திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ் | St-Pius 5

திருத்தந்தை ஐந்தாம் பயஸ் (17 சனவரி 1504 – 1 மே 1572) இத்தாலிய நாட்டில் 1504 ஆம் ஆண்டு பிறந்தார். தனது 14வது வயதில் தொமினிக்கன் சபையில் சேர்ந்து, பின்பு 24வது வயதில் குருப்பட்டம் பெற்றார். குருப்பட்டம் பெற்று 16 ஆண்டுகளாகக் குருத்துவ மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்தார். அடுத்து ஆயராக வும், பின்னர் கர்தினாலாகவும் உயர்த்தப் பெற்றார்.
1566 ஆம் ஆண்டு திருத்தந்தையாகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாக உயர்த்தப் பட்டபிறகும் முன்பு போலவே தவ வாழ்வு நடத்தினார். இவருக்கு வேலையும், பொறுப்பும் ஏராளமாக இருந்தபோதிலும் நாள்தோறும் இருமுறை திருப்பேழையின் முன் முழந்தாளிட்டு நெடுநேரம் செபத்தியானம் செய்தார். ஏழைகளுக்குத் தாராளமாகத் தர்மம் கொடுத்தார். நோயாளிகளுக்காக மருத்துவமனைகள் பல கட்டுவதற்குக் காரணமாயிருந்தார்.
இவர் காலத்தில்தான் திருச்சபையின் மாபெரும் நிகழ்ச்சியாக வரலாற்றுப் புகழ்பெற்ற திரிதெந்தின் பொதுச்சங்கம் கூட்டப்பட்டது. இச்சங்கம் நிறைவேற்றிய தீர்மானங்களைச் செயல்படுத்துவதில் பெரியதோர் பொறுப்பினை ஏற்றார். இன்று இரண்டாம் வத்திக்கான் சங்கத் தீர்மானங்களைச் செயல்படுத்துவதினால் ஏற்படும் விளைவுகள், மாற்றங்கள் எப்படியோ, அப்படியே திரிதெந்தின் சங்கம் முடிந்தபின் இருந்தது என்பதில் வியப்பொன்றுமில்லை. குருமடங்களில் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். திருத்தம் பெற்ற புதிய பூசைப் புத்தகத்தை வெளியிட்டார். பல தரப்பட்ட ஒழுங்கீனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத்திடமிருந்தும், இத்தாலி நாட்டு அரசன் 2வது மாக்சி மில்லியனிடமிருந்தும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார்.
கிரேக்க நாட்டில் உள்ள வெப்பன்றோ எனுமிடத்தில் துருக்கியரின் படை பாளையம் இறங்கி யிருந்தது. அவர்களுடைய படை மகா பெரிது. கிறிஸ்தவ மதத்தை அழிப்பதே துருக்கியரின் நோக்கமாய் இருந்தது. திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதரோ வெற்றிக்காக இடைவிடாமல் செபித்து, மாதாவை மன்றாடும்படி விசுவாசிகள் அனைவரையும் தூண்டினார். செபமாலையின் பயனாக வெற்றி கிடைத்தது. இதைப் புதுமையாக அறிந்த திருத்தந்தை "நமக்கு வெற்றி கிடைத்து விட்டது. போய்க் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்” என்று உரோமை மக்களுக்கு அறிவித்ததோடு செபமாலை மாதா திருநாளையும் ஏற்படுத்தினார்.
தனது 68வது வயதில் அதாவது கி.பி. 1572 ஆம் ஆண்டு புனித ஐந்தாம் பயஸ் இறைவனடி சேர்ந்தார். கடந்த காலத்தில் தேவதாயின் செபமாலையானது திருச்சபையையும், உலகத்தையும் காப்பாற்றியிருக்கிறது. இப்போதும் அது நம்மை காப்பாற்ற முடியும். செபமாலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நம்பிக்கையுடன் செபிப்போம்.


