மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 2: 1-5|உரோமையர் 13: 11-14|மத்தேயு 24: 37-44

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



திருவருகைக் காலம் முதல் ஞாயிறு

அனிஸ் என்ற ஏழு வயது சிறுவன் பெங்களூரில் ஓர் ஆங்கிலப் பள்ளியிலே 3ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் அப்பா ஒரு பொறியாளர், அமெரிக்காவில் பணி செய்து கொண்டிருந்தார். அவன் அம்மா, அக்காள் இந்தப் பையன் மூவரும் விடுமுறையில் அப்பாவோடு இருவாரங்கள் தங்கி வர, அமெரிக்காவைப் பார்த்து வர பாஸ்போர்ட், விசா எல்லாம் ஒழுங்கு செய்து புறப்பட இரண்டு நாட்கள் இருந்தன. அப்பாவுக்கு இந்தியா லாலா மிட்டாய் வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று விரும்பி அருகில் இருந்த கடைக்குச் சென்று ஒரு கிலோ லாலா மிட்டாய் வாங்கி வரும்போது, தரையில் அறுபட்டுக்கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்து அங்கே பிணமானான் சிறுவன். ஒரு வாழ்வு மலருமுன்னே மறைந்து, எல்லோரையும் துயரத்தின் கடலிலே ஆழ்த்தியது. ஆம் எதிர்பாராத சோக நிகழ்ச்சி!

இன்றைய நற்செய்தியில் நாம் விழிப்பாய் இருக்கவும், ஆயத்தமாக இருக்கவும் அழைப்பு விடுக்கிறார் இயேசு. இதற்காக ஒரு நிகழ்வையும், ஓர் உவமையையும் தருகிறார். மக்கள் கடவுளை மறந்து சிற்றின்ப வாழ்வில் மூழ்கினார்கள். வெள்ளப் பெருக்கைக் கொண்டு அம்மக்களை அழிக்க விரும்பினார். நீதிமான் நோவாவை நோக்கிக் கப்பல் கட்டச் சொன்னவுடன், பணிந்து வேலையை ஆரம்பிக்கிறார். மற்றவர்கள் அவரைப் பார்த்து தண்ணீர் இல்லையே! ஏன் இந்தப் பெரிய கப்பல் என்று ஏளனம் செய்கின்றனர். பெட்டக வேலை முடிந்தவுடன் பெருமழை வந்தது. நோவாவின் குடும்பம் காப்பாற்றப்பட்டது. ஆனால் தயாரின்றி இருந்த மற்றவர் அனைவரும் அழிந்தனர் (மத்: 24:37-44).

இரண்டாவது, இயேசு சொல்கிறார், இருவர் வயலில் இருப்பர், ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார், மற்றவர் விடப்படுவார். புனித பேதுரு கூறுவதுபோல ஆண்டவருடைய நாள் திருடனைப்போல் வரும் (2பேதுரு 3:10). ஆண்டவருடைய நாள் என்பது பழைய ஏற்பாட்டிலே கடவுளின் வாக்குறுதியின் நிறைவாக, மெசியாவின் வருகையைக் குறிப்பதாக இருந்தது. ஆனால் புதிய ஏற்பாட்டிலே இயேசுவில் நாம் பெறும் மீட்பைப் பற்றியதாக, இயேசுவை நம் இரட்சகராக ஏற்று நாம் பெறும் நித்திய வாழ்வைப் பற்றியதாக உள்ளது. இன்றைய முதல் வாசகத்திலே எசாயா இறைவாக்கினர் கூறுவது போல நாம் அனைவரும் பயணிகள், நமது நோக்கம் எருசலேம் தேவாலயம் அல்ல. மாறாக இறைவனோடு என்றும் வாழ்வுக்கு, அந்த உன்னத வாழ்வுக்கு, சீயோன் மலைக்குச் செல்லத் தயாராக இருக்க அழைப்பு விடுக்கிறார். சிறுவன் அனிஸ் வாழ்வு திடீரென முடிவுக்கு வந்ததுபோல, நமது வாழ்வு என்று முடிவுபெறும் என்று தெரியாததால் நாம் என்றும் விழிப்போடும். தொடர்ந்த ஆயத்தத்தோடும் வாழ வேண்டும் என்பதை இயேசு நற்செய்திலே வலியுறுத்துகிறார் (மத்: 24:43-44).

இன்றைய சமுதாயத்தை ஆட்டிப்படைப்பது மனவிரக்தியும், மனச்சோர்வும் ஆகும். இத்தகைய மனவிரக்தியிலும், மனச்சோர்விலும் வாழும் நமக்குப் புனித பவுல் அடிகளாரின் இன்றைய இரண்டாம் வாசகம் (உரோ. 13:11-14), நம்பிக்கையையும். ஆற்றலையும், ஊட்டவல்லவையாக அமைகின்றன. தீமைகளும், அநீதிகளும், இரவின் செயல்களும் முடியப்போகின்றன என்று முன்னறிவிக்கிறார். மீட்பு அண்மையில் உள்ளது. இரவு முடியப்போகிறது. பகல் நெருங்கி வந்துவிட்டது என்றும் உற்சாகமூட்டும் வார்த்தைகளைத் தருகிறார்.

அன்பார்ந்தவர்களே!
புதிய சமுதாயத்தைப் படைக்க நம்மிடத்தில் முதலாவது இருக்க வேண்டியது துணிவும், தளராத மனமும், விடாமுயற்சியும், இலட்சியத் தெளிவும் ஆகும்.

ஆண்டவரின் நாள் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாததால் நாம் மனப்பக்குவத்துடன் தயாராக இருக்க வேண்டும். நாளை மனம் திரும்பலாம், என்று தள்ளிப்போடும் மடமை, முட்டாள்தனத்திற்கு இன்று முடிவு கட்டியாக வேண்டும். கடந்த கால வாழ்வை எண்ணிக் கவலைப்பட்டு, எதிர்காலத்தை நினைத்து அச்சத்துடன் வாழ்வதை விட்டு, நிகழ்காலத்தில் நாம் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இருளின் ஆட்சிக்குரிய செயல்களான களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டை சச்சரவுகளை நாம் தவிர்க்க வேண்டும் (உரோ. 13:11).

இறுதியாக ஒளியின் படைக்கலன்களாக அன்பு, விசுவாசம். நம்பிக்கை ஆகிய கொடைகளை (1தெச.5:8) அணிந்து கொண்டு, (உரோ.13:14) நம்மைச் சந்திக்க வரும் இயேசுவோடு நாம் நம்மையே ஒன்றித்து, உறவை வளர்த்து அவரோடு பயணம் செய்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

எப்பொழுதும் விழித்திருப்போம்

நம் வீட்டிற்கு ஒரு புனிதரோ, புனிதையோ வருகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி வந்தால் நமது வீட்டைத் தூய்மையாக. சுத்தமாக வைத்துக்கொள்வோம் அல்லவா?

இன்னும் சில வாரங்களிலே புனிதர்களையும், புனிதைகளையும் படைத்த படைப்பின் தலைவர் கடவுள், இயேசுவின் உருவிலே நம்மைத் தேடி வரப்போகின்றார். அவர் தூய்மையே உருவானவர். அவரை வரவேற்க நமது உள்ளத்தையும், இல்லத்தையும் தூய்மையாக, சுத்தமாக வைத்துக்கொள்வோம்!

நமது மனத்தை, உள்ளத்தை, வாழ்க்கையை அழுக்காக்குவது எது? பாவம்!

பாவம் என்றால் என்ன? இலக்கைத் தவறவிடுவதற்கு அல்லது மறப்பதற்குப் பெயர்தான் பாவம்!

இலக்கு என்பது இறைவனால் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்! ஆக. குறிக்கோளை மறந்து, வழிதவறி நடப்பதற்கு, வாழ்வதற்குப் பெயர்தான் பாவம்!

செபத்திலும், தவத்திலும் ஈடுபட்டு தேர்ந்துதெளிதல் வழியாக (உரோ 12 : 1-2) நமது அழைத்தலின் தன்மைக்கு ஏற்றவாறு நமது இலக்கை, குறிக்கோளை நிர்ணயித்த பிறகு அதைநோக்கி நாம் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். இதோ ஒரு கதை!

ஞானம் தேடி இளைஞன் ஒருவன் இமயமலை நோக்கிப் பயணம் செய்தான்! அவன் கங்கை நதிக் கரையிலிருந்த ஒரு பாறையின்மீது அமர்ந்து தியானம் செய்தான்!

அப்போது கங்கை நதி அவனோடு பேசியது!

கங்கை அவனைப் பார்த்து, "உன் கண்ணோரத்தில் கங்கை எதற்கு? உன் முகத்தில் ஏனிந்த சோக ரேகைகள்?" என்றது.

அதற்கு அந்த இளைஞன், "நான் எடுக்கும் எந்த முயற்சியிலும் எனக்கு வெற்றி கிட்டுவதில்லை. முன்னேற்றம் என்ற சொல்லுக்கே என் வாழ்வில் இடமில்லை!" என்றான்.

அதற்குக் கங்கை நதி அவனைப் பார்த்து. "என்னைப் பார்! என் இலக்கு கடல்! கடலை அடையும்வரை என் பயணம் ஓயாது! என்னைச் சுற்றி எத்தனையோ அழகான செடிகள், கொடிகள், மரங்கள், மலர்கள்! எதையும் நான் பற்றிக்கொள்ள நினைப்பதில்லை! என் இலக்கான கடவை நோக்கி என் பயணம் தொடர்கின்றது! என்னைப் போல நீயும் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு உன் பயணத்தைத் தொடங்கு. உனக்கு வெற்றி கிடைக்கும்" என்றது!

அவனும் அவ்வாறே செய்தான்! தன் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயித்தான்! "இந்த இலக்கை அடையும் வரை நான் எதையும் திரும்பிக்கூட பார்க்க மாட்டேன்" என்று முடிவெடுத்தான்! அவன் பயணத்தில் வெற்றிபெற்றான்!

கயிற்றின்மீது நடக்கும் கலைஞனுக்கு இலக்கு எது? கயிற்றின் மறுபக்கத்தை அடைவது!

தூண்டில் போடுகின்றவனுக்கு இலக்கு எது ? தக்கை தண்ணீருக்குள் செல்லும்போது மீனை கரைக்குக் கொண்டுவருவது!

ஊர்தியை இயக்கும் ஓட்டுநருக்கு இலக்கு எது? சேர வேண்டிய ஊரை அடைவது!

கிறிஸ்தவர்களாகிய நமது இலக்கு எதுவாக இருக்க வேண்டும்?

இந்த கேள்விக்குப் புனித பவுலடிகளார் இன்றைய இரண்டாவது வாசகத்தில் பதில் கூறுகின்றார்! இருள் என்னும் பாவத்தை விட்டுவிட்டு பகல் என்னும் புண்ணியத்தை நமதாக்கிக்கொண்டு இயேசுகிறிஸ்துவை அணிந்துகொள்ள வேண்டும்! இதுவே கிறிஸ்தவ வாழ்வின் இலக்கு!

பாவத்தை விட்டுவிடும் வழிகளை. நன்னெறிகளை நமக்கு ஆண்டவர் கற்பிப்பார் (எசா 2 : 3).

நமது இலக்கை அடைய கயிற்றில் நடப்பவரைப் போல, தூண்டில் போடுகின்றவனைப் போல, ஊர்தி ஓட்டுநரைப் போல நாமும் விழிப்பாய் இருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி (மத் 24 : 42) எடுத்துரைப்பது போல எப்போதும் நாம் விழிப்பாயிருக்கவேண்டும்.
மேலும் அறிவோம்:

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார் (குறள் : 433).

பொருள் :
பழி பாவங்களுக்கு அஞ்சுபவர். தினையளவு குற்றத்தையும் பனையளவு பெரியதாகக் கருதி, அதனைச் செய்யாது தங்களைக் காத்துக்கொள்வர்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒரு மாணவன் தேர்வில் தூங்கிக் கொண்டிருந்தான். ஆசிரியர் அவனை எழுப்பிவிட்டு அவன் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டதற்கு அவன் கூறினாள்: "தேர்வில் கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால் முழிச்சிக்கிட்டு இருக்காதே' என்று அப்பாதான் சொன்னார். தேர்வில் கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால் மாணவர்கள் தூங்குகின்றனர். தேர்வு என்பது என்ன? அறிந்தும் அறியாததும். வாழ்க்கைத் தேர்வில் பல கேள்விகளுக்குப் பதில் தெரியாத மனிதர்கள் தூங்குகின்றனர். மனிதரின் வாழ்வு: "தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதி,"

இத்தகைய சூழலில் நாம் இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறோம். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து "விழிப்பாயிருங்கள்" (மத் 24:42) என்றும் "ஆயத்தமாய் இருங்கள்" (மத் 24:44) என்றும் அறிவுறுத்துகிறார். இன்றைய இரண்டாம் வாசகத்திலும் "உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது" (உரோ 13:11) என்கிறார் திருத்தூதர் பவுல்.

நாம் உறக்கத்திலிருந்து விழிக்க வேண்டும். "தூங்குகிறவனே. விழித்தெழு" (எபே 5:14), ஏனெனில் நாம் இரவின் மக்கள் அல்ல ஒளியின் மக்கள். நாம் பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடக்க வேண்டும். இருளின் செயல்களைக் களைந்துவிட்டுக் கிறிஸ்துவை அணிந்து கொள்ள வேண்டும். ஊனியல்பின் செயல்கள்: களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச் சச்சரவு என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் திருத்தூதர் பவுல் (உரோ 13:3), இந்த அருள்வாக்குத்தான் தூய அகுஸ்தினாரின் மனமாற்றத்திற்கு உந்துதலாக இருந்தது.

இன்றைய விளம்பர உலகம், ஊடக உலகம், திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி உலகம் மனிதர்களைக் குடிவெறியிலும் காமத்திலும் தள்ளிவிட்டுப் பணத்தைக் குவிக்கிறது. அந்தக் காலத்தில் திரைப்படங்களில் கதை இருந்தது, ஆனால் இக்காலத் திரைப்படங்களில் கதை இல்லை; சதைதான் இருக்கிறது. இதன் விளைவாக இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 'பாஸ்மார்க்” வாங்காவிட்டாலும் "டாஸ்மாக்கில் வேலை கிடைக்கிறது. பட்டதாரிகளாக மாற வேண்டிய இனைஞர்கள் பட்டைதாரிகளாக மாறிவருகின்றனர், பல்வேறு பால்வினை நோய்களுக்குப் பலிக்கிடாக்களாகி வருகின்றனர்.

காய்ச்சல் வரும். போய்விடும்; வயிற்று வலி வரும். போய்விடும்; காச நோய் வரும். போய்விடும்; ஆனால் ஒரு நோய் மட்டும் வந்தால் போகவே போகாது. அதுதான் 'எய்ட்ஸ்" என்னும் உயிர்க்கொல்லி நோய், இத்நோயைத் தடுக்க மனக்கட்டுப்பாடு தேவை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். எந்தவொரு தீமையையும், அது வருமுன்பே அதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், வைக்கோல் புல்லை நெருப்பு எரிப்பதுபோல அது நம்மை எரித்துவிடும் என்று எச்சரிக்கின்றார் வள்ளுவர்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போவக் கெடும். (குறள் 435)

*அரசர் ஏன் தள்ளாடித் தள்ளாடி வருகிறார்? ஏனெனில் அவர் போருக்குப் போகாமல் பாருக்குப் போனாராம்". இன்று அரசே 'பார்' வசதியுடன் மதுபானக் கடைகளை நடத்துகிறது. குடி குடியைக் கெடுக்கும் என்ற எச்சரிக்கையுடன் மதுபான விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. இந்நிலையில் குடிவெறியைக் குழிதோண்டிப் புதைக்கும்படி அறிவுறுத்துகிறார் பவுல். நோவா காலத்தில் வரப்போகும் வெள்ளப் பெருக்கைப் பற்றி அறியாத மக்கள் உண்டும் குடித்தும் வந்ததுபோலவே உலக முடிவில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போதும் மக்கள் உண்டு குடித்துக் களியாட்டம் புரிவர்; அப்போது கிறிஸ்து நினையாத நேரத்தில் வருவார் என்று இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து எச்சரிக்கிறார்.

வீட்டில் யார் கை ஓங்கும்? அப்பா கை ஓங்கும். அம்மா கை வீங்கும். குடிகார அப்பா அம்மாவை ஓங்கி அடிக்கிறார்; அம்மா கை வீங்குகிறது. குடிகாரக் கணவர்களால் பல பெண்கள் துன்புறுகின்றனர். அவர்களிடதிலிருந்து பெண்களைப் பாதுகாக்க "குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை" அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் சட்டத்தால் மனிதனைத் திருத்த முடியுமா? ஒவ்வொருவரும் தனக்குத்தானே சட்டமாக இருந்து, தன்னைத் தானே திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், "திருந்தாத சென்மம் இருந்தென்ன லாபம்?" என்று கூற வேண்டியுள்ளது.

மேலும், சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டுமென்றும் திருத்தூதர் பவுல் கேட்கின்றார். இன்று எங்கு பார்த்தாலும் சண்டையும் சச்சரவும், போரும் பூசலும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை இன்றைய முதல் வாசகம் கூறுகின்றது. நாடுகளுக்கிடையே போர் இருக்கக் கூடாது; போர்ப்பயிற்சியும் கூடாது. போர்க் கருவிகளை எல்லாம் விவசாயக் கருவிகளாக மாற்ற வேண்டும் (எசா 2:1-5). கிறிஸ்துதான் நமது அமைதி. அவர் யூத இனத்துக்கும் பிற இனத்துக்கும் இடையே நின்ற பகைமை என்னும் தடைச் சுவரைத் தகர்த்து இரு இனத்தையும் ஓரினமாக இணைத்துள்ளார் (எபே 2:13-16).

கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவுக்காகத் தயாரிக்கும் இக்காலத்தில் நாம் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்ப்போம். இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இரண்டு வாகனங்களின் ஓட்டுனர்களும் கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது அங்கு கூடிய கூட்டம் இரண்டு வாகனங்களில் இருந்தப் பொருள்களைச் குரையாடினர். நாம் மற்றவர்களுடன் சண்டை போடுவதால் நமது அமைதி கொள்ளையடிக்கப்படுகிறது. நாம் ஒருவர் மற்றவரை அழிக்கின்றோம். "நீங்கள் ஒருவர் ஒருவரைக் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால். ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை" (கலா 5:15).

விழித்தெழுவோம்; ஏனெனில் நமது மீட்பு அண்மையில் உள்ளது, ஊனியல்பின் இச்சைகளை அழித்துவிட்டு, கிறிஸ்துவையே அணிந்து கொள்வோம். இத்திருவருகைக் காலம் நமக்கு மீட்பின் காலமாக, மனமாற்றத்தின் காலமாக அமைவதாக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

விழித்திரு

இரண்டாம் உலகப் பெரும்போர் முடிந்த நேரம். ஜெர்மனி நாட்டு அதிபர் கொன்ராடு அடனாவர் வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களுக்கு உரையாற்றுகிறார்: “அழிவு, சிதைவு, இடிபாடுகளுக்கு இடையே நின்று கொண்டிருக்கிறோம். நாம் விழித்தெழும் நேரம் வந்து விட்டது. வீறுகொண்டு கரம் கோர்ப்போம். புதிய ஜெர்மனியைக் கட்டி எழுப்பக் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது..."

மக்கள் கூர்ந்து கேட்டனர். விழித்து எழுந்தனர். விளைவு? வளமான, செழிப்பான புதிய ஜெர்மனி.

திருவருகைக் காலத்தைத் தொடங்கும் போதே திருவழிபாட்டு முழக்கம் விழிப்பாயிருங்கள் என்பதுதான். காரணம்? “உறக்கத்தினின்று விழிதெழும் நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது" (ரோமை.13:11.)

போரினால் உண்டான பாதிப்பால் அச்சமும் அதிர்ச்சியும் கொண்ட ஜெர்மனி நாட்டு மக்களின் உள்ளத்தில் எத்தகைய உணர்வுகள் கிளர்ந்தெழுந்தனவோ அதே தாக்கத்துக்கு ஆளான இஸ்ரயேல் மக்களின் மன உணர்வுகளின் சித்தரிப்பே முதல் வாசகம்.

பபிலோனிய அடிமைத்தனத்துக்குப்பின் தாயகம் திரும்பிய நிலையில் அழிந்துபட்ட எருசலேமை, சிதைந்துவிட்ட திருக்கோவிலைக் கண்டு சிந்தையில் அமைதியிழந்து செல்வச் செழிப்பிழந்து இறைவழிபாட்டின் வளமை இழந்து வார்த்தைக்குள் அடங்காத வருத்தத்தை, சோகத்தை, ஏக்கத்தை வெளிப்படுத்தும் மன்றாட்டான புலம்பல்.

இந்த இழிநிலைக்கெல்லாம் தங்கள் பாவ வாழ்வே, இறைவனை விட்டு அகன்ற அவலமே காரணம் என்ற தன்னிலை உணர்வு. "நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம். எங்கள் தீச்செல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன". (எசாயா 64:6)

இந்தத் தன்னுணர்வுக்கிடையிலும் உடைந்து போன இதயத்தின் அடித்தளத்தில் நம்பிக்கை வேரற்றுப் போகவில்லை. ''ஆண்டவரே உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்ததேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எங்கள் நெஞ்சங்களைக் கடினப்- படுத்தியதேன்?" (எசாயா 63:17) என்று தங்கள் தவறுகளுக்கெல்லாம் கடவுளுக்குமே பங்கு உண்டு என்பது போலப் புலம்பி “நாங்கள் களிமண். நீர் எங்கள் குயவன்" (எசா.64:8) சீரழிந்த தன் வேலைப் பாடுகளைச் சீர்செய்ய இறைவனே இறங்கிவர உரிமையோடும் எதிர்பார்ப்போடும் கூடிய அழைப்பு.

-களிமண் தானாகக் குடமாக முடியுமா? வனைந்திடக் குயவன் அங்கே வரவேண்டாமா? கற்பாறை தானாகச் சிலையாக முடியுமா? செதுக்கிடச் சிற்பி அங்கே வரவேண்டாமா? பாவியான மனிதன் தன் சொந்த முயற்சியால் மட்டும் படைத்தவனைச் சென்றடைய முடியுமா? "நீர் வானத்தைப் பிளந்து (கிழித்து என்பது பழைய மொழிபெயர்ப்பு) இறங்கி வரமாட்டீரோ?" (எசா.64:1) இந்த இதய எழுச்சி, ஏக்கக்கதறல் இறைவன் எனக்குத் தேவை அதுவும் உடனடித் தேவை என்ற அவசர எதிர்பார்ப்புக் கலந்த தவிப்பு. திருப்பாடல் 144:5இல் கூட இதே துடிப்பின் வெளிப்பாடு: “ஆண்டவரே உம் வான்வெளியை வளைத்து இறங்கி வாரும்" இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தடையை அவரால் மட்டுமே தகர்க்க முடியும். நம்மால் இயலாது. நம்மால் முடிந்ததெல்லாம் ஓசோன் படலத்தில் ஒட்டைகளைப் போட்டதுதான்!

ஆண்டவர் வருவார். "இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்". (தி.ப.1:11) அதற்காக வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்பதா?

"விழிப்பாய் இருங்கள் ஏனெனில் வீட்டுத்தலைவர்... எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது'' (மாற்கு. 13:35)

சென்னையில் ஓர் அரசு அலுவலர். தன் ஸ்கூட்டரை வெளியே நிறுத்திவிட்டு மதிய உணவை முடித்து வெளியே வந்தவருக்கு ஒரே அதிர்ச்சி. ஸ்கூட்டரைக் காணோம். அங்குமிங்கும் தேடி அலைமோதிய அவர் சிறிது தொலைவில் ஸ்கூட்டரைப் பார்க்கிறார். மகிழ்ச்சியோடு அருகில் செல்கிறார். ஸ்கூட்டரில் ஒரு கடிதமும் 2 சினிமா டிக்கெட்டுகளும் இருந்தன. “ஐயா, எங்களை மன்னியுங்கள். ஓர் அவசர வேலைக்காக வண்டியை எடுத்துச் சென்றோம். சொல்லாமல் எடுத்துச் சென்ற குற்றத்துக்காக ரிசர்வ் செய்யப்பட்ட இந்த டிக்கெட்டுகளை வைத்துள்ளோம். உங்கள் மனைவியோடு இன்று மாலையில் படம் பார்த்து மகிழுங்கள்” என்பது கடித வாசகம். இரட்டிப்பான மகிழ்ச்சி உற்சாகத்தோடு திரையரங்கு சென்று திரும்பிய போது வீடே கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. விழிப்புணர்வைக் குலைக்க, கவனத்தைச் சிதறடிக்க, சாத்தான் எப்படியெல்லாம் திட்டமிடுகிறான். செயல்படுகிறான்.

விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார் குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்.

"சுதந்திரம் இருளில் வாங்கினோம். இன்னும் விடியவில்லை என்று யார் சொன்னது?

விடிந்துவிட்டது. இன்னும் நாம்தாம் விழித்தெழவில்லை நாளை என்பது விடியலில் அல்ல, விழித்தலில் உள்ளது”

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

முடிவை முழுமனதோடு ஏற்றுக்கொண்டால்...

வாழ்வின் முக்கியக் கேள்வியான முடிவைப் பற்றி - அது, உலக முடிவாயினும் சரி, நம் சொந்த வாழ்வின் முடிவாயினும் சரி – அதைப் பற்றி எண்ணிப்பார்க்க, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது. இன்று, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. ஒவ்வோர் ஆண்டும், திருவருகைக் காலத்துடன், ஒரு புதிய வழிபாட்டு ஆண்டைத் துவக்குகிறோம். திருவருகைக் காலம் என்றதுமே, கிறிஸ்மஸ் விழாவுக்குத் தேவையான ஏற்பாடுகள், களைகட்டத் துவங்கிவிடும். குழந்தை வடிவில் நம் இறைவன் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, உலகின் முடிவில் இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி (மத்தேயு 24: 37-44) நமக்குத் தரப்பட்டுள்ளது.

உலக முடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்ல முடியாது. நாளையே வரலாம்; அல்லது, நாலாயிரம் கோடி ஆண்டுகள் சென்று வரலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. எப்போது இந்த முடிவு வரும் என்பதும் நிச்சயமற்ற ஒன்று. நம் முடிவு எப்போது வரும் என்பதில் நாம் நேரம், சக்தி இவற்றைச் செலவிடாமல், நம் முடிவு எப்படி இருக்கப்போகிறது, அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்தால் பயன் உண்டு. எதிர்பாராத நேரத்தில் வரும் இந்த முடிவைச் சந்திக்க, அந்த முடிவு நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க நாம் எப்படி நம்மையே தயாரித்து வருகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க இன்றைய நற்செய்தி நம்மைச் சிறப்பாக அழைக்கிறது. நாம் சந்திக்கச் செல்வது, நமது அன்புத் தந்தையை, தாயை, அல்லது உற்ற நண்பரை என்ற கண்ணோட்டம் இருந்தால், இச்சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்போம். நாம் சந்திக்கப் போவது, நம்மைத் தீர்ப்பிடவிருக்கும் ஒரு நீதிபதியை என்ற கண்ணோட்டம் இருந்தால், இச்சந்திப்பு, பயத்தையும், கலக்கத்தையும் உருவாக்கும்.

நகைச்சுவை உணர்வுடன் எப்போதும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் புனித பிலிப் நேரி அவர்கள், ஒருநாள், நண்பர்களுடன் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சாவைப் பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப்போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப் ஒரு நிமிடம் சிந்தித்தார். பின்னர், ஒரு புன்னகையுடன், தன் நண்பரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்" என்றார்.

மரணத்தை, பயங்கரமான ஒரு மாற்றமாக, முடிவாகப் பார்ப்பவர்கள், அதைக் கண்டு பயப்பட வேண்டியிருக்கும். காரணம்? அவர்களது வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கலாம். அம்முரண்பாடுகளையெல்லாம் சரிசெய்துவிட்டு, மரணத்தைச் சந்திக்க அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்வு முழுவதையும், நல்லவிதமாக, பொறுப்புணர்வுடன் வாழ்பவர்களுக்கு, வாழ்ந்தவர்களுக்குச் சாவு எவ்வகையிலும் பயத்தை உண்டாக்காது என்பதற்கு, புனித பிலிப் நேரி அவர்கள், நல்லதோர் எடுத்துக்காட்டு. சாவின் வழியாக, தன்னைச் சந்திக்கப்போவது, அல்லது, தான் சென்றடையப்போவது, இறைவன்தானென, ஆழமாக உணர்ந்தபின், பயமோ, பரபரப்போ தேவையில்லையே. புனித பிலிப் நேரியைப் பொருத்தவரை, நாம் இப்படி கற்பனைசெய்து பார்க்கலாம். நண்பர் சொன்னதுபோலவே, சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது அவருக்குச் சாவு நேரிட்டால், மறு வாழ்வில், அந்த இறைவனுடன், அல்லது, வானகத் தூதர்களுடன் தன் விளையாட்டைத் தொடர்ந்திருப்பார், பிலிப்.

ஜான் வெஸ்லி என்பவர், 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை. கிறிஸ்தவ வாழ்வு என்பது, பொறுப்புடன் சரியானக் கணக்கை இறைவனிடம் ஒப்படைக்கும் ஒரு பணி என்ற எண்ணத்தை, இங்கிலாந்து மக்கள் மத்தியில் விதைத்தவர் இவர். “இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று இவரிடம் ஒருவர் கேட்டபோது, இவர் சொன்ன பதில் இதுதான்: "மாலை நான்கு மணிக்கு, நான் வழக்கம்போல் தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு, நோயுற்றிருக்கும் திருமதி பிரவுன் அவர்களை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8 மணிக்கு, என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் படுக்கச் செல்வேன்... விழித்தெழும்போது, என் இறைவன் முகத்தில் விழிப்பேன்" என்று சொன்னாராம்.

அமைதி நிறைந்த உலகை ஒரு கனவாக, கற்பனையாகக் கண்டவர், இறைவாக்கினர் எசாயா. அவரது கற்பனை வரிகள், இந்த ஞாயிறன்று, நமது முதல் வாசகமாக ஒலிக்கின்றன:
எசாயா 2 : 2,4-5
இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்... மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்... அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

இறைவாக்கினர் எசாயாவின் கனவு, உள்ளத்தை உயர்த்துகிறது. அதே வேளையில், நம்முன் சவால்களையும் வைக்கின்றது. இன்றைய உலகின் பல பகுதிகளில் நிலவும் மோதல்களைக் காணும்போது, 'துண்டு, துண்டாக நிகழும் மூன்றாம் உலகப்போர்' என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய கருத்து, நினைவில் எழுகிறது.

நமக்கு இன்று வழங்கப்பட்டுள்ள மூன்று வாசகங்களும் முடிவு காலத்தைப் பற்றிச் சொல்கின்றன. அழிவும், இருளும் இருக்கும் என்று சொன்னாலும், நம்பிக்கையுடன், விழிப்புடன் இதை எதிர்நோக்கும்படி மூன்று வாசகங்களும் சொல்கின்றன. ஒவ்வொரு வாசகத்தின் முடிவிலும் கொடுக்கப்பட்டுள்ள வரிகள் நம் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வரிகள்:
யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள், நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம். (எசாயா 2: 5)
இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள். (உரோமையர் 13 : 14)
ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். (மத்தேயு 24: 44)
போர்களாலும், சுற்றுச்சூழல் சீரழிவாலும் காயப்பட்டிருக்கும் இவ்வுலகிற்கு, நம்பிக்கை தரும் செய்திகள் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன. இத்திருவருகைக் காலத்தில், நம்மால் இயன்றவரை, நம்பிக்கை செய்திகளைப் பகிர்ந்துகொள்ள முயல்வோம். வாள்கள், கலப்பைக் கொழுக்களாக மாறும் என்றும், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது என்றும் நம் வருங்காலத் தலைமுறையின் உள்ளங்களில் நம்பிக்கையை வளர்க்க முயல்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (எசா. 2:1-5)

இறுதிநாள் அல்லது ஆண்டவரின் நாளைக் குறித்து எசாயா கண்ட காட்சி இன்றைய முதல் வாசகமாக அமைகின்றது. இந்த வாசகத்தின் பின்னணி என்னவென்று காண்போம். மக்களின் பாவ வாழ்க்கை, வேற்று தெய்வ வழிபாடுகள் போன்ற தீமைகள் நிலவி இருந்தன. யார் பெரியவர் யாவே இறைவனா அல்லது பிற கடவுள்களா? என்ற சந்தேகம்; இறை கட்டளைகளைப் புறக்கணித்து வாழ்ந்த வாழ்க்கை முறை; பகை நாட்டு அரசுகளின் தலையீடுகளால் உள்நாட்டு அரசியல் குழப்பம் போன்றவைகளாகும். இறைவாக்கினர் எசாயா இன்றைய வாசகத்தின் வழியாக இறுதி நாளைக் குறித்து அறிவிக்கிறார். இறுதி நாளில் வேற்று இனத்தார் அனைவரும் யாவே இறைவனை தேடி வருவர் என்றும், யாவேயின் கட்டளைகளை கடைபிடிப்பர் என்றும், பிற தெய்வங்களைவிட யாவே இறைவன் பெரியவர் என்பதையும் தெளிவுப்படுத்துகிறார். அதன் வழியாக இஸ்ரேயல் மக்களை யாவே கடவுளின் கட்டளைகளை ஏற்று வாழ அழைப்பு விடுக்கிறார். இறுதிநாளில் இறைவன் வழக்குகளை தீர்ப்பார். போர்கள் ஓயும், அமைதி நிலவும் என்று உறுதி கொடுக்கிறார்.

இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 13:11-14)

இவ்வாசகமானது தூய பவுல் உரோமையருக்கு எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் பின்னணியா தெனில் பவுல் ஆண்டவரின் இரண்டாம் வருகை மிகவிரைவில் வரும் என்று எதிர்பார்த்தார், அதற்காக இறைமக்களை தயாரிக்க அழைப்பு விடுக்கிறார். இருளின் செயல்கள் பாவ வாழ்க்கையையும், ஒளியின் செயல்கள் தூய வாழ்க்கையையும் குறித்து காட்டுகின்றன. இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு ஒளியின் ஆட்சிக்குரிய படைகலனாம் இயேசுவை அணிந்து இயேசுவின் வருகைக்குத் தயாராக வாழ அழைப்பு விடுக்கிறார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 24:34-44)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம் பெறும் செய்திகள் இறைமகன் இயேசுவின் கடைசிகட்ட நாட்களில் போதித்த செய்திகளாகும். மத்தேயு 24-ஆம் அதிகாரத்தின் தொடக்கம் முதல் நிறைவுகாலம் அல்லது இறுதிநாள் குறித்து போதிக்கிறார். எருசலேம் கோவிலின் அழிவு, வரப்போகும் பெரும் துன்பம், மானிட மகனின் 2-ஆம் வருகைகுறித்து போதிக்கும் இறைமகன் அத்திமர உவமை வழியாக 2-ஆம் வருகையைத் தெளிவுப்படுத்துகிறார். இருந்த போதிலும் இன்றைய நற்செய்தியின் வழியாக ஆண்டவரின் நாள் குறித்தும், நிறைவு காலம் குறித்தும் தந்தை இறைவனை தவிர யாருக்கும் தெரியாத நிலையைச் சுட்டிக் காட்டுகிறார். ஆகவே ஆண்டவரின் நாள்குறித்து விழிப்பாய் இருக்க இறைமகன் இயேசு அழைப்பு விடுக்கிறார்.

மறையுரை

➤என்னங்க பொண்ணு கல்யாணத்திற்கு ஒரு மாசம் தான் இருக்கு... இன்னும் கல்யாணப்புடவை எடுக்கல, இன்னும் பத்திரிக்கை வைக்கல, வீட்டுக்கு வெள்ளை அடிக்கல... சட்டுபுட்டுனு வேலையை முடிக்கப் பாருங்க இது ஒரு மகளின் திருமணத்திற்க்கான தயாரிப்பு.
➤தலைவர் வருவதற்கு இன்றும் ஒரு வாரம் தான் உள்ளது. நீ ஊர் எல்லாம் போஸ்ட்டர் அடிச்சு ஒட்டுவது, மாலை வாங்குவது, ஊர் எல்லையிலிருந்து தலைவரை அழைச்சிட்டு வரதெல்லாம் உன் வேலை -இது ஒரு அரசியல் தலைவரின் வருகைக்காக ஒரு தொண்டனின் தயாரிப்பு.
➤10 மாதம் தன் வயிற்றில் கருவையும், அந்தக் கருவின் வருங்காலம் குறித்த கனவை மனதிலும் தாங்கிக் கொண்டு காத்திருப்பவள் நிறைமாத கர்ப்பிணி
➤கையில் உள்ள மலர் கொத்துக்களையும் தன் மனதையும் காதலி மடியில் இறக்கிவைக்க காதலியின் வரவை நோக்கி காத்துக்கிடப்பவர் ஒரு காதலன்.
➤எங்கள் வாழ்வு விடியாதா? எங்கள் வீட்டில் ஒளி எறியாதா? நாடு திரும்பமாட்டோமா? எங்கள் பூமியில் வெள்ளை பூக்களே மலராதா? எப்போது யுத்தம் நிற்கும், ஈழத்தில் அமைதி பிறக்கும் என்று கண்விழித்து காத்துக்கிடப்பவர்கள் இடம்பெயர்ந்த ஈழத்து மக்கள். இவ்வாறு மனிதன் தன் அன்றாட வாழ்வில் பலவற்றிக்காகத் தன்னையே தயாரித்துக்கொண்டும் காத்துக் கொண்டும் இருக்கிறான்.

இன்று திருச்சபையும் கிறிஸ்து இயேசு மண்ணிற்கு வந்த கிறிஸ்து பிறப்பு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடவும், நாம் எதிர் நோக்கி இருக்கும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு நம்மை தயாரிக்கவும் அழைப்பு விடுக்கின்றது. இதற்காகத் திருச்சபை திரு வழிப்பாட்டு கால அட்டவணையில் 'திருவருகை' காலம் என்று முதல் நான்கு வாரங்களை அர்ப்பணித்து ஆண்டவரின் வருகையை எதிர் நோக்கி இறைமக்களை தயாரிக்க அருமையான வாய்ப்பை தருகின்றது. இத்தகைய தயாரிப்பானது 4-5-ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் துவங்கியது. கீழை நாட்டு திருச்சபைகள் ஆண்டவரின் பிறப்பு விழாவை ஜனவரி 6-ஆம் நாள் திருக்காட்சிப் பெருவிழாவன்று சிறப்பித்ததோடு அன்றைய நாளைத் திருமுழுக்கு நாளாகக் கொண்டாடினர். ஆகவே திருமுழுக்கு பெறுவோர் தங்களை தயாரிக்க மேற்கொண்ட பக்தி முயற்சியும், ஆண்டவரின் இரண்டாம் வருகையை எதிர் நோக்கி மேற்கொண்ட பக்தி முயற்சியும் பின் நாட்களில் திருவருகை காலமாக உருவெடுத்தன. எனவே திருவருகைக்காலம் என்பது 'எதிர்நோக்கின்' அல்லது 'நம்பிக்கையின் காலம்' மகிழ்ச்சியின் காலம். இந்தத் திருவருகைக்காலம் இரண்டு பாகங்களாக பிரிந் துள்ளது. திருவருகைக்கால முதல் ஞாயிறு முதல் டிசம்பர் 16 வரை இயேசுவின் இரண்டாம் வருகையையும், டிசம்பர் 17 முதல் 24 வரை கிறிஸ்துவின் பிறப்பு என்னும் மறையுண்மையையும் தியானிக்க அழைக்கப்படுகிறோம்.

இன்றைய மூன்று வாசகங்களும் இறைமகனின் வருகைக்காக இறைமக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், இறைமகனின் வருகையை எதிர் நோக்கி வாழ வேண்டும் என்ற கருத்துக்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு மனுமகனின் இரண்டாம் வருகையைக் குறித்து 'விழிப்பாய் இருக்க' அழைப்பு விடுக்கிறார். விழிப்பாய் இருத்தல் என்பது தயாராக இருத்தல், எதிர் நோக்கி இருத்தல், காத்திருத்தல், மனம் தெளிந்திருத்தல், மனம் திறந்திருத்தல் என்றும் பொருள்படும்.

இன்றைய நற்செய்தியில் இயேசு இறைமகனின் வருகையை திருடனுக்கு ஒப்பிடுகிறார். ஏனென்றால் திருடனைப் போலவே
1) இறைமகன் வருகின்ற கால நேரமானது கணிக்க இயலாது. எப்போது வேண்டுமானாலும் வரலாம். இரவிலும் வரலாம், பகலி லும் வரலாம்.
2) இறைமகன் வருகின்ற வழியும் தெரியாது, போகின்ற வழியும் தெரியாது.
3) இறைமகன் வருகின்ற உருவம் தெரியாது. உருவம் மாறி வரலாம். ஆகவே விழிப்பாய் இருங்கள் என்கிறார் இயேசு.

விழிப்பாய் இருத்தலில் மூன்று நிலைகள்

ஒரு மனிதனின் விழிப்பு நிலையில் 3 நிலை உண்டு
1) தன்னைக் குறித்த விழிப்பு,
2) சக மனிதன் குறித்த விழிப்பு
3)இறைவன் குறித்த விழிப்பு

1. தன்னைக் குறித்த விழிப்பு

தன்னை குறித்த விழிப்பு நிலை என்பது தன்னையே அறிதல், அல்லது தன்னை குறித்த ஒரு தெளிவோடு இருத்தல் ஆகும். இதைத்தான் 'உன்னையே நீ அறிந்து கொள்' என்று கிரேக்க தத்துவ ஞானி கூறுகிறார். நான் யார்? என் பலம் என்ன? பலவீனம் என்ன? வாழ்தலின் அர்த்தம் என்ன? குறிக்கோள் என்ன? போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில் இருக்கும். சுயவிழிப்பு கொண்டவர் செய்கின்ற செயலை முழு ஈடுபாடோடு செய்வார், தன்னை தன்னாளு -கைக்குள் வைத்திருப்பார். இவ்வாறு தன்னை குறித்த விழிப்புணர்வு சகமனிதனைக் குறித்து வழிப்புணர்வு பெற வழிவகுக்கிறது.

2. சக மனிதன் குறித்த விழிப்பு

தன்னை குறித்த விழிப்பு பெறும்போது நாம் சகமனிதர்களை குறித்தும், சகமனிதனுக்கும், நமக்கும் இடையேயான தொர்பு, உறவு, பிணைப்பு குறித்தும் விழிப்பு பெற முடிகிறது. சகமனிதனும் இறைவனின் சாயல் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.

3. இறைவன் குறித்த விழிப்பு

இதுதான் ஒருவன் தன்னை குறித்தும், சகமனிதனை குறித்தும் விழிப்பு அடைய அடிப்படையாய் இருக்கின்றது. இறைவன் யார்? தனக்கும் இறைவனுக்கும், படைப்பு பொருட்களுக்கும் இடை யேயுள்ள தொடர்பு என்ன? என்று தெளிவுபடுத்துகின்றது. ஒவ்வொரு மனிதனும் நான்கு முறை பிறக்கிறார்கள். கருவாகும்போது முதல் பிறப்பு, கருவறையைவிட்டு வெளியேறும்போது இரண்டாம் பிறப்பு, தன்னையே உணர ஆரம்பிக்கும்போது மூன்றாம் பிறப்பு, உணர்ந் தைைத அடைவது அல்லது விழிப்புநிலை அடைவது 4-ஆம் பிறப்பு, ஒருவன் விழிப்பாய் இருக்கும்பொழுது தன்னில் மட்டுமல்ல, பிறரிலும் ஏன் இயற்கையிலும் இறைமையை காண இயலும்.

"காற்றிலும் இறைமை கடலிலும் இறைமை
மொட்டிலும் இறைமை முள்ளிலும் இறைமை
ஒளியிலும் இறைமை உளியிலும் இறைமை” காண இயலும்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு இறைமகன் இயேசு இந்த மண்ணில் பிறந்தபொழுது நாம் இருக்கவில்லை. இன்று அன்றாட நிகழ்வுகளின் வழியாகவும், சக மனிதர்கள் வழியாகவும், இறைவனின் படைப்புக்கள் வழியாகவும் இறைவன் நம்மைச் சந்தித்துக் கொண்டி ருக்கிறார். நாம் இறைவனை கண்டு கொள்கிறோமா...

"எங்கே இரண்டு மூன்று பேர் என் பெயரின் பொருட்டு ஒன்றாக கூடியிருக்கிறீர்களோ அங்கே அவர்களிடையே நானிருக்கிறேன் (மத்தேயு 18:20) என்று சொன்ன ஆண்டவர் இயேசு இன்று திருச் சபை வழியாகவும், திருவருட்சாதனங்கள், திருவிவிலியம், திருப்பணி யாளர்கள் வழியாகவும் தன்னை பிரசன்னப்படுத்திக் கொண்டிருக் கிறார். நாம் அவரைக் கண்டு கொள்ளும் அளவிற்கு விழிப்பாய் இருக்கிறோமா?

"சின்னஞ்சிறிய சகோதரர்களுக்கு நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்" என்ற இறைமகன் சகமனிதர்கள் வழியாக வும், இறைவனின் படைப்புப் பொருட்கள் வழியாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாம் இறைமகனை கண்டுகொள் ளும் அளவிற்கு விழிப்பாய் இருக்கிறோமா?

பிற மறையுரைக் கருத்துக்கள்

🕇மக்களினங்களை ஆண்டரின் மலையை நோக்கி வருவார்கள். எசா. 2:2 ஏனெனில் ஆண்டவரின் வருகை அனைவருக்குமானது.
🕇 ஆண்டவர் ஒளியில் நடப்போம் எசா. 2:5 - ஒளியின் ஆட்சிக்குரிய படைகலன்களை அணிவோம் (உரோ. 13:13). நல்வாழ்வு, மனமாற்றம் தயாரிப்பின் அடையாளம்.
🕇 இரவு முடிகிறது பகல் விடிகிறது. கிறிஸ்துவின் பிறப்பு (உரோ.13:12). ஒளியாம் இயேசுவை ஏற்றுக் கொள்ள இருளின் செயல்பாடுகளை விட்டொழிப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருவருகைக் காலம் முதலாம் ஞாயிறு

இன்று புதியதொரு திருவழிபாட்டு ஆண்டைத் தொடங்குகின்றோம். இன்றைய வாசகங்கள் எல்லாம் காலத்தைப் பற்றிப் பேசுகின்றன. எசாயா இறுதி நாள்களில், மெசியாவின் காலத்தில் நிகழ இருப்பன பற்றி விவரிக்கின்றார். பவுலடியார் உரோமையருக்கு 'இறுதிக் காலம் இதுவே' என்று கூறி இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார். இயேசு இன்றைய நற்செய்தியில் மானிட மகனின் வருகையின் காலத்தைப் பற்றிப் பேசுகின்றார். இதையெல்லாம் வாசிக்கின்ற நமக்கு எது இறுதிக்காலம்? அதுவந்துவிட்டதா?வர இருக்கின்றதா? அப்படியானால் எப்போது வரும்? அதற்கான அறிகுறிகள் எவை? அதற்காக நாம் ஏதாவது தயாரிப்புச் செய்ய வேண்டுமா? அவை எவை? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இக்காலங்களில் புதிது புதிதாய் எழும்புகின்ற 'சபை'களும் 'போதகர்களும்' விதவிதமான விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் தந்து மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இறுதிக் காலம் அல்லது நிறைவுக்காலம் பற்றிய விவிலியப் புரிதல் என்ன? இன்னும் குறிப்பாக இன்றைய நற்செய்திப் பகுதியின் வழி மத்தேயு நற்செய்தியாளர் கூற வருகின்ற நிறைவுக்காலம் பற்றிய செய்தி என்ன என்று மட்டும் இவண் காண்போம்.

நிறைவுக் காலம்பற்றிய விவாதம்

தொடக்கக் கால யூதக் கிறிஸ்தவத்தில் இறையரசு பற்றிய விவாதம் மானிட மகனாகிய இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றியதாகவும் இருந்தது. மத்தேயு மானிட மகனின் இரண்டாம் வருகையைப் பற்றிய விவாதத்தை இந்த அதிகாரத்தின் பல இடங்களில் எழுப்புகின்றார் (காண். மத் 24:3, 27, 37, 39). இந்த விவாதத்தில் மிக முக்கியமான ஓர் அங்கம், உலக முடிவுபற்றிய சரியான நேரத்தைக் கணித்துக் கூறுவதாகும். இத்தகைய ஒரு முயற்சி தானியேல் காலத்திலிருந்தே காணக் கிடக்கின்றன (காண். தானி 7:25; 8:13; 9:27; 12:7 12:11, 12). இவ்வாறு இறுதிக் கால "கால அட்டவணை" ஆதித் திருச்சபையின் காலத்தில் அனைவருக்கும் அறிமுகமாயிருந்தது. மக்களிடையே இப்படியொரு போக்கு போய்க் கொண்டிருக்கின்ற வேளையில் இதற்கு எதிரான ஒரு போக்கும் தொடக்கக் காலத்தில் நிலவியிருந்தது. அதாவது இறுதிக் காலத்தைப் பற்றி இரண்டாம் வருகை அல்லது உலகு முடிவு ஆகியவற்றை சந்தேகிக்கின்ற, புறந்தள்ளுகின்ற ஒரு போக்கு. இதைப் பேதுருவின் இரண்டாம் மடல் இவ்வாறு பதிவு செய்கின்றது, "இறுதிக் காலத்தில் ஏளனம் செய்வோர் சிலர் தோன்றி தங்கள் சொந்த தீய நாட்டங்களுக்கேற்ப வாழ்ந்து உங்களை எள்ளி நகையாடுவர். அவர்கள், 'அவரது வருகையைப் பற்றிய வாக்குறுதி என்னவாயிற்று, நம் தந்தையரும் இறந்து போயினர்; ஆயினும் படைப்பின் தொடக்கத்தில் இருந்ததுபோல எல்லாம் அப்படியே இருக்கின்றனவே' என்று சொல்லுவார்கள்" (2 பேது 3:3-4). ஆக இரண்டாம் வருகை, நிறைவுக் காலம்பற்றிய துல்லியமான வரையறைக்கான முயற்சி ஒருபுறமும், அதை எள்ளி நகையாடுகின்ற போக்கு மறுபுறமும் இருந்த சூழலில் மத்தேயுவின் நிலைப்பாடு என்ன என அறிந்து கொள்ள முயல வேண்டும். இந்தச் சூழலில் மத் 24:32-51 எனும் இந்த நீண்ட பகுதியை வைத்துப் பார்க்க வேண்டும்.

மத்தேயுவின் எதிரிகளின் நிலைப்பாடு

ஏற்கெனவே யூத சமயத்தில் இருந்த இறுதிக்காலம் பற்றிய கருத்துக்களோடு (காண். தானியேல்) கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றிய கருத்தும் உடன் சேர்க்கப்பட்டது. இதற்கு எதிராக மத்தேயுவின் யூத எதிரிகள் மத்தேயு கால கிறிஸ்தவர்களின் நம்பிக்கையில் குறைகண்டு அவர்களைக் கேலி செய்திருக்க வேண்டும். அவர்களின் வாதப்படி "கிறிஸ்தவர்களே நீங்கள் இறுதிக்காலம் பற்றிய கருத்துடன் இயேசுவின் இரண்டாம் வருகையையும் இணைத்து விட்டீர்களே! அவர் எப்போது வருவார்? இந்தத்தலைமுறையிலா, இதோ இந்தத் தலைமுறை கடந்து போகின்றதே! இவையெல்லாம் நம்பும்படி இல்லையே” என்று அவர்கள் குறைகூற வாய்ப்பிருந்தது. இத்தகு சூழலில் உண்மையான கிறிஸ்தவர் இறுதிக்காலம் பற்றி என்ன நம்ப வேண்டும், அவர்கள் இதுகுறித்து என்ன செய்ய வேண்டும். எத்தகைய மனநிலை கொண்டிருக்க வேண்டும் என்பதையெல்லாம் இயேசுவின் வார்த்தைகளைக் கொண்டு மத்தேயு விளக்குகின்றார்.

மத்தேயுவின் நிலைப்பாடு

பாரம்பரியமாகக் கிறிஸ்தவர்கள் இறுதிகாலம் பற்றி நம்பியவைகளை மத்தேயுவும் வழி மொழிகின்றார். அதாவது மானிட மகனின் உடனடி வருகை, அதற்கான அடையாளங்களை வலியுறுத்துகின்ற அதே வேளையில் (காண். மத் 24:32-34), அந்த நாளைப் பற்றியும், நேரத்தைப் பற்றியும் துல்லியமாக வகுத்து "கால அட்டவணையிட்டுக்' கூற முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றார் (காண். மத் 24:36): "அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது"). இந்நிலையில் கிறிஸ்தவர் கொண்டிருக்க வேண்டிய மனநிலையைத்தான் இன்றைய நற்செய்திப் பகுதி முழுவதும் விவாதிக்கின்றது. எனவே மத்தேயுவின் நிலைப்பாடு இவ்வாறு அமைகின்றது, “இயேசுவின் இரண்டாம் வருகை நிச்சயம் நடக்கும் (காண். மத் 24:35); ஆனால் அவரது வருகை எதிர்பாராமல் திடீரென நிகழும். இதற்கு நோவா காலத்து வெள்ளப்பெருக்கு உதாரணமாகக் காட்டப்படுகின்றது (காண். மத் 24:37-39). இந்த வருகையின்போது மக்கள் தீர்ப்பிடப்பட்டு நல்லவர், தீயவர் எனப் பிரிக்கப்படுவர் (காண். மத் 24:40-41). இவற்றையெல்லாம் சரியாக எதிர்கொள்ள, சந்திக்க, கிறிஸ்தவர்களுக்குக் கூறப்படும் அறிவுரை "விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவாரென உங்களுக்குத் தெரியாது” (வச. 42). இத்தகைய விழிப்பாயிருப்பது எப்படி என்பதை விளக்க இரு உவமைகள் வீட்டுத் தலைவரும் திருடனும், (வச 43-44); இருவகை பணியாளர் (வச 45-51) ஆகியவை தரப்படுகின்றன. எனவே இரண்டாம் வருகையின் தீர்ப்பு விழிப்பாயிருப்பதையும், அவரவர் பணியைப் பொறுப்புடன் செய்வதையும் கொண்டே அமையும் என்பதை இவ்வதிகாரத்தின் இறுதி உவமையும் இறுதி வசனமும் குறிப்பிடுகின்றன.

இன்றைய கால கட்டத்திலும் இந்த 'இறுதிக் காலத்தைப்' பற்றிப் பலர் பலவிதமாகக்கூறி நம்மைக் குழப்பத்திலும், அச்சத்திலும் ஆழ்த்துகின்றனர். நற்செய்தியில் இயேசுவின் போதனை தெளிவாய் உள்ளது. இறுதி வருகை உறுதி, நிச்சயம்; அப்போது தீர்ப்பு உள்ளது என்பதும் உறுதி; அதை எதிர்கொள்ள விழிப்போடு அவரவர் கடமைகளைச் சரிவரச் செய்வதே சரியான அணுகுமுறை. இந்த மனநிலையுடன் எதிர்வரும் திருவருகைக் காலத்தைச் சந்திப்போம். இயேசுவின் வருகைக்கு நம்மைத் தயாரிப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருவருகைக் காலம் - முதல் ஞாயிறு முதல் ஆண்டு

முதல் வாசகம் : எசா 2 : 1-5

அமைதி தருவார் மெசியா

இன்று வாசிக்கப்படும் இவ்வாசகம் பபிலோனியப் படையெடுப்பால் எருசலேம் அழிவுற்றபின் (கி.மு. 587) எழுதப்பட்டது. புதிய எருசலேம். அதனின்று பிறக்கும் சமாதானம் ஆகியவை பற்றி இங்கு விவரிக்கிறார். அமைதியும் சமாதானமும் நிரம்பிய புத்துலகப் படைப்புக்கு மேற்கோளாக, ஐக்கிய நாடுகளின் சபை, எசா. 2: 4-ஐச் சுட்டிக்காட்டுகிறது. “அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள் களாகவும் அடித்துக்கொள்வார்கள். ஓர் இனத்தாருக்கு எதிராக வேறோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப் பயிற்சி பெறமாட்டார்கள்” (மிக்கா இறைவாக்கினர் 4: 1-4-ம் எசாயா 2:1-5-ம் ஏறத்தாழ ஒரே சொற்களை உடையன).

மீட்பு அளிப்பார் மெசியா

இயேசுவின் வருகைக்காகக் காத்திருக்கும் திருச்சபை புதிய எருசலேமை நம் கண்முன் வைக்கிறது. இங்கு "ஆண்டவரின் கோயில் அமைந்துள்ள (சீயோன்) மலை, "ஆண்டவரின் மலை", "யாக்கோபின் கடவுளது கோயில்", “சீயோன்”, என்று எருசலேம் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இஸ்ரயேலருக்கு (நமக்கும்) மீட்பு இறைவனிடமிருந்தே, அவர் வதியும் "சீயோன் மலையிலிருந்தே” வருகிறது. "மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்தினேன்; 'உதவி எனக்கு எங்கிருந்து வரும்?' என்றேன்" (திபா 121:1) என்ற வினாவுக்குத் திருப்பாடல் ஆசிரியர், "உதவி எனக்கு ஆண்டவரிடம் இருந்தே வரும்" (திபா 121:2) என்று பதில் கூறியதுபோல, "சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிப்படும்" "எருசலேமிருந்தே ஆண்டவர் வாக்குப் புறப்படும்" என்று கூறி இறைவன் தரும் மீட்பை நம்பிக்கையுடள் எதிர்பார்க்க எசாயா அழைக்கிறார்.
"நம்பி னார்க்கருள் செய்யும் அந்தணர்" நம் இறைவன். -சுந்தரர் தேவாரம்
ஆம், திருவருகைக் காலம் நம்பிக்கைக் காலம்.

அனைவருக்கும் உண்டு மீட்பு

இறைவன் அளிக்கும் இம்மீட்பு தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேலுக்கு மட்டுமன்று; புறவினத்தாருக்கும் இதில் பங்குண்டு. "மக்களினங்கள்” "பலநாட்டு மக்கள்" அனைவரும் இறைவனிடம் வந்து அவருடைய வழிகளைக் கற்றுக்கொள்வர். இறைவனும் இஸ்ரயேலருக்குச் செய்தது போன்று, இவர்களுக்கும் நீதியும் அமைதியும் சமாதானமும் வழங்குவார். கிறிஸ்து தமது பிறப்பால் கொண்டு வந்த சமாதானம் (லூக் 2:14) கிறிஸ்த வர்களுக்கு மட்டுமே உரிய தனியுடைமையன்று; அனைவருக்குமுரிய அருட்கொடை. எனவே, திருவருகைக் காலத்தில் நமது செபங்களிலும் தியானங்களிலும் பிற மக்களின் மீட்பு, சமூக நீதி, உலக அமைதி ஒரு முக்கிய இடம் பெற வேண்டும்.

செபம், தவம், அன்பு செய்வோம்

“உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக" (லூக் 2:14) என்று இயேசுவின் பிறப்பின்போது விண்ணவர் திரள் பாடியது. பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, மக்களிடை நீடிய அமைதியே இறைவனின் திட்டமாகும். அமைதியில்லா உலகு அழிந்துவிட்ட உலகு. அமைதியில்லா உள்ளம் அழிந்துபட்ட உள்ளம். இறைவனே தரும் இவ்வமைதியை அடைய “ஆண்டவரின் மலைக்கு ஏறிச்செல்ல வேண்டும்"; "ஓடிச் செல்ல வேண்டும்."ஆம், விடாமுயற்சி, (செபம், தவம், ஒறுத்தல், அன்பு ஆகியவை) தேவை.

"செப்புவதெல் லாம்செபம் நான் சிந்திப்ப தெல்லாம்நின்
ஒப்பில் தியானமென ஒர்ந்தேன்; பராபரமே!" - தாயுமானவர்

நம்மிடமுள்ள வாள்கள், ஈட்டிகள் ஆகிய சுயப்பற்று, அநீதியான வாழ்வு, தீய குணங்கள் முதலியவற்றை அடித்து ஒடுக்க வேண்டும். கலப்பைக் கொழுக்கள், அரிவாள்கள் ஆகிய பிறருக்கு நன்மை பயக்கும் அன்பு, நீதி, நேர்மையான வாழ்வு இவற்றைப் பேணி வளர்க்க வேண்டும். அப்போது தான் நாம் ஆண்டவரின் ஒளியிலேயும் நெறிகளிலேயும் நடந்து, அவருடைய திருவருகைக்கு உண்மையிலேயே நம்மைத் தயார் செய்கிறவர்களாவோம்.

ஆண்டவரின் ஒளியிலே நாம் நடப்போம்.

இரண்டாம் வாசகம் : உரோ 13:11-14

கிறிஸ்தவர் ஒளியில் வாழ வேண்டியவர்

“இருள் நீங்கி இன்பம் பயக்கும்" வாழ்வு அவனது. (குறள் 352)
எனவே, இருளாகிய பாவ வாழ்வை விட்டகன்று இயேசு கிறிஸ்துவாகிய ஒளியை அணிந்துகொள்ள வேண்டும். புனித அகுஸ்தீனாரின் மனமாற்ற வாழ்வுக்கு இவ்வாசகம் காரணமாயிருந்தது என்று அவர் வாழ்க்கையிலிருந்து அறிகிறோம். திருவருகைக் காலத் தொடக்கத்திலே இவ்வாசகம் வழி பவுல் அடியார் நம் மனமாற்ற வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறார்.

இறுதிக் காலம் வந்துவிட்டது

கிறிஸ்துவின் உயிர்ப்பிலே, திருச்சபையின் வரலாற்றிலே நாம் அனைவரும் இறுதிக் காலத்திலே வாழ்கிறோம். "தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன். விடுதலை நாளில் நான் உனக்குத் துணையாய் இருந்தேன்" {2 கொரி 6: 2) என்று இன்று நம்மைப் பார்த்து இறைவன் கூறுகிறார். “நமக்கோ விண்ணகமே தாய்நாடு" (பிலி 3: 20). எனவே இவ்வுலகிலே நாம் வேற்று நாட்டினரென, அந்நியர் போன்று வாழ்வு நடத்த வேண்டும் (எபி 11: 13).
“இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றம் என்றெண்ணி" - நாலடியார்
வாழ்வின் இறுதிக் காலத்தில் வாழ்பவர்கள்போல் என்றும் இறைவனைச் சந்திக்கத் தயாரான வாழ்க்கையை வாழ வேண்டும். இயேசுவின் உயிர்ப்பு எனும் ஒளியில் இருளைக் காணாதவர்களாய், ஒளியின் மக்களென வாழ முடியும் (எசா 4:5-6; 60: 1-2; எபே 5: 8-14).

மீட்பு அண்மையில் உள்ளது

உலக முடிவிலே, அல்லது வாழ்வின் இறுதியிலே வழங்கப்படும் தீர்ப்பு அன்று இது; அன்றாட வாழ்வில் ஆரம்பித்து வளர்வது. “நம் மீட்பை உறுதிப் படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பெற்றுக் கொண்ட நாம்" தூய ஆவியாரை அச்சாரமாகப் பெற்ற நாம் (2கொரி 1:22) நம்முடைய நற்செயல்களினாலே இம்மீட்பிலே பங்கு பெறுகிறோம்; வளர்கிறோம். இறுதி நாளில் இம்மீட்பு முழுமையடையும். எனவே கிறிஸ்தவருக்கு எந்நாளும் மீட்பு நாளே. இங்கே, இப்போது, இன்று கிறிஸ்து மனிதரை ஆட்கொள்ளும் செயல் மனிதர் கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்படும் செயல் - இதுதான் மீட்பு. திருவருகைக் காலத் தொடக்கத்தில் இதனை மனத்திலிருத்தி இறைவனுடைய மீட்பிலே பங்கு பெறும் நிலையினை அடைதற்கான செயல்களைச் செய்வோம். இத்திருவருகைக் காலத்தின் ஒவ்வொரு நாளும், மீட்பர் இயேசுவின் நாளாக, நமது மீட்பின் நாளாக அமைய நம்முடைய செயல் முறைகளைத் திருத்தி அமைப்போம்.

கிறிஸ்து இயேசுவை அணிந்துகொள்வோம்

“இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக் கலங்களை அணிந்துகொள்வதே” (13:12) கிறிஸ்துவை அணிந்து கொள்வதாகும்.

“படைக்கல மாகஉன் நாமத் தெழுத்தஞ்சொன்,
நாவிற் கொண்டேன்” -அப்பர் தேவாரம்

கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்" (கலா 3: 27). கிறிஸ்துவுக்குள் வாழும் நாம் கிறிஸ்துவின் மனநிலையையும் மதிப்பீடுகளையும் நம் வாழ்வில் பின்பற்ற வேண்டும். கிறிஸ்துவிலே அனைத்து மக்களையும் சகோதர சகோதரிகளாக ஏற்று, ஏற்றத் தாழ்வுகளை அகற்றி, அன்பு வாழ்வு வாழ வேண்டும் (கலா 3:28; உரோ 13 8-10). அத்தோடு தீய நாட்டம், சொல் செயல் முதலியவற்றை அகற்றி (13:13), ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களாகிய நம்பிக்கை, பற்றுறுதி, நீதி, நேர்மை முதலியவற்றிலே வேரடித்து வளர வேண்டும் (1தெச 5:8; எபே 6:13-17). இத்திருவருகைக் காலம் நாம் ஒளியின் மக்களாக வாழ ஏற்ற காலமாய் அமைவதாக.

விழித்தெழும் நேரம் வந்துவிட்டது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.

நற்செய்தி: மத் 24 : 37-44

விழிப்பு வேண்டும்

மத்தேயு 24-ஆம் அதிகாரம், இறுதிக் காலம்பற்றி இயேசு விட்டுச் சென்ற அறிவுரையாகும். இதிலே எருசலேமின் அழிவும் (கி.பி. 70), உலகத்தின் முடிவும் இரண்டறக் கலந்து நிற்கின்றன. காலத்தினாலே இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் பிரிந்திருந்தாலும், இறையியல் மரபில், இவற்றில் முன்னையது பின்னையதற்கு முன்னோடியாகவும் அறிகுறியாகவும் அமையும். கிறிஸ்துவின் வருகைக்குத் தயார் செய்யும் முறையிலே, அவரின் இறுதி வருகையின்போது எவ்வாறு நாம் விழிப்பாயிருந்து அவரை எதிர்கொள்வோமோ, அத்தகைய விழிப்பை எதிர்பார்க்கிறது இவ்வாசகம்.

மனம் மாறுவோம்

நோவாவின் காலத்திலே மனிதரின் அக்கிரமம் பெருகியது. எல்லா மனிதர்களும் தீமையையே நாடினர் (தொநூ. 6: 5). "நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது" (தொநூ 6:8). ஆண்டவரை விசுவசித்து, "அதே நம்பிக்கையினால் உலகைக் கண்டனம் செய்து, அந்த நம்பிக்கையினாலே இறைவனுக்கு ஏற்புடையவராகும் பேற்றுக்கு உரிமையாளர் ஆனார்" (எபி 11:7). நாமும் நோவா போன்று ஆண்டவரில் மட்டுமே விசுவாசம் வைத்து வாழ்வோமா? அல்லது நோவா காலத்து மக்கள் போன்று உண்டும் குடித்தும் கேளிக்கைகளில் நேரத்தைப் போக்கியும், அநீத வாழ்வு நடத்தியும், அன்பற்ற வாழ்வில் அமிழ்ந்தும் இறைவனை மனம் நோக வைப்போமா? (தொநூ 6:6). நோவா காலத்துப் பெரும் வெள்ளம் மக்களின் அக்கிரமங்கள் மேல் இறைவன் கொண்ட கோபத்தின் வெளிப்பாடு (தொநூ 6:12-13). பாவ வாழ்க்கையில் உழன்று திரியும் நம்மையும், நாம் எதிர்பாரா வேளையிலே இறைவனின் கோபமாகிய பெருவெள்ளம் அடித்துச் சென்றுவிடக்கூடும் என்பதை அறியாது நாம் வாழ்க்கை நடத்தலாமா? எந்நேரத்திலும் இறைவனின் கோபம் வெளிப் படலாம்; எவ்வேளையிலும் இறைவன் நம் நடத்தையைக் கணக்கிட வருவார்.

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே! - அப்பர் தேவாரம்
என்பதை உணர்ந்து, நாம் மனம் மாறிய வாழ்க்கை நடத்த முயற்சி செய்வோம். திருவருகைக் காலம், இயேசுவின் வருகை முதலியன நமக்கு நோவாவுக்குக் கிடைத்த ஆசீராயமையுமா? அல்லது நோவா காலத்து மக்களுக்குக் கிடைத்த சாபத் தீர்ப்பாயமையுமா? மனம் மாறுவோம்; இறைவனை அணுகுவோம். "நம்பிக்கையினால் இறைவனுக்கு ஏற்புடைய வராகும் பேற்றுக்கு உரிமையாளர் ஆவோம்" (எபி 11:7).

ஆண்டவர் நாள் நாம் எதிர்பாராதபோது வரும்

திருடன் அறிவித்துவிட்டு வரமாட்டான். எதிர்பாராத வேளையிலே நம்மை ஏமாற்றி, நம் உடைமைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுவிடுவான். ஆண்டவரின் வருகையும் அவ்வாறே இருக்கும். "திருடன் நள்ளிரவில் 13வருவதுபோல் ஆண்டவருடைய நாள் வரும்" என்பது உங்களுக்குத் தெரியும். "எல்லாம் அமைதி, ஆபத்து ஒன்றுமில்லை” என்று மக்கள் கூறும்போதே, "கருவுற்றிருப்பவர்களுக்குப் பேறுகால வேதனை ஏற்படுவது போலத் திடீரென அவர்களுக்கு அழிவு வரும்" (1 தெச 5: 2-3; 2) என்பார் தூய பவுல் அடியார். எனவே விழித்திருப்போம். திருவருகைக் காலம், விழிப்புக்காலம். அதே வேளையில் இரக்கத்தின் காலம். எப்போதும் தயாராயிருப்போம். இரக்கத்தின் கடவுள் நம்மிடம் வரும் வேளையிலே "விளக்குடன் ஏனத்தில் எண்ணெயும் எடுத்துக்கொண்டு” (மத் 25: 1-13) "அன்பே தகழியாய் ஆர்வமே நெய்யாக", விழித்திருந்து வரவேற்போம். நல்ல உள்ளத்தோடு, விசுவாசமாகிய ஏனத்தில், அன்பாகிய எண்ணெயோடு காத்திருப்போம். "ஏனெனில் நாளும் நேரமும் நமக்குத் தெரியாது" (மத் 25:13).

ஆயத்தமாய் இருங்கள், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒளியும் விழிப்பும்

புதிய திருவழிபாட்டு ஆண்டை இன்று நாம் தொடங்குகிறோம். மத்தேயு நற்செய்தியாளரோடு இந்த ஆண்டு முழுவதும் நாம் பயணம் செய்யவிருக்கிறோம். திருவருகைக் காலத்தின் மூன்று நோக்கங்கள்: (அ) இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையை நினைவுகூர்ந்து கொண்டாடக் கூடிய கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு நம்மையே தயாரிப்பது. (ஆ) இயேசுவின் இரண்டாம் வருகைக்கான நம் காத்திருத்தலை நமக்கு நினைவூட்டுவது. (இ) அன்றாம் இறைவார்த்தையிலும் அருளடையாளங்களிலும் நம் நடுவில் வசிக்கும் மனிதர்கள் வழியாகவும் நம்மிடம் வருகிற இயேசு கிறிஸ்துவை அடையாளம் காணக் கற்றுக்கொள்வது.

(அ) நம் கண்களை ஆண்டவரின் மலை நோக்கித் திருப்புவோம்

இன்றைய முதல் வாசகத்தில், தன் சமகாலத்து இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கு உரைக்கிற எசாயா, ‘புறப்படுங்கள். ஆண்டவரின் மலைக்குப் போவோம் … யாக்கோபின் குடும்பத்தாரே, நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்’ என்று அழைப்பு விடுக்கிறார். போர்களாலும் அசீரிய மற்றும் பாபிலோனிய அடிமைத்தனங்களாலும் சிதறடிக்கப்பட்ட மக்கள் தங்கள் கண்களை ஆண்டவரின் மலை நோக்கித் திருப்ப வேண்டும். இவ்வாறாக, ஆண்டவரின் மலை அவர்களுக்கு இலக்குத் தெளிவையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், இணைந்த பயணத்தையும் குறிக்கிறது. ஆண்டவராகிய கடவுள் தந்த திருச்சட்டங்களை விட்டுவிட்டு இஸ்ரயேல் மக்கள் சிலைவழிபாட்டில் இறங்கி தங்களையே தீட்டுப்படுத்தி இருளை அணிந்துகொண்டார்கள். திருச்சட்டம் என்னும் ஒளியில் நடப்போம் என்று அவர்களை அழைக்கிறார் எசாயா.

(ஆ) ‘ஆண்டவரது இல்லத்துக்குப் போவோம்!’

இன்றைய பதிலுரைப்பாடல் சீயோன் மலைத் திருப்பயணப் பாடல்களில் ஒன்றாக அமைந்துள்ளது. ஆண்டவரது இல்லத்துக்குப் போவோம் என்னும் அழைப்பைக் கேட்கிற திருப்பயணி ஒருவருடைய உள்ளத்தில் எழுகிற நேர்முகமான உணர்வுகளை எடுத்துரைக்கிறது இப்பாடல். அவர்கள் செல்கிற எருசலேம் நகரில் அவர்களுக்கு நீதியும் அமைதியும் நலமும் இருப்பதாக திருப்பயணி உணர்கிறார். ஆண்டவராகிய கடவுள் அங்கே குடியிருப்பதால் அந்நகர் மேன்மையும் அழகும் பெற்றிருக்கிறது. இறைவனின் இல்லத்தில் நமக்கு நீதியும் அமைதியும் நலமும் கிடைக்கும் என்பது நம் எதிர்நோக்காகவும் இருக்கிறது.

(இ) ‘பகல் நெருங்கி உள்ளது’

அகுஸ்தினாரின் மனமாற்றத்துக்குக் காரணமான விவிலியப் பகுதியாகச் சொல்லப்படுகிற பகுதியே இன்றைய இரண்டாம் வாசகம். ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்ள வேண்டும் என்னும் திருத்தூதர் பவுலின் அழைப்பை தனக்கே தரப்பட்ட அழைப்பாக எடுத்து உடனடியாக மனம் மாறுகிறார் அகுஸ்தினார். உரோமையருக்கு எழுதுகிற திருமடலை நிறைவுசெய்கிற பவுல் அறிவுரையுடன் நிறைவு செய்கிறார். உடனடியான உளமாற்றத்துக்கு அவர்களை அழைக்கிறார். ‘இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்’ என்னும் அழைப்பு சவால் நிறைந்ததாக இருக்கிறது. ஒருவர் தனக்குரிய இயல்பை முழுமையாக ஒதுக்கிவிட்டு இயேசுவை – இயேசுவின் இயல்பை – அணிந்துகொள்ள வேண்டும் என்பது பவுல் தருகிற அழைப்பு.

(ஈ) ‘ஆயத்தமாய் இருங்கள்’

மானிட மகனின் வருகை பற்றிய எச்சரிக்கையும் அறிவுரையையும் வழங்குகிறார் இயேசு. அந்த நாள் திடீரென வரும் என்றும், விழிப்பு நிலையும் தயார்நிலையும் கொண்டிருப்பவர்கள் மானிட மகனை எதிர்கொள்ள முடியும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு.

வாழ்க்கைப் பாடங்கள்

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை – போர், இயற்கைப் பேரிடர், வெள்ளம், பெருமழை, புயல், அரசியல் குழப்பங்கள், சமயப் பிறழ்வுகள் – சிலர் மானிட மகனுடைய இறுதி நாள்கள் என்று பொருள்கொள்கிறார்கள். ‘தொடக்க நாள்’ என்று ஒன்றைக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அனைத்துக்கும் ‘இறுதி நாள்’ இருக்கும் என்பது வாழ்வியல் எதார்த்தம். ‘இன்றே’ அந்த ‘இறுதி நாள்’ என்று நாம் நினைத்து வாழத் தொடங்கினால், பல மாற்றங்களை நம் தனிப்பட்ட வாழ்வில் கொண்டுவர முடியும். ‘இன்று இல்லை அந்த நாள்!’ என்ற சாக்குப் போக்கே நம் வாழ்வின் மாற்றத்தை தள்ளிப்போடுவதற்கான முக்கியக் காரணியாக இருக்கிறது. ‘நாளை பார்த்துக்கொள்ளலாம்!’ என்றும் நம் மனப்பாங்கை சற்றே மாற்றுவோம்!

‘களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டை சச்சரவு’ போன்றவை இன்று பல வடிவங்கள் எடுத்து நிற்கின்றன. தான் காய்வது தெரியாமாலேயே தண்ணீரின் சூட்டுக்குள் கிடக்கும் தவளை போல, நாமும் நம் நேரமும் ஆற்றலும் கவனமும் குடும்பமும் வாழ்வும் அழிவது தெரியாமலேயே நாம் அன்றாடம் அழிந்துகொண்டிருக்கிறோம். ஏதாவது ஒன்றை நம் கண்களும் காதுகளும் கேட்டுகொண்டே இருக்குமாறு பழகிவிட்டோம். இந்த உறக்கத்தினின்று விழிக்கும் நேரம் வந்துவிட்டது. இப்பொழுது நாம் விழிக்கவில்லை என்றால், விரைவில் இறந்துவிடுவோம்!

உறக்கத்தினின்று இப்போது விழித்தெழுகிற நாம் கடவுளின் மலை நோக்கி நம் கண்களைத் திருப்புவோம். இந்த நாள்களில் நம் இந்து சகோதர சகோதரிகள் சிறப்பான மாலையும் தவ உடையும் அணிந்து சபரிமலை அல்லது பழனி மலைகளுக்குச் செல்லத் தயாராகிறார்கள். மலை நோக்கிய பயணத்திற்கு தயாரிப்பும் தூய்மையும் அவசியம். நம் சுமைகள் குறைய வேண்டும். இலக்கு நோக்கிய கூர்மையும் கவனமும் வேண்டும். உடன் பயணிகளோடு பயணம் செய்ய தயாராக வேண்டும். நம் உள்ளத்தில் நீதியும் அமைதியும் நலமும் குடிகொள்ள வேண்டும்.

இன்று நாம் ஏற்றுகிற எதிர்நோக்கு என்னும் மெழுகுதிரி, ஆண்டவரின் வருகைக்கான காத்திருத்தலை நமக்கு நினைவூட்டுகிறது. ‘எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது!’ (உரோ 5:5) என்று இந்த யூபிலி ஆண்டு முழுவதும் நாம் சிந்தித்தோம்.

கிரேக்கப் புராணத்தின்படி பண்டோராவிடம் ஒப்படைக்கப்பட்ட பெட்டி திறக்கப்பட்டவுடன் நோய், வறுமை, இறப்பு ஆகியவை வெளியேறி பூமியை நிரப்புகின்றன. அனைத்தும் வெளியேறியவுடன் பெட்டியின் அடியில் இருந்தது ‘எதிர்நோக்கு’. அந்த எதிர்நோக்கே நாம் அனைத்துத் தீமைகளையும் எதிர்கொள்வதற்கான துணிவைத் தருகிறது.

எதிர்நோக்கு என்னும் திரி நம் விழிப்புநிலையின் அடையாளமாக அமைவதாக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு