்தார். அப்படியிருக்க கடவுள் நமக்கு எதைத்தான் கொடுக்கமாட்டார்" உரோ 8:32
தந்தையின் அன்பை தம் மூலமாக நிரூபித்த இயேசு, நாமும் அன்பு கட்டளையின்படி வாழ அன்பு அழைப்பு விடுக்கும் அன்பின் திருவிழாதான் ஆண்டவர் இறுதி இராஉணவு திருவிழா.
* ஆண்டவர் இராஉணவு விழா நற்கருணைப் பெருவிழா:
எம்மானுவேலாக, நம்மோடு இருப்பவராக வந்த இயேசு, நான் உங்களை அநாதைகளாக விட்டுவிடமாட்டேன் என்ற இயேசு, இதோ! நான் உலகம் முடியும்வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் என்று வாக்களித்த இயேசு, தம் வாக்குறுதியின்படி நிரந்தரமாக நம்முடன் தங்க ஆசைப்பட்டு நற்கருணையை இந்த இராஉணவிலே ஏற்படுத்தினார். நற்கருணை ஏசுவின் அன்பின் நிரந்தர பிரசன்னம். அது நிலைத்து நின்று உதவும் தெய்வீக பிரசன்னம்.
* நற்கருணை ஏசுவின் மரணத்தின் சின்னம்
.
"நீங்கள் இந்த அப்பத்தை உண்டு, கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை, அவர் வரும்வரை அறிக்கையிடுகிறீர்கள் 1கொரி 11:26. நமக்காகத் தியாகபலியாகிய ஏசுவின் திருஉடல், திருரத்தம்தான் நம்மைப் பாவத்திலிருந்து கழுவி, நமக்கு நிறைவாழ்வு தருகிறது. இயேசுவின் மரணத்தைத் தினமும் அறிக்கையிட தூண்டுகிறது.
* நற்கருணை ஒப்புரவின் அருட்சாதனம்.
ஆண்டவர் இயேசுவின் திருஉடலையும், திருரத்தத்தையும் உட்கொள்பவர்கள் கடவுளோடும் அயலாரோடும் ஒப்புவரவாகி, ஒப்புரவின் மக்களாக வாழ்கின்றனர். ஒப்புரவை உறுதிபடுத்தும் அருட்சாதனம்தான் நற்கருணை. அதனால் தான் "நீங்கள் உங்கள் காணிக்கையை பலிபீடத்தில் செலுத்த வரும்போது, உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள்மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டு, பின்பு வந்து உங்கள் காணிக்கையை செலுத்துங்கள் மத் 5:23-24. போட்டி, பொறாமை, சண்டை சச்சரவுடன் நாம் நற்கருணையை உட்கொண்டால் அது நமக்கு நாம் நலம் தரும் மருந்தாக அமையாமல், தண்டைக்குரிய குற்றமாக மாறிவிடும் 1கொரி 11:27-30. நற்கருணையின் பண்பும், பயனும், அன்பும் ஒற்றுமையுமாகும். நற்கருணை ஒற்றுமையின் அடையாளம்.
+ நற்கருணை நமக்கு ஆன்மீக உணவு
நற்கருணை நமக்கு ஐந்து ஆன்மீகப் பலன்களை நிறைவாகத் தருகிறது. "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உண்டு என் ரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை கடைசிநாளில் உயிர்ப்பிப்பேன். எனது சதையை உண்டு என் ரத்தத்தைக் குடிப்பவர் என்னோடு இணைந்திப்பார். நானும் அவரோடு இணைந்திருப்பேன். என்னை உண்போர் என்னால் வாழ்வர்" யோவா 6:51-57. எனவே நற்கருணை வாழ்வை, நிலைவாழ்வை, உடலின் உயிர்ப்பை, அவரோடு, அவர் மூலமாக, அவரில் இணைந்து வாழும் வாழ்வை நமக்குத் தரும் ஆன்மீக உணவு.
அன்பு உறவில் கனிகிறது. உறவு உணவைப் பகிர்ந்து கொள்வதில் வெளிப்படுகிறது. அன்று யாவே கடவுள் பாலைவனத்தில் இஸ்ராயேல் மக்களுக்கு அற்புதமாக உணவு அளித்ததுபோல, புதிய இஸ்ராயேல் மக்களாகிய நமக்கும் உணவு அளிக்க விரும்பிய இயேசு, புதிய உடன்படிக்கையின் உணவாக நற்கருணையை ஏற்படுத்திக் கொடுத்தார்
.
நற்கருணை கல்வாரி பலியின் பரிசு:
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்ற பாஸ்கா இரவை, இஸ்ராயேல் மக்கள் ஆண்டுதோறும் நினைவுகூர்ந்தனர். அவ்வாறே பெரிய வியாழனன்று தமது இறுதிபாஸ்காவைக் கொண்டாடி நற்கருணையை ஏற்படுத்த எனது நினைவாகச் செய்யுங்கள் என்றார். நற்கருணை கல்வாரி பலியை நினைவுகூருகிறது. கிறிஸ்து தமது ஒரே பலியால் முற்கால பலிகளை நிறைவு செய்தார். அவர்தான் பாஸ்கா செம்மறி 1கொரி 5:7.
நற்கருணை திருச்சபையைக் கட்டி எழுப்புகிறது:
திருச்சபைதான் நற்கருணையைக் கொண்டாடுகிறது. நற்கருணையால் திருச்சபை வாழ்கிறது. வளர்கிறது. ஆதித்திருச்சபையிலே 'அப்பம் பிடுதல்' ஓர் இன்றியமையாத கடமை. திப 2:42. இயேசு அப்பத்தைப் பிட்டபோதுதான் எம்மாவுஸ் சென்ற இரு சீடர்களின் கண்களும் திறக்கப்பட்டன. லூக் 24:31. கிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரை, அவரை அப்பம் பிடுவதில் கண்டுகொள்ள வேண்டும்.
* ஆண்டவர் இராஉணவு விழா குருத்துவப்பெருவிழா
ஆண்டவர் இயேசு அன்பு நிரந்தரமான பிரசன்னம் திருமுழுக்கினால் கழுவப்பெற்ற அனைவருக்கும் காலமெல்லாம் கிடைக்கும் வண்ணம், பணிக்குருத்துவத்தின் தம் சீடர்களை இயேசு திருப்பொழிவு செய்தார். இயேசு குருத்துவத்தை ஏற்படுத்திப் பெருவிழா இன்று. "இதை என் நினைவாகச் செய்யுங்கள்", என்று சொல்லிச் சீடர்களைக் குருத்துவ அபிஷேகம் செய்த திருவிழா. நற்கருணை நிரந்தர பிரசன்னம் நமக்கு தொடர்ந்து கிடைக்க குருக்களை ஏற்படுத்திய விழா. குருக்கள்தான் கடவுளின் நிரந்தர அன்பை நற்கருணை மூலமாக நமக்கு ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
* குருக்கள் யார்:
இறைவனின் சிறப்பு அழைப்பைப் பெற்றவர்கள் குருக்கள். "நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்" யோவா 15:16. இறைவனால் அழைக்கப்பட்டவர்களை தாமே தயாரித்து, சீடர்களாக்கி, நண்பர்களாக்கி, தம் அன்பு பணியைத் தொடர உதவுகிறார். "உங்களை நான் நண்பர்கள் என்றேன். ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன் யோவா 15:15.
குருக்கள் செய்யவேண்டிய பணிகள்
+ போதிக்கும் பணி
"இயேசு அவர்களுக்குப் பேய்களை அடக்கவும், பிணிகளை போக்க வல்லமையும், அதிகாரமும் கொடுத்தார். இறையாட்சிப் பற்றி பறைசாற்றவும், உடல்நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்" லூக் 9:1-3. குருக்கள் இறையரசைப் பற்றிப் போதித்து, இறையரசின் மதிப்பீடுகளாகிய அன்பு, இரக்கம், சமாதானம், பரிவு, நீதி, பொறுமை.... போன்றவைகளை வாழ்விலே வாழ்ந்து காட்டி, சாட்சிகளாக வாழ அழைத்தார். பிறரும் இறையரசின் மக்களாக வாழ உதவ இறைவாக்கு மூலமாக மக்களைப் பலப்படுத்தும் பணியை போதிக்கும் பணியைக் குருக்களிடம் ஒப்படைத்தார்.
* புனிதப்படுத்தும் பணி மனிதனுக்கு கருவறை முதல் கல்லறைவரை வாழும் வாழ்க்கையிலே இறைவரங்கள், அருட்கொடைகள் தேவைப்படுகின்றது. கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக்கொண்டவர்கள் புதுப்படைப்பாக மாறி, கிறிஸ்துவின் சாயலில் வாழ அவர்களுக்குப் புனிதம் தேவைப்படுகிறது. திருமுழுக்கு, ஒப்புரவு, நற்கருணை, நோயில்பூசுதல், திருமணம்... போன்ற அருட்சாதனங்களை நிறைவேற்றி மக்களைப் புனிதப்படுத்தும் அர்ச்சிக்கும் பணியைக் குருக்களிடம் இயேசு ஒப்படைத்தார். குருக்கள் மக்களுக்குச் செபவாழ்வில் ஆர்வமூட்டி, கடவுளோடு இணைந்து அருள்வாழ்வில் வாழ, தொடர் அர்ச்சிப்பு பணியைச் செய்யும் மகத்தான பணியைக் குருக்கள் செய்கிறார்கள்.
* வழிநடத்தும் பணி:
குருக்கள் நல்ல ஆயனாக இருந்து, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை அறிந்து, பாதுகாத்து, பராமரித்து அவர்களுக்கு வாழ்வையும், நிலைவாழ்வையும் பெற்றுக்கொடுக்கும் உன்னதமான பணியைச் செய்ய இயேசு விரும்புகிறார். ஒரே ஆயனும் ஒரே மந்தையும் எனும் நிலை ஏற்படக்கூடிய மேய்ப்புப்பணி, வழிநடத்தும்பணியை செய்ய இயேசு குருக்களை ஏற்படுத்தினார். "நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் அழிவுற விடவில்லை. இழந்துவிடவில்லை", யோவா 18:9 என்ற இயேசுவின் பாதசுவட்டில் பயணிக்கும் குருக்களும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை இழந்துவிடாமல் காப்பாற்றும் புனிதமான மேய்ப்பு பணியைக் குருக்களிடம் இயேசு ஒப்படைத்தார்.
இப்படிப்பட்ட உன்னதமான மூன்று பணிகளையும் செய்கின்ற குருக்களுக்காக இறைமக்கள் தினமும் செபிக்க கடமைப்பட்டவர்கள். மனித பலவீனத்திலே வாழ்ந்து கொண்டிருக்கும் குருக்களுக்கு, இறைபலம் தேவை. இறைசக்தி அவசியம். இறைதுணை என்றும் வேண்டும். மனித பலவீனத்தால் குருக்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை விமர்ச்சிப்பதைவிட்டு, அவர்களின் நிறைகளை உற்சாகப்படுத்தி, ஆர்வமூட்டி, அவர்களுடன் ஒத்துழைக்கும்போது குருக்களால் நமக்கும், நம்மால் குருக்களுக்கும் இறைஆசீர் நிரம்ப கிடைக்கும்.
* பாதம் கழுவுதல்:
பாலஸ்தீன நாட்டிலே பெரும்பாலான நாட்களில் சாலையில் சேறும், சகதியும் உண்டு. அதனால் வீட்டின் முற்றத்தில் தண்ணீர் தொட்டியும், வருபவர்களின் கால்களைக் கழுவிவிட ஒரு அடிமையையும் நியமித் திருப்பார். விருந்தினர் வீட்டுக்கு வரும்போது அவர்களின் பாதங்களை கழுவி, விருந்துக்கு அழைத்து வருவது அடிமையின் வேலை.
அன்பர் இயேசுவின் பணி பாதத்திலிருந்து ஆரம்பிக்கிறது. மனிதனின் பாவத்திற்கும், பலவீனத்திற்கும் பாதங்களே காரணம். கால்கள் நடக்கும்பாதை சரியானால் வாழ்வு ஒரு சொர்க்கம்தான். நடக்கின்ற பாதங்கள் பக்குவப்படுத்தப்பட்டுவிட்டால் வாழ்வே மாறிவிடும். அடிமைகள் செய்யும் பாதங்களைக் கழுவும் பணியின் மூலம், இயேசு தம் மீட்புப்பணியை உறுதிபடுத்தினார். பணிவிடை பெற அன்று; பணிவிடை புரியவே வந்தேன் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் செய்தும் காட்டினார்.
பாதம் தொட்டு கலைகளைப் படிக்க ஆரம்பிப்பது பாரம்பரியம். ஆனால் பாதங்களைத் தொட்டுக் கழுவி பாடம் படித்துக்கொடுப்பது இயேசுவின் புதிய பாணி. இயேசுவின் சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவன் என அடிக்கடி வாதாடுவதைப் பார்த்த இயேசு, தன்னைப் பின்பற்ற விரும்புபவர்களுக்குத் தாழ்ச்சியின் பாடத்தைக் கற்றுக்கொண்டு பணிவிடை புரிய எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரி காட்டும் வண்ணம் இயேசு பாதங்களைக் கழுவினார். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள் என்ற அன்புக்கட்டளையும் கொடுக்கிறார்.
பணிவாழ்வு பரிசேய வாழ்க்கையில்லை என்று இயேசு உலகிற்கு நிரூபிக்கிறார். தலைவன் ஆணவக்காரனல்ல. பணியாளன் என்பதை சீடர்களின் பாதங்களைக் கழுவி மாதிரி காட்டுகிறார். பணிக்குருத்துவம் மக்களுக்குப் பணியாற்றும் கருவி என்பதன் வரைவிலக்கணம் சொல்லி வைத்தார். பொதுக்குருத்துவத்தில் பங்கேற்கும் யாரும் இயேசுவின் பணியாளர்களே. இதில் இடஒதுக்கீட்டிற்கு இடமில்லை.
இச்சடங்கு நமது திருமுழுக்கை நினைவுபடுத்துகிறது. 'நான் உன்னைக் கழுவாவிடில் என்னோடு பங்கில்லை' என்றார் இயேசு. இயேசுவின் ரத்தத்தினாலும், ஆவியினாலும் நாம் கழுவித் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். நம் கிறிஸ்தவ வாழ்வு ஆவியால் நிரப்பப்பட்ட வாழ்வாக இருக்க வேண்டும். அந்த ஆவியினால் தூண்டப்பட்ட நமது வாழ்வு பணிவாழ்வாக மாற வேண்டும்.
* ஆண்டவரின் இராவுணவு ஒரு பலி:
கடவுள் இஸ்ராயேல் மக்கள்மீது தமக்கிருந்த அன்பை பாஸ்கா விழா மூலமாகத்தான் வெளிப்படுத்தினார். இது இஸ்ராயேல் மக்களின் விடுதலை விழா. அடிமைத்தனத்திலிருந்து இஸ்ராயேல் மக்களை விடுவிக்க, செம்மறியின் ரத்தம் தெளிக்கப்பட்ட அவர்களது இல்லங்களைக் கடந்துசென்று, எகிப்தியரின் தலைப்பிள்ளைகளைக் கொன்று இஸ்ராயேல் மக்கள் விடுதலையடைந்த பெருநாள் பாஸ்கா திருவிழா. புதிய ஏற்பாட்டிலே உலக மக்களைப் பாவத்தளைகளிலிருந்து விடுவிக்கச் செம்மறியாக இயேசுவும் பலியாகிறார். தமது ரத்தத்தைச் சிந்தி நமக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்தார். இயேசு உலகமீட்புக்காகப் பலியான உண்மையான புதிய செம்மறி.
ஆண்டவரின் இராஉணவு ஒரு பலி
பாஸ்கா பலி கடத்தல் பலி: இருளிலிருந்து ஒளிக்கும், பாவத்திலிருந்து புண்ணியத்திற்கும், சாவிலிருந்து நித்திய வாழ்வுக்கும் கடந்து செல்லவும், கடவுளோடு நிரந்தரமாக குடிகொள்ளவும், இஸ்ராயேல் மக்கள் கடத்தல் பலியை ஒப்புக்கொடுத்தார்கள். இயேசு தனது உடலையும் ரத்தத்தையும் கொடுத்துப் பாஸ்கா கடத்தல் பலியை ஒப்புக்கொடுத்தார்.
+ பாஸ்கா பலி உடன்படிக்கையின் பலி: கடவுளோடு நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள, ஏற்படுத்திய உடன்படிக்கையை நிலைநிறுத்திக்கொள்ள மக்கள் உடன்படிக்கை பலியை ஒப்புக்கொடுத்தார்கள். புதிய நித்திய உடன்படிக்கையை நிலையாக ஏற்படுத்த ஆண்டவர் இயேசு தம் உடலைப் பிட்டுக்கொடுப்பதன் மூலமாகவும், தமது ரத்தத்தைப் பருகக் கொடுப்பதன் மூலமாகவும் இந்தப் புதிய நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார்.
+ பாஸ்கா பலி பரிகார பலி: பழைய ஏற்பாட்டிலே மக்களின் பாவங்களுக்கு மன்னிப்பு பெற பரிகாரப்பலி ஒப்புக்கொடுத்தார்கள். "இது பாவ மன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும் என் ரத்தம்", என்று சொல்லி, உலக மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக தம் ரத்தத்தை சிந்தி பரிகாரமாகத் தம்மையே பலியாக்குகிறார்.
இப்படிப்பட்ட தியாகம் நிறைந்த பலிவிழா தான் இன்று நாம் கொண்டாடும் ஆண்டவரின் இராஉணவு திருவிழா.