புனித கனோசா மதலேனா
இவர் இத்தாலியில் உள்ள வெரொனா என்னும் ஊரில் 1774 (1774-1835) ஆம் ஆண்டு பிறந்தார். கனோசா என்பது இந்த ஊரின் அருகாமையில் உள்ள ஓர் அழகான நகரம். இவரது தந்தை பிரபு குலத்தைச் சேர்ந்தவர். மதலேனா ஐந்து வயதுச் சிறுமியாக இருக்கும் போதே தந்தை இறந்து போனார். தாயார் மறுமணம் செய்து கொண்டு தனிக்குடும்பம் நடத்தி வந்தார்.
சிறுமி மதலேனாவை அவருடைய மாமா எடுத்து வளர்த்து நல்ல கல்வி கற்க வழிவகுத்தார். கற்ற கல்வியை யும், தன் வாழ்க்கையையும் பிறர் நலனுக்காக அர்ப்பணிக்காவிடில், அவ்வாழ்வினால் யாதொரு பயனும் இல்லை என்று மதலேனா உணர்ந்தாள். எனவே, ஏழைச் சிறுமிகள் கல்வி பெற தனது 25வது வயதில் முதல் பள்ளியைத் திறந்தார். அதன்பிறகு 1808 ஆம் ஆண்டு இளம் பெண்களின் கல்வியையும், உடல் நலனையும் கவனிக்க கனோசியன் துறவற சபையைத் தொடங்கினாள். 1828 ஆம் ஆண்டு திருத் தந்தை 12 ஆம் சிங்கராயர் இச் சபைக்கு அங்கீகாரம் வழங்கினார்
மதலேனா வாழ்ந்த காலம் பிரெஞ்சு மன்னன் நெப்போலியனின் புரட்சிக் காலம். இக்காலத்தில் துயருற்ற மக்களின் துன்பம் துடைக்க எவருமில்லை. இந் நிலையைக் கண்டுதான் மதலேனா தம் சபையைத் தொடங்கினார். ஆனால், அவரது வாழ்க்கையின் தனிச்சிறப்பு, கிறித்தவ அன்பைப் பொதுவான இரக்கச் செயல்களிலிருந்து பிரித்துக் காட்டியதுதான். அன்று மதலேனா சந்தித்த சமூக அநீதிகளையும், தீமைகளையும் வேற்று உருவில் இன்று நாமும் சந்திக்கிறோம். குடிப்பழக்கம், முதியோரைத் தனிமையில் வாழவிடுதல், சிசுக்கொலை, கருச்சிதைவு போன்றவற்றை நாம் இன்று சந்திக்கின்றோம். புனித மதலேனா தம் சபையினர் மூலமாக இத்தீமைகளை அகற்ற முற்பட்டார்.
கீனோசியன் துறவறச் சபை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உண்டு. பார்வை இழந்தோர், காது கேளாதோர், முழு மன வளர்ச்சியடையாதோர் என்போர்களுக்குத் தனிப் பள்ளிகளையும், செவிலியர் பயிற்சி மையங்களையும் இச்சபையினர் நடத்தி வருகின்றனர்.
கிராமப்பகுதியில் பெண்களுக்கான மனையறப் பயிற்சிக் கூடங்கள், தாய்-சேய் மையங்கள், தொழுநோய் மருந்தகங்கள் மூலம் மக்களுக்கு மகத்தான தொண்டு புரிந்து வருகின்றனர்.
1835 இல் மதலேனா இறக்கும்போது இச்சபைக்கு ஐந்து இல்லங்கள் மட்டும்தான் இருந்தன. ஆனால் இன்று இச்சபை 395 இல்லங்களையும், 4000 உறுப்பினர்களையும் கொண்டு விளங்குகின்றது. இந்தியாவில் இச்சபையின் முதல் இல்லம் கேரளாவின் கொச்சியில் 1889 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் கும்பகோணம் மறைமாவட்டத்தில் உள்ள புனல்வாசலில் ஒரு கிளை இல்லம் அண்மையில் தொடங்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார்.


