
தொடக்கம் ஒரு தாய் தன் செல்ல மகனை மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தாள். அவன் வயதிலும், அறிவிலும் வளர, வளரத் தன் தாயின் அரவணைப்பில் இருந்து விலகி வாழ ஆரம்பித்தான். காரணம், அவன் தாயின் கைகளில் இருந்த வெண்ணிறத் தழும்புகள். அந்த வெண்ணிறத் தழும்புகளைப் பார்க்க அவனுக்கு அருவருப்பாக இருந்தது.
ஒருநாள்! ஏன் இந்த வெண்ணிறத் தழும்புகள் என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்ட மகன் அம்மா! பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ள இந்த வெண்படைகள் உங்கள் கையில் வரக்காரணம் என்ன என்று கேட்டான். அப்போது அந்தத் தாய் கண்களிலே கண்ணீர் ததும்ப, “மகனே! நீ குழந்தையாக இருக்கும்போது நம் வீடு தீப்பற்றி எரிந்தது. உன்னை வீட்டிலே தூங்க வைத்து அருகிலே கூலி வேலைக்குச் சென்று வீடு திரும்பினேன். வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்த யாரும் உன்னைக் காப்பாற்றத் துணியவில்லை. உடனே உள்ளே ஓடி, எரிந்து கொண்டிருந்த வீட்டிற்குள் நுழைந்து உன்னை அரவணைத்து வெளியே கொண்டு வந்தேன். என் இரு கைகளும் தீயினால் வெந்துவிட்டன. இதனால் தோல் உரிந்து இந்த நிலைக்கு , ஆளாகிவிட்டேன்” என்று கண்ணீரோடு சொன்னாள் அந்தத் தாய். இதுவரை அருவருப்போடு நினைத்த அந்த ஜோ தாயின் கைகளை அன்போடு முத்தமிட்டு கண்ணீரால் அவற்றை நனைத்தான்.
ஆம்! இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் இயேசுவின் காயங்களை நினைத்து பாடுபட்ட சுரூபத்தை முத்தி செய்து ஆராதிக்கப் போகின்றோம். பாவம் என்ற நெருப்பில் ஒரு காலத்தில் எரிந்து கொண்டிருந்தோம். இறை மகனாம் இயேசு நம்மைக் காப்பாற்ற நினைத்தபோது அவரைப் பாவங்கள் சுட்டன. காயங்கள் ஏற்பட்டன. ஏரோது, பரிசேயர்கள், சதுசேயர்கள் போன்றோரின் இதயத்தில் எரிந்த பகை என்ற தீ, யூதாசில் எரிந்த பணம் என்ற தீ, பாமர மக்கள் கூச்சலிட்ட அறியாமை என்ற தீயினால் இயேசு காயப்பட்டார். எசாயா கூறுவதுபோல, இதோ இயேசுவின் முகத்தில் மனித சாயலே இல்லை! சமாதானப் புறாவின் சிறகுகள் ஒடிந்து விட்டன. சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள் என்று அழைத்தவரின் கரங்களிலே ஆணிகள். நீதிமான்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்றவரின் பாதங்களிலே ஆணிகள். எரிக்கோ குருடரின் கண்களைத் திறந்தவருக்குக் கண்களிலே ஒளி இல்லை. எழுந்து நட என்று வாலிபனை நோக்கிக் கூறியவருக்கே, இறங்கி நடக்க முடியவில்லை. நானே ஒளி, என்று சொன்னவர் இன்று உயிரற்று காட்சி அளிக்கிறார்! நானே உயிர் என்றவரின் உடலில் இன்று உயிர் இல்லை. ஆம்! இயேசு மரணமடைந்துவிட்டார். நமக்காக இறந்துவிட்டார்.
நிகழ்ச்சி
ஜெர்மன் தேசத்திலே எவட்டன் நகரிலே ஒரு பெரிய பேராலயத்தின் கோபுரத்தின் உச்சியிலே சிலுவைக்குப் பதிலாக ஒரு செம்மறி ஆட்டுக்குட்டி இருப்பதுபோல் அமைக்கப்பட்டு இருக்கிறது. காரணம் ஆலயத்தின் அடியில் பின்வருமாறு சரித்திரம் சான்று பகர்கின்றது.
கட்டிடத்தின் கலைஞர் எழுதுகிறார்: நான் இந்த ஆலயத்தைக் கட்டினேன். உயர்ந்த இந்த கோபுரத்தை வடிவமைக்கும்போது தடுமாறிக் கீழே விழுந்தேன், செத்தேன், என் எலும்புகள் சுக்கு நூறாகி விட்டன என நினைத்தேன். அடியிலே பாறைக்கு அருகில் உள்ள புல்லை மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக் குட்டியின் மீது விழுந்தேன். என்னைத் தாங்கிய ஆட்டுக்குட்டி செத்தது. நானோ காயமின்றி பிழைத்தேன். எனக்காக உயிர் கொடுத்த இந்த ஆட்டுக்குட்டி இதுவே என எழுதி வைத்தார்.
ஆம் இந்த ஆட்டுக்குட்டிதான் நம் ஆண்டவர் இயேசு. நம் பாவங்களைப் போக்கி நம்மைக் காக்கத் தன் உயிர் கொடுத்த செம்மறி. இவர் நம் நோய், பாவம், மரணம் ஆகிய கற்களில் விழுந்து நம்மை மீட்டுவிட்டார். நம் குற்றங்களுக்காகக் காயப்பட்டார். நம் தீய செயலுக்காக நொறுக்கப்பட்டார் (எசாயா 53:5).
ஆம், அன்பார்ந்தவர்களே!
சேற்றுக்குள்ளே செந்தாமரை உறங்குகிறதே! அந்த
உறக்கம் நிரந்தரமானதா? இல்லையே!
மண்ணுக்குள் மாணிக்கம் உறங்குகிறதே - அந்த
உறக்கம் நிரந்தரமானதா? இல்லையே
தரையிலே விழுந்த விதை மடிகிறதே - அந்த
டிதல் நிரந்தரமானதா? இல்லையே!
இதேபோல்தான் இயேசு சிலுவையில் உறங்கும் உறக்கம்.
இந்த உறக்கம் மூன்று நாட்களுக்குப் பின் கலைந்துவிடும்.
முடிவுரை
தன்னைக் காப்பாற்றவல்லவா தாயின் கரங்களில் இந்தக் காயங்கள் என்று ஜோ கண்ணீரோடு முத்தமிட்டானே! நமக்காகக் காயப்பட்ட இயேசுவின் காயங்களை முத்தமிட்டுக் கண்ணர் சிந்தி அழுவோமா?
இயேசுவுக்கு மூன்று முத்தங்கள் கிடைத்தன. - தாய் மரியா கொடுத்த முத்தம். அது புனித முத்தம். மாசு மறுவற்ற முத்தம். அது நம்மால் கொடுக்க முடியாது.
- யூதாசு பணத்துக்காகக் கொடுத்ததும் முத்தம். இது திருடனின் முத்தம். இந்த முத்தம் அவனுக்கு அழிவைத் தந்தது. இதை நாம் கொடுக்கக் கூடாது.
- மரிய மதலேனாள் தன் பாவத்திற்காகக் கண்ணர் விட்டு அழுது இயேசுவின் பாதத்தை நனைத்துக் கொடுத்ததும் முத்தம். இது பாவ மன்னிப்பின் முத்தம். இந்த முத்தம் தான் இன்று நீங்களும் நானும் கொடுக்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் வாழ்ந்த மனிதர் ஒருவர் ஏதோ ஒன்றைத் தேடி எண்ணற்ற செப் வழிபாடுகளில் பங்குகொண்டார். வழிபாடு நடத்தியவர்களெல்லாம் மிக அருமையாக அறிவுரை வழங்கினார்கள். ஆனாலும் அவர் தேடியது அவருக்கக் கிடைக்கவில்லை! தான் தேடியது கிடைக்கவில்லையே என்ற கவலையில் படுத்தபடுக்கையானார். அவர் மரண வேளையிலிருந்தபோது அவருக்காகச் செபிக்க போதகர் ஒருவர் அவர் வீட்டுக்குச் சென்றார். அவரது படுக்கையின் பக்கத்தில் மண்டியிட்டு மன்றாடினார். அப்பொழுது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் கீழே விழுந்தன. ஆண்டவரே இந்த அன்பு மகனை எடுத்துக்கொள்ளாதேயும் என உருக்கமாக செபித்தார். அதைப் பார்த்த படுக்கையிலே படுத்திருந்த மனிதர், இத்தனை ஆண்டுகளாக, நான் எதைத் தேடினேனோ அது இன்று எனக்குக் கிடைத்துவிட்டது. மற்ற போதகர்களெல்லாம் அவர்கள் விரும்பியதை எனக்குக் கொடுத்தார்கள். ஆனால் இவரோ நான் விரும்பியதை எனக்குக் கொடுத்திருக்கின்றார். என்னை அன்பு செய்யும் ஒருவரைத் தேடினேன். இனி எனக்குக் கவலையில்லை எனச் சொல்லி எழுந்து அமர்ந்தார்; அவரும் மாபெரும் போதகரானார்.
இதோ நமக்காக கண்ணீரைச் சிந்தி, நமக்காகத் தம் உயிரைத் தந்து நம்மீது அளவில்லா அன்பைப் பொழிந்திருக்கும் இயேசுவை ஒருமுறை உற்றுப்பார்ப்போம். மனம் திரும்ப விரும்பாத எருசலேமைப் பார்த்து அழுதவர் இவர்! (லூக் 19:41-44). இலாசரின் இறப்பைக் கண்டு அழுதவர் இவர்! (யோவா 11:35). நமது வேண்டுதல்கள் கேட்கப்படவேண்டும் என்பதற்காக கண்ணீர் சிந்தி கதறி மன்றாடியவர் இவர்! (எபி 5:7).
நமது ஆண்டவராகிய இயேசு நம்மீது அவர் கொண்டிருக்கும் ஆழமான அன்பை வெளிப்படுத்த கண்ணீரை மட்டுமல்ல, தமது உயிரையே நமக்குக் கொடுத்திருக்கின்றார் (யோவா 19:30).
எனக்காகக் கண்ணீர் சிந்தி, தம் உயிரையே கொடுத்த ஆண்டவர் இயேசு என்னோடு இருக்கும்போது எனக்கு எந்தக் குறையும் இருக்காது; அப்படியே
என் வாழ்க்கையில்,
முள் குறுக்கிட்டால் அதை அவர் மலராக மாற்றிடுவார்;
தேள் குறுக்கிட்டால் அதை அவர் தேனாக மாற்றிடுவார்;
சாவு குறுக்கிட்டால் அதை அவர் வாழ்வாக மாற்றிடுவார்
என நம்பி நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோம். தம் உயிரையே எனக்காகக் கொடுக்க முன்வந்திருக்கும் இயேசு. சாதாரண வரங்களை நான் கேட்கும்போது அவற்றை எனக்குக் கொடுக்காமலிருப்பாரோ? என நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம்.
மேலும் அறிவோம் :
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் : 228).
பொருள் :
வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் மகிழ்வதைக் கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப் பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு வழங்காது பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்!
இயேசு கிறிஸ்து மூன்று ஆண்டுகள் பல்வேறு இடங்களில் போதித்தார். வீட்டிலே போதித்தார்; வீதியிலே போதித்தார்; மலையிலிருந்து போதித்தார்: பாலைநிலத்தில் போதித்தார்; ஆலயத்தில் போதித்தார். ஆனால், இறுதியாக அவர் சிலுவையிலிருந்து போதித்தலை ஈடு இணையற்ற போதனை. சிலுவையில் தொங்கிய அவர் வாயிலிருந்து உதிர்ந்த ஏழு முத்துக்களைப் பெரிய வெள்ளியாகிய இன்று கவனமுடன் கேட்போம்: ஆழ்ந்து சிந்திப்போம், செயல்வடிவம் கொடுப்போம்.
1. முதல் முத்து "தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக் 23:34).
தம்மைச் சிலுவையில் அறைந்த கொலைபாதகர்களுக்காகத் தந்தையிடம் மன்னிப்புக் கேட்கின்றார். நமக்குத் தீமை செய்தவர்களைச் சபிக்கின்றோம்; பழிக்குப் பழிவாங்கத் துடிக்கின்றோம் ஆனால் இயேசுவோ தீமை செய்கிறவர்களுக்காகப் பரம தந்தையிடம் பரிந்து பேசுகிறார். இயேசுவைப் பின்பற்றி நம் பகைவர்களை மன்னித்து, அவர்கள் புரிந்த குற்றங்களை மறந்து, அவர்களுக்கு நன்மை செய்வோம். பிறர் குற்றங்களை மனத்திலே நீண்டகாலம் வைத்திருந்தால், நமது மனம் புண்ணாகிச் சீழ்வடியும். நாம் குணமடைய பிறருடைய பிழைகளை மன்னிப்பது அவசியமாகும், "உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்” (லூக் 6:27), "இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்,”
2. இரண்டாம் முத்து "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” (லூக் 23:43).
இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட இருகள்வர்களில் ஒருவர் இயேசுவிடம், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்று மன்றாடினான். இயேசுவின் அரசு ஒருநாள் நிறைவாக வரும் என்று அவன் நம்பினான். இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.
வாழ்நாள் முழுவதும் கொலையும் களவும் செய்த கள்வனுக்கு இயேசு பேரின்ப வீட்டை வாக்களிக்கிறார். இவ்வாறு அவனுக்கு நம்பிக்கை அளித்து, அவன் மூலமாக நமக்கும் நம்பிக்கை அளிக்கிறார்,
ஒருவர் தமது வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் மனம் மாறலாம் எனக்கு வயதாகிவிட்டது: நான் பாவப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன், இனி என்னைத் திருத்திக்கொள்ள முடியாது, எனது வாழ்ககை அஸ்தமாகிவிட்டது; எனக்கு இனி விடியல் இல்லை என்று அவநம்பிக்கை அடையக்கூடாது. இயேசுவிடம் சென்று, இதயம் திறந்து பேசுவோம். அவர் நிச்சயமாக நமது குணத்தை மாற்றி, வாழ்வை மாற்றுவார். நமக்குப் புதுப் பொலிவும் வலிவும் கிடைக்கும். "நம்பிக்கை வேண்டும் நம் வாழ்வில். இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்,"
3. மூன்றாம் முத்து 'அம்மா, இவரே உம் மகன்; இவரே உம் தாய்" (யோவா 19:26)
இயேசு தமது இறுதிக்களி இரத்தம்வரை சிந்தி எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டார். அவருடைய ஆடைகளைப் படைவீரர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். எஞ்சி இருந்தது சிலுவை அருகில் நின்று கொண்டிருந்த அவரது தாய் மட்டுமே. அத்தாயையும் "இதே உம் தாய்" என்று கூறி யோவாளிடம் ஒப்படைத்து, அதன் மூலம் அத்தாயை உலக மக்கள் அனைவாக்கும் தாயாகத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார். யோவான் மரியாவை ஏற்றக்கொண்டதுபோல, நாமும் அவரை நம் தாயாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், இயேசுவின் உயிலை, இறுதி விருப்பத்தை நாம் ஏற்றக்கொள்ளாதவர்கள் ஆகிறோம். இயேசு தம்மையும் தமது தாயையும் நமக்களித்ததுபோல், நாமும் நமக்குள்ள அனைத்தையும் பிறர்க்கு அளிக்க முன்வர வேண்டும்.
4. நான்காம் முத்து “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?"
இயேசு சிலுவையில் அடைந்த கொடிய வேதனை, எல்லாராலும் தனிமைப்படுத்தப்பட்டது "எல்லாரும் என்னைவிட்டு ஓடிவிடுவீர்கள். இருப்பினும் நான் தனியாக இல்லை. என் தந்தை என்னோடு இருக்கிறார்” என்று ஆணித்தரமாகக் கூறிய இயேசு "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று எவ்வாறு கூறலாம்? இயேசு கூறிய இவ்வாக்கியம் திருப்பா 22-இன் தொடக்கம். இத்திருப்பாவில் கூறப்பட்டது அவரில் நிறைவேறியது. அவர் இத்திருப்பா முழுவதையும் சொல்லிச் செபித்திருப்பார். இத்திருப்பா அவநம்பிக்கையின் வெளிப்பாடு அல்ல, மாறாக நம்பிக்கையின் வெளிப்பாடு.
நம் வாழ்க்கையில் நாம் எல்லாராலும் ஏன் கடவுளாலும்கூட கைவிடப்பட்ட ஒரு கசப்பான உணர்வை அடையலாம், ஆனால் நாம்ஒருபோதும் அவநம்பிக்கை அடையலாகாது. "அடிப்பவரும் அவரே. அணைப்பவரும் அவரே, காயப்படுத்துகிறவரும் அவரே, காயத்தைக் குணப்படுத்துபவரும் அவரே" என்ற மன உறுதிப்பாடு தமக்கு வேண்டும்.
5. ஐந்தாம் முத்து "நான் தாகமாயிருக்கிறேன்" (யோவா 19:28)
"யாராவது தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும், என்னில் நம்பிக்கை கொள்பவன் குடிக்கட்டும்.* மற்றவர்களின் தாகத்தைத் தனளிக்க வந்த இயேசு தமது தாகத்திற்குத் தண்ணீர் கேட்கிறார், அவரது தாகம் உடல் தாகம் என்பதைவிட, இதயத் தாகம், ஆன்மத் தாகமாகும். அனைவரையும் மீட்க வேண்டும் என்ற தாகம். அவருக்குப் கசப்பு கலந்தக் காடியைக் கொடுத்தார்கள், ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை, இயேசுவின் தாகத்தைத் தணிக்க வேண்டுமென்றால், தண்ணீர் இல்லாமல் தவிப்போர்க்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும். "தாள் தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்."
6. ஆறாம் முத்து "எல்லாம் நிறைவேறிற்று” (யோவா 19:30)
இயேசு எந்த நோக்கத்திற்காக இவ்வுலகத்திற்கு வந்தாரோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. சிலுவைச் சாவின் வழியாக அவர் உலகை மீட்க வேண்டுமென்ற கடவுளுடைய திட்டத்தை நிறைவேற்றிய நிலையில் "எல்லாம் நிறைவேறிற்று" என்று மறைநூல் நிறைவேறும் வண்ணம் மனநிறைவுடன் கூறினார். அவருடைய பகைவர்கள் அவருடைய சாவுடன் அவர் கதை முடிந்துவிட்டது என்று அக்களித்தனர். ஆனால் இயேசுவோ தமது சாவால், *எல்லாம் நிறைவேறிவிட்டது, அதாவது, முழுமை பெற்றுவிட்டது" என்று பெருமிதத்துடன் கூறுகின்றார், கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள கடமையைச் செய்து முடிக்கும்போது, நாமும், "எல்லாம் நிறைவேறியது” என்று மன நிறைவுடன் கூறமுடியும்.
மனிதரின் பார்வையில் இயேசுவின் இறப்பு ஒரு படுதோல்வி; ஆனால் கடவுளின் பார்வையில் அது மாபெரும் வெற்றி. அவ்வாறே, நமது வாழ்வும் மனிதரின் பார்வையில் ஒரு படுதோல்வியாகக் காட்சி அளிக்கலாம், ஆனால் கடவுளோடு இணைந்து நமது கடமையைச் செய்யும்போது, தோல்வியும் வெற்றியாக மாறும். பிறர்க்காக நாம் வாழும்போது, நமது சாவு முடிவில்லா வாழ்வாகிறது.
7. ஏழாவது முத்து "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" (லூக் 23:46).
இயேசு உயிர் விட்டபோது கதிரவன் ஒளி கொடுக்க மறுத்துவிட்டது; புவியெங்கும் இருள் பரவியது: கற்பாறைகள் வெடித்தன; நிலம் நடுங்கியது. இயற்கையின் தலைவர் இறப்பதைக் கண்டு இயற்கையே அழுதது. இயேசுவின் சாவை ஒரு சிலர் வேடிக்கைப் பார்த்தனர்; ஒருசில பெண்கள் அழுதனர், ஒரு சிலர் மார்பில் அறைந்து கொண்டனர். ஆனால் இயேசுவோ, ஒரு குழந்தை தன் தாயின் மடியில் கண்மூடி அமைதியாய் உறங்குவதுபோல, கடவுளின் கரங்களில் தமது ஆவியை ஒப்படைத்து இறுதி மூச்சை விடுகிறார். நாமும் கடவுளின் அரவணைப்பில் உயிர் விடும் வரம் வேண்டுவோம்.
இயேசு உயிர் நீத்ததைக் கண்ட, சிலுவை அடியில் நின்ற நூற்றுவர் தலைவன், "உண்மையில் இவர் கடவுளின் மகன்" என்று அறிக்கையிட்டார், நாமும் அவருடன் சேர்ந்து விசுவாச அறிக்கையிடுவோம். இயேசுவின் சாவு கடவுளின் சாவு: இயேசுவின் சாவு மனிதரின் மீட்பு.
சிலுவையடிக்கு வரட்டும்
இரவாகட்டும் பகலாகட்டும் எப்பொழுதெல்லாம் என்னைச் சுற்றிலும் அமைதி தவழ்கிறதோ, நிம்மதி நிலவுகிறதோ, அப்பொழுதெல்லாம் எங்கிருந்தோ வரும் ஒரு சோகக்குரல் - துயரக் குரல் என்னை உலுக்குகிறது. முதன்முறையாகக் கேட்ட போது குரல் வந்த திசை நோக்கிச் சென்றேன். குரலுக்குரியவரைத் தேடினேன். அக்குரல் சிலுவையிலிருந்து வந்தது. குரலுக்குரியவர் பாடுகளின் எல்லையிலே வேதனையின் விளிம்பிலே மரச்சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார், மண் புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தார். அருகிலே சென்று “இறக்கி விடுகிறேன்" என்று சொல்லி கால்களில் துளைத்திருந்த ஆணிகளைக் கழற்ற முயன்றேன். ஆனால் அவரோ விட்டு விடு. உன்னால் மட்டும் முடியாது. உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு குழந்தையும் ஒன்று திரண்டு வந்தால் அன்றி, என்னைச் சிலுவையினின்று இறக்க முடியாது. என் வேதனையைக் குறைக்க முடியாது' என்றார். உடனே நான் “உலகம் முழுவதும் என்றைக்கு உம் சிலுவையடிக்கு வரப்போகிறது? உம் வேதனை தீரப் போகிறது? உலகம் கிடக்கட்டும். இதோ நான் இருக்கிறேன். என்னால் ஏதாவது செய்ய முடியும் என்றால் சொல்லும்” என்றேன். “அப்படியா?” அவர் சொன்னார் “முதலில் இந்த இடத்தை விட்டுப் போ. உலகெங்கும் போ. ஊர் ஊராகப் போ. உன்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் சொல். உனக்காக ஒரு மனிதன் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறான் என்று".
எனது கற்பனை அன்று; ஓர் ஆங்கிலக் கவிஞன் காவியமாக்கிய கடவுளின் சோகக்கதை. கல்வாரி என்பது என்றோ ஒருநாள் நடந்து முடிந்த பழைய நிகழ்ச்சி அல்ல. இன்றும் ஒவ்வொரு மனித வாழ்விலும் நடந்து கொண்டிருக்கும் தெய்வத்தின் துயர நிகழ்ச்சி என்பதை அழகாகச் சித்தரிக்கும் அற்புதமான கவிதை.
உனக்காக, எனக்காக, ஒவ்வொரு மனிதனுக்காக அங்கே இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறார்.
ஏன் இந்த நிலை? வாய் திறந்து சொல்லும் நிலையில் அவர் இல்லை. அதோ இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறதே அந்த இதயத்தில் சாய்ந்து உற்றுக்கேள். அவரது இதயம் இப்படித் துடித்துக் கொண்டிருக்கும்... அன்பு, பாவம்... பாவம், அன்பு, அன்பு பாவம் என்று. ஆம் அனைத்துக்கும் காரணம் 1.பாவம் - அன்பு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால் என்றோ உலகை அழித்திருக்கக் கூடிய மனிதனின் பாவம்.
2. அன்பு - பாவத்தால் உலகம் அழிவதைப் பார்த்துச் சகிக்காத கடவுளின் அன்பு.
ஆம், பாவம் கடவுளைப் பழிவாங்கிவிட்டது. அன்பு கடவுளைப் பலியாக்கிக் கொண்டது. தெய்வத்தைப் பொருத்தவரை அது அன்புப் பலி. மனிதனைப் பொருத்தவரை அது கடவுள் கொலை. பாவம் அன்புக்கு இழைத்த கொடுமை சிலுவை.
அதோ சிலுவையில் இருகைகள் விரித்த நிலையில் இயேசு இருப்பது ஏன் தெரியுமா? இத்தாலிக் கவிஞர் தாந்தேயின் பார்வையில் அன்புக்கும் பாவத்துக்குமிடையே நடந்த போராட்டத்தின் விளைவாம்!
ஆதியில் மனிதன் கடவுளோடு கைகோர்த்துத் திரிந்தானாம். பாவம் நுழைந்தது. அன்புறவு அறுந்தது. பிரிவு. பிளவு. பாவம் மலிய மலிய இடைவெளியும் விரிந்தது. கடவுளை விட்டு மனிதன் ஒடினான். ஓடினான். ஓடிக்கொண்டே இருந்தான். அவனைத் தடுத்து ஆட்கொள்ள கடவுள் துரத்தினார். துரத்தினார். துரத்திக் கொண்டே இருந்தார்.
மனிதனோ அழிவின் வாசலுக்கே சென்று விட்டான். நரகம் எங்கே இருக்கிறது? கல்வாரிக்குப் பின்னேயாம்! பாவப்படுகுழியில் புரண்டு நரகத்தில் விழப்போகும் மனிதனைத் தடுப்பதற்காகத் தன் சக்தியை எல்லாம் - அன்புதானே அவரது சக்தி - ஒன்று திரட்டி அவனுக்கு முன்னே ஓடிச்சென்று தன் இரு கைகளையும் விரித்தார்.
விரித்த அந்த அன்புக் கைகளைச் சிலுவையில் அறைந்துவிட்டு - ஆணி கொண்டு பிணைத்துவிட்டுக் கீழே குனிந்து தன் இச்சைப்படி சென்றான் மனிதன்.
கடவுள் கைகளை விரித்தது மனிதன் தன் பாவத்தால் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்வதற்காகவா? அழிவை நோக்கிச் செல்லும் மனிதனைத் தடுத்து ஆட்கொள்வதற்காகவன்றோ!
கடவுளின் விலை என்ன? 30 வெள்ளிக் காசுகள் என்கிறான் மனிதன். மனிதனின் விலை என்ன? என் குருதி, என் உயிர் என்கிறார் இறைவன்.
இரு ஒருபுறம் இருக்கட்டும். இன்று இயேசுவைச் சிலுவையில் இருந்து இறக்க வேண்டுமா? “ஒவ்வொரு மனிதனும் கல்வாரியின் உச்சிக்கு வந்தால் ஒழிய...” ஆண்டவர் அழைக்கிறார்.
வாருங்கள் சிலுவையடி நோக்கி மலை ஏறுவோம். ஆனால் யாரைப்போல? பரிசேயர், படைவீரர், பொதுமக்கள் என்று எத்தனையோ பேர் அங்கே சென்றார்கள். ஆறுதலாக நின்றவர்கள் மூன்று பேர் மட்டுமே.
களங்கமின்மைக்குச் சின்னமான அன்னை மரியா. அர்ப்பணத்துக்கு அடையாளமான திருத்தூதர் யோவான். தவறான வாழ்க்கைக்காக மனத்துயர் கொண்ட மகதலா மரியா. இந்த மூன்று பேரில் ஒருவராக மாறாதவரை, சிலுவையடிக்குச் செல்ல எவருக்கும் உரிமையில்லை ; தகுதியும் இல்லை !
நாம் அத்தனை பேரும் அன்னை மரியா போல மாசற்றவர்கள் அல்லர்; யோவான் போல முழுநேர இறையாட்சி ஊழியர்கள் அல்லர்; நம் சார்பாக, நம் பதிலாள் போல் நிற்பவர் மகதலா மரியா, பாவியாக வாழ்ந்து இயேசுவின் கனிந்த பார்வையில் மனமுருகி மனம் மாறியவர்.
மலை ஏறுவது கடினமாயிற்றே, பழக்கமில்லையே என்ற தயக்கமா? மலையேறுவது கடினம் தான். பாவத்தை நினைப்பது, வருந்துவது, திருந்துவது, அறிக்கையிடுவது அனைத்துமே கடினம்தான். ஆனால் எந்தப் பாவத்துக்காக மன்னிப்புப் பெறுவதும், விட்டுவிலக உறுதிபூணுவதும் கடினமாக இருக்கிறதோ, அந்தப் பாவத்துக்காக - அதே பாவத்துக்காக - அதோ அங்கே சிலுவையில் தொங்கிக் கொண்டிருப்பது இன்னும் அதிகக் கடினமாக இருக்கிறது!
சிலுவையின் நிழலில்: மரணத்தை வென்ற மாபெரும் அன்பு
அன்பார்ந்த இறைமக்களே,
இன்று உலகம் முழுவதும் மௌனம் நிலவுகிறது. இன்று பலிபீடம் வெறுமையாக இருக்கிறது. இன்று திருச்சபை மணி ஓசை எழுப்பவில்லை. ஏனெனில், இன்று பிரபஞ்சத்தின் அரசன், நம்முடைய மீட்பர், கல்வாரி மலையில் சிலுவையில் தொங்குகிறார். இந்த புனித வெள்ளியில் நாம் சிலுவையைப் பார்க்கும்போது, அது ஒரு தண்டனைக் கருவியாகத் தெரியவில்லை; அது இறையன்பின் அரியணையாகத் தெரிகிறது.
1. "முடிந்தது" – ஒரு வெற்றிக் குரல் (The Theology of 'It is Finished')
சிலுவையில் இயேசு கடைசியாகச் சொன்ன வார்த்தைகளில் ஒன்று "முடிந்தது" (யோவான் 19:30). இது தோல்வியுற்ற ஒரு மனிதனின் முனகல் அல்ல; இது ஒரு மாவீரனின் வெற்றிக் குரல்.
என்ன முடிந்தது? மனிதனை இறைவனிடமிருந்து பிரித்த பாவத்தின் ஆதிக்கம் முடிந்தது. பழைய உடன்படிக்கையின் பலிகள் முடிந்து, கிறிஸ்துவின் இரத்தத்தால் புதிய உடன்படிக்கை நிலைநாட்டப்பட்டது.
இயேசுவின் மரணம் ஒரு தற்செயலான விபத்து அல்ல; அது திட்டமிடப்பட்ட ஒரு தியாகம். நாம் கொடுக்க வேண்டிய கடன் அனைத்தையும் அவர் சிலுவையில் தனது இரத்தத்தால் எழுதித் தீர்த்துவிட்டார்.
2. சிலுவையின் ஏழு வார்த்தைகள்: மன்னிப்பின் ஊற்று இயேசு சிலுவையில் தொங்கியபோது வன்மத்தைப் பொழியவில்லை, மாறாக மன்னிப்பைப் பொழிந்தார்.
"தந்தையே இவர்களை மன்னியும்": தன்னை ஆணி அடித்துக் கொல்பவர்களுக்காகப் பரிந்து பேசும் ஒரு கடவுளை நாம் எங்கே காண முடியும்?
"இதோ உன் தாய்": தனது மரண நேரத்திலும், அன்னை மரியாவைத் திருச்சபையின் தாயாக நமக்குத் தந்து, நம்மை அனாதைகளாக விடவில்லை.
"தாகமாய் இருக்கிறது": இது தண்ணீருக்கான தாகம் அல்ல; இது ஆத்துமாக்களுக்கான தாகம். நம்முடைய அன்புக்காகவும், நம்முடைய மாற்றத்திற்காகவும் இறைவன் தாகமாய் இருக்கிறார்.
3. சிலுவை: ஒரு கண்ணாடி (The Cross as a Mirror) சிலுவை என்பது நாம் யார் என்பதைக் காட்டும் ஒரு கண்ணாடி.
நாம் சிலுவையைப் பார்க்கும்போது, நம்முடைய பாவம் எவ்வளவு கொடூரமானது என்பதை உணர வேண்டும். ஒரு கடவுளையே சிலுவையில் அறையும் அளவுக்கு மனித உள்ளம் கடினமாக இருந்தது.
அதே நேரத்தில், கடவுள் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதையும் சிலுவை காட்டுகிறது. ஒரு துளி இரத்தம் போதுமானது நம்மை மீட்க, ஆனால் அவர் தன் உடலிலுள்ள கடைசித் துளி இரத்தத்தையும் நமக்காகச் சிந்தினார். "தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு வேறில்லை" (யோவான் 15:13) என்ற வார்த்தையை அவர் வாழ்ந்து காட்டினார்.
4. கெத்சமனே முதல் கல்வாரி வரை: குருக்களின் பாடம் தந்தையே, ஒரு குருவாகிய உங்களுக்கு இந்த நாள் ஒரு மாபெரும் அழைப்பு.
இயேசுவின் விலாவிலிருந்து இரத்தமும் நீரும் வழிந்தபோதுதான் திருச்சபை பிறந்தது. ஒரு குருவின் வாழ்வு என்பது சிலுவையின் அடியில் நிற்பதுதான்.
மக்கள் துன்பப்படும்போது, அவர்கள் கைவிடப்பட்டதாக உணரும்போது, "எலோய் எலோய் லாமா சபக்தானி" (என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?) என்று அவர்கள் கதறும்போது, அவர்களுக்குக் கிறிஸ்துவைத் தாங்கிப் பிடிக்கும் சீமோனாக நாம் இருக்க அழைக்கப்படுகிறோம்.
இன்றைய வாழ்விற்கான தியானம்: இன்று நாம் சிலுவையை முத்தி செய்யும்போது (Veneration of the Cross), வெறும் மரத்தைத் தொடவில்லை; நம்மைத் தேடி வந்த இறைவனின் கரங்களைத் தொடுகிறோம்.
பகையை ஒழிப்போம்: இயேசு சிலுவையில் காட்டிய மன்னிப்பை நாமும் நம் வாழ்வின் எதிரிகளுக்குக் காட்டத் தயாரா?
துன்பங்களை ஏற்போம்: நம் வாழ்வின் சிலுவைகள் நம்மை அழிக்க வந்தவை அல்ல, நம்மைப் புனிதப்படுத்த வந்தவை என்பதை உணர்வோம்.
அன்பில் நிலைத்திருப்போம்: கிறிஸ்துவின் அன்பு நம்மை எதிலிருந்தும் பிரிக்க முடியாது என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம்.
கல்வாரியில் அன்று இருள் சூழ்ந்தது. ஆனால் அந்த இருளுக்குப் பின்னால் ஒரு பெரிய ஒளி ஒளிந்திருந்தது. சிலுவை இல்லையென்றால் உயிர்ப்பு இல்லை. இன்று நாம் துக்கப்படுகிறோம், ஆனால் அந்தத் துக்கத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில், சிலுவையில் உயிர்விட்டவர், கல்லறையை உடைத்துக்கொண்டு வருவார் என்ற வாக்குறுதியை நாம் அறிவோம்.
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் கரங்களுக்குள் நம்மை ஒப்படைப்போம்.
புனித வெள்ளி
முதல் வாசகப் பின்னணி (எசா. 52: 13- 53:12)
ஏசாயாவின் இறைவாக்குப் புத்தகத்தில் மொத்தம் 4 ஊழிய னின் கவிதைகள் உள்ளன. இது 4-ஆம் கவிதை. ஆழ்ந்த பொரு ளுள்ளது. துன்பத்தின் இறையியலை தன்னகத்தே கொண்டது. இதுவரை யாருக்கும் நிகழாத ஒன்று நடந்தேறப்போகிறது. துன்புறும் ஊழியன் வாழ்வில் என்ன நிகழும், வாழ்வு எத்தகையது. அதனால் விளையும் பலன் என்ன என்பதைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறுகிறது. இது இருவரைப் பற்றியா அல்லது ஒட்டுமொத்தமாக ஒரு இனத்தைப் பற்றியா என்ற விவாதமும், குழப்பமும் நீடித்திருக் கிறது. சிலரது கருத்துப்படி, தனிமனிதனை குறிக்கிறது. எ.கா. கிறிஸ்து பிறப்பதற்கு முன் நான்காம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் தாவீது வம்சத்தில் வந்த இளவரசன் எருபபேலை குறிக் கிறது என்றும், கி.மு. 609-ஆம் ஆண்டில் வாழ்ந்து வந்த ஜோசியா, மெகியோ இடத்தில் பரிதாபத்திற்கு மரணமடைந்த அடைத்தார் என்று கூறுகிறார்கள்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்றபொழுது இக்கவிதையின் துன் புறும் ஊழியன் அடிமைத்தனத்தில் கிடந்த மக்களை மீட்கத்தான் துன்பப்பட்டார் என்ற கருத்து நிலவுகிறது. கிறிஸ்துவத்தின் பார்வை யில் ஊழியன் கிறிஸ்துவை, அவரின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. இவர் கடவுளின் மக்கள் மத்தியில் வளர்ந்து, மக்கள் எல்லோராலும் ஒதுக்கப்படுவார். அவர்களின் பாவங்களைச் சுமந்து கொண்டு கொலைகளத்திற்கு செல்லும் செம்ம றிப்போல அமைதியாக இருப்பார். மக்களோடு துன்புறும் ஊழியன் அல்ல மாறாக, மக்களுக்காகத் துன்புறும் ஊழியன் என்பதை சுட்டிக் காட்டுகிறது
.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபி. 4:14-16; 5:7-9)
இயேசுவே தலைமைக்குரு. அவர் ஒரே சமயத்தில் முழு மனிதனாயும், முழு கடவுளாய் இருக்கிறார். பாவம் தவிர மற்ற அனைத்திலும் மனிதராக இருக்கும் அவர் முழுமையான தலைமை குரு. நம்முடைய வாழ்வை அறிந்தவராக இருப்பதாக அவரால் இரக்கத்தை, அருளை தர முடியும். எனவே நாம் அவரை அண்டிச் செல்ல வேண்டும் என வலியுறுத்துகிறது. இயேசு மண்ணில் வாழ்ந்த காலத்தில் தம் தந்தையை நோக்கி உரத்த குரலெழுப்பி கண்ணீர் சிந்தி மன்றாடினார். அவரது அச்சத்தை முன்னிட்டு கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறைமகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்படிதலைக் கற்றுக்கொண்டார் என்ற இறை வார்த்தைகள் இயேசுவின் கெத்செமனித் தோட்டத்து நிகழ்ச்சியை ஆசிரியர் நினைவுப்படுத்துகிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 18:1-19:42)
ஒவ்வொரு பாஸ்கா திருவிழாவின்போதும் செம்மறியானது பலிகொடுக்கப்படும். அவற்றின் இரத்தம் பலிபீடத்தின் மீது தெளிக் கப்படும். சிலுவை தண்டனையைப் பற்றிக் கூறும்போது, யூதர்கள் உரோமானியர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்தனர். அவர்கள் யூதர் களுக்கு தன்னாட்சியை கொடுத்தனர். ஆனால் மரண தண்டனை நிறைவேற்ற அதிகாரம் இல்லை. அதனால்தான் இயேசுவை சிலுவை சாவுக்கு முன்னால் இயேசுவை பிலாத்துவிடம் கொண்டு வருகிறார்- கள். அப்படி யூதர்கள் மரண தண்டனை நிறைவேற்ற அதிகாரம் இருந்திருந்தால் அது கல்லெறிந்து கொல்லுதல்தான். லேவி 24:16 இல் இதைக் காண்கின்றோம். அடக்கத்தைப் பற்றிப் பார்க்கின்ற போது, உரோமானியரின் முறைமைப்படி, சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளியின் உடல் பகலில் சூரிய வெப்பத்திலும், இரவின் கடுங்குளிரிலும் தொங்கவிடப்பட்டிருக்கும். உடலை அடக்கம் செய்ய மாட்டார்கள். கழுகுகளும், நாய்களும் தின்னும் வண்ணம் உடலை தூக்கி எறிவார்கள். ஆனால் யூத முறைப்படி இணைசட்டம் 21:21 22 மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட உடலானது இரவு முழுவதும் இருக்கக் கூடாது. மாறாக, அதே நாளில் அடக்கம் செய்யப்பட வேண்டும். அதனால்தான் இயேசு அடக்கம் செய்யப்படுகிறார்.
மறையுரை
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியின் கடைசி நேரத்தில் 'உனது ஆசை என்ன' என்று கேட்பார்கள். அவன் கூறியவுடன் முடிந்தளவிற்கு நிறைவேற்றப் பார்ப்பார்கள். ஒரே சாதாரண கைதியின் ஆசையை அங்கீகரிக்கின்ற நாம் ஏன் நம் இயேசுவின் ஆசையை அங்கீகரிக்கக் கூடாது. சாதாரண வெள்ளிக்கூட தூய வெள்ளி யாகிறது இன்று. ஒருநாள் அழுதுவிட்டு, துக்கம் கொண்டாடு வதற்காகக் கிறிஸ்து சிலுவை சாவை ஏற்கவில்லை. தான் வாழ்ந்து காட்டியதை நாமும் வாழ்ந்து காட்ட வேண்டும் என ஆசிக்கின்றார். யோவான் 15:13-14-இல் "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப் பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடு வதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்".
"உலகமே போனாலும் உன்னோடு வருபவன்தான் உண்மை யான நண்பன்." என்று சொல்வார்களே. இவரே நல்ல நண்பன். இந்த நண்பன் கடவுள் விரும்பிய வழியைக் கவசமாகக் கொண்டு உலகை மீட்கப் புறப்படுகிறார். இந்தப் பயணத்தின் உச்சகட்டம்தான் சிலுவைச்சாவு. கெத்சமனித்தோட்டத்திலே இவரின் துன்பத்தில் பங்கேற்க யாரும் இல்லை. எசாயா இறைவாக்கினர் இன்றைய முதல் வாசகத்திலே கூறுவது போல "அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போர் முன்னி லையில் கத்தாத செம்மறி போலும் அவர்தம் வாயைத் திறவாதி ருந்தார். சீடர்கள் இயேசுவைவிட்டு ஓடிப்போயினர். இயேசுவே கடவு ளிடம் “ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று குரலெழுப்புகிறார். ஆனா லும் இறைத்திட்டம் என்று ஏற்றுக்கொள்கிறார்.
ஓலிவ மலையிலிருந்து, கல்வாரி மலைக்கு ஒரு தியாகப் பயணம், ஒலிவ மரம் யூத பாரம்பரியத்தின் இரக்கத்தின் அடை யாளமாக இருக்கிறது. இப்பயணம் இயேசுவின் வாழ்வுப் பயணத்தின் இறுதிநிலை மட்டுமல்ல, மீட்பைக் கொண்டு வருவதற்கான இறுதி நிலையும் கூட. அன்று ஆதாம் ஏவாள் விலக்கப்பட்ட மரத்தின் கனியைத் தின்றதால் பாவம் இவ்வுலகிற்கு வந்தது. இன்று புதிய ஆதாம் இயேசு சிலுவை மரத்தின் மூலம் நம் பாவங்களை என்றென்றைக்கும் கழுவுகிறார். நம் பாவங்களுக்குக் கூலியாக சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டார். பழைய ஏற்பாட்டில் இரத்தப்பலி மனிதர்களின் பாவத்தை நீக்கவில்லை. ஆனால் இயேசு தன்னையே பலியாக்கி நம் பாவத்தை நீக்குகிறார். வாழ்வது ஒருமுறையென்- றாலும் அதைப் பிறருக்காக வாழ்ந்துவிட்டுச் செல்லுவோம், என்று சொல்வார்கள். இதனை இன்று இயேசு செயல்படுத்திக் காட்டுகின்றார். பாதம் கழுவும் சடங்கினை முடித்து, நான் உங்களுக்கு மாதிரிகைக் காட்டினேன். நான் செய்வதுபோல நீங்களும் செய்யுங்கள் என்றவர், இன்று உயிர்விடும் தருவாயில் 'தாகமாயிருக்கிறேன்' என்கிறார். நான் சொன்னதுபோல நீங்கள் உங்களது வாழ்க்கையில் கடைப்பி டிப்பீர்கள் என்பதை பார்க்கத் தாகமாயிருக்கிறேன் என்கிறார்.
10 கீழே விழுந்தவனைப்பார்த்து நிலமகள் சொன்னாலாம். மகனே! நீ 9 முறை எழுந்திருக்க முயற்சி செய்திருக்கிறாய். இங்கும், கல்வாரி பயணத்திலே விழுந்த அவரைக் கடவுள் உயர்த்திட வில்லை. மாறாகச் சிலுவை சாவு உண்டு, சிலுவை சுமந்து விழுந் தாலும் எழுந்து நட. இறைத்திட்டம் இன்னும் இருக்கிறது என்கிறார். நம் பாவங்களையெல்லாம் சுமந்து சென்றதால் மக்களின் பார்வை யில் அவர் பாவியாகின்றார். யோவான் 10:15-இல் தன் ஆடுகளுக் காய் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்று சொன்ன ஆயன் இங்குச் செம்மறியாகக் கொல்லப்படுகின்றார். 1கொரி. 13:4 7-இல் அன்பு பொறுமையுள்ளது. அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அதனால்தான் எல்லாவற்றையும் அன்போடு ஏற்றுக் கொள்கின்றார். நாமும் இத்தகைய தியாகம் நிறைந்த வாழ்வுக்காய் அழைக்கப்பட்டிருக்கிறோம். இன்று நாம் நன்றாக இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நமது அம்மா, அப்பாவின் தியாகம்தான்.
பூக்கள் பூக்கின்றனவே எந்தப் பயன் கருதி? அழகிய சிலை நம்மை மகிழ்விக்கின்றதே எந்தப் பயன் கருதி? மானம் மும்மாரி பொழிகின்றதே எந்தப் பயன் கருதி? நாமும் எந்தப் பயனும் கருதாமல் நம்மையே பிறருக்காய் கொடுப்போம். அன்பைத் தரலாம். கண்களின் வழியாய் கருணையைத் தரலாம். காயப்பட்ட இதயத்திற்கு ஆறுதல் வார்த்தைகளால் இதமளிக்கலாம். எதை வைத்திருக்கிறோமோ அது நம்முடையதல்ல, கடவுள் கொடுத்தது. அதைப் பிறருக்காய் தருவோம். அப்போது தூய வெள்ளி அர்த்தமுள்ளதாகும்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
• கடவுளின் நீதியின் அன்பிற்கும், மன்னிக்கும் அன்பிற்கும் இடையே நடக்கும் போராட்டத்தின் வெளிப்பாடே சிலுவை சாவு.
• இயேவுவின் பாடுகள், சுமந்த சிலுவை எல்லாம் மறையுடலாம் திருச்சபையிலும் தொடர்கின்றன. எவ்வாறு மகனாகிய இறைவன், பாவத்தினால் பலவீனப்பட்ட மனித உடலைத் தன்னோடு இணைத்துக் கொண்டதினால், அதைத் தன் பாடுகளினாலும், சிலுவை சாவினாலும் தூய்மைப்படுத்தினாரோ அவ்வாறே கிறிஸ்துவின் மறையுடலாம் திருச்சபையும், கிறிஸ்தவர்களின் பாடுகளினாலும் சாவினாலும் தன்னை தூய்மை படுத்திக் கொண்டு விண்ணக வாழ்வை மண்ணக வாழ்வாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
புனித வாரம் - வெள்ளி
முதல் வாசகம் : எசா 52: 13 - 53:12
ஆண்டவரின் ஊழியர்பற்றிய இறுதிக் கவிதை இன்றைய வாசகமாய் அமைகிறது. ஏனைய கவிதைகளில் போன்று, ஊழியன் என்பவர் மக்கள் அனைவருக்காகத் துன்பப்படவேண்டிய இஸ்ரயேல் இனத்தை முழுவதையுமே குறிக்கக்கூடும் என்றாலும், பெரிய வெள்ளிக் கிழமையன்று இவ்வாசகம் வாசிக்கப்படுவதன் கருத்து இங்கு விளக்கம் பெறும் ஊழியன் மக்களுக்காகத் தன் உயிரை ஈந்த இயேசுவேயெனக் கொள்ளலாம்.
இயேசுவே துன்புறும் ஊழியன்
“மனித சாயலே அவரிடம் இல்லை" (52:14) என்னும் அளவுக்கு இயேசு நமக்காகத் துன்புற்றார், எள்ளி நகையாடப்பட்டார், பிரம்பால் அடிக்கப்பட்டார், முகத்தில் துப்பப்பட்டார், தலையிலே முள்முடி சூட்டப்பட்டார், கேலிக் கூத்தாடப்பட்டார். உடல் துயரத்தோடு உள்ளத்துத் துயரமும் அவரை ஆட்கொள்கிறது. தம்மவரால் கைவிடப்பட்டார் பேதுருவால் மறுதலிக்கப்பட்டார். சமயமும் அரசியலும் இவரைத் தண்டிப்பதில் கைகோர்த்து நிற்கின்றன. "துன்புறும் மனிதனாக, துயரத்தில் ஆழ்ந்தவராக நிற்கிறார்" (53: 3). “மனிதரால் இகழப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டவராக நிற்கிறார் "(53:3). அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்படும் ஆட்டுக்குட்டிபோல் வாய் திறவாது நிற்கிறார் (53:7). இன்று பெரிய வெள்ளி - ஆண்டவர் இறந்த நாள். சிறிது நேரம் இக்காட்சியை நம் கண்முன் வைப்போம். "அவரைப் பார்த்தோம்; அவரிடம் அழகோ, அமைப்போ இல்லை; விரும்பத் தக்க தோற்றமும் இல்லை” (53: 2). நம் கண்கள் கண்ணீர்க் குளமாக வேண்டாமா? நம் கல்லான இதயங்கள் கனிந்துருக வேண்டாமா?
இயேசு துன்புறுவது நமக்காக
"தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்குத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" (மாற் 10 : 45) என்று இயேசுவே தம்மை இத்துன்புறு ஊழியனாகக் காட்டுகிறார். தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற இயேசு இவ்வுலகுக்கு வந்தார். “இதோ இறைவா, உம் திருவுளத்தை நிறைவேற்ற வந்துவிட்டேன்" (எபி 10:7) என்று கூறியவர் அத்திருவுளத்தின் திட்டமனைத்தையும் ஏற்கிறார். "நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்" (53:4). "எல்லாவற்றிலும் சகோதரர்களைப் போல் ஆகவேண்டி இருந்தது" (எபி 2:17 18). நம்முடைய துன்ப துயர்களை ஏற்றது மட்டுமன்று, நமது பாவங்களுக்காக நொறுக்கப்படுகிறார், காயப்படுகிறார் (53: 5); ஏன், தம்மையே, தம் உயிரையே நமக்காக, நம்மைப் பாவங்களிலிருந்து மீட்க, பலியாக ஒப்புக்கொடுக்கிறார் (53:10). இத்தோடு இயேசுவின் பணி முடிந்துவிடவில்லை. "பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினார்" (53:12).
ஆம். இன்றும் இயேசு தொடர்ந்து நமக்காகத் தந்தைமுன் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரது விலைமதிக்கப்பட முடியாத இரத்தம் நமக்காக இறைவனிடம் இன்றும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. "தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே வாழ்கிறார்" (எபி 7 : 25 ; 1 யோவா 2 1). ஆம், இயேசு நம் அனைவருக்காகவும் இறந்தார். எனவே அவரால் மீட்கப்பட்ட நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வில் வளர வேண்டும். மேலும், இயேசுவைப் போன்று நாமும் நம் உடைமைகளை மட்டுமன்று; நம்மையே பிறர் நல்வாழ்வுக்காக அர்ப்பணம் செய்யத் தயங்கக் கூடாது. இறுதியாக, இயேசு “எனக்காகத் தம்மையே கையளித்தார்" (கலா 2: 20) என்பதும் உண்மை. நான் இயேசுவுக்காக என்ன செய்தேன்? என்ன செய்கிறேன்? என்ன செய்வேன்? என்ற வினாக்கள் பலனுள்ள பதிலை நம் ஒவ்வொருவரிடமும் எழுப்ப வேண்டும்
.
பலருடைய பாவத்தைத் தாமே சுமந்துகொண்டு பாவிகளுக்காகப் பரிந்து பேசினார்.
பெரிய வெள்ளி
எத்தனையோ மக்கள் தம் உயிரை மக்களுக்குத் தியாகம் செய்துள்ளனர். ஆனால் எவரது இரத்தமாவது பாவக் கறைகளைக் கழுவியதாக வரலாறு இல்லை. ஆண்டவரின் இரத்தமோ "பலருடைய பாவங்களுக்காகச் சிந்தப்படும் இரத்தம்" (மத் 26: 29); நம்மை நீதிமான்களாக்கிய இரத்தம் (உரோ 5: 9); விலைமதிக்கப்படாத இரத்தம் (1 பேது 1: 19); கல்வாரியில் பெரிய வெள்ளியன்று சிந்தப்பட்ட இரத்தம். இவ்வெள்ளியே, வெள்ளிக் கிழமைகளில் தலை சிறந்தது; மிகப் பெரியது; மிகவும் நல்லது. அன்றுதான் ஆதாம் ஏவாளின் பாவத்தால் தாறுமாறாக எழுதப்பட்ட நம் தலை எழுத்தை அழித்து, அதை நேராக எழுதி, இறைவனுடன் நம்மை இயேசு இணைத்தார். திருப்பாடுகளின் வரலாற்றை வாசிக்கும்பொழுது நமது கருத்தைக் கவர்வது அநியாயக் குற்றச்சாட்டு; அநியாயத் தீர்ப்பு; அநியாயக் கொலை.
அநியாயக் குற்றச்சாட்டு கலகக்காரன் குழப்பக்காரன் இது ஒரு குற்றம். இவர் பிறந்தவுடன் ஒலித்த பாடலே அமைதி பற்றியதுதான் (லூக் 2: 14). அமைதியை ஏற்படுத்துவோர் பேறு பெற்றவர் என்று தானே இந்தச் சாந்த மூர்த்தி கூறினார். 'மறு கன்னத்தைக் காட்டு' என்று கூறிய இம்மகானா கலகக்காரன்? மீனிலிருந்து பணமெடுத்து வரிப்பணம் செலுத்தியவரை, அரசுக்கு வரி கொடுக்கவேண்டாமெனக் கூறியதாகக் குற்றஞ்சாட்டினர்.
அநியாயத் தீர்ப்பு ஏரோதன் இவரைப் பைத்தியம் என்றான். கூறப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதைப் பிலாத்து உணர்ந்தான். எனினும் சாட்டையால் அடிக்கக் கட்டளையிட்டான். இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, சிகப்புப் போர்வை போர்த்தி, மரக்கட்டையில் அமர்த்தி, கோலால் தலையில் அடித்து, இவரைப் போலி அரசனெனக் கேலி செய்தனர் போர்வீரர்கள். உருக்குலைந்து நிற்கும் திருக்குமரனை “இதோ மனிதன்” என்று கூறி அடையாளம் காட்ட வேண்டிய நிலையில் இருந்தார் இயேசு. அவரைக் கொல்ல வேண்டுமென்றுக் கூக்குரலிட்டது கூட்டம். "அவரிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை" என்று கூறிச் சிலுவைத் தீர்ப்பிட்டான் பிலாத்து. நீதி மன்றங்கள் அளித்த தீர்ப்புகளில் மிகவும் அநீதியான தீர்ப்பு இது.
அநியாயக் கொலை இரும்பாணிகள் அவரது இரத்தத்தைக் குடிக்க, கசக்கப்பட்ட கந்தைத் துணி சிகப்புச் சாயம் ஏற்றப்பட்டுக் கொடியில் தொங்குவது போல் காட்சி அளித்தது அவருடல். கரங்களில் காயம் : கால்களில் ரணக் காயம் ; கசையடி பட்டதால் உடற் காயம்; முள்முடி அழுத்தியதால் ஏற்பட்ட முகக் காயம். சிலுவை சுமந்ததால் வந்த தோள் காயம். "உடலைப் பிழிந்து உதிரம் வடியவிட்டுக் கொடுஞ் சிலுவை தன்னிலே கொண்டு காயப்போட்டார்." அந்நிலையிலும் தன்னையே சிலுவையில் அறைந்த பகைவர்களுக்காகப் பரிந்து பேசினார்.
தன்னரிய திருமேனி சதைப்புண்டு (சதை நசுக்கப்பட்டு) தவிப்பெய்தி
பன்னரிய (சொல்ல முடியாத) பல பாடுபடும் போதும், பரிந்து, எந்தாய்
இன்னதென அறிகில்லார் தான் செய்வது, இவர் பிழையை
மன்னியும் என்று எழில் கனிவாய் மலர்ந்தார் நம் அருள்வள்ளல்
(இரட்சண்ய சரிதம்)
இப்பாடுகளின் வேளையில் மரியன்னை சிலுவையடியில் நின்று அனைத்தையும் பார்த்தாள்: நம்மைத் தம் பிள்ளைகள் என ஏற்றாள்.
தாயிருக்கப் பிள்ளை சாகும் சங்கடங்கள் கொஞ்சமோ?
சாட்டையால் வேட்டையாடி, சாவதென்றால் தாங்குமோ?
வாயிருந்தும் தேவ அன்னை மௌனமாக நின்றனள்:
வாழ்வு தாழ்வை தெய்வம் பார்க்கும் என்பதை அறிந்தனள்
(இயேசு காவியம்)
கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.
என்னோடு பேச மாட்டாயா?
இன்றைய நாளில் நாம் இயேசுவின் பாடுகளின் வரலாற்றை யோவான் நற்செய்தியிலிருந்து வாசிக்கின்றோம். பிலாத்து இயேசுவைப் பார்த்து, ‘என்னோடு பேச மாட்டாயா?’ (யோவா 19:10) எனக் கேட்கின்றார். இன்றைய நாள்களில் நாம் ஆண்டவரின் மௌனத்தை அதிகமாகவே அனுபவிக்கின்றோம். அவர் இல்லையா? அல்லது அவர் பேசுவது இல்லையா? அல்லது அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையா? என்று கேட்டுக்கொண்டிருக்கின்றோம். திருவழிபாட்டில் இன்றைய நாள் மௌனத்தின் நாள் எனவும் அழைக்கப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் நிறையப் பேருடைய குரலைக் கேட்டோம். காட்டிக்கொடுத்தவரின் குரல், மறுதலித்தவரின் குரல், கூட்டத்தின் குரல், ஆட்சியாளர்களின் குரல், இயேசுவின் குரல். யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில் இயேசுவின் இறப்பு ஒரு பலி. பாவக்கழுவாய் நாளில் (யோம் கிப்பூர்) பலி செலுத்திவிட்டு திருத்தூயகத்திலிருந்து வெளியேறும் தலைமைக்குரு, ‘இது நிறைவேறிற்று!’ என்கிறார். அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு மௌனம் காக்கிறார் இயேசு.
முதல் வாசகத்தில் நாம் காணும் துன்புறும் ஊழியனும் மௌனம் காக்கிறார். இயலாமை மற்றும் கையறுநிலையின் வெளிப்பாடு அல்ல, மாறாக, ஒடுக்குவோர் முன் ஒடுக்கப்படுவோர் செய்கிற போராட்டம் இது.
நாம், இன்றைய நாளில், பாடுகளின் வரலாற்றைச் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
இன்றைய வாசகத்தில் என்னைக் கவர்ந்த ஏழு வார்;த்தைகளை (சிலுவையில் இயேசு பேசும் ஏழு வார்த்தைகள் அல்ல!) உங்களோடு சிந்திக்க விழைகின்றேன்:
- ‘யாரைத் தேடுகிறீர்கள்?’ (18:4,7)
தன்னைக் கைது செய்ய வந்தவர்களைப் பார்த்து இயேசு கேட்கின்றார்.
இயேசுவுடைய பணி வாழ்வின் தொடக்கத்தில் அவருடைய முதற்சீடர்கள் அவரைத் தேடு வருகின்றனர். நிக்கதேம் இரவில் தேடி வருகின்றார். அலுவலர் ஒருவர் தேடி வருகிறார். சமாரியர்கள் தேடுகிறார்கள். கிரேக்கர்கள் தேடுகிறார்கள். இவர்கள் அனைவரின் தேடல்களில் தேடுபொருள் தெளிவாக இருந்தது. தம்மைத் தேடி வந்தவர்களின் தேடுபொருள் சரியாக இருக்கிறதா என்று பார்க்க அவர்களை இருமுறை கேட்கின்றார் இயேசு.
இன்று நான் எதை, யாரைத் தேடுகிறேன்? தேடுபொருள் என்னவென்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தால் தேடல் எளிதாகும். பல நேரங்களில் எனக்கு அது தெளிவாகத் தெரியவில்லை. அல்லது நான் பயனற்றவற்றைத் தேடுகிறேன். என் தேடலைச் சரி செய்ய அழைக்கிறார் இயேசு.
- ‘நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?’ (18:23)
தன் கன்னத்தில் அறைந்தவரைப் பார்த்து இயேசு இதைக் கேட்கின்றார்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்னவர், இங்கே, கன்னத்தைக் காட்டுவதற்குப் பதிலாக, ‘ஏன்?’ என்று கேட்கின்றார். இங்கே இயேசு தன்னுடைய தன்மதிப்பைக் காத்துக்கொள்கின்றார். நான் வலுவற்றவன் என்பதற்காக என்னை அடிக்காதே என்றும், நான் பேசுகிறேன் என்றால் நீயும் பேசு, அதைவிட்டு, உனக்கு அடிக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதற்காகவோ, அல்லது நான் வலுவற்று இருக்கிறேன் என்பதற்காகவோ என்னை அடிக்காதே.
இன்று நாம் நம்மைவிட வலுவற்றவர்களை நம் கையால் அல்லது வார்த்தையால் அடிக்கிறோம். ‘நான் சின்ன பிள்ளையா இருக்கிறதுனாலதான என்னை அடிக்கிற?’ என்றோ, அல்லது ‘நான் இயலாதவனாக இருக்கிறேன் என்பதற்காகத் தானே அடிக்கிறாய்?’ என்றோ நம்மைக் கேட்டுவிட்டால், அங்கே அவமானப்படுவது நாம்தான். ஏனெனில், நீதியை அங்கே காப்பாற்ற மறுக்கின்றோம். ஆக, எனக்கு கீழ் இருப்பவர்களை நான் எப்படி கையாளுகிறேன்?
- ‘நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?’ (18:34)
பிலாத்துவைப் பார்த்து இயேசு இக்கேள்வியைக் கேட்கின்றார்.
யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில், இயேசுவை எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் – ஆட்டுக்குட்டி, இறைவாக்கினர், மெசியா, இறைமகன், இஸ்ரயேலின் அரசன் – அது அழைப்பவரின் தனிப்பட்ட வாழ்வியல் அனுபவமாக இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக இருக்கக் கூடாது. இங்கே பிலாத்து இயேசுவிடம், ‘நீ யூதரின் அரசனா?’ எனக் கேட்க, இயேசு, இக்கேள்வி எங்கிருந்து வருகிறது எனக் கேட்கின்றார்.
இன்று நான் இயேசுவை எப்படி அழைக்கிறேன்? இயேசு எனக்கு யார்? இயேசுவை அப்படி அழைக்க என்னை உந்தித் தள்ளும் தனிப்பட்ட வாழ்வியல் அனுபவம் என்ன?
- ‘உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன். இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிகொடுக்கின்றனர்’ (18:37)
இயேசு பிலாத்துவிடம் கூறும் மறுமொழி இது. இதைச் சொன்னவுடன், பிலாத்து, ‘உண்மையா அது என்ன?’ எனக் கேட்கின்றார்.
‘உண்மையா?’ அது என்ன? அது எங்கே கிடைக்கும்? கிலோ எவ்வளவு? என்ற நிலையில் இருக்கிறது பிலாத்துவின் கேள்வி. ஆனால், உண்மையைச் சார்ந்திருந்தால் அன்றி உண்மை பற்றி நமக்குத் தெரியாது. யோவான் நற்செய்தியில் இயேசு உண்மை என அழைக்கப்படுகின்றார்.
முரண்படாத நிலையே உண்மை. இன்று உண்மையைப் பற்றிய என் புரிதல் என்ன? நான் எத்தனை முறை உண்மையோடு சமரசம் செய்துள்ளேன்?
- ‘மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது’
இயேசு பிலாத்துவிடம் சொல்கிறார்.
பிலாத்து தான் ஆளுநராய் இருப்பதால் தனக்கு எல்லார் மேலும் எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் அதிகாரம் உண்டு என நினைக்கிறார். தவறு! நான் யாருடைய அதிகாரத்தை மதிக்கிறேனோ அவர்தான் என்மேல் அதிகாரம் செலுத்த முடியும். இல்லை என்றால் அதிகாரத்தால் பயன் இல்லை. அதுபோல நான் யாருக்கு அதிகாரம் கொடுக்கிறேனோ அவர்கள்தாம் என்னை ஆட்சி செய்ய முடியும்.
இன்று நான் என் வாழ்வின் அதிகாரத்தை என்னிடம் வைத்திருக்கிறேனா? அல்லது அடுத்தவர்களிடம் கொடுத்திருக்கிறேனா? நான் அடுத்தவரின் அதிகார எல்லையை மீறுகிறேனா?
- ‘நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்’ (19:19)
பிலாத்து சிலுவையில் எழுதி வைத்த குற்ற அறிக்கை இது.
இந்த நான்கு வார்த்தைகளும் நம் வாழ்வின் நான்கு முக்கியக் கூறுகளைக் கூறுகின்றன. ‘நாசரேத்து’ – இது இயேசுவின் ஊர். அவருடைய வேர், தொடக்கம், ஆதாரம். அவர் பேசும் மொழி, குடும்ப பின்புலம், சாதி, மதம் எல்லாம் இதில் அடங்கும். ‘இயேசு’ – அவருடைய பெயர். இது காரணப்பெயராகவும் இருந்தது. அவர் பாவங்களிலிருந்து மக்களை மீட்கிறார். ‘யூதர்களின்’ – நான் யாருக்காக? என்ற கேள்விக்கான விடை இது. இதுதான் நம் வாழ்வின் இலக்கு. ‘அரசன்’ – நான் யாராக?’ என்ற கேள்விக்கான விடை இது. இது நம் வாழ்வின் நோக்கத்தை நிர்ணயிக்கிறது.
இன்று, என் வேர், பெயர், இலக்கு, நோக்கம் தெளிவாக இருக்கிறதா. ‘நத்தம்பட்டி யேசு … …’ என நான் எப்படி என் ‘குற்ற அறிக்கையை’ நிறைவு செய்வேன்?
- ‘நான் எழுதியது எழுதியதே’ (19:22)
பிலாத்து தன்னிடம் குறைகூற வந்த மக்களிடம் கூறுகின்றார்.
எனக்கு மிகவும் பிடித்த வசனம் இது. ஒரு பக்கம், பிலாத்து மக்கள் எதைச் சொன்னாலும் செய்யும் கைப்பாவையாக இருக்கிறார். இன்னொரு பக்கம் கறாராக இருக்கின்றார். நான் எழுதியது எழுதியதே என்கிறார். நீ சொல்வது போல ஆட முடியாது என்று அதட்டி மக்களை விரட்டுகின்றார்.
இன்று நான் மற்றவர்களைப் பற்றி, ‘எழுதியது எழுதியதே’ எனக் கொண்டிருக்கும் முற்சார்பு எண்ணங்கள் எவை? நான் என் வாழ்வில் எடுக்கும் முடிவுகளில் தெளிவாக இருக்கிறேனா?
எல்லாவற்றுக்கும் மேலாக,
இயேசு இறக்க வேண்டும் என ‘எழுதியது எழுதியதே’.
ஆக, நமக்கு என்ன எழுதப்பட்டிருக்கோ அப்படித்தான் நடக்கும். அதை விதி என்றாலும் சரி, கடவுளின் திருவுளம் என்றாலும் சரி, கர்மா என்றாலும் சரி.
ஆனால், எழுதியது எழுதியது என்றாலும், அந்த எழுத்தை நான் என் வாழ்வாக்க இயலகிறதா?
இயேசுவே,
‘என்னோடு பேசமாட்டாயா?’ என்று கேட்போம்.
<
நல்ல வெள்ளி
யோவா 18:1-19:42
தேவாலயத்தின் உச்சியில் சிலுவைக்குப் பதிலாகச் செம்மறி ஆட்டின் சிலையை ஏன் வைத்தார்கள் என்பதற்கு அந்த ஊர்மக்கள் ஒரு நிகழ்வைச் சொன்னார்கள். தேவாலய கோபுரப்பணி நடந்து கொண்டிருந்தபோது சாரத்திலே நின்று வேலை செய்துகொண்டிருந்த கொத்தனார் கால்தவறி கீழே விழுந்தபோது சரியாக அந்த இடத்திலே நின்றுகொண்டிருந்த ஒரு செம்மறி ஆட்டின் மீது விழுந்தார். ஆடு செத்துவிட்டது, ஆனால் கொத்தனார் உயிர் பிழைத்தார். தன் உயிரைக் காப்பாற்றிய செம்மறி ஆட்டுக்கு நன்றியாகச் சிலை செய்து கோபுர உச்சியில் வைத்தார்கள். நம்மைச் சாவிலிருந்து காப்பாற்றிய இயேசுவும் கடவுளின் செம்மறிதானேயென உணர்ந்து செம்மறி சிலையை வணங்கினார்கள்.
"இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி. ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்." யோவா 1:29. இவர்தான் நமக்காக தம் உயிரைக் கொடுத்தார்; அந்தப் புனித நாள்தான் நல்ல வெள்ளி; புனித வெள்ளி. இயேசு உலகமக்களின் மீட்புக்காகத் தம் உயிரைக் கல்வாரி மலையிலே சிலுவையிலே கொடுத்தநாள் புனித வெள்ளி.
* புனித வெள்ளி, நல்ல வெள்ளி:
உலகம் வெளிச்சம் பெற இறைமகன் இயேசு தன்னை தீபமாக்கிக்கொண்ட தியாகத்திருநாள் புனித வெள்ளி. உண்மைக்கு உயிர் கொடுக்கத் தன்னுயிரை தாரை வார்த்த லட்சிய வீரனின் இறப்பு தினம் புனித வெள்ளி. தம் நண்பருக்காக உயிரைக்கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லை என்று சொன்ன இயேசு, நாம் பாவிகளாக இருந்தும் நமக்காகத் தம் உயிரைக் கொடுத்த தினம் புனித வெள்ளி. பாலைவனத்தில் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்து பாம்பின் கடியினால் இறந்தவர்கள், உயர்த்தப்பட்ட வெண்கலப்பாம்பை பார்த்து உயிர் பிழைத்தார்கள். அந்த முன் அடையாளத்தின்படி விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையே சிலுவையில் பலி செம்மறியாக உயர்த்தப்பட்டிருக்கும் நாள் புனித வெள்ளி. பெரிய வியாழன் இராவுணவில் தாம் கொடுப்பதாகச் சொன்னதை, இன்று கல்வாரியில் நமக்குக் கொடுத்துவிட்டு, அனைத்தையும் இழந்தவராகச் சிலுவையில் காட்சித்தரும் பெருநாள் புனித வெள்ளி. 'இதோ! நான் சிலுவையில் உயர்த்தப்பட்டபின் அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்' என்று சொன்ன இயேசு, சிலுவை மரணத்தில் வழியாக நம் அனைவருக்கும் மீட்பளிக்கும் நன்நாள் புனித வெள்ளி. அவமானத்தின் சின்னமாகிய சிலுவையை மீட்பின் கருவியாக இயேசு மாற்றிய நாள் இந்தப் புனித வெள்ளி.
* கல்வாரி மலை;
கல்வாரி ஒரு புனித மலை. விண்ணகமும் மண்ணகமும், இறைவனும் மனிதனும், மனிதனும் மனிதனும், நன்மையும் தீமையும், பாவமும் புண்ணியமும், சாவும் வாழ்வும் சந்தித்த புண்ணிய பூமி. சாவின் முடிவும் வாழ்வின் தொடக்கமும், பாவத்தின் முடிவும் புனிதத்தின் தொடக்கமும், தீமையின் முடிவும் நன்மையின் தொடக்கமாக அமைந்தது கல்வாரி மலை. மனித கொடூரபாவமும் கடவுளின் அன்பின் ஆழமும் சந்தித்த இடம். மனிதனின் பலவீனமும், கடவுளின் பலமும், இறைஇதயமும், மனித இதயமும் முத்தமிட்ட இடம். அவநம்பிக்கையில் நம்பிக்கையும், நோயில்நற்சுகமும், பகைமையால் புதியஉறவும், கவலை கலக்கங்களில் ஆறுதலும் அமைதியும் பெற்றுத்தரும் இடம்தான் கல்வாரி மலை.
* கல்வாரிப் பாடம்:
கல்வாரி மலையில் இயேசு நமக்குக் கற்றுத்தரும் பாடமென்ன? கல்வாரி மலையில் இயேசு சாதித்தது என்ன? கல்வாரி மலையில் நாம் எதைத்தேட வேண்டும்?
* விண்ணும் மண்ணும், கடவுளும் மனிதனும் இணைந்தது கல்வாரியில்:
எங்கோ தூரத்தில் எட்டாத இடத்தில் இருந்த கடவுள், தம் மகன் மூலமாக நம் கண்ணெதிரே தோன்றி, இதோ நான் விண்ணக மண்ணக கடவுள் என நிருபித்து என் மகன் மூலமாக விண்ணயும் மண்ணயும், கடவுளையும் மனிதனையும் இணைத்தேன் என வெற்றி முரசு கொட்டும் நாள் இது. இச்சாதனை ஏசுவால் கல்வாரியில் நிகழ்த்தப்பட்டது. "இருக்கிறவர் நானே என்று சொன்னக்கடவுள் தம் மகன் மூலமாக நம்மோடு இணைந்து வாழ்கிறார். "என்னைக்காண்பவர் என் தந்தையைக் காண்கிறார்", என்று சொன்ன இயேசு, கடவுளின் அளவுகடந்த ஆழமான அன்பை கல்வாரியிலே தம் மரணம்மூலம் நிரூபிக்கிறார்.
+ மனிதனும் மனிதனும் அன்புறவில் இணைந்தது கல்வாரியில்தான்:
என் சகோதரனுக்கு நான் என்ன காவலாளியா? என்று சொல்லி மனிதர்களிடையே காயீன் மூலம் ஆரம்பித்த வெறுப்பு, சண்டை, சச்சரவு, பகைமை, போராட்டம் தொடர்கதையாக வளர்ந்தது. மனிதனையும் மனிதனையும் ஒன்றுபடுத்தும் பாலமாக இயேசு கல்வாரியில் தன்னுடன் சிலுவையில் அறையப்பட்ட இரு மனிதர்களையும் ஒன்றிணைத்து அன்புறவை புதுப்பிக்கிறார். ஒவ்வொரு மனிதரிலும் நான் நிறைந்திருக்கிறேன்; என்னை அன்பு செய்பவர் நிச்சயம் அடுத்தவர்களையும் அன்பு செய்பவர்களாக இருக்க வேண்டும் என்ற கல்வாரி பாடத்தைக் கற்றுத்தருகிறார். கண்ணால் காணக் கிடைக்காத என் அன்பை, அடுத்தவர்களை அன்பு செய்வதன் மூலம் தான் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி மனிதனையும் மனிதனையும் அன்புறவில் இணைத்தது தான் கல்வாரி மலையில் இயேசு நடத்திய இரண்டாம் சாதணை.
+ தீமையை நன்மையாக மாற்றிய சாதனை:
கல்வாரி மலையிலே இயேசுவின் இருபக்கமும் இரு கள்வர்கள் ஒரு குற்றவாளி, "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று என்று பழித்துரைத்தான். ஆனால் மற்றொரு குற்றவாளியோ அவனைக் கடிந்துகொண்டு, "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா, நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகியிருக்கிறாய். இவர் ஒரு குற்றமும் அறியாதவர்" என்று சொல்லி, "இயேசுவே! நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றவுடன் இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டிலிருப்பீர் என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்” என்று சொல்லித் திருந்திய குற்றவாளிக்கு மன்னிப்பும், பேரின்ப வீட்டில் இடமும் கொடுக்கிறார். லூக் 23:39-43. ஒரு குற்றவாளியைப் புனிதனாக மாற்றினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த முதல் குற்றவாளியும் மனம் மாறியிருக்கலாம். அவனுள் இருந்த தீமையும் நன்மையாக மாறியிருக்கும். “நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்துவிடவில்லை" யோவா 18:9 என்ற இயேசு, அந்தக் குற்றவாளியை அழியவிட்டிருப்பாரா? நிச்சயம் தீமையும் நன்மையாக மாறியிருக்கும். மனம்திருந்த விரும்பும் ஒவ்வொரு பாவியையைம் இயேசு மனதார ஏற்றுக்கொண்டு, அவனிடமிருந்து தீமையை எடுத்து எறிந்து, நன்மையை புகுத்திப் புதுவாழ்வு வாழ வைக்கும் சாதனையை கல்வாரியிலே சாதித்தக் காட்டினார். அதனால்தான் இறைவாக்கு நம்மை அழைக்கிறது. "உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் உங்கள் நடத்தையால் தூய்மை உள்ளவர்களாக இருங்கள் 1பேதுரு 1:15 "ஒரு காலத்தில் இருளாயிருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாயிருக்கிறீர்கள். எனவே ஒளிபெற்ற மக்களாக வாழுங்கள்" எபேசி 5:8. தீமையையும் நன்மையாக மாற்றக்கூடிய சக்தியை கடவுளும் நமக்குக் கொடுக்கிறார்.
* திருச்சிலுவை சிந்தனை:-
→ சிலுவை அவமானத்தின் சின்னம்:
பெரும் குற்றவாளிகளைச் சிலுவையில் அறைந்துதான் தண்டித்தார்கள். ஒரு குற்றவாளி சிலுவையில் அறையப்படும்போது உடலளவில் அவமானப்படுத்தப்படுகிறார். அவரின் உடலில் உள்ள ஆடைகள் களைப்பட்டு நிர்வாணமாக்கப்படுவார்கள். சாகும்வரை சிலுவையிலே தொங்கி வேதனைகளை அனுபவித்து மரிப்பது என்பது விவரிக்க முடியாத அவமானம். அப்படிப்பட்ட அவமானத்தின் சின்னமாகிய சிலுவையை இயேசு மீட்பின் கருவியாக மாற்றுகிறார். இடறலாகக் கருதப்பட்ட சிலுவை மனிதர்களுக்குப் பாதை காட்டுகிறது. மடமையாக எண்ணப்பட்ட சிலுவைச்சின்னம் இயேசுவின் இறப்பினால் வாழ்வின் ஊற்றாக உருவெடுக்கிறது.
கிறிஸ்து ஏன் சிலுவை மூலம் உலகை மீட்டார்? எதிலிருந்து சாவு தோன்றியதோ, அதிலிருந்தே புத்துயிர் எழவும், மரத்தினாலே தோல்வி கண்டவன், மரத்தினாலேயே வெற்றி பெறவும் வேண்டுமென்று இருந்தது. ஒரு மரத்தின் மூலம், விலக்கப்பட்ட மரத்தின் மூலம் சாவு இவ்வுலகில் நுழைந்தது. அதைக் கடவுள் மற்றொரு மரத்தின் மூலம் சிலுவை மரத்தின் மூலம் அழித்தார். மரத்தைக் கொண்டு மனிதனை வென்ற அலகையை, மரத்தைக் கொண்டே, சிலுவை மரத்தைக் கொண்டே அழித்தார்; தோற்கடித்தார்.
+ சிலுவை வெற்றியின் சின்னம்:
மக்கள் அனைவரும் மீட்படைய, உலகம், பசாசு, சரீரம் என்ற பாவத்தளையிலிருந்து விடுதலையடைந்து வெற்றியடைய, இயேசு சிலுவையை ஏற்றுக்கொண்டார். நாம் ஆன்மீக நலம்பெற்று வெற்றியடைய அவர் சிலுவையில் தொங்கினார். "சாவின் வழியாய் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது. அந்த அருள்தான் மனிதர்களை கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி நிலைவாழ்வு பெற வழிவகுக்கிறது" உரோ 5:21.
+ சிலுவை இறையன்பு பிறரன்பின் சின்னம்:
கிறிஸ்தவ வாழ்வு சுலபமான வாழ்வு அல்ல; அது சிலுவை வாழ்வு. இறையன்பு, பிறரன்பு இணைந்து வாழ்வதுதான் கிறிஸ்தவ வாழ்வு. இந்த இறையன்பு பிறரன்பு வாழ்வு சிலுவை வாழ்வுதான். சிலுவையின் நேர்க்கோடு கடவுள் மனிதனை அன்பு செய்யும் இறையன்பையும், சிலுவையின் குறுக்குக்கோடு மனிதன் மனிதனை அன்பு செய்யும் பிறரன்பையும் குறிக்கிறது. இந்த இரண்டு அன்பும் சேர்ந்ததுதான் சிலுவை. அதனால்தான் சிலுவை அன்பின் சின்னம். இறையன்பால் ஒவ்வொரு நாளும் நிரப்பப்படுகின்ற நாம், அந்த அன்பை அடுத்தவர்களுடன் பகிர்ந்து வாழும் பிறரன்பில் வாழும்போதுதான் நம் கிறிஸ்தவ வாழ்வு அன்பு நிறை வாழ்வாகிறது. விண்ணகத்திலிருந்து மண்ணகத்தில் உள்ள மக்களைத் தொடர்ந்து அன்பு செய்யும் இறையன்பு, கடவுளின் சாயலிலே படைக்கப்பட்டவர்கள் ஒருவர் ஒருவரை அன்புசெய்து வாழப் பிறரன்பால் அழைக்கிறது. இறையன்புடன் கலந்த பிறரன்புதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.
+ கிறிஸ்துவையும் கிறிஸ்தவரையும் இணைக்கும் சின்னம்: கிறிஸ்து இல்லாமல் கிறிஸ்தவர் இல்லை. Christian என்ற வார்த்தையில் Christ-கிறிஸ்துவை எடுத்துவிட்டால் மிஞ்சுவது lan. I am nothing - நான் ஒன்றுமில்லாதவன்தான். கிறிஸ்துவோடு இணைந்து வாழ்வதுதான் சிலுவை வாழ்வு; கிறிஸ்தவ வாழ்வு. "என்னோடு இணைந்திருந்தால் பலன் தருவீர்கள். என்னோடு இணையாவிட்டால் உலர்ந்து போவீர்கள். என்னைப் பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய இயலாது. என்னோடு இணைந்திருங்கள். நீங்கள் என்னோடு இணைந்திருந்தாலன்றி கனிதர இயலாது" யோவா 15:3-5
+ சிலுவை மன்னிப்பின், அன்பின், பகிர்தலின் சின்னம்:- "தந்தையே! இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்", என்று சிலுவையில் தொங்கிய இயேசு, தன் எதிரிகளையும், தன்னை துன்புறுத்திச் சிலுவை மரத்திலே தொங்கவிட்டவர்களையும் மன்னித்தார். “இயேசுவே நீர் என்னை எவ்வளவு அன்பு செய்கிறீர்?" என ஒரு பக்தன் கேட்டபோது, இயேசு தன் இருகைகளையும் விரித்துக் காட்டி 'இதோ! இவ்வளவு அன்பு செய்கிறேன்' என்றார். சிலுவையிலே தம்மையே பலியாகக் கொடுக்கும் அளவுக்கு அன்பு செய்தார். சிலுவையை நாம் உற்றுநோக்கும்போது அது நமக்குத் தொடர் மன்னிப்பையும், அன்பையும் அள்ளித்தரும் அருள் அடையாளமாக இருக்கிறது. சிலுவை அன்பு நம்மை வாழ வைக்கும் அன்பு. நமக்காக மட்டும் வாழ்ந்தால், நாம் வாழ்ந்தாலும் செத்தவர்களே. நாம் பிறருக்காக இயேசுவைப் போல வாழ்ந்தால், நாம் செத்தாலும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களே. பகிர்ந்து வாழும் அன்பு வாழ்வுக்கு அடையாளம்தான் சிலுவை.
* கிறிஸ்துவை ஆதரிக்காதவர்கள்: இயேசுவின் பாடுகள், மரணம் சமயத்திலே அவருக்குத் துணையாக நின்று ஆதரிக்காமல் இருந்தவர்கள் பலர். நாமும் இந்தப் பலரில் ஒருவராக இருக்கிறோமா என்று சிந்திக்க அழைக்கிறது புனித வெள்ளி.
ஒருவரின் துயரத்தில் பங்கெடுக்காமல் எனக்கென்ன என்று தூங்கி சுகம் காண்பவர்கள். மாற் 14:32-42
முப்பது வெள்ளிக்கு முத்தமிட்டுக் காட்டிக்கொடுப்பவர்கள்
இயேசுவைத் தெரியாது என மறுதலித்தவர்கள் மாற் 14:66-72
தங்கள் மேலாடையைப் பற்றிக்கூட கவலைப்படாமல் தப்பித்தால் போதும் என ஓடும் சீடர்கள் மாற் 15:50-51.
அவரை நிர்வாணப்படுத்தி தீரத் தங்கள் மேலாடையைக் கிழித்துக் கொண்டவர்கள் மாற் 14:63
முகத்தை மூடி உன்னை அடித்தவர் யாரென ஏளனம் செய்தவர்கள்
பரபாசே வேண்டும் எனப் பாசாங்கு செய்பவர்கள் மாற் 15:11
சிலுவையில் அறையும் எனக் கூவுபவர்கள்.
காறி உமிழ்ந்து, கன்னத்தில் அறைந்து, கசையால் அடித்தவர்கள். மாற் 15:15-16, 20
யூதர்களின் அரசே வாழியென ஏளனம் செய்தவர்கள். கைகளைக் கழுவிக் கொள்பவர்கள். மத் 27:25
உன்னையே காப்பாற்றிக்கொள் என நகைப்பவர்கள்
கசந்த திராட்சை ரசம் குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தியவர்கள்
இயேசுவின் நிர்வாணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அவரது ஆடையைக் குலுக்கல் சீட்டு போட்டவர்கள்.
சிலுவையில் அறைபவர்கள்
நீ மெசியா என்றால் உன்னையும் எங்களையும் காப்பாற்று எனப் பழித்துரைத்தவர்கள்
இறந்த பிறகும் விலாவில் ஊடுருவக் குத்தியவர்கள்
லஞ்சம் கொடுத்துத் தவறான பரப்புரையைச் செய்தவர்கள்.
இவர்கள் எல்லாருமே விவிலிய ஆதாரத்தின்படி ஏசுவை
ஆதரிக்காதவர்கள்.
* கிறிஸ்துவை ஆதரித்தவர்கள்
* இதோ! உமது அடிமை என்று இறுதிவரை துணைநின்ற அன்னை மரியா. யோவா 19:25-27
* கட்டாயப்படுத்தினாலும் இறுதிவரை சிலுவை சுமந்த சீமோன். மாற் 15:21
* அநீதியைக் கண்டு கொதித்தெழுந்து மாரடித்துப் புலம்பி ஒப்பாரி குரலெழுப்பும் பெண்கள். லூக் 23:27
* என்னை நினைவில் கொள்ளும் என்று சரணாகதி அடைந்த நல்ல கள்ளன். லூக் 23:42
* தம் தாயை ஏற்றுக்கொண்ட யோவான். யோவா 19:26
* இம்மனிதன் உண்மையிலே இறைமகன் என விசுவாசத்தை வெளிப்படுத்திய நூற்றுவத்தலைவன் மாற் 15:39
* தனக்கென்று இருந்த புதிய கல்லறையைத் தியாகம் செய்த அரிமத்தியா சூசை. யோவா 19:38
* வெள்ளைப்போளமும், சந்தனத்தூளும் கொண்டுவந்த நிக்கோதேமு. யோவா 19:39
* நறுமணம் பூசிய மகதலா மரியா, சலோமி மற்றும் சில பெண்கள். மாற் 15:40-41
* இயேசுவை மனமார ஆதரித்தவர்களின் கூட்டத்தில் நாம் இருப்போம்.
மூன்று மரங்கள் கனவு கண்டவை
முதல் மரம்
: நான் வெட்டப்பட்டால் குழந்தைகள் தூங்கும் தொட்டிலாக வேண்டும். அது வெட்டப்பட்டு மாட்டுத்தொழுவத்திலே தீவனத் தொட்டியானது. அதில் இயேசு பிறந்தார்.
இரண்டாம் மரம்: நான் வெட்டப்பட்டால் மதிப்புள்ள பொருட்களை ஏற்றிச் செல்லும் படகாவேன். அது வெட்டப்பட்டு படகானது. அதில் இயேசு அடிக்கடி பயணம் செய்தார்.
மூன்றாம் மரம் : நான் வெட்டப்பட்டால் மலைமேல் நின்று எல்லாருக்கும் விண்ணகத்தை சுட்டிக்காட்டும் வழிகாட்டியாவேன். அதுவும் வெட்டப்பட்டது. சிலுவையானது. அதில இயேசுவை அறைந்தனர். அன்றுமுதல் இன்று வரை இச்சிலுவைமரம் விண்ணகத்தைச் சுட்டிக்காட்டும் புனித மரமாக இருக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் ஏசுவுக்காக, மக்களுக்காகப் பயனுள்ள வாழ்வு வாழ அழைக்கிறது இந்தப் புனித வெள்ளி.