ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அன்று அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி. ஒரு குழந்தையின் பிறந்த நாள் மிக ஆடம்பரமாக, மிக மகிழ்ச்சியோடு பெற்றோர், உறவினர்கள் கொண்டாடுகிறார்கள். ஏனெனில் புதுவாழ்வு கிடைத்தது என்பதால்தான்.
இன்று நாம் கொண்டாடும் திருவிழா தூய ஆவியின் பெருவிழா, ஆவியானவர் நமக்கு ஆண்டவர் இயேசுவின் விண்ணக ஏற்புக்குப் பிறகு தந்தையால் தரப்பட்ட கொடை... தூய ஆவி பிறந்தார் என்பது அல்ல. மாறாக தூய ஆவியானவரின் வருகையால் திருச்சபையானது பிறப்பெடுத்தது என்பதுதான். இதன் மகிமை. இறை மக்கள் பிறந்தார்கள். ஆவியின் வாழ்வில் திருத்தொண்டர்கள் தொடங்கி, சீடர்கள், ஆதி கிறிஸ்தவர்கள் என்றெல்லாம் திருக்கூட்டமானது பெருகியது என்பதைத் தான் இன்று நினைவுகூர்கின்றோம்.
ஆதியிலே தூய ஆவியானவர் காற்றாக, தீப்பிழம்பாக, புறாவாக, ஏன் தண்ணீராக அடையாளம் காட்டப்பட்டுள்ளார். மனித வாழ்வில் ஆவி, காற்று இவை மிக முக்கியம். மூச்சுவிட காற்று, ஆவி இன்றி மனிதனால் வாழ முடியாது. அதேபோலத்தான் மனிதவாழ்வுக்கு காற்று வடிவில் தேவ ஆவி காட்சி தருகிறார். தீ நாவாக மனித வாழ்வுக்குக் காட்சி தருகிறார். மனிதன் பேசவும், போதிக்கவும் நாவு தேவை. இதை ஆவியானவர் வடிவாக காட்சி தருகிறார். மூன்றாவது நெருப்பாகக் காட்சி தருகிறார். நெருப்பானது தண்ணீரைச் சூடாக்கி நீராவியாகி இயக்கும் சக்தி பெறுகிறது. உணவுக்கு ரசி உண்டாக்குகிறது. இதேபோல்தான் மனிதரைச் சுவையுள்ள மனிதராக மாற்றுகிறது. நான்காவதாகப் புறா வடிவில் காட்சி தருகிறது. இதனால் தூய்மை உண்டாக்கி, இருளைப் போக்கும் ஆவியாகக் காட்சி தருகிறார். ஐந்தாவதாக ஆவியானவர் தண்ணீராக அழைக்கப்படுகிறார். யாரேனும் தாகமாக இருந்தால் ஆன்ம தாகத்தைத் தீர்க்க அருளாளராகவும், நம்மைத் தூய்மை ஆக்குபவராகவும் உள்ளார்.
ஒரு கொல்லுப்பட்டறை தொழிலாளி ஒரு இரும்புக் கம்பியைத் தீச்சூழையில் வைத்துச் சூடேற்றுகிறார். சூடேற்ற, சூடேற்ற அது நெருப்பாக, சிவப்பாக மாறுகிறது. அதனால் கொல்லன் விரும்பும் சாயலை இந்த இரும்பால் உருவாக்கி விடுகிறார். இதேபோல்தான் நகைகளை உருவாக்கும் தங்கம் செய்யும் பணியாளரும். ஆனால் சூடேற்றிய இருபானது சூடு குறைந்தால் கருப்பாகி, வளைக்க முடியாத நிலைக்கு ஆகிவிடும். இதுபோலத்தான் ஆவியானவரின் செயல்.
நாம் ஆவிக்கு நம்மை அர்ப்பணம் ஆக்கிடும்போது நாம் செயல் வீரர்கள் ஆவோம். உறுதியூட்டும் இறைவனால் எதையும் செய்யும் ஆற்றல் உண்டு (பிலி. 4:18) என்பது என் விருதுவாக்கு. ஆம் ஆவியானவரின் துணை கொண்டு செயலாக்கம் பெற முடியும்.
கதை
ஒரு வேடன் காட்டில் வேட்டையாடிய பின் காட்டில் கிடைத்த ஒரு முட்டையை எடுத்து வந்து கோழி முட்டையுடன் சேர்த்து கோழியில் அடைகாக்க வைத்தான். 22 நாட்கள் சென்று குஞ்சுகள் வெளி வந்தன. இந்தக் காட்டில் இருந்து வந்த முட்டையில் இருந்தும் குஞ்சு வெளி வந்தது. வளர ஆரம்பித்தவுடன்தான் அது கழுகுக் குஞ்சு என வெளிப்பட்டது. ஆனால் கோழி குஞ்சுகளுடன் உறவாடியதால் கோழிகளின் செயல்களை மட்டும்தான் செய்ய முடிந்தது.
ஒரு நாள் ஒரு பருந்து ஆகாயத்தில் சிறகை விரித்துப் பறப்பதைப் பார்த்து வியந்து நின்றது. ஆனால் கோழிக் குஞ்சோ, தம்பி! நாம் கோழிக் குஞ்சு. தரையில் வாழ்வதுதான் நமது வாழ்வு. ஆகாயத்தில் பறப்பதோ பறவை இனத்தின் அரசனான கழுகு. அவன் போல் உன்னால் பறக்க முடியாது என்றது. ஆனால் கழுகுக் குஞ்சோ ஒவ்வொரு நாளும் தன் இறக்கையை விரித்துப் பறக்க முயற்சித்தது. முதலில் தாவிக் குதிக்கப் பழகியது. இரண்டாவது, வேலி உயரம் தாவ முடிந்தது. பின் மரத்தின் கிளையை எட்ட முடிந்தது. இறுதியாக ஆகாயத்தில் பறந்தது. ஆம் கழுகுக் குஞ்சு கோழிக் குஞ்சோடு இருந்தாலும் தன்னால் முடியும் என சாதித்தது. அதேபோல்தான் அரச குல இறைமக்களாகிய ஆவியானவரின் துணை கொண்டு நாம் ஆகாயம் என்ற விண்ணகம் பறக்க முடியும்.
அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்?
- நாம் நம் பாவத்திற்காக மகதலா மரியாளைப்போல் மனம் வருந்தி பாவி என்ற உணர்வோடு நம்மைத் தாழ்த்தி இறைவனிடம் வரவேண்டும் (லூக் 7 : 38, 50).
- கொர்னேலியுவைப்போல் புனித பவுலைப்போல் செபத்திலும், தபத்திலும் ஈடுபட்டு இடைவிடாது செபிக்க வேண்டும் (தி. ப. 10:44-46).
- நமது மனதை கழுகுக் குஞ்சைப்போல் மேல்நோக்கி உயர்த்த வேண்டும். உலகம் அதன் இன்பம், பொருள் இவைகளுக்கு அடிமையாகி இருந்தால் ஆவியானவர் நம்மில் செயலாற்ற முடியாது.
- நாம் தாகத்தோடு இருக்க வேண்டும். தாகம் இருந்தால்தான் தண்ணீர் குடிக்க ஆசை வரும். அதேபோல் பாவமின்றி ஆன்ம தாகம் இருந்தால்தான் ஆவியானவரைப் பெற முடியும் (யோவா 7 : 37).
- தேவ வார்த்தையை, விவிலியத்தை எடுத்து வாசிக்க வேண்டும். தேவவார்த்தையைக் கவனமுடன் கேட்க வேண்டும்.
- மூப்பர்கள் குருக்கள் கை வைக்க நாம் ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும் (தி. ப. 8:1 19:0).
உனக்குள்ளே நான் காத்திருப்பேன்
இன்று இயேசு அவருடைய சீடர்களுக்குத் தூய ஆவியாரை அளித்த திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம் [நற்செய்தி]. தூய ஆவியார் என்பவர் யார் என்பதற்கு மூன்று அழகான விளக்கத்தை இன்றைய முதல் வாசகம் நமக்கு அளிக்கின்றது .
தூய ஆவியார் யார் என்பதைச் சுட்டிக்காட்ட திருத்தூதர் பணிகளின் ஆசிரியர் பயன்படுத்தும் முதல் அடையாளம் காற்று [திப 2:2). காற்று உயிருக்கு அடையாளம். உள்ளே போகும் மூச்சு வளியே வர மறந்தால் போச்சு என்பார்கள். ஆக, தூய ஆவியார் என்பவர் நமக்கு உயிர் தருபவர்.
இரண்டாவது அடையாளம் நெருப்பு (திப 2:3௮). நெருப்பு தூய்மைக்கு அடையாளம். பொன்னை நெருப்பிலிட்டுப் புடம் போடும்போது அது தூய்மை அடைந்து ஒளிவீசுகின்றது. ஆக, தூயஆவியார் என்பவர் நம்மை தூய்மைப்படுத்துபவர்.
மூன்றாவது. அடையாளம் நாக்கு [திப 2:3]. நாக்கு பேச்சுக்கு அடையாளம். செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். ஆக, நம்மை அழகாகப் பேச வைப்பவர் தூய ஆவியார்.
நமக்கு உயிர்தரும் ஆவியாரை, நம்மைத் தூய்மைப்படுத்தும் ஆவியாரை, நம்மை பேசவைக்கும் ஆவியாரை இரண்டாம் வாசகத்தில் புனித பவலழிகளார் கூறுவது போல நாம் எல்லாருமே திருமுழுக்கின் வழியாகப் பெற்றிருக்கின்றோம் [! கொரி 12:13].
இன்றைய உலகச் சூழ்நிலை எப்படி இருக்கின்றது?
கதம்ப மாலைக்குள் கட்டுண்டு கிடந்த ரோஜாவுக்கு நேருவின் சட்டைப் பையில் குத்தப்பட்ட ஒற்றை ரோஜாவாய் உலா வர ஆசை. ஒற்றை ரோஜாவாகச் சுதந்தரமாக வாழ ஆசைப்படும் இந்தியர்கள் ஆயிரம்! 125 கோழிக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தில் அகப்பட்டு மூச்சுவிடமுழயாமல் திண்டாடும் மனிதர்கள்தான் எத்தனை எத்தனை! மூச்சுக்கூட விட முழயாமல் நடைபிணங்களாய் வாழ்ந்துகொண்டிருப்போரின் சோகக் கதைகள் எண்ணிலடங்காது.
அடுத்து, இன்று எங்கு நோக்கினும் பாவத்தின் வேகம்! ஒரு பக்கம் அதிகாரக் கலாச்சாரம் ! மறுபக்கம் ஆயுதக் கலாச்சாரம்! பலருடைய மனத்திலே பணத்திற்காகவும், பதவிக்காகவும் எதையும் செய்யலாம் என்ற பாவக் கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்கின்றது!
அடுத்து, இன்று எத்தனையோ அர்த்தமற்ற பேச்சு வார்த்தைகள். சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஒப்பந்தத்தில் கைசயெழுத்திடப்படும்போதே, போருக்கான தேதியும் இரகசியமாகக் குறிக்கப்படுகின்றது. வாய்மையும், தூய்மையும் நிறைந்த உரையாடல்களைக் கேட்பது மிகமிக அரிதாக இருக்கின்றது. மனிதன் மனிதனோடு பேசுவதில் மட்டுமல்ல, மனிதன் இறைவனோ பேசுவதிலும் தடுமாற்றம்.
இதோ ஒரு புதுக்கவிதை!
தகப்பன் கோவிலுக்குள் செபித்துக் கொண்டிருந்தார். மகன் கோவிலுக்குள் நுழைந்து தகப்பன் முன்னால் மண்டியிட்டுச் செபித்தான். அவன் செபித்த முறை தகப்பனுக்குப் பிடிக்கவில்லை. வீட்டுக்கு மகன் வந்ததும், மகனைத் தகப்பன் பார்த்து:
குலக்கொழுந்தே ஏன் கோவிலுக்குப் போனாய்?
சாமியைக் கும்பிடப் போனாயா?
ஆசாமியைக் கும்பிடப் போனாயா?
வானத்தை ஏன் பார்த்தாய்?
இடிந்துவிடும் என்று பார்த்தாயா?
பூமியை ஏன் பார்த்தாய்?
விழுங்கிவிடும் என்று பார்த்தாயா?
பக்கத்தில் ஏன் பார்த்தாய்?
யாராவது பார்க்கின்றார்களா எனப் பார்த்தாயா?
இறுதியாக ஏன் பீடத்தைப் பார்த்தாய்? எனக் கேட்க,
அதற்கு மகன், அதையெல்லாம் நான் பார்த்தேன்.
அதை ஏன் நீங்கள் பார்த்தீர்கள்? என்றான்.
சிந்தனையைச் சிதறவிடாமல் நம்மால் இறைவனோடு பேச முடியவில்லை! இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்யலாம்? அதோ தூய ஆவியார் நம்மை அழைக்கின்றார் ; அவர் நம்மோட பேசுகின்றார்: நான் இறைவனின் ஆவி ! என்னால் முடியாதது ஒன்றுமில்லை ! என்னிடம் வா! உன்னை நான் என் வரங்களாலும் [1 கொரி 12:8-10)] கனிகளாலும் [கலா 5:22-23] நிரப்புவேன்.
நீ புதிய விடியலுக்குள் நுழைவாய் ; உன் பாவங்கள் கழுவப்பட்டு நீ வெண்பனியிலும் வெண்மையாவாய் ; உன் நா வலிமை பெற்று நீ பெரும் இறைவாக்கினராவாய் ! உன்னில் இறந்தவை அனைத்தும் உயிர்பெற்று எழும். வருவாயா? ... நீ என்னிடம் வரும் வரை உனக்குள்ளே நான் காத்திருப்பேன்.
மேலும் அறிவோம் :
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயன்ஞலாச் சொல் (குறள் : 200).
பொருள் :
ஏதேனும் ஒன்றைச் சொல்ல விரும்பினால் பயன் மிக்க சொற்களையே கூற வேண்டும். பிறருக்குப் பயன்தராத சொற்களை ஒருபோதும் பேசலாகாது!
திருமணமான ஒருவர் தன் நண்பரிடம், “ஒரு பத்திரிகையால் என் வாழ்வு பாழடைந்து விட்டது” என்றார். “அது என்ன பத்திரிகை?” என்று நண்பர் அவரிடம் கேட்க அவர் கூறினார்: “கல்யாணப் பத்திரிகை.” வேறொரு கணவர் தன்னுடைய முதல் ஆண்டு திருமண நிறைவு நாளன்று தனது திருமண அழைப்பிதழைத் துருவித் தருவிப் பார்த்தார். அதைக் கண்ட அவருடைய மனைவி அவரிடம், “அதில் என்ன பார்க்கிறீர்கள்” என்று கேட்டதற்கு அவர் கூறினார்: “நமது திருமண அழைப்பிதழில் நமது திருமணத்தின் “Expiry Date” (காலாவதியாகும் நாள்) குறிப்பிடப்பட்டுள்ளதா? என்று பார்க்கின்றேன்.”
பலருடைய தனிவாழ்வும், குடும்ப வாழ்வும், அரசியல் மற்றும் சமூக வாழ்வும் நலிவடைந்து நம்பிக்கை அற்றுத் தோன்றும் அவல நிலையை நாம் காணும்போது இவற்றிற் கெல்லாம் விடிவு காலம் வராதா? என்ற கேள்வி எழுகிறது. இன்று மனிதரின் மாபெரும் தேவை வாழ்க்கையில் பிடிப்பு, நாளையதினத்தைப் பற்றிய நம்பிக்கை.
பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அன்னிய மண்ணில் நம்பிக்கை இழந்த நிலையில் அவர்கள் கூறியது: “எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின: எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டோம்” (எசே 37:11). அப்போது கடவுள் அவர்களிடம் கூறியது: “என் ஆவியை உங்கள் மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்” (எசே 37:14).
இன்று தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடு கின்றோம். நம்பிக்கையற்ற நமக்குத் தூய ஆவியார் நம்பிக்கையைத் தருகிறார். இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: “ஆண்டவரே, உமது ஆவியை அனுப்பி மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்” (திப 104:1). கிறிஸ்துவின் விண்ணேற்றம் சீடர்களின் மனதில் ஒரு சூன்யத்தை ஏற்படுத்தியது. கதிகலங்கிப் போயிருந்த சீடர்கள்மீது தூய ஆவியார் பிளவுற்ற நாவுகள் வடிவத்தில் இறங்கிவர, அவர்கள் பல்வேறு மொழிகளில் பேசி, யூதர்களையும் கிரேக்கர்களையும் வியப்புறச் செய்த மாபெரும் செயலை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கின்றது (திப 2:1-11).
யூதர்களுக்கு அஞ்சிக் கதவுகளை மூடி வைத்திருந்த சீடர்கள் நடுவே வந்து, அவர்களுக்கு அமைதியை அளித்து, அவர்கள்மீது ஊதித் தூய ஆவியைப் பொழிந்து, அவர்களுக்குப் பாவ மன்னிப்பு வழங்கும் வல்லமையை உயிர்த்த ஆண்டவர் கொடுத்ததை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது (யோவா 20:19-23), உயிர்த்த ஆண்டவர் - இயேசு கிறிஸ்து தமது சீடர்களுக்குத் தோன்றுகிறார்; அவர்கள் அடிமனத்திலிருந்து அச்சத்தை அகற்றுகிறார்; புத்துயிரையும் புதிய நம்பிக்கையையும் கொடுத்து அவர்களிடம் புதிய பணியை ஒப்படைக்கின்றார்.
தூய ஆவியார் யார்? தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுகிறவர்; உயிர் அளிப்பவர். கடவுளின் அன்பு தூய ஆவியார் வழியாக நம்மீது பொழியப்பட்டுள்ளது (உரோ 5:5). தூய ஆவியார் வழியாகவே நாம் கடவுளை அப்பா தந்தையே எனக் கூப்பிடுகிறோம் (கலா 4:6). எனவே நாம் எத்தகைய சூழ்நிலையிலும் அவநம்பிக்கைக்கு ஆளாகக்கூடாது.
ஒரு வரலாஜ்யூ ஆசிரியர் “பிரஞ்சு புரட்சியைப்” பற்றி ஒரு நூல் வெளியிட. விரும்பி, பல ஆண்டுகளாக அவர் எழுதிய கைப்பிரதிகளைத் தன் நண்பரிடம் கொடுத்து அவரது கருத்தை அறிய விரும்பினார். அந்த நண்பர் அப்பிரதிகளைத் தன் வீட்டில் ஒரு மூலையில் கட்டாக வைத்திருந்தார். அவர் வீட்டின் வேலைக்காரி அப்பிரதிகளைப் பழைய காகிதம் என்று எண்ணி அதை அடுப்பில் போட்டு ளித்துவிட்டாள். இச்செய்தியைக் கேட்ட. வரலாற்று ஆசிரியர் மனமுடைந்து பல நாள்களாக உணவின்றி, உறக்கமின்றித் தவித்தார். கடைசியில் அவர் மீண்டும் பிரஞ்சு புரட்சிபற்றி எழுதி நூலை வெளியிட்டு, உலகப் புகழ் பெற்றார். நம்து வாழ்வு என்ற நூல் எிந்து சாம்பலாகப் போன புத்தகம் போன்று தோன்றலாம். இருப்பினும் அதை மீண்டும் எழுதிப் புதுப் பதிப்பாகப் பொலிவுடன் வெளியிட முடியும். அந்த நம்பிக்கையை நம்முன் வாழும் ஆவியார் நமக்குக் கொடுத்துக் கொண்டே. இருக்கிறார்.
ஆனால் சீடர் கதவை அடைத்துக் கொண்டிருந்ததுபோல், தூய ஆவியார் நுழையாத வண்ணம் நமது இதயக் கதவை அடைத்து வைத்திருப்பது தவறாகும் “தூய ஆவியே! துணையாய் வாருமே! இப்ப வாரும்! இறங்கி வாரும் ! எங்கள் மத்தியிலே” என்று மன்றாடுவோம். அவர் நிச்சயமாக நமது உள்ளத்தில் வந்து புத்துயிர் அளிப்பார். . தூய ஆவியார் நம்மீது பொழியப்படுவது நமது தனிப்பட்ட நன்மைக்காக மட்டுமல்ல, மாறாக, அது திருச்சபையின் பொது நன்மைக்காகவே என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகின்றார். “அருள் கொடைகள் பலவகையுண்டு. ஆனால் தூய ஆவியார் ஒருவரே..... பொது நன்மைக்காகவே தூய ஆவியின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது” (1 கொரி 12: 4,7).
இன்று திருச்சபையில் அருங்கோடைகளின் மோதல்களைக் கண்டு வேதனை அடைய வேண்டியிருக்கிறது. அருங் கொடையாளர்கள் திருச்சபையின் ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பதிலாகத் திருச்சபையைப் பிளக்கின்றனர். கொரிந்து திருச்சபையில் அருங்கொடைகளின் மோதல்களைக் கண்டு, “அன்பே தலைசிறந்தது” என்று அறுதியிட்டுக் கூறுகின்றார் திருத்தூதர் பவுல்.
ஒரு வெள்ளாடு மே” என்று கத்தாமல், “லா, லூ, லே” என்று கத்தியதாம். ஏன் அது அவ்வாறு கத்துகிறது? என்று கேட்டதற்கு, “நான் பரவசப்பேச்சுப் பேசுகிறேன்” என்றதாம். ஒருவர் மண்ணோர் மொழியிலும் விண்ணோர் மொழியிலும் பேசினாலும், அவரிடம் அன்பு இல்லை என்றால், அது வெறும் சப்தமேயன்றி வேறொன்றும் இல்லை என்கிறார் புனித பவுல் (1 கொரி 13:1). உயிர் அன்பில் நிலைத்துள்ளது. அன்பில்லாதவரின் உடல் எலும்பு தோலால் போர்த்தப்பட்ட வெற்றுடம்பே என்கிறார் வள்ளுவர்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலரர்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் 80).
எனவே, அருங்கொடைகளின் பெயரால் வீண் குழப்பத்தையும் பிரிவினையையும் உருவாக்காமல், அனைத்துக் கொடைகளிலும் தலைசிறந்த கொடையாகிய அன்பைத் தூக்கிப் பிடிப்போம். ஒற்றமையை ஊட்டி வளர்ப்போம். அப்போது உலகின் இறுதி எல்லை வரைக்கும் கிறிஸ்துவுக்குச் சாட்சியம் பகர்வோம்!
“தூய ஆவி உங்களிடம் வரும்போது கடவுளது வல்லமையைப் பெற்று... உலகின் கடை எல்லை வரைக்கும் எனக்குச் சட்சிகளாய் இருப்பீர்கள்” (திப 1:8).
உயிர் நாடி தூய ஆவி
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்து விண்ணேறிச் சென்றதும் மூன்று குட்டிச் சம்மனசுக்கள் ஓடிவந்து “ஆண்டவரே, தந்தையின் திருவுளத்தை ஏற்று உலகில் இறையாட்சியின் சின்னமாகத் திருச்சபையை நிறுவி விட்டு வந்திருக்கிறீரே, யாரிடம் ஒப்படைத்து விட்டு வந்தீர்? அந்தத் திருத்தூதர்களிடமா? தலைவன் என்று நீர் நினைத்தவரே, நியமித்தவரே உம்மை “அறியேன்” என்று மறுதலித்தார். மற்றவர்களோ கோழைகளாகப் பயந்து ஒடி ஒளிந்து கொண்டார்கள். அவர்களை நம்பினால் திருச்சபை உருப்படுமா? என்றெல்லாம் புலம்பிய போது இயேசு சொன்னாராம்: “யாரையும் - எந்தக் கொம்பனையும் நம்பியல்ல. ஆற்றல்மிக்கத் தூய ஆவியை நம்பித்தான். அதோ, புனித ஆவி புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பார்த்துக் கொள்வார்”.
“உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல. ஆனால் எனது ஆவியாலே ஆகும்” - செக்கரியா 4:6.
கிறிஸ்தவனுக்கோ திருச்சபைக்கோ தூய ஆவியே ஆற்றல், சக்கி, இயக்கம்!
கத்தோலிக்குத் திருச்சபையின் கடந்தகால வரலாற்றில் அறியாத கடவுளாக (Unk॥0ற G௦0) மறக்கப்பட்ட கடவுளாக (forgotten paraclete) ஆவியானவர் இருந்த காலம் உண்டு. புதிய ஏற்பாட்டில் தூய ஆவிக்கு வலுவான முக்கியத்துவம் இருந்தும்கூட அவர் எப்ப்டி மறக்கப்பட்டார்? என்பது புதிரானதுதான். ஆவி என்ற சொல்லே அதற்குக் காரணமாக இருக்குமோ!?”
கடவுள் தந்தை யாக இருக்கிறார் என்ற எண்ணமே உறவுக்கு வழிவகுக்கும். கடவுள் மகனாக” இருக்கிறார் என்று சொல்லும் போதே உறவுக்கு வழிபிறக்கும். கடவுள் ஆவியாக இருக்கிறார் என்றால்... ஆவியோடு எப்படி உறவு கொள்வது?
தூய ஆவியைப் புரிந்து கொள்ள ஐந்து அடையாளங்கள் வழியாகத் தன்னை வெளிப்படுத்தினார்.
1 பெருங்காற்று : “திடீரென்று கொடுங்காற்று வீசுவது - போன்று ஒர் இரைச்சல். வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. (தி.ப.2:2)
2. தீ நாக்கு : “மேலும் நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள் (தி.ப.2:3)
3. வெண்புறா : “தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர் மீது இறங்கியது (லூக்.3:22)
4. நீரூற்று : “யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்... பருகட்டும்... அவருடைய உள்ளத்திருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஒடும்... தூய ஆவியைக் குறித்தே அவர் இவ்வாறு சொன்னார் ' (யோவான் 7:39)
5. திரு எண்ணய் : “சாமுவேல் எண்ணெய்... எடுத்து அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. (1 சாமு.16:13)
இந்த ஐந்து அடையாளங்களிலும் இழையோடும் பொதுக் கூறு ஒன்று உண்டு. காற்று வீசுகிறது, தீ எரிகிறது, புறா பறக்கிறது, தண்ணீர் ஓடுகிறது, எண்ணெய் ஊடுருவுகிறது... எல்லாமே இயக்கம், சக்தி, ஆற்றல், வல்லமை.
விவிலியத்தில் தூய ஆவி வல்லமையாகவே சித்தரிக்கப்படு கிறார். இயேசுவின் பிறப்பை முன்னறிவித்த வானதூதர் மரியாவிடம் “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்”” (லூக்.1;35) என்றார். பணி வாழ்வைத் தொடங்கிய போது “இயேசு தூய ஆவியின் வல்லமையுடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார்” (லூக்.4:14) என்கிறார் லூக்கா. கொர்னேலியுவின் இல்லத்தில் பேருரை ஆற்றிய பேதுரு குறிப்பிடுவார்: “கடவுள் நாசரேத்து இயேசுவின் மேல் தூய ஆவியின் வல்லமையைப் பொழிந்தருளினார் ” (தி.ப.10:38). உயிர்த்த இயேசு தன் சீடர்களுக்குத் தோன்றிச் சொன்னது: “இதோ என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன் ” (லூக்.24:49). விண்ணேறு முன் “தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளின் வல்லமையைப் பெற்று... எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் ' (தி.ப.1;8) என்று பணித்தார்.
தூய ஆவியானவர் விசுவாச அறிக்கையின் ஓர் உண்மையாக மாறுவதற்கு மூன்னரே, தொடக்க காலத் தீராச்சபையில் அனுயவத்தீன் ஓம் உயீருள்ள ஹய்ம்மையாக ஒருந்தார் ' என்கிறார் ஓர் இறையியல் அறிஞர். இந்தக் கூற்று முற்றிலும் உண்மையே. திருத்தூதர் பணிகள் தொடக்க காலத் திருச்சபையின் வரலாறாகும். அது தூய ஆவியின் வரலாறும் கூட, காரணம்? பக்கத்துக்குப் பக்கம் தூய ஆவியின் அருளாற்றல் செயல்படுவதைக் காணலாம்.
.. திருச்சபைக்கு வாழ்வின் உயிர் நாடி தூய ஆவி. “இதோ இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியைப் பொழிந்து அருள்வேன். அவர்களும் இறைவாக்கு உரைப்பர்” (தி.ப.2:17,18) பெந்தகோஸ்து நாளில் பேதுரு ஆற்றிய முதல் மறையுரை இது. திருத்தூதர் பவுலுக்கு நற்செய்திப் பணியின் உயிர்நாடி தூய ஆவி. “நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானமல்ல. கடவுளின் வல்லமையே” (1 கொரி. 2:4-5). திருத்தூதர்களைத் திடப்படுத்துபவர் மட்டுமல்ல, சிக்கலான நேரங்களில் சரியானத் தீர்வு காண வழிநடத்துபவர் தூய ஆவி. விருத்த சேதனப் பிரச்சனையில் “தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம் ” (தி.ப.15:25) என்றார் பேதுரு. சாட்சிய வாழ்வில் இரத்த சாட்சிகளுக்கு வலிமைக்கும் மகிழ்ச்சிக்கும் ஊற்றாக இருந்தார் தூயஆவி. எ.கா.ஸ்தேவான். (தி.ப.7:55)
இவ்வாறு தூய ஆவியின் வல்லமை தொடக்க காலத் திருச்சபையில் நிறைந்திருந்தது. அந்த வல்லமையைத் தம் அருள்கொடைகளால் வளப்படுத்தித் தொடக்க காலத் திருச்சபையின் அனுபவப் பொருளானார் தூய ஆவி. திருமுழுக்கில், சிறப்பாக உறுதிப் பூசுதலில் நாமும் அதே வல்லமையால் நிரப்பப்படுகிறோம்.
காது இல்லாமல் கேட்க முடியுமா? நுரையீரல் இல்லாமல் மூச்சு விட இயலுமா? தூய ஆவி இல்லாமல் கிறிஸ்தவம் ஏது? கிறிஸ்தவ வாழ்க்கை ஏது?
ஒருநாள் கொண்டாட்டம், வாழ்நாள் கொண்டாட்டம்
உயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று பெந்தகோஸ்து எனப்படும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா. பெந்தகோஸ்து என்ற சொல்லுக்கு ஐம்பதாம் நாள் என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில் தொடர்ந்து பல விழா நாட்கள் வந்துள்ளன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப் பின் நல்லாயன் ஞாயிறு. சென்ற வாரம் விண்ணேற்றப் பெருவிழா இந்த ஞாயிறு தூய அவியாரின் பெருவிழா என்று வரிசையாக நாம் கொண்டாடி மகிழ பல ஞாயிறுகள் நமக்குக் கிடைத்துள்ளன. இனிவரும் நாட்களிலும் மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா என்று விழாக்களும் கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடினோம் அல்லது கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.
இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். இல்லையா? ஆனால், அப்படி நடந்ததாகத் தெரியவில்லையே! மாறாக, இந்நிகழ்வுகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன.
எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நிகழ்ந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் வருகையும், அன்னை மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.
உலக விழாக்கள் கொண்டாடப்படுவதற்கென்று குறிப்பிட்ட 'பார்முலா' அல்லது இலக்கணம் உள்ளது. கொண்டாட்டம் எதற்காக என்பதைவிட, கொண்டாட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே இவ்விழாக்களின் முக்கியத்துவம் பிறருக்குத் தெரியவரும். பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவையே இவ்விழாக்களின் உயிர்நாடி. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்? விழாவுக்கான உள் நோக்கத்தை விட, வெளித் தோற்றங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆரவாரங்கள் இவற்றை பிறர் பார்த்தால், கேட்டால் போதும் என்ற நோக்கமே இவ்விழாக்களில் முக்கியம். இவ்விழாக்களைப்பற்றி அடுத்த நாள் கேட்டால் கூட நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அல்லது, அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே நமது நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும். உலகக் கொண்டாட்டங்களின் இலக்கணம் இது.
‘கொண்டாட்டம்’ என்ற சொல்லுக்கே புது இலக்கணம் சொல்லும் விழாக்களை இயேசுவும் அவரைச்சுற்றி இருந்தவர்களும் கொண்டாடினர், நமக்குப் பாடங்களைச் சொல்லிச் சென்றனர். கொண்டாட்டம் என்பது எப்போதும் பிறரது கவனத்தை ஈர்ப்பதிலேயே அமையவேண்டும் என்று இல்லை. நாம் கொண்டாடும் விழாவின் உள் அர்த்தம் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருந்தால், கொண்டாட்டங்கள் ஒருநாள் கேளிக்கைகளாக இல்லாமல், வாழ்நாளெல்லாம் நம்முடன் தங்கும் மாற்றங்களை உருவாக்கும். இத்தகையப் பாடங்களை நமக்குச் சொல்லித்தந்த விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள். இருபது நூற்றாண்டுகள் சென்றபின்னரும், இவ்விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?.. இவை முதல்முறை கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல், ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன. இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்து தொடர்ந்து கனி தந்து கொண்டிருக்கின்றன.
தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘Joyful News Magazine’ என்ற சஞ்சிகையில் வந்த ஒரு நிகழ்வு. நார்வேயைச் சார்ந்த நான்சென் (Nansen 1861- 1930) என்ற ஆய்வாளர், பனி படர்ந்த ஆர்ட்டிக் பகுதியில், மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழல் இருக்கின்றதா என்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப் புறப்பட்டுச் சென்றார். அப்படிப் புறப்படும்பொழுது நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு புறாவையும் தன்னோடு கொண்டுசென்றார்.
பல நாள்கள் பயணத்திற்குப் பின்பு, ஆர்ட்டிக் பகுதியை வந்தடைந்த நான்சென், மிகப் பொறுமையாகத் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினார். எங்கு பார்த்தாலும் பனி படர்ந்திருந்த அந்தப் பகுதியில் இருப்பது இவருக்கு மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும், வந்த வேலையை முடிக்காமல் பாதியில் செல்வது நல்லதல்ல என்பதை உணர்ந்த இவர், தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். இப்படி இவர் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டதால், நாள்கள் போனதே தெரியவில்லை; கண்மூடி முழிப்பதற்குள் இரண்டு ஆண்டுகள் ஓடியிருந்தது இவருக்குத் தெரிந்தது.
இதனால் இவர், தன்னுடைய வீட்டில் இருப்பவர்களுக்குத் தான் பத்திரமாகத்தான் இருக்கின்றேன் என்ற செய்தியைச் சொல்ல விரும்பினார். அதனால் இவர் ஒரு காகிதத்தில், தான் மேற்கொண்டு வரும் ஆய்வு, நன்றாகப் போய்க்கொண்டிருப்பது பற்றியும் தான் பாதுகாப்பாக இருப்பது பற்றியும் எழுதி, தன்னோடு இருந்த புறாவின் காலில் கட்டி, அதனைத் தன்னுடைய வீட்டாருக்கு அனுப்பி வைத்தார். நான்சென் இருந்த இடத்திற்கும் இவருடைய வீடு இருந்த இடத்திற்கும் இடையே இரண்டாயிரம் கிலோ மீட்டர்கள். ஆனாலும், நான்சென் அனுப்பி வைத்த அந்தப் புறா, பாதுகாப்பாக, இவருடைய வீட்டிற்குச் சென்றது. புறாவையும் அதன்காலில் இருந்த காகித்தத்தில் பார்த்த இவருடைய மனைவியும் பிள்ளையும், நான்சென் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றார் என்று மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.
எப்படி ஆய்வாளர் நான்சென் அனுப்பி வைத்த புறாவைக் கண்டதும், அவருடைய குடும்பத்தார், நான்சென் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றார் என்ற மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தார்களோ, அப்படி விண்ணகப் புறாவான, தூய ஆவியார் சீடர்களிடம் வந்ததும், அவர்கள் விண்ணகத்திற்குச் சென்ற இயேசு, தந்தையின் வலப்பக்கத்தில்தான் இருக்கின்றார் என்றும் தங்களுக்குத் துணையாகத் தூய ஆவியார் இருக்கப்போகிறார் என்றும் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.
ஆம், இன்று நாம் தூய ஆவியார் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் சொன்னதுபோன்றே தூய ஆவியார் அவர்கள்மீது இறங்கி வருகின்றார். தூய ஆவியாரின் வருகை சீடர்கள் நடுவில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதையும் அவர் நமக்கு விடுக்கும் அழைப்பு எத்தகையது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
துணிவைத் தரும் தூய ஆவியார்
யூதர்கள், இயேசுவைச் சிலுவையில் அறைந்துகொன்ற பிறகு, அவருடைய சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சித் தாங்கள் இருந்த இடத்தின் கதவை அடைத்தே வைத்திருந்தார்கள் (யோவா 20: 19). இத்தனைக்கும் உயிர்த்த ஆண்டவரைக் கண்ட மகதலா மரியாவும் (யோவா 20: 18) எம்மாவு நோக்கிச் சென்ற இரண்டு சீடர்களும் (லூக் 24: 15-16) சீமோன் பேதுருவும் (லூக் 24:34) உயிர்த்த ஆண்டவரைப் பற்றி மற்ற சீடர்களிடம் சொன்னபொழுதுகூட, அவர்கள் அதை நம்பாமல், அச்சத்தோடே இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் இயேசு தன் சீடர்களுக்குத் தோன்றி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று இரண்டு சொல்லி, தன் கைகளையும் விலாவையும் அவர்களுக்கு காட்டுகின்றார். மட்டுமல்லாமல், அவர் அவர்கள் மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்கிறார்.
‘இயேசு சீடர்கள் மேல் ஊதினார்’ என்ற சொற்கள், ஆண்டவராகிய கடவுள் ‘மண்ணால் மனிதனை உருவாக்கி, அவனுடைய நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்’ (தொநூ 2: 7) என்ற சொற்களை நமக்கு நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன. மண்ணால் உண்டாக்கப்பட்ட மனிதனுடைய நாசிகளில் ஆண்டவராகிய கடவுள், உயிர் மூச்சை ஊதும் வரையில், அவன் உயிரற்றவனாகத்தான் இருந்தான். எப்பொழுது கடவுள் அவனுடைய நாசிகளில் உயிர் மூச்சி ஊதினாரோ, அப்பொழுது அவன் உயிர் உள்ளவன் ஆனான். அதுமாதிரித்தான் இயேசுவின் சீடர்களும். சீடர்கள் தூய ஆவியாரைப் பெறும்வரையிலும் யூதர்களுக்கு அஞ்சி வாழ்ந்துகொண்டிருந்தார்கள். எப்பொழுது அவர்கள் தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்டார்களோ, அப்பொழுது அவர்கள் துணிவுள்ளவர்களாக மாறி, இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார்கள். அவ்வாறெனில், இன்றைக்கும் தூய ஆவியார் அச்சத்தோடு இருக்கின்ற நமக்குத் துணிவைத் தருகின்றார் என்பதே உண்மை.
நற்செய்தி அறிவிக்க வல்லமையைத் தரும் தூய ஆவியார்
இன்றைய நற்செய்தியில், இயேசு தன்னுடைய சீடர்களிடம் பேசுகின்றபொழுது, “தந்தை என்னை அனுப்பியது போல் நானும் உங்களை அனுப்புகிறேன்” என்பார். பின்னர் அவர் விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாகச் சீடர்களிடம், “தூய ஆவி உங்களிடம் வரும்பொழுது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று.... எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” (திப 1:8) என்பார். இயேசுவின் இவ்வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை.
தூய ஆவியார் சீடர்கள்மீது வரும்பொழுது, கடவுளின் வல்லமையைப் பெற்றவர்களாய் அவர்கள் இயேசுவுக்குச் சாட்சிகளாய் இருப்பார்கள் என்றால், தூய ஆவியார் சீடர்களுக்கும் நமக்கும் நற்செய்தியை அறிவிப்பதற்கு வல்லமையைத் தருகின்றார் என்பதுதானே பொருள். ஆம், இயேசுவின் சீடர்கள் தூய ஆவியாரின் வல்லமையைப் பெற்றுக்கொண்ட பிறகு, யாருக்கும் அஞ்சாமல் நற்செய்தியை அறிவித்தார்கள். இன்று நாம் ஆண்டவரின் நற்செய்தி அறிவித்தால் ஆபத்து வருமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தால், தூய ஆவியார் நற்செய்தியை அறிவிப்பதற்கான வல்லமையைத் தருகின்றார். இந்த உண்மையை உணர்ந்துகொண்டு நாம் நற்செய்தியை அறிவித்தால், இன்னும் சிறப்பாக நற்செய்தியை அறிவிக்கலாம்.
பாவங்களை மன்னிக்கும் அருளைத் தரும் தூய ஆவியார்
உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்கள்மீது தூய ஆவியை ஊதிய பின், எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும்” என்கின்றார். அப்படியானால், தூய ஆவியார் பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரத்தையும் ஆற்றலையும் சீடர்களுக்குத் தருகின்றார் என்பதுதானே உண்மை.
தூய ஆவியார் வேறு யாருமல்ல, அவர் மற்றொரு துணையாளர் (யோவா 14:16); இயேசுதான் நமக்கு முதல் துணையாளர். இயேசுவுக்கு எப்படி எல்லா அதிகாரமும் இருக்கின்றதோ, அப்படி தூய ஆவியாருக்கும் இருக்கும் (மத் 28: 18). ஆகையால், தூய ஆவியார் பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரத்தையும் வல்லமையும் சீடர்களுக்கும் நமக்கும் தருகின்றார். இது மறுக்கமுடியாத உண்மை. எனவே தூய ஆவியாளர் அளிக்கின்ற பாவ மன்னிப்பை, நாம் ஒவ்வொருவரும் வழங்கி, அவர்கள் கடவுள் அளிக்கும் மீட்பினைப் பெற நாம் கருவிகளாக இருந்து செயல்படவேண்டும். ஏனென்றால், பாவ மன்னிப்பால்தான் மீட்பு வரும் (லூக் 1: 76-77).
எனவே, தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்ட நாம், எல்லா அச்சத்திலிருந்தும் விடுதலை பெற்று, ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை எல்லாருக்கும் அறிவித்து, அவர்கள் பாவ மன்னிப்பினால் வரும் மீட்பை அடைய, நாம் கருவிகளாக இருந்து செயல்படுவோம்.
சிந்தனை
‘கடவுள் மனிதர்களிடம் பல வழிகளில் பேசுகின்றார். அதில் முதன்மையான வழி தூய ஆவியார்’ என்பார் ஹென்றி ப்ளாக்கபி என்ற எழுத்தாளர். ஆகையால், கடவுள், தூய ஆவியார் வழியாக நம்மிடம் பேசுகின்றபொழுது, நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்ந்து (கலா 5:16), ஆண்டவரின் நற்செய்தியைத் துணிவோடு அறிவித்து, அவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம். அதவழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
வெளியேறு – துணிவுகொள் - கூவியழை
இன்று நாம் கொண்டாடும் தூய ஆவியார் பெருவிழாவுடன் உயிர்ப்புக் காலம் நிறைவுக்கு வருகிறது. இந்த நாளின் விவிலிய, வழிபாட்டு, இறையியல், மற்றும் ஆன்மிக வளமை மேன்மையானது. 'நற்செய்தியின் மகிழ்ச்சி' (இலத்தீன் மொழியில், 'இவாஞ்சலி கௌதியம்') என்னும் திருத்தூது ஊக்கவுரையில், நற்செய்தி அறிவிப்பாளர்கள் தூய ஆவியாரால் நிரப்பப்பட வேண்டும் என மொழிகிற திருத்தந்தை பிரான்சிஸ் (எண். 259), பெந்தகோஸ்தே நிகழ்வை மூன்று சொல்லாடல்களால் எடுத்துரைக்கிறார்: 'வெளியேறுங்கள், துணிவு கொள்ளுங்கள், கூவி அழையுங்கள்.' இச்சொல்லாடல்களின் துணைகொண்டு இந்நாளின் மறையுண்மை குறித்து சிந்திப்போம்.
- அ. நம் வேலிகளிலிருந்து நம்மை வெளியேற்றுகிறார் தூய ஆவியார்.
- ஆ. கடவுளின் வியத்தகு செயல்களை அறிவிக்க நமக்குத் துணிவு தருகிறார்.
- இ. தூய ஆவியாரை அன்றாடம் கூவி அழைத்தல் அவசியம்.
அ. நம் வேலிகளிலிருந்து நம்மை வெளியேற்றுகிறார் தூய ஆவியார்.
திருத்தூதர்கள் மேலறையில் கூடியிருக்கும்போது அவர்கள்மேல் தூய ஆவியார் பொழியப்படுகிறார். தூய ஆவியாரால் நிறைந்த அவர்கள் முதலில் வேறு மொழிகளில் பேசுகிறார்கள். அவர்களுடைய நாக்கு கட்டவிழ்க்கப்படுகிறது. அவர்கள் தங்கள் மொழி என்ற வேலியிலிருந்து வெளியேறுகிறார்கள். அப்படி வெளியேறிய அவர்கள் பல மொழிகள் பேசுகின்ற மக்களை எதிர்கொள்கிறார்கள். ஆக, தங்களுக்குத் தாங்களே வகுத்துக்கொண்ட வேலியிலிருந்தும், தங்களுக்கும் பிறருக்கும் இடையே இருந்த வேலியிலிருந்தும் அவர்கள் வெளியேறுகிறார்கள்.
'வெளியே போ!' என்று தூய ஆவியார் என்னை அழைக்கிறார். நான் உடைத்தெறிய வேண்டிய அல்லது தாண்ட வேண்டிய வேலிகள் எவை? எனக்கு நானே வரையறுத்துக்கொண்ட வேலிகளாக, அல்லது மற்றவர்கள் எனக்கு இடுகின்ற வேலிகளாக அவை இருக்கலாம். எனக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு நெருக்கத்தை, இணக்கத்தை, உறவை ஏற்படுத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறேனா? எனக்கு அருகில் இருக்கும் குடும்பம், நண்பர்கள், குழுவினரோடும், தூரமாக இருக்கும் நபர்களோடும் நான் கொள்ளும் நெருக்கம் எப்படி இருக்கிறது? மற்றவர்கள் அனைவரும் 'வௌ;வேறு மொழி பேசக் கூடியவர்கள்' என நான் முற்சார்பு எண்ணம் அல்லது அச்சம் கொள்கிறேனா? நான் ஒருவர் மற்றவரோடு உரையாடும்போது தூய ஆவியார் எனக்குக் கற்றுத் தருவதற்கு நான் அனுமதிக்கிறேனா?
ஆ. கடவுளின் வியத்தகு செயல்களை அறிவிக்க நமக்குத் துணிவு தருகிறார் தூய ஆவியார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'பர்ரேஸியா' என்னும் கிரேக்கச் சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறார். தூய ஆவியார் தருகிற கொடை இது என மொழிகிறார். படைப்புத் திறத் துணிவு என்று நாம் இதை அழைக்கலாம். அதாவது, நம் துணிவின் வழியாக நம் வாழ்வும் மற்றவர்கள் வாழ்வும் மேம்படுகிறது. நாம் விரும்புவதைத் தெளிவாகவும், உறுதியாகவும், கட்டின்மையோடும் சொல்லக் கூடிய ஆற்றலே படைப்புத் திறத் துணிவு. திருத்தூதர்கள் குறிப்பாக பேதுரு, பெந்தகோஸ்தே நாளில் உரையாற்றுகிறார். அவர் ஆற்றும் உரையின் தெளிவு நமக்கு வியப்பு தருகிறது. மீன்பிடிக்கும் பின்புலத்திலிருந்து வந்த ஒருவர் தெளிவாகவும், உறுதியாகவும் மறைநூலை மேற்கோள் காட்டிப் பேசுவது தலைமைச்சங்கத்தாருக்கு வியப்பூட்டுகிறது. 'ஆண்டவராகிய இயேசு உயிர்த்து விண்ணேற்றம் அடைந்து கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்' என்பதே கடவுளின் வல்ல செயல். இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், கொரிந்து நகரில் உள்ள குழுமத்தார் பெற்றிருக்கிற கொடைகளைச் சுட்டிக்காட்டுகின்றார். இக்கொடைகள் அனைத்தும் பொதுநன்மைக்காகவே வழங்கப்பட்டுள்ளன. அந்தப் பொதுநன்மை என்ன? கடவுளின் வியத்தகு செயல்களைக் குழுமமாக எடுத்துரைப்பது, மாற்று வாழ்வு வாழ்வது.
இன்று நான் துணிவிழந்து நிற்கும் பொழுதுகள் எவை? படைப்புத் திறத் துணிவை நான் பெற என்ன செய்ய வேண்டும்? ஆண்டவர் என் வாழ்வில் எனக்கு ஆற்றிய அரும்பெரும் செயல்களை நான் எடுத்துரைக்கத் தயாராக இருக்கிறேனா? தூய ஆவியார் எனக்கு வழங்கியுள்ள கொடைகள் குறித்து நான் அக்கறை உள்ளவனாக இருக்கிறேனா? தூய ஆவியாரின் கொடைகளை முன்னிட்டு நான் மற்றவர்களை வேற்றுமைப்படுத்திப் பார்த்தால், அந்த மனநிலை விடுக்க நான் தயாராக இருக்கிறேனா?
இ. தூய ஆவியாரை அன்றாடம் கூவி அழைத்தல் நலம்.
மூவொரு இறைவனில் அதிகமாக மறக்கப்பட்ட நபர் தூய ஆவியார்தாம். தம் இறுதி இராவுணவில் தூய ஆவியாரைத் தம் சீடர்களுக்கு வாக்களிக்கிற இயேசு, 'தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் ... உங்களை வழிநடத்துவார்' (காண். யோவா 15:26, 16:13) என மொழிகிறார். தூய ஆவியாரைப் பெற்றவுடன் திருத்தூதர்கள் இயேசுவுக்குச் சான்று பகர்கிறார்கள். தூய ஆவியாரின் பணிகளாக மூன்றை வரையறுக்கிறார் இயேசு: துணையாக இருத்தல், உண்மையை வெளிப்படுத்துதல், வழிநடத்துதல். நம் வாழ்வில் நாம் பல நேரங்களில் துணையின்றி நிற்கிறோம். உண்மையைப் பொய்யிலிருந்து பகுத்தாய இயலாமல் நிற்கிறோம். திசை தெரியாமல் நிர்கதியாக நிற்கிறோம். இவ்வேளைகளில் தூய ஆவியாரை நாம் கூவி அழைத்தால் அவர் நமக்குத் துணையாளராக வந்து, உண்மையைத் தெளிவுபடுத்தி, வழிநடத்துகிறார். தூய ஆவியார் இல்லாமல் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் வெறுமையே என்கிறார் திருத்தந்தை. தூய ஆவியாரை நாம் அழைக்க வேண்டுமெனில், அவரை அறிந்தவர்களாக நாம் இருக்க வேண்டும். நம் வாழ்வு ஊனியல்பை விடுத்து ஆவிக்குரிய இயல்பை அணிந்திருக்க வேண்டும் (காண். கலா 5:18-24). நற்செய்தி வாசகத்தில் தம் திருத்தூதர்கள்மேல் ஊதுகிற இயேசு தூய ஆவியாரை அவர்களுக்கு அளிக்கிறார். அவர்கள் மகிழ்ச்சியும் அமைதியும் பெறுகிறார்கள்.
நான் ஆவியாரைக் கூவி அழைக்கிறேனா? அவருக்கு நான் என் வாழ்வில் தரும் இடம் என்ன? அவரை அழைப்பதன் வழியாக என் வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேனா? என் உள்ளொளியாக அவர் சுடர்விடுவதற்கு நான் அனுமதிக்கிறேனா? வாழ்வின் தெரிவுகள் கடினமாக இருக்கும்போது, பாதைகள் தெளிவு இல்லாமல் இருக்கும்போது அவரின் துணைகொண்டு தெரிவுகளை மேற்கொள்ளவும், தெளிவு பெறவும் தயாராக இருக்கிறேனா? அவர் வழியாகவே நான் கடவுளை அப்பா, தந்தாய் என அழைக்கிறேன் எனில், நான் எப்போதெல்லாம் இறைவேண்டல் செய்கிறேன்? அவரின் நெருப்பு இன்று என் வாழ்வில் தூய்மையாக்க வேண்டிய பகுதிகள் எவை? ஆண்டவரின் ஆவி சாமுவேலை விட்டும், சவுலை விட்டும் அகன்றது போல என்னை விட்டும் அகன்றுவிட்டாரா?
நிற்க.
'ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கிறீர்!' (திபா 104) என்று இன்றைய பதிலுரைப்பாடலில் பாடுகிறோம். நம் வாழ்வை தூய ஆவியார் புதுப்பிப்பாராக! 'தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே, அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்கு முயலுவோம்' (கலா 5:25) என்னும் பவுலின் சொற்களை நினைவில்கொள்வோம். பாதுகாப்பு வளையும் மற்றும் வேலிகளை விட்டு வெளியேறுவோம்! இறைவனின் வியத்தகு செயல்களை அறிவிக்கும் துணிவு பெறுவோம்! அவரை அன்றாடம் கூவியழைப்போம்.
தூய ஆவியாரே வாரும்! நல்லிணக்கத்தின் திருஅவையாக எம்மை மாற்றும்!
இன்று நாம் தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இவ்விழா பெந்தெகொஸ்தே விழா என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு "50 ஆம் நாள்" என்று பெயர். அறுவடையின் நன்றி விழாவாக இவ்விழா கொண்டாடப்பட்டது. யூதர்கள் அனைவரும் ஒன்று கூடி இவ்விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் இன்று நாம் கொண்டாடும் இவ்விழா சற்று வித்தியாசமானது. இயேசு இறந்து ஐம்பதாம் நாள் அன்று. அவர் உயிர்த்து பல முறை சீடர்களை சந்தித்து திடப்படுத்தினார். விண்ணேற்றம் அடைந்ததையும் சீடர்கள் கண்கூடாகக் கண்டனர்.ஆயினும் பயமும் எதிர்காலத்தை பற்றிய அச்சமும் ஆட்கொண்டவர்களாய் சீடர்கள் கூடியிருந்தனர். இயேசு துணையாளரை அனுப்புவேன் என்று கூறிய தன் வாக்கை நிறைவேற்றும் விதமாய் அவர்களுக்கு தூய ஆவியைத் தந்தார். பயத்தை நீக்கி திடப்படுத்தி புதிய திரு அவைக்கு அடித்தளமிட்டார். எனவே இவ்விழாவை திருஅவையின் பிறந்தநாள் என நாம் அழைப்பதும் பொருத்தமாகும்.
தொடக்கத்திலே மனிதனை மண்ணால் கடவுள் உருவாக்கிய போது தம் உயிர் மூச்சை ஊதி மனிதனுக்கு உயிரளித்தார் (தொ நூல் 2:7). அந்த உயிர் மூச்சு தூய ஆவியாரே. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அதே செயலைச் செய்து அதாவது தன் மூச்சை சீடர்கள் மேல் ஊதி தூய ஆவியால் புத்துயிர் அளிக்கிறார்.நம்முள்ளும் தூய ஆவியார் இருக்கிறார்.அந்த தூய ஆவியை பல சந்தர்ப்பங்களில் நம் பலவீனத்தால் நாம் இழந்து விடுகிறோம். இருப்பினும் மீண்டும் மீண்டும் நமக்கு துணை செய்ய நம்மை எந்நாளும் சூழ்ந்திருப்பவர் தூய ஆவியார். இதை உறுதி செய்கிறது இவ்விழா.
இவ்விழா நமக்கு கொடுக்கும் அழைப்பு என்ன? முதலாவதாக ஒன்றுபட்டு வாழ வேண்டும். சீடர்கள் என்னதான் பயத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக இருந்தாலும் சிதறுண்டு போகாமல் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். அவர்கள் இயேசுவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தனர். இந்த ஒற்றுமை அவர்களிடையே தூய ஆவியார் செயலாற்ற உறுதுணையானது. திரு அவையின் உறுப்பினர்களாகிய நாமெல்லாம் நமக்குள்ளே வேற்றுமை பாராட்டாமல் இயேசுவின் பெயரால் ஒன்றுபட்டு வாழ்ந்தால் நம்மிலும் தூய ஆவியார் நிச்சயம் செயல்படுவார் என்பதில் ஐயமில்லை.
இரண்டாவதாக தூய ஆவியை பெற்றுக்கொண்ட சீடர்கள் செயல் வீரர்களாய்த் திகழ்ந்தனர். நம்முடைய வழக்கமான மொழியில் சொல்வது போல "சும்மா இருக்கவில்லை". இயேசு தங்களுக்கு கொடுத்த உலகெங்கும் சென்று எல்லாரையும் என் சீடராக்குங்கள் என்ற கட்டளையை நிறைவேற்றும் இயேசுவின் சேனையானார்கள். நாமும் தூய ஆவியாரைப் பெற்றவர்களே. திருஅவை அடையாளங்கள் வழியாக, ஆவியைத் தரும் வார்த்தை வழியாக, நம்பிக்கையின் வழியாக, இறைவேண்டல் வழியாக ஆவியாரை நாம் பெறுகிறோம். ஆனால் சும்மா இருந்துவிடுகிறோம். இயேசுவின் கட்டளையை செயல்படுத்த தயங்குகிறோம். அல்லது மறந்து விடுகிறோம். இத்தகைய மனநிலையை நாம் மாற்ற வேண்டும் என்பதும் இவ்விழா நமக்குக் கொடுக்கும் அழைப்பு.
மூன்றாவதாக தூய ஆவியை வழங்கிய பின் இயேசு சீடர்களை மன்னிப்பவர்களாக யாருக்கு எதிராகவும் எக்குற்றத்தையும் பிடித்து வைக்காதவர்களாக வாழச் சொல்கிறார். இதை சீடர்கள் வாழ்ந்து காட்டினர். அதனால்தான் இன்றும் திருஅவை வாழ்கிறது. திருஅவையின் பிறப்பு விழாவாம் இன்று நாமும் மன்னிப்பின் மக்களாக உறவின் திருஅவையாக நல்லிணக்கத்தின் திருஅவையாக மாற வேண்டும்.
தூய ஆவியாரை நாம் பெற்றவர்களானால் நாமும் ஒன்றுபட்டு இயேசுவின் செயல்வீரர்களாக வாழ்ந்து நல்லிணக்கத் திருஅவையை உருவாக்குவோம் என்பதில் ஐயமில்லை. அழைப்போம் தூய ஆவியாரை! நம்மிலே அவர் செயலாற்றட்டும்.
இறைவேண்டல்
உயிரளிக்கும் தூய ஆவியாரே! எம்மை திடப்படுத்தும். ஒற்றுமையின் மக்களாக, இயேசுவின் சீடர்களாக, நல்லிணக்கத்தின் திருஅவையாக எம்மை மாற்றியருளும். ஆமென்.
அனைவருக்கும் தூய ஆவியார் பெருவிழா வாழ்த்துக்கள்!
