பழைய ஏற்பாட்டிலே கடவுளின் பேழையைத் தாவீது அரசர் மேளதாளத்துடன் தாரை தம்பட்டைகள் முழங்க (2 சாமு. 6:1-23) எருசலேம் நகருக்கு எடுத்துச்சென்றதுபோல இறைவனும் தன் திருமகன் இயேசுவின் பேழையாகிய அன்னை மரியாவை ஆரவாரத்தோடும், மகிழ்ச்சியோடும் தம் திருநகராகிய விண்ணகத்திற்கு அழைத்துச் சென்ற திரு நிகழ்வை நாம் இன்று விழாவாகக் கொண்டாடுகிறோம். நம் பாரத நாடு சுதந்திரம் அடைந்த இந்த நாளில் நம் தாய் மரியா முழுமையான விடுதலையும் சுதந்திரமும் பெற்ற ஆண்டு விழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம்.
- 1) மரியன்னைக்கு என உள்ள விழாக்களில் மூன்று மிகவும் குறிப்பிடத்தக்கவை. மரியாவின் அமல உற்பவப் பெருவிழா (டிசம்பர் 8). மங்கள வார்த்தைப் பெருவிழா (மார்ச் 25). விண்ணேற்புப் பெருவிழா (ஆகஸ்ட் 15). இவை மூன்றும் மீட்பின் வரலாற்றோடு தொடர்பு கொண்டவை. அருள் மிகப் பெற்றவளே வாழ்க (லூக். 1:28) என்று வானதூதரால் அழைக்கப்பட்ட நம் அன்னை மரியா, தான் பெற்ற அருளை முழுவதுமாக இவ்வுலகின் மீட்புக்காகச் செலவழித்தார். தன் மகனோடு இணைந்து இவ்வுலகின் மீட்புப் பணியில் ஈடுபட்டார்.
- 2) ஒரு பெண்ணால் (முதல் ஏவாள்) இழந்த விண்ணக வாழ்வும், மகிழ்வும் மற்றொரு பெண்ணால் (மரியாவின் வழியாக) மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற இறைவனின் திட்டத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார் அன்னை மரியா.
- தீயோனின் தயைக் அதைச் செயல்படுத்தி அதன் விளைவாக அழிவைத் தேடிக் கொண்டவள் முதல் ஏவாள். அதனால் கடவுளுக்கும், மனித குலத்திற்கும் இடையில் தடையாக முடிச்சுப் போட்டாள். ஆனால் இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபை (திருச்சபை 56) என்ற ஏட்டிலே கூறுவதுபோல, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு, அதை ஏற்று, அதைத் தன் உள்ளத்தில் இருத்திச் செயல்படுத்தி வாழ்வைத் தேடிக் கொண்டவள் மரியா. போடப்பட்ட முடிச்சை தன் தாழ்ச்சி கீழ்ப்படிதலால் அவிழ்த்தவள் மரியா.
- 4) கடவுளைப்போல் ஆகவேண்டும் என்ற அகந்தையால் சுயநலத்தால் தூண்டப்பட்டவள் முதல் ஏவாள். இதோ உமது அடிமை (லூக். 1:38) என்று சொல்லி, தன்னையே தாழ்த்தி அர்ப்பணம் ஆக்கியவள் மரியா.
நான் தவறு ஏதும் செய்யவில்லை. பாம்புதான் என்னை வஞ்சித்து ஏமாற்றியது என்று பிறர் மேல் குற்றம் சாற்றித் தன்னை நிரபராதியாக்க விரும்பியவள் முதல் ஏவாள். ஆனால் தான் கடவுளால் குற்றமற்றவராகப் படைக்கப்பட்டும். மனுக்குல மீட்பிற்காக, அதன் குற்றங்களை ஏற்றுக்கொண்ட தியாக தீபம் மரியா.
மரியா தன்னைத் தாழ்த்திக் கொண்டாள். எப்படியெனில் ஆற்று மணலில் முளைத்து வளர்ந்த நாணல் வெள்ளம் புரண்டு ஓடியபோது தண்ணீரோடு அடித்துச் செல்லப்படாமல் வளைந்து கொடுப்பது போல மரியா பணிந்து நின்றார்கள். கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை நடத்திய ஏனோக்குக்கும் (தொநூ. 5:22) எலியாவுக்கும் (2 அரச 2:11) விண்ணேற்பு கொடையை இறைவன் வழங்கியது போல, தனிப்பெரும் சீடராகத் தாழ்ச்சி நிறைந்த மரியாவுக்குக் கிடைத்த பரிசுதான் விண்ணேற்பு. எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே (லூக். 1:48). ஏனெனில் நெஞ்சிலே செருக்குற்றோரைச் சிதறடித்து வருகிறார் (லூக். 1:50- 53).தாழ்ந்தோரை உயர்த்தினார் என்று மரியா பாடிய பாடல் அவர்கள் வாழ்வில் நிறைவேறியது. இந்த உண்மையை, சத்தியத்தைத்தான் 12-ஆம் பத்திநாதர் விசுவாசச் சத்தியமாக 1950-ஆம் ஆண்டு பிரகடனம் செய்தார்.
முடிவு
இந்தியா 1947-ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப் பெற்றது என்று எல்லோரும் இன்று ஆனந்தம் அடைகிறோம். ஆட்சி கைமாறியதே தவிர, அடிமைத்தனம் மாறவில்லை. கொள்ளையும், ஊழலும் குறையவில்லை. சனநாயகம் என்பதெல்லாம் சொல் அளவில் மட்டுமே. மக்கள் நலன் அரசு என்பது எதிர்பார்க்க முடியாதது என்ற மாயையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்நிய நாட்டின் ஆதிக்கம் உலக வங்கியின் ஊடுருவல் இந்தியாவை மறு காலனியாக்கி வருகிறது. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைகள் ஏழைகளின் குரல்வளைகளை நெருக்கிப் பிடிக்கிறது. இதனால் ஏழைகள் பூச்சி மருந்தைத் தேடுகிறார்கள். தூக்குக் கயிற்றைத் தேடுகிறார்கள். பெண்ணடிமை, சாதியம் தலைவிரித்து ஆடுகிறது. அடக்கு முறையால் மக்கள் அழிக்கப்படுகிறார்கள். எங்கே விடுதலை?
கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவிற்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்தினார். எனவே கடவுளும் அவரை மிகவும் உயர்த்தி எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அளித்தார் (பிலி.2:6-9) என வாசிக்கிறோம். இந்த உன்னத நிலையைப் பெற்றவர்தான் நம் அன்னையாம் மரியா. நாமும் ஒருநாள் இந்த மகிமையான வாழ்வை அடைய பாவ வாழ்வை விட்டு விடுதலையை நோக்கிப் பயணம் ஆவோம்.
வாழ்க்கையில் உயர்வது எப்படி?
அன்னை மரியா எவ்வளவுக்கு எவ்வளவு தன்னையே தாழ்த்திக் கொண்டாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர் உயர்த்தப்பட்டார்; விண்ணகம் வரை உயர்த்தப்பட்டார். தாழ்ச்சி என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு உவமை ஒன்று பதில் சொல்லும்!
காட்டாற்று மணலிலே விழுந்த ஒரு நாணல் விதை! முளைத்தது, அது தழைத்தது! காட்டாற்றுக்கும் கருணை உண்டு! நாணல் வளர்ந்தது! நாணல் சில நாள்களில் கிளைகள் விட்டு புதரானது! அதன் மீது காற்றுக்கென்ன கோபமோ! அது சுற்றிச் சுற்றி அடித்தது!
காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுத்தது நாணல்! விவேகமுள்ள நாணல் வளைந்து கொடுத்தது! ஆகவே நிமிர்ந்து நின்றது! திடீரென வானம் கருத்தது! எங்கு பார்த்தாலும் அடை மழை! காட்டாற்றில் வெள்ளம்! வெள்ளத்திற்கு நாணல் மீது என்ன கோபமோ! அதனை அடித்துச் செல்லத் துடித்தது! அதன் எண்ணம் நிறைவேறவில்லை! காரணம் விவேகமுள்ள நாணல் அதன் பாணியைக் கையாண்டது. வெற்றி நாணலுக்கே! ஆற்றிலே அடித்து வரப்பட்ட அத்தனைச் செடிகளும் கொடிகளும் அந்த நாணல் புதரை அழைத்துச் செல்ல விரும்பின! முடியவில்லை! காரணம் நாணல் போர் தொடுக்க விரும்பவில்லை! சற்று நேரப் பணிவு போதும், சற்று நேர விவேகம் போதும் எனச் சொல்லி வளைந்து கொடுத்தது ; பொறுமையாக நிமிர்ந்து நின்றது. யார் மீதும் அதற்கு எந்தக் கோபமும் இல்லை! அதன் ஆசையெல்லாம் நீண்ட நாள் வாழவேண்டும் என்பதே!
அவரிடம் புனித கன்னிமரியாவிடம் பணிவு இருந்தது (லூக் 1:38); விவேகம் இருந்தது (லூக் 2:51); அவரிடம் பொறுமையிருந்தது (யோவா 19:23-27). தாழ்ச்சி என்றால் பணிவு: தாழ்ச்சி என்றால் விவேகம் : தாழ்ச்சி என்றால் வளைந்து கொடுத்தல்; தாழ்ச்சி என்றால் பொறுமை! மரியாவிற்கு விண்ணேற்பு என்பது அவருடைய தாழ்ச்சிக்கு கடவுள் அளித்த பரிசு. எல்லாத் தலைமுறையினரும் அன்னை மரியாவைப் பேறுபெற்றவர் எனப் போற்றுகின்றனர் என்றால் அதற்குக் காரணம் அவரது தாழ்ச்சிதான் (லூக் 1:48). உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைக் கடவுள் சிதறடிப்பார் (லூக் 1:50-53). நாம் கழுகைப் போல் உயர, உயரப் பறந்தாலும், விண்மீன்களின் நடுவில் நமது வீட்டைக் கட்டி வாழ்ந்தாலும். நம் உள்ளத்தில் இறுமாப்பு இருந்தால் நாம் வீழ்த்தப்படுவோம் (ஒப 1:4).
இன்று இயேசுவுக்கு உலகிலுள்ள எல்லாம் அடிபணிகின்றன (1 கொரி 15:27). இந்த உன்னதமான நிலையில் அவரிருக்கக் காரணம் என்ன? காரணம் அவரது தாழ்ச்சிதான். புனித பவுலடிகளார், கடவுள் வடிவில் விளங்கிய அவர் (கிறிஸ்து) சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார் (பிலி 2:6-9) என்று கூறுகின்றார். இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும் : சூரியனைப் போல் ஒளி பொருந்தியவராய், சந்திரனைப் போல் அழகுள்ளவராய்; விண்மீன்களைத் தலைமீது சூடி, அழகுக்கு அழகு செய்து அதிசயமாய், ஆனந்தமாய், ஆருயிராய் விளங்குகின்ற விண்ணக, மண்ணக அரசியே! உமது விண்ணேற்பில் நாங்களும் பங்குகொண்டு, உம்மோடு என்றும் இணைந்து வாழ எங்களுக்குத் தேவையான தாழ்ச்சியை உமது கைகளிலே தவழும் குழந்தை இயேசுவிடமிருந்து பெற்றுத்தாரும். ஆமென். மேலும் அறிவோம் :
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை (குறள் 439).
பொருள்: எந்தச் சூழ்நிலையிலும் ஒருவன் தன்னைத்தானே உயர்வாகக் கருதும் தற்பெருமை கொள்ளக்கூடாது! அவ்வாறே நன்மை எதுவும் தராத செயல்புரிவதற்கு விரும்பவும் கூடாது!
தூய கன்னிமரியாவின் விண்ணேற்புப் பெருவிழா
ஆகஸ்டுத் திங்கள் 14ஆம் நாள் நான் ஓர் இளம் பெண்ணிடம், “நாளை சுதந்திரத்தினம்; சுதந்திரத்தைப் பற்றி என்ன மறையுரை ஆற்றுவது?” என்று கேட்டதற்கு அவர் என்னிடம், “சுதந்திரத் தினத்தன்றாவது மறையுரை ஆற்றாமல் மக்களைச் சுதந்திரமாக விடுங்கள்” என்றார்.
மக்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரப் பறவையாகப் பறக்க விரும்புகினறனர். “ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா? கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? தாலி கட்டி பிள்ளை குட்டி பெத்துக்கலாமா? பிள்ளை குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?” என்று பாடும் அளவுக்கு சுதந்திரம் இன்று இறக்கை கட்டிப் பறக்கின்றது. கட்டுப்பாடு இல்லாத வாழ்வு பகுத்தறிவின் கடிவாளத்தில் இல்லை. பகுத்தறிவின் பயன்பாடு என்ன? மனதைத் தீமையிலிருந்து விலக்கி, நன்மையின்பால் செலுத்துவதாகும்.
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீ இ
நன்றின்பால் உய்ப்பது அறிவு (குறள் 422)
சுகத்தை நாடி சுதந்திரத்தை இழக்கக்கூடாது. ஓர் ஊரில் ஒரு வியாபாரி புழுக்களை விற்றுக் கொண்டிருந்தார். ஒரு சிட்டுக்குருவி அவரிடம் ஒரு புழுவைக் கேட்டது. ஒரு புழுவுக்கு விலையாக ஓர் இறகு கொடுக்க வேண்டுமென்று வியாபாரி கேட்டார். அந்தச் சிட்டுக் குருவியும் தனது இறக்கைகளில் இருந்த இறகுகளை யெல்லாம் ஒவ்வொன்றாகக் கொடுத்து புழுக்களை வாங்கிச் சாப்பிட்டு, இறுதியில் இறக்கைகளை இழந்து பறக்க முடியாத நிலையை அடைந்தது. மற்றப் பறவைகள் அந்தச் சிட்டுக் குருவியைக் கொத்திச் சாப்பிட்டன!
அந்தப் பறைவையைப் போலவே நாமும் சிற்றின்பங்களுக்கும், தீய பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகி, “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?” என்று பாடிப்பாடி, காலமெல்லாம் கண்ணீர் வடிக்க வேண்டியுள்ளது. எல்லா அடிமைத்தளைகளிலும் கொடிய அடிமைத்தளை பாவத்திற்கு அடிமையாவதாகும். “பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை” (யோவா 8:34).
உண்மையான சுதந்திரம் கடவுளின் பிடியிலிருந்து நம்மை விடுவிப்பதன்று; மாறாக, கடவுளிடம் சரணடைவதாகும். சுதந்திரப் பள்ளுப் பாடிய பாரதி, “பாரினில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்; பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“நான் ஆண்டவருடைய அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்று கூறி, மரியா தம்மை முழுவதுமாகக் கடவுளுடைய திட்டத்திற்குக் கையளித்தார்; கடவுளிடம் சரணடைந்தார். எனவேதான், “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகிறது” (லூக் 1:47) என்ற விடுதலைக் கீதத்தை அவரால் பாட முடிந்தது (நற்செய்தி).
மரியா “மீட்பரின் தாய்'என்ற அழைத்தலைப் பெற்றிருந்ததால், கடவுள் அவரைப் பாவமாசு அணுகாமல் பிறப்பிலிருந்தே பாதுகாத்தார். பாவ மாசில்லாத அவரைக் கல்லறையில் அழிவுறாமல் விண்ணக மகிமைக்கு எடுத்துக் கொண்டார். இந்த இறையியல் உண்மையை இன்றைய திருப்பலியின் நன்றியுரை பின்வருமாறு எடுத்துரைக்கின்றது. “உயிருக்கெல்லாம் ஊற்றாகிய உம் திருமகனுக்குச் சொல்லற்கரிய முறையில் மனித உடல் கொடுத்துப் பெற்றெடுத்த அப்புனித அன்னையை, நீர் கல்லறையில் அழிவுறாமல் காத்தது பொருத்தமே”.
உடலின் உயிர்த்தெழுதலைப்பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்” (1 கொரி 15:23).
உடலோடு உயிர்த்தெழ, மரியா கிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரைக் கல்லறையில் காத்திருக்க அவசியமில்லை. மரியா அவரது மண்ணக வாழ்வின் பயணம் முடிவடைந்தபோது விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். இம்மண்ணகத்தில் மரியா இயேசுவோடு கொண்டிருந்த தோழமை விண்ணகத்திலும் தொடர்கிறது. தாயைச் சேயிடமிருந்து பிரிக்க முடியாது.
திருவெளிப்பாடு நூலில் (முதல் வாசகம்) கதிரவனை ஆடையாக அணிந்து, நிலாவைக் காலடியில் கொண்டு, பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடிக் காட்சியளிக்கும் பெண்ணிடத்தில் (திவெ 12:1) திருச்சபை மரியாவைக் காண்கிறது. அவ்வாறே, “ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்ற பட்டத்து அரசியாகவும்” திருச்சபை மரியாவைப் பார்க்கிறது (பதிலுரைப்பாடல், திபா 45:9). சுருக்கமாக, மரியா விண்ணக மகிமையை அடைந்து விட்டார் எனத் திருச்சபை நம்புகிறது.
மரியாவின் விண்ணேற்பு நமது மகிமைக்கு முன் அடையாளமாகவும் சாசனமாகவும் விளங்குகிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல், “தூய்மைமிகு கன்னிமரியில் திருச்சபை கறை திரை ஏதுமில்லாத் தூய்மையின் நிறைவை ஏற்கெனவே அடைந்துவிட்டது” (திருச்சபை, எண் 65) மரியாவின் மகிமை நமது மகிமை. மரியா எங்கே எப்படி இருக்கிறாரோ அங்கே அப்படியே நாமும் இருப்போம் என்ற நம்பிக்கையை இன்றையப் பெருவிழா நமக்கு அளிக்கிறது.
கடவுள் ஆணவக்காரரை அழித்து எளியோரை வாழ வைக்கிறார். பசித்தவர்களை நலன்களால் நிரப்பி, செல்வரை வெறுங்கையராக்குகிறார் (லூக் 1:50-53). மரியாவின் இந்த இறைவாக்கு இறையரசின் கனவு. இக்கனவை நனவாக்குவது நமது கடமை. ஆதிக்க சக்திகளின் அச்சாணியை முறித்து உள்ளம் உடைந்தவர்களைக் குணமாக்கி, ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை வாழ்வு வழங்கி, வீழ்ந்து கிடப்போரைத் தூக்கி நிறுத்துவது நமது அழைத்தலாகும்.
மக்களுக்கு விடுதலை வாழ்வு வழங்க வேண்டிய அரசே இன்று மனிதர்களைப் பல்வேறு அடக்கு முறைகளால் கசக்கிப்பிழிந்து கொண்டிருக்கிறது. “கள்ள ஓட்டுப்போட்டால், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை. நல்ல ஓட்டுப்போட்டால், ஐந்து ஆண்டுகள் தண்டனை” என்று சொல்லும் அளவுக்கு அரசு மக்களைத் துன்புறுத்தி வருகிறது. வேலியே பயிரை மேய்ந்து கொண்டிருக்கிறது.
காஷ்மீர் பிரச்சினை, காவேரிப் பிரச்சினை, அயோத்திப் பிரச்சினை ஆகிய மூன்று பிரச்சினைகளுக்கும் இன்றும் தீர்வு காணவில்லை. இக்கேள்விக்குப் பதில்: “இம் மூன்று பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டால், அரசியல்வாதிகளால் அரசியல் நடத்த முடியாதே!” பிரச்சினைகளில் குளிர் காய்வதுதான் அரசியல்வாதி களின் கலை. இந்நிலையில் நாம் பிரச்சினைகளுக்குத் தீர்வாக உள்ளோமா? அல்லது நாமே அவற்றிற்குக் காரணமாக உள்ளோமா? சிந்திப்போம்! செயல்படுவோம்!!
மரியாவின் விண்ணேற்பு விழா நாளில் சுதந்திரம் அடைந்த நம் பாரத நாடு, எல்லாவித அடிமைத்தளைகளிலிருந்தும் விடுதலை அடைந்து, முழுமையான பொருளாதார, சமூக, கலாச்சார, ஆன்மீக விடுதலை பெற மரியன்னையின் வேண்டுதல் என்றும் துணை நிற்பதாக!
மறையுடல் பெறும் மாட்சி
இத்தாலி நாட்டில் அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவன்று சில பங்குகளில் ஒரு வினோதமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்குத் “தலை வணங்குதல் பவனி" என்று பெயர். ஊரின் முக்கிய வீதியிலே ஒரு முனையிலிருந்து அன்னையின் திருவுருவம் தாங்கிய பவனியும் அதே வீதியின் எதிர்முனையிலிருந்து நம் ஆண்டவர் இயேசுவின் திருவுருவம் தாங்கிய பவனியும் புறப்படும். வீதியின் மையப்பகுதியில் மலர்களாலும் மரக்கிளைகளாலும் நன்கு அலங்கரிக்கப்பட்ட தோரண வாயிலை இரண்டு பவனிகளும் சந்திக்கும். தோரண வாயிலில் இயேசுவின் திருவுருவமும் மரியாவின் திருவுருவமும் மூன்று முறை சுற்றிவந்து ஒன்றை ஒன்று வணங்கியபின் பங்குக்கோவிலை நோக்கி இயேசுவின் திருவுருவப் பவனி முன்னால் செல்ல, அதைத் தொடர்ந்து அன்னை மரியாவின் திருவுருவப் பவனி பின் செல்லும்.
இது ஆண்டவர் இயேசு அன்னை மரியாவை விண்ணகத்தின் அரியணைக்கு அழைத்துச் செல்வதின் அடையாளம். இந்தப் பவனி ஒரு மாபெரும் உண்மையை - இன்று நாம் கொண்டாடும் விண்ணேற்பு விழா பற்றிய உண்மையை உணர்த்துகிறது.
மரியாவின் விண்ணேற்பு
இயேசுவின் ஊனுடல் பெற்ற மாட்சியில் பங்கேற்பு.
இயேசுவின் மறையுடல் (திருஅவை) பெற இருக்கும்
மாட்சிக்கு முன் அடையாளம்.
ஆதாம் வழி பாவம், சாவு, அடிமைத்தனம் நுழைந்தது. இரண்டாம் ஆதாம் இயேசு வழி வாழ்வு வந்தது. (இரண்டாம் வாசகம்). "ஒரு மனிதர் வழியாக சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர்" (1 கொரி. 15:21-22).
கிறிஸ்துவைத் தொடர்ந்து, முதல் சீடர், முதல் கிறிஸ்தவர், திருஅவையின் அன்னை என்ற முறையில் அன்னை மரியா நமக்கும் முன்மாதிரியாக விண்ணேற்பில் முதலில் பங்கேற்றார்.
ஒரு மனிதன் யூத ரபியுடன் மேற்கொண்ட உரையாடல்: "ரபி, எங்கிருந்து வருகிறீர்?' "மேலுலகிலிருந்து வருகிறேன்". "எங்கே போகிறீர்?'' "மேலுலகிற்கு போகிறேன்". "இவ்வுலகில் என்ன செய்கிறீர்?' "மறு உலகைப் படைக்கிறேன்". ரபி கூறியதற்கேற்ப அன்னை மரியா இவ்வுலகில் மறு உலகைப் படைத்தார். அவளது இவ்வுலக வாழ்வின் நிறைவே அவளுடைய விண்ணேற்பாக அமைந்தது.
ஓவியன் தான் வரையும் ஓவியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறான். சிற்பி தான் செதுக்கி உருவாக்கும் சிலையைப் பற்றியே சிந்திக்கிறான். இவை அனைத்திற்கும் மேலாக அன்னையவள் ஆண்டவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலே முழுமையாகத் தன்னையே இழக்கிறாள். இவ்வுலகில் இறையாட்சிக் கருவியாக முழு ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்துச் செயல்படுகிறாள். அவளது நம்பிக்கை வாழ்வின் வெற்றியே அவளது விண்ணேற்பு. அது இறைவனின் அன்புப் பரிசு.
இறைமகன் எங்கு இருக்கிறாரோ அங்கேயே இறையன்னையும் இருக்கிறாள். தனிமையில் தாழ்ச்சியோடு இருந்த அன்னையை இறைவன் உயர்த்தி மாட்சிப்படுத்துகிறார். அன்று அவள் எலிசபெத் வீட்டில் பாடிப் புகழ்ந்த சுதந்திர உணர்வுகள் நிறைந்த மகிழ்ச்சிப்பாடல் இன்றும் அவள் உள்ளத்திலே அவளைப் பாட வைக்கிறது. அவள் தன் மகனோடு சேர்ந்து அனுபவித்த துன்ப துயரங்களால், போராட்டங்களால், இறுதியில் விண்ணேற்பால் சாவையும் சாவுக்குக் காரணமான பாவத்தையும் வென்றுவிட்டாள்.
புகழ்பெற்ற போசுவே என்ற மறையுரையாளரின் கூற்றிற்குச் செவி கொடுப்போம்:
"நான் பகர்வதை நீங்கள் நம்புவீர்களானால் அன்னை மரியாவின் இறப்புக்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்க முனைய மாட்டீர்கள். அவளில் கொழுந்து விட்டு எரிந்த அன்பு எத்துணை வலிமைமிக்கதெனில், அவளுடைய ஒவ்வொரு மூச்சும் அவளது உடலின் தளைகளை அறுத்தெறிய வல்லதாய் இருந்தது. அவளுக்குள் எழுந்த ஏக்கம் அவளுடைய உடற்கட்டைத் தகர்க்கவல்லதாய் இருந்தது. விண்ணுலகின் மீது அவள் கொண்டிருந்த ஆவல் அவளுடைய ஆன்மாவையே இழுத்துச் செல்ல வல்லதாய் இருந்தது..."
"ஓ கிறிஸ்தவர்களே, அன்னை மரியாவின் இறப்பு ஒரு புதுமையாக நிகழ்ந்தது என்று குறிப்பிட்டேன். ஆனால் என் சொற்களைச் சற்று திருத்திக் கொள்ள வேண்டும். அவளுடைய இறப்பு ஒரு புதுமையாக நிகழ்ந்ததென்று கூறுவதைவிட, அவளுடைய இறப்பால் ஒரு புதுமை முடிவுற்றதென்று கூறுவேன். தன் அன்பு மகனைவிட்டுப் பிரிந்து வாழ மரியாவால் முடிந்ததே என்பதுதான் நீடித்த புதுமை. இந்தப் புதுமை எவ்வாறு முடிவுற்றது என்றும், அன்பு எவ்வாறு தன் பலிப்பொருளைத் தகனம் செய்தது என்றும் உங்களுக்கு விளக்க என்னால் முடியுமா?..."
"கன்னி மரியாவின் இறப்புக்குக் காரணம் அவளுடைய உள்ளத்தில் பொங்கி எழுந்து கொண்டே இருந்த அன்புப் பெருக்கின் நிறைவே ஆகும். முற்றும் பழுத்த ஒரு கனியைப் பெற்றுக் கொள்ள விரும்பினால் மரக்கிளையைச் சிறிது அசைத்தால் போதும். கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு இயற்கையாக மேல்நோக்கித் தாவிச் செல்லும். இவ்வாறு மரியாவின் உள்ளத்தில் கனன்று எரிந்த தெய்வீக அன்பு அவளுடைய ஆன்மாவை சுடர்மீது இவளை விண்ணுலகிற்கு உடலினின்று பிரித்து அன்பின் ஏந்திச் சென்றது."
புனித ஜெர்மானுஸ் என்பவருடைய பார்வையில் "மரியா விண்ணகம் சென்றது மகிழ்ச்சிக்குரிய நற்செய்தி. ஏனென்றால் இப்பொழுது நமக்காகப் பரிந்து பேசவே அவள் சென்றிருக்கிறாள். மனிதத் தன்மை மாட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மனிதனின் அவளது மாட்சி தொடர்பான அனைத்தும் அவளில் நிறைவேறியுள்ளது. உடல், ஆன்மா, ஆவி இவை மூன்றிலும் ஒரு காலத்தில் அழியாத் தன்மையை நாம் அனுபவிக்க இருக்கிறோம். அதை இப்பொழுது அன்னை மரியா அனுபவிக்கிறாள்".
இன்று விண்ணேற்பு விழா மட்டுமல்ல. இந்தியத் திருநாட்டின் விடுதலை விழாவும்கூட. நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் மூவண்ணக்கொடியேற்றித் தேகியகீதம் இசைப்போம். ஜன கன மன என்ற பாடலின் கடைசி வரி 'ஜய ஜய ஜய ஜய கே'. அதன் பொருள் வெற்றி வெற்றி வெற்றி உமக்கே. இது யாரைக் குறித்துச் சொல்லப்பட்டது? 1911ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசன் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வந்தபோது முதன்முறையாக இசைக்கப்பட்டது இந்த ஜன கன மன. நம்மை அடிமைப்படுத்திய ஒருவரை வாழ்த்தப்பயன்பட்ட பாடலை தேசிய கீதமாக்குவதா? சர்ச்சை கிளம்பியது. பின்னாளில் பாடலை இயற்றிய வங்கக் கவி தாகூர் தன் விளக்கம் கொடுத்தார் - இந்த நாட்டின் தலையெழுத்தை நிருணயிக்கின்ற, இந்த நாட்டின் வரலாற்றையே தன் ஆளுகையின் கீழ் வைத்திருக்கும் கடவுளுக்கே ஆட்சியும் மாட்சியும் வல்லமையும் அவருக்கே உரியது.
அந்த வெற்றியில் அன்னை மரியாவுக்குக் கடவுள் கொடுத்த பங்கே, பெரும் பேறே அவளது விண்ணேற்பு. அந்த மாட்சியில் நமக்கும் பங்கு உண்டு என்பதே நமது கிறிஸ்தவ நம்பிக்கை!
சாவுக்குப் பின் நமக்காகக் காத்திருக்கும் விண்ணக வாழ்வில் நம்பிக்கை கொள்வோம். நமது உடல் இந்த மண்ணுக்கு உரியதாக இருக்கலாம். ஆனால் நம் உயிர் விண்ணுக்கு உரியது. இன்று நாம் இங்கே இருப்பது இறப்பதற்காக அல்ல, என்றும் இருப்பதற்காகவே!
நாசரேத்தில் வாழ்ந்த மரியாவைச் சந்திப்போம்
1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில், அல்லது ஆகஸ்ட் 15 விடிந்த அந்த முதல் மணித்துளிகளில் இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தது. 1950 சனவரி 26 நம் நாட்டில் நடக்க இருப்பது மக்களாட்சி என்று உலகறியச் சொன்னோம். நாம் மக்களாட்சியை உலகறியச் செய்த அதே 1950ம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் இறை அன்னை மரியா உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகம் எடுத்துச் செல்லப்பட்டார் என்ற உண்மையை உலகறியச் செய்தார். இந்திய மக்களாட்சி அறிக்கையும், அன்னை மரியா விண்ணேற்பு அறிக்கையும் இவ்வாண்டு தங்கள் வைர விழாவைக் கொண்டாடுகின்றன.
விண்ணேற்பு அறிக்கை வந்து 74 ஆண்டுகளே ஆகின்றன. ஆனால், மரியாவின் விண்ணேற்புத் திருவிழாவைக் கிறிஸ்தவ உலகம் 8 அல்லது 9ம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடி வருகின்றது. மரியன்னையை மையமாகக் கொண்டு பல விழாக்கள் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன. அவற்றில், 19 திருவிழாக்கள் கத்தோலிக்க உலகம் அனைத்திற்கும் பொதுவான திருவிழாக்கள். இவையன்றி, மே மாதம் அன்னை மரியாவின் மாதம் என்றும், அக்டோபர் மாதம் அன்னையின் புகழை ஒலிக்கும் செபமாலை மாதம் என்றும் கொண்டாடுகிறோம். இவைகளன்றி, வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் அன்னையின் நினைவு அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற வேளை நகர் அன்னையின் பக்தி இன்று பல நாடுகளில் பரவியுள்ளது. வேளை நகர், பாத்திமா நகர், லூர்து நகர் என்று உலகில் அன்னையின் பலத் திருத்தலங்களில் வருடம் முழுவதும் அன்னையின் பக்திக்குச் சான்று பகரும் பல நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்று திரட்டிப் பார்க்கும் போது, கத்தோலிக்கத் திருச்சபையிலும், அன்னையின் திருத்தலங்களைத் தேடி வரும் பல கோடி மக்களின் வாழ்விலும் அன்னை மரியா மிக, மிக உயர்ந்த ஓரிடத்தைப் பெற்றிருக்கிறார் என்பது நிச்சயம்.
ஒவ்வொரு முறையும் மரியன்னையின் திருவிழாவைக் கொண்டாடும்போது, என் மனதுக்குள் சில கேள்விகள் எழும். இன்றும் எழுகின்றன. உலகம் இன்று காட்டும் இந்த அளவு மரியாதை, புகழ், வணக்கம் இவைகளெல்லாம் மரியா வாழ்ந்த காலத்தில் அவருக்குக் கிடைத்தனவா? மரியா வாழ்ந்த காலத்தில் அவர் அனுபவித்த கொடுமைகள், அடி, மிதி இவைகளை மறந்து விட்டு, அல்லது மறைத்து விட்டு, மரியன்னையை இப்படி புகழின் உச்சியில் மட்டும் பார்க்க விழையும் நம் பக்தியை அவர் விரும்புவாரா? அல்லது, இந்த அளவு அவர் உயர்ந்ததற்குக் காரணமாய் இருந்த அவர் வாழ்வுப் பாடங்களை நாம் மீண்டும் கற்றுக் கொள்வது அவருக்கு அதிகம் பிடிக்குமா? இவை என் மனதில் எழும் நெருடலான கேள்விகள்.
அன்னை மரியாவின் ஒவ்வொரு விழாவின் போதும், அவரது வாழ்வைக் கொஞ்சமாகிலும் புரட்டிப் பார்க்க, அவரது வாழ்வு சொல்லித் தரும் பாடங்களைச் சிறிதாகிலும் பின்பற்ற நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அன்னை மரியாவின் வாழ்வுப் பாடங்களைப் படிக்க வரலாற்று மரியாவைச் சந்திக்க வேண்டும். அவர் மேற்கொண்ட அந்தச் சவாலான வாழ்வைச் சிந்திக்க வேண்டும். வரலாற்றில் வாழ்ந்த மரியாவைச் சந்திப்போமா?
அன்னை மரியாவைச் சந்திக்க அவர் வாழ்ந்த அந்த முதல் நூற்றாண்டுக்குச் செல்வோம்... இல்லை, இந்த அன்னையைச் சந்திக்க கி.மு.வின் இறுதி சில ஆண்டுகளுக்குச் செல்ல வேண்டும். கி.மு. 5 அல்லது, 6ம் ஆண்டைக் கற்பனை செய்து கொள்வோம். கலிலேயா பகுதியில், ஒரு சின்னக் கிராமம் நாசரேத். அந்தக் கிராமத்தில் வாழ்ந்த இளம் பெண் மரியா. இந்தப் படிப்பறிவில்லாத, கிராமத்துப் பெண் இன்று உலகில் இவ்வளவு தூரம் பேரும் புகழும் அடைவார் என்று அவர் சிறிதும் கற்பனை செய்திருக்க மாட்டார். கனவு கண்டிருக்க மாட்டார்.
மரியா என்ற அந்த கிராமத்துப் பெண் கண்டு வந்த கனவெல்லாம் ஒன்றுதான். தினம் தினம் செத்துப் பிழைக்கும் தானும், தன் மக்களும் உரோமையக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே அந்தப் பெண்ணின் முக்கியக் கனவாக இருந்திருக்க வேண்டும்.
மரியாவையும், அவரது யூத சமுதாயத்தையும் இரவும் பகலும் தாக்கி வந்த உரோமையக் கொடுமைகளை நம்மால் கற்பனை செய்துதான் பார்க்க முடியும். ஆங்கிலேய ஆதிக்கத்தில் நம் நாடு இருந்த வேளையில் நமக்கு முந்தியத் தலைமுறையினர் இது போன்ற கொடுமைகளைச் சந்தித்திருப்பார்கள்.
ஒரு நாட்டை வேற்று நாட்டவர் அடிமைப் படுத்தியிருக்கும் போது, அங்கு கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள், அவலங்கள் ஏராளம். அரசியல், பொருளாதாரம், சமயச் சுதந்திரம் என்று மக்களின் பொதுவான சுதந்திரங்கள் பறி போவதைப் பற்றி அந்த நாட்டு வரலாறு பேசும். ஆனால், அன்னியப் படை வீரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் சாதாரண மக்கள் ஒவ்வொரு நாளும் படும் சித்ரவதைகள் வரலாற்றில் எழுதப்படுவதில்லை. அவைகளைப் பற்றி நாம் அதிகம் சிந்திப்பதுமில்லை. ஒரு நாட்டை ஆக்ரமிக்கும் அன்னியப் படை வீரர்களின் பொழுது போக்காக, விளையாட்டுப் பொருள்களாக அந்த நாட்டுப் பெண்கள், முக்கியமாக இளம் பெண்கள் மாறுவது எல்லா நாடுகளிலும் இன்றும் நடைபெறும் அக்கிரமம்தான்.
இராணுவம் மக்களைக் காக்கும் ஒர் அமைப்பு என்பது ஏட்டளவில் வகுக்கப்பட்டுள்ள ஒர் இலக்கணம். ஆனால், நடைமுறையில், பல இராணுவ வீரர்கள் நடந்து கொள்ளும் முறை அந்த இலக்கணத்தையே தலைகீழாகப் புரட்டிப் போடுகின்றது. எங்கெங்கு இராணுவ முகாம்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் பெண்கள் பகலில் தங்கள் பாதுகாப்பை இழந்து, இரவிலும் தூக்கத்தை இழந்து வாழ்வது இன்றையக் கொடுமை. தங்கள் நாட்டு வீரகளிடமே பெண்கள் இவ்விதம் பயந்து வாழவேண்டிய நிலை இருக்கும் போது, அந்நிய நாட்டு வீரர்களால் ஒரு நாடு ஆக்ரமிக்கப்படும் போது, அந்தப் பெண்களின் நிலை பற்றி சொல்லவும் வேண்டுமா?
இந்த நிலையில் வாழ்ந்தவர்தான் மரியா. உரோமைய வீரர்களின் அட்டகாசங்கள், அத்துமீறல்கள், பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கண்ட அந்த இளம் பெண், தனக்கும், தன் மக்களுக்கும் என்று விடுதலை கிடைக்கும் என்று ஏங்கி வந்தார். அந்த விடுதலைக்காக இறைவனை அவர் வேண்டாத நாளே இல்லை. அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது. அவர் ஏங்கிய விடுதலை வந்தது. ஆனால், எப்படி வந்தது? ஒரு பெரும் இடியென வந்து இறங்கியது அந்த விடுதலை.
மரியாவின் ஏக்கங்களுக்கு, அவர் தினமும் எழுப்பி வந்த செபங்களுக்கு இறைவன் பதில் தந்தார். "உனக்கும், உன் மக்களுக்கும் விடுதலை வழங்க என் மகனை அனுப்புகிறேன். ஆனால், என் மகனுக்கு நீ தாயாக வேண்டும்." என்று இறைவன் அனுப்பிய செய்தியைக் கேட்டு மரியா ஆடிப்பாடியிருக்க மாட்டார். ஆடிப் போயிருப்பார். நிலை குலைந்திருப்பார். திருமணம் ஆகாமல் தாயாகும் ஒரு பெண்ணுக்கு யூத சமுதாயத்தில் என்ன நடக்கும் என்பதை மரியா நேரில் பார்த்தவர். ஊருக்கு நடுவே, அந்தப் பெண் கல்லால் எறியப்பட்டுக் கொல்லப்படுவார். அதுவும் தங்கள் ஊர் ரோமைய வீரகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பின், இந்தக் கல்லெறிக் கொலைகள் அடிக்கடி நடந்ததையும் பார்த்தவர் மரியா. அந்த வீரகளால் பாலியல் வன்முறைகளுக்கு ஆளான பெண்கள், மரியாவின் தோழிகள் இதுபோல் கொல்லப்பட்டிருக்கலாம். அதைக் கண்டு மரியா பல நாட்கள் உண்ண முடியாமல், உறங்க முடியாமல் துன்புற்றிருக்க வேண்டும்.
உரோமையக் கொடுமைகளிலிருந்து விடுதலை வேண்டும் என்று கேட்ட இளம் பெண் மரியாவுக்கு வந்த விடுதலைச் செய்தி, மரண தண்டனைக்கு இணையான ஓர் அழைப்பாக இருந்தது. அந்த அழைப்பு இறைவனிடம் இருந்து வந்ததால், மரியா ‘ஆம்’ என்று சம்மதம் சொன்னார். இளம் பெண் மரியாவின் உறுதி, இறைவன் மீது அவர் கொண்டிருந்த ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கை, அந்த நேரத்தில் அவர் தந்த சம்மதத்தில் மட்டும் வெளிப்படவில்லை. அதைத் தொடர்ந்து, அவர் சந்தித்த ஒவ்வொரு நிகழ்விலும் அந்த உறுதி, அந்த நம்பிக்கை வெளிப்பட்டது.
குழந்தைப் பேறு நெருங்கி வரும் நேரத்தில், தன் சொந்த ஊரை விட்டு அவர் கிளம்ப வேண்டியிருந்தது.
குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில், தன் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல், வேறொரு நாட்டுக்கு அகதியாக ஓட வேண்டியிருந்தது.
எருசலேம் திருவிழாவில், தன் 12 வயது மகனை இழந்து விட்டு, மூன்று நாட்கள் நரக வேதனை அனுபவிக்க வேண்டியிருந்தது.
தன் வாழ்க்கைத் துணையான யோசேப்பை இழந்த பின், மகன் தன்னுடன் வாழ்வான் என்று கனவு கண்டிருந்த வேளையில், அந்த மகன் ஊருக்கு உழைக்கக் கிளம்பியதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.
இறுதியில் தன் மகனை அநியாயமாக சிலுவை மரணத்திற்குத் தீர்ப்பிட்ட மதத் தலைவர்களோடு அந்தச் சிலுவைக்கடியில், தன் மகனின் கொடிய வேதனைகளைப் பார்த்தும் ஒன்றும் செய்யமுடியாமல் நிற்க வேண்டியிருந்தது.
தவிர்க்க முடியாததாய்த் தெரிந்த இந்தச் சூழ்நிலைகளிலெல்லாம் மனதுக்குள் அந்த அன்னையின் நம்பிக்கை குறையவில்லை. இந்த நம்பிக்கை, இந்த வீரம் அந்த அன்னையின் உடலோடு இந்த பூமிக்குள் புதைந்து விடக் கூடாதென்றுதான், அந்த அன்னை, சாவின் விளைவுகளை உடலில் ஏற்காமல், விண்ணகம் அடைய இறைவன் வழி வகுத்தார். அந்த அற்புதத்தைத் தான் இன்று அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
அன்னை மரியாவின் நம்பிக்கையை, வீரத்தை இறைவன் இப்படி அழிவின்றி வாழ வைத்ததனால், இந்த அன்னையைப் போல் இன்றும் உலகில் எத்தனையோ அன்னையர், அதுவும், சமுதாய விளிம்புகளில், வறுமையின் கோரப்பிடியில் தினமும் போராடும் அன்னையர், நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் தங்களைச் சுற்றி உருவாகும் எத்தனையோ சூழல்களில், தங்கள் வீரத்தை, நம்பிக்கையைக் கைவிடாமல் வாழ்ந்து வருகின்றனர். நம்பிக்கையை இழக்காமல் அவர்கள் வாழும் இந்த வீர வாழ்க்கைதான் இந்த விழாவை நாம் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடுகிறோம் என்பதற்கு மிகப் பெரிய சான்று. எக்காரணம் கொண்டும் விசுவாசம், நம்பிக்கை ஆகியவை புதைக்கப்படக் கூடாது, அவை என்றும் அழியாமல் வாழ வேண்டும் என்பதே இந்த விழாவின் மையக் கருத்து.
பீடங்களில் ஏற்றி, புகழ் மாலை பாடி, திருநாட்கள் கொண்டாடி அன்னை மரியாவைப் பெருமைப்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும், அவரைப் போல் பல வழிகளிலும் வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சந்தித்து வரும் கோடான கோடி தாய்களுக்கு இன்றும் ஒரு பாடமாக, அவர்களை ஊக்குவிக்கும் ஒரு உந்து சக்தியாக தான் இருக்கிறோம் என்ற எண்ணமே, அந்த விண்ணகத் தாய்க்கு இன்னும் அதிக மகிழ்ச்சியூட்டும். அன்னை மரியாவோடு நாமும் சேர்ந்து அந்த மகிழ்வை, அந்த நம்பிக்கையை இன்று கொண்டாடுவோம்.
மறையுரை
மன்னவரின் மாளிகைக்குள்!
இன்று அன்னை கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். ‘மன்னவரின் மாளிகைக்குள் நுழைகிற’ பட்டத்து அரசியைப் புகழ்ந்து பாடுகிறது இன்றைய பதிலுரைப் பாடல் (காண். திபா 45). மன்னவரின் உடலைத் தன் மடியில் ஏந்துவதற்கு மரியா அனுமதித்ததால், மன்னவரின் மாளிகைக்குள் தன் உடலோடு செல்லும் பேறு பெறுகிறார்.
திருத்தந்தை 12-ஆம் பயஸ் அவர்கள், 1 நவம்பர் 1950 அன்று, ‘முனிஃபிசென்த்தேஸிமுஸ் தேயுஸ்’ (‘நன்மைநிறை கடவுள்’) என்னும் தன் திருத்தூது கொள்கைத்திரட்டில் இவ்வாறு அறிவிக்கிறார்: ‘கடவுளின் அமல அன்னை, என்றும் கன்னியான மரியா, இவ்வுலகின் வாழ்வை முடித்தபின்னர் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தின் மாட்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என நாம் வரையறுத்து அறிவித்து ஆணையிடுகிறோம்.’
1854-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்னை கன்னிமரியின் அமல உற்பவத்தை’ கொண்டாடுகிற கொள்கைத்திரட்டின்மேலும், ‘கன்னி மரியா கடவுளின் தாய்’ என்னும் கருத்துருவின்மேலும் கட்டப்பட்டதே இந்த அறிக்கை. மரியா இறந்தாரா அல்லது இறப்பைக் காணாமல் நிலைவாழ்வுக்கு நுழைந்தாரா என்னும் கேள்வியை பதிலிறுக்காமல் விடுகிறது இந்த ஏடு.
கீழத்தேய பழம்பெரும் திருஅவையில் ‘அன்னை கன்னி மரியாவின் துயில்’ என்று இந்நிகழ்வு நினைவுகூரப்படுகிறது.
‘நம் உயிர்ப்பு பற்றிய நம்பிக்கையை ஆழப்படுத்துவதுடன் அதை எதிர்நோக்கியிருக்க நம்மைத் தூண்டுகிறது இப்பெருவிழா’ என எழுதுகிறார் திருத்தந்தை 12-ஆம் பயஸ். ‘அன்னை கன்னி மரியா தன் விண்ணேற்பின் வழியாக அவருடைய மகனின் உயிர்ப்பில் பங்கேற்றார். கிறிஸ்துவுடைய உடலின் உறுப்புக்களான நம் அனைவருடைய உயிர்ப்பின் முன்னோட்டமாக அவர் விண்ணேற்படைந்தார்’ எனக் கற்பிக்கிறது கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி (எண். 974).
மன்னவரின் மாளிகைக்குள் மரியா நுழைந்ததை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.
மன்னவரைத் தன் மடியில் ஏந்துவதற்கு தன்னையே அர்ப்பணித்த அன்னை கன்னி மரியா, செக்கரியா-எலிசபெத்து இல்லம் நுழைவதை எடுத்துரைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். எலிசபெத்தின் மூன்று சொல்லாடல்கள் அன்னை கன்னி மரியாவின் விண்ணேற்பை நமக்குச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றன:
(அ) ‘பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்’
அனைத்துப் பெண்களை (மக்களை) விட அன்னை கன்னி மரியா பேறு பெற்றவராக இருக்கக் காரணம் அவர் பாவத்திலிருந்து காப்பாற்றப்பட்டவராக இருக்கிறார். மேலும், படைப்பின் தொடக்கத்தில் நாம் காணும் முதல் பெண்ணான ஏவாளின் எதிர்நிழலாக இருக்கிறார் மரியா. ஏவாள் தன்னுடைய கீழ்ப்படிதலின்மையால் விலக்கப்பட்ட கனியை உண்டார், பாம்பின் சூழ்ச்சிக்குள் விழுந்தார். மரியா தன்னுடைய கீழ்ப்படிதலால் கடவுளின் கனி தன் வயிற்றில் வளர அனுமதித்தார். பாம்பின் தலையை மிதிக்கும் பேறு பெற்றாள்.
(ஆ) ‘என் ஆண்டவரின் தாய்’
‘கடவுளின் தாய்’ என்னும் தலைப்பை மரியாவுக்கு முதன்முதலாக வழங்குபவர் எலிசபெத்து. எலிசபெத்தின் நம்பிக்கைப் பார்வையை நாம் இங்கே காண முடிகிறது. தூய ஆவியாரால் தூண்டப்பெற்ற எலிசபெத்து மரியாவின் வயிற்றில் தன் ஆண்டவரைக் காண்கிறார்.
(இ) ‘நம்பிய நீர் பேறுபெற்றவர்’
‘ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்!’ என்று சொல்லி மரியாவின் நம்பிக்கை, பற்றுறுதி, சரணாகதி ஆகியவற்றை எடுத்துரைக்கிறார் எலிசபெத்து. மரியா தன் நம்பிக்கையால் கடவுளுக்கு ஏற்புடையவராகிறார். வரவிருப்பவற்றை ஏற்றுக்கொள்ளும் துணிவை அவருக்குத் தருகிறது அவருடைய நம்பிக்கை.
எலிசபெத்தின் வாழ்த்துச் சொற்களைக் கேட்கிற மரியா, அவருக்கு எந்தவொரு பதிலும் தரவில்லை. மாறாக, தன் பதிலை ஒரு பாடலாக கடவுளை நோக்கி எழுப்புகிறார். மரியாவின் உள்ளம் எப்போதும் விண்ணை நோக்கியதாக இருந்ததால், அவருடைய உடலும் விண்ணை நோக்கிச் சென்றது.
கடவுளின் இயல்பு, இருத்தல், மற்றும் இயக்கத்தை எடுத்துரைக்கிறது மரியாவின் பாடல்.
இயல்பு: அவரே ஆண்டவர், மீட்பர், எல்லாம் வல்லவர். தூயவர் என்பது அவர் பெயர்.
இருத்தல்: இரக்கமே அவருடைய இருத்தல். மக்களுக்குத் துணையாக நிற்கிறார்.
இயக்கம்: தாழ்நிலையைக் கண்ணோக்குகிறார், தோள்வலிமையைக் காட்டுகிறார், புரட்டிப் போடுகிறார், தூக்கி எறிகிறார், உயர்த்துகிறார், நிரப்புகிறார், வெறுமையாக்குகிறார்.
இறையாட்சியின் செயல்களை மரியா முன்னுரைக்கிறார். அவருடைய கனவு விடுதலையின், எழுச்சியின், விடியலின் கனவாக இருக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில், கதிரவனை ஆடையாக அணிந்திருந்த பெண் பற்றிய காட்சியைக் காண்கிறார் யோவான். ‘பெண்’ என்பவர் இங்கே இஸ்ரயேல் மக்கள் குழுமத்தை, அல்லது திருஅவையைக் குறித்தாலும், திருஅவைத் தந்தையர்களுடைய புரிதலில் இவர் மரியாவையும் குறிக்கிறார். பெண்ணுக்கும் அரக்கப் பாம்புக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை ஏவாள்-பாம்பு நிகழ்வோடும் பொருத்திப் பார்க்கலாம். அங்கே ஏவாள் பாம்பின் சூழ்ச்சிக்கு ஆளாகிறார். இங்கே மரியா பாம்பை வெல்கிறார்.
இரண்டாம் வாசகத்தில், ‘சாவே கடைசிப் பகவன். அதுவும் அழிக்கப்படும்’ என உறுதிபடக் கூறுகிறார் பவுல். மரியாவின் விண்ணேற்பு சாவுக்கு அழிவாக மாறுகிறது.
இந்த நாள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) மண்ணைத் தாண்டிய வாழ்க்கை. மண்ணையும் மண்ணுலகு சார்ந்தவற்றையும் நாடாமல், மண்ணைத் தாண்டிய வாழ்க்கை நோக்கிப் பயணம் செய்தல்.
(ஆ) மரியாவின் நம்பிக்கையும் சரணாகதியும் நமக்கு முன்மாதிரி. மரியா கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் அந்த நிலைக்குத் தன்னையே தகுதியாக்கிக்கொள்கிறார்.
(இ) அகவிடுதலை. மரியாவின் பாடல் ஆண்டவராகிய கடவுள் இவ்வுலகில் நிகழ்த்தும் விடுதலைச் செயல்களைக் குறிப்பதாக அமைந்துள்ளது. இன்று நம் நாட்டின் (இந்தியா) (78-ஆவது) விடுதலைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். அகவிடுதலையே புறவிடுதலையின் அடிப்படை என்பதைக் கண்டுணர்வோம். அகவிடுதலை அடைந்தவரே புறவிடுதலையைக் கொண்டாட முடியும். அகவிடுதலை பெறாதவர் புறவிடுதலை பெற்றாலும் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகவே இருக்கிறார். மரியா போல ஆண்டவருக்கு மட்டும் அடிமையாக இருத்தல் நலம்!
பெருவிழா வாழ்த்துகள்.
மரியாளின் விண்ணேற்பு
முதல் வாசகப் பின்னணி (தி.வெ. 11:19,12;1-6,10)
திருவெளிப்பாடு அல்லது காட்சியாகமம், காட்சிகள், கவிதைகள் நிரம்பிய காவியம். பகலுக்கும் இரவுக்கும் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும், இறைவனுக்கும் சாத்தானுக்கும் நடக்கும் போரில் இறைவன் வெற்றிவாகை சூடுவார் என்ற உண்மையை உருவக வாயிலாக உணர்த்துகிறது வெளிப்பாட்டு நூல். பல்வேறு வேத கலாப்பனைக்கு இடையில் திருச்சபையாம் அன்னை வெற்றிவாகை சூடூவாள். அன்னை மரியாள் அலகையின் தலையை நசுக்கி விண்ணிற்கும் மண்ணிற்கும் அரசியாக அரியனை அமர்வாள் என்ற உண்மையை உணர்த்துகிறது. பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்ட யோவான் காட்சிகள் காண்கிறார். விண்ணக பெண்ணாகி (மரியான்) “கதிரவனை ஆடையாக அணிந்து நிலவைத் தன் பாத அணியாகப் பூண்டியிருந்தாள் பெண்”. அப்பெண் மரியாளே என்பது பாரம்பரியக்கருத்து. புதிய இஸ்ராயேலாகிய திருச்சபை அரசியாக விளங்குவாள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (1கொரி. 15:20-26)
கிறிஸ்துவின் மரணமும் உயிர்ப்பும் நம் மெய்மறையின் உண்மைகளாகும். கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார். நாமும் ஒரு நாள் உயிர்ப்போம் என்பதன் முன்ணேடி அவர். ஆத்தும சரீரத்துடன் அவர் விண்ணிலே வீற்றிருப்பது போல மரியாளும் சாவை வென்று விண்ணக வீட்டிலே ஆத்தும சரீரத்துடன் வாழ்கிறார். நாமும் ஒரு நாள் அவரைப்போல அவருடன் வாழ்வோம் என்பதை தூய பவுல் கூறுகின்றார். “இறந்தேரின் முதறந்கனி இவரே” என்பது. அறுவடையின் முதற்கனியை யூதர்கள் இறைவனுக்கு கானிக்கையாக்கினர் (லேவி. 23:10-11), முதற்பலன் அறுவடையின் அடையாலமாகவும், பிணையாகவும் விளங்குகிறது (உரோ. 8:23.11:16). நம்மைப்போல் மானிட உடல் கொண்ட இயேசு மரித்து உயிர்த்தார் என்ற மறையுண்மை நாமும் ஒரு நாள் உயிர்ப்போம் என்பதன் முன் அடையாளமாகும். “அனைத்திலும் முதன்மை பெற்றபடி இறந்தோரினின்று பிறந்த தலைப்பேறு அவரே” (கொலோ. 1:18) மனிதன் வழியாக சாவு உண்டானது போல புதிய ஆதாமாகிய கிறிஸ்து வழியாகவே இறந்தவர்க்கு உயிர்ப்பு வருகிறது. இப்பேருண்மைகள் கற்பனை அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்ததே விண்ணேற்பு. இறக்கும் போதே அன்னை ஆன்மா, உடலுடன் விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.
நற்செய்தி வாசகப் பின்னணி லூக்கா 1:39-56
முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையினரிடம் பேசிய கடவுள் (எபி. 1:1) அவர்களையும் அவர்கள் வழித்தோன்றல்களையும் மீட்கவே மூதாதையிடம் தொடர்பு கொண்டார். மீட்பின் வரலாற்றில் முக்கிய நிகழ்வே கடவுளின் சந்திப்புதான். மூதாதையர்களுக்கு தோன்றி (தொ.நா. 12:1, வி.ப. 3:7-10, எசா. 6:5) அவர்கள் வறண்ட வாழ்வை வளம் பெறச் செய்து அவர்களுக்கு தனி வரங்களை அருளும் போது மக்கள் அவரைப்போற்றி ஏற்று அவருக்கு புகழ் பாடினார்கள். அவருக்கு நன்றி தெரிவிக்கும் தோரணையில் பலியிட்டு மகிழ்ந்து கொண்டாடினார்கள். மக்கட்பேறு இறைவனின் ஆசீரைக்குறிக்கிறது. (தொ.நூ, 1:28) ஒரு பெண்ணானவள் தாய்மைப் பேறு அடைகிறாள் என்றால் அது ஒருப் பெரிய ஆசீர்வாதம். இந்த பெரிய ஆசீர்வாதம் இறைவன் கொடுத்ததாலும் அதோடு எத்தனையோ பெண்கள் தங்கள் வயிற்றில் மெசியா பிறக்க வேண்டும் என்று தவம் இருந்த சூழ்நிலையிலே. மரியாவை இறைவனின் தாயாக கடவுள் தேர்ந்தெடுத்ததை நினைத்துப்பார்த்த மரியாள் நன்றி பாடல் பாடுகிறாள். இப்பாடல் பழைய ஏற்பாட்டு அன்னாவின் பாடலை (1சாமு, 2:1-10) ஒத்திருக்கிறது.
மறையுரை
வரலாற்று பின்னணியில் பார்த்தோம் என்றால் அக்காலத்தில் கீழைத் திருச்சபையில் “மரியாவின் இறப்பு நாள்” அனுசரிக்கப்பட்டது. மரியாவின் இறப்பு நாள் 7-ஆம் நூற்றாண்டிலிருந்து மேற்கு ஐரோப்பாவில் “மரியாவின் விண்ணகப் பிறப்பு நாள்” என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. எனவே 8-ஆம் நூற்றாண்டிலிருந்து ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதி இத்திருநாள் விண்ணேற்பு விழா என்றுக் கொண்டாடப்பட்டது. முதல் வத்திக்கான் சங்கத்தில் இந்த 200 ஆயர்கள் இதனை விசுவாசக்கோட்பாடாக பிரகடனம் செய்ய திருத்தந்தையைக் கேட்டுகொண்டார்கள். கி.பி. 1945-ஆம் ஆண்டு திருத்தந்தை 12-ஆம் பத்திநாதர் உலக ஆயர்கள் அனைவருக்கும் மடல் எழுதி அதிலே “எனது வணக்கத்திற்குறிய சகோதரரே தூய கன்னி மரியாள் உடலோடு விண்ணேற்பு அடைந்ததை ஒரு விசுவாசக்கோட்பாடாக வரையறுத்து அறிக்கையிடலாம் என உமது ஞானத்திற்கும் விவேகத்திற்கும் ஏற்ப விரும்புகிறீரா” என்று கேட்டு எழுதினார். ௮க்கேள்விக்கு 98% ஆயர்கள் “ஆம்” என்று 1-11- 1950 அன்று திருத்தந்தை 12-ஆம் பத்திநாதர் மரியாவின் விண்ணேற்பை ஒரு விசுவாசக் கோட்பாடாக வெளியிட்டார்.
மரியாவை படைத்தவர் திருக்குமாரன்தான். தன்னை படைத்தவர்க்கே மானிட வாழ்வுக்குத் தந்த பெருமை மரியாளுக்குண்டு மரியாள் களங்கமற்ற சுனை, தீட்டு அறியாத திருமகள். அதே மரியாள்தான் பாவக்கறைபடிந்த மானிடரின் அன்னையாகவும் விளங்குகிறார். தாழ்நிலை நின்ற அடிமையைக் கடைக்கண் நோக்கினார், என்று தன்னைப் பற்றி பாடிய அன்னை எல்லாத் தலை முறையும் என்னைப் பேருடையாள் எனப் போற்றும் என்று இறைவாக்கு உரைத்தாள். மரியாள் என்ற விளக்கு அணைய வேண்டும் என்ற நியதிப்படி அணையும் நிலையை அடைந்தது ஆனால் அணையுமுன் மீண்டும் சுடர்விட்டு ஜொலித்தது. “விலக்கப்பட்ட கனியைத் தின்றால் சாவாய்” என்பது இறைவனின் கட்டளை. முதல் பெற்றோருக்கும் அவரது சந்ததியாகிய நாம் அனைவரும் மரணத்தின் பிடியில் சிக்கினோம். பாவத்தின் கூலி மரணம் என்கிறார்.
பவுல் மரியாள் மட்டும் இதற்கு ஒரு விதிவிலக்கு. ஏனெனில், மரியாள் மனுமகனைப் பத்து மாதம் சுமந்த மணிப் பேழை, கடவுளைத் தாங்கிய கதிர்பாத்திரம், பெண்களுக்குள் ஆசீவாதிக்கப்பட்டவள். மங்கையர்க்கரசி என்ற சிறப்பு இவளுக்கே முற்றிலும் பொருந்தும். தன் மகனைப் பார்த்து “நீ என் தசையின் தசை, எலும்பின் எலும்பு என்று கூறும் உரிமையுடையவள் தன்னை சுமந்து சென்று, தனக்குப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்த அன்னையின் உடல் பாவத்தின் கூலியாகிய மரணத்தின் பிடியில் ஒரு வினாடியும் இருக்க ஆண்டவர் விட்டுவிட வில்லை, எனவே, காற்றும் கடலும் வாத்தியம் முழங்கி, மரமும் செடியும் பூ உதிர்த்து நிற்க, பறவையும் வண்டினமும் இன்னிசைபாட, நிலாவைப் பாத அணியாகவும் விண் மீன்களை முடியாகவும் சூடி மன்னவர் மகிழ, விண்ணவர் வியக்க, அன்னை ஆன்மா மற்றும் உடல் விண்ணுலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. எனவேதான் கண்ணிமைக்கும் பொழுதின்றி தன் மகனைப் பெற்றெடுத்த மரியாள், சாவுக்குப் பின்னும் அழிவுத் தன்மையை அடையக் கூடாதென்று பொருத்தமேயாகும்” என்றார். தமசீன் யோவான்.
நீசா நகர் கிரகோரி அன்னையின் தூய்மை பற்றி சொல்லு கையில் “மரியாளின் கன்னிமை, மோசேயின் எரியும் புதர் செடிக்கு ஒப்பானது செடி எரிந்தாலும் அது சாம்பலாகி விடவில்லை அதைப் போல அன்னை மரியா இயேசுவைப் பெற்றாலும் அவரது தூய்மை அழிந்து விடுவதில்லை” என்கிறார்.
சாவு ஒரு தாங்க முடியாத துயரம், சாவு நாம் நேசிப்பவர்களை கண் இமைக்கும் நேரத்திலே விழுங்கிவிடும் ஆக சாவு என்றாலே துன்பம், இழப்பு, அழிவு ஆனால் இன்றைய மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா மரியாள் சாவினால் உடல் அழிந்துவிடாமல் வாழ்வின் உச்சத்திற்கு ஏறிச் சென்றதை நினைவுறுத்துகிறது. காரணம் இயேசு மரித்தவரை அவர் வாழும் போதே உயிர்பித்தார், அவர்களில் சிலர் குறிப்பிடதக்கவர். யாயீரின் ஒரே மகள் (மாற்கு. 5:21), நயீன் ஊர் கைம்பெண்ணின் ஒரே மகன் (லூக்கா 7:11-17), அவரின் நண்பர் லாசர் (யோவான் 11:1-44), மக்கள் “பார்வையற்ற வருக்குப் பார்வை அளித்த இவர் இவரைச் சாகாமல் இருக்கச் செய்ய இயலவில்லையா? என்று கேட்டனர். (யோவான் 11:37), இயேசு உரத்த குரலில் “இலாசரே வெளியே வா” என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். தான் உயிர்த்தெழச் 'செய்ததுமட்டுமல்ல, தன்னிலே நம்பிக்கை கொள்வோரும் அரும். பெரும் காரியங்களைச் செய்வர் என கூறினார். “நான் செய்யும். செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார். ஏன். இவற்றைவிட பெரியவற்றையும செய்வார்” (யோவான் 14:12). ' இதையே பேதுருவின் வாழ்விலும் பார்க்கிறோம். பேதுரு முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டினார். பின்னர் பேதுரு அவர் பக்கம் திரும்பி “தபித்தா, எழுந்திரு” என்றார். உடனே எழுந்து உட்கார்ந்தார் மக்கள் முன் உயிருடன் அபபெண்ணை எழுப்பினார் (தி.ப.9:40-41). தூய பவுல் நள்ளிரவு வரை போதித்துக் கொண்டிருந்தார். களைப்பால் தூங்கிப் போன யூத்திகு மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தார். அவரை பிணமாகத்தான் தூக்கி எடுத்தார்கள் (தி.ப. 20:9). பவுலின் செபம் உயிர் கொடுத்தது. இயேசுவின் வார்த்தை உயிர் உள்ளது உயிர் கொடுக்கக் கூடியது காரணம் உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்... என்றுமே சாகமாட்டார். (யோவான் 11:21).
இதையே தூய சவேரியார், தூய அந்தோணியார் மற்றும் மற்ற புனிதர்கள் வாழ்க்கையில் பார்க்கிறோம். அவர்கள் இறந்தும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் உடல் அழியாமல் இன்றும் அப்படியே இருக்கிறது. காரணம் அவர்கள் இறைவார்த்தையை படைப்பிற்கெல்லாம் எடுத்துரைத்தார்கள். இப்படி இறைவார்த்தையை போதிப்பதற்கே உடல் அழியவில்லை என்றால், இறைமகன் இயேசுலை தன் கருவிலே சுமந்த தாயை, இறைவன் இந்த மண்ணோடு மண்ணாக அழிந்துப்போக விடுவாரா? நிச்சயமாக அழிந்துப்போக விடமாட்டார். காரணம் “ஆண்டவரின் வார்த்தை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறு பெற்றவர்” (லூக்கா 1:45) இல்வாறு இறைவார்த்தையை கேட்டு அதை கடைபிடித்த பெண் உடல் அழிவுறாமல் விண்ணேற்றம் அடைந்தது பொருத்தமானதே. மரியாவுக்கும் இயேசுவுக்கும் இடையே உள்ள தொப்புள்க்கொடி உறவு இயேசுவின் மரணத்திற்குப் பின்பும் தொடர்ந்தது என்பதற்கு மரியாளின் விண்ணேற்பு ஒரு சான்று. திருமுழுக்கு வழியாக கிறிஸ்துவில் இணைந்துள்ள நம் உடல், மண்ணுக்கு இரையானாலும், ஊழிக்காலத்தில் உயிர் பெற்று எழும், என்ற நம்பிக்கையின் சின்னமாக திகழ்கிறது மரியாவின் விண்ணேற்பு.
பிற மறையுரைக் கருத்துக்கள்
1. துன்பத்தின் வழியே கடவுள் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தருகிறார் என்பதை மரியாள் விசுவசித்தார்.
2. துன்பத்திலே துணை இருப்பவள் மரியாள்.
3. புரட்சிப் பெண் மரியாள்.
4. விண்ணிற்க்கும் மண்ணிற்க்கும் அரசி மரியாள்.
5. விடுதலைத் தருபவள் மரியாள்.
மரியன்னையின் விண்ணேற்பு
(ஆகஸ்டு -15)
திருவெளிப்பாடு அல்லது காட்சியாகமம், கனவுகள், காட்சிகள், கதைகள், கவிதைகள் நிரம்பிய ஒரு காவியம். பகலுக்கும் இரவுக்கும், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும், இறைவனுக்கும் சாத்தானுக்கும் நடக்கும் போரில் பகலும், தர்மமும், இறைவனும் வாகை சூடுவர் என்ற உண்மையை உருவக வாயிலாக. உணர்த்துகிறது வெளிபாட்டு நூல். அன்று ஆட்சி பீடத்தில் அமர்ந்து. அக்கிரமம் பல செய்த அரசு வீழ்ச்சியுறும் என்ற உண்மை மறைமுகமாக. இங்கு உணர்த்தப்படுகிறது. பல்வேறு வேதகலாபனைக்கிடையிலும் திருச்சபையாம் அன்னை வெற்றி வாகை சூடுவாள், மரியாள் அலகையின் தலையை நசுக்கி, அரசியாகி அரியணை அமர்வாள் என்று உண்மையை உணர்த்துகிறது இன்றைய வாசகம்.
விண்ணகப் பெண்
கதிரவனை ஆடையாக அணிந்து, நிலாவைத் தன் பாத அணியாகப் பூண்டு, பன்னிரு விண்மீன்களைத் தம் முடியாகச் சூடிய இப்பெண்மணி மரியாளையே குறிக்கிறாள் என்பது பரம்பரைக் கருத்து. புதிய இஸ்ரயேலாகிய திருச்சபை எழிலரசியாக விளங்குவாள் என்பதையும் இவ்வுருவகம் சுட்டுகிறது. இந்நிலையை அடையுமுன் திருச்சபையும் அதன் ஒப்பற்ற குமாரத்தியுமான மரியாளும் எண்ணற்ற சோதனைகளைச் சந்தித்து, போராட்டங்களைத் துணிவுடன் ஏற்று, துன்பத்தின் வழியே இன்பவனத்தை அடைய வேண்டும் என்ற உண்மையையே அவள் பிள்ளையைப் பெற்ற உடன் பறவை நாகம் அதை விழுங்கிவிடக் காத்திருந்தது... அவளோ பாலைவனத்திற்கு ஓடிப்போனாள் (6) என்ற வாசகம் வலியுறுத்துகிறது.
மரியன்னை இன்று விண்ணிலே ஆத்தும சரீரத்துடன் கொலு. வீற்றிருக்கிறாள் என்ற உண்மை, பழங்காலத்திலிருந்து திருச்சபையில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950-ம் ஆண்டு பாப்பிறை 12 -ம். பத்திநாதரால் மறையுண்மையாகப் பிரகடனம் செய்யப்பட்டது. மரியாள். தெய்வத் திருமகனுக்கு மானிட வாழ்வு அளித்தவள். தான் பெற்றெடுத்த திருமகனைக் கையிலேந்தி “இது என் தசையின் தசை; எலும்பின் எலும்பு” என்று கூறும் உரிமை பெற்றவள். தன்னைச் சுமந்து சென்ற இப்பெட்டகம் மண்ணுக்கு இரையாக மனுமகன் விட்டுவிடவில்லை. மரித்தபொழுதே மகிமை பெற்றுவிட்டாள். ஆனால், இம்மகிமை பெறுமுன் தன் மகனுடன் இணைந்து இவள் வியாகுலத் தாயாக மாறினாள். ஈட்டி பாயாமலே இவளது இதயம் திறக்கப்பட்டது. நமது விண்ணகப் பிறப்பும் துன்பங் களாகிய சிலுவை வழியேதான் வரும் என்பதன் முன் அடையாளமாக விளங்குகிறாள் அன்னை மரியாள்.
நாகப் பறவை
இது நெருப்புமயமானது: ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் கொண்ட ஒரு கொடிய பகைவன். தன் வாலால் விண்மீன்களின் மூன்றிலொரு பகுதியை மண்மீது இழுத்துப்போடும் ஆற்றல் கொண்டது (3). மெசியாவின் ஆட்சியை அழிக்கத் தேடும் தீய சக்திகளே இங்கு. உருவகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை அழிவுறும் என்பதும் வேதவாக்கு. மரியும் மகனும் இறுதி நூலாகிய திருவெளிபாட்டில் இடம் பெறுவது போலவே, மனித சமுதாயத்தின் தொடக்கத்திலும் இடம். பெறுவதைக் காணலாம். “மீட்பரை அனுப்புவோம்" என்பதும், பாம்பின். உருவில் வந்த பகைவனைப் பார்த்து “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் இடையே பகைமை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளது குதிங்காலைத் தீண்ட முயலுவாய்”” என்ற இறைவாக்கும் இவ்விண்ணேற்பு விழாவில் நிறைவேறி உள்ளதைக் காணலாம்.
மரியன்னையைப் போல் நாமும் ஒருநாள் ஆத்தும சரீரத்துடன் அவளருகே. வீற்றிருப்போம் என்பதை இவ்விழா நமக்கு நினைவூட்டவேண்டும். அன்னையின் உதவியுடன் அலகையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்க வேண்டும்
.
பறவை நாகம் பெண்மீது சினங்கொண்டு, எஞ்சிய இவள் பிள்ளைகளோடு போர் தொடுக்கச் சென்றது. அவர்கள் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.
இரண்டாம் வாசகம்: 1கொாி. 15:20-26
கிறிஸ்துவின் மரணமும் உயிர்ப்பும் நம் மெய்மறையின் மைய உண்மையாகும். அவர் இறந்தும் வாழ்கிறார். நாமும் ஒரு நாள் உயிர்ப்போம் என்பதன் முன்னோடி அவர்; துஞ்சினோரின் முதற்கனி. ஆத்தும சரீரத்துடன் அவர் விண்ணிலே வீற்றிருப்பதுபோல் மரியாளும் சாவை வென்று விண்ணக வீட்டிலே ஆத்தும சரீரத்துடன் வாழ்கிறாள். நாமும் ஒருநாள் அவளைப்போல் அவளுடன் வாழ்வோம் என்ற பேருண்மையை இன்றைய வாசகம் கூறுகிறது.
துஞ்சினாரின் முதற்கனி
மரணத்தை நீண்ட துயிலுக்கு ஒப்பிடுவர் : “உறங்குவது போலும் சாக்காடு” (குறள் 339). அறுவடையின் முதற்கனியை யூதர்கள் இறைவனுக்குக் காணிக்கையாக்கினர் (லேவி. 23 : 10 - 11). முதற்பலன் அறுவடையின் அடையாளமாகவும் பிணையாகவும் விளங்குகிறது (உரோ. 8 : 23 ; 11 : 16) நம்மைப்போல் மானிட உடல் கொண்ட இயேசு மரித்து உயிர்த்தார் என்ற மறையுண்மை, நாமும் ஒருநாள் உயிர்ப்போம் என்பதன் முன் அடையாளமாகும். “எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார் ' (கொலோ. 1: 18). ஆதாம் மானிடரின் பாவத்திற்குக் காரணமாயிருந்தார்; கிறிஸ்துவோ நம் நித்திய வாழ்வுக்குக் காரணமாயிருக்கிறார். மனிதன் வழியாகச் சாவு உண்டானது போல், புதிய ஆதாமாகிய கிறிஸ்து வழியாகவே இறந்தோர்க்கு உயிர்த்தெழுதலும் வருகிறது. இப்பேருண்மைகள் கற்பனை அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்ததே அன்னையின் விண்ணேற்பு. இறக்கும் பொழுதே அன்னை ஆத்தும சரீரத்துடன் விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டாள். திருமுழுக்கு வழியாகக் கிறிஸ்துவில் இணைந்துள்ள நம் உடலும் மண்ணுக்கு இரையானாலும், ஊழிக்காலத்தில் உயிர்பெற்று எழும் என்ற நம்பிக்கையின் சின்னமாகத் திகழ்கிறது மரியின் விண்ணேற்பு.
“எட்டத் தொலையாத எந்தை பிரான் சந்நிதியில் பட்டப்பகல் விளக்காய்ப் பண்பு உறுவது எந்நாளோ?”' (தாயு)
அகில உலகின் அரசி
மரியாள் மாமன்னரின் அன்னை, “இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” (லூக். 1: 31-32; காண் எசா. 9:6 - 7).இத்தகைய அரசரைப் பெற்றெடுத்த மரியாள் மண்ணுக்கும் விண்ணுக்கும் அரசியாக விளங்குகிறாள். பாவம் செய்த ஏவாள் இன்ப வனத்திலிருந்து விரட்டப்பட்டாள். புது ஏவாளாகிய மரியாளோ இறைவனால் நித்திய பேரின்ப வனத்திற்கு அழைக்கப்பட்டு அனைவரின் அரசியாக முடி சூட்டப்பட்டு விளங்குகிறாள். “நாம் உம் பகைவரை உமக்குக் கால் மணையாக்கும் வரை நீர் என் வலப் பக்கத்தில் அமரும்'' (110:1) என்ற திருப்பாடல் வரி அன்னைக்கு முற்றிலும் பொருந்தும்.
“அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர்பெற்று எழுகிறது. மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமை யுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது” என்ற பவுலின் வாக்கை (1கொரி. 15:43-44) மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது அன்னையின் விண்ணேற்பு நிகழ்ச்சி. இன்று அன்னை ஆண்டவரின் அருகில் அமர்ந்து இறையருளை வாரி வழங்கும் கற்பகத்தருவாக விளங்குகிறாள். நாமும் ஒருநாள் அவளருகில் அமர்வோம் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறாள். கானாவூர் கலியாணத்தில் புதுடை புரியத் தன் மகனுக்கே கட்டளை கொடுத்த மரியாள், இன்று நமக்காகப் பரிந்து பேசுவாள் என்பது உறுதி.
முதற்கனியாகிய கிறிஸ்து உயிர் பெற்றார்: அடுத்து கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் அவருடைய வருகையின் போது உயிர்பெறுவர்.
நற்செய்தி:லூக்கா1:39-56
ஆண்டவருக்கு அடுத்தபடியாக அன்னையின் உடல்தான் ஆத்தும சரீரத்துடன் விண்ணில் வீற்றிருக்கிறதென்பதை மறையுண்மையாக, பனிரெண்டாம் பத்திநாதர் 1950-ஆம் ஆண்டில் பிரகடனம் செய்தார். அன்னையின் விண்ணேற்பு விழாவன்று நம் நாட்டின் சுதந்திர விழாவும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும். எலிசபெத்தம் மாளின் வாழ்த்தும், அன்னையின் அருள்மொழியும் அடங்கியதே இன்றைய நற்செய்தி.
மரியாளின் மாண்பு
மரியாளைப் படைத்தவர் திருக்குமரன்தான்; தன்னைப் படைத்தவர்க்கே மானிட வாழ்வு தந்த பெருமை மரியாளுக்குண்டு. மரியாள் களங்கமற்ற சுனை; தீட்டு அறியாத திருமகள்; அதே மரியாள் தான் பாவக்கறை படிந்த மானிடரின் அன்னையுமாக விளங்குகிறாள். “தாழ்நிலை நின்ற அடிமையைக் கடைக்கண் நோக்கினார் '' என்று தன்னைப் பற்றிப் பாடிய அதே அன்னை, “எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றும்” என்றும் இறைவாக்குரைத்தாள். மரியாள் என்ற விளக்கு. அணைய வேண்டும் என்ற நியதிப்படி அணையும் நிலையை அடைந்தது: ஆனால் அணையமுன் மீண்டும் சுடர்விட்டு ஜொலித்தது. விலக்கப்பட்ட கனியைத் தின்றால் சாவாய் என்பது இறைவனின் கட்டளை. முதல் பெற்றோராம் அவரது சந்ததியாகிய நாம் அனைவரும் மரணத்தின் பிடியில் சிக்கினோம், பாவத்தின் கூலி மரணம் என்கிறார் பவுல். மரியாள் மட்டும் இதற்கு ஒரு விதிவிலக்கு. ஏனெனில் மரியாள் மனுமகனைப் பத்து மாதம் சுமந்திருந்த மணிப்பேழை; கடவுளைத் தாங்கிச்சென்ற கதிர்ப்பாத்திரம். பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்; மங்கையர்க்கரசி என்ற சிறப்பு இவளுக்கே முற்றிலும் பொருந்தும். தன்மகனைப் பார்த்து “நீ என். தசையின் தசை, எலும்பின் எலும்பு என்று கூறும் உரிமையுடையவள். தந்தை கூறியது போல் “நான் இன்று உன்னைப் பெற்றெடுத்தேன் ' என்று கூறும் தகுதியுடையவள். தன்னைச் சுமந்து சென்று, தனக்குப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்த அன்னையின் உடல் பாவத்தின் கூலியாகிய மரணத்தின் பிடியில் ஒரு விநாடியும் இருக்க ஆண்டவர் விட்டுவிடவில்லை. எனவே காற்றும் கடலும் வாத்தியம் முழங்க, மரமும் செடியும் பூ உதிர்த்து நிற்க, பறவையும் வண்டினமும் இன்னிசை பாட, நிலாவைப் பாத அணியாகவும் விண்மீன்களை முடியாகவும் சூடி, மண்ணவர் மகிழ விண்ணவர் வியக்க அன்னை ஆத்தும சரீரத்துடன் பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டாள். எனவேதான் ““கன்னிமைக்குப் பழுதின்றி, தன்மகனைப் பெற்றெடுத்த மரியாள், சாவுக்குப் பின்னும் அழிவுத்தன்மையை அடையக்கூடாதென்பது பொருத்தமேயாகும்' என்கிறார் தமசீன் யோவான்.
ஆகஸ்ட் 15
இவ்வுலக வாழ்வுடன் அனைத்தும் முடிந்துவிடும் என்ற கொள்கைக்குச் சவாலாக அமைந்துள்ளது அன்னையின் விண்ணேற்பு. எவ்விதத்தளை களாலும் பாதிக்கப்படாது அரியணை அமர்ந்துள்ள நம் அன்னை அடிமைத்தளைகளை அறுத்தெறிந்த சுதந்திர மக்களின் எழிலரசி. முதன்முறையாக சுதந்திர விழாக் கொண்டாடப்பட்ட பொழுது, நாட்டுப் பற்றுடைய மாதா பக்தன் மரியன்னையைப் பாரத அன்னையாக உருவகித்துப் பரல் நிறை சிலம்பை அவள் பாதத்தில் அணிந்து, கன்னிச் சென்னியில் காந்தமலர் சூடி, கழுத்திலே மல்லி முல்லையின் மாலை அணிந்து, தாமரை மலரைப் பாதத்தில் சமர்ப்பித்துத் தாமரைத் தாயே என்று வாழ்த்தினான். வெண்கல விளக்கில் நெய்வார்த்துக் கந்தைத் துணியைத் திரியாக்கி ஒளி அஞ்சலி செய்தான். இந்நாட்டு வான்முட்டும் மலையையும், வளமூட்டும் நதியையும், முத்துடை கடலையும், பசும்புல் தரையையும் அன்னையின் பெயரால் அழைத்து மகிழ்ந்தான். இறையன்னை இமய மலையில் அமரவும், குமரி முனையில் அவள் பாதம் பதியவும் அவன் ஆசித்தான். ஒவ்வொரு மானிடரும் அவள் வதியும் பீடமாகவும் விளங்க வேண்டினான். ஆம்; பாரத அன்னையின் விலங்கொடிந்த சுதந்திர நாளுடன் சாவுச்சங்கிலியை முறித்தெரிந்த மரியாளின் விண்ணேற்பு விழா இணைந்துள்ளது மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும். இந்நன்னாளில் நாம் நாட்டின் நற்குடி மக்களாய், மரி. புகழ்பாடும் பக்தர்களாய் வாழ உறுதி பூணுவோம்.
தாழ்நிலை நின்ற அடிமையைக் கடைக்கண் நோக்கினார். இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னை பேறுடையாள் எனப்போற்றுமே.
|