மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டவரின் திருமுழுக்கு விழா
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 40:1-5,9-11 | தீத்து. 2:11-14,3:4-7 | லூக்கா 3: 15-16,21-22

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
இதோ என் ஊழியன்! இவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் (எசா. 42:1) என்று எசாயா ஒலித்த குரல், இதோ என் அன்பார்ந்த மகன். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் (மாற் 1:11) என்று இயேசுவைப் பார்த்து ஒலித்தது. இயேசுவின் திருமுழுக்கில் கடவுளின் குரலை இயேசு புரிந்து கொள்கிறார். இதனால் இறைவனின் வல்லமை, ஆற்றல், சக்தி இறங்கி வந்து இயேசுவைப் புதிய தலைவராக உலகிற்குப் பிரகடனப்படுத்தி உலகத்திற்குள் அவரை அனுப்பி வைத்தது. புதிய உலகம் படைக்க, அதாவது மக்களினங்களுக்கு நீதி வழங்க, அறத்தை நிலைநாட்ட, குருடர்களுக்குப் பார்வை அளிக்க, கட்டுண்டவர்களை விடுவிக்க, இருளில் வாழ்வோருக்கு ஒளியாகத் திகழ இயேசு புறப்படுகிறார்.

மனித வாழ்வில் இயேசு சில நேரங்களில் போதிக்கிறார். சில நேரங்களில் வாதாடுகிறார். சில நேரங்களில் அமைதி காக்கிறார். சில நேரங்களில் நழுவிச் சென்றுவிடுகிறார். இவை அனைத்திற்கும் காரணம் அவர் பெற்ற திருமுழுக்கும், மன உறுதியும்தான் காரணமாகிறது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அகதியாகச் சென்ற ஒருவர் கடினமாக உழைத்து ஓர் அழகிய வீட்டைக் கட்டினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு உள் நாட்டுக் கலவரத்தில் ஊரே சூறையாடப்பட்டது. ஊரோ யுத்த பூமியானது. அதில் இவரது வீடும் தரைமட்டமாக்கப்பட்டது. அப்போது இவரது மனைவி அழுகிறாள். பிள்ளைகள் கதறுகிறார்கள். இவர் மட்டும் அமைதியாக இருக்கிறார். இவரது நண்பர்கள் இவருக்கு ஆறுதல் சொன்னபோது அவர் சொன்னார்: இந்தியாவிலிருந்து நான் அகதியாக வந்தபோது எதையும் நான் கொண்டு வரவில்லை. அனைத்தையும் இங்கேயே மன உறுதியுடன் உழைத்துச் சம்பாதித்தேன். அதை இப்போது இழந்துவிட்டேன். என் வீட்டை மட்டும்தான் இழந்துள்ளேன். ஆனால் என் அறிவையோ, மன உறுதியையோ, திறமையையோ இழக்கவில்லை. என் மனைவி, மக்களை இழக்கவில்லை. நான் எதை இங்கு இழந்தேனோ அதை நிச்சயம் பெறுவேன் என்ற மன உறுதி எனக்குள்ளது என்றார். ஆம்! நம் ஆண்டவர் இயேசு தந்தையே! உமது கரங்களில் எனது ஆவியை ஒப்படைக்கிறேன் (லூக். 23:46) என்று சொல்லும்வரை மன உறுதியோடு மனித குல அநீத சக்திகளோடு போராடினார். சாதனை படைக்கும் சரித்திர நாயகனாக திகழ்ந்தார். மன உறுதியோடு பசித்தவர்க்கு உணவு கொடுக்கவும், வறுமையில் உள்ளவர் வளமை பெறவும், இருளில் இருப்பவனை ஒளிக்குக் கொண்டு வரவும், இருட்டடிப்பு செய்யப்பட்ட சமூகம் விடுதலை பெறவும் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டார்.

நாம் பெற்ற திருமுழுக்கு அனுபவம் நீதியை நிலைநாட்டவும், மன உறுதி பெறவும், சோதனைகளை வென்று சாதனை படைக்கவும், இறையரசுப் பணியில் ஈடுபடவும் நம்மை அழைக்கிறது. இயேசுவின் பணியில் நாம் தவறினால் நாம் பெற்ற திருமுழுக்கு வெறும் அர்த்தமற்ற சடங்காகிவிடும். அது தூய ஆவியை நமக்கு அளித்து, நம்மைப் புதுப்படைப்பாக மாற்றி நம்மை புதிய உலகம் படைக்க அழைக்கும் ஓர் இறை அழைப்பு.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

என் அன்பு மகன் நீயே!

இறைத் தந்தைக்கு இயேசுவை மிகவும் பிடிக்கும் (முதல் வாசகம்). காரணம் அவரது அன்பை நூற்றுக்கு நூறு பிரதிபலித்தவர் இயேசு (இரண்டாம் வாசகம்).

நன்மையைத் தவிர வேறு எதையும் இயேசு செய்யவில்லை (இரண்டாம் வாசகம்). இதோ ஓர் அழகான கதை ! இது நூற்றுக்கு நூறு கட்டப்பட்ட கதை : ஒருமுறை புனித யோசேப்பு, மரியா, புனிதர்கள், புனிதைகள், வானதூதர்கள் எல்லாரும் இயேசுவிடம் போய், பூலோகத்திற்கு ஒருநாள் பிக்னிக் போயிட்டு வரலாம் அப்படின்னு சொன்னாங்க.

சரின்னு ஆண்டவர் டூருக்கு ஏற்பாடு செய்தாரு. மோட்சத்தை பார்த்துகிறணுமே! அதுக்கு புனித பேதுருவை காவலுக்கு வச்சிட்டுப் போயிட்டாங்க. போறதுக்கு முன்னாடி புனித பேதுருவுக்கு ஒரு கட்டளை கொடுத்திட்டு போனாரு இயேசு. நான் வரும்வரைக்கும் யாரையும் மோட்சத்துக்குள்ளே அனுமதிக்கக்கூடாது. இதுதான் கட்டளை. சரின்னாரு பேதுரு.

எல்லாரும் பூமிக்கு டூர் கிளம்பிட்டாங்க. அந்தச் சமயம் பார்த்து ஒரு டெய்லர் மோட்சத்துக்கு வந்திட்டார். தையல்காரர் மோட்சத்துக் கதவைத் தட்டினாரு. நீங்க இயேசு வரும்வரைக் காத்திருக்கணும் ! ஆண்டவரோடும், மாதாவோடும் எல்லாரும் டூர் போயிருக்காங்க, அவுங்க வந்தாத்தான் நீங்க உள்ளே போகமுடியும். ஆண்டவருடைய உத்தரவு இல்லாம யாரையும் நான் உள்ளே விடக்கூடாது. இது ஆண்டவரின் கட்டளை என்று சொன்னார் பேதுரு.

அதற்கு டெய்லர், என்னை உங்களுக்கு அடையாளம் தெரியலியா? நான் வருஷா வருஷம் குழந்தை இயேசுவுக்குச் சட்டை தச்சிக்கொடுக்கிற டெய்லர். என்னை உள்ளே விட்டிடுங்க. இயேசு ஒன்னும் சொல்லமாட்டாரு அப்படின்னாரு.

ஓ! அந்த டெய்லரா நீங்க? சரி எப்படியோ நான் இயேசுவை சமாளிச்சிக்கிறேன்; நீங்க யாருக்கும் தெரியாம இந்த மூளையிலே அமர்ந்திருங்க அப்படின்னாரு பேதுரு. மோட்சத்தின் கதவு சாத்தப்பட்டது. வழக்கம்போல பேதுருவும் தூங்கிட்டாரு. நம்ம டெய்லர் அந்த சமயம் பார்த்து மோட்சத்தைச் சுத்திப் பார்க்கலாம்னு கிளம்பிட்டாரு.

அவருக்கு ஓர் ஆசை! ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து பூமியைப் பார்த்தாரே! நாமும் ஒருமுறை இந்த மோட்சத்திலிருந்து பூலோகத்தைப் பார்ப்போமேன்னு சொல்லி எட்டிப்பார்த்தார்.

அங்கே ஒரு கடை. எதை எடுத்தாலும் பத்து ரூபா அப்படிங்கிற கடை. அந்தக் கடையிலேயிருந்து 10 ரூபா பொறுமான பொருள் ஒன்றை ஒரு பொடியன் எடுக்கிறதை டெய்லர் பார்த்திட்டார்.

டெய்லருக்கு கோபம் வந்திட்டு. அந்தச் சிறுவனைத் தண்டிக்க விரும்பினாரு. சுத்திப்பார்த்தாரு. அங்கே மேரி பிஸ்கட் பாக்கெட்டுகளை மாதா அடுக்கி வச்சிருந்தாங்க. இயேசுவுக்கு என்ன பிஸ்கட் பிடிக்கும்? மேரி பிஸ்கட் ! ஏன்னா அவுங்க அம்மா பேரு மேரிதானே . பாக்கெட்டுகளில் ஒன்றை எடுத்து திருடின பையனை அடிச்சாரு டெய்லரு. அந்த சமயம் பார்த்து நீர் போனவங்க எல்லாரும் திரும்பி வந்திட்டாங்க. இயேசுவுக்குச் சரியான பசி. மேரி பிஸ்கெட்டை எடுத்து சாப்பிடப் போனாரு. ஒரு பாக்கெட் கொறைஞ்சிருந்ததை இயேசு கண்டுபிடிச்சிட்டாரு. பேதுருவைக் கூப்பிட்டு என்ன நடந்திச்சுன்னு கேட்டார் இயேசு. பேதுரு உண்மையைச் சொல்லிட்டாரு. டெய்லர் போயி இயேசு கால்லே விழுந்து அவருக்கிட்ட தான் செஞ்சதைச் சொல்லிட்டாரு.

அப்போ ஜீஸஸ் சிரிச்சிக்கிட்டே டெய்லருகிட்டே, உலகத்திலே தப்பு செய்றவங்களையெல்லாம் தண்டிக்க நினைச்சீன்னா, இந்த மோட்சத்திலே உள்ள பொருள்கள் உனக்குப் பத்தாது அப்படின்னாரு. அந்த டெய்லர் கொஞ்சம் குறும்புக்காரரு. ஜீசஸைப் பார்த்து, தப்பு செய்றவங்களைப் பார்த்தா உங்களுக்குக் கோபமே வராதா? அப்படின்னாரு.

அதற்கு இயேசு, நான் கோபப்படுவேன். ஆனால் யாரையும் என் கோபம் காயப்படுத்தாது; நான் தண்டிக்கமாட்டேன், கண்டிப்பேன் அப்படின்னாரு. இயேசு- அவர் காயப்பட்டவர்களை நேசிப்பார் ; நேசிப்பவர்களைக் காயப்படுத்தமாட்டார்.

இதனால்தான் நேசமே உருவான , அன்பே உருவான (1 யோவா 4:8) இயேசுவை விண்ணகத் தந்தைக்கு மிகவும் பிடிக்கும் (நற்செய்தி). அவரைப் போல விண்ணகத் தந்தையின் அன்பான மகள்களாக, மகன்களாக வாழ ஆண்டவர் இயேசு நமக்கு அருள்புரிவாராக.
மேலும் அறிவோம் :

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து (குறள் : 155).

பொருள் : அயலார் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளாமல் அவரைத் தண்டிப்போரைச் சான்றோர் ஒரு பொருளாகக் கருதி மதிக்கமாட்டார்கள். ஆனால் அயலார் செய்திடும் தீமையைப் பொறுத்தாற்றிக் கொள்வோரை அறவோர் அருமையும் அழகும் மதிப்பும் மிக்க பொன்னைப் போன்று போற்றிப் பேணிக்கொள்வர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இக்காலத்தில் பிள்ளைகள் பொதுவாகப் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிவதில்லை . ஓர் அம்மா தம் மகனிடம், "நான் உன்னைப் பெத்த அம்மாடா; என் பேச்சைக் கேளுடா" என்றதற்கு அவன், 'என்னைப் பெத்ததினால்தான் நீ 'அம்மா', இல்லேன்னா வெறும் 'சும்மா', பேசாம போமா' என்றான்.

ஒருவருக்கு ஐந்து ஆண்பிள்ளைகள் இருந்தும் அவரை யார் கேட்டாலும் அவர் தமக்கு ஒரே மகன்தான் என்று பதில் சொல்வார். ஏனெனில் அவருடைய ஐந்து மகன்களில் ஒருமகன் மட்டும்தான் அவருடைய பேச்சைக் கேட்டு நடந்தான்.

உலக மக்கள் அனைவருமே கடவுளுடைய பிள்ளைகள் என்றாலும், கடவுளால் சிறப்பாக அன்பு செய்யப்பட்டு அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல் "இறைமக்கள்" என்று அழைக்கப் பட்டனர். ஆனால், அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியா மல், அவருடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி, திமிர் பிடித்தவர் களாகவும் வணங்காக் கழுத்துடையவர்களாகவும் வாழ்ந்தனர்.

இஸ்ரயேல் மக்களைப் பற்றி இறைவன் இறைவாக்கினர் எசாயா வாயிலாகக் கூறியுள்ளது நமது நெஞ்சத்தைக் கனக்கச் செய்கிறது. “விண்வெளியே கேள்; மண்ணுலகே செவிகொடு ... பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன். அவர்களே! எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்.., கேடுகெட்ட மக்கள் இவர்கள், ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்” (எசா 1:2-4).

இந்நிலையில், "என் கடவுளே உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்" (எபி 10:7) என்று கூறிக்கொண்டே இவ்வுலகுக்கு வந்த கிறிஸ்து ஒருவரே கடவுளுக்கு உகந்த மகன். எனவேதான் கிறிஸ்து திருமுழுக்குப் பெற்றபோது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (லூக் 3:21) என்று கடவுள் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தார்.

கிறிஸ்து கடவுளுக்கு உகந்த மகன். ஏனெனில் அவர் 'கடவுளின் துன்புறும் ஊழியன்.' உண்மையில், கிறிஸ்து திருமுழுக்குப் பெற்றபோது, இறைவாக்கினர் எசாயா கடவுளின் துன்புறும் ஊழியன் குறித்து எழுதியுள்ள நான்கு கவிதைகளையும் நிறைவு செய்ய முன்வந்தார். அக்கவிதைகளில் ஒன்றுதான் இன்றைய முதல் வாசம். துன்புறும் ஊழியனின் சிறப்புப் பண்புகள் வருமாறு:
1. அவர்மீது கடவுளுடைய ஆவி தங்கும் (எசா 42:1).
2. நாள்தோறும் அவர் கடவுளுக்குச் செவிமடுப்பார் (எசா 50:4-5).
3, மனிதருடைய பாவங்களுக்குக் கழுவாயாக அவர் தம்மையே பலியாக ஒப்புக்கொடுப்பார், அதன் விளைவாகக் கடவுள் அவரை மகிமைப்படுத்துவார் (எசா 53:4-7).

கிறிஸ்து யோர்தான் ஆற்றில் பெற்றத் திருமுழுக்கு அவர் கல்வாரியில் சிலுவையில் பெறவிருந்த திருமுழுக்குக்கு முன் அடையாளமாகத் திகழ்ந்தது. "நான் பெறவேண்டிய திருமுழுக்கு ஒன்று உண்டு. அது நிறைவேறும் அளவும் நான் மிகவும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்" (லூக் 12:50) என்று கிறிஸ்து கூறியது மேலே கூறப்பட்டுள்ள உண்மையை உறுதி செய்கிறது. கிறிஸ்துவைப்பற்றி எபிரேயர் திருமுகம் கூறுவது நமது ஆழ்தியானத்துக்கு உரியது. "அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்” (எபி5:8-9).

நாம் கிறிஸ்துவின் மகிமையில் பங்குபெற வேண்டு மென்றால் அவருடன் துன்புறுவது இன்றியமையாத ஒன்றாகும். "நாம் கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும். அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்குபெறுவோம்" (உரோ 8:17).

திருமுழுக்கு வாயிலாக நாம் கடவுளின் பிள்ளைகளாகும் பேறுபெற்றுள்ளோம், கடவுள் நமக்கு அச்சத்தின் மனப்பான்மையை அருளாமல், கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனநிலையைக் கொடுத்துள்ளார். எனவே அவரை அப்பா, தந்தையே என அழைக்கிறோம் (உரோ 8:15). நாம் பெயரளவில் மட்டுமல்ல, உண்மையிலேயே கடவுளுடைய மக்கள் (1 யோவா 3:1), எனவே, நாம் எங்கும், எதற்கும் அஞ்சக்கூடாது. உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படக்கூடாது.

மனநோயாளி ஒருவர் தன்னை எலியென்று நினைத்து, பூனையைக் கண்டால் பயந்து ஓடுவார், மனநல மருத்துவர் அவரிடம், "நீ மனிதன், எலி அல்ல" என்றார், அதற்கு அவர், "டாக்டர்! நான் மனிதன். எலி அல்ல என்பது உங்களுக்குத் தெரியும்; எனக்குத் தெரியும்; ஆனால் அது அந்தப் பூனைக்குத் தெரியுமா?" என்று கேட்டு அழுதார்.

நாம் கடவுளின் மக்கள் என்பது பேய்க்குத் தெரியுமா? என்றுக் கேட்டு நம்மில் பலர் அஞ்சி அஞ்சி சாகிறோம். இது தேவையா? கிறிஸ்து அலகையை இவ்வுலகின் தலைவன் என்று குறிப்பிட்டு, "இவ்வுலகின் தலைவன் வந்து கொண்டிருக்கிறான், அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை " (யோவா 14:31) என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

எவ்வாறு அலகைக்குக் கிறிஸ்துவின்மேல் அதிகாரம் இல்லையோ, அவ்வாறே அதற்கு நம்மீதும் அதிகாரம் இல்லை. நாம் இடம் கொடுக்கவில்லையென்றால், அலகை நமக்குள் நழைய முடியாது. "அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்போது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும். கடவுளை அணுகிச் செல்லுங்கள். அவரும் உங்களை அணுகி வருவார்” (யாக்கோபு 4:7).

ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடும் இன்று நமது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொள்வோம். ஒருமுறை திருமுழுக்குப் பெற்றவர்கள் மீண்டும் திருமுழுக்குப் பெறத் தேவையில்லை, திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொண்டால் போதும். தீமைக்குக் காரணமாகிய அலகையையும் அதன் செயல்பாடுகளையும் விட்டுவிடுவோம். குறிப்பாக, காமம், குடிவெறி, களியாட்டம், போட்டி, பொறாமை, கட்சிமனப்பான்மை, ஜாதிவெறி, மொழிவெறி ஆகியவற்றைத் தூக்கி எறிவோம். கடவுளையும் திருச்சபையையும் நம்பி, புதுப்பிறப்படைந்து புதுவாழ்வு வாழ்வோம். " நாம் நெஞ்சில் நிறுத்த வேண்டியது: “ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது, அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ ” (2 கொரி 5:17).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருமுழுக்கு நீரின்றி அமையாது வாழ்வு

“திருஅவையிடம்‌ தண்ணீரும்‌ கண்ணீரும்‌ உள்ளன. திருமுழுக்கின்‌ தண்ணீர்‌. மனமாற்றத்தின்‌ கண்ணீர்‌” - இது கத்தோலிக்கத்‌ திருஅவையில்‌ பாவங்களைக்‌ கழுவிப்‌ போக்கும்‌ இரு அருள்‌ அடையாளங்களைப்‌ பற்றி தூய அம்புரோசியார்‌ சொன்னது.

பிறப்பு வழிப்‌ பாவத்தைப்‌ போக்கத்‌ திருமுழுக்கு.
பலவீனத்தால்‌ செய்யும்‌ பாவம்‌ தீர ஒப்புரவு.
நீரின்றி அமையாது உலகு (குறள்‌). திருமுழுக்கு நீரின்றி அமையாது கிறிஸ்தவ வாழ்வு. நீர்‌ - அது உயிர்கள்‌ தோன்றுமிடம்‌, வாழுமிடம்‌. “தொடக்கத்தில்‌ கடவுள்‌ விண்ணுலகையும்‌ மண்ணுலகையும்‌ படைத்தபோது ... நீர்த்திரளின்‌ மேல்‌ கடவுளின்‌ ஆவி அசைந்தாடிக்‌ கொண்டிருந்தது” (தொ.நூ. 1:1-2). உயிர்‌ அளிப்பவரல்லவா தூய ஆவி!

திருமுழுக்கின்‌ முன்னடையாளங்களாக நீரோடு தொடர்புடைய நிகழ்வுகள்‌ இரண்டு, பழைய ஏற்பாட்டில்‌ காணக்கிடக்கின்றன. 1. நோவா காலத்துப்‌ பெருவெள்ளம்‌ (1 பேதுரு 3:20,21) 2. விடுதலைப்‌ பயணத்தில்‌ செங்கடல்‌ (1 கொரி. 10:1-2)

இரண்டு நிகழ்வுகளுமே தீமையை அழிப்பது. நன்மையைக்‌ காப்பது. நோவா காலத்துப்‌ பெருவெள்ளத்தோடு ஒப்பிட்டு. திருமுழுக்கால்‌ நாம்‌ காப்பாற்றப்படுகிறோம்‌ என்றும்‌ இது கிறிஸ்துவின்‌ - உயிர்த்தெழுதல்‌ வழியாக நமக்கு மீட்பளிக்கிறது என்றும்‌ பேதுரு விளக்குகிறார்‌. செங்கடலைக்‌ கடந்து சென்றது இஸ்ரயேல்‌ மக்களை அடிமை வாழ்வினின்று விடுவித்தது. அவர்கள்‌ மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும்‌ கடலாலும்‌ திருமுழுக்கு பெற்றார்கள்‌ என்கிறார்‌ பவுல்‌.

யோர்தான்‌ ஆற்றுநீர்‌ நாமானுக்கு பாவத்திலிருந்தும்‌ நோயிலிருந்தும்‌ விடுதலை அளித்தது. பாவமே நோய்களுக்குக்‌ காரணம்‌ என்பது யூதர்களின்‌ பார்வை. நாமானின்‌ நோய்‌ நீங்கிற்று என்றால்‌ அவரது பாவம்‌ நீங்கியது என்றுதானே பொருள்‌!

அதே யோர்தானில்‌ இயேசு திருமுழுக்குப்‌ பெறுகிறார்‌. பாவ மன்னிப்புக்காக யூதர்களிடையே இருந்த துப்புரவுச்‌ சடங்கு திருமுழுக்கு. புற இனத்தாரை யூத சமயத்தில்‌ இணைக்கும்‌ சின்னமாகவும்‌ அது எண்ணப்பட்டது. செங்கடலையும்‌ யோர்தான்‌ ஆற்றையும்‌ கடந்து வாக்களித்த நாட்டில்‌ “நுழையாத எந்தப்‌ புற இனத்தவரும்‌ யூத சமயத்தைத்‌ தழுவுமுன்‌ திருமுழுக்குப்‌ பெற வேண்டும்‌. இயேசு பாவியும்‌ அல்ல (யோ. 8:46) பிற இனத்தாரும்‌ அல்ல. பின்‌ ஏன்‌ அவருக்குத்‌ திருமுழுக்கு? எனவேதான்‌ இயேசுவின்‌ தூய்மையைப்‌ பறைசாற்றும்‌ வகையில்‌ திருமுழுக்கு யோவான்‌ கேட்பார்‌: “நான்தான்‌ உம்மிடம்‌ திருமுழுக்குப்‌ பெற வேண்டியவன்‌; நீரா என்னிடம்‌ வருகிறீர்‌?” (மத்‌. 3:14).

இயேசுவின்‌ பதில்‌ “இப்பொழுது விட்டுவிடும்‌”. இது பொருத்தமில்லாததுதான்‌. ஆனால்‌ என்னுடைய வருகையின்‌ நோக்கத்திற்கு முற்றிலும்‌ பொருந்தியதே. தனிப்பட்ட நபராக அல்ல, பாவமற்றவராயினும்‌, பாவத்துக்கு ஆளான மனித குலத்தின்‌ பதிலாளாய்த்‌ தன்னைக்‌ கருதினார்‌. மனம்‌ வருந்த, பாவம்‌ எதுவும்‌ அவரிடம்‌ இல்லை. கழுவப்படக்‌ கறையும்‌ இல்லை. அது தந்தைக்கு ஏற்புடையது (மத்‌. 3:15). “நாம்‌ கிறிஸ்து வழியாகத்‌ தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள்‌ பாவம்‌ அறியாத அவரைப்‌ பாவநிலை ஏற்கச்‌ செய்தார்‌” (2 கொரி. 5:21).

இயேசு பெற வேண்டியது யோர்தான்‌ திருமுழுக்கு அல்ல. அது கல்வாரித்‌ திருமுழுக்கு. “நான்‌ பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும்‌ நான்‌ மிகவும்‌ மனநெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்‌” (லூக்‌. 12:50). இயேசுவைப்‌ பொருத்தவரை அவரது இறப்பே அவருக்குத்‌ திருமுழுக்கு.

யோர்தானில்‌ இயேசு பாவிகளுக்கு ஒப்பானவராக இருந்தார்‌. கல்வாரியிலோ பாவிகளுடைய பாவங்களின்‌ முழுச்சுமையையும்‌ தாங்கினார்‌. யோர்தான்‌ திருமுழுக்கில்‌ பாவிகளோடு பாவியாகத்‌ தன்னை ஒன்றுபடுத்திக்‌ கொண்ட இயேசு, கல்வாரி இறப்பில்‌ பாவிகளோடே இறக்கின்றார் - வலதுபுறம்‌ ஒரு கள்வனும்‌ இடதுபுறம்‌ ஒரு கள்வனுமாக. பாவிகளின்‌ மத்தியில்‌ ஒரு பாவியாக உயிர்‌ விடுகின்றார்‌.

“இவரே என்‌ அன்பார்ந்த மகன்‌” (மத்‌. 3:17) என்று வானகத்‌ தந்தையால்‌ அறிவிக்கப்பட்ட இயேசு, கல்வாரி இறப்பில்‌ “இவரே கடவுளின்‌ மகன்‌” (மத்‌. 27:54) என்று நூற்றுவர்‌ தலைவனால்‌ அறிக்கையிடப்படுகிறார்‌. இயேசுவின்‌ பணி வாழ்வு அனைத்தும்‌ ஒரு திருமுழுக்கிலிருந்து மற்றொரு திருமழுக்கிற்கு அவரை கட்டுச்‌ சென்ற ஒரு பயண வாழ்வு.

நீரில்‌ மூழ்கி எழுவது கிறிஸ்துவோடு இறந்து புதைக்கப்பட்டு உயிர்த்துப்‌ புதுவாழ்வுக்குச்‌ செல்லும்‌ அனுபவத்தின்‌ அடையாளம்‌. “திருமுழுக்கினால்‌ கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும்‌ நாம்‌ அனைவரும்‌ அவருடைய சாவிலும்‌ அவரோடு இணைந்திருக்கிறோம்‌ என்பது உங்களுக்குத்‌ தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்‌தை உயிர்த்தெழச்‌ செய்தார்‌. அவ்வாறு நாமும்‌ புதுவாழ்வு பெற்றவர்களாய்‌ வாழும்படி திருமுழுக்கின்‌ வழியாய்‌ அவரோடு அடக்கம்‌ செய்யப்பட்டுள்ளோம்‌” (உரோமை. 6:3-4) (மேலும்‌ காண்க : கொலோ 2:12). முக்கியத்துவம்‌ அனுபவத்திற்குத்‌ தானே தவிர அடையாளத்துக்கு அல்ல.

தி.ப, 8:19-24இல்‌ காணும்‌ மந்திரவாதி சீமோனைப்‌ பற்றி எருசலேம்‌ ஆயர்‌ சிரில்‌ கூறுகிறார்‌: “மந்திரவாதி சீமோன்‌ தண்ணீருக்குள்‌ போனான்‌. ஆனால்‌ அவன்‌ கிறிஸ்துவோடு சாகவில்லை. தண்ணீரிலிருந்து வெளியே வந்தான்‌. ஆனால்‌ அவன்‌ கிறிஸ்துவோடு உயிர்க்கவில்லை”. எனவே திருமுழுக்கு என்பது தண்ணீருக்குள்‌ ழுழ்குவதும்‌ தண்ணீரிலிருந்து வெளியே வருவதும்‌ அல்ல. அது பாஸ்கா மறைபொருளில்‌ பங்கேற்பது. கிறிஸ்துவோடு பாவத்துக்கு இறப்பது. பழைய இயல்யைய்‌ புதைப்பது. புது வாழ்வுக்கு, அருள்‌ வாழ்வுக்கு இயேசுவோடு உயிர்ப்பு.

திருமுழுக்கு ஓர்‌ உன்னத இறையனுபவம்‌. தலையில்‌ தண்ணீர்‌ ஊற்றினாலும்‌ சரி, தண்ணீரில்‌ மூழ்கி நீச்சலடித்தாலும்‌ சரி. எல்லாமே அடையாளங்கள்தாம்‌. அருள்‌ அடையாளங்கள்‌ குறிக்கும்‌ அருள்‌ நிலையே முக்கியம்‌. திருமுழுக்கினால்‌ நாம்‌ 1: கடவுளின்‌ பிள்ளைகளாகிறோம்‌. 2. தூய ஆவியின்‌ ஆலயமாகிறோம்‌. 3. திருஅவையின்‌ உரிமையுள்ள உறுப்பினராகிறோம்‌.

வீணான வேண்டாத சர்ச்சைகளில்‌ மூழ்கி திருமுழுக்குச்‌ சிந்தனையை, அதன்‌ அழைப்பை, அர்ப்பண வாழ்வை இழந்து கொண்டிருக்கிறோம்‌. நெருப்புத்‌ திருமுழுக்குப்‌ பற்றி மத்‌. 3:11 பேசுகிறது. ஆவிக்காரர்கள்‌ யாரேனும்‌ அதனை முயன்று பார்த்து நெருப்பை அள்ளித்‌ தங்கள்‌ தலையில்‌ கொட்டிக்‌ கொள்ள முனைவார்களா? நீர்‌. நெருப்பு என்பதெல்லாம்‌ வெறும்‌ அடையாளங்களே; அடையாளத்துக்கு அழுத்தம்‌ கொடுத்து அனுபவ உண்மையைக்‌ குழிதோண்டிப்‌ புதைப்பதா?

பாவத்தை மன்னிப்பது நீரா? அல்ல. நீரில்‌ அசைவாடும்‌ தூய ஆவியாரே! திருமுழுக்கில்‌ செயல்படுவது நீரல்ல. ஆவியாரே. ஒரு துளி நீரிலும்‌ ஆவியார்‌ செயல்படுகிறார்‌. ஒரு கடல்‌ நீரிலும்‌ செயல்படுகிறார்‌. எனவே முழுக்குத்‌ திருமுழுக்குப்‌ பெறாதவர்களுக்கு மீட்பு இல்லை என்பது விவிலிய அறியாமை.

தண்ணீர்த்‌ திருமுழுக்கு இயேசுவை இரத்தத் திருமுழுக்குக்கு இட்டுச்‌ செல்கிறது. தன்‌ சீடர்களையும்‌ அந்த இரத்தத்‌ திருமுழுக்குக்கு அழைக்கிறார்‌ “நீங்கள்‌ என்ன கேட்கிறீர்கள்‌ என உங்களுக்குத்‌ தெரியவில்லை. நான்‌ குடிக்கும்‌ துன்பக்‌ கிண்ணத்தில்‌ உங்களால்‌ குடிக்க இயலுமா? நான்‌ பெறும்‌ திருமுழுக்கை உங்களால்‌ பெற இயலுமா?” (மார்க்‌. 10:38). இறையாட்சி விழுமியங்களுக்காக இரத்தம்‌ சிந்துதலையே உயர்ந்த திருமுழுக்காகக்‌ கருதுகிறார்‌ இயேசு: இந்த இரத்தத்‌ திருமுழுக்குக்குத்‌ தயாராக இல்லையென்றால்‌ தண்ணீர்த்‌ திருமுழுக்குக்‌ கூட எந்த அளவுக்கும்‌ பொருள்‌ உள்ளதாக இருக்கும்‌?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

“விட்டுவிடுகிறீர்களா? நம்புகிறீர்களா?

கடவுளோடு ஒன்றித்திருத்த வாழ்வு:

கிறிஸ்துவின்மீது கொண்ட ஆழமான நம்பிக்கைக்காக நாஜிக்களால் வதைமுகாமில் அடைக்கப்பட்டவர் அருள்பணியாளர் ஆல்பிரட் டெல்ப் (Alfred Delp 1907-1945). இவர் வதைமுகாமில் அடைக்கப்பட்ட பிறகும்கூட யாருக்கும் தெரியாமல் திருப்பலி நிறைவேற்றியும், கிறிஸ்துவைப் பற்றி எழுதியும் வந்தார்.

இந்நிலையில் இவர் 1945 ஆம் ஆண்டு, பிப்ரவரி 2 ஆம் நாள் நாஜிக்களால் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்பு எழுதிய வார்த்தைகள் இவை: “கடவுளோடு ஒன்றித்திருக்கும்போதே ஒரு மனிதன் மனிதனாக இருக்கின்றான்.”

தான் நாஜிக்களால் கொல்லப்படப் போகிறோம் என்று தெரிந்தபின்பும்கூட, கடவுளோடு ஒன்றித்து வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை என்று வாழ்ந்த அருள்பணியாளர் ஆல்பிரட் டெல்ப், திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் எப்படி வாழவேண்டும் என்பதற்கு நமக்கெல்லாம் முன்மாதிரி. இன்று நாம் ஆண்டவருடைய திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நம்மைக் கடவுளோடு ஒன்றித்து வாழ அழைக்கின்றது. கடவுளோடு ஒன்றித்து வாழும் ஒருவரது வாழ்க்கை எப்படி இருக்கும், அதனால் அவர் பெறுகின்ற கைம்மாறு என்ன? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.

எதையெல்லாம் விட்டுவிட வேண்டும்?

திருமுழுக்குத் திருச்சடங்கின்போது அருள்பணியாளர் கேட்கின்ற முதற்கேள்வி, “பாவத்திற்குக் காரணனும் தலைவனுமாகிய சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?” என்பதுதான். இதற்கு அந்தத் திருச்சடங்கில் பங்கேற்கிற அனைவரும் “விட்டுவிடுகிறேன்” என்று பதிலளிக்கின்றார்கள். முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாவும் ஆண்டவரையும் அவரது கட்டளையையும் விட்டுவிட்டு (தொநூ 2:16,17), பாவத்திற்குத் தலைவனான சாத்தானைப் பற்றிக்கொண்டு, அதன்மூலம் பாவம் செய்தார்கள். இவ்வாறு வரும் பிறப்பு நிலை பாவத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமெனில், ஒவ்வொருவரும் சாத்தானை விட்டுவிட வேண்டும். அதனாலேயே அருள்பணியாளர் திருமுழுக்குத் திருச்சடங்கின்போது, “சாத்தானை விட்டுவிடுகின்றீர்களா?” என்று கேட்கின்றார்.

பவுல், தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த நாட்டங்களையும் மறுத்து வாழவேண்டும் என்கிறார். நாம் ஏன் இறைப்பற்றின்மையை மறுத்து வாழவேண்டும்? என்ற எழலாம். “இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் செயலாலும் சொல்லாமலும் இறப்பை வரவழத்தார்கள்” (சாஞா 1:16) என்கிறது சாலமோனின் ஞான நூல். இறைப்பற்றின்மை இறப்பை வருவிக்கும் என்பதால்தான் பவுல், இறைப்பற்றிமையை மறுத்து வாழச் சொல்கின்றார்.

இறைப்பற்றின்மையால் இறப்பைத் தங்கள் வருவித்துக்கொண்டவர்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுதான் முதல் பெற்றோர். கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்திருந்தபோது (சாஞா 2:23), கடவுளின் கட்டளையை மீறி அல்லது இறைப்பற்றின்மையால் இறப்பைத் தங்கள்மேல் வருவித்துக்கொண்டார்கள் அவர்கள் (தொநூ 2:17). ஆகையால், இறைப்பற்றின்மை இறப்பை வருவிக்கும் என்பதால் அந்த இறைப்பற்றின்மை நமக்குள் தூண்டி எழுப்பும் சாத்தானையும் அவனுடைய மாயக் கவர்ச்சிகளையும் விட்டு விடுவது நல்லது

யார்மீது நம்பிக்கை கொள்வது? திருமுழுக்குத் திருச் சடங்கில் அருள்பணியாளர், “சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?” என்று கேட்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. அதற்கு அடுத்ததாக, “விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறீர்களா?” என்று கேட்கின்றார். இதற்கு அனைவரும், “நம்புகிறேன்” என்று மறுமொழி கூறுகின்றார்கள். எனில், பாவத்திற்குத் தலைவனாகிய சாத்தானை விட்டுவிடுவதோடு அல்லாமல், கடவுளை நம்ம வேண்டும். அப்பொழுதுதான் ஒருவருடைய வாழக்கை பெறும்.

இரண்டாம் வாசகத்தில் பவுல், “இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த நாட்டங்களையும் மறுத்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து, “கட்டுப்பாடுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இறையருளால் பயற்சி பெறுகின்றோம்” என்கிறார். நாம் ஏன் இறைபற்றுடன் வாழவேண்டும் என்பதற்குச் சாலமோனின் ஞான நூல், “இறைப்பற்று எல்லாவற்றையும்விட வலிமை மிக்கது” (சாஞா 10:12) என்று விளக்கம் தருகின்றது. இந்த வார்த்தைகளை நாம் இன்றைய முதல் வாசகத்தோடு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும்.

கடவுளாகிய ஆண்டவரை அன்பு செய்யாமல், அவர் கொடுத்த கட்டளையையும் கடைப்பிடிக்காததால் யூதா நாட்டினர் பாபிலோனியரிடமிருந்து இரு மடங்கு தண்டனை பெற்றனர். இந்நிலையில் கடவுள் அவர்களது குற்றங்களை மன்னித்து, அவர்களது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். தவிர, “ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்று இறைவாக்கினர் எசாயா வழியாக அழைப்பு விடுக்கின்றார். கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக இத்தகையதோர் அழைப்பு விடுகின்றார் எனில், யூதா நாட்டினர் தன்னை மறந்து இறைப்பற்றில்லாமல் வாழ்ந்தால் தண்டனை பெற்றார்கள். அதனால் அவர்கள் தன்மீது நம்பிக்கை கொண்டு இறைப்பற்றுடன் வாழ்ந்தால் ஆறுதலையும் அரவணைப்பையும் பெறுவார்கள் என்று கடவுள் சொல்லாமல் சொல்கின்றார்.

ஆதலால், யூதா நாட்டினர் என்றில்லை, ஒவ்வொருவரும், “மனிதர்மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவது நலம்” (திபா 118:8)

ஆண்டவரின் அன்பார்ந்த மக்களாவோம்: சாத்தானை விட்டுவிட்டுக் கடவுளை நம்புகிற ஒருவர் அவரது பிள்ளையாகின்றார். அதன்பிறகு அவர், கடவுளின் அன்பார்த்த மகனான இயேசுவைப் போன்று வாழ அழைக்கப்படுகின்றார்.

நற்செய்தியில் இயேசு மனிதர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்விதமாய்த் திருமுழுக்குப் பெறுகின்றார். அவ்வாறு அவர் திருமுழுக்குப் பெறுகின்றபோது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்றொரு குரல் வானத்திலிருந்து ஒலிக்கின்றது. இயேசு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி (லூக் 22:42), அவரது அன்பார்ந்த மகனானார். திருமுழுக்குப் பெற்றதன் மூலம் சாத்தானை விட்டுவிட்டு, ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழும் நாம், இயேசுவைப் போன்று கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்தால், அவரது மக்களாவோம்.

இயேசு திருமுழுக்குப் பெற்ற பிறகு, சென்ற இடங்களில் எல்லாம் நன்மை செய்தார் (திப 10:38). திருமுழுக்குப் பெற்றிருக்கும் நாமும் இயேசுவைப் போன்று, செல்லும் இடங்களில் எல்லாம் நன்மை செய்ய அழைக்கப்படுகின்றோம். இன்றைக்குப் பலர் திருமுழுக்கில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டுச் சாத்தனைப் பற்றிக்கொண்டு வாழ்வது வேதனையாக இருக்கின்றது. ஆண்டவருடைய திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நமது வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொண்டு, ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்வது நல்லது. ஏனெனில், ஆண்டவரோடு ஒன்றித்து வாழும்போதுதான் நமது வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்கின்றது.

சிந்தனைக்கு: ‘கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள்’ (கலா 3:27) என்பார் புனித பவுல். ஆகையால், திருமுழுக்கின் மூலம் கிறிஸ்துவை அணிந்து கொண்ட நாம், அவரைப் போன்று சென்ற இடங்களில்லாம் நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அவரது குரல்!

இன்று ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த விழாவின் பின்புலத்தில் நமக்கு இயல்பாக மூன்று கேள்விகள் எழுவதுண்டு: (அ) இயேசுவே வயது வந்தபின்னர் தான் திருமுழுக்கு பெற்றார். அப்படி இருக்க, கத்தோலிக்கத் திருஅவையில் நாம் குழந்தைகளாக இருக்கும்போதே திருமுழுக்குப் பெறுவது ஏன்? (ஆ) பாவ மன்னிப்புக்கான திருமுழுக்கை யோவான் வழங்கினார் எனில், பாவமே அறியாத இயேசு அத்திருமுழுக்கைப் பெற வேண்டியதன் நோக்கம் என்ன? (இ) 'அவர் தூய ஆவியால் திருமுழுக்கு கொடுப்பார்' என்று இயேசுவைப் பற்றி யோவான் முன்னுரைக்கிறார் எனில், நாம் பெற வேண்டிய இந்த இரண்டாவது திருமுழுக்கு என்ன? இதுதான் 'முழுக்கு ஸ்நானமா'? அல்லது இதுதான் 'அபிஷேகம், இரட்சிப்பு பெறுதலா?'

விரைவாக இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுவிட்டு, நம் சிந்தனைக்குள் நுழைவோம். (அ) திருமுழுக்கு நாம் தொடக்கப் பாவத்தைக் கழுவுகிறது. மேலும், திருமுழுக்கு என்பது திருஅவை என்னும் சமூகத்திற்குள் உறுப்பினராக மாறும் நுழைவுச் சடங்கு. ஆக, குழந்தையாக இருக்கும்போதே திருமுழுக்கு கொடுப்பதை கத்தோலிக்கத் திருஅவை முன்மொழிகிறது. (ஆ) இயேசு திருமுழுக்கு பெறுவதன் நோக்கம் பாவமன்னிப்பு அல்ல. மாறாக, இது மனுக்குலத்தோடு அவர் முழுமையாக ஒன்றித்திருந்ததையும், மற்றும் அவருடைய பொதுவாழ்வு அல்லது பணிவாழ்வின் தொடக்கத்தையும் குறிக்கிறது. (இ) 'தூய ஆவியால் திருமுழுக்கு' என்பது லூக்கா நற்செய்தியில் திருத்தூதர்பணிகள் நூலில் வரப் போகின்ற ஆவியார் அருள்பொழிவைக் குறிக்கின்றது. தூய ஆவியாரின் கொடைகளை நாம் உறுதிப்பூசுதல் அருளடையாளத்தில் பெறுகின்றோம். திருமுழுக்கில் நம்மேல் பொழியப்பட்ட ஆவி – தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் - இந்த அருளடையாளத்தில் உறுதிசெய்யப்படுகின்றார். ஆக, நாம் முழுக்கு ஸ்நானம், அல்லது ஆவியின் அபிஷேகம் அல்லது இரட்சிப்பு பெறத் தேவையில்லை.

நம் திருமுழுக்குச் சடங்கில், 'எப்பத்தா' ('திறக்கப்படு') என்னும் ஒரு பகுதி உண்டு. அதில், திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளர், 'செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும், ஆண்டவர் இயேசு செய்தருளினார். நீ விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும் மகிமையும் விளங்கக் காதால் கேட்கவும், அந்த நம்பிக்கையை நாவால் அறிக்கையிடவும் அவரே அருள்செய்தருள்வாராக!' என்று சொல்லி, குழந்தையின் உதடுகள் மற்றும் காதுகளில் சிலுவை அடையாளம் வரைகிறார்.

'குரல் கேட்டல்' என்பது திருமுழுக்கு நிகழ்வில் முதன்மையான ஒன்றாக இருக்கிறது. 'அவரது குரல் கேட்டல்' என்பதை நாம் இன்றைய நாளின் மையச் சிந்தனையாக எடுத்துக்கொள்வோம்.

முதல் ஏற்பாட்டில், 'குரல்' பற்றிய மூன்று பகுதிகள் முக்கியமானவை: (அ) ஆதாம் கேட்ட குரல். நம் முதற்பெற்றோர் விலக்கப்பட்ட கனியை உண்கின்றனர். ஆண்டவராகிய கடவுள் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த ஓசை 'கேட்டு,' அவர்கள் மரங்களுக்கு இடையே ஒளிந்துகொள்கின்றனர். 'நீ எங்கே இருக்கின்றாய்?' என்று ஆண்டவர் கேட்டபோது, 'உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன்' என்கிறார் (காண். தொநூ 3:8-10). இந்நிகழ்வில், 'குரல்' அச்சம் தருகிறது. (ஆ) பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டுக்குள் இஸ்ரயேல் மக்கள் நுழையுமுன் மோசே வழியாக ஆண்டவர் பேசுகின்றார்: 'நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்து, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு' (இச 15:5). இங்கே, 'குரல்' என்பது கீழ்ப்படிதலுக்கான அழைப்பாக இருக்கின்றது. (இ) இஸ்ரயேல் மக்கள் அசீரிய மற்றும் பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்தபோது, ஆண்டவராகிய கடவுள் தங்களைவிட்டு விலகியதாக நினைத்தனர். அவர்களுக்குத் தன் உடனிருப்பை முன்மொழிகின்ற ஆண்டவர், 'நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், 'இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்' என்னும் குரல் பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்'' (எசா 30:21). இங்கே, 'குரல்' உடனிருப்பின் மற்றும் வழிகாட்டுதலின் அடையாளமாக இருக்கிறது.

ஆண்டவரின் குரல் அச்சம் தருவதாகவும், கீழ்ப்படிதலுக்கான அழைப்பாகவும், உடனிருப்பின் அடையாளமாகவும் இருக்கிறது. சில நேரங்களில் ஆண்டவரின் குரல் அரிதாக இருக்கிறது (காண். 1 சாமு 3:1).

இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை, ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் என்று சொல்லப்படும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா மட்டுமே பதிவு செய்கின்றனர். லூக்கா மற்ற நற்செய்தியாளர்களைவிட மூன்று விதங்களில் முரண்படுகின்றார்: (அ) இயேசுவின் திருமுழுக்கின்போது திருமுழுக்கு யோவான் சிறையில் இருப்பது போல பதிவு செய்கிறார் லூக்கா (காண். 3:20). 'மக்கள் எல்லாரும் திருமுழுக்கு பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்' என்று பதிவு செய்யும் லூக்கா, யார் இயேசுவுக்குத் திருமுழுக்கு கொடுத்தார்கள்? என்பதைப் பதியாமல் விடுகின்றார். (ஆ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில், இயேசு ஆற்றை விட்டு வெளியே வந்தவுடன் தந்தையின் குரல் கேட்கிறது. ஆனால், லூக்கா நற்செய்தியில், இயேசு திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது, 'தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்க' வானத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது. (இ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் இயேசு 'தண்ணீரால்' மட்டுமே திருமுழக்கு பெறுகின்றார். ஆனால், லூக்காவில், 'தண்ணீர்,' 'தூய ஆவி' என இரண்டு நிலைகளில் திருமுழுக்கு பெறுகிறார் இயேசு. இந்த வேறுபாடுகளின் வழியாக, லூக்கா, இயேசு திருமுழுக்கு பெறும் நிகழ்வுக்கு முக்கியத்துவம் தராமல், அந்த நிகழ்வின் பொருள் என்ன என்பதை முதன்மைப்படுத்துகின்றார். இயேசு, தந்தையின் குரல் கேட்கும் நிகழ்வு மூன்று நிலைகளில் நடக்கிறது: (அ) திருமுழுக்கு பெறுகின்றார், (ஆ) இறைவேண்டல் செய்கின்றார், (இ) தூய ஆவியாரால் நிரப்பப் பெறுகின்றார். இந்த மூன்றும் நடந்தேறும்போதுதான், 'அவரது குரல்' ஒலிக்கின்றது. நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில், தான் மெசியா அல்ல என்பது யோவான் மறுப்பதோடு, இயேசு தருகின்ற திருமுழுக்கின் மேன்மையை – தூய ஆவியாரால் திருமுழுக்கு – எடுத்துரைக்கின்றார். நம்பிக்கையாளர்கள் பெறுகின்ற தூய ஆவியாரை இது குறிக்கிறது. யோவான், ஆண்டவரின் குரலைக் கேட்டவராக, தான் மெசியா அல்ல என ஏற்றுக்கொள்கிறார். மேலும், அவர் தன்னையே பாலைவனத்தில் ஒலிக்கும் குரலாக மட்டுமே அடையாளப்படுத்துகின்றார்.

இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வுக்குப் பின்னர் மூன்று நிகழ்வுகள் விரைவாக நடந்தேறுகின்றன: (அ) தூய ஆவியால் இயேசு பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார் (லூக் 4:2), (ஆ) தூய ஆவியின் வல்லமையால் கலிலேயாவுக்குப் போய்த் தன் பணியைத் தொடங்குகின்றார் (4:14), மற்றும் (இ) 'ஆண்டவரின் ஆவி என்மேல் உளது' என்று நாசரேத்து தொழுகைக்கூடத்தில் அறிக்கையிடுகின்றார் (4:18). பாலைநிலத்தில் இயேசு அலகையை எதிர்கொள்கின்றார். இறையாட்சிப் பணியைத் தொடங்குகின்றார். தானே அருள்பொழிவு பெற்றவர் என்பதை அறிக்கையிடுகின்றார். இந்த மூன்று நிகழ்வுகளுக்கும் அடிநாதமாக இருப்பது, 'தந்தையின் குரல்' கேட்ட இயேசுவின் அடித்தள அனுபவம்தான். 'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்னும் இந்தக் குரல்தான் இயேசுவைப் பொதுவாழ்வுக்கு அறிமுகம் செய்கிறது. இந்தக் குரல்தான் இயேசுவோடு என்றும் உடனிருக்கிறது.

முதல் வாசகத்தில், தன் தூதரை பாபிலோனியாவுக்கு அனுப்புகின்ற கடவுள், அங்கே அடிமைத்தனத்தில் வாழ்ந்த மக்களை நோக்கித் தன் குரலை ஒலிக்கச் செய்கின்றார். இறப்பும், இருளும், அழிவும் மேலோங்கி நின்ற அந்த நேரத்திலும் அவர்கள் அந்தப் புதிய நாட்டில் இயல்பான வாழ்க்கை நடத்தக் கற்றுக்கொண்டனர். வாழ்க்கை என்னதான் இயல்பாக இருந்தாலும் அந்நிய மண்ணில் அவர்கள் இருப்பது அவர்களுக்கே ஏற்புடையதாக இல்லை. அவர்கள் அன்பு செய்த யூதா நாடு மிகவும் அழிந்த நிலையில் இருந்தது. 'சொந்த நாட்டிற்கு இனி திரும்ப மாட்டோம்' என்ற நம்பிக்கையின்மையும் விரக்தியும் மேலோங்கி நின்ற நிலையில், இறைவாக்கினர் எசாயா ஆண்டவரின் வாக்கை அவர்களுக்கு அறிவிக்கின்றார்: 'ஆறுதல் கூறுங்கள். என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்.' இதயத்தில் நம்பிக்கை இழந்த, சிதறுண்டு போன மக்களுக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் கொண்டு செல்லுமாறு எசாயாவை அனுப்புகிறார் இறைவன். இந்த மிகப்பெரும் நாடுகடத்தப்படுதலுக்குக் காரணமான அவர்களின் பாவங்கள் மறக்கப்பட்டன என்பதையும், அவர்கள் நாடு திரும்பும் நேரம் வந்துவிட்டதையும் அறிவிக்குமாறு பணிக்கின்றார். ஆண்டவர் தாமே சிதறுண்ட மக்களைக் கூட்டிச் சேர்த்துத் திரும்பக் கூட்டிவரும் நிகழ்வில் இயற்கையும் கரம் கோர்க்கிறது: 'பாழ்நிலம் சீராகிறது. பள்ளத்தாக்கு நிரப்பப்படுகிறது. மலை, குன்று யாவும் தாழ்த்தப்படுகிறது, கோணலானது நேராக்கப்பட்டு, கரடுமுரடானது சமதளமாக்கப்படுகிறது.

ஓர் ஆயன் தன் ஆடுகளைத் தன் குரலால் வழிநடத்துகிறார் (காண். யோவா 1:1-10). இதே உருவகத்தைக் கொண்டு, ஆண்டவராகிய கடவுள் மூன்று நிலைகளில் தன் மக்களை வழிநடத்துகிறார்: (அ) 'ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்' - ஆக, ஒவ்வொருவரின் மேலும் இறைவனின் கரம் படும். ஆயன் குச்சியைக் கொண்டு சேர்ப்பதுபோல அவர் சேர்க்க மாட்டார். ஏனெனில், குச்சி தண்டனையின் அடையாளமாகும். தன் கைகளால் சிதறுண்டு போய்க்கிடக்கின்ற அனைத்து ஆடுகளையும் ஒன்று சேர்ப்பார். (ஆ) 'அவற்றைத் தம் தோளில் சுமப்பார்' - அடிமைத்தனத்தால் தங்களின் உடல் மற்றும் உள்ளத்தில் வலுவிழந்தவர்களை, அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டவர்களைத் தம் தோளில் சுமப்பார். (இ) 'சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்' - அதாவது, முதுகில் தட்டி அழைத்துக் கொண்டு போவார். சினையாடுகள் எளிதில் சோர்ந்துவிடக் கூடியவை. அவற்றுக்குத் தொடர் அரவணைப்பு அவசியம். அந்த அரவணைப்பை இறைவன் தருவார்.

ஆக, ஆண்டவருடைய குரல் செயல்பாடாகவும் மாறுகிறது.

இரண்டாம் வாசகத்தில், கடவுளின் அருள் இயேசு கிறிஸ்து வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்ற புனித பவுல், திருமுழுக்கு மற்றும் தூய ஆவியார் பொழிவில் நாமும் பங்கேற்பதை நினைவுபடுத்துகின்றார்.

இன்றைய விழா நமக்கு முன்வைக்கும் பாடங்கள் எவை?

(அ) அவரது குரல் கேட்கும் தளங்கள். கூட்டொருங்கியக்கத்துக்கான மாமன்ற கலந்தாலோசித்தல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில், நாம் ஒருவர் மற்றவருடைய குரலைக் கேட்கும் முன்னர், ஆண்டவரது குரலைக் கேட்பது அவசியமாகிறது. ஆண்டவருடைய குரல் கேட்கும் தளங்கள் எவை? பாலைநிலத்தில், அந்நிய நாட்டில், யோர்தான் நதிக்கரையில், இறைவேண்டலில், கிறிஸ்துவின் வெளிப்பாட்டில், அருளடையாளங்களில் என அவருடைய குரல் கேட்டுகொண்டே இருக்கிறது. அவருடைய குரலை நாம் கேட்பதற்குத் தடையாக நாம் கொண்டுள்ள உள் மற்றும் வெளி ஓசைகளை அடையாளம் கண்டு அவற்றின் சப்தங்களைக் குறைத்துக்கொள்தல் நலம்.

(ஆ) அவரது குரலாக நாமும் மாற வேண்டும். 'ஆறுதல் கூறுங்கள். கனிமொழி கூறுங்கள்' என ஆண்டவர் தன் இறைவாக்கினரைப் பணிக்கின்றார். இயேசு திருமுழுக்கு நிகழ்வுகளுக்குப் பின்னர் நற்செய்தி அறிவிப்புக்குப் புறப்பட்டுச் செல்கின்றார். அவருடைய குரலைக் கேட்கின்ற நாம், அவருடைய குரலாக நம் வாழ்வியல் தளங்களில் மாற வேண்டும். குடும்பங்களில், பணியிடங்களில், சமூகத்தில் அவருடைய குரலாக, ஆறுதலின் குரலாக நாம் ஒலிக்க என்ன செய்ய வேண்டும்?

(இ) திருமுழுக்கின் அருளைப் புதுப்பித்தல். குழந்தையாக இருந்தபோது நாம் பெற்ற திருமுழுக்கு அருளடையாளத்தை நினைவுகூருவோம். நம் பெற்றோர், ஞானப் பெற்றோர் நம் சார்பாக நம்பிக்கை அறிக்கை செய்தனர். திருமுழுக்கின் உரிமைகளை நமக்குப் பெற்றுத் தந்ததோடு கடமைகளையும் ஏற்றனர். அவர்களை நாம் நன்றியோடு எண்ணிப் பார்ப்போம். இன்று வயது முதிர்ந்த நிலையில், நாம் அந்த அருளின் தன்மையை உணர்ந்துள்ளோமா? திருமுழுக்கின் முதற் கடமையான நற்செய்தி அறிவித்தலை நாம் செய்கின்றோமா?

'என் உயிரே, ஆண்டவரைப் போற்றிடு!' என ஆண்டவரைப் புகழும் பதிலுரைப் பாடல் ஆசிரியர் (திபா 104), ஆண்டவருடைய குரல் இந்த உலகில் ஏற்படுத்தும் மாற்றத்தை அறிக்கையிடுகின்றார். 'அவரது குரல்' கேட்கும் நாம், அவரது குரலாக இவ்வுலகில் மாறும்வரை, அருள் என்னும் அக்கரையில் இறைவேண்டல் செய்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கிறிஸ்தவ வாழ்வின் ஆணிவேர் திருமுழுக்கு

திருமுழுக்கு அருட்சாதனம் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் முக்கியமான அருள்சாதனம். திருமுழுக்கு நம்மை இறைவனின் பிள்ளைகளாகவும் திருஅவையின் உறுப்பினர்களாகவும் மாற்றுகிறது. தூய ஆவியின் வல்லமையைப் பெற்று அரசக் குருத்துவத்தின் உறுப்பினர்களாகவும் மாற்றுகின்றது. பல நேரங்களில் இதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளாமல் வெறும்சடங்காக பார்க்கக்கூடிய அவல நிலை இருக்கின்றது. அவை முற்றிலும் களையப்பட வேண்டும். ஒரு பங்கில் திருமுழுக்கு கொடுப்பதற்காக ஒரு குழந்தையை அழைத்து வந்தார்கள். பங்குத்தந்தை அந்த குழந்தையின் பெற்றோரிடம் "எதற்காக வந்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த பெற்றோர் "ஆலயத்தில் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தாய்மாமன் சீர் கிடைக்கும்" என்று கூறினர். அதைக் கேட்டவுடன் பங்குதந்தை வியப்புற்றார்.

திருமுழுக்கின் முக்கியத்துவத்தை பல நேரங்களில் மேலோட்டமாக புரிந்து கொண்டு ஏனோதானோவென்று அந்த சடங்கில் பங்கேற்று வருகிறோம். ஆனால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வை ஆழமானதாக வாழ்ந்திட திருமுழுக்கு அடிப்படை ஆணிவேராக இருக்கிறது. திருமுழுக்கின் வழியாக இறைவனின் அருளை முழுமையாகப் பெறுகிறோம். கடவுளுக்கு உகந்த பாத்திரமாக நாம் மாறுகிறோம். திருமுழுக்கு அருள்சாதனம் மிகப்பெரிய ஆற்றலையும் சக்தியையும் நம்முடைய கிறிஸ்தவ வாழ்விற்கு கொடுக்கின்றது.

திருமுழுக்கின் பொழுது நாம் பயன்படுத்துகின்ற வெள்ளைத் துணியானது இயேசுவின் தூய்மையை சுட்டிக்காட்டுகிறது. இயேசு தூயவராக இருந்தது போல திருமுழுக்குப் பெறும் ஒவ்வொருவரும் தூய வாழ்வு வாழ அழைக்கப்படுகிறோம். தூய வாழ்வு வாழும் பொழுது தான் கடவுளின் உண்மையான இரக்கத்தையும் அருளையும் பெற முடியும். அதற்கு நம்முடைய பாவத்திலிருந்து முற்றிலும் மனம் மாற வேண்டும். எனவேதான் திருமுழுக்கு யோவான் யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்கு கொடுத்த பொழுது "மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் " என்று முழக்கமிட்டு மனமாற அழைப்பு விடுத்தார்.

திருமுழுக்கு கொடுக்கும் பொழுது ஒளியானது கொடுக்கப்படுகிறது. அந்த ஒளி "கிறிஸ்துவே நமக்கு ஒளியாக இருக்கிறார் " என்ற சிந்தனையை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. ஒளியாம் நம் இறைவனை நாம் ஏற்றுக்கொண்டு அவரை முழுமையாகப் பின்பற்றும் பொழுது எத்தனை இருள் சூழ்ந்த சோதனைகள் வந்தாலும் அவற்றிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்று முழு நிறைவைக் காண முடியும். கிறிஸ்தவ வாழ்வை வாழும் பொழுது அலகையின் சோதனை நமக்கு அதிகமாக இருக்கும்.நம் ஆண்டவர் இயேசுவும் கூட திருமுழுக்கு பெற்ற பிறகு அலகையால் நாற்பதுநாள் சோதிக்கப்பட்டார் என்பதை அறிகிறோம். நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் நாம் என்னதான் கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழ முயற்சி செய்தாலும் பல்வேறு சோதனைகளும் இடையூறுகளும் துன்பங்களும் வந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் இயேசுவே நமக்கு ஒளியாய் இருக்கிறார் என்று ஆழமாக நம்பும் பொழுது, நிச்சயமாக இறைவனின் வழிநடத்துதலை முழுமையாகப் பெற முடியும். இயேசுவின் ஒளியில் நடப்பதற்கு நாம் இறைவார்த்தையின் மீது ஆழமாக தாகம் கொள்ள வேண்டும். அதை வாசித்து ஒவ்வொருநாளும் தியானித்து வாழ்வாக்கி பிறருக்கு நற்செய்தியாக அறிவிக்க வேண்டும்.

திருமுழுக்கு வழிபாட்டின் பொழுது கிறிஸ்மா எண்ணைப் பூசப்படுகிறது. இது நாம் அனைவரும் இயேசுவின் அரசக் கூட்டத்தில் இணைக்கப் பெற்று பொதுக் குருத்துவத்தில் இணைகிறோம் என்ற சிந்தனையைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.

திருமுழுக்கு அருள்சாதனம் நம்முடைய ஆதிப் பாவத்திலிருந்து விடுதலை கொடுப்பதாக இருக்கின்றது. நம்மை திருஅவையின் உறுப்பினர்களாக மாற்றுகிறது. தூய ஆவியினுடைய கனிகளையும் கொடைகளையும் நிறைவாகக் கொடுக்கிறது. எனவே திருமுழுக்கு என்ற அருள் சாதனத்தைப் பற்றி தெளிவான புரிதலோடு பெற்றுக் கொள்ளும் பொழுது, அது வழங்குகின்ற அருளையும் ஆசியையும் நிறைவாக நாம் பெற முடியும்.

நம் ஆண்டவர் இயேசு பாவம் அறியாதவராக இருந்தாலும், திருமுழுக்கு பெறுவதன் நோக்கம் கடவுளான அவர் நம்மோடு ஐக்கியமாகின்றார் என்பதை உணர்த்தவே. நாம் அவரோடு ஐக்கியமாக வேண்டுமெனில் மனமாற்றமும் பாவ மன்னிப்பும் அவசியம். அத்தகைய பாவ மன்னிப்பின் அடையாளமே திருமுழுக்கு. நாம் அனைவருமே திருமுழுக்கு பெற வேண்டும் என்ற முன்மாதிரியை காட்டுவதற்கே இயேசுவும் திருமுழுக்கு பெற்றார். விண்ணேற்றத்தின் போது தன் சீடர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கும் பணியையும் அதிகாரத்தையும் அளித்தார்.

இயேசு திருமுழுக்குப் பெற்றதன் வழியாக திருமுழுக்கு என்ற அருள்சாதனம் இயேசுவால் அங்கீகரிக்கப்படுகிறது. இயேசு திருமுழுக்கு பெற்றதன் வழியாக திருமுழுக்கு யோவானின் பணியை அங்கீகரிக்கிறார். இயேசு திருமுழுக்கு பெற்றதன் வழியாக தாழ்ச்சி நிறைந்த மனநிலையோடு நம் வாழ்வை வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார். இயேசு திருமுழுக்கு பெற்றதன் வழியாக தூய ஆவியாரின் அருள்பொழிவைப் பெற்று தந்தையாம் இறைவனின் அங்கீகாரத்தை பெறுகிறார். இயேசு திருமுழுக்கு பெற்றவுடன் இறையாட்சிப் பணியை போதிக்கும் பணியின் வழியாகவும் வழிநடத்தும் பணியின் வழியாகவும் புனிதப்படுத்தும் பணியின் வழியாகவும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றினார்.

தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஆண்டவர் இயேசுவைப் போல போதிக்கும் பணியையும் புனிதப்படுத்தும் பணியையும் வழிநடத்தும் பணியையும் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய முதல் வாசகத்தில் இறைவனை எசாயா குறிப்பிடுவது போல் நம்மிடையே உள்ள தடைகளைத் தகர்த்து, அனைவரும் ஒன்றுபட்ட சமூகமாக மாறிட திருமுழுக்கின் வழியாக தூய ஆவியால் புதுப்பிக்க நம்மையே முழுவதும் கையளிப்போம். பெற்ற திருமுழுக்கை இன்றைய நாளில் சிறப்பான விதத்தில் நினைவுகூர்ந்து புதுப்பிக்க முயற்சி செய்வோம். தீமையின் ஆதிக்கத்தை நம்மிடமிருந்து அகற்றி இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொள்வோம். அப்பொழுது நாம் வாழுகின்ற கிறிஸ்தவ வாழ்வு கடவுளுக்கு உகந்த வாழ்வாகவும் இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றக்கூடிய வாழ்வாகவும் மாறும். எனவே திருமுழுக்கு அருள்சாதனத்தை வெற்றுச் சடங்காக பார்க்காமல், இறைவன் தரும் ஒப்பற்ற கொடையாக பார்த்து இறைவனின் அருளையும் ஆசியையும் இன்றைய நாளில் பெற முயற்சி செய்வோம்.

இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! ஆண்டவர் இயேசு திருமுழுக்குப் பெற்ற இந்த நாளில் எங்களையும் தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்து பெற்ற திருமுழுக்கின் படி எங்கள் வாழ்வை வாழ்ந்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு