திருக்குடும்பப் பெருவிழா
இன்று, நாசரேத்தில் வாழ்ந்த திருக்குடும்பத்தை நினைவு கூறுகிறோம். தேவ ஆவியால் நிரப்பப் பெற்று கருவுற்று ஆண்டவர் இயேசுவை, குழந்தையாகப் பெற்ற மரியாவும், வளர்ப்புத் தந்தையாகத் தரப்பட்ட புனித சூசையப்பரும் குழந்தையைத் தாலாட்டி, சீராட்டி கையில் எடுத்து ஏந்தி, ஏரோதிடம் தப்புவிக்க எகிப்துக்கு ஓடி, பின் திரும்ப எருசலேம் வந்து, இறுதியாக நாசரேத்தில் அன்பால், பாசத்தால் இயேசுவை உடல் வளர்ச்சியில் மட்டுமல்ல ஞானத்திலும், அறிவிலும் வளர்த்து, 12 வயதில் எருசலேமில் தவறவிட்ட போதும் ஏக்கத்தோடு இருவரும் தேடிக் கண்டடைந்த பின், 30 வயது வரை வளர்த்து உருவாக்கி, மனித குலத்திற்காக மகனையே பலியாக அர்ப்பணித்த குடும்பம் தான் இந்த திருக்குடும்பம் (லூக்.2:40-52).
இத்திருக்குடும்பத்தில் மூவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து செயல்பட்டார்கள். நீ பெரியவனா, அல்லது நான் பெரியவனா என்ற பட்டிமண்டபத்திற்கே இடம் தரவில்லை. இந்தக் குடும்பத்தின் வெற்றிக்கு அடித்தளமே கூட்டு முயற்சியும், விட்டுக் கொடுக்கும் மனநிலையும் ஆகும். இறைவார்த்தையை ஆழ்ந்து சிந்திக்கும் உள்ளம் கொண்டவர்கள் (லூக்.2:19). இறைமகன் பிரசன்னம் இருக்க, இவர்களில் நிறை அன்பும், நிறை மகிழ்ச்சியும் உன்னதமான அர்ப்பணமும் வெளிப்பட்டது.
தாய் தந்தையைப் போற்றி மதித்து வாழ்பவன் எல்லா ஆசீரையும் பெற்றவன். தாய் தந்தையை மதித்து நடப்பது பாவ மன்னிப்புக்குச் சமம். அவர்கள் எல்லா செல்வங்களையும நிறைவாகப் பெற்று, நீடூழி வாழ்வர் எனக் கூறுகிறது (சீரா:3:3-6) முதல் வாசகம். மனத்தாழ்ச்சி, கனிவு, பொறுமை குடும்பத்தில் மேலோங்கி நிற்க வேண்டியவை. இவை அனைத்திற்கும் மேலாக நிறை அன்பு தேவை என்பதை (கொலோ 3:12-14) இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கிறது. கணவன் மனைவியை அன்பு செய்தல், மனைவி கணவனுக்குப் பணிந்து நடத்தல், பெற்றோருக்குப் பிள்ளைகள் கீழ்ப்படிதல் குடும்பத்தை நிறைவு செய்யும் எனத் திருத்தூதர் பவுல் கூறுகிறார் (கொலோ 3:18-21).
குடும்பம் என்பது அன்பு உள்ளங்களின் சங்கமம், பின் ஆழமான உறவுகளின் அர்ப்பணம். சமுதாய கூட்டமைப்பின் அடிப்படையான ஓர் அங்கம். குடும்பம் ஒரு கோயில். அங்கே இறைவன் பிரசன்னமாகிறார். பாலோடு கலந்த நீர் பாலாகுவது போல, ஆணும், பெண்ணும் திருமணத்தால் ஓருடலாகிறார்கள். இது இறைவனால் அமைக்கப்பட்ட ஒரு தெய்வீக அமைப்பு. ஒரு மனிதன் கடைக்குச் சென்று தலைக் கவசம் (Helmet) ஒன்று வாங்கி வந்தான். "ஏனப்பா இந்தக் கவசம்? மோட்டார் சைக்கிள் வாங்கி விட்டாயா?" என்று கேட்டார் வழியில் சந்தித்த நண்பர். "இல்லையடா! நேற்று என் மனைவி பூரிக்கட்டை வாங்கி வந்து விட்டாள். அதனால் தான் இந்த ஹெல்மட் வாங்கினேன்" என்றான் இந்த மனிதன். இப்படி வாழ்வது அல்ல குடும்ப வாழ்வு! ஒரு மாணவன் ஆசிரியரிடம் சொன்னான், “சார் எங்க அப்பா ஆபிசிலே ரொம்ப பெரியவர். ஏனெனில் 5000 பேருக்கு போலீஸ் அதிகாரி அவர். ஆனால் எங்க வீட்டிலே எங்க அம்மாதான் பெரியவுங்க. ஏன்னா, எங்க அப்பாவையே எங்க அம்மா அடக்கிவிடுவாங்க!" இதுவும் சரியல்ல!
ஒரு ஆசிரியர் மாணவன் ஒருவனிடம், "தம்பி! பரிணாம் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு கூறு" என்றார். "சார்! நான் சிறுவனாக இருந்த போது என் அப்பா என்னைப் பார்த்து வாடா கன்னுக்குட்டி! என்று செல்லமாகக் கூப்பிடுவார். ஆனால் இப்போ போடா எருமைமாடு என்று திட்டுகிறார். இதுதான் பரிணாம வளர்ச்சியென்றான்" மாணவன். இதுவும் சரியல்ல!
மாறாக குடும்பம் மனித மாண்பை வளர்க்க வேண்டும் அன்பும், அரவணைப்பும், நிலையான பண்புகள் என்பதை குடும்பம் எண்ணிப்பார்க்க அழைக்கப்படுகிறது. அதற்கு திருக்குடும்பம் நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்கு!
மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்த திருச்சபைத் தாய் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே திருக்குடும்பம் என்ற பெயரைச் சூட்டினாள். அந்தக் குடும்பம்தான் இயேசுவும், மரியாவும், யோசேப்பும் வாழ்ந்த குடும்பம். இயேசு, மரியா, யோசேப்பு இவர்கள் வாழ்ந்த குடும்பம் மட்டும் குன்றின்மீது ஏற்றப்பட்ட விளக்காகத் திகழக் காரணமாக அமைந்தது அந்த மூவரிடமும் நின்று நிலவிய மூன்று முத்தான குணங்கள். திருக்குடும்பம் என்னும் பேரொளி ஒளிர்வதற்குக் காரணமாக இருந்தவை திரி என்னும் இயேசுவின் பணிவு, எண்ணெய் என்னும் மரியாவின் அன்பு, விளக்கு என்னும் யோசேப்பின் அமைதி.
பணிவோடு துவங்கிய இயேசுவின் வாழ்க்கை கீழ்ப்படிதலோடு முடிந்தது. பின்பு அவர் (சிறுவன் இயேசு) அவர்களுடன் (பெற்றோர்) சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார் (லூக் 2:51அ) என்று நற்செய்தியில் படிக்கின்றோம். இயேசுவின் வாழ்க்கையின் கடைசி அத்தியாயம். அங்கே நாம் காண்பதென்ன? கெத்சமனி தோட்டத்தில் துயரமும் மனக்கலக்கமும் (மத் 26:37). ஆழ்துயரமும் (மத் 26:38) இயேசுவை ஆட்கொண்டிருந்தன. அவர் வானகத் தந்தையைப் பார்த்து, என் தந்தையே. நான் குடித்தாலன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும் (மத் 26:42) என்றார்.
புனித பவுலடிகளார் கிறிஸ்து இயேசு சாவை ஏற்கும் அளவுக்கு. அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார் (பிலி 2:8) என்று கூறுகின்றார். இயேசு அவருடைய பெற்றோரின், விண்ணகத் தந்தையின் திருவுளத்தோடு தன் ஆசைகளைச் சங்கமமாக்கிக் கொண்டார். இயேசுவின் கீழ்ப்படிதலுக்கு அடுத்தபடியாக திருக்குடும்பத்தை அலங்கரித்த பண்பு அன்னை மரியாவின் அன்பு.
மரியா மங்கள வார்த்தைத் திருநாளன்று (லூக் 1:26-38) தம் சம்மதத்தை கடவுளுக்குக் கொடுத்து உலக மக்களை அன்பு செய்தார். எலிசபெத்தைச் சந்தித்து, அவரை வாழ்த்தி, அவரது அன்பைப் பெற்றார் (லூக் 1:39-45).
எகிப்திற்குப் புறப்பட்டபோது பேசாமடந்தையாக யோசேப்பின் வழி நடந்து (மத் 2:14). யோசேப்பை அன்பு செய்தார். சிறுவன் இயேசுவைத் தேடியபோது (லூக் 2:41-50) இயேசுவை அன்பு செய்தார்.
கானாவிலே திருமண வீட்டாரை அன்பு செய்தார் (யோவா 2:1-11). கல்வாரியிலே சிலுவையிலே துடித்த இயேசுவின் அருகிலிருந்து (யோவா 19:25) கண்ணீர் சிந்திய கர்த்தருக்கு (எபி 5:7) ஆறுதல் என்னும் அருமருந்தைத் தந்து, அவரை அன்பு செய்தார். இறுதியாக, தம் மகனைக் கொன்றவர்களுக்குத் தாயாகி பாவிகளை அன்பு செய்தார் (யோவா 19:26-27).
சுயநலம் என்ற சொல்லுக்கே அன்னை மரியாவின் வாழ்க்கையில் இடமில்லை. அன்பே கடவுள் என அன்னை மரியா வாழ்ந்தார். அன்னை மரியாவின் அன்பிற்கு அடுத்த படியாக திருக்குடும்பத்தை அழுகுபடுத்தியது யோசேப்பின் அமைதி. அன்று வானதூதர் மரியாவிற்கு நற்செய்தி கொண்டு வந்தார் கன்னி அன்னையானார் - புனித யோசேப்பு பேசவில்லை! இயேசு பிறக்க இடமில்லை என்றார்கள். அப்போதும் புனித யோசேப்பு பேசவில்லை.
குழந்தை இயேசுவை விண்ணகத்தூதரும். இடையர்களும், ஞானிகளும் வாழ்த்தினார்கள். அப்போதும் புனித யோசேப்பு பேசவில்லை!
இயேசு கோயிலிலே அர்ப்பணிக்கப்பட்டார். அப்போதும் புனித யோசேப்பு பேசவில்லை!
எகிப்துக்குத் தப்பி ஓடிச்செல்லும் என்று தூதர் சொன்னார். அப்போதும் புனித யோசேப்பு பேசவில்லை!
இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு தூதர் சொன்னபோதும் புனித யோசேப்பு எதுவும் பேசவில்லை! யூதேயாவில் அர்க்கலா. எரோதின் மகன்! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? ஆகவே அங்கே போக வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டபோதும் புனித யோசேப்பு ஒன்றும் பேசவில்லை! சிறுவன் இயேசு காணாமல் போனபோதும் புனித யோசேப்பு ஒன்றும் பேசவில்லை!
நாம் அமைதியில்தான் நமது தாயின் கருவில் வளர்ந்தோம். இறந்த பின் அமைதியில்தான் இறைவனைச் சந்திக்கப் போகின்றோம். இப்படியிருக்க, பிறப்புக்கும், இறப்புக்கும் நடுவே ஏன் சத்தம்? எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் எனச் சொல்லாமல் சொல்லி புனித யோசேப்பு எங்கும், எதிலும், எப்பொழுதும் அமைதி காத்தார்.
மன்றாடுவோமா?
வானகத் தந்தையே, இயேசுவும் மரியாவும் யோசேப்பும் வாழ்ந்த திருக்குடும்பம் போலவே எங்கள் குடும்பமும் திகழவேண்டும். இந்த நல்ல நேரத்தில் எங்களது கீழ்ப்படியாமையையும், பகையையும், அளவுக்கு மீறிய பேச்சையும் பாராமல், நாங்கள் வாழ விரும்புகின்ற பணிவு வாழ்வையும், அன்பு வாழ்வையும், அமைதி வாழ்வையும் மட்டும் கண்ணோக்கி எங்கள் குடும்பங்களை இயேசுவின் பணிவினாலும், மரியாவின் அன்பினாலும், யோசேப்பின் அமைதியினாலும் அருள்பொழிவு செய்து எங்களை வளமுடன் வாழவைத்தருளும். ஆமென். மேலும் அறிவோம்:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது ( குறள் : 45).
பொருள் :
ஒருவர் குடும்ப வாழ்வு அன்பின் இயல்பையும் அறச் செயலையும் கொண்டிருக்குமானால் அவை முறையே பண்பாகவும் பயனாகவும் திகழும். கணவனும் மனைவியும் கருத்து ஒருமித்து வாழ்ந்தால் அன்பே பண்பாகவும் அறமே பயனாகவும் விளங்கும்.
திருமணத்திற்கு ஏன் ஆடுமாடுகளை அழைப்பதில்லை? ஏனெனில் திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர். ஆடுமாடுகளை அழைத்தால் அவை ஆயிரங்காலத்துப் பயிரை மேய்ந்து விடுமாம்! ஆனால், இன்று பல்வேறு தீயசக்திகள் திருமணத்தை மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஆயிரங்காலத்துப் பயிர் குறுவைப் பயிராக மாறிவிட்டது. மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் மணமுறிவு அதிகரித்துவிட்டது. மேற்கத்திய நாடுகளில் நடப்பது என்ன? திங்கள்கிழமை காதல்; செவ்வாய்கிழமை நிச்சயதார்த்தம், புதன் கிழமை திருமணம்; வியாழக்கிழமை தேனிலவு: வெள்ளிக்கிழமை விவாகரத்து; சனிக்கிழமை Rest'(ஓய்வு); ஞாயிறு Next' (மறுமணம்). இப்பின்னணியில் இன்று நாம் திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாடுகிறோம்;
ஆண்டவருக்கு உகந்த குடும்ப வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் அருமையாகக் கூறுகிறார். அதன்படி நடந்தால், ஒவ்வொரு குடும்பமும் திருக்குடும்பமாகத் திகழும். இல்லையெனில் தெருக்குடும்பமாகத் திண்டாடும். குடும்பத்தில் கோலோச்ச வேண்டிய நற்பண்புகள்: பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத் தாழ்மை, கனிவு, பொறுமை. அனைத்திற்கும் மேலாக இந்நற்பண்புகளை எல்லாம் பிணைத்து நிறைவு செய்யும் அன்பு (கொலோ 3:12-14).
கிறிஸ்துவுக்குள் குடும்ப வாழ்வு நடத்தும் கணவர் தம் மனைவியை அன்பு செய்ய வேண்டும்; மனைவி தன் கணவருக்குப் பணிந்து நடக்க வேண்டும். பிள்ளைகள் அனைத்திலும் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் (கொலோ 3:18-21). அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் "தான்" (ego) என்ற ஆணவம். அங்கேபார்! இங்கேபார்! மேலேபார்! கீழே பார்! கலக்கப்போவது யார்? நீயா? நானா? என்ற நிலைப்பாடு கணவனா? மனைவியா? காமமா? காதலா? மாமியாரா? மருமகளா? என்ற பட்டி மன்றம் குடும்ப வாழ்வைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது.
"குடும்பத்தில் யார் கை ஓங்குகிறது? அப்பா கையா? அம்மா கையா? " என்று ஒரு சிறுவனைக் கேட்டதற்கு அவன் கூறிய பதில்: அப்பா கை ஓங்குகிறது; அம்மா கை வீங்குகிறது. குடும்ப வாழ்வைப் பாதுகாக்க வேண்டுமென்றால், “நீயா? நாளா?" என்ற பிரிவினைப் போக்கினைக் கைவிட்டு விட்டு, 'நீயும் நானும்' என்ற சமரசப் போக்கிளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆணில்லாமல் பெண்ணும். பெண்ணில்லாமல் ஆணும் வாழ முடியாது. எனவே ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து இனியதோர். இல்லறம் நடத்த வேண்டும்.
இல்வாழ்வில் சுணக்கைவிட (maths). வேதியல் (Chemistry) முக்கியமானது. மூளைக்கு அதிகம் வேலை கொடுக்காமல், இதயத்துக்கு அதிகம் வேலை கொடுக்க வேண்டும். மூளை அறிவின் ஊற்று; காரணம் - காரியம் அடிப்படையில் வேலை செய்து வீண் விவாதத்தை உருவாக்கும், இதயம் அன்பின் ஊற்று: பாசத்தின் அடிப்படையில் வேலை செய்யும். மற்றவரிடம் குறைகளைப் பார்க்காமல் நிறைகளைப் பார்க்கும். அன்புக்கு மசியாதது ஏதுமில்லை. அன்புக்கு அடிபணித்தால் ஆனந்தமான இவ்வாழ்வு வாழ முடியும். அன்பு ஒருபோதும் அழியாது.
திருக்குடும்பத்தில் சமத்துவ அன்பும், மதிப்பும், மரியாதையும் நிலவியது. யோசேப்பு, மரியா, இயேசு ஆகிய மூவரும் ஒருவர் மற்றவரைச் சொல்லாலோ செயலாலோ புண்படுத்தவில்லை. அவர்களிடம் 'cgo' பிரச்சினை இல்லை (cgo என்றால் ecking God out என்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது, கடவுளை வெளியேற்றுதல்) கடவுள் வாழ்ந்த அக்குடும்பத்தில் அறிவுக்கு எட்டாத அமைதி நிலவியது.
திருமண அன்பின் கனி குழந்தை, இன்றைய பதிலுரைப் பாடல் (திபா 128) கூறுவதுபோல, கடவுளுக்கு அஞ்சி வாழுகின்ற மனிதனுக்குக் கிடைக்கும் பேறுகள் இரண்டு. நல்ல மனைவி, நல்ல குழந்தைகள். ஒரு குடும்பத்தின் விளக்கு மனைவி, அக்குடும்பத்தில் அணிகலன்கள் குழந்தைகள் என்கிறார் வள்ளுவர்.
மங்களம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு (குறள் 60)
திருக்குடும்பத்தைப் பின்பற்றிப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டவேண்டும், குழந்தை இயேசுவைக் கொடுங்கோல் மன்னன் ஏரோது கொல்லத் தேடுகிறான். என்று வானதூதர் யோசேப்புக்குக் கனவில் எச்சரித்தபோது, யோசேப்பு தம் மனைவி மரியாவுடன் குழந்தையை யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு எடுத்துச் சென்று காப்பாற்றினார் என்று இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகிறது (மத் 2:3-15). சிறுவன் இயேசு பன்னிரண்டு வயதில் காணாமற்போனபோது, யோசேப்பும் மரியாவும் அவரை மிகுந்த கவலையோடு தேடிச் சென்றனர் (லூக் 2:41-48).
இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று கவலைப்படுகின்றனரா? சில பெற்றோர்கள். வந்த மாட்டைக் கட்டுவதில்லை. போன மாட்டைத் தேடுவதில்லை" என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றனர். ஒரு பெரியவர் ஓர் அப்பாவிடம்"உங்கள் முதல் பையன என்ன செய்கிறான்?” என்று கேட்டதற்கு, "அந்தக் குரங்கு எந்த மாத்தில் இருக்கிறதோ?" என்றார். இரண்டாவது பையனைப் பற்றிக் கேட்டதற்கு, "அந்த எருமைமாடு எங்கே சுத்துதோ?" என்றார். மூன்றாவது பையனைப் பற்றிக் கேட்டதற்கு, அந்தப் பன்றி எங்கே புரளுதோ?" என்றார். அதிர்ச்சியடைந்த பெரியவர் அப்பாவிடம், உங்கள் வீட்டில் பிள்ளைகள் இல்லையா? மிருகக் காட்சிதான் இருக்கிறதா?" என்று கேட்டார். பெற்றோர்கள் பிள்ளைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்று புனித பவுல் பவுல் கூறுவது: "பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனம்தளர்ந்து போவார்கள்" (கொலோ 3:21),
பிள்ளைகள் தங்களது வயதான பெற்றோர்களை எவ்வாறு நடத்த வேண்டுமென்று இன்றைய முதல் வாசகம் நடைமுறை விதிகளைக் கொடுக்கிறது. ஆண்டவருக்கு அஞ்சும் மனிதா தம் தாய் தந்தையை மதிப்பர்; அவர்கள் நிலவுலகில் நீண்டகாலம் வாழ்வர். அன்னை இல்லம் என்று வீட்டுக்குப் பெயரிட்டு, அன்னையை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்களுக்குக் கடவுளின் ஆசீரும் கிடைக்காது. அவர்களுடைய பிள்ளைகளிடமிருந்து அன்பும் ஆதரவும் கிடைக்காது என்பது உறுதி.
ஒரு தாத்தா தன் பேரனிடம், "என் நாக்குச் செத்துப் போயிட்டது" என்று கூற, போள் அவரிடம், "செத்த நாக்கை எரிக்கலாமா? அல்லது புதைக்கலாமா?" என்று கேட்டாள்! வயது ஆக ஆக நாக்கு மட்டுமல்ல, எல்லா உறுப்புக்களுமே செயல் திறனை இழந்து விடுகின்றன; அறிவாற்றல் குறைந்து போகிறது. இதைப் பிள்ளைகள் புரிந்து கொண்டு வயதான பெற்றோர்களை மனங்கோணாமல் நடத்த முயவ வேண்டும். திருமணம் புனிதத்துக்கு வாய்க்கால்: திருமணமென்னும் திருவருட் சாதனத்தால் தம்பதியர் திருநிலைப்படுத்தப்படுகின்றனர். இம்மையில் முறையான திருமண வாழ்வு வாழ்கின்றவர்கள், தெய்வீக வாழ்வு வாழ்கின்றனர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும். (குறள் 50)
இதுவே மிக அழகானது
அவன் ஒரு கலைஞன். உலகிலேயே மிகவும் அழகானதை ஓவியமாக்கத் துடித்தான். அப்படி உலகிலேயே மிக அழகானது எது?
வழியில் குரு ஒருவரைச் சந்தித்தான். அவர் சொன்னார்: “உலகிலேயே மிக அழகானது நம்பிக்கைதான். அதனை ஒவ்வொரு ஆலயத்திலும் உணரலாம்". சிறிது தூரம் சென்றான். புதிதாக. மணமுடித்த இளமங்கை எதிரே வந்தாள். "அன்புதான் அழகானது. அன்பு இருந்தால் வறுமை கூட வளமைதான். கண்ணீர் கூடக் களிப்புத்தான் என்றாள். அடுத்து ஒரு போர்வீரன் : 'சமாதானம்' அதுபோல அழகானது வேறு எது? போர், யுத்தம், சண்டை, சச்சரவு எல்லாமே அசிங்கமானது”.
நம்பிக்கை... அன்பு... சமாதானம்... இவற்றையெல்லாம் எப்படி ஓர் ஓவியத்துக்குள் கொண்டு வருவது? சிந்தித்துக் கொண்டே தன் வீட்டிற்குள் நுழைகிறான். 'அப்பா' என்று ஆர்வம் பொங்க ஓடிவந்து அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்ட குழந்தைகளின் கண்களில் நம்பிக்கை மின்னியது. 'என்னங்க' என்ற தன் மனைவியின் கனிவான குரலில் அன்பு பொங்கியது. அந்த நம்பிக்கையும் அன்பும் கட்டி எழுப்பிய ஓர் அமைதி, சமாதானம் அவன் வீடு முழுவதும் ஒளிர்ந்தது.
ஆம், இப்போது அவன் கண்டு கொண்டான் உலகிலேயே மிக அழகானது எதுவென்று. அதை ஓவியமாக்கினான். அதன் கீழே எழுதி வைத்தான் “இல்லம் என்று.
அன்பு, நம்பிக்கை, சமாதானம் பூத்துக் குலுங்கும் அந்த நாசரேத்து இல்லத்திற்குள் நுழைகிறோம். குடும்பத்தின் புனிதத் தன்மையைப் போற்றிப் பேணும் மூன்று உள்ளங்களையும் வாழ்த்தி வணங்கிவிட்டு வெளியே வருகிறோம். புதிய உணர்வுகளோடு, நமது இல்லமும் இத்தகையதொன்றாகாதா என்ற புனித ஏக்கத்தோடு.
ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் ஒரு திருக்குடும்பமாக - ஏன் அந்த நாசரேத்து குடும்பத்தை விடச் சிறந்த ஒன்றாகத் திகழ வேண்டும். யோசேப்புக்கும் மரியாவுக்கும் கிட்டாத பேறும் தெய்வ அருளும் கிறிஸ்தவ மணமக்களுக்குக் கிடைக்கின்றன. யோசேப்பும் மரியாவும் இணைந்தது, இல்லறத்தில் புகுந்தது இயற்கை ஏற்பாடான திருமணத்தால்! திருமணத் திருவருள் சாதனத்தால் அன்று! மீட்பின் அருளும் ஆசிரும் பொங்கி ஊற்றெடுக்கும் ஏழு கனைகளில் ஒன்று அல்லவா இயேசு நிறுவிய திருமணத் திருவருள் சாதனம்!
நாசரேத்துக் குடும்பத்தை ஏன் திருக்குடும்பம் என்கிறோம்? அது ஓர் இலட்சியக் கணவன், ஓர் இலட்சிய மனைவி, ஓர் இலட்சியத் தந்தை, ஓர் இலட்சியத் தாய், ஓர் இலட்சியக் குழந்தை இவர்களின் கூட்டாகத் திகழ்கிறது என்பதாலா? அந்த நிலை ஓர் இலட்சியக் குடும்பமாக மாற்றுமே தவிர ஒரு திருக்குடும்பமாக்காது. அந்த இலட்சியக் குடும்பம் எப்படி ஒரு திருக்குடும்பமானது?
அங்கே இருப்பது வெறும் குழந்தையா? அன்று, கடவுள்! ஆக உங்கள் குடும்பம் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் கோவிலாகட்டும். கணவன் - மனைவி - கடவுள்... அப்படிக்கூட அன்று, கடவுள் - கணவன் - மனைவி (கடவுளுக்கு முதல் இடம்).. இதுதான் திருக்குடும்பம்!
சோதனைக்கும் வேதனைக்கும் இடையே திருக்குடும்பம் மகிழ்ச்சியோடும் மனஉறுதியோடும் இருந்ததற்குக் காரணம் இயேசு அங்கே இருந்தது. இயேசுவோடு அவர்கள் இணைந்ததே! அகந்தை கலந்த தன்முனைப்பு - EGO அதாவது Edging God Out - கடவுளை ஒரங்கட்டுவது குடும்பச் சிக்கலில், சீரழிவில் கொண்டு போய் நிறுத்தும். குடும்பச் செபம் நல்ல குடும்பத்தைக் கட்டி எழுப்பும். (தி.பா.127:1)
கிறிஸ்துவும் திருச்சபையும் போலக் கணவனும் மனைவியும் வாழட்டும் (எபே.5:25) திருச்சபை மீது கிறிஸ்து பொழிந்த அன்பும் திருச்சபைக்காக உயிர்நீத்த அவரது தியாகப் பண்புமே இல்லறத்தை இன்பம் கமழச் செய்யும்.
இன்பத்தைப் பகிர்வது அன்பின் முதற்படி. துன்பத்தைப் பகிர்வது அன்பின் அடுத்தப்படி. குற்றத்தைப் பகிர்வது அன்பின் நிறைவுப் படி. இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது இன்பம் இரட்டிப்பாகிறது? துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது துன்பம் பாதியாகிறது. குற்றத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது குற்றமே இல்லாமல் போகிறது.
எதையோ எழுதிக் கொண்டிருக்கும் தந்தைக்கு முன்னே காப்பியை வைத்து விட்டுப் போகிறார் குடும்பத் தலைவி. அங்கே வந்த மகன் தெரியாமல் காப்பிக் குவளையைத் தட்டி விடுகிறான். அந்த நிலையில் அந்தச் சிறுவன் “அப்பா மன்னித்து விடுங்கள். தெரியாமல் செய்துவிட்டேன் என்கிறான். அப்பாவோ “உன் தவறு இல்லை மகனே, என் தவறு தான். அம்மா கொண்டு வந்ததும் எடுத்துப் பருகியிருந்தால் இப்படி நேர்ந்திருக்குமா?" என்கிறார். அதைக் கேட்ட அம்மா "அது உங்கள் இருவருடைய தவறுமல்ல. எனக்கென்ன அப்படித் தலைபோகிற அவசரம்? அப்பா அதைப் பருகிற வரை அங்கு நான் இருந்திருந்தால்..." என்கிறாள். இப்போது யாருடைய தவறு? மூன்று பேருமே மற்ற இருவர் மீதும் பழிபோடாமல் தானே தவறுக்குப் பொறுப்பேற்கிற விந்தையைப் பார்க்கிறோம். யாருடைய தவறு என்று முடிவு கட்ட முடியாமல் முடியைப் பிய்த்துக் கொள்கிறோம்.
நமது பாவத்தைத் தன்மேல் ஏற்றுக் கொண்ட (எசா.53:6, மத்.8:17) இயேசுவின் அந்தத் தெய்வீக அன்புக்குச் சான்று பகரும் வாய்ப்பும் பொறுப்பும் இல்லறத்தினருக்கு உரியது.
கிறிஸ்துவும் திருச்சபையும் போல மட்டுமல்ல, கிறிஸ்துவோடும் திருச்சபையோடும் கணவனும் மனைவியும் வாழட்டும். அந்த நிலையில் பெத்லகேமின் ஏழ்மையா, நாசரேத்தின் தனிமையா, கல்வாரியின் துயரமா, எதையும் சந்திக்கும், தாங்கிக் கொள்ளும் அருளும் ஆற்றலும் பெறுவார்கள். கானாவூரில் தண்ணீரை இரசமாக மாற்றிய இயேசு நம் கண்ணீரை மகிழ்ச்சியாக மாற்றுவார்.
அன்புத்தாயின் மகவே அருள்!
அன்பும் அறனும் (அருளும்) உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (திருக்குறள் 45)
கிறிஸ்துவும் திருச்சபையும் போல வாழும் போது தெய்வ அன்பைச் சுவைக்கிறோம். கிறிஸ்துவோடும், திருச்சபையோடும் வாழும் போது தெய்வ அருளில் திளைக்கிறோம்.
வரம்பு மீறும் வளர் இளம் பருவம்
கிறிஸ்மஸ் காலம் குடும்ப உணர்வை வளர்க்கும் ஓர் அழகிய காலம். கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் ஞாயிறன்று திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாட திருஅவை நம்மை அழைக்கின்றது. திருக்குடும்பத் திருவிழா உருவான வரலாற்றை நான் பின்னோக்கிப் பார்த்தபோது, என் மனதில் எழுந்த எண்ணங்களை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இரண்டாவதாக, திருக்குடும்பம் எதிர்கொண்டதாக இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் பிரச்சனையைப் பற்றி சிந்திப்போம். மூன்றாவதாக, இந்த நற்செய்தி நிகழ்ச்சி நமக்கு நினைவுறுத்தும் இன்றைய பிரச்சனைகளையும் நாம் சிந்திப்போம்.
பல நூற்றாண்டுகளாக, திருக்குடும்பத் திருநாள் தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக துறவற சபைகளால் வளர்க்கப்பட்டு வந்தது. 1893ம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் திருஅவையின் திருவிழாவாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு சில ஆண்டுகளில் இத்திருவிழா திருவழிபாட்டிலிருந்து நீக்கப்பட்டது. 1921ம் ஆண்டு திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால் இத்திருவிழா மீண்டும் திருவழிபாட்டின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. அதுதான், அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ல் நடந்து முடிந்த உலகப்போரில் ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத் தலைவனையோ, மகனையோ போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள் ஆழ்ந்த துயரத்தில், அவநம்பிக்கையில் மூழ்கியிருந்தன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில் திருக்குடும்பத் திருநாளை மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களைக் கட்டியெழுப்ப திருஅவை முயன்றது.
. 1962ம் ஆண்டு துவங்கிய இரண்டாம் வத்திக்கான் பொதுசங்கத்தின்போது மீண்டும் திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களைத் திருஅவை புதுப்பித்தது. இதற்கு முக்கிய காரணம் அன்றைய உலகின் நிலை. முதலாம், இரண்டாம் உலகப் போர்களால் சிதைந்து போன கட்டிடங்களைவிட, குடும்பங்கள் அதிகமாகச் சிதைந்திருந்தன... வேறு பல வடிவங்களில் குடும்பங்கள் தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று பல வழிகளில் உலகம் முன்னேறியதைப் போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, குடும்பம் என்ற அடித்தளம் நிலை குலைந்தது. ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு என்று, மக்கள் வீட்டுக்கு வெளியே நிம்மதியைத் தேடி அலைந்தனர். அந்த அமைதியை, அன்பை வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச்சொன்னது திருஅவை. குடும்ப உணர்வுகளை வளர்க்கும் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறை திருக்குடும்பத் திருவிழாவாக அறிவித்தது திருஅவை.
திருக்குடும்பம் ஒரு தலைசிறந்த குடும்பம். அந்தக் குடும்பத்தில் வாழ்ந்த இயேசு, மரியா, யோசேப்பு அனைவரும் தெய்வீகப் பிறவிகள். அவர்களைப் பீடங்களில் ஏற்றி வணங்க முடியும். அவர்களை வைத்து விழாக்கள் கொண்டாட முடியும். ஆனால், அந்தக் குடும்பத்தைப்போல் வாழ்வதென்றால்... நடக்கக்கூடிய காரியமா? இது பொதுவாக நமக்குள் எழும் ஒரு தயக்கம். இயேசு, மரியா, யோசேப்பு என்ற அக்குடும்பம் எந்நேரமும் அமைதியாக, மகிழ்வாக எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்ததாக நினைக்கவேண்டாம். அவர்கள் மத்தியிலும் பிரச்சனைகள் இருந்தன. அவர்கள் அந்தப் பிரச்சனைகளைச் சந்தித்த விதம், அவற்றிற்குத் தீர்வு கண்டவிதம் இவை நமக்குப் பாடங்களாக அமையவேண்டும். திருக்குடும்பம் சந்தித்த ஒரு பிரச்னையை இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது. பெற்றோருடன் எருசலேம் கோவிலுக்குச் செல்லும் சிறுவன் இயேசு, அவர்களுக்குத் தெரியாமல் அங்கேயேத் தங்கிவிடும் நிகழ்வு இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது.
லூக்கா நற்செய்தி 2: 41-52
ஒரு குடும்பத்தில் குழந்தை ஒன்று பிறந்ததும், பெற்றோர், முக்கியமாக தாய், தனது தினசரி வாழ்க்கையை அந்தக் குழந்தைக்காக அதிகம் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் உடல் ரீதியாக எழும் சவால்கள். இதே குழந்தை, வளர் இளம் பருவத்தில் (Teenage) அடியெடுத்து வைக்கும்போது, பெற்றோர் மீண்டும் பல மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் மனதளவில், வளரும் பிள்ளையைப் புரிந்து கொள்வதில் எழும் சவால்களாக இருக்கும்.
நமது குடும்பங்களில் ஒரு மகளோ, மகனோ தோளுக்கு மேல் வளர்ந்ததும், தாங்கள் தனித்து வாழமுடியும் என்பதை எப்படி உணர்த்துவர்?... தங்களுக்குரிய மரியாதையை மற்றவர்கள் கொடுக்க வேண்டுமென எதிர்பார்ப்பர். 12 வயதைத் தாண்டி, டீன் ஏஜ் வயதில் காலடி எடுத்து வைத்துவிட்டதால், தன்னை மற்றவர்கள் இனிமேல் கேள்விகள் கேட்டு தொல்லைப் படுத்துவதை விரும்பமாட்டார்கள். "'நான் எங்கிருந்து வந்தேன்?' என்ற 'அப்பாவித்தன'மானக் கேள்வியை எழுப்பிவரும் வரை நம் மகனோ, மகளோ தன் குழந்தைப் பருவத்தைத் தாண்டவில்லை என்பதை நாம் உணரலாம். 'நீ எங்கே போயிருந்தாய்?' என்ற கேள்வியை எப்போது அவர்கள் விரும்பவில்லையோ, அப்போது அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கடந்துவிட்டார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்று அருள்தந்தை Ernest Munachi கூறியுள்ளார். எங்கே போனாய், என்ன செய்தாய், ஏன் இவ்வளவு லேட்டாக வருகிறாய்... போன்ற கேள்விகளை இனி தங்களிடம் கேட்கக்கூடாது என்பதை நேரடியாகச் சொல்லாமல், தங்கள் நடத்தையினால் டீன் ஏஜ் இளையோர் உணர்த்துவர்.
இதுவரைத் தங்களைச் சுற்றி நாடும், வீடும் கட்டியிருந்த வேலிகளைத் தாண்டுவதில், அல்லது அந்த வேலிகளை உடைத்து வெளியேறுவதில் டீன் ஏஜ் இளையோர் குறியாய் இருப்பார்கள். அந்த நேரத்தில் குடும்பங்கள் அவர்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல், அவர்கள் வாழ்வையே கேள்விக்குறியாக மாற்றும்போது, அவர்களது தோழர்கள் தோழிகள் சொல்வது குடும்பத்தினர் சொல்வதைவிட முக்கியமாகிப் போகும். இந்த மாற்றங்கள் பல நேரங்களில் பெற்றோருக்குப் பிரச்சனைகளை, புதிய சவால்களை உருவாக்கும்.
அன்று எருசலேமில் நடந்ததாக இன்றைய நற்செய்தியில் நாம் வாசிப்பதும் வளர் இளம் பருவத்தில் அடியெடுத்துவைத்த ஓர் இளையவரைப் பற்றியதே. 12 வயதை நிறைவு செய்த ஆண்மகனை, கோவிலுக்கு முதன்முறையாக அதிகாரப் பூர்வமாகக் கூட்டிச்செல்லும் வழக்கம் யூதர்கள் மத்தியில் இருந்தது. 12 வயதுக்கு மேல் ஒவ்வோர் ஆண்மகனும் ஆண்டுக்கு ஒருமுறையாகிலும், சிறப்பாக எருசலேம் திருவிழாவின்போது, கோவிலுக்குக் கட்டாயம் செல்லவேண்டும். இதுவரை குழந்தையாக இருந்த அச்சிறுவன், இனி தனித்து முடிவுகள் எடுக்கும் தகுதிபெற்ற ஓர் ஆண்மகன் என்பதை உறுதி செய்யும் வகையில் இப்பழக்கம் அமைந்தது. வளர் இளம் பருவத்தில் அடியெடுத்துவைத்த இயேசு தன் சுதந்திரத்தை நிலைநாட்ட செய்யும் முதல் செயல் என்ன? அப்பா, அம்மாவிடம் சொல்லாமல், கோவிலில் நடந்த மறைநூல் விவாதம் ஒன்றில் அவர் கலந்துகொண்டார். நல்ல விஷயம் தானே! இதை ஏன் ஒரு பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்? என்று நாம் கேள்வியை எழுப்பலாம்.
கழுவித் துடைத்த ஒரு திருப்பொருளாக திருக்குடும்பத்தை நாம் பார்த்து பழகிவிட்டதால், இப்படிப்பட்டக் கேள்வியை எழுப்புகிறோம். ஆனால், பிள்ளையைத் தொலைத்துவிட்ட பெற்றோரின் நிலையில் இருந்து இதைப் பார்த்தால், அது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பதை நாம் உணரலாம். மகனைக் காணாமல் பதைபதைத்துத் தேடிவரும் மரியாவும் யோசேப்பும் மூன்றாம் நாள் இயேசுவைக் கோவிலில் சந்திக்கின்றனர். அச்சந்திப்பில் நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
தங்கள் மகன் மறைநூல் அறிஞர்கள் மத்தியில் அமர்ந்து, அவர்களுக்கு இணையாக, சிலவேளைகளில் அவர்களுக்கு மேலாக, விவாதங்கள் செய்ததைக் கண்டு, அவரது பெற்றோர் வியந்தனர், மகிழ்ந்தனர்... அதே சமயம் பயந்தனர். வயதுக்கு மீறிய அறிவுடன், திறமையுடன் செயல்படும் குழந்தைகளால் பெற்றோருக்குப் பெருமையும் உண்டு... சவால்களும் உண்டு. மரியா தன் மகனைப் பார்த்து, தன் ஆதங்கத்தை எடுத்துக் கூறுகிறார். இயேசுவோ அவர் அம்மா சொல்வதைப் பெரிதுபடுத்தாமல், தான் இனி தனித்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.
இயேசு மரியாவுக்குச் சொன்ன பதில் அந்த அன்னையின் மனதைப் புண்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் மற்றவருக்கு முன்னால் அப்படிப் பேசியதால் அந்த அன்னையின் மனது இன்னும் அதிகம் வலித்திருக்கும். மகன் சொல்வதில் என்னதான் நியாயம் இருந்தாலும், வலி வலிதானே! அந்த வேதனையில் அவர் கோபப்பட்டு மேலும் எதாவது சொல்லியிருந்தால், பிரச்சனை பெரிதாகி இருக்கும்.
குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள பொது இடங்கள் நல்லதல்ல என்ற ஒரு சின்ன பாடத்தையாவது அன்னை மரியாவிடம் நாம் கற்றுக்கொள்ளலாமே. மரியா இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவில்லை, இருந்தாலும் அவைகளைத் தன் மனதில் ஒரு கருவூலமாகப் பூட்டி வைத்துக்கொண்டு கிளம்பினார். இயேசுவும் அவர்களோடு சென்றார். தான் தனித்து முடிவெடுக்க முடியும் என்பதை, பெற்றோருக்கு உணர்த்திய இயேசு, அடுத்த 18 ஆண்டுகள் செய்தது என்ன? “பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்… இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்” (லூக்கா 2: 51-52) என்று இன்றைய நற்செய்தி நிறைவடைகிறது.
இறுதியாக, ஒரு சில எண்ணங்கள்... திருவிழாவுக்குச் சென்றவேளையில், இயேசு காணாமல் போய்விடும் சம்பவம், இன்றைய நிகழ்வுகளை நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. திருவிழாக் கூட்டங்களில் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு, தவிக்கும் பெற்றோரை... பெற்றோரை இழந்து, தனித்து விடப்படும் குழந்தைகளை... நினைத்துப் பார்ப்போம். இவர்களை மீண்டும் இறைவன் ஒன்றிணைக்க வேண்டும் என்று மன்றாடுவோம். இவ்விதம் காணாமல்போகும் குழந்தைகளைக் கடத்திச்சென்று, பிச்சை எடுப்பதற்கும், இன்னும் பல தவறான வழிகளுக்கும் இவர்களைப் பயன்படுத்தும் மனசாட்சியற்ற மனிதர்களை நினைத்துப் பார்ப்போம். இவர்களுக்காகவும் நாம் செபிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
நாசரேத்து என்ற சிற்றூரில், கிராமத்தில் வளர்ந்து வந்த இயேசு, எருசலேம் நகரத்திற்குச் சென்று காணாமல் போகிறார் என்பதும் ஒரு சில சிந்தனைகளை, செபங்களைத் தூண்டுகிறது. கிராமங்களில், சிறு ஊர்களில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு மேற்படிப்பிற்கெனச் சென்று, பல வழிகளில் காணாமல் போய்விடும் இளையோரை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நகரத்திற்குத் தங்கள் மகனையோ, மகளையோ அனுப்பிவிட்டு, பின்னர் அவர்களை நகரம் என்ற காட்டில் தொலைத்துவிட்டுத் தவிக்கும் பெற்றோரையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். பல வழிகளில் தங்களையேத் தொலைத்துவிட்டு தவிக்கும் இளையோரும் பெற்றோரும் தங்கள் குடும்ப உறவுகளில் மீண்டும் தங்களையேக் கண்டுகொள்ள வேண்டும் என திருக்குடும்பத்தின் இயேசு, மரியா, யோசேப்பு வழியாக இறைவனை இறைஞ்சுவோம்.
திருக்குடும்ப பெருவிழா
முதல் வாசகப் பின்னணி (சீராக் 3:3-7,14-17)
கி.மு. 180-இல் ஞானத்தைப் புகழ்ந்து எழுதியவர் சீராக். மக்கள் ஒரு குலமாக ஒற்றுமையுடன் வாழ்வது சவாலாக கருதப்- படும் நிலையில், குடும்பத்தில் உள்ள அங்கத்தினர்களின் கடமைகளை பற்றி இன்றைய முதல் வாசகத்தில் ஆசிரியர் பேசுகிறார். கடவுள் பயம் ஞானத்தின் தொடக்கம் (சீராக் 1:1-14). கடவுளுக்கு அஞ்சுபவன் பெற்றோரைப் போற்றி வாழ்வான் என்ற கருத்து, வி.ப. 20:12-இல் வரும் "உன் தந்தையையும் தாயையும் மதித்து நட" என்ற 4-ஆம் கட்டளையை விளக்கும் வண்ணமாக அமைகிறது. இரண்டாம் வாசகப் பின்னணி (கொலோ.3:12-21) கிறிஸ்து எல்லாவற்றிலும் எல்லாமுமாய் இருக்கிறார் என்று கிறிஸ்துவை மையப்படுத்தி தூய பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதமிது. கிறிஸ்துவோடு இணைந்து வாழும் குடும்பம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவைப் பின்பற்றிக் கடவுளைப் போற்றிப் புகழ அழைப்பதோடு கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்களது உள்ளங்களை ஆளட்டும் என்று வாழ்த்துச் சொல்கிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 2:13-15,19-23)
மத்தேயு 1:1-2:23 நற்செய்தியின் இப்பகுதி இயேசுவின் பிறப்பு மற்றும் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளை உள்ளடக்கியுள்ளது. இந்நற்செய்தி வாசகம், குழந்தை இயேசுவின் வாழ்க்கையில் ஒன்றன்- பின் ஒன்றாக வந்த ஆபத்துக்களைப்பற்றியும் அதனால் யோசேப்பும் மரியாவும் அனுபவித்த இன்னல்கள் பற்றியும் எடுத்துரைக்கிறது. நற்செய்தியாளர் இப்பகுதியில் யோசேப்புவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். யோசேப்பு எப்படி இறைவார்த்தைப்படி மரியாளையும் குழந்தை இயேசுவையும் வழிநடத்துகிறார் என்பதை நற்செய்தி விளக்குகிறது.
மறையுரை
அது ஒரு அளவான குடும்பம். அழகான குடும்பம். அன்பு மயமான குடும்பம். இறைவார்த்தையை வாழ்வாக்கிய குடும்பம். அதுதான் இயேசு, மரியா, யோசேப்பு குடும்பம். நாம் இன்று கொண்டாடும் திருக்குடும்பம். நதியைத் தேடும் கடலாக மனிதனைத் தேடிவந்த இயேசுவின் குடும்பம் நவீன குடும்பங்களின் கலங்கரை விளக்கம். துன்பத்தில் துடிக்கின்ற, வறுமையில் வாடுகின்ற, சந்தேகத்தில் சாகின்ற, அலைகடலில் அலைக்கழிக்கப்படுகின்ற இன்றைய குடும்பங்கள் கரைசேர முன்னோடியாக விளங்கும் நாசரேத்தூர் குடும்பம் ஒரு கலங்கரை விளக்கமே. அக்குடும்பம் இறைவார்த்தையின்படி வாழ்ந்த குடும்பம். அக்குடும்பத்திலிருந்து நாம் கற்க வேண்டியவை ஏராளம்.
அன்னை மரியாள்
மரியாளிடம் சிறந்து விளங்கிய குணங்கள் 2: இறைவார்த்தைக்கு கீழ்படிதல் மற்றும் தேவையில் இருப்போருக்கு உதவுதல். கபிரியேல் தூதர் கன்னிமரியாளிடம் இயேசுவின் பிறப்பைப்பற்றி முன்னறிவித்தபோது, தனது தயக்கத்தை துவக்கத்தில் வெளிப்படுத்தினாலும் பிறகு “இதோ ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 2:38) என்று சொல்லி இறைவனது சொல்லுக்கு அடிபணிந்தாள். அது முதற்கொண்டு இறை திருவுளத்திற்கு தன்னையே அர்பணித்ததோடு மட்டுமல்லாமல், கணவர் யோசேப்போடு அனுசரித்து வாழ்ந்தார். தூய பவுல் ஆண்டவருக்கு அடிபணிபவரைப் பற்றி உரோமையர் 6:16-இல் ‘நீங்கள் கடவுளுக்குக் கீழ்படிந்தால் அவருக்கு ஏற்புடையவர் ஆவீர்கள்' என்று மொழிகின்-றார்.
உதவும் கரங்கள்
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்', என்ற வள்ளளாரின் வாக்கிற்கிணங்க அன்னையவள் எலிசபெத்து முதிர்ந்த வயதில் 6 மாத கர்பிணியாயிருப்பதை வானதூதர் வழி அறிந்தவுடன் தமது உதவி தேவைப்படுமே என்பதை உணர்ந்து விரைந்து சென்று உதவினார். தேவையில் இருப்போருக்கு உதவும்போது, கடவுளின் உதவி உங்களுக்கு உண்டு என்பதற்கேற்ப கானாவூர் கல்யாணத்தில் திராட்சை ரசம் தீர்ந்ததை அறிந்த மரியாள், தம் திருமகனிடம் குறையைத் தீர்க்குமாறு பரிந்து பேசுகிறாள்.
அன்னையின் வாழ்வில் உதவுதல் என்ற வார்த்தையை சிந்திக்கும்போது, 'மற்றவர்களை மகிழ்விக்க விரும்பினால் அவர்களுக்கு உதவி செய். நீவிர் மகிழ விரும்பினால் பிரதிபலன் பாராமல் உதவி செய்யுங்கள்' என்ற ஒரு செய்தியை நமக்கு அளிக்கிறது.
யோசேப்பு
யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத் தந்தை. கனவுகளின் வழியாக இறைதிருவுளத்தை உணர்ந்து செயல்பட்டவர். பழைய ஏற்பாட்டில் யாக்கோபின் மகன் யோசேப்பும் கனவு கண்டார். அவருடைய கனவுகளும் விளக்கங்களும் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தந்தன. எகிப்து தேசத்தின் ஆளுநராக்கியது. ஆனால் புதிய ஏற்பாட்டில் வரும் யோசேப்பு தங்கமான மனசுக்காரர். ஆனால் தங்கமோ வெள்ளியோ அவரிடமில்லை. சாதாரண தச்சராக வேலை பார்த்தார். இவரது கனவுகள் சோதனைக் கனவுகள், தியாகக் கனவுகள். எருசலேமுக்கும் எகிப்துக்கும் இடையே அலைய வைத்த, மீட்புப் பாதையில் பயணிக்க வைத்த கனவுகள்.
மரியாளுடன் மண ஒப்பந்தம் ஆனவுடன் மரியாள் கருவுற்றிருப்பதைக் கண்டவர், இருதலைக் கொல்லியாகத் தவித்தார். ஒரு புறம் கன்னி மரியாளின் வாழ்க்கை, மறுபக்கம் தவறு செய்யாத தன் மீது வரவிருந்த அவப் பெயர். இத்தகைய குழப்ப நிலையிலும் கனவில் வந்த வான தூதரின் விளக்கத்தைக் கேட்டு மரியாளை மனைவியாக ஏற்றுக் கொண்டார். இவ்வாறு இறைவார்த்தையை தனது வாழ்வாக்கினார் (மத்தேயு 1:18-25).
இன்றைய நற்செய்தி பகுதியில் (மத்தேயு 2:13-15,19-23) யோசேப்பின் பெயர் நான்கு முறை வருகிறது. வேறு எந்தப் பெயரும் வரவில்லை. மத்தேயு 2:13-இல் வான தூதரின் அறிவுரையைக் கனவில் கண்ட சூசை எகிப்துக்கு பயணமானார். அங்கு அறிமுகமற்ற நாட்டில், புதுவித மக்களோடு மரியாளையும் குழந்தை இயேசுவையும் பேணி காக்க இன்னல் பல பட்டிருக்க வேண்டும். மீண்டும் வானதூதர் வழியாக ஆண்டவரது வார்த்தையைப் பெற்றவர் (மத்தேயு 2:20) தாய் நாடு திரும்பியவர் கலிலேயப் பகுதியான நாசரேத்தூரில் குடியமர்ந்தார். இவ்வாறு இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளில் இறைவார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தாரென வாசிக்கிறோம்.
உழைப்பாளி யோசேப்பு
6 நாள் நீ உன் வேலையைச் செய்வாய் (வி.ப. 23:12) என்ற விவிலிய வார்த்தைகளுக்கிணங்க யோசேப்பு தச்சு வேலை செய்து வந்தார். தச்சு வேலைக்குக் கலை நுணுக்கமும் கடின உழைப்பும் தேவை. உழைப்பின்றி உயர்வில்லை. "உழைக்க மறுப்பவன் உண்ணலாகாது" (2தெச. 3:10). உழைப்பு என்பது உயர்வானது. உழைப்பு உலகை வாழ வைக்கிறது. உழைப்பாளி கடவுளின் படைப்பு திட்டத்தில் பங்கேற்கின்றார். "கடின உழைப்பையும் உழவுத் தொழிலையும் வெறுக்காதே, இவை உன்னதக் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை” (சீரா. 7:15) என்ற வார்த்தைகள் உழைப்பை உயர்த்தி பிடிக்கின்றன. நம் குடும்பத்தில் தந்தை தியாக உள்ளத்தோடு உழைத்துக் குடும்பத்தை உயர்த்த வேண்டும் என நமக்கு அறிவுறுத்துகிறது.
நகரில் வாகனங்களின் புகை மண்டலத்தையே கண்டு வெறுத்துப்போன நகர வாசி, கிராமத்துப் பக்கம் சென்றவர் பசுமையான வயல் வெளியைக் கண்டு, உடலோடு உரசிச் சென்ற தென்றலை உணர்ந்து மகிழ்ந்தார். சற்று தூரத்தில் சேற்றில் நாற்று நடும் பெண்களைக் கண்டவுடன் முகத்தில் மாற்றம். இதென்ன இப்படியிருக்கிறது? இதில் கையை வைத்து எப்படி வேலை செய்கின்றனர்? எனச் சலித்துக் கொண்டார். பக்கத்திலிருந்த பெரியவர், தம்பி, நாங்க சேத்துல கைய வைக்கலென்னா, நீங்கச் சோத்துல கைய வைக்க முடியாது என்றார். இது உழைப்பின் உயர்வை உணர்த்தும் உன்னத வரிகள். தச்சு வேலை செய்த சூசை உழைப்பாளிகளின் பாதுகாவலராகத் திகழ்கின்றார். அவரைப் பின்பற்றி நாமும் உழைத்துக் கடவுளின் படைப்பு வேளையில் பங்கெடுப்போம்.
இயேசு
இன்றைய முதல் வாசகத்தில் ஆசிரியர், பெற்றோர் மட்டில் குழந்தைகளின் கடமைகளைப் பற்றிக் கூறுகிறார். பெற்றோருக்கு கீழ்படிவதோடு அவர்களை மதித்து வாழ வேண்டுமென்பது அவரது அறிவுரை. பத்துக்கட்டளைகளில் நான்காம் கட்டளை: "உன் தந்தையையும் தாயையும் மதித்து நட" என்றுரைக்கிறது (வி.ப. 20:12). இந்த இறை வார்த்தைகளுக்கிணங்க, "இயேசு தம் பெற்றோருக்கு பணிந்து நடந்தார்" என்று வாசிக்கிறோம் (லூக்கா 2:51). இரண்டாம் வாசகம் கொலோசையர்களை பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்- தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய நற்பண்புகளால் அணி செய்து கொள்ள அழைக்கிறது. இப்பண்புகள் குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும், மற்றவர்களோடும் நல்லுறவை வளர்க்கப் பயன்படும்.
இன்றைய குடும்பங்கள் பெரும்பான்மையாக திருக்குடும்பங்களாக மாறப் பெருமளவு தயங்குகின்றன. உறவு முறைகளில் பிளவுகள், ஒருவர் மற்றவருக்கு அந்நியராக இருக்கும் நிலை குடும்ப பிணைப்பைக் கேவலப்படுத்துகிறது. ஒரு தாயின் பிள்ளைகளான அண்ணன் தம்பியரிடையே ஏற்படும் சண்டைச் சச்சரவுகள் வெட்டு, குத்து என்று போய்க் கொலையில் முடிவடைகின்றன. கணவன் மனைவி இடையே இருக்க வேண்டிய நம்பிக்கை அவ- நம்பிக்கையாக உரு எடுக்கின்றது. பெற்றோர், பிள்ளைகள் மத்தியில் இருக்க வேண்டிய தூய்மையான உறவு போலியாகப் போகிறது. பலவிதமான முன்னேற்றங்களைக் குறித்து கவலைப்படும் நாம், குடும்ப உறவு முறைகளைக் காக்கவும் கடமைப்பட்டுள்ளோம். "ஒரு சிலர்தான் உலக வளர்ச்சிக்காகச் சிறப்பான காரியங்களை செய்து முடிக்கின்றனர். ஆனால் எல்லோரும் செய்ய வேண்டிய கடமை இருக்குமென்றால் அது அவர்களது குடும்ப உறவுகளின் நிலையை உயரச் செய்வது தான்" என்பது அறிஞர் ஜார்ஜ் எலியட் கூறும் கருத்து. இயேசு, மரியா, யோசேப்புவின் குடும்பத்தை நவீன உலகில் மறுபிறவி எடுக்கச் செய்வோம். நமது குடும்பங்கள் இறை வார்த்தையின்படி வாழ்ந்து திருக்குடும்பத்திற்கு சான்று பகரட்டும்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
🕇 குடும்ப உறவே சமூக உறவுக்கு அடித்தளம். முதற்குடும்பத்தை இறைவன் படைப்பு நிகழ்வில் உருவாக்குகிறார். அது இறைத் திருவுளம்.
🕇 திருக்குடும்பத்தின் இன்னலான தருணங்கள் அவநம்பிக்கையை அல்ல மாறாகப் புது நம்பிக்கையை நமக்களிக்கின்றன. இறை- வல்லமையில் நம்பிக்கை வைத்து வென்ற திருக்குடும்பம் நமக்கு ஒரு முன் மாதிரி.
🕇 திருச்சபை மீட்புத் திட்டத்தில் ஒரு பெருங்குடும்பமாக திகழ்- கிறது.
திருக்குடும்ப விழா
சீஞா 3:2-7, 12-14 அக்கொலோ 3:12-21 மத் 2:13-15, 19-23
இன்று திருச்சபை திருக்குடும்பத்திருவிழாவை கொண்டாடுகின்றது. இன்றைய இறைவாக்குகள் எல்லாம் குடும்பத்தைச் சுற்றி சுழல்கின்றன. முதல் வாசகம் தந்தையையும், தாயையும் மேன்மைபடுத்துவது பற்றியும், முதுமையில் அவர்களுக்கு உதவுவது, பரிவு காட்டுவது பற்றியும் பேசுகின்றது. இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கிறிஸ்தவ நற்பண்புகளை எப்படிக் கைக்கொள்வது என்பது பற்றி விவரித்துத் திருமணமான ஆண்களும், பெண்களும் கணவன் மனைவியாக எப்படி ஒழுக வேண்டும் என்றும் பெற்றோர்- பிள்ளை உறவு எப்படி இருக்க வேண்டும் என்றும் விளக்குகின்றார். நற்செய்தியில் இப்பண்புகளையெல்லாம் கொண்டு நாசரேத்துத் திருக்குடும்பம் எப்படி வாழ்ந்தது என மத்தேயு நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றார். இனி நற்செய்தி தரும் கருத்துக்களை விளக்க முயல்வோம்.
பின்னணியும் அமைப்பும்
மத்தேயு நற்செய்தியின் முதல் இரு அதிகாரங்கள் இயேசுவின் பிறப்பு மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளை விவரிக்கின்றன. அவற்றுள் முதல் அதிகாரம் இயேசு யார்? எனும் வினாவிற்கு விடை காணுகின்றது. இரண்டாம் அதிகாரம் எங்கே? அல்லது எங்கிருந்து? எனும் வினாக்களுக்கு விடை தேடுகின்றது. எனவே இரண்டாம் அதிகாரத்தை ஞானியர் வருகை (வச1- 12), எகிப்துக்கு ஓடிப்போதல் (வச.13-15), மழலையர் கொலை செய்யப்படல் (வச.16-18), எகிப்திலிருந்து திரும்புதல் (19-23) என வழக்கமாகப் பிரித்தாலும் இடங்களை முதன்மைப்படுத்தி எருசலேம் (வச 1-6), பெத்லகேம் (வச.7-12), எகிப்து (வச.13-15), பெத்லகேம், ராமா (வச.16-18), எகிப்து மற்றும் நாசரேத்து (வச.19-23) எனப் பிரிப்பதும் சரியாக அமையும். இறுதி மூன்று பகுதிகளும் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு முழுவதும் இவ்வாறு பிரிப்பதற்கு காரணமாய் அமைகின்றன.
இயேசுவின் பிறப்பும் மோசேயின் பிறப்பும்
இயேசுவின் பிறப்பைப் பற்றிய நிகழ்வுகளை மத்தேயுவின் விவரிப்பின்படி வாசிக்கும்போது, அவற்றுள் பல மோசேயின் பிறப்பைச் சூழ்ந்து நிகழ்ந்த பல நிகழ்வுகளை நமக்கு நினைவூட்டுகின்றன. மோசே நிகழ்வுகள் நமக்கு இயேசுவின் பிறப்பு நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளவும், அவற்றின் ஆழமான பொருளைச் சுவைக்கவும் நமக்கு உதவுகின்றன. எனவே மோசே- இயேசு பிறப்பிற்கு இடையேயுள்ள ஒருசில ஒற்றுமைகளை இங்கு பட்டியலிட விரும்புகின்றேன்.
1. எகிப்தின் கொடுங்கோல் மன்னன் பார்வோன் மோசேவையும், பிறக்கும் ஆண்மகவுகளையும் கொன்றுவிடவும், நைல் நதியில் எறிந்துவிடவும் ஆணையிட்டான் (விப 1:16,22). கொடுங்கோலன் ஏரோதுவும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றழிக்கின்றான் (வச. 16-18)
2. பார்வோனின் மகளின் செயலால் மோசே அற்புதமான விதத்தில் காப்பாற்றப் படுகின்றார்(காண்.விப 2:1-10). ஆண்டவருடைய தூதரின் செயல்பட்டால் குழந்தை இயேசு காப்பாற்றப்படுகின்றார்.
3. எகிப்தியனைக் கொன்றதால் தான் தண்டிக்கப்படுவோம் எனப் பயந்து இளைஞர் மோசே மிதியான் நாட்டுக்குத் தப்பி ஒடி உயிர்பிழைக்கின்றார் (காண். விப 2:15). திருக்குடும்பமும் எகிப்துக்குத் தப்பியோடி உயிர்பிழைக்கின்றது (வச.14)
4. பார்வோன் மன்னனின் இறப்புக்குப் பின் (காண். விப 2: 23), எகிப்திற்குத் திரும்பிப் போ; ஏனெனில் உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் எல்லாரும் இறந்து விட்டனர்" (விப 4:19) என்று கூறி கடவுள் மோசேவை மிதியான் நாட்டிலிருந்து எகிப்திற்கு கொணர்கின்றார். "ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்” (வச.20) என்று கூறி ஆண்டவருடையத்தூதர் இயேசுவையும் திருக்குடும்பத்தையும் எகிப்திலிருந்து இஸ்ரயேல் நாட்டுக்குக் கொண்டுவருகின்றார். எனவே கொடுங்கோல் மன்னனின் கட்டளை, மாசற்ற குழந்தைகளின் இறப்பு, வேற்று நாட்டுக்கு ஓடிப்போதல், கொடுங்கோல் அரசனின் இறப்புக்குப் பின் நாடு திரும்புதல் ஆகியவற்றில் மோசே - இயேசு நிகழ்வுகள் ஒத்துப் போகின்றன. இதனால் இயேசு புது மோசே, இரண்டாம் மோசே, மீட்பர் ஆகிய கருத்துக்கள் நிறுவப்படுகின்றன. அதோடு குடும்பங்களின் சோதனை நேரங்களில் கடவுள் உடன் இருந்து காப்பாற்றுவர், வழிநடத்துவர் எனும் நம்பிக்கைச் செய்தியையும் அளிக்கின்றன.
இயேசுவின் பிறப்பில் அவரின் இறப்பின் அடையாளம்
ஒருபுறம் இயேசுவின் பிறப்பைப் பற்றிப் பேசும்போது பின்னோக்கி அது மோசேவைப் பற்றி நினைவூட்டுகின்ற அதேவேளையில், அது முன்னோக்கி இயேசுவின் இறப்பைப் பற்றிய அடையாளங்களையும் ஆங்காங்கே தெளித்து வைத்திருக்கின்றது என்பது நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றது. அத்தகைய அடையாளங்கள் சிலவற்றை இங்குக் காண்போம்.
1. 'யூதர்களின் அரசர்' (வச.2) எனும் சொல்லாடல் இங்கும் இயேசுவின் பாடுகளின் போதும் (காண் மத் 27:11,29,37) பேசப்படுகின்றது.
2. யூதர்களின் அரசர்பற்றிய பேச்சு அரசனுக்கும் எருசலேமுக்கும் கலக்கத்தை உண்டாக்குகின்றது (வச.3).
3. எல்லாத் தலைமை குருக்களும், மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூடி விவாதிக்கின்றனர்.(வச.4)
4. ஞானியர் வருகை பிற இனத்தார் இயேசுவை ஏற்றுக் கொண்டதை குறித்தால், இயேசு நற்செய்தியை பிற இனத்தார்க்கு அறிவிக்க கட்டளையிடுகின்றார் (காண். மத் 28:19)
5. ஞானியர் 'நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து வணங்கியது' (வச.11) நமக்குச் சீடர்கள் இயேசுவை பணிந்ததை நமக்கு நினைவூட்டுகின்றது (காண். மத் 28:17).இவ்வாறு இயேசுவின் இறப்பு இயேசுவின் பிறப்பு முதலே தொட்டுத் தொடர்ந்து வருகின்றது. இயேசுவின் பிறப்பு அவரது மீட்பளிக்கும் இறப்பிலே நிறைவடைகின்றது. பேராயர் புல்டன்ஷீன் கூறுவது போல எல்லா மனிதரும் வாழ்வதற்காகப் பிறக்கின்றனர். இயேசு ஒருவர் மட்டுமே இறப்பதற்காக பிறந்தார்.
திருக்குடும்ப விழா முதல் ஆண்டு
முதல் வாசகம் : சீஞா 3:2-6:12-14
"சீராக் மகன் இயேசு” இந்நூலை எழுதியதாகக் குறிப்பு உள்ளது (50:27). ஏறத்தாழ கி.மு. 200-இல் இவர் வாழ்ந்திருக்கலாம். பழமொழி மரபிலே இறை ஞானத்தைப் புகட்டும் இவரது நூல் பல கருத்துக்களைக் கொண்டது. மனம் திரும்புதல், இறைச்சட்டம், சமூக உறவு, நல்லாட்சி, மனிதனின் தன்மை, பாவம், சாவு, தெய்வபயம், முன்னோர் வாழ்த்து முதலியன இவருடைய நூலில் வரும் ஒரு சில முக்கிய கருத்துகளாகும்.
பெற்றோருக்குப் பணிந்து நடத்தல்
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற தமிழ் மரபு “தந்தை தாய்ப் பேண்" என்றும் கட்டளை இடுகிறது. திருக்குடும்பத் திருநாளாகிய இன்று, பெற்றோர்-பிள்ளைகள் உறவுபற்றி விவிலியம் கூறுவது காணத்தக்கது. இறைவன் சீனாய் மலையில் தம் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் கட்டளைகளில் ஒன்றாக, “உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ் நாள்கள் நீடிக்கும்படி உன் தந்தையையும் தாயையும் மதித்து நட" (விய 20: 12, இச 5: 16) என்கிறார். இயேசுவின் பாலப் பருவத்தைப் பற்றிக் கூறவரும் லூக்கா, "அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்” (லூக் 2:51) என்று கூறுகிறார். "பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்" (எபே 6 : 1, கொலோ 3: 20) என்பது பவுல் அடிகளின் அறிவுரை. இன்றைய வாசகமும் இதே கருத்தை வலியுறுத்துகிறது. "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை."
பெற்றோரைப் பேணல்
தாய் தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக் கொள்கின்றனர் (சீஞா 3: 3). மீட்பருடைய முக்கியமான வழி பாவங்களை விலக்குவதும், பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதுமாகும் (3:4). சிறப்பாக, தாய் தந்தையருக்கு எதிராகச் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதும் அவற்றை விலக்கி நடப்பதும் மீட்படைய இன்றியமையாதன. ஏனெனில் தாய் தந்தையர் நம் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு பக்தி முதலியவற்றில் முக்கிய இடம் பெறுகின்றனர். நம்மைத் தாலாட்டி, பாலூட்டி, சீராட்டி வளர்த்தவர்கள் அவர்களே. அவர்களின்றி நாம் கிடையாது. அவர்களுடைய பக்தி, உழைப்பு, கவனம், கரிசனையின்றி நாம் நம்முடைய இன்றைய நிலையை அடைந்திருக்க மாட்டோம் என்பதை உணர்ந்து, அவர்களுக்குச் சீரும் சிறப்பும் செய்தல் நம் கடன். "மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" என்பது வள்ளுவர் வாக்கு (70). நாம் இறைவனுக்குப் பிரியப்பட்டவர்களாய் வாழ வேண்டுமாயின், நம்முடைய வேண்டுதல்கள் பலனளிக்க வேண்டுமாயின் (3: 4) நம் தாய் தந்தையரைப் பேணி நடக்க வேண்டும். முக்கியமாக அவர்களுடைய தள்ளாத பருவத்திலே நம்முடைய கடமை அவர்கள்பால் சிறப்புற்றிருக்க வேண்டும். யோசேப்புக்கும் மரியாவுக்கும் கீழ்ப்படிந்திருந்த இயேசு இக்கடமையை நமக்கும் உணர்த்துவாராக.
பெற்றோர் கடமை
தாய் தந்தையருக்கும் பிள்ளைகள்பால் கடமைகள் உண்டு. பெற்றுவிட்டதெல்லாம் பிள்ளையாகாது. பெறுவது எளிது, பெற்றதைப் பொறுப்புடன் வளர்ப்பது அரிது. "தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போல சேலை” என்பர். "அப்பன் எப்படி, மகனும் அப்படியே” என்பது வழக்கு. எனவே பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டிப் பிள்ளைகளை வளர்ப்பதோடு நில்லாது, படிப்பு, பக்தி, ஒழுக்கம், கடமை, அன்பு இவற்றிலே தாங்களும் வளர்ந்து, தங்கள் பிள்ளைகளையும் வளர்த்தல் இன்றியமையாக் கடன். “அப்பன் ஆட்டைக் கடித்தான், மகன் மாட்டைக் கடித்தான்” என்ற நிலையை அகற்றி, தாய் தந்தையர் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துக் காட்டுகளாகவும் முன்னோடிகளாகவும் வாழ்தல் வேண்டும். யோசேப்பும் மரியாவும் என்ன முறையிலே குழந்தை இயேசுவை அன்பிலும் பண்பிலும் பக்தியிலும் வளர்த்திருப்பார்கள் (லூக் 2:21-52) என்பதை உணர்ந்து, அந்தத் திருக்குடும்பத்தின் மாதிரிகையைப் பின்பற்றுவோமாக!
தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்.
இரண்டாம் வாசகம் ; கொலோ 3:12-21
கொலோசேயருக்கு எழுதிய திருமடலின் இறுதிப் பகுதியிலே புனித பவுல் மக்களுக்குப் பல பொது அறிவுரைகள் வழங்குகிறார். கிறிஸ்துவ வாழ்வுக்கு, குடும்ப நலனுக்குரிய அவை நமது குடும்ப வாழ்வையும் கிறிஸ்துவ வாழ்வையும் பண்படுத்த மிகவும் இன்றியமையாதன என்பதை உணர்ந்து, குடும்பங்களுக்கெல்லாம் முன்னோடியும் மாதிரிகையுமான திருக்குடும்பத்திடம் வேண்டிக்கொள்வோம்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
ஒவ்வொரு குடும்பமும் நற்குடும்பமாய் வாழ அடிப்படைக் கடமைகள் சிலவற்றை எல்லோரும் நிறைவேற்ற வேண்டும் (கொலோ 3: 18-21, எபே 5: 25-32, 6:1-4; 1 பேது 3:1-4 முதலியன). இவ்வடிப்படைக் கடமைகளை யெல்லாம் இணைத்து வைப்பது அன்பு (கொலோ 3:14). ஆம் கணவன், மனைவி, பிள்ளைகள் அனைவரிடத்திலும் அன்பு முதலிடம் பெற்றால், அனைத்தும் அக்குடும்பத்திற்கு அமைந்துவிட்டதாகக் கொள்ளலாம். "தான்" "தனது" என்பதை மறந்து, மறுத்த நிலையிலே "அவர்", "அவரது" என்பது ஒவ்வொருவர் மனத்திலும் செயலிலும் முக்கியத்துவம் பெறும்போது "ஒருவர் ஒருவரிடமிருந்து எதைப் பெறுவோம்" என்னும் "சுயபற்று” தலையெடுக்காது. மாறாக, “ஒருவர் ஒருவருக்கு எதைக் கொடுப்போம்" என்னும் திறந்த உள்ளம் உருவாகும். இதுவே நற்குடும்ப வாழ்வுக்கு அடிப்படை. இதுவே "ஆண்டவருக்குள் வாழும் முறை" (3:18), "ஆண்டவருக்கு உகந்தது" (3:20). இவ்வுரைகல்லிலே நமது குடும்ப வாழ்வைச் சோதித்துப் பார்த்துச் சீர்திருத்த முயல்வோம். திருக்குடும்பம் துணை நிற்க வேண்டுவோம்.
கூடிச் செபிக்கும் குடும்பம் ஒருமனப்பட்டு வாழும் குடும்பமாகும்
குடும்பத்தினர் இணைந்து இறைவன்முன் வருவதற்கு மிக உதவுவது இறை வார்த்தையான விவிலியம். எனவேதான் கிறிஸ்துவின் வார்த்தையைத் தினமும் கேட்க வேண்டும். வார்த்தையைக் கேட்கும் போதுதான், அவ்வார்த்தைவழி நடக்கத் தூண்டும். நல்ல வார்த்தைகள் நம் வாயிலிருந்து வெளிப்படும் (எபே 4 : 29); நல்ல வாழ்வு நம் குடும்பங்களிலே மலரும். வேத வாசகங்களும் திருப்பாடல்களும் நமது குடும்ப செபங்களிலே முக்கிய இடம் பெறுகின்றனவா? (எபே 5 : 19-20) "மறைநூலை அறியாதிருப்பது கிறிஸ்துவை அறியாதிருப்பதாகும் "என்கிறார் புனித எரோணிமுசு.
குடும்ப செபங்களிலே செய்நன்றிக்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும் (3:16-17, எபே 5:19-20). "செய்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை" என்பார் வள்ளுவர். நம் அன்றாட வாழ்க்கையிலே இறைவன் நமக்கும் நம் குடும்பத்துக்கும், ஊருக்கும் உலகுக்கும் செய்துவரும் அனைத்து நன்மைகளுக்கும் நன்றியுள்ளம் படைத்தவர்களாக வாழ வேண்டும்.
சமாதானமுள்ள குடும்பம் பேறுபெற்ற குடும்பம்
இறைவன் அளிக்கும் சமாதானத்தைப் (லூக் 2:14) பெற்று, அவரோடு தூய்மையான வாழ்வுவழி இணைந்து, அவரின் பிள்ளைகளாகிய பிறரோடும் ஒன்றுபட்டு, “எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம்" என்ற முறையில் வாழ்வதே கடவுளின் பிள்ளைகளுக்கு ஏற்ற வாழ்வு (மத் 5:9). உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றே (1கொரி 12:12, உரோ 12:4-5) என்பதை மனத்திலிறுத்தி, சமாதான வாழ்வுக்காக எதையும் விட்டுக் கொடுக்க, எத்துணைத் தியாகமும் செய்யத் தயாராயிருப்போம். அப்போது "அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்" ( பிலி 4 :7).
கிறிஸ்துவின் வார்த்தை நிறை வளத்தோடு உங்களுள் குடிகொள்வதாக.
நற்செய்தி: மத் 2:13-15, 19-23
கிறிஸ்துமஸ் காலத்தில் நாம் அனைவரும் மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடக்கும் குழந்தையையும் காண்கிறோம். அமைதியில் மட்டுமன்று, அவதியில் ஒருங்கிணைந்திருக்கும் திருக்குடும்பத்தை, நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக இன்றைய நற்செய்தி நம்முன் வைக்கிறது.
ஆண்டவர் திட்டத்திற்குப் பணிதல்
கொடுங்கோலன் பெரிய ஏரோது "யூதரின் அரசன்” என ஞானிகள் அழைத்த அக்குழந்தையைத் தொலைக்கத் தேடுகிறான் (2:13). கடவுளோ தமது திட்டப்படி, தேவ பாலகனைப் பாதுகாக்கிறார். ஆனால் மற்ற மாசற்ற குழந்தைகள் கொலையுறாவண்ணம் செய்கிறார் அல்லர். கனவிலே தூதன் வழி முன்எச்சரிக்கை விடுக்கிறார்; ஆனால் குழந்தையோடு எகிப்துக்கு உடனே ஓடும் பொறுப்பை யோசேப்பு மரியாவிடம் விட்டுவிடுகிறார். "ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்?" அவருக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர் யார்?” (உரோ 11:34, சாஞா 9:13).
அதுவும் ஆபத்துக் காலங்களில் முன்பு யூதர்கள், பின்பு கிறிஸ்தவர்கள், அதற்குப் பின் கிறிஸ்தவ எதிரிகள் எனும் பலரும் ஓடி ஒழியும் இந்த எகிப்து என்ன அருகிலா உள்ளது? 300 கல் தூரம்; 10-12 நாள் பயணம். பாதையும் பாலைவனத்தூடேதான். ஆனால் குடும்பத் தலைவரான யோசேப்பு, செய்தி அறிந்ததும் எழுந்து சேயையும் தாயையும் இரவிலேயே கூட்டிக்கொண்டு எகிப்துக்கு விரைகிறார். மரியாவும் எவ்விதக் கேள்வியோ முறைப்பாடோ இன்றி, உடனே தேவ திருவுளத்துக்குப் பணிகிறார். "பணிவார் பிணி தீர்த்தருளும்” இறைவனும் அவர்களுக்கு உதவுகிறார்.
ஆண்டவரின் பாதுகாப்பு
எகிப்துக்குச் சென்றவர்களைச் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சொந்த நாட்டுக்குக் திரும்பும்படி அழைக்கிறார் இறைவன். அவர்களும் இஸ்ரயேல் நாட்டுக்கு வருகின்றனர். பெத்லகேமிற்கு அல்ல; நாசரேத்துக்கு மீண்டும் போய் வாழ்க்கை நடத்துகின்றனர். இவ்வாறு தம்மை நம்புவோரைக் கடவுள் பல நேரங்களில் புரியாத முறையில் கடுமையாகச் சோதிக்கிறார். ஆனால் அதே வேளையில் சிறந்த முறையில் பாதுகாக்கின்றார் (2 அர 2: 9, யாக் 1: 12-15). இதைக் திருக்குடும்பம் நம்புகின்றது. நம்பும்படி நம்மையும் அழைக்கின்றது.
எகிப்துக்குப் போவது, அங்கிருந்து திரும்புவது எனும் இவ்விரு நிகழ்ச்சிகளையும் மத்தேயு யோசேப்பை முன்னணியில் வைத்து, பழைய ஏற்பாட்டு வசனங்களோடு விளக்குகிறார் (தொநூ 46:3, ஒசே 14:2). "இவ்வாறு நாசரேயன் எனப்படுவார்" எனும் இறைவாக்கு நிறைவேற வேண்டியிருந்தது(2:23) என்பதின் பொருள் முற்றும் தெளிவாக இல்லை. மரியோடும் யோசேப்போடும் இயேசு இறைவனது திட்டப்படி வாழ்கிறார். எனவே சாம்சனைப் போல "நாசரேயன்" ஆகிறார் (நீத 13: 5, 7) என்பதையோ, அல்லது எசாயா குறிப்பிடும் ஈசாப்பு தண்டின் “நேசர்” ஆக, அதாவது கிளையாக (எசா 11 1) வாக்குத்தத்தம் பெற்ற அருள்பொழிவு அரசராக இயேசு வருகிறார் என்பதையோ இவ்வசனம் குறிக்கலாம். "நாசரேத்தூரான்” என்பதையும் சுட்டலாம்.
ஆண்டவருடன் ஒத்துழைப்பு
நல்ல குடும்பங்களிலும், அவர்களின் கட்டுப்பாட்டுக்கு மீறிய வெளிக் காரணங்களால், ஏரோது போன்ற தீய சக்திகளால், பல வேளைகளில் துயர் தொல்லைகள், இடர் கலக்கங்கள் எழலாம். மிகப் புனிதமான, மிகப் பிரிய திருக்குடும்பத்திடம் இறைவன் கேட்டது போல், நம்மிடமும் நம்மால் முடிந்ததைச் செய்தபின், தேவ திருவுளத்துக்குப் பணியும்படி கேட்கலாம். எனவே, நமக்கு வரும் துன்ப துயரங்களை, நம் மீட்புக்காகவும், பிறர் மீட்புக்காகவும் திருக்குடும்பத்தைப் போல் ஏற்று, அமைதியோடு, இறைவனுடன் ஒத்துழைப்போமாக. யோசேப்பு மரியாவோடு இருந்த அதே அமைதியின் அண்ணல் இயேசு, இன்றும் நம்மோடு இருக்கிறார் அன்றோ? "யாவர்கோன் என்னையும் வந்தாண்டு கொண்டான்; யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம்" (திருவாசகம்) என்பது நமது விருது வாக்காய் அமையட்டும்.
எழுந்து பிள்ளையையும் தாயையும் இரவிலே கூட்டிக்கொண்டு எகிப்துக்குச் சென்றார்.