மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

அனைத்து புனிதர்கள் பெருவிழா
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:- திருவெளிப்பாடு7: 2-4,9-14 / 1யோவான் 3:1-3 / மத்தேயு 5:1-12

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



சகல புனிதர்களின்‌ பெருவிழா

இலையதிர்‌ காலம்‌ என்றால்‌ மரணமல்ல. வசந்த காலத்தின்‌ தொடக்கம்‌.
சூரியன்‌ மறைவது மறைவல்ல. சந்திரன்‌, விண்மீன்கள்‌ உதயத்திற்குத்‌ தொடக்கம்‌.
மலர்‌ கருகி விடுவது முடிவல்ல. காய்‌, கனிக்கு இடம்‌ தருகிறது.
கோதுமை மணி மடிவது இழப்பல்ல. அது மடிந்தால்தான்‌ பயிர்‌ முளைத்துப்‌ பலன்‌ தரும்‌.

எனவேதான்‌ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இறந்து கிடந்த சிறுமியைப்‌ பார்த்து, அவள்‌ சாகவில்லை, உறங்குகிறாள்‌ (லூக்‌. 8:529 என்றும்‌, நம்‌ நண்பர்‌ இலாசரும்‌ தூங்குகிறான்‌; நான்‌ அவனை எழுப்புவதற்காகப்‌ போகிறேன்‌ என்றும்‌ (யோவா. 11:11) கூறினார்‌. ஏனெனில்‌ உலகில்‌ நடக்கும்‌ இயற்கையான இறப்பு எதார்த்தமானது. அது பாவத்தின்‌ கூலி (உரோ. 6:23). ஆனால்‌ இயேசுவில்‌ நம்பிக்கை கொண்டு, இறை-மனித உறவோடு வாழ்ந்து இறப்பவர்களுக்கு இந்த உலக இறப்பு, இறைவனில்‌ கிடைக்கும்‌ ஓய்வாகிறது (யோவா. 11:25). இதை விளக்கும்‌ வகையில்தான்‌, ஆண்டவருக்குள்‌ இறந்தவர்கள்‌ செய்த நன்மைகள்‌ அவர்களோடு கூட வரும்‌ (திவெ. 14:13). அவர்கள்‌ தங்கள்‌ உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள்‌ என்று திருவெளிப்பாடு நமக்குத்‌ தருகிறது.

இன்று தாயாகிய திருச்சபை, அன்புக்கு அடிமையாகி, அன்பினால்‌ புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட புனிதர்களின்‌ திருவிழாவைக்‌ கொண்டாடுகிறது. புனிதம்‌ என்பது புண்ணிய தீர்த்தத்தில்‌, புனித ஆற்றில்‌ குளிப்பதால்‌ மட்டும்‌ வந்து விடுவதில்லை. முழுக்க முழுக்க வாழ்வைச்‌ சார்ந்தது. மனிதம்‌ என்ற சொல்லுக்கும்‌ புனிதம்‌ என்ற சொல்லுக்கும்‌ உள்ள வேற்றுமை முதலில்‌ உள்ள ஒரு எழுத்து மட்டும்தான்‌. ஆம்‌, மனிதம்‌ என்றாலே புனிதம்‌ பிறக்கிறது. மனிதமும்‌, புனிதமும்‌, நாணயத்தின்‌ இரு பக்கங்கள்‌ போன்றவை. நாம்‌ ஒவ்வொருவரும்‌ தூயவராக வாழ்வதற்காக (1 யோவா. 3:3) அழைக்கப்பட்டிருக்கிறோம்‌. (முதல்‌ வாசகம்‌). ஏழ்மையையும்‌, துன்பத்தையும்‌, நோயையும்‌, பொறுமையோடு ஏற்று வாழ்பவர்களே புனிதர்கள்‌, பேறு பெற்றவர்கள்‌ என்று இயேசு அழைக்கிறார்‌ (மூன்றாம்‌ வாசகம்‌.)

அன்பார்ந்தவர்களே, புனிதம்‌ என்பது நேற்று பெய்த மழையால்‌ இன்று முளைத்த காளான்கள்போல்‌ அல்ல. மாறாக மனித உள்ளத்தில்‌ புதைந்து கிடக்கும்‌ புனிதத்தை வாழ்க்கையில்‌ ஒவ்வொரு நாளும்‌ மடியும்‌ கோதுமை மணிபோல்‌ (யோவா. 12:24) வளர்த்து எடுக்க வேண்டிய ஒன்று. கடவுள்‌ நம்மோடு இருக்க நமக்குத்தான்‌ வெற்றி என்று அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம்‌ லிங்கனுக்கு அவரது காரியதரிசி ஆறுதல்‌ சொன்னபோது, “நண்பா! கடவுள்‌ நம்மோடு இருக்கிறார்‌ என்பது தெரியும்‌. ஆனால்‌ நாம்‌ கடவுளோடு இருக்கிறோமா?” என்பதுதான்‌ கவலை என்றார்‌ லிங்கன்‌. ஆம்‌, நாம்‌ இறைவனோடு இணையும்போதுதான்‌ (யோவா. 15:5) நாம்‌ புனிதம்‌ அடைவோம்‌. இத்தகைய எண்ணற்ற புனிதர்கள்‌ இந்த உலகில்‌ சாட்சிய வாழ்வு வாழ்ந்து, இறந்தும்‌ வாழ்கிறார்கள்‌ என்பதைத்தான்‌ நாம்‌ நினைவு கூறுகிறோம்‌. ஏனெனில்‌ தூய பவுல்‌ கூறுவதுபோல்‌ சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது (1 கொ. 15:55). நாமும்‌ இவர்களைப் போல, நான்‌ யார்‌? எதற்காக இங்கே வந்தேன்‌?, எங்கிருந்து வந்தேன்‌?, எங்கே போகிறேன்‌? என்பதை உணர்ந்து வாழ்வோம்‌. இதற்காக புனிதர்களிடம்‌ மன்றாடுவோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மாயையான சிந்தனைகள் புனிதர்‌ அனைவர்‌ பெருவிழா.

புனிதர்கள்‌ உறவின்‌ ஒன்றிப்பை ஏற்று நம்புபவர்கள்‌ நாம்‌. வெற்றித்‌ திருஅவை - புனிதர்கள்‌, துன்புறும்‌ திருஅவை - உத்தரிக்கும்‌ ஆன்மாக்கள்‌, போரிடும்‌ திருஅவை - உலக மாந்தர்கள்‌ - இந்த மூன்று திருஅவைகளுக்குமிடையே திகழும்‌ உறவுக்கும்‌ பொலிவுக்கும்‌ நாம்‌ எடுக்கும்‌ விழாக்களே இன்றைய அனைத்துப்‌ புனிதர்‌ பெருவிழாவும்‌ நாளைய இறந்தோர்‌ நினைவு நாளும்‌.

புனிதமா! அது என்ன? எவனோ ஒருவன்‌ கக்கிய கதையை மென்று . அசைபோட்டு உரையாற்றத்‌ தொடங்குகிறார்‌ அந்த சிந்தனைஜீவி. மறைக்கல்வி வகுப்பாம்‌. மாணவர்களைப்‌ பார்த்து ஆசிரியை கேட்கிறாராம்‌. “உங்களில்‌ யார்‌ யார்‌ மருத்துவராக விரும்புகிறீர்கள்‌?”” பலர்‌ கைகளை உயர்த்துகிறார்கள்‌.

“எத்தனை பேர்‌ பொறியாளர்களாக?” வேறு சிலர்‌ கைகளைத்‌ தூக்குகிறார்கள்‌.

“எத்தனைபேர்‌ வழக்கறிஞர்களாக?” ஒரிருவர்‌ தங்கள்‌ விருப்பத்தைத்‌ தெரிவிக்கின்றனர்‌.

“எத்தனை பேர்‌ புனிதராக விரும்புகிறீர்கள்‌?”” ஒருவர்‌ கூட முன்வருவதாகத்‌ தெரியவில்லை. எல்லாரும்‌ தலையைக்‌ கவிழ்த்துக்‌ கொள்கிறார்கள்‌. ஆசிரியைக்கோ ஆச்சரியம்‌! ஏன்‌ இந்த மெளனம்‌? என்று கேட்கிறார்‌. தயங்கித்‌ தயங்கி ஒரு மாணவன்‌ பதில்‌ சொல்கிறான்‌: “புனிதர்கள்‌ எல்லாம்‌ ஒரு மாதிரியானவர்கள்‌, அசடு வழிய முகத்தை மூன்று முழம்‌ நீட்டிக்‌ கொண்டிருப்பவர்கள்‌. எப்போதும்‌ செபித்துக்‌ கொண்டிருப்பவர்கள்‌. கோவில்‌ குளம்‌ என்று திரிபவர்கள்‌”.

பதிலைக்‌ கேட்டுச்‌ சிரித்துக்‌ கொண்டே உரையாளர்‌ தொடர்கிறார்‌: “பார்த்தீர்களா? புனிதம்‌ என்பதெல்லாம்‌ இயல்பான ஒன்றல்ல. இன்னும்‌ சொல்லப்போனால்‌ புனிதம்‌ என்று எதுவும்‌ இல்லை. மனிதமே புனிதம்‌”.

வகுப்பு ஆசிரியையோ, கதை சொன்ன மேதையோ நமக்கு எதை உணர்த்த விரும்புகிறார்கள்‌? மனிதத்தின்‌ சிறப்பையா? மரமண்டைக்குள்‌ இருக்கும்‌ புனிதம்‌ பற்றிய தங்கள்‌ அறியாமையையா?

கதையில்‌ வரிசைப்படுத்திய கேள்விப்‌ பட்டியலே கோளாறானது. மருத்துவர்‌, பொறியாளர்‌, வழக்கறிஞர்‌ என்று கேட்டபின்‌ புனிதருக்குப்‌ பதிலாக “எத்தனைபேர்‌ மனிதர்களாக விரும்புகிறீர்கள்‌?”” என்று கேட்டிருந்தால்‌ எல்லோரும்‌ நான்‌ நான்‌ என்று போட்டி போட்டுக்‌ கொண்டு கைகளை உயர்த்தியிருப்பார்களோ?

மருத்துவராவது, பொறியாளராவது, வழக்கறிஞராவது ... இவையெல்லாம்‌ தொழில்‌ சார்ந்த, தெரிவுக்குரிய (விரும்பினால்‌ ஏற்கலாம்‌, வேண்டாம்‌ என்றால்‌ விட்டுவிடலாம்‌) வாழ்க்கை நிலைகள்‌ மனிதம்‌, புனிதம்... என்பதெல்லாம்‌ மாண்பு சார்ந்த, தெரிவுக்குரிய அல்ல தேவையான, தேடி வளர்த்துக்‌ கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பண்புகள்‌.

மனிதமே புனிதம்‌ என்பதை எண்பிக்க இவர்கள்‌ இயேசுவை வேறு சாட்சிக்‌ கூண்டில்‌ ஏற்றுவார்கள்‌. நல்ல சமாரியர்‌ உவமையென்ன, ஒய்வு நாளில்‌ குணமளித்த புதுமையென்ன சீடர்கள்‌ கோதுமைக்‌ கதிர்களைக்‌ கொய்து தங்கள்‌ பசியைப்‌ போக்கிக்கொண்ட நிகழ்ச்சியென்ன ... இவைகளையெல்லாம்‌ நினைவுபடுத்துவார்கள்‌. மேற்கோள்‌ காட்டுவார்கள்‌. ஆனால்‌ இவைகள்‌ வழியாக இயேசு சொல்ல விரும்பியது மனிதமே புனிதம்‌ என்பதல்ல, புனிதம்‌ என்று மனிதன்‌ நினைப்பலதல்லாம்‌ புனிதம்‌ அல்ல என்பதுதான்‌.

பெத்தானியா இல்லத்தில்‌ இயேசுவுக்கான விருந்தோம்பலில்‌ மார்த்தா காட்டிய பரபரப்புகூட மனித நேய வெளிப்பாடுதான்‌ (லூக்‌. 10:38-42). அப்படியென்றால்‌ “மார்த்தா மார்த்தா நீ பலவற்றைப்‌ பற்றிக்‌ கவலைப்பட்டுக்‌ கலங்குகிறாய்‌. தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத்‌ தேர்ந்தெடுத்துக்‌ கொண்டாள்‌” என்றாரே இயேசு அதற்குப்‌ பொருள்‌ என்ன? தேவையானது, நல்ல பங்கு என்று இயேசு குறிப்பிட்டது எதை?

“நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்‌ கொள்ள நான்‌ என்ன செய்ய வேண்டும்‌?” என்ற கேள்வியோடு இயேசுவைப்‌ பின்பற்ற விரும்பிய பணக்கார இளைஞனிடம்‌ ““உனக்கு இன்னும்‌ ஒன்று குறைபடுகிறது”” (மார்க்‌. 10:17-22) என்று இயேசு சொன்னது எதை?

“அவரை (இயேசுவை) எதிர்நோக்கி இருக்கிற அனைவரும்‌ அவர்‌ தூயவராய்‌ இருப்பதுபோல தம்மையே தூயவராக்க வேண்டும்‌” (1 யோ. 3:3) என்று திருத்தூதர்‌ யோவான்‌ சுட்டிக்‌ காட்டுவது எதை?

"இந்தியா டுடே' என்ற ஆங்கில இதழில்‌ வெளியான அன்னை தெரசாவின்‌ புனித பட்டத்துக்கான தயாரிப்புப்‌ பற்றிய கட்டுரையைப்‌ படித்துவிட்டு வாசகர்‌ மடலில்‌ “தெரசா நமக்கு அன்னையாகவே "இருக்கட்டும்‌. அவரைப்‌ புனிதராக்கி நம்மிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டாம்‌”. ஒன்று ஒருவர்‌ எழுதியிருந்தார்‌. அந்த அன்னை தெரசா “என்னைச்‌ சமூகப்‌ பணியாளர்‌ என்று அழைக்கும்‌ போதெல்லாம்‌ நான்‌ மிகவும்‌ வருந்துகிறேன்‌. ஏனெனில்‌ நான்‌ சமூக சேவகி அல்ல. நான்‌ இறைப்பணியாளர்‌, கிறிஸ்து சேவகி” என்று சொன்னது ஏன்‌?

தந்‌தை கடவுளின்‌ திருவுள ஏற்பு, இயேசுவோடு ஆழ்ந்த ஒன்றிப்பு, தூய ஆவியாரில்‌ புதுவாழ்வு இவைகள்தாம்‌ புனிதத்தின்‌ அம்சங்கள்‌.

புனிதம்‌ என்பது அன்பு போல, அழகுபோல, கற்புப்‌ போல வார்த்தைக்குள்ளோ, வருணனைக்குள்ளோ அடங்காதது. அனுபவச்‌ சுவைக்குரியது.

ஒரு நாத்திகன்‌ - கடவுள்‌ நம்பிக்கை இல்லாதவன்‌ - மனிதமே புனிதம்‌ என்றால்‌ புரிந்து கொள்ளலாம்‌. தன்னைக்‌ கடவுளின்‌ பிள்ளை என்று சொல்லிக்‌ கொள்பவன்‌, இறையாட்சிப்‌ பணிக்கென இறைவனால்‌ அழைப்பு பெற்றதாகக்‌ கருதுபவன்‌ மனிதமே புனிதம்‌ என்றால்‌ அவனது வாழ்க்கையின்‌ ஊனத்துக்குக்‌ கட்டுகிற சப்பையோ என்னவோ! ஏதோ ஒர்‌ ஒட்டையை அடைக்கப்‌ பயன்படுத்தும்‌ சக்கையோ என்னவோ! அடிப்படை மனிதப்‌ பண்புகளை வெளிப்படுத்தாதவனெல்லாம்‌ மனிதமே புனிதம்‌ என்று கொடிபிடித்துத்‌ திரிவதுதான்‌ அருவருப்பாய்‌ இருக்கிறது.

அதற்காகப்‌ புனிதர்கள்‌ எல்லாரும்‌ தவறு செய்யாதவர்களா? இல்லை. பலமுறை தடுமாறி நின்றவர்கள்‌. பரிதாபமாகத்‌ தடுக்கி விழுந்தவர்கள்‌. ஆனால்‌ திருந்‌(த்‌)திய பதிப்புக்கள்‌. A SAINT IS A DEAD SINNER REVISED QAND EDITED என்று புனிதர்‌ யார்‌ என்ற கேள்விக்கு விளக்கம்‌ அளிக்கிறது அலகையின்‌ அகராதி (THE DEVIL'S DICTIONARY) என்ற ஆங்கில ஏடு.

சுருங்கக்‌ கூறின்‌ மனிதமின்றிப்‌ புனிதமில்லை. நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால்‌ மனிதம்‌ புனிதம்‌ அன்று. மனிதத்தின்‌ பயண இலக்கு புனிதம்‌. “நீங்கள்‌ தூயோராவதே கடவுளுடைய திருவுளம்‌ ... கடவுள்‌ நம்மை ஒழுக்கக்கேட்டிற்கு அல்ல; தூய வாழ்வுக்கே அழைத்தார்‌” (1 தெச. 4:3-7).

விண்ணகத்தில்‌ இருப்பதால்‌ புனிதர்கள்‌ அல்ல. மாறாக இம்மண்ணுலகத்திலேயே புனிதர்களாய்‌ வாழ்ந்தார்கள்‌. இன்று விண்ணக மாட்சியில்‌ பங்கு கொள்கிறார்கள்‌. விண்ணுலகு செல்ல எளிய வழி? ஒவ்வொரு நாளும்‌ நாம்‌ செய்வதை எல்லாம்‌ கடவுளுக்காகச்‌ செய்துவிட்டால்‌ போதும்‌. “நீங்கள்‌ உண்டாலும்‌ குடித்தாலும்‌ எதைச்‌ செய்தாலும்‌ எல்லாவற்றையும்‌ கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்‌” (1 கொரி. 10:31).

இயேசுவைப்‌ பின்பற்றுவதில்‌ புனிதர்களை எடுத்துக்காட்டாகக்‌ கொள்கிறோம்‌. திருத்தூதர்‌ பவுல்‌ கூறுவார்‌ : “நான்‌ கிறிஸ்துவைப்‌ போல்‌ நடப்பது போன்று, நீங்களும்‌ என்னைப்‌ போல்‌ நடங்கள்‌” (1 கொரி 11).

புனிதர்களிடம்‌ நாம்‌ தேடுவதெல்லாம்‌ இவைதான்‌:
1. அவர்களின்‌ வாழ்விலே எடுத்துக்காட்டு.
2. அவர்களின்‌ ஒன்றிப்பில்‌ தோழமை.
3. அவர்களின்‌ பரிந்துரையால்‌ பேருதவி.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மறையுரை

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அனைத்து தூயவர்கள்‌ (நவம்பர்‌ 1)

“தனக்காகவும்‌ பிறருக்காகவும்‌ வாழ்கிறவன்‌ தான்‌ மனிதன்‌; பிறருக்காகவும்‌ கடவுளுக்காகவும்‌ மட்டூம்‌ வாழ்கிறவன்‌ புனிதன்‌”. நாம்‌ ஒவ்வொருவரும்‌ புனிதர்களாக வாழ, இன்றைய நாளில்‌ இறைவன்‌ நம்மை அழைக்கிறார்‌.

புனிதர்கள்‌ யார்‌? புனிதர்கள்‌ கடவுளா? புனிதர்களை நாம்‌ வழிபடுகின்நோமா? வணங்குகின்றோமா? புனிதர்களிடம்‌ நாம்‌ மன்றாட வேண்டுமா? ஏன்‌, நமது தாய்த்‌ திருச்சபை புனிதர்களுக்கு முக்கியத்துவம்‌ கொடுக்கிறது? இவ்வாறான நம்முடைய, மற்றும்‌ பிற சபையைச்‌ சார்ந்தவர்களுடைய பல கேள்விகளுக்கும்‌ சந்தேகங்களுக்கும்‌ இன்றைய பெருவிழா நமக்கு விளக்கம்‌ தருகிறது.

புனிதர்கள்‌ என்பவர்கள்‌ இவ்வுலகில்‌ இறைவனுக்கு ஏற்புடையவர்களாக விசுவாசத்தில்‌ உறுதிகொண்டூ மற்றவர்களுக்கு இறைவனைக்‌ காண்பித்து இன்று விண்ணக வாழ்வைச்‌ சுவைத்துக்‌ கொண்டிருப்பவர்கள்‌. எபிரேயருக்கு எழுதியத்‌ திருமுகம்‌ 12:22- 23-இல்‌ கடவுளின்‌ நகர்‌ விண்ணக எருசலேம்‌. அதனைப்‌ பல்லாயிரக்‌- கணக்கான வானதூதர்கள்‌ சூழ்ந்துள்ளனர்‌. விண்ணகத்தில்‌ தாய்த்‌ திருச்சபை விழா கூட்டமென அங்கே கூடியுள்ளது என்று கூறும்‌ இறைவார்த்தை நமக்கு இதனை உறுதிப்படுத்துகிறது.

திருச்சபையின்‌ முதல்‌ நூற்றாண்டுகளில்‌ திருச்சபையால்‌ நினைவு கூறப்பட்ட புனிதர்கள்‌ அனைவரும்‌ வேதச்‌ சாட்சிகளே. வேதசாட்சிகளைத்‌ தவிர ஏராளமான புனிதர்களும்‌ மோட்சத்தில்‌ புனிதர்களாகப்‌ பேரின்பப்‌ பாக்கியம்‌ அனுபவித்து வருகிறார்கள்‌.

புனிதர்களாக யாரும்‌ பிறப்பதில்லை. மனிதர்களாக பிறந்து புனித நிலைக்குத்‌ தங்களையே மாற்றிக்‌ கொண்டவர்கள்தான்‌ புனிதர்கள்‌. இவர்கள்‌ தங்கள்‌ வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்து, கிறிஸ்தவ விசுவாசத்தில்‌ ஊன்றி நின்று, ஒரு எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தவர்கள்‌. புனிதர்கள்‌ தவறு செய்தவர்கள்தான்‌, ஆனால்‌ உணர்ந்து திருந்தியவர்கள்‌. ஒரேயடியாக வீழ்ந்துவிடவில்லை, வீழ்ந்தாலும்‌ எழுந்தவர்கள்‌.

கி.பி. 153-ஆம்‌ ஆண்டு ஆயர்‌ பொலிக்கார்ப்‌ என்பவர்‌ மறைசாட்சி முடி பெற்றார்‌. இதை வானகப்‌ பிறப்பு நாளாக தொடக்கக்‌ கிறிஸ்தவர்கள்‌ கொண்டாடினர்‌. நமக்கு முன்சென்ற இவர்களின்‌ வானகப்‌ பிறப்பு நாளைக்‌ கொண்டாடும்‌ போது நாமும்‌ சாட்சி பகர நம்மையேத்‌ தயாரித்துக்‌ கொள்கிறோம்‌.

பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியாக கி.பி. 387-ஆம்‌ ஆண்டு நிசயாவில்‌ இரண்டாவது பொதுச்சங்கம்‌ கூட்டப்பட்டது. இதில்‌ புனித உருவங்களை நாம்‌ பார்க்கும்போது இவைகள்‌ எந்த ஆட்களைக்‌ குறிக்கின்றனவோ அவர்களை நினைவு படுத்துகின்றன என்றும்‌ அவர்களை நினைத்துக்கொள்வதனால்‌, அவர்களைப்‌ பின்பற்ற முயலுகிறோம்‌. அவர்களுக்கு வணக்கம்‌ செலுத்துகிறோம்‌ என்றும்‌ விளக்கம்‌ கொடுக்கப்பட்டது.

கி.பி. 8-ஆம்‌ நூற்றாண்டிலேயே நவம்பர்‌ ஒன்றாம்‌ தேதி அனைத்துப்‌ புனிதர்கள்‌ பெருவிழாக்‌ கொண்டாடப்பட்டது. குறிப்பாகப்‌ பிரான்சு, இங்கிலாந்து நாடுகளில்‌. கி.பி. 9-ஆம்‌ நூற்றாண்டில்‌ இத்திருவிழாவின்‌ முக்கியத்துவத்தை உணர்ந்து மற்ற பல பகுதிகளிலும்‌ கொண்டாடப்பட்டது. கி.பி. 10-ஆம்‌ நூற்றாண்டில்‌ உரோமாபுரியில்‌ இரவு செபத்தோடூ உபவாசமிருந்து கொண்டாடப்பட்டது. இவ்வாறாகத்‌ திருச்சபை வரலாற்றில்‌ இப்பெருவிழா முக்கிய இடம்‌ பெற்றது.

உலகிலுள்ள எல்லாருமே கடவுளின்‌ காயலாகப்‌ படைக்கப்‌- பட்டவர்கள்‌. கடவுளின்‌ பண்பைப்‌ பெற்றுள்ள நாம்‌ எந்தச்‌ சூழ்நிலையிலும்‌ நன்மையையேச்‌ செய்திட அழைக்கப்பட்டுள்ளோம்‌. இவ்வழைத்தலை ஏற்று வாழும்போது ஒருவர்‌ புனிதராகிறார்‌.

புனிதர்கள்‌ கடவுளா?

இல்லை. புனிதர்கள்‌ கடவுள்‌ இல்லை. கடவுள்‌ முழுமை- யானவர்‌, அனைத்தையும்‌ படைத்தவர்‌ கடவுள்‌. அனைத்தையும்‌ சாதாரண மனிதர்கள்‌. தங்கள்‌ வாழ்வால்‌ புனித நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள்‌. அவர்கள்‌ கடவுளோடு கொண்ட நெருங்கிய உறவால்‌ அந்த முழுமையை நோக்கிப்‌ பயணம்‌ செய்தவர்கள்‌. கடவுளுக்காகக்‌ கடவுளின்‌ திட்டப்படி இவ்வுலகில்‌ வாழ்ந்தவர்கள்‌. அதற்குப்‌ பரிசாகக்‌ கடவுளை முகமுகமாய்த்‌ தரிசிக்கும்‌ வரத்தைப்‌ பெற்று விண்ணகத்தில்‌ நமக்காகப்‌ பரிந்துப்‌ பேசுகின்றவர்கள்‌.

கிறிஸ்தவர்களாகிய நாம்‌, புனிதர்கள்‌ யார்‌? கடவுள்‌ யார்‌? என்ற வேறுபாட்டைத்‌ தெரிந்து கொள்வது அவசியம்‌. பலர்‌ ஆதித்‌ திருச்சபையில்‌ வேதகலாபனை நேரத்தில்‌ விசுவாசத்தைக்‌ காப்பாற்ற பல வேதனைகள்‌ பல கஷ்டங்களை எதிர்கொண்டார்கள்‌, ஏன்‌ தங்கள்‌ உயிரையேத்‌ தியாகம்‌ செய்தார்கள்‌. இவர்களை மறைசாட்சிகள்‌ என்றழைக்கிறோம்‌. பின்பு, பலர்‌ சாதாரண மரணம்‌ அடைந்தாலும்‌ தங்கள்‌ வாழ்க்கை மற்றவர்களுக் கு எடுத்துக்காட்டான விசுவாச வாழ்வு வாழ்ந்ததால்‌ இவர்களைப்‌ புனிதர்கள்‌ என்றழைக்கிறோம்‌. ஆதலால்‌ புனிதர்கள்‌ கடவுள்‌ அல்லர்‌, கடவுளால்‌ படைக்கப்பட்ட மனிதர்கள்‌ என்ற தெளிவானச்‌ சிந்தனை கொள்வோம்‌.

புனிதர்களுக்கு நாம்‌ செலுத்துவது வழிபாடா? வணக்கமா?

புனிதர்களை நாம்‌ வழிபடுவதில்லை. ஆராதிப்பதில்லை. புனிதர்களுக்கு நாம்‌ வணக்கம்‌ செலுத்துகிறோம்‌. வழிபாடு கடவுளுக்கு மட்டும்‌ உரித்தானது.
மரியாதை : நாம்‌ நம்‌ பெரியவர்களுக்குச்‌ செலுத்துவது
வணக்கம்‌ - நாம்‌ புனிதர்களுக்குச்‌ செலுத்துவது
மகத்தான வணக்கம்‌ - நாம்‌ புனித கன்னி மரியாள்‌, இறைவனின்‌ தாய்க்குச்‌ செலுத்துவது
ஆராதனை வழிபாடு - நாம்‌ கடவுளுக்குச்‌ செலுத்துவது

எந்தப்‌ புனிதரும்‌ தங்களைக்‌ கடவுள்‌ நிலைக்கு உயர்த்தியதில்லை. கடவுளுக்குச்‌ சமமாக நினைத்ததில்லை. நான்தான்‌ கடவுள்‌ என்று கூறியதுமில்லை. இவர்கள்‌ கடவுளுக்காக வாழ்ந்தவர்கள்‌. விண்ணக வீட்டில்‌ வாழ்கிறவர்கள்‌. நமக்காக இடைவிடாமல்‌ கடவுளிடம்‌ மன்றாடுகிறவர்கள்‌. நாம்‌ புனிதர்கள்‌ மூலம்‌ கடவுளிடம்‌ வேண்டுகிறோம்‌. இவர்கள்‌ நம்‌ விண்ணப்பத்திற்கு ஒரு பாலமாக, ஒரு இணைக்‌ கருவியாகத்‌ திகழ்கிறார்கள்‌.

திருத்தந்தை 23-ஆம்‌ யோவான்‌ “கத்தோலிக்க மரபின்படி புனிதர்களுக்குக்‌ காட்டும்‌ வணக்கம்‌ வெறும்‌ மரியாதை மட்டூமன்று: அல்லது வேளா வேளைகளில்‌ எழுப்பும்‌ சிறு சிறு மன்றாட்டு மட்டுமன்று; ஆழ்ந்த அடிப்படையிலமைந்த ஞான உறவாகும்‌. அவர்கள்‌ நமக்குத்‌ தந்துள்ள விலைமதிக்கப்‌ பெறாத முன்மாதிரிகையும்‌ பாடமும்‌ நமக்கு மகிழ்ச்சியூட்டும்‌ ஊக்குவிக்கும்‌ உதவிகளாகும்‌'” என்று கூறுகிறார்‌.

புனிதர்களுக்கு நாம்‌ செய்யக்கூடிய மிகப்பெரிய வணக்கம்‌ அவர்களுடைய புனிதத்துவமான வாழ்வு முறையைப்‌ பின்பற்றுவதே. புனிதர்கள்‌ அனைவரும்‌ நாம்‌ எவ்வாறு கடவுளின்‌ விருப்பப்படி வாழ வேண்டும்‌ என கற்றுத்‌ தருகிறார்கள்‌.

புனிதர்களிடம்‌ ஏன்‌ மன்றாட வேண்டும்‌?

மனிதர்களால்‌ எல்லாம்‌ சாத்தியமில்லை. லூக்கா எழுதிய நற்செய்தி 5:17-26-இல்‌ முடக்குவாதமுற்ற ஒருவரைக்‌ குணமாக்கக்‌ நான்குபேர்‌ கூரைமேல்‌ ஏறி ஒடுகளைப்‌ பிரித்து அவரைக்‌ கட்டிலோடு இயேசுவுக்குமுன்‌ இறக்கி அவனை குணமடையச்‌ செய்ததாக வாசிக்கிறோம்‌. அந்த நால்வரின்‌ விசுவாசத்தால்‌ அவன்‌ குணம்‌ பெற்றான்‌. அந்த நான்கு நபர்கள்‌ முடக்குவாதமுற்றவன்‌ குணம்பெற உதவியாக இருந்தார்கள்‌. அதேபோல்‌ நம்முடைய இயலாத நிலையில்‌ புனிதர்கள்‌ நமக்காக இறைவனிடம்‌ மன்றாடூவார்கள்‌. மேலும்‌ புனிதர்களின்‌ பரிந்துரையை நாம்‌ மேலான முறையில்‌ விரும்பவேண்டும்‌. ஏனெனில்‌ நாம்‌ நமது மன்றாட்டினால்‌ பெறமுடியாத நன்மைகளை அவர்களின்‌ மன்றாட்டின்‌ பயனாகப்‌ பெறலாம்‌. இதனால்தான்‌ திருத்தொண்டர்‌, குருத்துவ, ஆயர்‌ திருநிலைப்பாடூ மற்றும்‌ துறவறசபையினரின்‌ நித்திய வார்த்தைப்பாடு நடைபெறும்‌ போதும்‌ பாஸ்கா திருவிழிப்பு ஞாயிறன்றும்‌ புனிதர்களின்‌ மன்றாட்டு மாலை முக்கிய இடம்‌ பெறுகிறது.

திருச்சபை ஏன்‌ புனிதர்களுக்கு முக்கியத்துவம்‌ கொடுக்கிறது என்ற கேள்விக்குப்‌ பதிலாக, புனிதர்களும்‌ திருச்சபையின்‌ அங்கத்தினர்கள்‌. நம்‌ குடும்பத்தில்‌ ஒருவரின்‌ வெற்றி குடும்பத்தில்‌ உள்ள அனைவருக்கும்‌ மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல்‌ கிறிஸ்தவத்‌ திருச்சபை என்ற நம்‌ குடும்பத்தில்‌ பலர்‌ புனிதர்களாக வாழ்ந்து இறந்திருக்கிறார்கள்‌. அவர்களுடன்‌ நாமும்‌ சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடுவதுதானேச்‌ சிறந்தது. அதற்காகத்‌ திருச்சபை நமக்குத்‌ தரும்‌ ஒரு அரியச்‌ சந்தர்ப்பம்தான்‌ இப்பெருவிழா.

இப்பெருவிழாவின்‌ முக்கிய நோக்கம்‌ புனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவதோ, பெருமைப்படுத்துவதோ அல்ல. மாறாக, நாமும்‌ இவர்களைப்போல புனித நிலைக்கு உயர்த்தப்பட, இவர்களைப்போல வாழத்‌ திருச்சபை அறிவுறுத்துகிறது.

புனித வாழ்வு வாழ்ந்தவர்கள்‌ ஏராளம்‌ ஏராளம்‌. புனிதர்கள்‌ பட்டம்‌ பெற்றவர்கள்‌ மட்டுமல்ல; எண்ண முடியாத வேறு நீதிமான்களையும்‌ நாம்‌ காண்கிறோம்‌. அவர்கள்‌ கடவுளையும்‌ அவருடையச்‌ செம்மறியாகிய இயேசுவையும்‌ புகழ்கிறார்கள்‌. புனிதர்கள்‌ எத்தனையோ பேபர்‌ திருச்சபைப்‌ பட்டியலில்‌ இடம்பெறவில்லை. ஆனால்‌ கடவுளின்‌ பட்டியலில்‌ அவர்கள்‌ விடுபடவில்லை. இவ்வாறு திருச்சபையின்‌ பட்டியலில்‌ இடம்பெற்ற, இடம்பெறாத அனைத்துப்‌ புனிதர்களையும்‌ நினைவு கூர்ந்து கொண்டாடும்‌ இத்திருநாளில்‌ நாமும்‌ கடவுளின்‌ பட்டியலில்‌ இடம்பெற்று விண்ணக வாழ்வைச்‌ சுவைக்கப்‌ புனிதமிக்க வாழ்வு வாழ்ந்து, வரும்‌ தலைமுறைக்கு வழிகாட்டிகளாக வாழ்வோம்‌.

நாம்‌ விசுவாசப்‌ பிரமாணத்தில்‌ புனீதர்களுடையச்‌ சமூதிதப்‌ பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்‌ என்று அறிக்கையிடூம்போது, விண்ணக எருசலேமை நினைவு கூர்ந்து அவ்விடம்‌ நோக்கிப்‌ பயணம்‌ செய்ய நம்‌ வாழ்வை ஆயத்தமாக்குகிறோம்‌. அவர்களுடைய பெயரை நமக்குச்‌ சூட்டியிருக்கிறோம்‌. அப்புனிதரைச்‌ சந்தித்து நாமும்‌ அவரைப்‌ போல்‌ வாழ முயற்சிப்போம்‌.

நாம்‌ அனைவரும்‌ பயணிகள்‌. விண்ணகத்தை நோக்கியுள்ளப்‌ பயணத்தில்‌ நாம்‌ புனிதர்களாக மாற முயற்சி எடுப்போம்‌. முயற்சிகள்‌ தவறலாம்‌. ஆனால்‌ முயற்சி செய்யத்‌ தவறாதே என்ற விருதுவாக்கோடு அனைத்துப்‌ புனிதர்களிடம்‌ இன்று மன்றாடிப்‌ புனித நிலைக்கு நம்மை மாற்றிக்‌ கொள்ள முயற்சி எடுப்போம்‌.

மனிதனாகப்‌ பிறந்தோம்‌. புனிதனாக வாழ்ந்து சாவோம்‌. மனிதர்களாக இவ்வுலகிற்கு வந்தோம்‌, புனிதர்களாக வாழ்ந்து விண்ணகத்திற்குச்‌ செல்வோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அனைத்துப்‌ புனிதர்‌

(நவம்பர்‌ -1)

முதல்‌ வாசகம்‌ : திவெ. 7 : 2-4, 59-14

திவெ 7-ஆம்‌ அதி. புதிய இஸ்ரயேல்‌ பற்றிக்‌ கூறுகிறது. இஸ்ரயேல்‌ மக்களின்‌ 12 குலங்களிலிருந்து கணக்கிலடங்காத மக்கள்‌ முத்திரையிடப்‌ பட்டிருக்கின்றனர்‌ (7 : 4-8). இவர்கள்‌ அழிவின்‌ மீதும்‌ சாவின்‌ மீதும்‌ வெற்றி கொண்டவர்கள்‌. (முத்திரையிடப்பட்டோர்‌ ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்‌ பேர்‌ என்பது முழுமையையும்‌-12121000 - அதே வேளையிலே எண்ணிலடங்காத ஒரு பெரிய தொகையையும்‌ சுட்டும்‌). அனைத்துப்‌ புனிதர்‌ திருநாளன்று, இவ்வாசகம்‌, நாம்‌ அனைவரும்‌ விண்ணகத்திற்கு உரியவர்கள்‌; புனிதவாழ்வு வாழ வேண்டும்‌ என்று நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

நாம்‌ முத்திரை பதிக்கப்பெற்றுள்ளோம்‌

முத்திரை ஆனது நாம்‌ இறைவனுக்குச்‌ சொந்தமானவர்கள்‌ என்ற உரிமையை அளிக்கிறது. சாத்தானும்‌ சாவும்‌ நம்மைத்‌ தொட முடியாது என்பதைச்‌ சுட்டுகிறது. நாம்‌ பெற்ற முத்திரை “பிதா சுதன்‌ தூய ஆவியாரில்‌” நாம்‌ பெற்ற திருமுழுக்கே எனலாம்‌. “உன்‌ வழிமரபினர்‌ மீது என்‌ ஆவியைப்‌ பொழிவேன்‌. உன்‌ வழித்தோன்றல்களுக்கு என்‌ ஆசியை வழங்குவேன்‌.” “நான்‌ ஆண்டவருக்கு உரியவன்‌” என்பான்‌ ஒருவன்‌... “ஆண்டவருக்குச்‌ சொந்தம்‌” என்று இன்னொருவன்‌ தன்‌ கையில்‌ எழுதி, “இஸ்ரயேல்‌” என்று பெயரிட்டுக்கொள்வான்‌”' (எசா 44 : 3-5) என்பது அன்று இறைவன்‌ இஸ்ரயேலருக்குத்‌ தந்த ஆசிமொழி; இன்று அது நம்‌ திருமுழுக்கில்‌ நிறைவேறுகிறது. கடவுளாலே குறித்து வைக்கப்பட்ட மக்கள்‌ நாம்‌, தேர்ந்தெடுக்கப்பட்ட இனம்‌. இத்தகைய ஒரு பேராசியை இறைவன்‌ நமக்குத்‌ தந்தமைக்கு நாம்‌ நன்றி செலுத்துவோம்‌. முத்திரை குலையாது இறைவனுக்குகந்த வாழ்வு வாழ முயற்சிகள்‌ எடுப்போம்‌. முத்திரை பதிக்கப்பட்டு விண்ணில் உள்ள நம்‌ முன்னோருக்கும்‌, முத்திரை பதிக்கப்பட்டு மண்ணில் உள்ள நமக்கும்‌ உள்ள உறவை வளர்ப்போம்‌. “புனிதர்களுடைய உறவை விசுவசிக்கிறேன்‌.”

முத்திரை வாழ்வு பொறுப்புள்ள வாழ்வு

விண்ணிலிருக்கும்‌ நம்‌ முன்னோர்‌ தம்‌ முத்திரையைப்‌ பாதுகாக்க இரத்தம்‌ சிந்தவும்‌ தயங்கவில்லை (22 : 14). உரிமையிருக்குமிடத்தில்‌ கடமையும்‌ உண்டு. இறைவனின்‌ பிள்ளைகள்‌ என்ற உரிமைப்பேற்றைப்‌ பெற்றவர்கள்‌ அவ்‌இறைவனின்‌ பிள்ளைகளுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதில்‌ கண்ணும்‌ கருத்துமாய்‌ இருக்கவேண்டும்‌. “ஆகவே என்‌ வலுவின்மை யிலும்‌ இகழ்ச்சியிலும்‌, இடரிலும்‌ இன்னலிலும்‌ நெருக்கடியிலும்‌ கிறிஸ்துவை முன்னிட்டு நான்‌ அகமகிழ்கிறேன்‌. ஏனெனில்‌ நான்‌ வலுவற்றிருக்கும்‌ போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்‌” ( 2 கொரி 12 : 10) என்பார்‌ பவுல்‌. அதே பவுல்‌ “பன்முறை சிறையில்‌ அடைபட்டேன்‌... தடியால்‌ அடிபட்டேன்‌... ஒருமுறை கல்லெறிபட்டேன்‌... மூன்று முறை கப்பல்‌ சிதைவில்‌ சிக்கினேன்‌; ஓர்‌ இரவும்‌ பகலும்‌ ஆழ்கடலில்‌ அல்லலுற்றேன்‌. பயணங்கள்‌ பல செய்தேன்‌; அவற்றில்‌ ஆறுகளாலும்‌ இடர்கள்‌, கள்வராலும்‌ இடர்கள்‌, என்‌ சொந்த மக்களாலும்‌ இடர்கள்‌, காட்டிலும்‌ இடர்கள்‌, கடலிலும்‌ இடர்கள்‌...” (2 கொரி 1! : 23-29) என்று கூறுவதையும்‌ காண்க. ஆதிக்‌ கிறிஸ்தவர்களும்‌ சரி, நம்‌ நாட்டுப்‌ புனிதர்களும்‌ சரி (சவேரியார்‌, அருளானந்தர்‌). இக்காலத்திய கிறிஸ்தவர்களும்‌ சரி (மாக்சிமிலியான்‌ கோல்பே, மிக்கேல்‌ புரோ) தாம்‌ பெற்ற இறைமுத்திரையைக்‌ காக்க எத்துணைத்‌ துயரங்களை அனுபவித்தனர்‌? கிறிஸ்லுவ வாழ்வு சிலுவை வாழ்வு என்பதை உணர்கிறோமா!

முத்திரை வாழ்வு மகிழ்ச்சி வாழ்வு

விண்ணவர்கள்‌ இறைவனைப்‌ “போற்றி, போற்றி" யென்று பாடுகின்றனர்‌ (7: 10-12). தம்மை மீட்ட இறைவனை ஏத்துகின்றனர்‌. அவருடைய பலத்தையும்‌, வல்லமையையும்‌, மாட்சியையும்‌ புகழ்கின்றனர்‌. என்றும்‌ மகிழ்ச்சி, எங்கும்‌ மகிழ்ச்சி, எல்லோருக்கும்‌ மகிழ்ச்சி. ஆம்‌, நாமும்‌ இத்தகைய மகிழ்ச்சி வாழ்வுக்குத்‌ “ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம்‌. நம்‌ வாழ்நாளிலும்‌ நாம்‌ நல்வாழ்வு வாழ்ந்து, நாம்‌ மகிழ்ச்சியாயிருந்து, அம்மகிழ்ச்சியைப்‌ பிறரோடு பகிர்ந்துகொள்ளும்‌ மகிழ்ச்சியின்‌ திருத்தூதர்களாக மாறவேண்டும்‌.

( போற்றியும் மகிமையும் என்றென்றும் கடவுளுக்கே.)

இரண்டாம்‌ வாசகம்‌ :1யோ3:1-3

கிறிஸ்துவ வாழ்வு நம்பிக்கை வாழ்வு

இறைமக்கள்‌ அனைவரும்‌ புனிதராகும்படி அழைக்கப்பட்டவர்கள்‌. “கிறிஸ்துவின்‌ பெயரை எங்கும்‌ போற்றித்‌ தொழுகின்ற அனைவரோடும்‌ கூடப்‌ புனிதராயிருக்கும்படி அழைக்கப்பட்ட உங்களுக்கு”: “ஆண்டவ ராகிய கிறிஸ்து இயேசுவுக்குள்‌ பரிசுத்தராக்கப்பட்ட உங்களுக்கு‌ (1கொரி 1: 2) என்ற பவுலின்‌ வாக்குகள்‌ கிறிஸ்தவ அழைப்பின்‌ மேன்மையைச்‌ சுட்டுகின்றன. “கிறிஸ்தவர்கள்‌ இறைமக்கள்‌ சமுதாயத்தின்‌ உறுப்பினர்‌; கடவுளுடைய குடும்பத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ (எபே 2: 19; காண்‌ 1 தெச 3: 13) என்று கிறிஸ்தவர்களை இறைக்‌ குடும்பத்தின்‌ அங்கமாகக்‌ காண்கிறார்‌ பவுல்‌. அனைவரும்‌ இந்த இலட்சிய வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும்‌, ஒருசிலரே அதை அடைந்ததாகத்‌ திருச்சபை வெளிப்படையாகப்‌ பிரகடனம்‌ செய்துள்ளது. எனினும்‌ ஏராளமான மக்கள்‌ இறைவனது திருச்சித்தத்திற்கு அமைந்து, அவரது கட்டளைகளை அனுசரிப்பதிலே தியாகங்கள்‌ பல புரிந்து, தம்‌ கடமைகளைக்‌ கருத்துடன்‌ செய்து, எவரும்‌ அறியாத வகையில்‌, புனிதமான வாழ்வு வாழ்ந்துள்ளனர்‌. இன்று விண்ணிலே வீற்றிருக்கும்‌ இத்தகைய மண்ணவர்‌ அனைவர்க்கும்‌ விழா : நாமும்‌ ஒருநாள்‌ இவர்கள்‌ கூட்டத்திலே சேருவோம்‌ என்ற நம்பிக்கை விழா; அனைத்துப்‌ புனிதர்களின்‌ விழா.

கிறிஸ்துவ வாழ்வு கடவுள்‌ பிள்ளையின்‌ வாழ்வு

இயேசுவின்‌ இறுதி மன்றாட்டுக்களில்‌ ஒன்று, “நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால்‌ நான்‌ உம்மை அறிந்துள்ளேன்‌. நீரே என்னை அனுப்பினீர்‌ என அவர்களும்‌ அறிந்துகொண்டார்கள்‌” என்பதாகும்‌ (யோ 17 : 25). நாம்‌ இறைவனால்‌ அவருக்காகவே படைக்கப்‌ பட்டோம்‌. நாம்‌ அவரது சாயலாகப்‌ படைக்கப்பட்டோம்‌ (தொநா. 1 : 26). கிறிஸ்து வழியாக இறைவனுடன்‌ என்றென்றும்‌ வாழ்வதே எம்‌ வாழ்வின்‌ குறிக்கோள்‌. “நாம்‌ பிள்ளைகளாயின்‌, உரிமையாளர்களுமாய்‌ இருக்கிறோம்‌; ஆம்‌, கடவுளின்‌ செல்வத்திற்கு உரிமையாளர்கள்‌; கிறிஸ்துவோடு உடன்‌ உரிமையாளர்கள்‌ (உரோ. 8 : 17). நாம்‌ கடவுளின்‌ மக்கள்‌ என அழைக்கப்படுவது மட்டுமன்று; நாம்‌ உண்மையிலேயே கடவுளின்‌ மக்களாகவே இருக்கிறோம்‌ என்கிறார்‌ யோவான்‌. தன்‌ தந்தையிடமிருந்து வாழ்வைப்‌ பெற்றுக்கொண்ட பிள்ளையை, இவன்‌ இத்தந்தையின்‌ மகன்‌ என்று அடையாளம்‌ கண்டுகொள்ளுகிறோம்‌. நாமும்‌ திருமுழுக்கு வேளையில்‌, கிறிஸ்து வழியாகத்‌ தெய்வீக வாழ்வைப்‌ பெற்றுக்‌ கொண்டதால்‌ இறைமக்களாக இருக்கிறோம்‌. இதை முழுமையாக வாழ்ந்தால்‌ இயேசுவுடன்‌ விண்ணிலே என்றும்‌ வீற்றிருப்போம்‌. “இனி அவர்களுக்குப்‌ பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத்‌ தாக்கா. ஏனெனில்‌ அரியணை நடுவில்‌ இருக்கும்‌ ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்‌; வாழ்வு அளிக்கும்‌ நீரூற்றுகளுக்கு வழிநடத்திச்‌ செல்லும்‌. கடவுள்‌ அவர்களின்‌ கண்ணீர்‌ அனைத்தையும்‌ துடைத்துவிடுவார்‌'' (திவெ.7 : 16-17; காண்‌ எசா. 49 : 10 ; 25: 8).

கிறிஸ்துவ வாழ்வு புனித வாழ்வு

நமதாண்டவரின்‌ மரணத்துடன்‌ அவரது வெளித்தோற்ற வாழ்வு முடிந்து, உயிர்ப்பிலே அவரது மகிமை வாழ்வு தொடங்கியது. இது முடிவற்ற வாழ்வு. பரலோக மட்டும்‌ பரவசமான பவுல்‌ தான்‌ அனுபவித்த பரலோக பேரின்பத்தை வருணிக்கச்‌ சொற்களைத்‌ தேடித்‌ தடுமாறுகிறார்‌ (காண்‌ 2 கொரி 12:1-4 ;1 கொரி 13 : 12-13). இறைவனை உள்ளது உள்ளபடியே அறிந்து ஆராதிப்பதே விண்ணக வாழ்வு. இத்தெய்வீகப்‌ பிரசன்னத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சம்‌ அங்கில்லை. இவ்வாழ்வைப்‌ பெற நாமும்‌ இயேசுவைப்‌ போல்‌ குற்றமற்றவர்களாய்‌ இருக்க வேண்டும்‌ (3: 3). “தூய உள்ளத்தோர்‌ பேறுபெற்றோர்‌; ஏனெனில்‌ அவர்கள்‌ கடவுளைக்‌ காண்பர்‌” என்பது இயேசுவின்‌ வாக்கு. இயேசுவைப்‌ பின்பற்றி, அவரைப்‌ போல்‌ வாழ்ந்த புனிதர்களே இன்று விண்ணிலே அவர்‌ செல்லுமிடமெல்லாம்‌ சென்று அவர்‌ புகழ்‌ பாடுகின்றனர்‌ (திவெ. 7:10). இப்புனிதர்களின்‌ அடிச்சுவட்டில்‌ நடக்க நான்‌ என்ன செய்ய வேண்டும்‌?

(நாம்‌ கடவுளின்‌ மக்கள்‌ என அழைக்கப்படுக்றோம்‌: இவருடைய மக்களாகவே இருக்கிறோம்‌.)

நற்செய்தி : மத்‌ 5 : 1- 12

மலைப்பொழிவின்‌ (மத்‌ 5-7) தொடக்கமான “இறைப்பேறுகள்‌”: (5 : 1-12) இன்றைய வாசகமாயமைகின்றன. இறைப்பேறுகளுக்கெல்லாம்‌ முதலும்‌ இடையும்‌ கடையுமான இயேசுவையே இக்கூற்றுகள்‌ படமெடுத்துக்‌ காட்டுகின்றன எனலாம்‌. புனிதர்‌ எனப்படுவோர்‌ இயேசுவை இவ்வுலகில்‌ முழுவதும்‌ பின்பற்றிய நிலையிலே, இயேசுவோடு மறுவுலகில்‌ கலந்துவிட்டனர்‌. ஆதலின்‌ அனைத்துப்‌ புனிதர்‌ விழாவன்று இவ்வாசகம்‌ பொருந்தி அமைகிறது. இவ்வுலகிலே நாமும்‌ புனிதத்திற்காக அழைக்கப்பட்டுள்ளோம்‌ ( 1பேது 2 : 9) என்ற முறையிலே இவ்வாசகம்‌ நமது வாழ்விற்குச்‌ சவாலாயமைகிறது.

தம்மைப்‌ பொறுத்தமட்டில்‌ இயேசு புனிதர்‌

இறைவனின்‌ திருமகன்‌ இயேசு. “அவர்‌ கட்புலனாகாத கடவுளது சாயல்‌” (கொலோ 1: 15). எனவே அவர்‌ தூய உள்ளத்தவர்‌ (5 : 8). “பரிசுத்தர்‌, பரிசுத்தர்‌, பரிசுத்தர்‌'” (எசா.6 : 3; திவெ 4 : 8) என விண்ணவரால்‌ போற்றப்படுவர்‌. அலகையை, அதன்‌ சோதனைகளை எதிர்த்து நின்று, ஆண்டவராகிய கடவுளை எப்போதும்‌ அணுகிச்‌ செல்பவர்‌ (யாக்‌.4 : 8). “என்னை அனுப்பியவரின்‌ திருவுளத்தை நிறைவேற்றுவதும்‌ அவர்‌ கொடுத்த வேலையைச்‌ செய்து முடிப்பதுமே என்‌ உணவு” (யோ 4:34) என்ற முறையில்‌ தம்‌ குறிக்கோள்‌ தவறாது வாழ்ந்தவர்‌. ஆம்‌, இயேசு தூய உள்ளத்தினர்‌. புனிதர்‌ எனப்படுவோர்‌ இயேசுவின்‌ இத்தூய்மையிலே பங்குபெற்றவர்கள்‌. “தூய உள்ளத்தோர்‌ பேறுபெற்றோர்‌ அவர்கள்‌ கடவுளைக்‌ காண்பர்‌” (5 :8) என்பது இப்போது நம்பால்‌ உண்மைப்படுமா? மனிதன்‌ என்ற முறையிலே இயேசு நம்மோடு நாமாக வாழ்கிறார்‌. அவரது எளிய வாழ்வும்‌ (5 : 3) துயர்மிக்க வாழ்வும்‌ (5 : 4) அவரை ஒரு சாதாரண மனிதனாகவே நமக்குக்‌ காட்டுகிறது. “ நரிகளுக்குப்‌ பதுங்குக்‌ குழிகளும்‌, வானத்துப்‌ பறவைகளுக்குக்‌ கூடுகளும்‌ உண்டு, மானிடமகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை”' (லூக்‌ 9 : 58) என்பது அவரது ஏழ்மை வாழ்வின்‌ சுருக்கக்‌ கதை. “எல்லாவற்றிலும்‌ தம்‌ சகோதரர்‌ சகோதரிகளைப்‌ போல்‌ ஆக வேண்டியதாயிற்று” (எபி 2: 17).

பிறரைப்‌ பொறுத்துமட்டில்‌ இயேசு புனிதர்‌

ஏழ்மையினின்று பிறப்பது சாந்தம்‌ (5 : 5). இச்சாந்த குணம்‌ தன்னைச்‌ சார்ந்த குணம்‌ என்பதோடு கூட, பிறரை அடுத்தது; இளகிய மனத்தோடு பழகுவது என்ற பொருள்ளது. இயேசுவே “நான்‌ கனிவும்‌ மனத்தாழ்மையும்‌ உடையவன்‌” (மத்‌ 11 : 29) என்பார்‌. இரக்க குணமும்‌ (5 : 7) ஏழ்மையின்‌ வெளிப்பாடே. ஏழைகள்‌ தான்‌ ஏழையைக்‌ கண்டு இரங்க முடியும்‌. ஏனெனில்‌, ஏழ்மைத்‌ தன்மையின்‌ இழிவை உணர்ந்தவர்கள்‌ அவர்கள்‌. துன்புறுவோர்‌ மீது இயேசு மனம்‌ இரங்கியதாகப்‌ பல்முறை பு.ஏ. இல்‌ காட்டப்பட்டுள்ளது (காண்‌ : மாற்‌ 7 : 34; லூக்‌ 7 : 13). அடுத்து, இறைவனின்‌ நீதியை உலகிற்கு வெளிப்படுத்தவே இயேசு வந்தார்‌. இவ்வுலகில்‌ வாழ்ந்தபோது, நீதியின்மேல்‌ “பசிதாகமுள்ளவராக” வாழ்ந்தவர்‌ (5:6). நீதிக்காகவே துன்புறுத்தப்பட்டு உயிர்‌ நீத்தார்‌ (5 : 10). “என்னை அனுப்பியவரின்‌ திருவுளத்தை நிறைவேற்றுவதும்‌ அவர்‌ கொடுத்த வேலையைச்‌ செய்து முடிப்பதுமே எனது உணவு (யோ 4:34) என்று இயேசு கூறுவதன்‌ மூலம்‌ நீதிக்கடவுளாகிய தம்‌ தந்தையின்‌ (காண்‌ உபா 10 : 18) வெளிப்பாடே இயேசு என்பது புலனாகின்றது. மேலும்‌ ஒய்வு நாள்‌ சட்டத்தை எதிர்த்து, நோயாளிகளுக்கு உதவி புரிந்ததிலும்‌ இயேசுவின்‌ நீதி வேட்கை தெற்றெனப்‌ புலப்படுகிறது. இறுதியாக இயேசுவே சமாதானம்‌ தரும்‌ கடவுள்‌ (5 : 9). அவரே தந்தையோடு, தம்மோடு, மக்களோடு நிறையுறவு கொண்டவர்‌. எனவே அவரே சமாதானம்‌. “அமைதியை உங்களுக்கு விட்டுச்‌ செல்கிறேன்‌; என்‌ அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்‌” (யோ 14 : 27) என்று அவர்‌ ஒருவரே சொல்லக்கூடும்‌. “கிறிஸ்துவே நம்‌ சமாதானம்‌, அவரே யூத இனத்தையும்‌ பிற இனத்தையும்‌ ஒன்றாய்‌ இணைத்தார்‌. தடைச்சுவரென நின்ற பகைமையைத்‌ தம்‌ ஊனுடலில்‌ தகர்த்தெறிந்தார்‌. கிறிஸ்துவின்‌ சாந்தம்‌, இரக்கம்‌, அவர்‌ நீதியின்‌ மேல்‌ கொண்ட பசிதாகம்‌, அவரது சமாதானப்‌ பணி, நம்‌ வாழ்வுக்கு உந்துதலும்‌ ஊக்கமும்‌ தர வேண்டுவோம்‌.

( நீதியினிமித்தம்‌ துன்றுத்தப்படுவோர்‌ பேறு பெற்றோர்‌. )

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு ser