இயற்கையின் வழியே இறையரசு
புனித பேட்ரிக் - இயற்கையின் வழியே இறைவனை காண்பித்தவர்.
புனித பேட்டிரிக் ஐந்தாம் நூற்றாண்டில், இன்றைய இங்கிலாந்து வேல்ஸ் பகுதியில் பிறந்தவர். சுமார் பதினாறு வயதில் அவர் கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டு, அயர்லாந்துக்கு அடிமையாகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவர் ஆடுகளை மேய்ப்பதற்காக வைக்கப்பட்டார். தனிமையும் துன்பமும் நிறைந்த அந்தக் காலத்தில், பேட்டிரிக்கின் உள்ளத்தில் ஜெபம் பிறந்தது. இயற்கையின் மத்தியில், மலைகளிலும் காற்றிலும், அவர் தேவனின் அருகாமையை உணரத் தொடங்கினார்.
பிறகு அவர் தப்பிச் சென்று தாய்நாட்டை அடைந்தார். ஆனால். கனவிலும் உள்ளுணர்விலும், அயர்லாந்து மக்கள் தன்னை மீண்டும் அழைப்பதாக அவர் உணர்ந்தார். தன்னை அடிமையாக்கிய அதே மண்ணிற்கே, இப்போது நற்செய்தியை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தீர்மானம் உருவானது. அதற்காக அவர் கிறிஸ்தவ பயிற்சியும் இறையியல் கல்வியும் பெற்றார்; பின்னர் ஆயராக, அயர்லாந்துக்கு பணிக்குத் திரும்பினார்.
அயர்லாந்தில் செல்டிக் மக்கள் சூரிய வழிபாடு, இயற்கை வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தார்கள். சின்னங்களை வணங்கினார்கள்.
நற்செய்தியின் வரலாற்றில், சிலர் வார்த்தைகளால், அதிசயங்களால் மட்டும் பேசினார்கள். இவரோ இயற்கையையே மொழியாக்கினர். அந்த வரிசையில் தனித்த இடம் பெறுபவர் புனித பேட்டிரிக். அவர் அயர்லாந்து மண்ணில் கிறிஸ்தவத்தை விதைத்தபோது, அங்கு நிலவிய தெய்வ வழிபாடுகளை எதிரியாகக் காணவில்லை; மாறாக, செல்டிக் மக்களின் இயற்கை உணர்வுகளையும் சின்னங்களையும் மறுக்காமல் அவற்றைக் கிறிஸ்துவின் ஒளியில் புரியவைத்தார்.
புனித பேட்டிரிக்கின் வாழ்க்கை, பணி, சிந்தனை மற்றும் ஆன்மீக பார்வை ஆகியவற்றை இயற்கையின் வழியாக, திரித்துவம், விசுவாசம், மீட்பு இறையரசில் ஒன்றிணையும் அந்த ஆழமான தத்துவத்தைப் பார்ப்போம்.
புனித பேட்டிரிக்கின் பணியின் மையம் மூன்று பிரிவுகளைக் கொண்டது:
1.இயற்கை வழியாகத் திரித்துவத்தின் விளக்கம்.
அயர்லாந்தின் மக்களுக்குத் திருத்துவம் பற்றித் தெரியவில்லை. அவர்கள் தத்துவக் கருத்துக்களைவிட கண்ணால் காண்பதை நம்புவோர். “ஒரே தேவன், ஆனால் மூன்று நபர்கள்” என்ற கருத்து அவர்களுக்குக் குழப்பமாக இருந்தது. அவ்வூரில் பசுமையான நிலங்களில் எளிதாகக் காணப்படும் ஷாம்ராக் என்ற சிறிய செடி... ஒரே தண்டில் மூன்று இலைகள் கொண்ட ஒரு சிறிய ஷாம்ராக் செடி,
இந்த மூன்று இலைகளும் தனித்தனியாக இருக்கின்றன; ஆனால் பிரிக்க முடியாத ஒரே செடியில்தான் அவை வாழ்கின்றன” என்று விளக்கினார்.
தந்தை – தேவன் மகன் – இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவி
மூவரும் ஒரே தேவனில் மூன்று நபர்களாகிய திரித்துவத்தின் உயிருள்ள விளக்கமாகக் கூறினார் தனித்துவம் கொண்டவர்களாக இருந்தாலும், ஒரே தேவனின் ஒருமைப்பாட்டில் இருப்பதை இயற்கையின் வழியே திரித்துவத்தை வெளிப்படுத்திய இறையியல் சாட்சி.
2. செல்டிக் சிலுவை – சூரிய வழிபாட்டின் மறுவாசிப்பு
பண்டைய அயர்லாந்தில் சூரியன், மக்களின் வாழ்க்கையில் மையமாக இருந்தது. சூரியன்: - ஒளி, வெப்பம், உயிர் சூரியனைச் சுற்றி வட்ட வடிவ சின்னங்கள், வழிபாடுகளாக இருந்தன புனித பேட்டிரிக் இதை உடைத்தோ, அழித்தோ நம்பிக்கையை முறியடிக்கவில்லை; மாறாக, சிலுவையின் மையத்தில் சூரிய வட்டத்தை இணைத்தார்.
சிலுவையின் நடுவில் இணைக்கப்பட்ட வட்டம், சூரியனைச் சுட்டிக்காட்டும் சின்னமாக இருந்தாலும், கிறிஸ்தவ பார்வையில் அது கிறிஸ்துவின் ஒளியை குறிக்கிறது. “நான் உலகின் ஒளி” என்று இயேசு கூறிய வார்த்தைகள், இங்கே காட்சியுருவம் பெறுகின்றன.
இயற்கையில் ஒளி தரும் சூரியன் மறையும்; ஆனால் சிலுவையில் வெளிப்பட்ட கிறிஸ்துவின் ஒளி என்றும் அணையாது. இதன் வழியாக, இயற்கை வழிபாட்டின் தேடல், கிறிஸ்துவில் நிறைவு பெறுகிறது.
செல்டிக் சிலுவை வேதாகமத்திற்கு வெளியான சின்னமாகத் தோன்றினாலும், அதன் கருத்தும் அர்த்தமும் முழுவதும் விவிலியத்தில் வேரூன்றியவை. இதுவே இன்று நாம் அறியும் செல்டிக் சிலுவை (Celtic Cross).
இந்தச் சிலுவை சொல்லும் செய்தி ஆழமானது:
• சூரியன் இயற்கை ஒளி.
• இயேசு – “உலகின் ஒளி”
• சூரியன் மறையும்
• கிறிஸ்துவின் ஒளி என்றும் மறையாது
இதன் மூலம் புனித பேட்டிரிக் கூறியது: “நீங்கள் தேடி வணங்கிய ஒளி, இப்போது மனிதராக வந்து, சிலுவையில் தன்னை அளித்திருக்கிறது.”
இது மாற்றம் மட்டும் அல்ல; நிறைவேற்றம்.
3. இயற்கை – தேவமகிமையின் கண்ணாடி
அயர்லாந்து செல்டிக் பண்பாட்டில்: மலைகள், ஆறுகள், மரங்கள், காற்று இவை அனைத்தும் புனிதத்தன்மை கொண்டதாகக் கருதப்பட்டன. புனித பேட்டிரிக் இதை நிராகரிக்கவில்லை. ஆனால் அவர் இதற்குத் திசை மாற்றம் கொடுத்தார்.
அவர் சொன்ன செய்தி: “இவை தேவன் அல்ல; ஆனால் தேவனின் சுவடுகள்.” பவுல் திருத்தூதர் கூறியதுபோல், “தேவனுடைய காணப்படாத பண்புகள், அவர் படைத்தவற்றின் வழியாக அறியப்படுகின்றன.” புனித பேட்டிரிக்கின் மிகப்பெரிய பங்களிப்பு: “கிறிஸ்தவம் என்பது கலாச்சாரத்தை அழிக்கும் சக்தி அல்ல; அதைத் தூய்மைப்படுத்தும் ஒளி” என்ற உண்மை.
அவர்:
• மொழியை மதித்தார்
• சின்னங்களை மாற்றினார்
• இயற்கையை துறக்கவில்லை
• ஆனால் கிறிஸ்துவில் அதன் அர்த்தத்தை நிறைவேற்றினார்
இதுவே உண்மையான மீட்பு
அவர் ஆயிரக்கணக்கான மக்களைக் கிறிஸ்துவுக்குள் அழைத்ததாக மரபுகள் கூறுகின்றன. பல தேவாலயங்களும் மடங்களும் நிறுவப்பட்டன. ஆனால், ஒரு கலாச்சாரத்தை அழிக்காமல், கிறிஸ்துவுக்குள் மாற்றியதே அவரது மிகப்பெரிய சாதனை.
புனித பாட்டிரிக் கிறிஸ்துவை அறிவித்தது மனிதர்கள் கட்டிய ஆலயங்களுக்குள் மட்டுமல்ல; மலைகளிலும், மேய்ச்சல் நிலங்களிலும், காற்று வீசும் வெளிகளிலும். அவருக்குக் இயற்கை ஒரு பின்னணி அல்ல; அது தேவன் பேசும் மொழியாகவும், இறையரசு வெளிப்படும் வெளியாகவும் இருந்தது. இவ்விதமாக, இயற்கை வழியே இறையரசின் உண்மை வெளிப்பட்டது.
இறையரசு என்பது அதிகாரம் அல்லது அரசியல் ஆட்சி அல்ல; அது தேவனின் ஆட்சி மனித இதயங்களில் நிறுவப்படுதல். புனித பாட்டிரிக் அறிவித்த இறையரசு, மண்ணை விட்டு வானம் நோக்கிச் செல்லச் சொல்வதல்ல; மண்ணையே வானத்தின் வாசஸ்தலமாக மாற்றும் அழைப்பு.


