புனித யூதா ததேயு , முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். இயேசுவை காட்டிக்கொடுத்த யுதாசுவிடமிருந்து வேறுபடுத்த இவரை ததேயு என்றோ லேபெசியுஸ் என்றோ யாக்கோபின் மகன் யூதா என்றோ அழைப்பர்.
யோவான் நற்செய்தியாளர் இவரை "யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல" என்று குறிப்பிடுகிறார். யாகப்பரின் சகோதரனுமாவார். நற்செய்தியாளரான புனித மத்தேயு, யூதாவை இயேசுவின் " உடன்பிறப்புகளில்" (13.55) ஒருவராக கருதுகின்றார். எபிரேய மொழியில் "உடன்பிறப்பு" ஒரு இரத்த உறவை குறிப்பிடுவதனால், இங்கு யூதாவை இயேசுவின் (சிற்றப்பன், பெரியப்பன், அல்லது மாமன் மகன் உறவாக கருதலாம்) உடன் பிறவா சகோதரனாக கருதலாம். மற்றொரிடத்தில் யூதாவின் அன்னையை இயேசுவின் தாய் மரியாளின் சகோதரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புனித லூக்காஸ் நற்செய்தியானது யூதாவை அப்போஸ்தவர்களின் பட்டியல் (6.16) சேர்த்துள்ளது. புனித யோவான் அவரைப்பற்றி குறிப்பிட்டுள்னர் (14.22) புனித மத்தேயு (10.3) மற்றும் மாற்கு (3.18) அவரை யூதா என்று பயன்படுத்தாமல் ததேயு என பயன்படுத்துகின்றார். தொன்றுதொட்டு கத்தோலிக்க விவிலிய அறிஞர்கள் யூதாவும், ததேயுவும் ஒரே ஆள்தான் என கூறிவந்தார்கள்.
அல்லல்படுபவர்கள் மற்றும் நம்பிக்கை இழந்தவர்களின் பாதுகாவலர் என்னும் யூதா பக்தி எப்போது தொடங்கியது என சரியாக தெரியவில்லை. இயேசுவை மறுத்த யூதாஸ் இஸ்காரியோத் மற்றும் அப்போஸ்தலரான புனித யூதா இவர்களின் பெயர்களுக்கிடையே மக்களுக்கு எழுந்த குழப்பமே இந்த பக்தி முயற்சியை பல நூற்றாண்டுகளாக வளர விடாமல் தடுத்திருக்கலாம். அது அண்மையில் தான் மக்களிடையே பிரபலமாகி வருகின்றது.
பழங்காலத்திருந்தே புனித யூதா இயேசுவின் உருவத்தை கையில் சுமப்பவராக சித்தரிக்ப்பட்டு வந்தது. எடேசாவின் அபகார் அரசன் தன்னை தொழுநோயினின்று குணம் அளிக்க இயேசுவை கேட்தாகவும், அவர் ஒவியர் ஒருவரிடம் இயேசுவின் வரைப்படத்தை கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தார். அரசன் அபகாரின் விசுவாசத்தை கண்டு பூரிப்படைந்த இயேசு தனது முகத்தை ஒரு துகில் பதித்து அரசனிடம் எடுத்து செல்லுமாறு யூதாவை பணித்தார். இயேசுவின் முகம் பதிந்த துகிலை பார்த்த உடனேயே அரசன் குணம் பெற்றான். குணம் பெற்ற அரசன் கிறிஸ்தவனாக மாறி, ஏராளமான மக்களையும் கிறிஸ்தவர்களாக மாற்றினான். புனித யூதாவின் தலையை சுற்றி இருக்கும் ஒளிவட்டம் பெந்தேகோஸ்தே நாளில் மற்ற அப்போஸ்தவர்களுடன் சேர்ந்து பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டதை குறிக்கிறது.
இவருக்கு கிரேக்கமும் அரமேயமும் தெரியும். இவர் உழவு தொழில் செய்துவந்தார். தூய ஆவியின் வருகைக்குப் பிறகு இவர் யூதேயா, சமாரியா, சிரியா, மெசபடோமியா மற்றும் லிபியாவில் மறைபணி புரிந்தார். இவரும் பர்த்தலமேயுவுமே ஆர்மீனியா நாட்டிற்க்கு கிறித்தவத்தை கொண்டுவந்தனர் என்பர்.
சுமார் கிபி 67-ஆம் ஆண்டு, லெபனானில் இவர் கோடரியால் வெட்டப்பட்டு இரத்த சாட்சியாய் மரித்தார். புனித யூதா ஏந்தியிருக்கின்ற கோடாரியானது அவர் கொல்லப்பட்ட விதத்தையும். விசுவாசத்திற்காக உயிர் நீத்ததையும் சித்தரிக்கிறது.
பிரான்ஸ் நாட்டின் புனித பெர்னார்டு ஓரு யூதாஸ் ததேயுவின் பக்தனாக இருந்தார். ஸ்வீடன் நாட்டின் புனித பிரிட்ஜெட்டுக்கு இயேசு காட்சி அளித்து புனித யூதாவிடம் நம்பிக்கை வைக்க கோரினார். இயேசு அவளிடம். "ததேயு என்ற யூதாவின் பெயரைப்போல (ததேயு என்றால். தாராள மனமுடையவர், தைரியசாலி மற்றும் இரக்கமுள்ளவர் என பொருள்) அவர் உனக்கு உதவி செய்வார்." என்றார்.
இந்த உலகம் கொடுக்க முடியாத மன அமைதியும். நம்பிக்கையும் பெற மனிதன் புனித யூதாஸ் ததேயு பக்கம் திரும்புகின்றான். இந்த சூழ்நிலையில் புனித யூதாஸ் ததேயு ஒரு உண்மை நண்பனாகவும் நம்பிக்கையின் நாயகனாகவும் விளங்குகின்றார் என்பது மறுக்க முடியாத உண்மையே இவரது திருப்பண்டங்கள் (அருளிக்கங்கள்) பின்நாளில் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன.
இவரது விழா நாள் அக்டோபர் 28.