புனித வின்சென்ட் தே பவுல்
திரு.சந்தியாகு
புனித வின்சென்ட் தே பவுல் பிரான்ஸ் நாட்டில் உள்ள காஸ்கனி என்ற கிராமத்தில் 1581 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் ஒரு சிறிய நிலத்தில் பயிரிட்டு அன்றாட வாழ்வை நடத்தி வந்தனர். பிரான்சிஸ்கன் குருக்களிடம் இவர் கல்வி பயின்று தேர்ச்சி பெற்றார். ஒரு பணக்காரர் தன் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்க இவரைத் தேர்ந்தெடுத்தார். கல்வி கற்பித்துக் கொண்டு, அதில் வரும் வருவாயை வைத்து உயர் கல்வி பயின்றார்.
19வது வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப் பட்டார். இவர் 1605 ஆம் ஆண்டு மார்சீல்ஸ் எனும் நகருக்கு கப்பலில் புறப்பட்டார். அப்போது கப்பல் துருக்கிய கடல் கொள்ளைக்காரர்களால் தாக்கப் பட்டு, கப்பலில் இருந்தவர்கள் வட ஆப்பிரிக்கா விற்குக் கூட்டிச் செல்லப்பட்டனர். வின்சென்ட் தே பவுலும் அடிமையாக விற்கப்பட்டு, தூனிஸ் நகரில் இரண்டு ஆண்டுகள் அடிமை வாழ்வு நடத்தினார். தனக்கு ஏற்பட்ட கொடுமைகளையும், துன்பங் களையும் கடவுளுக்காக பொறுமையோடு அனுபவித்து வந்தார். மரியன்னையின் புகழ் பாடியும், செபித்தும் வந்தார்.
இவரை அடிமையாகக் கொண்ட தலைவன் கொள்ளையருக்குப் பயந்து கிறிஸ்தவ மதத்தை விட்டு விலகி முஸ்லீம் ஆனான். பிறரை காந்தமாக இழுக்கும் வின்சென்டின் ஆன்மீகச் சக்தியால் அந்தத் தலைவன் மீண்டும் மனம் திரும்பினான். வின்சென்ட் அடிமைத்தனத்தினின்று விடுபட்டு பிரான்சு நாட்டிற்குத் திரும்ப அத்தலைவனே உதவி செய்தான்.
1625 ஆம் ஆண்டு ஒரு புது சபையை நிறுவி னார். வின்சென்ட் தே பவுல் துவக்கிய வேதபோதக சபையின் குருக்கள் ‘வின்சென்டியார்கள்’ என அழைக்கப்படுகின்றனர்.
இவருடைய சபைத் துறவிகள் ஏழைகள், அனாதைகளின் பராமரிப்புக்காகவே தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று சபை ஒழுங்குகளை அமைத்தார்.
புனித வின்சென்ட் தே பவுல் செய்த சேவைகள் அனைத்தையும் எடுத்துக்கூறுவது முடியாத காரியம். ஏழைகளுக்கு உதவி செய்யும்படி பணக் காரப் பெண்களிடம் சமூக உணர்ச்சியைத் தூண்டி எழுப்பினார். அவர்கள் தந்த பெருந்தொகையைக் கொண்டு மருத்துவமனையை நடத்தினார். வீடின்றி இருந்த ஆயிரமாயிரம் மக்களுக்கு பாதுகாப்பு இடம் கொடுத்தார்.
பைத்தியக்காரர்களுக்கும், தொழுநோயாளர் களுக்கும் மருத்துவமனைகள் அமைத்தார். இவ் வாறாக புனித வின்சென்ட் தே பவுல் சபையினர் செய்து வரும் தொண்டுகளைப் பார்க்கலாம். 1660 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் வின்சென்ட் தன் ஆன்மாவை கடவுளின் கரங்களில் ஒப்படைத்தார்.
“ஏழைகளை நேசித்திருப்பவர்கள் அச்சமின்றி சாவை எதிர்நோக்கலாம். பொறாமையைத் தவிர்க்க விழிப்பாய் இருங்கள். ஏனெனில் அது சகோதர அன்பை அழிக்கத் தேடுகிறது” என்று புனித வின்சென்ட் கூறியுள்ளார்.