புனித மாங்கிரோவேகோ துரிபியுஸ்
(1538-1606)
(St. Turibius De Mogrovejo)

சந்தியாகு

இவர் ஸ்பெயின் நாட்டில் மயோர்கா நகரில் 1538ஆம் ஆண்டு பிறந்தார். இவர் புகழ்பெற்ற சலமான்கா பல்கலைக்கழகத்தில் சட்டக்கலை வல்லுநர் பட்டம் பெற்று அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் அபூர்வதிறமை படைத்தவர். ஆழ்ந்த பக்தியுள்ளவர். 40 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். 42 ஆம் வயதில் பெரு நாட்டின் பேராயரானார். தொடர்ந்து 26 ஆண்டுகளாக இவர் லீமா நகரில் உழைத்தார். இவரது உழைப்பைக் கண்டு அனைவரும் அதிசயித்தார்கள். மனிதன் இவ்வளவு உழைக்க முடியுமா என்று ஆச்சரியப்படுவார்கள்.

இவர் இந்நாட்டிற்கு வந்தபோது அங்குப் பரவியிருந்த தீமைகளைக் கண்டு தமது முயற்சியாலும், அயரா உழைப்பினாலும் அவை மறைந்து ஒழியச் செய்தார். 5000 மைல் (8000கி.மீ.)களுக்கு அதிகமாக இவர் பிரயாணம் செய்திருக்கிறார். பெரும்பாலும் இவர் எப்பொழுதும் நடந்தே செல்வார். ஏறக்குறைய ஐந்து லட்சம் மக்களுக்கு திருமுழுக்கும், உறுதிபூசுதலும் கொடுத்திருக்கிறார். அவர்களில் மூவர் திருச்பையில் புனிதராகப் போற்றப்படுகிறார்கள். தென் அமெரிக்காவில் பெரு மாநிலத்தின் பாதுகாவலர் புனித சூசையப்பர் என்றாலும், தென் அமெரிக்கா முழுவதிலும் இப்புனிதர் நாட்டின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார். துரிபியுஸ் 1606 ஆம் ஆண்டு தனது 68வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

"நேரம் நம்முடையது அல்ல. அது நமக்குச் சொந்தமானதல்ல. நேரத்தை நாம் எவ்விதம் பயன்படுத்தினோம் என்று கடவுள் நம்மிடம் கண்டிப்பான கணக்குக் கேட்பார்" என்று புனித துரிபியுஸ் கூறியுள்ளார்.

புனிதரின் திருநாள் : மார்ச் 23.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது