மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

தூய ஆவியார் பெருவிழா ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணி 2:1-11 |உரோமர் 8:8-17 | யோவான்.14:15-16,23-26

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


இன்று தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம்.

தூய ஆவி என்றால் யார் என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு சரித்திர நிகழ்ச்சி! இவர் பெயர் பிரான்ஸிஸ். இவர் இத்தாலி நாட்டிலுள்ள அசிசி என்னும் நகரில் வாழ்ந்ததால் இவர் பிரான்ஸிஸ் அசிசியார் என அழைக்கப்படுகின்றார். அவரது வசந்தகால வாழ்நாட்களிலே ஒரு நாள், எகிப்து நாட்டு மன்னனுக்கு கிறிஸ்துவைப் பற்றி எடுத்துரைக்க எகிப்து நாட்டிற்குச் சென்றார்.

மன்னனுக்குப் போதிக்கச் சென்ற அந்தத் தெய்வத் துறவியை அரண்மனையிலிருந்தவர்கள் கேலி செய்ய ஆசைப்பட்டனர்!

ஆகவே அரசனின் சிம்மாசனத்தின் முன்னால் சிலுவை அடையாளங்கள் நிறைந்த இரத்தினக் கம்பளம் ஒன்றை விரித்தார்கள்.

அரசனை நீர் பார்க்கலாம் என்றார்கள். பிரான்ஸிஸ் அசிசியார் அரண்மனைக்குள் நுழைந்தார்.

அந்தநாட்டு வழக்கப்படி அரசன் பக்கத்தில் சென்றுதான் ஒருவன் வணக்கம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அது அவமரியாதை!

பிரான்ஸிஸ் அசிசியாரை அந்தக் கம்பளத்தில் வரையப் பட்டிருந்த சிலுவைகளின்மீது நடக்க வைக்க வேண்டும் - இதுதான் அரசனைச் சூழ்ந்து நின்றவர்களின் திட்டம்!

தூய ஆவியால் நிரப்பப்பட்டிருந்த பிரான்ஸிஸ் அசிசியார் கொஞ்சம்கூட கவலைப்படாமல் கம்பளத்தின்மீது நடந்து சென்று அரசனுக்கு வணக்கம் செலுத்தினார்.

அரசன், பிரான்ஸிஸ் அசிசியைப் பார்த்து, எங்கே வந்தீர்? என்றான். உமக்கு இயேசுவைப் பற்றி, அவர் சுமந்து சென்ற சிலுவையைப் பற்றி எடுத்துச் சொல்ல என்றார் அசிசியார்.

இயேசுவைப் பற்றியா? அவரது சிலுவையைப் பற்றியா? அரசன் ஏளனமாகச் சிரித்தான்!

நீ வணங்குகின்ற இயேசுவையும், அவரது சிலுவையையும் நீயே மதிக்கவில்லை! நீ இயேசுவின் சிலுவையை மிதித்து நடந்து அல்லவா என்னை வந்து சந்தித்தீர் என்றான்.

அதற்கு புனித பிரான்ஸிஸ் அசிசியார்: அரசே! கல்வாரியில் மூன்று சிலுவைகள் இருந்தன! அதில் ஒன்றுதான் இயேசுவின் சிலுவை. மற்ற இரண்டு சிலுவைகளும் திருடர்களின் சிலுவைகள்! அந்தச் சிலுவைகள்தான் இந்தக் கம்பளத்தின் மீது பொறிக்கப் பட்டிருக்கின்றன! நான் மிதித்து வந்தது இயேசுவின் சிலுவையை அல்ல, கள்வர்களின் சிலுவையை என்றார்!

அவரது ஞானத்தைக் கண்டு அரசன் மலைத்துப் போனான்! ஆனால் இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ள மறுத்துவிட்டான்!

இப்படி ஞானம் நிறைந்த, அறிவு செறிந்த பேச்சை அந்தப் புனிதருக்குக் கொடுத்தது யார்?

குழப்பமான நேரங்களில் எது சரி, எது தவறு, எது நீதி, எது அநீதி, எது தர்மம், எது அதர்மம் என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுபவர்தான் தூய ஆவியானவர்.

இந்தத் தூய ஆவியாரை நாம் எங்கிருந்து பெறலாம்? இயேசுவை நோக்கி மன்றாடினால், ஞானம் தரும், அறிவு தரும், வரங்கள் தரும் தூய ஆவியை நாம் பெறலாம்! (முதல் வாசகம்)

இன்று நமக்குத் தேவையானதெல்லாம் ஞானமும், அறிவு செரிந்த பேச்சும்!

இன்று எங்கு பார்த்தாலும் ஒரே குழப்பம்!

ஒர் ஊரிலே ஒரு திடீர் பணக்காரர்! அவர் ஒரு கார் வாங்கிப் பயணம் செய்தார்!

பின் சீட்டிலே உட்கார்ந்துகிட்டு டிரைவர் என்ன பண்றாருன்னு பார்த்துக்கிட்டேயிருந்தார்!

வண்டியை ஸ்டார்ட் பண்ணி, டிரைவர் கியரை மாத்தினார்! முதலாளி: என்ன பண்றெ?.. டிரைவர்: கியரை மாத்றேன். முதலாளி: நானிருக்கும்போதே கியரை மாத்திறியே, நான் இல்லாதபோது என்னென்ன செய்வே, என்று சொல்லி வேலை காலின்னு சொல்லிட்டாரு. இவர் போன்ற முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு வேதனை?

இவருக்கு எப்படி, நடந்ததை விளக்கச் சொல்றது?

ஒரு வீட்லே ஒரு முதலாளி வேலைக்காரரைப் பார்த்து இந்த ஆப்பிளை செதுக்கி நறுக்கி கொண்டு வா அப்படின்னாரு!

அந்த வேலைக்காரர் தோலைச் செதுக்கி நறுக்கி முதலாளிகிட்டே கொண்டு வந்து கொடுத்தார்!

முதலாளி: எங்கேப்பா பழம் அப்படின்னாரு! வேலைக்காரர்; இல்லை, தோலைதானே நறுக்கி எடுத்திட்டு வரச்சொன்னீங்க? அதனாலே தோலை நறுக்கி எடுத்துகிட்டு வந்திருக்கேன்! உள்ளேயிருந்த பழத்தை நான் சாப்பிட்டிட்டேன். அப்படின்னார்.

இப்படிப் பதில் சொல்லும் வேலைக்காரரிடம் நாம் என்ன பதில் சொல்வது?

முதலாளியால் தொழிலாளர்களுக்குக் குழப்பம். தொழிலாளர்களால் முதலாளிக்குக் குழப்பம்! கணவனால் மனைவிக்குக் குழப்பம்! மனைவியால் கணவனுக்குக் குழப்பம்! மாமியாரால் மருமகளுக்குக் குழப்பம்! மருமகளால் மாமியாருக்குக் குழப்பம்! தலைவர்களால் தொண்டர்களுக்குக் குழப்பம்! தொண்டர்களால் தலைவர்களுக்கு குழப்பம்!

உண்டால் குழப்பம்!
உறங்கினால் குழப்பம்!

நடந்தால் குழப்பம்!
படித்தால் குழப்பம்!
எட்டுத்திக்கும் எப்போதும் குழப்பம்!

ஆனால் நாம் அஞ்ச வேண்டியதில்லை! குழப்பங்கள் நடுவிலே ஞானத்தோடும், விவேகத்தோடும் நாம் நடக்க நமக்கு உதவி செய்ய தூய ஆவியார் எப்போதும் தயாராக இருக்கிறார்! (இரண்டாம் வாசகம்)

அவரைத்தர இயேசு எப்போதும் தயாராக இருக்கிறார்! ஆகவே இன்று இயேசுவை நோக்கி உருக்கமாக இப்படி செபிப்போம்; வாரும் தூய ஆவியாரே! வரங்கள் அனைத்தையும் தவறாது தாரும். குறிப்பாக சரியானதைச் சொல்லவும், சரியானதைச் செய்யவும் அருள் தாரும்
br> எங்கள் எண்ணங்களை உமது ஞான ஒளியால் நிரப்பி என்றும் உமது ஞானப் பிள்ளைகளாக வாழ அருள் தாரும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நமது அருமையான நண்பர் தூய ஆவியார்

தூய ஆவியார் யார்? யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவரின் ஆவி பிரிந்துவிட்டது என்று கூறுகின்றோம். ஆவி என்பது உயிரைக் குறிக்கும். தூய ஆவி என்றால் தூய உயிர் என்பது பொருள். தூய உயிர் என்பது கடவுளின் உயிரைக் குறிக்கும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் தூய ஆவியார் நமக்குள் உயிராய் இருக்கின்றார் என்று கூறுகின்றார் (உரோ 8:9,10,11). இந்த ஆவியார் யார் என்பதை நமக்கு விளக்கிச் சொல்ல பல அடையாளங்களை விவிலியம் பயன்படுத்துகின்றது.

நாம் அன்றாட வாழ்க்கையில் பல அடையாளங்களைப் பயன்படுத்துகின்றோம். இரயிலில், பச்சைக் கொடி காட்டப்பட்டால் வண்டி போகலாம் என்று பொருள். சிவப்புக் கொடி காட்டப்பட்டால் வண்டி நிற்கவேண்டும் என்று பொருள்.

ஒவ்வோர் அடையாளத்திற்கும் ஒரு பொருள் உண்டு, அர்த்தம் உண்டு!

இதோ தூய ஆவியாரைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படும் ஐந்து அழகான அடையாளங்கள்: 1. புறா, 2. தண்ணீர். 3.காற்று, 4.நெருப்பு. 5.நாக்கு.

இந்த 5 அடையாளங்களும் சுட்டிக்காட்டும் உண்மைகள் எவை?

1. புறா (லூக் 3:22): புறா உண்டாக்குதலுக்கு அடையாளம். இதனால்தான். கடவுள் உலகை உண்டாக்குவதற்கு முன் நீர்த்திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக்கொண்டிருந்தது (தொநூ 1:2) என்று திருவிவிலியம் கூறுகின்றது.

புறா அதன் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்கும் போது புதிய புறாக்குஞ்சுகள் வெளியே வருகின்றன; புதிய படைப்புகள் உண்டாகின்றன! ஆக, தூய ஆவியார் என்பவர் புதிய உயிரை உண்டாக்குகின்றவர்; புதியவை அனைத்திற்கும் அவர் சொந்தக்காரர்.

நாம் பழைய மனிதர்களாக வாழாமல், முற்றிலும் புதிய மனிதர்களாக வாழ விரும்பினால் தூய ஆவியாரை நோக்கி மன்றாடலாம்.

2.தண்ணீர் (யோவா 4:14) : நமக்குள்ளே பொங்கி எழும் ஊற்றுதான் தூய ஆவியார். ஊற்று எப்படி நமது தாகத்தைத் தீர்க்கின்றதோ அதுபோல, தூய ஆவியார் நமது தாகங்களையெல்லாம் தீர்த்துவைப்பார்!

நமக்கு ஆவியாரின் வரங்கள் மீதோ (1கொரி 12:8-10), அவரது கனிகளின் மீதோ (கலா 5:22,23) தாகமாயிருந்தால் தூய ஆவியாரை நோக்கி மன்றாடலாம்.

3.காற்று (திப 2:2): காற்று உயிருக்கு அடையாளம். உள்ளே போகும் மூச்சு வெளியே வர மறந்தால் போச்சு! ஆக. உயிரளிப்பவர் தூய ஆவியானவர்.

துறவி ஒருவர் தனது சீடர்களைப் பார்த்து, ஒரு மனிதனின் சராசரி வயது என்ன? என்று கேட்டார்.

சிலர் 70 என்றார்கள்!
சிலர் 60 என்றார்கள்!
சிலர் 50 என்றார்கள்!
குருவோ, உங்கள் பதில்கள் அனைத்தும் தவறானவை. மனிதனின் வயது அவன் மூச்சுவிடும் நேரம் என்றார்.

நாம் செத்துவிடுவோமோ என்று பயமாக இருந்தால் நாம் தூய ஆவியாரை நோக்கி மன்றாடலாம்.

4.நெருப்பு (திப 2:3) : நெருப்பு எரித்தலுக்கு அடையாளம். தூய ஆவியார் என்பவர் எரிப்பவர்! நமக்குள் பாவமிருந்தால் நாம் தூய ஆவியாரை நோக்கி மன்றாடலாம். அவர் நமது பாவங்களையெல்லாம் எரித்துவிடுவார்; நாம் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருக்க நமக்கு உதவி செய்வார் (உரோ 8:9).

5.நாவு (திப 2:3): நாக்கு பேச்சுக்கு அடையாளம். ஆகவே ஆவியார் நமக்கு பேசும் வரத்தைத் தருபவர். தூய ஆவியார் திருத்தூதர்கள் மீது இறங்கி வந்ததால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினர் என இன்றைய முதல் வாசகம் கூறுகின்றது.

எனவே, தூய ஆவியார் என்பவர்
புதிய உயிரை உண்டாக்குகின்றவர்.
நமது தாகங்களைத் தீர்ப்பவர்.
நமக்கு உயிரைக் கொடுப்பவர்.
நம் பாவங்களைச் சுட்டெரிப்பவர்.
நம்மை இனிதே பேச வைப்பவர்.
இப்படிப்பட்ட ஆவியார் கேட்பவர்களின் மீது எழுந்தருள்வார் (லூக் 11:9-13).

தூய ஆவியார் நமது துணையாளர் என்ற உண்மையை இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்குச் சுட்டிக்காட்டியிருப்பதை எப்போதும் நமது நினைவில் கொள்வோம். தூய ஆவியார் நமது துணையாளர்; அவர் நமது நல்ல நண்பர் என்ற எண்ணம் எப்போதும் நமது இதயக்கடலில் அலைமோதட்டும்!

மேலும் அறிவோம் :

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் : 788).

பொருள் : இடுப்பில் உடுத்தியுள்ள ஆடையைப் பறிகொடுப்பவனின் கை விரைந்து சென்று ஆடையைச் சரி செய்யப் பெரிதும் உதவும்; அதுபோன்று, நண்பனுக்குத் துன்பம் வரும் போது துடித்தெழுந்து சென்று அத்துன்பத்தைப் போக்குவது உயரிய நட்பாகும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தூய ஆவியார் பெருவிழா

வகுப்பு ஆசிரியர் தம் மாணவர்களிடம், “கடவுளிடம் என்ன வரம் கேட்பீர்கள்?" என்று கேட்டதற்கு அவர்கள், "நாங்கள் கடவுளிடம் கார், வீடு, பணம், கம்ப்யூட்டர் ஆகியவற்றைக் கேட்போம்" என்றனர். ஆசிரியர் அவர்களிடம், "நீங்கள் மடையர்கள். நான் கடவுளிடம் அறிவு கொடுக்கும்படி கேட்பேன்" என்றார். அதற்கு மாணவர்கள் சிரித்துக் கொண்டு, "சார்! யாருக்கிட்டே என்ன இல்லையோ அதைத்தான் கடவுளிடம் கொடுக்கும்படி கேட்பார்கள்" என்றனர். ஆசிரியர் நிலைகுலைந்து நின்றார்!!

நாம் கடவுளிடம் ஆயிரம் கொடைகளைக் கேட்கலாம். ஆனால் கடவுள் நமக்குக் கொடுக்கும் மாபெரும் கொடை தூய ஆவியார் என்று கிறிஸ்துவே கூறியுள்ளார்: "விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது உறுதி" (லூக் 11:13), பேதுருவும் தமது அருளுரையில் மக்களிடம், "நீங்கள் மனம் மாறுங்கள். திருமுழுக்குப் பெறுங்கள். அப்போது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்" (திப 2:38) என்று கூறினார்.

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தாம் விண்ணகம் சென்றவுடன் தந்தையிடமிருந்து தூய ஆவியை அனுப்பப்போவதாகத் தம் சீடர்களுக்கு வாக்களிக்கிறார் (யோவா 14:16-17) கிறிஸ்து வாக்களித்தவாறே அவர் விண்ணகம் சென்ற பத்தாம் நாள் தம் சீடர்கள்மேல் தூய ஆவியைப் பொழிந்தார் (திப 2:1-4).

திருச்சபை இன்று தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. இன்று தான் திருச்சபையின் பிறந்தநாள். ஏனெனில் இன்று பேதுரு ஆற்றிய அருளுரையைக் கேட்டு மூவாயிரம் பேர் திருமுழுக்குப் பெற்றனர் (திப 2:41).

மறைமாவட்ட ஆயர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கிராமப்புறப் பங்குகளுக்குச் செல்வார். அப்போது சிறுவர், சிறுமியருக்கு உறுதிப்பூசுதல் அளிப்பார்.ஓர் ஆயர் ஒரு கிராமத்திற்குச் சென்றபோது. அங்கு உறுதிப்பூசுதல் பெறவிருந்த சிறுவர், சிறுமியரிடம், "தூய ஆவியார் எப்போது வருகிறார்?" என்று கேட்டபோது அவர்கள். "ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறார்" என்றனர். ஆயரே அதைக் கேட்டுச் சிரித்துவிட்டார்!

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்றவர் தூய ஆவியார் அல்ல; மாறாக, ஒவ்வொரு வினாடியும் நமக்குள்ளிருந்து தமது ஏவுதலால் நம்மை இயக்கி வருகிறவர் தூய ஆவியார், "கிறிஸ்தவர் என்பவர் தூய ஆவியின் நிரந்தர இயக்கத்தில் விசுவாசத்தில் வாழ்கின்றவர்“ என்று ஒரு கிறிஸ்தவருக்கு இலக்கணம் கூறுகிறார் ஓர் இறையியல் அறிஞர்.இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், யார் கிறிஸ்தவர் அல்ல என்றும், கடவுளின் மக்கள் என்றும் எதிர்மறையிலும் நேர்மறையிலும் சொல்லுகிறார். எதிர்மறையில், "கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல" (உரோ 8:9) என்கிறார். எனவே கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. நேர்மறையில், "கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்" (உரோ 8:14) என்கிறார். எனவே ஒருவர் கடவுளின் ஆவியைப் பெற்றிருந்தால் மட்டுமே அவர் கடவுளின் பிள்ளை என அழைக்கப்படத் தகுதியுள்ளவர்.

தூய ஆவியாரின் விளைவுகள் இரண்டு. அவை முறையே ஒன்று அகவிளைவு. மற்றொன்று புறவிளைவு. தூய ஆவியார் நமக்கு உள்ளேயேயும் நமக்கு வெளியேயும் செயல்படுகிறார்.

தூய ஆவியார் நமக்குள்ளிருந்து செயல்படுகிறார். கடவுளின் அன்பு தூய ஆவியார் வழியாகவே நமது உள்ளங்களில் பொழியப்படுகிறது (உரோ 5:5). தூய ஆவியாரின் துணையுடன் நாம் கடவுளை, அப்பா! தந்தையே எனக் கூப்பிடுகிறோம் (உரோ 8:15). தூய ஆவியாரே நமக்காகக் கடவுளிடம் பரிந்து பேசுகிறார் (உரோ 8:26).


"பாவத்தின் சம்பளம் மரணம் என்றால், பாவத்தின் 'போனஸ்' என்ன?" என்று என்னை ஒருவர் கேட்டபோது, "பாவத்தின் போனஸ் எய்ட்ஸ் என்னும் உயிர்க் கொல்லிநோய்" என்றேன். பாலுணர்வைத் தவறாகப் பயன்படுத்தி நம்மையே நாம் அழித்துக் கொள்ளக் கூடாது.

தூய ஆவியார் நமது புறவாழ்வில் செயல்படுகிறார். நம்மை நற்செய்தியின் தூதுவர்களாகவும் இயேசுவின் சாட்சிகளாகவும். மாற்றுகிறார். பொதுநிலையினர் ஆற்றவேண்டிய நற்செய்திப் பணியின் அடித்தளம் உறுதிப்பூசுதல் அருளடையாளமாகும்.

பல்வேறு காரணங்களால் பிளவுபட்டுள்ள இன்றைய உலகில் கிறிஸ்தவர்கள் அன்பினாலும் ஒற்றுமையினாலும் மட்டுமே இயேசுவுக்கு சாட்சியம் பகரமுடியும். தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிரும் உடையவர்களாய் கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு வல்லமையுடன் சாட்சியம் பகர்ந்தனர். விசுவாசிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தது (திப 2:42-47).

ஆனால் இன்று கிறிஸ்தவர்களிடம் பிரிவினை தலை தூக்கியுள்ளது. ''திருச்சபை தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளது" என்று வேதனையுடன் கூறினார் திருத்தந்தை ஆறாம் பவுல். "இன்று திருப்பணியாளர்கள், துறவறத்தார், பொதுநிலையினர் நடுவில் உள்ள சாதிச் சண்டையால் தூய ஆவியார் மனஉளைச்சல் அடைந்து மருத்துவ விடுப்பில் இருக்கிறார்" என்கிறார் ஒரு கிறிஸ்தவர், வேதனை! வெட்கக் கேடு!

"மங்கைத் தீட்டுப்பட்டால் கங்கையில் நீராடலாம். கங்கையே தீட்டுப்பட்டால் எங்கே நீராடுவது?" மற்றவர்கள் சண்டை போட்டால் கிறிஸ்தவர்கள் சமாதானம் செய்யலாம்: கிறிஸ்தவர்களே சண்டை போட்டால் யார் சமாதானம் செய்யமுடியும்?

எனவே. வேற்றுமை வேலிகளை வேரறுப்போம்; பிரிவினைச் சுவற்றைப் பிளந்தெறிவோம்; சாதிப் பேய்க்குச் சமாதிகட்டுவோம். அன்பின் ஆவியார். உண்மையின் ஆவியார் நம்மை நிறை உண்மையையும் நிறைவாழ்வையும் நோக்கி வழிநடத்துவாராக!

தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்கவேண்டாம் (1 தெச 5:19),
தூய ஆவியார்க்குத் துயரம் விளைவிக்க வேண்டாம் (எபே 4:30).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உயிரளிப்பவர் ஒருங்கிணைப்பவர் தூய ஆவி

இந்த உடலில் தான் எத்தனை உறுப்புகள்! அவை ஒவ்வொன்றும் தங்களுக்குள் முக்கியமானது எது என்று சர்ச்சையைக் கிளப்பின. சரியான விடை கிடைக்காததால் படைத்தவரையே அணுகின. “உடலை விட்டு எது நீங்கும் போது உடல் மிக மோசமான நிலையில் விட்டுவிடப்படுமோ, அதுவே முக்கியமானது” என்று கடவுள் பதில் அளித்தார்.

உடனே நாக்கு உடலைவிட்டு வெளியேறியது. ஓர் ஆண்டுக்குப் பின் மீண்டும் வந்து “நான் இல்லாமல் எப்படி இருந்தீர்கள்?" என்று மற்ற உறுப்புக்களைக் கேட்டது. “ஊமையாகப் பேசும் திறனற்று இருந்தோம். அவ்வளவுதான். மற்றப்படி எல்லாம் வழக்கம் போல் நடந்தது” என்று ஏனைய உறுப்புக்கள் பதில் அளித்தன. இதை அறிந்ததும் நாக்கு உடலோடு இணைந்து கொண்டது. பிறகு கண் உடலை விட்டு வெளியேறியது. ஆறுமாதம் கழித்து வந்து “நான் இல்லாமல் உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது?" என்று கேட்க, "பார்வையற்று இருந்தோம், மற்றபடி வேறு பாதிப்பு இல்லை" என்று மற்றவை பதிலளித்தன. உடனே கண் உடலோடு ஒட்டிக் கொண்டது.

இவ்வாறு காது, கை, கால் என்று ஒவ்வொன்றாக வெளியேறி தாங்கள் இல்லாமல் உடல் இயங்கியதை அறிந்து கொண்டன. இறுதியாக உயிர் சொன்னது: “சரி, நான் உடலைவிட்டு வெளியேறப் போகிறேன்”. இதைக் கேட்டதும் உறுப்புக்கள் அனைத்தும் ஒரு கணம் சிந்தித்தன. திகைத்து நின்றன. உயிர் இல்லையென்றால் உடல் உறுப்புக்கள் எல்லாம் இருந்தும் என்ன பயன்? எனவே அனைத்தும் ஒரு சேர உயிரைப் பார்த்து "உயிரே, உயிரே போகாதே” என்று கெஞ்சின. உடனே உயிர் சிலிர்த்துக் கொண்டது “நானே மிகவும் முக்கியமானவன்”.

உடலை விட்டு உயிர் பிரிந்தால் உறுப்புக்கள் சிதைந்து விடும். செயலற்று அழிந்து விடும். “நீங்கள் கிறிஸ்துவின் உடல். ஒவ்வொரு வரும் அதன் தனித்தனி உறுப்புக்கள்” (1 கொரி.12:27) கிறிஸ்துவின் மறையுடல் பற்றிய திருத்தூதர் பவுலின் சிந்தனை ஆழமானது. அந்த உடலின் தலையாக இருப்பவர் கிறிஸ்து. உயிராக இருப்பவர் தூய ஆவி.

1. தூய ஆவியே திருச்சபையின் உயிராக இருக்கிறார். இயக்குகிறார்.
தொடக்கத்தில் மண்ணுலகு வெறுமையாக, இருளானதாக இருந்தபோது "நீர்த்திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது". (தொ.நூ.1:2) தந்தையான கடவுள் வார்த்தை வழியாக உலகைப் படைத்தார். இவ்வாறு உலகம் புத்துயிர் பெற்றுப் புதுவடிவெடுக்க ஆவியானவரே காரணம் முதல் மனிதன் ஆதாமுக்குள் கடவுள் ஊதிய உயிர் மூச்சு (தொ.நூ.2:7) இறைவாக்கினர் எசேக்.37:9ல் உயிரிழந்த உலர்ந்த எலும்புகள் உயிர்பெறும்படி புகுத்திய உயிர் மூச்சு இவையெல்லாமே தூய ஆவியானவரைத்தானே குறிக்கின்றன! எந்த வார்த்தையானவர் வழியாக இந்த உலகம் படைக்கப்பட்டதோ, அதே வார்த்தையானவர் காலநிறைவில் கன்னியிடம் மனித உடல் எடுக்க, அந்தக் கன்னியின் மீது நிழலிட்டவர் தூய ஆவியாரே. "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்' (லூக்.1:35). அதே மனித உடல் எடுத்த வார்த்தையானவரின் மீட்புப் புணியைத் தொடர்ந்தாற்ற திருச்சபை பிறப்பதற்கும் அந்த ஆவியானவரே இறங்கி வருகிறார் (தி.ப.2:1-11). இவ்வாறு படைப்பின், மீட்பின் வரலாற்றிலே புத்துயிர் அளிப்பவராக, புதுப் பிறப்பைக் கொடுப்பவராக ஆவியானவர் இயங்குவதைக் காண்கிறோம். ஆவியானவரின் எழுச்சியில் திருத்தூதர்கள் வாழ்வில் புதிய திருப்பம் கண்டார்கள். புதுப்படைப்பாக மாறினார்கள். உலகின் முகத்தைப் புதுப்பித்தார்கள்.

கிறிஸ்து மனித உடலெடுக்க அன்னை மரியாவின் மீது நிழலிட்ட ஆவியானவர், கிறிஸ்துவின் மறைஉடலான திருச்சபை உருவாகவும் அன்னை மரியாவின் தோழமையில் கூடிச் செபித்த திருத்தூதர்கள் மீது இறங்கி வந்தது எத்துணை பொருத்தமானது! இயேசுவின் ஊனுடலாகட்டும், அவரது மறையுடலாகட்டும், நற்கருணை யில் அவரது அருள்சாதன உடலாகட்டும் எல்லாம் தூய ஆவியாரின் உருவாக்கமே!

முதல் பெந்தேகோஸ்து விழாவன்று இயேசு தம் ஆவியை அனுப்பித் திருச்சபைக்கு உயிர் கொடுத்தார். ஆகவேதான் இவ்விழாவைத் திருச்சபையின் பிறந்த நாள் என்கிறோம். "தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்" (கலா.5:25)

2. தூய ஆவியே திருச்சபையை ஒருங்கிணைக்கிறார். ஒன்று படுத்துகிறார்
. இன்று தூய ஆவியானவர் பெயரைச் சொல்லி புற்றீசலாக முளைத்தெழும் சபைகளுக்கும் நடத்தப்படும் பேரின்பப் பெருவிழாக் களுக்கும் பஞ்சமில்லை. தூய ஆவியானவர் ஒன்று சேர்ப்பவரா அல்லது துண்டுபடுத்துபவரா? தூய ஆவியாரின் எழுச்சியில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூடிய மக்கள் ஒன்றிணைக்கப்படுகிறார்கள். வேறுபட்ட மொழிகளில் பேசிய மக்கள், அவரவர் தாய் மொழியில் மீட்பின் செய்தியைப் புரிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவரவர் தனித் தன்மையும் காக்கப்படுகிறது. பொது உணர்வும் போற்றப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமையை உருவாக்குபவர் தூய ஆவியானவர்.

ஒரே மொழியைப் பேசிய மக்கள் சிதறிச் சின்னாபின்ன மானார்கள். பாபேல் கோபுரம் கட்டும் நிகழ்ச்சியில் (தொ.நூ.11:8) பல்வேறு மொழிகளைப் பேசிய மக்கள் ஒன்றுபட்டு மகிழ்கிறார்கள் பெந்தேகோஸ்து பெருவிழாவில் (தி.ப.2:8). கடவுளை நோக்கி மனிதன் எழுப்பிய பாபேல் கோபுரம் குழப்பத்தின், அகந்தையின் அதன் விளைவாக பிரிவினையின் அடையாளம். மனிதரை நோக்கி இறைவன் பொழிந்த தூய ஆவி ஒற்றுமையின் அடையாளம். ஒருமைப்பாட்டின் வெளிப்பாடு. ஆவியால் வழிநடத்தப்படுபவர்கள் வேறுபாடுகளை, பிளவுகளைக் கடந்து செயல்படுபவர்கள். "யூதரானாலும் கிரேக்கரா னாலும் அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்" (1 கொரி. 12:13) இருக்கிற ஒற்றுமையைச் சீர்குலைத்துப் பிரித்தாளும் அரசியல்வாதியல்லர் தூய ஆவியானவர். பொது நன்மைக்காகவே வரங்களையும் கொடைகளையும் ஈந்து கூட்டிச் சேர்ப்பவர்தான் கடவுளின் ஆவியானவர். தன்னலத்துக்காகப் பொது நலனை அடகு வைக்க மாட்டார். பொது நலனுக்காகத் தன்னலத்தையும் துறக்கத் தூண்டுபவர் தூய ஆவியானவர்.

எனவே ஆவியின் பெயரைச் சொல்லி ஒன்றாக இருக்கும் திருச்சபையைத் துண்டாடுவது அவருக்கு எதிரான பாவம். எந்தப் பாவமும் மன்னிக்கப்படும். தூய ஆவியானவருக்கு எதிரான பாவம் மட்டும் மன்னிக்கப்படாது. (மார்க். 3:28).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பணிக்குத் தயார்நிலை!

கடந்த வாரம் என் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பேச்சின் ஊடே அவருடைய அம்மா என்னிடம், 'அபிஷேகம் - அனாய்ன்ட்டிங் பெற நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார். 'என்ன?' என்றேன். 'நான் சில வாரங்களாக செபக் கூட்டத்திற்குச் செல்கிறேன். அங்கிருப்பவர்கள் என்னிடம் இதைக் கேட்டார்கள். அதை நான் உங்களிடம் கேட்டேன்' என்றார். தொடர்ந்து, 'நீங்க அனாய்ன்ட்டிங் பெற்றுவிட்டீர்களா?' என்று கேட்டார். இது எனக்கு ஒரே நேரத்தில் அதிர்ச்சியாகவும், தன்னாய்வு செய்யும் நிகழ்வாகவும் இருந்தது.

'அபிஷேகம்' என்றால் என்ன? நான் 'அனாய்ன்டிங்' பெற்றுவிட்டேனா? - இக்கேள்விகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

என்னைப் பொறுத்தவரையில் 'அனாய்ன்டிங்' அல்லது 'அபிஷேகம்' என்பது தயார்நிலை என்று புரிந்துகொள்கிறேன். விவிலியத்தின் புரிதலும் இதுதான். இறைவாக்கினர் சாமுவேல் சவுலையும், பின் தாவீதையும் அபிஷேகம் செய்யும்போது அவர்கள் 'அரசர்களாக' தயார்நிலையில் இருக்கின்றனர். மரியாளிடம் வானதூதர், 'தூய ஆவியின் வல்லமை உம்மேல் நிழலிடும்' என்று சொல்லி அருள்பொழிவு செய்யும்போது அவர் மீட்பரைப் பெற்றெடுக்கும் தயார்நிலையை அடைகின்றார்.

நம் கத்தோலிக்கத் திருஅவையில் நாம் திருமுழுக்கின்போதும், உறுதிபூசுதலின் போதும் 'தூய ஆவியாரின்' முத்திரையைப் பெற்றுக்கொள்கிறோம். இவ்வருளடையாளங்கள் வழியாக நாம் கிறிஸ்தவ வாழ்விற்கான தயார்நிலையில் இருக்கிறோம்.

இன்று நம் தாய்த்திருஅவை தனது பிறந்த நாளாம் தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறது. பிளவுண்ட நாவுகள் இறங்கி வந்து பிளவுபட்ட மானுடத்தை அன்று இணைத்தன. இன்று இத்தூய ஆவியாரின் பெயரைக் கொண்டே நிறைய பிரிவுகள் திருஅவையிலும், பிரிவினை சபைகளில் தோன்றிவிட்டன என்பது வருத்தத்திற்குரியது.

'தூய ஆவியானவர் திருவிழா' நம்முள் நிறைய கேள்விகளை எழுப்புகிறது:
(1) இவரை எப்படி அழைப்பது? 'தூய ஆவி' என்று அழைப்பதா? அல்லது 'தூய ஆவியார்,' அல்லது 'தூய ஆவியானவர்' என்று அழைப்பதா?
(2) 'தந்தை' மற்றும் 'மகன்' என்னும் இருவருக்குள் இருக்கும் உறவே தூய ஆவி என்றும், இந்த தூய ஆவியே மூவொரு இறைவன் என்று கற்பிக்கும் கத்தோலிக்க திருஅவை, கணவன்-மனைவி-பிள்ளை என்ற உருவகத்தையும் கொடுக்கின்றது. ஆனால், இந்த உருவகம் அடுத்த பிரச்சினைக்கு வழி வகுக்கிறது. 'தூய ஆவியானவர்' உறவின் கனியாகிய குழந்தை என்றால், அது அல்லது அவர் மற்ற இருவரைவிட சிறியவர் என்று ஆகிவிடுவதில்லையா?
(3) 'தந்தை உலகைப் படைத்தார்,' 'மகன் உலகை மீட்டார்,' 'தூய ஆவி உலகை வழிநடத்துகிறார்' என்று அவர்களின் செயல்கள் அடிப்படையிலான புரிதலும் தூய ஆவியானவரைப் பற்றி நமக்கு முழுமையாகச் சொல்வதில்லை.
(4) இன்று 'பெந்தகோஸ்தெ' என்றழைக்கப்படும் பிரிந்த சபையினர் தூய ஆவியானவரை மட்டுமே இறைவனாகக் கருதுகின்றனர். பொட்டு அணியக்கூடாது, பூ அணியக் கூடாது, வெள்ளைநிற ஆடைதான் அணிய வேண்டும் என்று சொல்லி நம் தெருக்களில் வழிநடக்கும் இவர்கள், 'நீங்கள் அக்கினி அபிஷேகம் பெற்றுவிட்டீர்களா?' என்று நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். மற்றும்
(5) 'அருங்கொடையாளர்கள்' ('கரிஸ்மேடிக்ஸ்') என்று தங்களையே அழைக்கும் ஒரு சிறு பகுதியினர், நம் திருஅவை மரபிற்குள் இருந்துகொண்டே ஒரு மாற்று வழிபாட்டு முறையையும் முன்வைக்கின்றனர்.

பவுல் எபேசு நகரில் எதிர்கொண்ட கேள்விதான் இங்கே நினைவிற்கு வருகிறது: 'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!' (காண். திப 19:1-10) இந்த நாளின் பொருளைப் புரிந்து கொள்ளுமுன் 'தூய ஆவி' என்னும் பெயரைப் புரிந்து கொள்வோம். விவிலியத்தில் 'தூய ஆவி' என்ற பெயர் நான்கு நிலைகளில் கையாளப்படுகின்றது:

(1) 'ஆண்டவரின் ஆவி.' எபிரேயத்தில் 'ருவா' என்ற வார்த்தையை 'ஆவி' என்று மொழிபெயர்க்கிறோம். இந்த 'ஆவி' தான் படைப்பின் தொடக்கத்தில் நீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தவர் (காண். தொநூ 1:2). ஆதாமின் உடலுக்குள் ஊதப்பட்டவர். அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள்மேல் இறங்கி வந்தவர். இயேசுவின் திருமுழுக்கின்மேல் அவர்மேல் இறங்கி வந்தவரும், அவரை பாலைநிலத்திற்கு அழைத்துச் சென்றவரும், 'ஆண்டவரின் ஆவி என்மேல் உளது' என்று இயேசு தொழுகைக்கூடத்தில் சொன்னவரும் இவர்தான்.

(2) 'இயேசுவின் ஆவி.' தன் உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்கள் மேல் ஊதுகின்ற இயேசு, 'தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்' (யோவா 20:22) என்கிறார். இங்கே தூய ஆவியானவர் இயேசுவின் கொடையாக, அவரிடமிருந்து ஊற்றெடுக்கின்றார்.

(3). 'மூவொரு இறைவனில் ஓர் ஆள்.' தன் இறுதி இராவுணவில் சீடர்களின் பாதங்களைக் கழுவிவிட்டு அவர்களோடு தொடர்ந்து உரையாடும் இயேசு (காண். யோவா 13 -1 6) அவர்களிடம், 'தூய ஆவியானவர்' என்னும் துணையாளரைத் தான் அனுப்பவதாகவும், அவர் அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்பிப்பார், நினைவூட்டுவார் என்றும் வாக்களிக்கின்றார். இங்கே இயேசு மூவொரு இறைவனின் மூன்றாம் ஆளைச் சுட்டிக்காட்ட 'தூய ஆவி' என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இந்தப் புரிதலை பிற்கால திருமடல்களிலும் பார்க்கின்றோம். உதாரணத்திற்கு, கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமடலை நிறைவு செய்யும் பவுல், 'ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!' (2 கொரி 13:13) என எழுதுகின்றார்.

(4). தூய பவுலடியாரின் திருமடல்களுக்கு வரும்போது அங்கே புதியதொரு புரிதலைப் பார்க்கின்றோம். 'ஊனியல்பு,' 'ஆவிக்குரிய இயல்பு' என்று இருதுருவ வாழ்க்கை நிலைகளை எடுத்துச் சொல்லும் பவுல், ஒரு கட்டத்தில் 'ஆவிக்குரிய இயல்பு' என்பது இயல்பாகவே நம் ஒவ்வொருவரிடமும் இருப்பதுபோல எழுதி முடிக்கின்றார் (காண். கலா 5:16-26).

இந்த நான்கு புரிதல்களில் எந்தப் புரிதலை நாம் எடுத்துக் கொள்வது என்ற குழப்பத்திலிருந்து நாம் தெளிவாவதற்கே தூய ஆவியானவரின் துணை தேவைப்படுகிறது!

திருத்தூதர்கள் மேல் இன்று தூய ஆவியானவர் இறங்கி வந்த நிகழ்வை வாசிக்குமுன் முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் எப்படி இருந்தார் என்பதைப் புரிந்து கொள்வோம்: (அ) 'ஒருசிலருக்கு மட்டுமே தூய ஆவியானவர்.' முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் ஒருசிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டார். குறிப்பாக, அரசர்கள் மட்டும் இறைவாக்கினர்கள். ஆக, ஒரே அரண்மனையில் இருந்தாலும் அரசர்மேல் தூய ஆவியானவர் இருப்பார். ஆனால், அரசி மேலோ, பணிப்பெண் மேலோ இருக்கமாட்டார். இறைவாக்கினர்மேல் இருப்பாhர். ஆனால், சாதாரண மக்கள்மேல் இருக்க மாட்டார். (ஆ) 'நிபந்தனைக்குட்பட்டவர்.' தூய ஆவியானவர் ஒருவருக்கு கொடுக்கப்படுவதுபோல அவரிடமிருந்து திரும்பவும் எடுத்துக்கொள்ளப்படுவார். உதாரணத்திற்கு, சிம்சோன் பிறக்கும்போதே ஆண்டவரின் ஆவி அவருக்குள் இருக்கின்றார். அவரின் குழந்தைப் பருவத்தில் அவரை ஆட்டுவிக்கின்றார். ஆனால், அவரின் தலை மழிக்கப்பட்டபோது, அவரிடமிருந்து ஆவியானவர் விலகுகின்றார். அதேபோல, சவுல் அரசராக அருள்பொழிவு செய்யப்பட்டபோது அவர்மேல் தூய ஆவியானவர் இருக்கிறார். ஆனால், தாவீதின் மேல் பொறாமை கொண்டு அவரை அம்பு எய்து கொல்ல முயலும்போது, ஆண்டவரின் ஆவி அவரைவிட்டு அகல்கின்றார். (இ) 'அவர் ஒரு ஆற்றல்.' தூய ஆவியானவர் என்பவர் ஆற்றல், அல்லது சக்தி. அவர் ஒரு மனிதர் அல்லர்.

இந்த மூன்று புரிதல்களும் இன்றைய முதல் வாசகத்தில் புரட்டிப்போடப்படுகின்றன: (அ) 'அனைவருக்கும் தூய ஆவி.' திருத்தூதர்களும், அன்னை மரியாளும் தூய ஆவியானவரைப் பெறுகின்றனர். மேலும் இவர்கள் கைகளை விரிக்கும் அனைவர்மேலும் தூய ஆவியானவர் அருளப்படுகின்றார். (ஆ) 'நிபந்தனைகள் அல்லாதவர்.' ஒருவருக்கு ஒருமுறை வழங்கப்படும் தூய ஆவி அவரிடமிருந்து திரும்ப எடுக்கப்படுவதில்லை. அவர் தூய ஆவியின் ஆற்றல் பெற்ற வாழ்க்கையை வாழவில்லை என்றாலும், அந்த ஆவியானவர் அழியாத முத்திரையாக அவரின் உள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றார். (இ) 'அவர் ஒரு மனிதர்.' மூவொரு இறைவனின் மூன்றாம் நபராக இருக்கும் இவர் வெறும் ஆற்றல் அல்லது சக்தி மட்டுமல்ல. மாறாக, மூன்றாவதாக இருக்கின்ற ஒரு மனிதர். இவரின் பெயரால் ஆசி வழங்கவும் முடியும் (காண். 2 கொரி 13:13).

இவ்வாறாக, முதல் ஏற்பாட்டுப் புரிதலைவிட இரண்டாம் ஏற்பாட்டுப் புரிதல் மாறுபட்டு நிற்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தின்படி (காண். திப 2:1-11) தூய ஆவியானவர் பெந்தக்கோஸ்து என்னும் நாளில் திருத்தூதர்கள்மேல் பொழியப்படுகின்றார். எதற்காக இந்த நாளை இறைவன் தெரிவு செய்ய வேண்டும்? இதற்கு ஐந்து காரணங்களைச் சொல்கின்றது வரலாறு:

1. 'பெந்தக்கோஸ்து' என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா. பாஸ்கா திருவிழாவுக்குப் பின் ஐம்பதாவது நாள் இது கொண்டாடப்பட்டது (காண். லேவி 13:15). யூதர்கள் தங்கள் முதற்கனிகளை தங்கள் இல்லங்களுக்கு கொண்டு வந்த இந்த நாளில்தான் திருத்தூதர்கள் ஆவியின் கொடைகளை முதற்கனிகளாகப் பெறுகின்றனர்.

2. மோசேக்கு சீனாய் மலையில் பத்துக் கட்டளைகள் கொடுக்கப்பட்டதை இந்த நாளில்தான் யூதர்கள் நினைவுகூர்ந்தனர். இந்தக் கட்டளைகள் நமக்கு வெளியில் இருப்பவை. ஆனால் எரேமியா புதிய கட்டளைகள் நமக்கு உள்ளேயே இருக்கும் (31:33) என முன்னுரைக்கின்றார். நம் உள் உறையும் கட்டளையாக, நம் மனச்சான்றின் ஒளியாக இங்கே இறங்கி வருகிறார் தூய ஆவியானவர்.

3. மோசே மலைக்கு ஏறிச்சென்று கட்டளைகளைப் பெற்று வந்ததுபோல, இயேசு விண்ணேற்றம் அடைந்து தூய ஆவியானவரை அனுப்புகின்றார்.

4. மலையிலிருந்து இறங்கி வந்த மோசே வெறும் சத்தங்களை மட்டும் எழுப்பினார் என்றும், அந்தச் சத்தங்களை அங்கே கூடியிருந்த மக்கள் 70 மொழிகளில் கேட்டனர் என்றும் சொல்கிறது தாக்குமா 26 என்னும் ரபிக்களின் விளக்கவுரை. இதேபோல, தூய ஆவியால் நிரப்பப்பட்ட திருத்தூதர்களின் பேச்சை அங்கே கூடியிருந்தவர்கள் தத்தம் மொழிகளில் கேட்கின்றனர்.

5. தோரா அல்லது சட்டம் யூதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால், தூய ஆவியானவர் எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றார். மேலும், இங்கே; இறங்கி வரும் பிளவுண்ட நாவுகள், முதல் ஏற்பாட்டு பாபேல் நிகழ்வையும் நினைவூட்டுகின்றன (காண். தொநூ 11:1-9). தங்களுக்கென்ற ஒரே நகரம், ஒரே மொழி, ஒரே கோபுரம் எனக் கட்ட விரும்பியவர்களின் நாவுகள் பிளவுபடுகின்றன. இங்கே பிளவுபட்ட நாவுகள் எல்லாரையும் இணைக்கின்றனர். அங்கே கோபுரம் கட்டி மக்கள் கடவுளிடம் ஏறிச் செல்ல விரும்பினர். இங்கே கடவுளே தன் ஆவியானவரின் வழியாக இறங்கி வருகின்றார்.

முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்:

அ. அவர்களின் நா கட்டவிழ்க்கப்படுகிறது. அவர்கள் வௌ;வேறான மொழிகளில் (க்ளோசலாலியா) பேசத் தொடங்குகின்றனர். மொழி அவர்களுக்கு இனி தடையல்ல.

ஆ. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. 'எல்லாம் முடிந்தது!' என பயந்து கொண்டு, விரக்தியிலும், கவலையிலும் சோர்ந்திருந்தவர்கள் தங்களின் கதவுகளைத் திறந்து வெளியே வருகின்றனர். இனி யாரும் அவர்களை அடைத்து வைக்கவோ, அவர்களின் வேகத்திற்கு தடை போடவோ முடியாது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:3-7, 12-13) பவுல் கொரிந்து நகரத் திருச்சபையினர் பெற்றிருக்கின்ற அருங்கொடைகள் பற்றி விளக்கம் தருகின்றார். பரவசப் பேச்சு பேசுதல், நலம் தருதல் போன்றவை கிறிஸ்தவம் தவிர மற்ற சமயங்களிலும் உள்ளவை. ஆனால், கிறிஸ்தவத்தில் அவை எப்படி முக்கியத்துவம் பெறுகின்றன என்றால், கொடைகள் அவற்றைப் பெற்றிருப்பவரைக் கிறிஸ்துவோடு இணைக்க வேண்டும், இவை குழும வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஒரே கடவுளிடமிருந்து ஊற்றெடுக்கும் இக்கொடைகள் தூய ஆவியாரால் அனைவருக்கும் வழங்கப்படுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 20:19-23), உயிர்ப்புக்குப்பின் தன் சீடர்களைச் சந்திக்கும் இயேசு, சீடர்கள் மேல் தன் ஆவியை ஊதுவுவதோடு, பாவங்களை மன்னிக்கும் ஆற்றலையும் அளிக்கின்றார். 'ஊதுதல்,' 'பாவங்களை மன்னித்தல்' என்னும் வார்த்தைகளை நாம் மீட்பு மற்றும் தண்டனைத்தீர்ப்பு என்னும் வார்த்தைகளோடு இணைத்தே பார்க்க வேண்டும். யோவான் நற்செய்தியில் பாவம் என்பது நம்பிக்கையின்மை. நம்புதல் மீட்பைக் கொண்டுவருகிறது.

இவ்வளவு பெரிய இறையியல் ஆராய்ச்சியை இன்றைய வாழ்வோடு நாம் எப்படி பொருத்திப் பார்ப்பது?

எளிதான உருவகத்திலிருந்து தொடங்குவோம். நாம் இருக்க, இயங்கக் காரணம் நம்மில் இருக்கும் உயிர். இந்த உயிர் உடலில் எங்கு இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. சுவாசத்தில் இருக்கிறது என்றால், இரத்தம் வெளியேறும்போது நாம் ஏன் இறக்கிறோம்? இரத்தத்தில் இருக்கிறது என்றால் இறந்தவர் ஏன் வாய் திறக்கிறார்? உயிர் எங்கு இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், உயிர் இல்லை என்றால் இயக்கம், வெப்பம், இருப்பு என எல்லாம் நின்றுவிடுகிறது. உயிர் நம்மைத் தயார்நிலையில் வைத்திருக்கிறது. தூய ஆவியாரை இந்த உயிருக்கு ஒப்பிடலாம். இவர் நம்மைத் தயார்நிலையில் வைத்திருப்பவர்.

எதற்கான தயார்நிலை?

நல்லது செய்வதற்கான, மேன்மைக்கான தயார்நிலையை அளிக்கிறார் தூய ஆவி. இத்தயார்நிலை எதற்கான தயார்நிலை என்றால் கிறிஸ்துவின் பணிக்கான தயார்நிலை. என் வாழ்வின் தயார்நிலை கிறிஸ்துவின் பணிக்காக என்றால், அந்தப் பணி மூன்று கருவிகளைக் கொண்டு இன்று நடைபெற வேண்டும்.

1. மொழி
திருத்தூதர்கள் பேசுவதை மக்கள் தத்தம் மொழிகளில் கேட்கின்றனர். நாவைக் கட்டவிழ்க்கின்றார் தூய ஆவியார். இன்று நான் பேசும் வார்த்தைகள் எப்படி இருக்கின்றன? என்னை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் நான் பேசுகிறேனா? என் வார்த்தைகளில் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறாரா?

2. கொடைகள்
கொரிந்து நகர மக்கள் தாங்கள் பெற்றிருக்கின்ற கொடைகளைக் கண்டுகொள்ள அழைக்கிறார் பவுல். இன்று எனக்கென நிறைய திறன்கள் இருக்கலாம். பேசுவது, எழுதுவது, பழகுவது, வரைவது, உறவாடுவது தொடங்கி நிறைய திறன்களை நாம் சொல்லலாம். இவற்றை நாம் பயன்படுத்திப் பணி செய்யலாம். 3. மன்னிப்பு
தன் சீடர்கள் மேல் ஆவியை ஊதியவுடன் இயேசு மன்னிப்பைப் பற்றியே பேசுகின்றார். மன்னிக்கின்ற மனம் பயத்திலிருந்தும், கோபத்திலிருந்தும், நம்பிக்கையின்மையிலிருந்தும் விடுபடும். நான் பிறரை மன்னிக்குமுன் என்னை மன்னித்தல் அவசியம். மன்னிப்பு மட்டுமே நம்மை வாழ்வில் நகர்த்துகிறது. ஏனெனில், மன்னிக்காத மனம் கடந்த காலத்தில் தன்னைக் கட்டிக்கொள்கிறது. இறுதியாக,
நாம் எவ்வளவோ அடையாளங்கள், உருவகங்களைப் பயன்படுத்தினாலும், தூய ஆவியார் நம் புரிதலுக்கு எட்டாத ஒருவராகவே இருக்கிறார். செல்ஃபோனை இயக்கும் சிம் கார்ட் போல மறைந்திருக்கும் அவர் நம்மைத் தயார்நிலையில் வைத்திருக்கிறார். இயேசுவின் வாயிலிருந்து வரும் தென்றலிலும் இவர் இருக்கிறார். வானத்திலிருந்து வரும் சூறாவளியிலும் இருக்கிறார். 'பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்' - இவற்றோடு, பொய், சந்தேகம், வெறுப்பு, எரிச்சல், பழிவாங்குதல், புறங்கூறுதல், கெட்ட வார்த்தை பேசுதல், திருட்டு, ஏமாற்றுதல் என கூட்டிக்கொள்ளலாம்! - போன்ற உடல் சார்ந்தவற்றை விடுத்து, இறப்பின் காரணிகளை விடுத்து, 'அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்' (காண். கலா 5:22-23) ஆகியவற்றை நோக்கி நம் மனத்தை எழுப்பும்போது அங்கே அவர் அசைவாடுகின்றார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு