புனித நார்பெர்ட்

திரு. சந்தியாகு


புனித நார்பெர்ட் (1080-1134)ஜெர்மனியில் 1080 ஆம் ஆண்டு பிறந்தார். அரச குலத்தில் தோன்றிய இவர் உலக இன்ப சுகங்களை ஆர்வத்துடன் தேடித் திரிந்தார். ஒரு சமயம் இவர் விநோதப் பிரியத்தினால் குதிரையின் மீது ஏறி வேறு ஊருக்குச் செல்கையில் திடீரெனப் புயல் காற்று ஏற்பட்டது. குதிரை மிரண்டு இவரைக் கீழே தள்ளியது. கீழே விழுந்த இவர் தெளிவு பெற்று தன் தவறுகளுக்காக வருந்தினார். அரண்மனையில் வாழ்வதை விட்டு விட்டுத் தனி வாழ்வு, தவ வாழ்வு வாழ விரும்பினார்.

தன்னுடைய வாழ்நாட்களை தேவ ஊழியத்தில் செலவழிக்கத் தீர்மானித்தார். வேதக்கல்வி கற்று குருப்பட்டம் பெற்றார். உடமைகள் அனைத்தையும் ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு ஊர் ஊராய்ச் சென்று மக்களுக்குப் போதித்தார். கடும் தவம் புரிந்து தினமும் ஒரு முறை மட்டும் சாப்பிட்டு பெரும் புனிதராய் வாழ்ந்தார்.

தேவ ஏவுதலால் ஒரு புது சந்நியாச சபையை நிறுவினார். புனித நார்பெர்ட் ஆன்ட்வெர்ப் நகரின் அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார். ஏனெனில் இந்த நகரவாசிகள் பலர் ஒரு புதிய தப்பறையில் சேர்ந்து வருவதைக் கண்ட இவர் தனது அரும்பெரும் முயற்சி யால் அவர்களை நல்வழிப்படுத்தினார்.

பேராயர் பதவியை ஏற்கும்படி இவர் வற்புறுத்தப் பட்டார். மாக்டபர்க் நகருக்குப் பேராயராக நியமிக்கப் பட்டபின் அந்நகருக்குள் முதன் முறையாக வந்தபொழுது தாழ்ச்சியின் பொருட்டு மிதியடியின்றி பேராலயத்திற்குள் நுழைந்தார். பிறகு பேராயர் இல்லத்திற்குள் நுழைய வந்தபொழுது வாயிற் காப்போன் இவர் யாரென்று புரிந்து கொள்ளாத காரணத்தால் அனுமதி தர மறுத்தான். ஏனெனில் ஓர் ஏழையைப் போல் அவர் தோற்றமளித்தார். அப்போது வாயிற்காப் போனை நோக்கி "உண்மையில் நீதான் என்னைப் புரிந்து கொண்டு இருக்கிறாய். என் நிலையை அறிந்து கொள்ளாதவர்கள்தான் என்னைப் பேராயர் பதவிக்கு உயர்த்தி இந்த இல்லத்திற்கு வரக் கட்டாயப் படுத்துகிறார்கள். நானோ தகுதியற்றவன். வறியவன். இப்பதவிக்கு சிறிதும் அருகதையற்றவன்" என்றார். வாயிற்காப்போன் புனிதரிடம் அதன் பின் மன்னிப்பு கேட்டான்.

இவர் ஏற்படுத்திய துறவறச் சபை 'நார்பெர்டைன்' என்று அழைக்கப்படுகிறது. இச்சபையினரின் தனிப்பெரும் பக்தி திவ்ய நற்கருணை நாதருக்கே உரியது. இப்பக்தியை இத்துறவறச் சபையை நிறுவிய புனிதரே கற்றுத் தந்துள்ளார். புனித நார்பெர்ட் தனது 54வது வயதில் இறந்தார்.

புனிதரின் திருநாள் ஜூன் 06

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது