மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

சகல புனிதர்களின் பெருவிழா மறையுரை
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திவெ .7:2-4 | 1யோவா. 3:1-3 |மத். 5:1-12

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



சகல புனிதர்களின் பெருவிழா

இலையுதிர் காலம் என்றால் மரணமல்ல. வசந்த காலத்தின் தொடக்கம்.

சூரியன் மறைவது மறைவல்ல. சந்திரன், விண்மீன்கள் உதயத்திற்குத் தொடக்கம்.

மலர் கருகி விடுவது முடிவல்ல. காய், கனிக்கு இடம் தருகிறது.

கோதுமை மணி மடிவது இழப்பல்ல. அது மடிந்தால் தான் பயிர் முளைத்துப் பலன் தரும்.

எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இறந்து கிடந்த சிறுமியைப் பார்த்து, அவள் சாகவில்லை , உறங்குகிறாள் (லூக். 8:52) என்றும், நம் நண்பர் இலாசரும் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் என்றும் (யோவா. 11:11) கூறினார். ஏனெனில் உலகில் நடக்கும் இயற்கையான இறப்பு எதார்த்தமானது. அது பாவத்தின் கூலி (உரோ. 6:23). ஆனால் இயேசுவில் நம்பிக்கை கொண்டு, இறை - மனித உறவோடு வாழ்ந்து இறப்பவர்களுக்கு இந்த உலக இறப்பு, இறைவனில் கிடைக்கும் ஓய்வாகிறது (யோவா. 11:25). இதை விளக்கும் வகையில் தான், ஆண்டவருக்குள் இறந்தவர்கள் செய்த நன்மைகள் அவர்களோடு கூட வரும் (திவெ. 14:13). அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள் என்று திருவெளிப்பாடு நமக்குத் தருகிறது.

இன்று தாயாகிய திருச்சபை, அன்புக்கு அடிமையாகி, அன்பினால் புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட புனிதர்களின் திருவிழாவைக் கொண்டாடுகிறது. புனிதம் என்பது புண்ணிய தீர்த்தத்தில், புனித ஆற்றில் குளிப்பதால் மட்டும் வந்து விடுவதில்லை. முழுக்க முழுக்க வாழ்வைச் சார்ந்தது. மனிதம் என்ற சொல்லுக்கும் புனிதம் என்ற சொல்லுக்கும் உள்ள வேற்றுமை முதலில் உள்ள ஒரு எழுத்து மட்டும் தான். ஆம், மனிதம் என்றாலே புனிதம் பிறக்கிறது. மனிதமும், புனிதமும், நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. நாம் ஒவ்வொருவரும் தூயவராக வாழ்வதற்காக (1 யோவா. 3:3) அழைக்கப்பட்டிருக்கிறோம். (முதல் வாசகம்). ஏழ்மையையும், துன்பத்தையும், நோயையும், பொறுமையோடு ஏற்று வாழ்பவர்களே புனிதர்கள், பேறு பெற்றவர்கள் என்று இயேசு அழைக்கிறார் (மூன்றாம் வாசகம் ).

அன்பார்ந்தவர்களே, புனிதம் என்பது நேற்று பெய்த மழையால் இன்று முளைத்த காளான்கள் போல் அல்ல. மாறாக மனித உள்ளத்தில் புதைந்து கிடக்கும் புனிதத்தை வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மடியும் கோதுமை மணிபோல் (யோவா. 12:24) வளர்த்து எடுக்க வேண்டிய ஒன்று. கடவுள் நம்மோடு இருக்க நமக்குத்தான் வெற்றி என்று அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனுக்கு அவரது காரியதரிசி ஆறுதல் சொன்னபோது, "நண்பா! கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பது தெரியும். ஆனால் நாம் கடவுளோடு இருக்கிறோமா?" என்பது தான் கவலை என்றார் லிங்கன். ஆம், நாம் இறைவனோடு இணையும்போதுதான் (யோவா. 15:5) நாம் புனிதம் அடைவோம். இத்தகைய எண்ணற்ற புனிதர்கள் இந்த உலகில் சாட்சிய வாழ்வு வாழ்ந்து, இறந்தும் வாழ்கிறார்கள் என்பதைத்தான் நாம் நினைவு கூறுகிறோம். ஏனெனில் தூய பவுல் கூறுவதுபோல் சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது (1 கொ. 15:55). நாமும் இவர்களைப்போல, நான் யார் ? எதற்காக இங்கே வந்தேன்?, எங்கிருந்து வந்தேன்?, எங்கே போகிறேன்? என்பதை உணர்ந்து வாழ்வோம். இதற்காக புனிதர்களிடம் மன்றாடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

புனிதர்கள் பூங்கா

புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகிறேன் என்ற நம்பிக்கை அறிக்கையின் இந்தக் கோட்பாட்டுக்கு நாம் எடுக்கும் விழாதான் புனிதர் அனைவர் பெருவிழா.

இவ்வுலகில் இறையன்பையும் பிறர் அன்பையும் உந்துசக்தியாகக் கொண்டு இறைவன் திருவுளத்தை ஏற்று வாழ்ந்து இறந்தவர்களே புனிதர்கள். இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தைத் தொடங்கி வைத்த திருத்தந்தை 23ஆம் யோவான் சொல்வார்: "கத்தோலிக்க மரபின்படி, புனிதர்களுக்குக் காட்டும் வணக்கம் மரியாதை மட்டுமன்று. ஆழ்ந்த அடிப்படையில் அமைந்த ஞான உறவாகும். அவர்கள் நமக்குத் தந்துள்ள நன்மாதிரியும் பாடலும் நமக்கு மகிழ்ச்சியூட்டும், ஊக்குவிக்கும் உதவிகளாகும்."

"உங்களுக்குக் கடவுள் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவு கூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்" (எபி. 13:7).

புனிதர் பெருவிழா என்று இன்று கொண்டாட நான்கு காரணங்களைப் பட்டியலிடலாம்.

1. எல்லப் புனிதர்களுக்கும் வெற்றி முடிசூடிய இறைவனுக்கு நன்றி சொல்ல.

கடவுள் மனிதனுக்கு வைத்திருக்கும் மாட்சி மகத்தானது. புனிதம் என்பது நிறைவான மீட்பு. மனிதனுடைய வாழ்வில் கடவுளின் அருள் எப்படி ஆற்றலோடு செயல்படுகிறது! தெய்வ மாட்சி வெளிப்படுகிறது!

அளவில்லா மாட்சிமையும் மகத்துவமும் உள்ள இறைவனுக்கு நமது புகழ்ச்சி தேவையில்லை. ஏனெனில் அவர் தன்னிலே மாட்சி மிக்கவர். புனிதர் திருப்பலி தொடக்கவுரையில் இப்படிப் பாடுகிறோம். "புனிதர்கள் கூட்டத்தில் நீர்தாமே புகழ் பெறுகின்றீர். அவர்களின் பேறு பலன்களுக்கேற்ப நீர் அவர்களுக்கு வெற்றிவாகை சூட்டும்போது உம் அருள் கொடைகளுக்கே மணிமுடி சூட்டுகின்றீர்”. வெற்றித் திருஅவையோடு இணைந்து இறைவனைப் புகழ போரிடும் திருஅவையான நாம் அழைக்கப்படுகிறோம்.

2. புனிதர்களின் எடுத்துக்காட்டான வாழ்வை நாம் பின்பற்றி நடக்க நம்மைத் தூண்ட.

புனிதர்கள் நம்மைப் போல் துன்பத்திற்கு ஆளானவர்கள். தோல்விகளைச் சந்தித்தவர்கள். ஆனால் வாழ்க்கைச் சமரிலே உறுதியோடு இறைவனின் அருள்துணையோடு போராடி வென்றவர்கள். வாழ்க்கைச் சிக்கல்களில் நாம் துவளும்போது இவர்களின் முன் மாதிரியான வாழ்க்கை நமக்குத் தூண்டுதலாகிறது. சோதனைகளில் அவர்களைப் போல நாமும் இறைவனிடம் அடைக்கலம் தேடி ஓடத் தூண்டுகிறது. “இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள். தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்” (தி.வெ. 7:14).

எடுத்துக்காட்டாக, புனித அகுஸ்தீனைக் குறிப்பிடலாம். அவர் நீண்டநாள் பாவப் பழக்கத்திலிருந்து விடுபட எவ்வளவு கடினமாக முயன்றார். புனிதர் வரலாற்றைப் படித்தபின்பு, “அவளால் அவனால் முடியும் என்றால் என்னால் ஏன் முடியாது?” என்று கேட்டார். விளைவு? அவரே புனிதரானார். புனித வாழ்வு நமக்கு ஒரு சவாலாக அமைகிறது.

3. எண்ணற்ற புனிதர்களின் வல்லமைமிக்கப் பரிந்துரையைக் கேட்க.

புனிதர்களின் வேண்டுதல் நமக்குப் பேராதரவு. கலை, மருத்துவம், கல்வி, குடும்பம் என எல்லாத் துறைகளிலும் நமக்குப் புனிதர்கள் பாதுகாவலாய் இருக்கிறார்கள்.

வானகம் என்பது புனிதர்கள் வாழும் பூங்கா.அங்குதான் எத்தனை வகையான மலர்கள்! எத்தனை விதமான புனிதர்கள்! அன்னையர் என்ன, கன்னியர் என்ன, அரசர்கள் என்ன, துறவியர் என்ன, விதவைகள் என்ன? இரத்த சாட்சிகள் என்ன... இப்படி எல்லாருக்கும் வழிகாட்ட, பாதுகாக்க எத்தனை புனிதர்கள்!

4. திருஅவையால் பறைசாற்றப்பட்டு மகிமைப்படுத்தப்படாத மறைந்து வாழும் புனிதர்களையும் நினைவு கூர்ந்து சிறப்பிக்க.

பீடத்தில் வைத்து வணங்கும் பேற்றுக்கு உரியவர்கள் மட்டும்தானா புனிதர்கள்? நமது குடும்பத்தில், நமது ஊரில் வாழ்ந்து இறந்த நம்முடைய முன்னோர்கள் எல்லாம் நல்லவர்கள் இல்லையா? புனித பாதையில் நடந்தவர்கள் இல்லையா? அவர்களையெல்லாம் எப்போது நினைப்பது? எப்படி மாட்சிப்படுத்துவது? அதற்காகத்தான் இந்த நாள்!

விண்ணகம் சென்றதும் ஒருவர் அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்துப் பேதுருவிடம், "இந்தக் கூட்டத்தில் எத்தனைபேர் இந்துக்கள்?" என்று கேட்டார். அதற்குப் பேதுரு "அப்படி யாரும் இல்லை" என்றார். “இஸ்லாமியர் எத்தனை பேர்?”. “அப்படி யாரும் இல்லை. "அப்படியானால் அனைவரும் கிறிஸ்தவர்களா?" என்று கேட்க "அப்படியும் இங்கே யாரும் இல்லை” என்று பதில் வந்தது. இறுதியில் "யார்தான் அவர்கள்?" என்று கேட்க, அதற்குப் பேதுரு அளித்த பதில், "அவர்கள் அனைவரும் புனிதர்கள்".

"இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்” (தி.வெ. 7:9). அவர்கள் அனைவரும் இறைவனை உரத்த குரலில் பாடிப்போற்றுவதாக இன்றைய முதல் வாசகம் கூறுகிறது.

இவர்கள் அனைவரும் எப்படி விண்ணரசை அடைந்தார்கள்? இன்றைய நற்செய்தி (மத். 5:1-12) அதற்கான பதிலைத் தருகிறது. எளிய உள்ளத்தினராய், கனிவுடன், துயரைக் கண்டு துவளாமல், தூய்மையான உள்ளத்துடன், இரக்கம் உடையோராய், நீதியின் மேல் தாகம் கொண்டு அதற்காகத் துன்புறவும் துணிந்தவர்கள். சுருங்கச் சொன்னால் இறைத்திருவுளத்தின்படி வாழ்ந்து இம்மண்ணில் இறையாட்சி மலர தங்களை அருப்பணித்தவர்கள்.

இறையாட்சியின் விழுமியங்களில் வாழும் எந்தச் சமய, மொழி இனத்தைச் சார்ந்தவர்கள் ஆனாலும் அவர்களுக்கு இறையரசு நிச்சயம். நாமும் புனிதர்களாக மாற, வாழ இறைவன் விரும்புகிறார் அழைக்கிறார்.

புனித அலோய்சியுஸ் கொன்சாகா என்ற ஞானப்பிரகாசியார் ஒரு நாள் தன் அன்னையிடம், “அம்மா, நான் புனிதராவதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவரது தாய், "மகனே, முதலில் நீ புனிதராக வேண்டும் என ஆசைப்படு. அது போதும். அந்த உன்னுடைய விருப்பமே உன்னைப் புனிதராக்கிவிடும்” என்றாள். தான் விரும்பியபடியே ஞானப்பிரகாசியார் பிற்காலத்தில் புனிதரானார்.

புனிதராவது கடினமல்ல. புனிதராக வேண்டும் என்று விரும்புவதுதான் கடினம். ஏதோ ஒரு தீய பழக்கத்திலிருந்து விடுபட விரும்பாமல் "மாறிவிட்டால் என்ன செய்வது? எதையோ இழந்துவிடுவோமோ!” என்ற பயம்தான் விருப்பத்திற்கே தடை.

விரும்புதல் மாற்றத்திற்கு அடிப்படை. மகதல மரியா பாவ வாழ்க்கையிலிருந்து வெளியேற விரும்பியதால்தான் அவளை நல்லவளாக மாற்றுவது இயேசுவுக்கு எளிதாக இருந்தது. இயேசுவைப் பார்க்க வேண்டும் என்ற நல்ல ஆசை சக்கேயுவிடம் இருந்ததால், இயேசுவால் அவரை எளிதாக மாற்ற முடிந்தது. மாற்றத்தை விரும்பாத பரிசேயர்களை இயேசுவால் மாற்ற முடியவில்லை. நாமும் புனிதராக மாற விரும்பாதவரை இயேசு நம்மைப் புனிதராக்க முடியாது.

புனிதர் அனைவர் பெருவிழா நாமும் அவர்களைப் போல் புனிதராக வேண்டும் என்ற விருப்பத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பாக இருக்க வேண்டும். எந்த நிலையில் உள்ளவர்களும் புனிதராக முடியும் என்பதற்குக் கட்டியம் கூறுவதுதான் அனைத்துப் புனிதர் விழா. வரலாற்றில் குறிக்கப்படாத புனிதர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். அவர்களின் ஒருவராக நாமும் இருக்க முடியும்.

இயல்பாக நம்மில் எழும் நல்ல எண்ணங்கள், நல்ல பழக்கங்கள் எல்லாமே தூய ஆவியாரின் தூண்டுதல்களே! தூய ஆவியாரில் வாழ்வதற்கான அழைப்புக்களே!

"கடவுள் மனிதரை நேர்மையுள்ளவராகவே படைத்தார். ஆனால் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் மனிதன் தேடிக் கொண்டவையே" என்கிறார் சபை உரையாளர் (7:29).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நவம்பர் 1 அனைத்துப் புனிதர்களின் திருவிழா. நவம்பர் 2 இறந்தோர் அனைவரின் நினைவு நாள். இவ்விரு நாட்களும் ஒன்றையொன்று தொடர்ந்து வருவது மனதில் ஒரு சில எண்ணங்களை எழுப்புகிறது. இவ்விரு நாட்களும் முன்பின் முரணாக வந்துள்ளனவோ என்று சில சமயங்களில் நான் நினைப்பதுண்டு. இறப்புக்குப் பின் புனிதமா? அல்லது புனிதம் அடைந்தபின் இறப்பா?

பொதுவாக ஒருவர் இறந்ததும் அவரைப் பற்றிய நல்லவைகள் பேசப்படும். மரணம் ஒருவரது குறைகளைக் குறைத்துவிடும் வல்லமை பெற்றது. ஒருவர் இறந்தபின், மறைந்தபின் அவரைப் பற்றி நாம் கூறும் நல்லவைகளை அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது முன்னிலையில், அவர் காதுபட கூறியிருந்தால், அவர் இன்னும் நல்ல வழியில் வாழ்ந்திருப்பாரே. இறந்த பின் வழங்கப்படும் புகழ் மாலைகளை, நல்லவர் என்ற மரியாதையை வாழும்போதே ஒவ்வொருவருக்கும் நாம் கொடுத்தால், இவ்வுலகில் வாழும் புனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே. புனிதர்கள் விண்ணுலகில்தான் இருக்கவேண்டும் என்றில்லையே. தாங்கள் நல்லவர்கள் என்று வாழ்நாள் எல்லாம் உணரும் மனிதர்கள், புனிதர்களான நிறைவோடு இவ்வுலகை விட்டு விடைபெற்று போகலாமே.

இந்த எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்தில்தான் திருச்சபை அனைத்துப் புனிதர்கள் நாள், இறந்தோரின் நினைவு நாள் என்ற வரிசையில் இவ்விரு நாட்களையும் கொண்டாட நம்மை அழைக்கிறதோ? சிந்திக்க வேண்டிய கருத்து.

"தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்." திருப்பாடல் 23ன் மூன்றாம் வரிகளின் பிற்பகுதியில் நம் சிந்தனைகளைச் சென்ற விவிலியத் தேடலில் ஆரம்பித்தோம். வாழ்வில் நாம் மேற்கொள்ளும் நேரிய வழி, நீதி வழி ஆகியவை ஜியோமிதி அல்லது வடிவக் கணிதத்தில் நாம் படிக்கும் நேர்கோடு அல்ல. வளைந்து நெளிந்து செல்லும் வழிகள் இவை, பல சமயங்களில் சிக்கலான, நமது பொறுமையைச் சோதிக்கும் வழிகள் இவை என்பவைகளைச் சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இந்தச் சிக்கலான வாழ்வுப் பாதையில் இறைவன் நம்மை எவ்விதம் வழி நடத்துகிறார் என்பதை இன்று சிந்திப்போம்.

நாம் அனைவரும் குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்தவர்கள். இப்பருவத்தில் நாம் தவழ்ந்து, நடந்து வந்த அனுபவங்களைச் சிறிது அசைபோடுவோம். பிறந்ததும், ஒவ்வொரு குழந்தையும் வானத்தைப் பார்த்தபடியே படுத்திருக்கும். சில மாதங்களில் குழந்தை குப்புறப் படுக்கும். அப்போதுதான் தான் பிறந்துள்ள இந்தப் பூமியை அக்குழந்தை பார்க்கும். இன்னும் சில மாதங்களில் இரு கைகளையும், கால்களையும் தரையில் ஊன்றி, தன் படுக்கையை விட்டு, தொட்டிலை விட்டு வெளியேறி, ஒரு சிறு உலகைச் சுற்றி வரும். பின்னர், தட்டுத் தடுமாறி நிற்கும், முதல் அடிகளை எடுத்து வைக்கும்.

குழந்தைகள் தமது சொந்த முயற்சியில் எடுத்து வைக்கும் முதல் அடிகள் எல்லாக் குடும்பங்களிலும் பெருமிதமாகக் கொண்டாடப்படும் நாள். குழந்தை எழுந்து நடக்கும் போது, தந்தையோ, தாயோ அக்குழந்தைக்குப் பின்புறமாய் இருந்து குழந்தை நடப்பதை உற்சாகப்படுத்துவர். அல்லது, முன்னே நின்று கொண்டு குழந்தையைத் தங்களிடம் வரச் சொல்வார்கள். அந்த முதல் நாட்களில் குழந்தை கீழே விழ வாய்ப்புக்கள் அதிகம். அந்த வாய்ப்புக்களைக் குழந்தைக்கு அளிக்கப் பயந்து, குழந்தையைத் தரையிலேயே விடாமல் தூக்கிச் சுமக்கும் பெற்றோர் குழந்தையின் வளர்ச்சியைக் கெடுத்து விடுவார்கள். விழுந்து, எழுந்து பழகினால்தான் குழந்தை தனியே, சுதந்திரமாக நடை பயில முடியும். இந்த நடை பயிற்சிகள் எல்லாமே குழந்தைக்கு மிகவும் பழக்கப்பட்டச் சூழ்நிலையில், வீட்டுக்குள் நடக்கும் பயிற்சிகள்.

இதற்கு அடுத்தபடியாக, அக்குழந்தை வெளி உலகில் அடியெடுத்து வைக்கும்போது, தந்தையின் அல்லது தாயின் கைகளைப் பற்றியவாறு குழந்தை நடக்கப் பழகும். தந்தை அல்லது தாயின் ஒரு விரல் போதும் அக்குழந்தை நடப்பதற்கு. இன்னும் சில மாதங்களில் அந்த விரலும் தேவைப்படாது. குழந்தைகள் சிறுவர்களாய் அல்லது சிறுமிகளாய் இந்த உலகை வலம் வரத் துவங்குவார்கள். இவை அனைத்தும் உடல் அளவில் குழந்தை பெறும் வழி நடத்துதல்.

நம் ஒவ்வொருவருக்கும் தேவையான வழி நடத்துதல் இன்னும் பிற வழிகளிலும் நமக்குக் கிடைத்துள்ளது. பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு, வேலை, என்று வாழ்வின் பல்வேறு நிலைகளில், வாழ்வின் பல முக்கிய முடிவுகளில் தாய், தந்தை, ஆசிரியர், உற்றார், நண்பர் என்று பலர் நமக்கு வழி காட்டியதை நினைத்து பார்க்கலாம். பல குடும்பங்களில் இந்த முக்கியமான நேரங்களில் இறைவனின் வழி நடத்துதலையும் வேண்டுகிறோம். கடவுள் எவ்வகையில் வழி நடத்துவார்? "தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்."

வாழ்வில் இறைவனின் வழிநடத்துதலைத் தேடுவோர் பலருக்கு திருப்பாடல் 23ன் இவ்வரிகள் அறிவுரையாக, செபமாகத் தரப்படும். இதேபோல், நீதிமொழிகள் 3: 6ல் சொல்லப்பட்டுள்ள வரிகளும் பயன்படுத்தப்படும். "நீ எதைச் செய்தாலும், ஆண்டவரை மனதில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்." செம்மையாக்கப்பட்ட, சீராக்கப்பட்ட, நேராக்கப்பட்டப் பாதைகளைக் குறித்து இறை வாக்கினர் எசாயா கூறும் வார்த்தைகள் இவை:

எசாயா 40: 3-4
குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்: கோணலானது நேராக்கப்படும். கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.

ஆங்கிலத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு கூற்று உண்டு: "God writes straight with crooked lines." அதாவது, கோணல் மாணலான வரிகளிலும் கடவுள் நேராக எழுதுவார். பாதைகள் நேராக்கப்படும், கரடுமுரடானவைகள் சமமாக்கப்படும் என்ற வார்த்தைகளைக் கேட்கும் போது, மனதில் ஓர் எண்ணம் பிறக்கிறது. இறைவன் வந்துவிட்டால், எல்லாம் எளிதாகிவிடும் என்ற எண்ணம்.

பாதைகளை நேராக்க, சீராக்க, சமமாக்க, கோணல் வரிகளிலும் நேராக எழுத கடவுளுக்கு வலிமையுண்டு. சந்தேகமில்லை. ஆனால், இந்த வல்லமைகளைக் கொண்டு அவர் நமது வாழ்வுப் பாதையை நீண்டதொரு நேர்கோடாக மாற்றி, வாழ்வில் எப்போதும் நம்மைத் தூக்கிக் கொண்டே நடந்தால், நாம் நடக்கும் திறனை இழந்துவிடுவோம். இறைவனின் வழி நடத்துதல் இவ்விதம் இருக்காது.

நேர்கோடான பாதைகள் ஆபத்தானவை என்பதையும் நாம் அறிய வேண்டும். சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது, ஆங்காங்கே வளைவுகள், திருப்பங்கள் இருப்பது நல்லது, அவசியமும் கூட. வாகன ஓட்டிகளுக்கு முன் சாலைகள் நீண்டதாய், நேராய் இருந்தால், இரு ஆபத்துக்கள் உண்டு. ஒன்று... வேகம். நீண்ட நேரான பாதையில் அதிலும் எதிரே எந்தவித வாகனமும் இல்லை என்பதைக் காணும் போது, அளவுக்கு மீறிய வேகம் தலைதூக்கும் ஆபத்து உண்டு. இரண்டாவது ஆபத்து அயர்வு... நீண்ட, நெடிய பாதைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது கண்ணயரும் ஆபத்தும் உண்டு. வாழ்வுப் பாதையும் நீண்ட நேர்கோடாய் இருந்தால், வேகத்தையும், சலிப்பையும் உண்டாக்கும்.

இறைவன் நடத்திச் செல்லும் நம் வாழ்வுப் பாதைகள் வளைந்து, நெளிந்து செல்லும் பாதைகள், திருப்பங்கள் நிறைந்த பாதைகள். எதிர்பார்த்த, எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த இந்தப் பாதைகளில் ஒன்று மட்டும் நிச்சயம். கடவுள் நம்மோடு நடக்கிறார். நம்மை வழி நடத்துகிறார். பாதைகளை நேராக, எளிதாக மாற்றுவதை விட, நம் பார்வைகளை இறைவன் தெளிவாக்குகிறார். திருப்பாடல் 23ன் மையக் கருத்தை மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். ஆண்டவர் நமது ஆயனாக இருப்பதால், இம்மண்ணுலகம் ஒரு நொடியில் விண்ணுலகமாய் மாறி விடாது. நாம் நடக்கும் பாதைகள் எல்லாம் மலர்கள் மட்டும் பூத்துச் சிரிக்கும் பட்டு மெத்தையாய் மாறி விடாது. இருளும், துயரும் நிறைந்த இம்மண்ணுலகில், மலர்களோடு முள்ளும் புதர்களும் உள்ள சிக்கலானப் பாதையில் இறைவன் நம்முடன் இருக்கிறார். இதுதான் திருப்பாடல் 23 நமக்குத் தரும் நம்பிக்கை.

வாழ்க்கைப் பாதையைப் பற்றி சிந்திக்கும் போது, வேறொரு எண்ணமும் மனதில் எழுகிறது. நமது இந்திய மரபில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் 'தலையெழுத்து' என்ற எண்ணத்துடன் வாழ்க்கைப் பாதையை இணைத்துச் சிந்திப்பது பயனளிக்கும்.

நாம் பிறந்த நேரம், நட்சத்திரம், நம் குலம், குடும்பம் இவைகளை வைத்து நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்பதைத் தான் நம் 'தலையெழுத்து' என்ற எண்ணம் வலியுறுத்துகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், நமது வாழ்க்கைப் பாதை நாம் நடக்க ஆரம்பிக்கும் முன்பே தெளிவாக வரையப்பட்டுவிட்டது, தீர்மானிக்கப்பட்டு விட்டது. வேறு வழிகளில் நம்மால் செல்ல முடியாது, இறைவன், அல்லது நமது விதி, அல்லது நமது தலையெழுத்து வரைந்துள்ள பாதையில் நாம் அனைவரும் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் போல நடக்கிறோம். தலையெழுத்துடன் தொடர்புள்ள இந்த எண்ணங்கள் அனைத்தும் தவறானவை.

ஆயனாம் இறைவன் நம்மை வாழ்வுப் பாதையில் வழிநடத்திச் செல்வதற்கும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு பாதையில் நம்மைக் கட்டி இழுத்துச் செல்வதற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் இவை.

நம்மைப் படைத்து, தினமும் நம்மைப் பேணி வளர்த்து வழி நடத்திச் செல்வது இறைவன் தான். ஆனால், அவர் நம்மை வழிநடத்த நமது சம்மதம் தேவை.
ஆயன், ஆடுகள் என்ற மையக் கருத்துடன் இத்திருப்பாடலை நாம் சிந்தித்து வருவதால், அவைகளுடன் தொடர்புடைய ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
ஆயன் ஒருவர் தன் கிடையில் ஆடுகளைச் சேர்த்துவிட்டு உறங்கச் செல்கிறார். அடுத்த நாள் காலையில் கிடையிலிருந்து ஓர் ஆடு காணவில்லை. வேலியில் உள்ள ஒரு ஓட்டை வழியே அது வெளியேச் சென்றுவிடுகிறது. காணாமல் போன ஆட்டை மிகச் சிரமப்பட்டுத் தேடி மீண்டும் கொண்டு வந்து கிடையில் சேர்க்கிறார். அடுத்த நாளும் அந்த ஆடு காணாமல் போகிறது. மீண்டும் தேடிக் கண்டு பிடிக்கிறார். பல முறை இவ்வாறு ஆனதால், அவரது நண்பர் ஒருவர் அவருக்கு ஆலோசனைத் தருகிறார். "அந்த ஆட்டைக் கட்டிப் போடு. அதே நேரம் அந்த வேலியில் உள்ள ஓட்டையை அடைத்து விடு." என்பது நண்பரின் ஆலோசனை. ஆயன் அவரிடம், "வேலியில் உள்ள ஓட்டையை அடைத்தாலோ, ஆட்டைக் கட்டிப் போட்டாலோ அந்த ஆட்டின் சுதந்திரம் பறிபோய்விடும். அப்படி நான் செய்ய மாட்டேன்." என்று சொல்கிறார்.

நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு பதில். ஆனால், ஆயனின் இந்த பதில் ஆண்டவனாம் ஆயன் நடந்து கொள்ளும் முறையைத் தெளிவுபடுத்தும் ஒரு பதில். கட்டிப் போடுதல், கடிவாளம் மாட்டி, வலுக்கட்டாயமாய்த் தான் வகுத்த பாதையில் இழுத்துச் செல்லுதல், வேறு பாதைகளையெல்லாம் மூடிவிடுதல் போன்றவை நம் சுதந்திரத்தைப் பறிக்கும் முயற்சிகள். நாம் எத்தனை முறைகள் காணாமல் போனாலும், நம்மைத் தேடிவரும் ஆயன், நம்மை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள முயல்வாரே தவிர, தன்னுடன் நம்மை கட்டிப் போட மாட்டார். நாம் தவறிச் செல்லும் போது, தவறுகளைச் சுட்டிக் காட்டுவார், தட்டிக் கேட்பார். ஆனால், தவறக்கூடிய பாதைகளை அடைத்து விட மாட்டார். பாதைகளை அடைத்து, வேலிகளை மூடி, நம்மைச் சிறைப்படுத்துவது இறைவனின் பணி அல்ல, இறைவனின் பாணி அல்ல.

நாமாகவே மனம் உவந்து, உளம் மகிழ்ந்து, முழு மன சுதந்திரத்துடன் அவர் காட்டும் பாதையில் செல்வதைத் தான், "தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்." என்ற வரியில் சொல்கிறார் திருப்பாடலின் ஆசிரியர். அந்தப் பாதையில் தட்டுத் தடுமாறினாலும், தவறி விழுந்தாலும் அருகில் வந்து நம்மை எழுப்பி விட்டு மீண்டும் நம்மை நடக்கத் தூண்டுபவர் தாயாய், தந்தையாய், ஆயனாய் நம்மை வழி நடத்தும் இறைவன்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அனைத்து தூயவர்கள் (நவம்பர் 1)

"தனக்காகவும் பிறருக்காகவும் வாழ்கிறவன் தான் மனிதன்; பிறருக்காகவும் கடவுளுக்காகவும் மட்டும் வாழ்கிறவன் புனிதன்". நாம் ஒவ்வொருவரும் புனிதர்களாக வாழ, இன்றைய நாளில் இறைவன் நம்மை அழைக்கிறார்.

புனிதர்கள் யார்? புனிதர்கள் கடவுளா? புனிதர்களை நாம் வழிபடுகின்றோமா? வணங்குகின்றோமா? புனிதர்களிடம் நாம் மன்றாட வேண்டுமா? ஏன், நமது தாய்த் திருச்சபை புனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது? இவ்வாறான நம்முடைய, மற்றும் பிற சபையைச் சார்ந்தவர்களுடைய பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் இன்றைய பெருவிழா நமக்கு விளக்கம் தருகிறது.

புனிதர்கள் என்பவர்கள் இவ்வுலகில் இறைவனுக்கு ஏற்புடையவர்களாக விசுவாசத்தில் உறுதிகொண்டு மற்றவர்களுக்கு இறைவனைக் காண்பித்து இன்று விண்ணக வாழ்வைச் சுவைத்துக் கொண்டிருப்பவர்கள். எபிரேயருக்கு எழுதியத் திருமுகம் 12:22- 23-இல் கடவுளின் நகர் விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர்கள் சூழ்ந்துள்ளனர். விண்ணகத்தில் தாய்த் திருச்சபை விழா கூட்டமென அங்கே கூடியுள்ளது என்று கூறும் இறைவார்த்தை நமக்கு இதனை உறுதிப்படுத்துகிறது. திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில் திருச்சபையால் நினைவு கூறப்பட்ட புனிதர்கள் அனைவரும் வேதச் சாட்சிகளே. வேதசாட்சிகளைத் தவிர ஏராளமான புனிதர்களும் மோட்சத்தில் புனிதர்களாகப் பேரின்பப் பாக்கியம் அனுபவித்து வருகிறார்கள். புனிதர்களாக யாரும் பிறப்பதில்லை. மனிதர்களாகப் பிறந்து புனித நிலைக்குத் தங்களையே மாற்றிக் கொண்டவர்கள்தான் புனிதர்கள். இவர்கள் தங்கள் வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்து, கிறிஸ்தவ விசுவாசத்தில் ஊன்றி நின்று, ஒரு எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தவர்கள். புனிதர்கள் தவறு செய்தவர்கள் தான், ஆனால் உணர்ந்து திருந்தியவர்கள். ஒரேயடியாக வீழ்ந்துவிடவில்லை, வீழ்ந்தாலும் எழுந்தவர்கள்.

கி.பி. 153-ஆம் ஆண்டு ஆயர் பொலிக்கார்ப் என்பவர் மறைசாட்சி முடி பெற்றார். இதை வானகப் பிறப்பு நாளாகத் தொடக்கக் கிறிஸ்தவர்கள் கொண்டாடினர். நமக்கு முன்சென்ற இவர்களின் வானகப் பிறப்பு நாளைக் கொண்டாடும்போது நாமும் சாட்சி பகர நம்மையேத் தயாரித்துக் கொள்கிறோம்.

பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியாகக் கி.பி. 387-ஆம் ஆண்டு நிசயாவில் இரண்டாவது பொதுச்சங்கம் கூட்டப்பட்டது. இதில் புனித உருவங்களை நாம் பார்க்கும்போது இவைகள் எந்த ஆட்களைக் குறிக்கின்றனவோ அவர்களை நினைவு படுத்துகின்றன என்றும் அவர்களை நினைத்துக்கொள்வதனால், அவர்களைப் பின்பற்ற முயலுகிறோம். அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலேயே நவம்பர் ஒன்றாம் தேதி அனைத்துப் புனிதர்கள் பெருவிழாக் கொண்டாடப்பட்டது. குறிப்பாகப் பிரான்சு, இங்கிலாந்து நாடுகளில். கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இத்திருவிழாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து மற்ற பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் உரோமாபுரியில் இரவு செபத்தோடு உபவாசமிருந்து கொண்டாடப்பட்டது. இவ்வாறாகத் திருச்சபை வரலாற்றில் இப்பெருவிழா முக்கிய இடம் பெற்றது. உலகில் உள்ள எல்லாருமே கடவுளின் சாயலாகப் படைக்கப்- பட்டவர்கள். கடவுளின் பண்பைப் பெற்றுள்ள நாம் எந்தச் சூழ்நிலையிலும் நன்மையையேச் செய்திட அழைக்கப்பட்டுள்ளோம். இவ்வழைத்தலை ஏற்று வாழும்போது ஒருவர் புனிதராகிறார்.

புனிதர்கள் கடவுளா?

இல்லை. புனிதர்கள் கடவுள் இல்லை. கடவுள் முழுமை யானவர், அனைத்தையும் படைத்தவர் கடவுள். அனைத்தையும் கடந்து உள் நிற்பவர். ஆனால் புனிதர்கள் கடவுளால் படைக்கப்பட்ட சாதாரண மனிதர்கள். தங்கள் வாழ்வால் புனித நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள். அவர்கள் கடவுளோடு கொண்ட நெருங்கிய உறவால் அந்த முழுமையை நோக்கிப் பயணம் செய்தவர்கள். கடவுளுக்காகக் கடவுளின் திட்டப்படி இவ்வுலகில் வாழ்ந்தவர்கள். அதற்குப் பரிசாகக் கடவுளை முகமுகமாய்த் தரிசிக்கும் வரத்தைப் பெற்று விண்ணகத்தில் நமக்காகப் பரிந்துப் பேசுகின்றவர்கள்.

கிறிஸ்தவர்களாகிய நாம், புனிதர்கள் யார்? கடவுள் யார்? என்ற வேறுபாட்டைத் தெரிந்து கொள்வது அவசியம். பலர் ஆதித் திருச்சபையில் வேதகலாபனை நேரத்தில் விசுவாசத்தைக் காப்பாற்ற பல வேதனைகள் பல கஷ்டங்களை எதிர்கொண்டார்கள், ஏன் தங்கள் உயிரையேத் தியாகம் செய்தார்கள். இவர்களை மறைசாட்சிகள் என்றழைக்கிறோம். பின்பு, பலர் சாதாரண மரணம் அடைந்தாலும் தங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான விசுவாச வாழ்வு வாழ்ந்ததால் இவர்களைப் புனிதர்கள் என்றழைக்கிறோம். ஆதலால் புனிதர்கள் கடவுள் அல்லர், கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் என்ற தெளிவானச் சிந்தனை கொள்வோம்.

புனிதர்களுக்கு நாம் செலுத்துவது வழிபாடா? வணக்கமா?
புனிதர்களை நாம் வழிபடுவதில்லை. ஆராதிப்பதில்லை.
புனிதர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். வழிபாடு கடவுளுக்கு மட்டும் உரித்தானது.
* மரியாதை - நாம் நம் பெரியவர்களுக்குச் செலுத்துவது
* வணக்கம் - நாம் புனிதர்களுக்குச் செலுத்துவது
* மகத்தான வணக்கம் - நாம் புனித கன்னி மரியாள், இறைவனின் தாய்க்குச் செலுத்துவது
* ஆராதனை வழிபாடு - நாம் கடவுளுக்குச் செலுத்துவது

எந்தப் புனிதரும் தங்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியதில்லை. கடவுளுக்குச் சமமாக நினைத்ததில்லை. நான்தான் கடவுள் என்று கூறியதுமில்லை. இவர்கள் கடவுளுக்காக வாழ்ந்தவர்கள். விண்ணக வீட்டில் வாழ்கிறவர்கள். நமக்காக இடைவிடாமல் கடவுளிடம் மன்றாடுகிறவர்கள். நாம் புனிதர்கள் மூலம் கடவுளிடம் வேண்டுகிறோம். இவர்கள் நம் விண்ணப்பத்திற்கு ஒரு பாலமாக, ஒரு இணைக் கருவியாகத் திகழ்கிறார்கள்.

திருத்தந்தை 23-ஆம் யோவான் "கத்தோலிக்க மரபின்படி புனிதர்களுக்குக் காட்டும் வணக்கம் வெறும் மரியாதை மட்டுமன்று; அல்லது வேளா வேளைகளில் எழுப்பும் சிறு சிறு மன்றாட்டு மட்டுமன்று; ஆழ்ந்த அடிப்படையிலமைந்த ஞான உறவாகும். அவர்கள் நமக்குத் தந்துள்ள விலைமதிக்கப் பெறாத முன்மாதிரிகையும் பாடமும் நமக்கு மகிழ்ச்சியூட்டும் ஊக்குவிக்கும் உதவிகளாகும்" என்று கூறுகிறார்.

புனிதர்களுக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய வணக்கம் அவர்களுடைய புனிதத்துவமான வாழ்வு முறையைப் பின்பற்றுவதே. புனிதர்கள் அனைவரும் நாம் எவ்வாறு கடவுளின் விருப்பப்படி வாழ வேண்டும் எனக் கற்றுத் தருகிறார்கள்.

புனிதர்களிடம் ஏன் மன்றாட வேண்டும்?

மனிதர்களால் எல்லாம் சாத்தியமில்லை. லூக்கா எழுதிய நற்செய்தி 5:17-26-இல் முடக்குவாதமுற்ற ஒருவரைக் குணமாக்கக் நான்குபேர் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவரைக் கட்டிலோடு இயேசுவுக்குமுன் இறக்கி அவனைக் குணமடையச் செய்ததாக வாசிக்கிறோம். அந்த நால்வரின் விசுவாசத்தால் அவன் குணம் பெற்றான். அந்த நான்கு நபர்கள் முடக்குவாதமுற்றவன் குணம்பெற உதவியாக இருந்தார்கள். அதேபோல் நம்முடைய இயலாத நிலையில் புனிதர்கள் நமக்காக இறைவனிடம் மன்றாடுவார்கள். மேலும் புனிதர்களின் பரிந்துரையை நாம் மேலான முறையில் விரும்ப வேண்டும். ஏனெனில் நாம் நமது மன்றாட்டினால் பெறமுடியாத நன்மைகளை அவர்களின் மன்றாட்டின் பயனாகப் பெறலாம். இதனால்தான் திருத்தொண்டர், குருத்துவ, ஆயர் திருநிலைப்பாடு மற்றும் துறவறசபையினரின் நித்திய வார்த்தைப்பாடு நடைபெறும் போதும் பாஸ்கா திருவிழிப்பு ஞாயிறன்றும் புனிதர்களின் மன்றாட்டு மாலை முக்கிய இடம் பெறுகிறது.

திருச்சபை ஏன் புனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற கேள்விக்குப் பதிலாக, புனிதர்களும் திருச்சபையின் அங்கத்தினர்கள். நம் குடும்பத்தில் ஒருவரின் வெற்றி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் கிறிஸ்தவத் திருச்சபை என்ற நம் குடும்பத்தில் பலர் புனிதர்களாக வாழ்ந்து இறந்திருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடுவதுதானேச் சிறந்தது. அதற்காகத் திருச்சபை நமக்குத் தரும் ஒரு அரியச் சந்தர்ப்பம்தான் இப்பெருவிழா.

இப்பெருவிழாவின் முக்கிய நோக்கம் புனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவதோ, பெருமைப்படுத்துவதோ அல்ல. மாறாக, நாமும் இவர்களைப் போலப் புனித நிலைக்கு உயர்த்தப்பட, இவர்களைப் போல வாழத் திருச்சபை அறிவுறுத்துகிறது. புனித வாழ்வு வாழ்ந்தவர்கள் ஏராளம் ஏராளம். புனிதர்கள் பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்ல; எண்ண முடியாத வேறு நீதிமான்களையும் நாம் காண்கிறோம். அவர்கள் கடவுளையும் அவருடையச் செம்மறியாகிய இயேசுவையும் புகழ்கிறார்கள். புனிதர்கள் எத்தனையோ பேர் திருச்சபைப் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால் கடவுளின் பட்டியலில் அவர்கள் விடுபடவில்லை. இவ்வாறு திருச்சபையின் பட்டியலில் இடம்பெற்ற, இடம்பெறாத அனைத்துப் புனிதர்களையும் நினைவு கூர்ந்து கொண்டாடும் இத்திருநாளில் நாமும் கடவுளின் பட்டியலில் இடம்பெற்று விண்ணக வாழ்வைச் சுவைக்கப் புனிதமிக்க வாழ்வு வாழ்ந்து, வரும் தலைமுறைக்கு வழிகாட்டிகளாக வாழ்வோம்.

நாம் விசுவாசப் பிரமாணத்தில் புனிதர்களுடையச் சமூதிதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன் என்று அறிக்கையிடும்போது, விண்ணக எருசலேமை நினைவு கூர்ந்து அவ்விடம் நோக்கிப் பயணம் செய்ய நம் வாழ்வை ஆயத்தமாக்குகிறோம். அவர்களுடைய பெயரை நமக்குச் சூட்டியிருக்கிறோம். அப்புனிதரைச் சந்தித்து நாமும் அவரைப் போல் வாழ முயற்சிப்போம்.

நாம் அனைவரும் பயணிகள். விண்ணகத்தை நோக்கியுள்ளப் பயணத்தில் நாம் புனிதர்களாக மாற முயற்சி எடுப்போம். முயற்சிகள் தவறலாம். ஆனால் முயற்சி செய்யத் தவறாதே என்ற விருதுவாக்கோடு அனைத்துப் புனிதர்களிடம் இன்று மன்றாடிப் புனித நிலைக்கு நம்மை மாற்றிக் கொள்ள முயற்சி எடுப்போம்.

மனிதனாகப் பிறந்தோம். புனிதனாக வாழ்ந்து சாவோம். மனிதர்களாக இவ்வுலகிற்கு வந்தோம், புனிதர்களாக வாழ்ந்து விண்ணகத்திற்குச் செல்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அனைத்துப் புனிதர் (நவம்பர் -1)

முதல் வாசகம் : திவெ. 7 : 2-4. 9-14

திவெ 7-ஆம் அதி. புதிய இஸ்ரயேல் பற்றிக் கூறுகிறது. இஸ்ரயேல் மக்களின் 12 குலங்களிலிருந்து கணக்கிலடங்காத மக்கள் முத்திரையிடப் பட்டிருக்கின்றனர் (7:4-8). இவர்கள் அழிவின் மீதும் சாவின் மீதும் வெற்றி கொண்டவர்கள். (முத்திரையிடப்பட்டோர் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் என்பது முழுமையையும்-12x12x1000 - அதே வேளையிலே எண்ணிலடங்காத ஒரு பெரிய தொகையையும் கட்டும்). அனைத்துப் புனிதர் திருநாளன்று, இவ்வாசகம், நாம் அனைவரும் விண்ணகத்திற்கு உரியவர்கள்; புனிதவாழ்வு வாழ வேண்டும் என்று நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

நாம் முத்திரை பதிக்கப்பெற்றுள்ளோம்

முத்திரை ஆனது நாம் இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என்ற உரிமையை அளிக்கிறது. சாத்தானும் சாவும் நம்மைத் தொட முடியாது என்பதைச் சுட்டுகிறது. நாம் பெற்ற முத்திரை "பிதா சுதன் தூய ஆவியாரில்" நாம் பெற்ற திருமுழுக்கே எனலாம். "உன் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன். உன் வழித்தோன்றல்களுக்கு என் ஆசியை வழங்குவேன்." "நான் ஆண்டவருக்கு உரியவன்" என்பான் ஒருவன்... “ஆண்டவருக்குச் சொந்தம்" என்று இன்னொருவன் தன் கையில் எழுதி, "இஸ்ரயேல்" என்று பெயரிட்டுக்கொள்வான்" (எசா 44: 3-5) என்பது அன்று இறைவன் இஸ்ரயேலருக்குத் தந்த ஆசிமொழி; இன்று அது நம் திருமுழுக்கில் நிறைவேறுகிறது. கடவுளாலே குறித்து வைக்கப்பட்ட மக்கள் நாம், தேர்ந்தெடுக்கப்பட்ட இனம். இத்தகைய ஒரு பேராசியை இறைவன் நமக்குத் தந்தமைக்கு நாம் நன்றி செலுத்துவோம். முத்திரை குலையாது இறைவனுக்குகந்த வாழ்வு வாழ முயற்சிகள் எடுப்போம். முத்திரை பதிக்கப்பட்டு விண்ணில் உள்ள நம் முன்னோருக்கும், முத்திரை பதிக்கப்பட்டு மண்ணில் உள்ள நமக்கும் உள்ள உறவை வளர்ப்போம். "புனிதர்களுடைய உறவை விசுவசிக்கிறேன்."

முத்திரை வாழ்வு பொறுப்புள்ள வாழ்வு

விண்ணிலிருக்கும் நம் முன்னோர் தம் முத்திரையைப் பாதுகாக்க இரத்தம் சிந்தவும் தயங்கவில்லை (22: 14). உரிமையிருக்குமிடத்தில் கடமையும் உண்டு. இறைவனின் பிள்ளைகள் என்ற உரிமைப்பேற்றைப் பெற்றவர்கள் அவ்இறைவனின் பிள்ளைகளுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். "ஆகவே என் வலுவின்மை யிலும் இகழ்ச்சியிலும், இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்" (2 கொரி 12:10) என்பார் பவுல். அதே பவுல் "பன்முறை சிறையில் அடைபட்டேன்... தடியால் அடிபட்டேன்... ஒருமுறை கல்லெறிபட்டேன்... மூன்று முறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில் ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள்..." (2 கொரி 11: 23-29) என்று கூறுவதையும் காண்க. ஆதிக் கிறிஸ்தவர்களும் சரி, நம் நாட்டுப் புனிதர்களும் சரி (சவேரியார், அருளானந்தர்). இக்காலத்திய கிறிஸ்தவர்களும் சரி (மாக்சிமிலியான் கோல்பே, மிக்கேல் புரோ) தாம் பெற்ற இறைமுத்திரையைக் காக்க எத்துணைத் துயரங்களை அனுபவித்தனர்? கிறிஸ்துவ வாழ்வு சிலுவை வாழ்வு என்பதை உணர்கிறோமா!

முத்திரை வாழ்வு மகிழ்ச்சி வாழ்வு

விண்ணவர்கள் இறைவனைப் "போற்றி, போற்றி"யென்று பாடுகின்றனர் (7:10-12). தம்மை மீட்ட இறைவனை ஏத்துகின்றனர். அவருடைய பலத்தையும், வல்லமையையும், மாட்சியையும் புகழ்கின்றனர். என்றும் மகிழ்ச்சி, எங்கும் மகிழ்ச்சி, எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆம், நாமும் இத்தகைய மகிழ்ச்சி வாழ்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். நம் வாழ்நாளிலும் நாம் நல்வாழ்வு வாழ்ந்து, நாம் மகிழ்ச்சியாயிருந்து, அம்மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் மகிழ்ச்சியின் திருத்தூதர்களாக மாற வேண்டும்.

போற்றியும் மகிமையும் என்றென்றும் கடவுளுக்கே.

இரண்டாம் வாசகம் : 1யோ 3:1-3

கிறிஸ்துவ வாழ்வு நம்பிக்கை வாழ்வு

இறைமக்கள் அனைவரும் புனிதராகும்படி அழைக்கப்பட்டவர்கள். "கிறிஸ்துவின் பெயரை எங்கும் போற்றித் தொழுகின்ற அனைவரோடும் கூடப் புனிதராயிருக்கும்படி அழைக்கப்பட்ட உங்களுக்கு”; “ஆண்டவ ராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தராக்கப்பட்ட உங்களுக்கு" (1கொரி 1:2) என்ற பவுலின் வாக்குகள் கிறிஸ்தவ அழைப்பின் மேன்மையைச் சுட்டுகின்றன. "கிறிஸ்தவர்கள் இறைமக்கள் சமுதாயத்தின் உறுப்பினர்; கடவுளுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள்" (எபே 2: 19; காண் 1 தெச 3:13) என்று கிறிஸ்தவர்களை இறைக் குடும்பத்தின் அங்கமாகக் காண்கிறார் பவுல். அனைவரும் இந்த இலட்சிய வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், ஒருசிலரே அதை அடைந்ததாகத் திருச்சபை வெளிப்படையாகப் பிரகடனம் செய்துள்ளது. எனினும் ஏராளமான மக்கள் இறைவனது திருச்சித்தத்திற்கு அமைந்து, அவரது கட்டளைகளை அனுசரிப்பதிலே தியாகங்கள் பல புரிந்து, தம் கடமைகளைக் கருத்துடன் செய்து, எவரும் அறியாத வகையில், புனிதமான வாழ்வு வாழ்ந்துள்ளனர். இன்று விண்ணிலே வீற்றிருக்கும் இத்தகைய மண்ணவர் அனைவர்க்கும் விழா: நாமும் ஒருநாள் இவர்கள் கூட்டத்திலே சேருவோம் என்ற நம்பிக்கை விழா; அனைத்துப் புனிதர்களின் விழா.

கிறிஸ்துவ வாழ்வு கடவுள் பிள்ளையின் வாழ்வு

இயேசுவின் இறுதி மன்றாட்டுக்களில் ஒன்று, "நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்துகொண்டார்கள்" என்பதாகும் (யோ 17 : 25). நாம் இறைவனால் அவருக்காகவே படைக்கப் பட்டோம். நாம் அவரது சாயலாகப் படைக்கப்பட்டோம் (தொநூ. 1: 26). கிறிஸ்து வழியாக இறைவனுடன் என்றென்றும் வாழ்வதே எம்வாழ்வின் குறிக்கோள். "நாம் பிள்ளைகளாயின், உரிமையாளர்களுமாய் இருக்கிறோம்; ஆம், கடவுளின் செல்வத்திற்கு உரிமையாளர்கள்: கிறிஸ்துவோடு உடன் உரிமையாளர்கள் (உரோ. 8 : 17). நாம் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவது மட்டுமன்று; நாம் உண்மையிலேயே கடவுளின் மக்களாகவே இருக்கிறோம் என்கிறார் யோவான். தன் தந்தையிடமிருந்து வாழ்வைப் பெற்றுக்கொண்ட பிள்ளையை, இவன் இத்தந்தையின் மகன் என்று அடையாளம் கண்டுகொள்ளுகிறோம். நாமும் திருமுழுக்கு வேளையில், கிறிஸ்து வழியாகத் தெய்வீக வாழ்வைப் பெற்றுக் கொண்டதால் இறைமக்களாக இருக்கிறோம். இதை முழுமையாக வாழ்ந்தால் இயேசுவுடன் விண்ணிலே என்றும் வீற்றிருப்போம். "இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்" (திவெ.7: 16-17; காண் எசா. 49:10; 25:8).

கிறிஸ்துவ வாழ்வு புனித வாழ்வு

நமதாண்டவரின் மரணத்துடன் அவரது வெளித்தோற்ற வாழ்வு முடிந்து, உயிர்ப்பிலே அவரது மகிமை வாழ்வு தொடங்கியது. இது முடிவற்ற வாழ்வு. பரலோக மட்டும் பரவசமான பவுல் தான் அனுபவித்த பரலோக பேரின்பத்தை வருணிக்கச் சொற்களைத் தேடித் தடுமாறுகிறார் (காண் 2 கொரி 12:1-41கொரி 13: 12-13). இறைவனை உள்ளது உள்ளபடியே அறிந்து ஆராதிப்பதே விண்ணக வாழ்வு, இத்தெய்வீகப் பிரசன்னத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அங்கில்லை. இவ்வாழ்வைப் பெற நாமும் இயேசுவைப் போல் குற்றமற்றவர்களாய் இருக்க வேண்டும் (3:3). "தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" என்பது இயேசுவின் வாக்கு. இயேசுவைப் பின்பற்றி, அவரைப் போல் வாழ்ந்த புனிதர்களே இன்று விண்ணிலே அவர் செல்லுமிடமெல்லாம் சென்று அவர் புகழ் பாடுகின்றனர் (திவெ. 7:10). இப்புனிதர்களின் அடிச்சுவட்டில் நடக்க நான் என்ன செய்ய வேண்டும்?

நாம் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுகிறோம்: அவருடைய மக்களாகவே இருக்கிறோம்.

நற்செய்தி: மத் 5:1-12

மலைப்பொழிவின் (மத் 5-7) தொடக்கமான "இறைப்பேறுகள்" (5:1-12) இன்றைய வாசகமாயமைகின்றன. இறைப்பேறுகளுக்கெல்லாம் முதலும் இடையும் கடையுமான இயேசுவையே இக்கூற்றுகள் படமெடுத்துக் காட்டுகின்றன எனலாம். புனிதர் எனப்படுவோர் இயேசுவை இவ்வுலகில் முழுவதும் பின்பற்றிய நிலையிலே, இயேசுவோடு மறுவுலகில் கலந்துவிட்டனர். ஆதலின் அனைத்துப் புனிதர் விழாவன்று இவ்வாசகம் பொருந்தி அமைகிறது. இவ்வுலகிலே நாமும் புனிதத்திற்காக அழைக்கப்பட்டுள்ளோம் (I பேது 2: 9) என்ற முறையிலே இவ்வாசகம் நமது வாழ்விற்குச் சவாலாயமைகிறது.

தம்மைப் பொறுத்தமட்டில் இயேசு புனிதர்

இறைவனின் திருமகன் இயேசு. “அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்" (கொலோ 1:15). எனவே அவர் தூய உள்ளத்தவர் (5:8). "பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" (எசா.6: 3; திவெ 4 : 8) என விண்ணவரால் போற்றப்படுவர். அலகையை, அதன் சோதனைகளை எதிர்த்து நின்று, ஆண்டவராகிய கடவுளை எப்போதும் அணுகிச் செல்பவர் (யாக். 48). “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு" (யோ 4:34) என்ற முறையில் தம் குறிக்கோள் தவறாது வாழ்ந்தவர். ஆம், இயேசு தூய உள்ளத்தினர். புனிதர் எனப்படுவோர் இயேசுவின் இத்தூய்மையிலே பங்குபெற்றவர்கள். "தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர் அவர்கள் கடவுளைக் காண்பர்" (5:8) என்பது இப்போது நம்பால் உண்மைப்படுமா? 370 மனிதன் என்ற முறையிலே இயேசு நம்மோடு நாமாக வாழ்கிறார். அவரது எளிய வாழ்வும் (5 : 3) துயர்மிக்க வாழ்வும் (5: 4) அவரை ஒரு சாதாரண மனிதனாகவே நமக்குக் காட்டுகிறது. "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” (லூக் 9: 58) என்பது அவரது ஏழ்மை வாழ்வின் சுருக்கக் கதை. "எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆக வேண்டியதாயிற்று" (எபி 2: 17).

பிறரைப் பொறுத்தமட்டில் இயேசு புனிதர்

ஏழ்மையினின்று பிறப்பது சாந்தம் (5: 5). இச்சாந்த குணம் தன்னைச் சார்ந்த குணம் என்பதோடு கூட, பிறரை அடுத்தது; இளகிய மனத்தோடு பழகுவது என்ற பொருள்ளது. இயேசுவே "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்" (மத் 11 : 29) என்பார். இரக்க குணமும் (5 : 7) ஏழ்மையின் வெளிப்பாடே. ஏழைகள் தான் ஏழையைக் கண்டு இரங்க முடியும். ஏனெனில், ஏழ்மைத் தன்மையின் இழிவை உணர்ந்தவர்கள் அவர்கள். துன்புறுவோர் மீது இயேசு மனம் இரங்கியதாகப் பல்முறை பு.ஏ. இல் காட்டப்பட்டுள்ளது (காண் : மாற் 7: 34; லூக் 7 : 13). அடுத்து, இறைவனின் நீதியை உலகிற்கு வெளிப்படுத்தவே இயேசு வந்தார். இவ்வுலகில் வாழ்ந்தபோது, நீதியின்மேல் "பசிதாகமுள்ளவராக” வாழ்ந்தவர் (5:6). நீதிக்காகவே துன்புறுத்தப்பட்டு உயிர் நீத்தார் (5: 10). "என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே எனது உணவு" (யோ 4:34) என்று இயேசு கூறுவதன் மூலம் நீதிக்கடவுளாகிய தம் தந்தையின் (காண் உபா 10 : 18) வெளிப்பாடே இயேசு என்பது புலனாகின்றது. மேலும் ஓய்வு நாள் சட்டத்தை எதிர்த்து, நோயாளிகளுக்கு உதவி புரிந்ததிலும் இயேசுவின் நீதி வேட்கை தெற்றெனப் புலப்படுகிறது. இறுதியாக இயேசுவே சமாதானம் தரும் கடவுள் (5:9). அவரே தந்தையோடு, தம்மோடு, மக்களோடு நிறையுறவு கொண்டவர். எனவே அவரே சமாதானம். "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்” (யோ 14:27) என்று அவர் ஒருவரே சொல்லக்கூடும். "கிறிஸ்துவே நம் சமாதானம், அவரே யூத இனத்தையும் பிற இனத்தையும் ஒன்றாய் இணைத்தார். தடைச்சுவரென நின்ற பகைமையைத் தம் ஊனுடலில் தகர்த்தெறிந்தார். கிறிஸ்துவின் சாந்தம், இரக்கம், அவர் நீதியின் மேல் கொண்ட பசிதாகம், அவரது சமாதானப் பணி, நம் வாழ்வுக்கு உந்துதலும் ஊக்கமும் தர வேண்டுவோம்.

நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

புனிதத்தின் முன்சுவை

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி திருத்தந்தை 14-ஆம் லியோ இரண்டு பேரை – கார்லோ அகுதிஸ் மற்றும் பியர் ஜோர்ஜோ ஃபிரஸ்ஸாத்தி என்னும் இரண்டு இளவல்களை – புனிதர் நிலைக்கு உயர்த்தினார். புனிதர் நிலை என்பது அனைவருக்கும் சாத்தியம் என்ற எதிர்நோக்கு இந்த நிகழ்வின் வழியாக பலருக்குக் கிடைத்தாலும், கார்லோ அகுதிஸைவிட துன்பப்பட்டவர்களோ, அல்லது ஜோர்ஜோ ஃபிரஸ்ஸாத்தியைவிட கூர்நோக்கு கொண்ட இளவல்களும் எங்கள் நாட்டிலும் இருக்கிறார்கள் என்ற ஏக்கம் பலர் உள்ளங்களில் எழுந்தது.

புனிதர் அனைவரையும் திருஅவை கண்டுகொள்வது சாத்தியம் இல்லை! அல்லது அது சில நேரங்களில் கண்டுகொள்ளவில்லை!

கார்லோ அகுதிஸ் அவர்களுடைய திருப்பண்டத்தைச் சேகரித்து அதை நம் ஆலயங்களில் நிறுவி காணிக்கை எடுக்கும் அக்கறையை நாம் நம் பங்கின் இளையோர்களை ஊக்குவிப்பதிலோ, அல்லது கார்லோ அகுதிஸ் போல கணினி கற்பிப்பதிலோ நாம் காட்டுவதில்லை. புனிதர்கள் என்பவர்கள் நம் வாழ்வின் துன்பங்களைப் போக்குபவர்கள், நோய், வறுமை, இறப்பு ஆகியவற்றினின்று விடுவிப்பவர்கள் என்று நாம் அவர்களுடைய மேன்மையைக் குறைத்துவிட்டதும் வருத்தத்திற்குரியது.

இன்னொரு பக்கம், புனித தேவசகாயம் அவர்கள் பொதுநிலையினரின் பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட்டார். புனித தேவசகாயம் அவர்கள் துன்புற்றபோது திருஅவை அவருடன் நிற்கவில்லை. ஆனால், அவர் இறந்த பின்னர் அவரைப் புனிதராகக் கொண்டாடுகிறது. கந்தமாலில் சமயத் துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்தவர்களை புனிதர்களாக அறிவிக்க இப்போது முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஒருவர் நம்மோடு இருந்து துன்புறும்போது அவருக்கு ஆதரவாகச் செயல்படாமல் இருந்துவிட்டு அவரைப் புனிதராக்கி தேரில் தூக்கிச் செல்வதால் (அவருக்கு) என்ன பயன்?

பிரான்சு நாட்டின் முக்கிய நகரில் வாழும் ஒரு பெண் கண்பார்வை இழந்த தன் கணவரையும், 23 ஆண்டுகளாக மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள மகனையும் ஒருநாள் விடாமல் பாதுகாத்து பராமரித்து வருகிறார்.

படுத்த படுக்கயாகக் கிடக்கிற தன் தாய்க்குப் பக்குவம் பார்த்து, நினைவுக்குறைவால் வருந்தும் தன் சகோதரிக்குத் தேவையானதைச் செய்துவிட்டு விரைவாக அலுவலகம் செல்கிறார் ஒரு பெண்.

தந்தையின் இறப்பால் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் கடன்சுமையைச் சுமக்க தன் கல்லூரிப் படிப்பை இடையில் விட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தின் சுமையைச் சுமக்கிறார் இளைஞர் ஒருவர்.

திருஅவையின் அட்டவணைக்குள் வராதவர்கள், ஆனால், புனித வாழ்வை வாழ்ந்தவர்கள், அல்லது திருஅவையின் போதனைப்படி ‘மகிமைபெற்ற திருஅவையில்’ இருக்கும் அனைத்து இனியவர்களின் திருநாள் இன்று. இன்றைய முதல் வாசகம் (காண். திவெ 7:2-4,9-14) இவர்களை முத்திரையிடப்பட்டவர்கள் என்றழைக்கின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் யோவான், நாம் இங்கேயே கடவுளின் மக்களாக இருக்கிறோம் என்று புனித நிலையை இவ்வுலகம் சார்ந்ததாகப் பதிவு செய்கிறார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் மலைப்பொழிவில் காணப்படும் பேறுபெற்றோர் பாடத்தை வாசிக்கின்றோம். இக்குணங்களைக் கொண்டிருப்பவர்கள் புனித நிலையை அடைகிறார்கள் அல்லது விண்ணரசை உரிமையாக்கிக்கொள்கிறார்கள் என்று நாம் புரிந்துகொள்ள முடியும்.

உரோமையில் புனிதர் பட்டமளிப்பு விழா நடந்த மறுநாளில் இணையதள தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றில் அதே செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதற்குப் பின்னூட்டம் இட்டவர்களில் ஒருவர், ‘மனிதர்களாகச் சேர்ந்து ஒருவரை எப்படி புனிதராக்க முடியும்?’ என்ற கேள்வியைக் கேட்டிருந்தார். புனிதராக்குகின்ற மனிதர்கள் இறைவனின் பெயரால், திருஅவையின் பெயரால், அல்லது இறைமக்களின் பெயரால் இந்நிகழ்வை நடத்துகிறார்கள் என்று நாம் சொன்னாலும் அவருக்கு அப்பதில் ஏற்புடையதாக இருக்காது.

‘நான் நீதிமான்களை அல்ல. பாவிகளையே அழைக்க வந்தேன்’ என்று சொன்ன இயேசு, ‘அனைத்துப் புனிதர்கள் விழா’ கொண்டாட விரும்புவாரா? என்று கேட்டார் என் நண்பர். இயேசு ஒருவேளை நம்மோடு இருந்தால் ‘அனைத்துப் பாவிகள் விழா’ தான் கொண்டாடியிருப்பார் என்றார் அவர்.

புனிதர்களை நாம் மிகவும் கொண்டாடி அவர்களை அந்நியப்படுத்திவிடும், அல்லது உடுப்பி ஓட்டல் சர்வர் நிலையில், நம்மிடம் ‘ஆர்டர்’ எடுத்து, அதைக் கொண்டு வந்து நம் தட்டில் வைக்கும் நபராகப் பார்க்கும் போக்கும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது.

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நாம் வாழ்வதோ, அல்லது அவர்கள் விட்டுச்சென்ற விழுமியங்களை வாழ்வாக்குவதோ நமக்குக் கடினமாக இருக்கும் என்று, அவர்களின் வழித்தோன்றல்களாக இருப்பதற்குப் பதிலாக, அவர்களது பக்தர்களாக மாறும் எளியை வழியைத் தெரிவுசெய்துகொண்டோமோ என்று கேட்கவும் தோன்றுகிறது.

இந்தத் திருநாள் நமக்குத் தரும் செய்தி என்ன?

ஒன்று,

‘உங்களுக்குப் புனிதராக விருப்பமா?’ என்று நம்மிடம் யாராவது கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்? புனிதர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தாம். ஆனால், சாதாரண மனிதர்களைவிட அவர்கள் கொஞ்சம் ‘எக்ஸ்ட்ரா’ செய்தார்கள். அந்தக் கொஞ்சம் ‘எக்ஸ்ட்ரா’ தான் அவர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துகிறது. அவர்கள் யாரும் செல்லாத பாதையில் நடந்து சென்றார்கள்.

பயத்தால் பீடிக்கப்பட்ட மக்கள் நடுவே கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணிச்சல் கொண்டார்கள் – செபஸ்தியார் போல! தன் திறமை மதிக்கப்படாத இடத்தில் கொஞ்சம் எக்ஸ்டரா பொறுமை காத்தார்கள் – பதுவை அந்தோனியார் போல! சொத்துக்கள் நிறைய வேண்டும் என்று நினைத்தவர்கள் நடுவில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொடுத்தார்கள் – பிரான்சிஸ் அசிசி, வனத்து அந்தோனியார் போல! இவர்கள் சேரி மக்கள். இவர்களுக்கு என்ன செய்ய முடியும்? என்று கேட்டவர்கள் நடுவில், அந்த மக்களுக்காக கொஞ்சம் எக்ஸ்ட்ரா தன் ஆற்றலையும் நேரத்தையும் கொடுத்தார்கள் – அன்னை தெரசா போல! இப்படி இவர்கள் கொஞ்சம் கொஞ்சம் எக்ஸ்டரா செய்தார்கள். அவ்வளவுதான்!

நம்முடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் என்று நம்மிடையே வாழ்ந்து இன்று மறைந்தவர்களும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்தவர்கள்தாம் – அவர்களும் இன்று புனிதர்களே! ஆக, நாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்யும்போதும், எக்ஸ்டரா மைல் நடக்கும்போதும் புனிதராகிறோம்.

இரண்டு, இருப்பது அல்ல, மாறுவது. இருப்பது அல்ல, மாறுவதே மதிப்பு பெறுகிறது. மாற்றம் கூடக்கூட மதிப்பு கூடுகிறது. பால் மதிப்புக்குரியதுதான். ஆனால், பால் தயிரானால் அதன் மதிப்பு கூடுகிறது. வெண்ணெய் அல்லது பாலாடைக்கட்டியானால் இன்னும் கூடுகிறது. பால்கோவா, பால் அல்வா ஆனால் இன்னும்கூடுகிறது. நெய் ஆனால் இன்னும் அதிக மதிப்பு பெறுகிறது. ஆனால், இந்த மாற்றம் எளிதான செயல் அல்ல. இந்த மாற்றத்திற்கு தன்னையே உட்படுத்த பால் நிறைய சூட்டைத் தாங்க வேண்டும், பாத்திரம் விட்டு பாத்திரம் மாற வேண்டும், மத்தால் திரிக்கப்பட வேண்டும், கையால் சுரண்டப்பட வேண்டும்.

புனிதர்கள் சொல்லும் இரண்டாம் பாடம் இதுதான். நாம் இருப்பதில் அல்ல. நாம் எப்படி மாறுகிறோம் என்பதில்தான் மதிப்பு இருக்கிறது.

பாரக் ஒபாமா அவர்களின் மனைவி மிஷல் ஒபாமா தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை, ‘பிகமிங்’ என்ற தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார். ‘நான் என்னவாக மாற விரும்புகிறேன்’ என்ற கேள்வி நம்முடைய இருப்பையே புரட்டிப்போடும் என்கிறார். ‘அவரால் முடியும், அவளால் முடியும். என்னால் ஏன் முடியாது?’ என்று கேட்டதால்தான் லொயோலா இஞ்ஞாசியார் மாற்றத்தின் கருவியாகிறார். ஆக, நாம் எப்படி மாற வேண்டும் என்பதைக் கற்றுத்தருகிறார்கள் புனிதர்கள்.

மூன்று, எதிர்நோக்கு. ‘எல்லாம் கடந்துவிடும்’ என்பர். சரி! கடந்தால் என்ன? கடந்தாலும் காத்திருத்தல்தான் எதிர்நோக்கு. ‘எல்லாம் கடந்துவிடும்’ என நினைப்பவர்கள் புனிதர்கள் ஆக முடியாது. ‘துன்பம் கடந்துவிடும்’ என்று செபஸ்தியார் நினைத்திருந்தால் ஓய்ந்திருப்பார் இல்லையா? எதிர்நோக்கு கொண்டிருந்தார். கடந்துவிடுவதற்கு முன் துன்பத்தை ஏற்கின்றார். நம் வாழ்வில் எதிர்நோக்கு என்னும் மெழுகுதிரியை நாம் அணையாமல் காத்துக்கொள்ள நம்மைத் தூண்டுகின்றனர் புனிதர்கள். கொஞ்சம் எக்ஸ்ட்ரா, கொஞ்சம் மாற்றம், கொஞ்சம் எதிர்நோக்கு – இதுவே புனிதம்!

நாம் எல்லாருமே புனிதர்கள், இப்போது வரை. ஆனால் இன்னும் நாம் புனிதர்களாக நம்மை முழுமையாக வெளிப்படுத்தவில்லை – நமக்கு, பிறருக்கு, இந்த உலகத்திற்கு. ஆனால் கடவுளுக்குத் தெரியும் நாம் எந்த சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்று. அவருக்குத் தெரியும் நாம் யாரைப்போல உருப்பெற்றவர்கள் என்று. அவருக்குத் தெரியும். அவருக்குத் தெரியும் நாம் புனிதர்களென்று!

இதோ! கொஞ்சம் கொஞ்சமாக நாம் புனிதர்களாக வளர்கிறோம். நம்மிலிருந்து நாம் வெளியே வருகிறோம். நம் கூட்டை நாமே கொத்திக் கொத்தி உடைத்துக் கொள்கிறோம். நம்மை நாமே படைத்துக் கொண்டிருக்கிறோம். கடவுளே நம் உள்ளிருந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார். இது எப்படி நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால் நம்மால் மட்டும் தான் அதை உணர முடியும் – கொஞ்சம் கொஞ்சமாக, நம் இயல்பு நிறைவு பெறும் போது!

அப்படியென்றால், யார் புனிதர்? புனிதர் என்பவர் மனச்சுதந்திரம் பெற்றவர். தன் வாழ்வின் ஆதாரத்தோடு தொடர்பு கொண்டிருப்பவர். தன் மையம் எது என்ன என்பதைக் கண்டுகொண்டவர். புனிதருக்குத் தெரியும் தான் எங்கிருந்து வந்தோம் என்பதும் எங்கே செல்கிறோம் என்பதும்! தான் வலுவற்றவன் தான் என்றாலும், தான் படைக்கப்பட்டது நிரந்திரத்திற்கு என்பதை அவருக்குத் தெரியும்!

புனிதர் என்பவர் ஒரு சுதந்திரப் பறவை! அவர் தன் வேர்களிலிருந்தும், தன் குணாதிசயத்திலிருந்தும், தன் வரையறைகளிலிருந்தும், தன் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர் அல்ல – இவைகளிலிருந்து விடுவிக்கப்பட்டால் தான் அவர் புனிதரா? – புனிதர் என்பவர் இவைகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, இவைகள் வழியாகவும், இவைகளிலும் சுதந்திரமாகக் கடந்து செல்பவர்.

புனிதர் தன் உள்ளார்ந்த போராட்டங்களை வென்று வெற்றிகரமாக வெளியே வந்தவர்! புனிதர் எந்த நிலையிலும் தன்னை மட்டும் காத்துக் கொள்ள வேண்டும் என்று நினையாதவர்! புனிதர் கடவுளை நோக்கி கதறியழத் தெரிந்தவர். சின்னக் குழந்தை போல எல்லாவற்றையும் நம்பத் தெரிந்தவர்.
தன்னோடும், தன் அருகில் இருப்பவரோடும் சமாதானம் செய்து கொள்பவர். புனிதர் தன்னிடம் இல்லாததை நினைத்து வருந்துபவர் அல்ல. இருப்பதை வைத்து மகிழ்பவர்.

புனிதருக்கு நடிக்கத் தெரியாது. முகமூடி அணியத் தெரியாது. மற்றவரின் வாழ்வைப் போல தன் வாழ்வை அவர் அமைத்துக் கொள்ள ஒருபோதும் அவர் நினைப்பதில்லை. மற்றவரைப் போல வாழ வேண்டும் என்றும் எண்ணுவதில்லை. தன்னைப் போல இருப்பதே தனக்குப் போதும் என்று உறுதியாக நம்புபவர். புனிதருக்கு தன் உண்மை என்ன என்று தெரியும்! தான் யாரென்று தெரியும்! காற்று நிரப்பப்பட்ட பலூன் அல்ல அவர். காற்றே இல்லாத பலூனும் அல்ல அவர். ஆற்றலோ, ஆசைகளோ, ஆண்மையோ இல்லாதவர் அல்ல அவர்.

புனிதர் தானே உலகைப் படைத்து அதை பரிசாக தன் கடவுளுக்குப் படைப்பவர் அவர். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், சந்திக்கும் ஒவ்வொரு நபரிலும், சிந்தும் ஒவ்வொரு துளிக் கண்ணீரிலும், வியர்வையிலும் கடவுள் ஒளிந்திருப்பது அவருக்குத் தெரியும்.

புனிதர் பொருட்களையும், உடலையும், உடலின் மணத்தையும், சுகத்தையும், அதன் நிறத்தையும், வழுவழுப்பையும் அன்பு செய்பவர். வாழ்வின் எதார்த்தங்கள் ஒரு இசை போல ஒழுங்கானவை என்றும் அதே நேரத்தில் கடினமானவை என்பதையும் உணர்ந்தவர்.புனிதர் எல்லாரையும் விட்டு ஒதுங்கி நிற்பவர் அல்ல. சாதாரணமானவர்களோடு சாதாரணமாக நிற்பவர். வாழ்வோடு முழுமையாகக் கலந்தவர். தன் உடலின் உணர்வுகளோடு வாழத் தெரிந்தவர். ஆனால் அவர் எதையும் மிகைப்படுத்துவதில்லை.

புனிதர் சாந்தமானவர். ஆகையால் தான் இந்த உலகை அவர் உரிமையாக்கிக் கொள்கிறார். அங்கே மகிழ்ச்சியாக அவர் வாழ்கிறார். புனிதர் தனக்குத் தானே சிரிக்கத் தெரிந்தவர். தன்னைப் பார்த்தும் சிரிக்கத் தயங்காதவர். புனிதர் தன்னால் இயன்றவற்றை முழுமையாகச் செய்பவர் – தன் முழு ஆற்றலோடு செய்பவர். தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பார். இந்த உலகத்தைத் தான் ஒருவர் தான் மாற்ற முடியும் என்றும் மீட்க முடியும் என்றும் அவர் நினைப்பதில்லை. புனிதர் தன்னைக் கடவுளாக எண்ணிக்கொள்வதில்லை. புனிதர் மனிதர்களை மட்டுமல்ல, மனிதர்கள் அல்லாதவரையும் அன்பு செய்பவர். அவைகளோடு தான் இணைக்கப்பட்டுள்ளதை அறிந்தவர் அவர். புனிதர் உண்மையானவர்.

புனிதர் சில நேரங்களில் கடவுளை அறிவதில்லை! அவர்கள் கடவுளை மறந்து விடுவார்கள்! அவர்கள் கடவுளை திட்டுவார்கள்! அவர்கள் கடவுளிடம் சண்டை போடுவார்கள்! ஆனால் அவர்களுக்குத் தெரியும் கடவுள் நம்பிக்கைக்குரியவர் என்று.

இனிய திருநாள் வாழ்த்துக்கள்! புனிதர்களாகிய உங்கள் அனைவருக்கும்!

புனிதத்தின் முன்சுவையை நாம் இன்று அனுபவிக்க நம்மை அழைக்கிறது இத்திருநாள்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு