புனித ஜோஸ்பின் பகீதா / St.Josephine Bakitha
சந்தியாகு
இவர் ஆப்பிரிக்காவில் சூடான் நாட்டில் 1869 ஆம் ஆண்டு பிறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவருக்குப் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க வாய்ப்பில்லை. ஏறத்தாழ ஒன்பது வயதுச் சிறுமியாக இருந்தபோதே இவரை ஒருசிலர் கடத்திச் சென்று ஒரு நகரில் அடிமையாக விற்று விட்டனர். இவரை வாங்கியவர்கள் சூடான் நாட்டின் தலைநகரான கார்ட்டூமுக்குக் கொண்டுபோய் நல்ல விலைக்கு விற்று விட்டனர். அடிமைப் பெண் பகீதாவின் கைகளிலும், கால்களிலும் இரும்புச் சங்கிலி. தப்பி ஓடினால் கண்டுபிடிப்பதற்காக முகத்தில் சூடு. வேலை வாங்கிடுவோர் கையில் சாட்டையை வைத்துக்கொண்டு மாட்டை அடிப்பதுபோல் முதுகில் அடிப்பார்கள். இத்துன்பங்களின் கொடுமையால் பெற்றோர் தனக்குச் சூட்டிய பெயரை அவர் மறந்துவிட்டார். 'பகீதா' என்பது அவரைக் கடத்திச் சென்றவர்கள் இட்ட பெயர். பகீதா என்பதற்கு 'அதிர்ஷ்டசாலி' என்று பொருள்.
கார்ட்டூமில் இருந்த இத்தாலியைச் சேர்ந்த கலிஸ்டோ என்பவர் பகீதாவை விலை கொடுத்து வாங்கினார். இந்த வீட்டில் எவரும் சாட்டையால் அடிக்கவில்லை. சங்கிலியால் கட்டிப்போடவில்லை. தனது வாழ்நாளில் தான் தொலைத்து விட்ட அமைதியை இங்குக் கண்டுணர்ந்தார்.
கலிஸ்டோ தன் சொந்த நாடாகிய இத்தாலிக்குக் குடும்பத்துடன் செல்லச் திட்டமிட்டார். அவருடன் அவர் நண்பர் அகுஸ்டோவும் குடும்பத்துடன் செல்ல விரும்பினார். அகுஸ்டோவின் துணைவியாருக்கு பகீதாவை மிகவும் பிடித்திருந்தது. எனவே, அவர் பகீதாவையும் தங்களுடன் அழைத்துச் சென்றார். பகீதா அகுஸ்டோவின் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.
அகுஸ்டோவின் மகள் மம்மினா என்னும் குழந்தைக்கு வளர்ப்புச் சகோதரியாகவும், தோழியாகவும் பகீதா மாறினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அகுஸ்டோவும், துணைவியாரும் செங்கடல் பகுதியுள்ள சுவாகின் என்னும் நகருக்குப் போக வேண்டியிருந்தது. ஆகவே மம்மினா, பகீதா இருவரையும் திருமுழுக்குப் பெறுவதற்கான புகுமுகச் சடங்கில் பயிற்சி பெற வெனிஸ் நகரில் உள்ள கனோசியன் சகோதரிகளிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். இதுவே பகீதாவின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு திருப்புமுனை.
மூன்று ஆண்டுகளுக்குப் பின் அகுஸ்ட்டோ திரும்பி வந்து குழந்தைகளைத் தம் சொந்த ஊருக்குக் கூட்டிச் செல்ல வந்தபோது பகீதா கனோசியன் சகோதரிகளுடன் தங்க எண்ணியிருப்பதாகக் கூறிவிட்டார். அப்போது பகீதாவின் வயது 21.
பகீதாவின் விருப்பப்படி 1890 ஆம் ஆண்டு ஜோஸ்பின் என்று திருமுழுக்குப் பெற்றார். இறைபணிக்காகத் தன்னையே கையளிக்க ஜோஸ்பின் பகீதா முடிவு செய்தார். சபையில் சேர்ந்து பயிற்சி பெற்ற ஜோஸ்பின் 1869 ஆம் ஆண்டு வார்த்தைப்பாடு கொடுத்தார். அன்றிலிருந்து அடுத்த 50 ஆண்டுகளும் கடவுளின் அன்புக்குச் சாட்சியாக வாழ்ந்தார்.
சகோதரி ஜோஸ்பின் சமையல் செய்தல், தையல் வேலை செய்தல், சிறுவர்-சிறுமியரைக் கவனித்தல், வாயில் காப்போர் போன்ற வேலைகளைச் செய்தபோதிலும், அவற்றை இறைவனுக்கென்று செய்வதில் மனநிறைவு கண்டார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்-சிறுமியரைத் தாய்ப்பாசத்தோடு நடத்தி வந்தார். அப்பிள்ளைகள் அவரை 'மதர் மொரெட்டா' (கறுப்புத் தாயார்) என்றே அழைத்து வந்தனர்.
"நல்லவராக இருங்கள், ஆண்டவரை அன்பு செய்யுங்கள், அவரை அறியாதவர்களுக்காக மன்றாடுங்கள், அவரை அறிவியுங்கள், அவரை அறிவதே மிகச்சிறந்த அருளாகும்" என்று அறிவித்து வந்த ஜோஸ்பின், கடைசிக் காலங்களில் நோயுற்று மிகவும் துன்பப்பட்டார். சகோதரி ஜோஸ்பின் பகீதா 1947 ஆம் ஆண்டு, தனது 78வது வயதில் இறந்தார். 2000 இல் இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
புனிதையின் திருநாள் பிப். 08


