உரோமை புனித பிரான்செஸ்
(St. Frances of Rome) 1384-1440

சந்தியாகு

இவர் உரோமை நகரில் செல்வாக்கு நிறைந்த குடும்பத்தில் தோன்றியவர். ஆறு வயதிலிருந்தே ஒரு பக்தியான சிறுமியாக வளர்ந்தவர். செபத்தில் தன்னையே ஈடுபடுத்தி ஒரு துறவியாக வரும் நாளை எதிர்பார்த்திருந்தார் பிரான்செஸ், ஆனால் தன் தந்தையின் விருப்பத்திற்கு இணங்கி மணமுடித்தார்.

நாற்பது ஆண்டு குடும்பவாழ்க்கையில் லொரென்சோ போள்சியாளோ என்ற இவர்தம் கணவருக்கும், இவருக்குமிடையே இறையமைதி குடிகொண்டிருந்தது. நாற்பது ஆண்டுகளில் ஒருமுறை முதலாய் சண்டையிடவில்லை.

இவர்களுக்கு ஆறு குழந்தைகள், இல்லறத்தில் ஈடுபட்டிருந்தாலும் இவர்தம் பக்தி முயற்சிகளைக் கைவிடவில்லை. உலகார்ந்த காரியங்களில் பற்றற்று வாழ்ந்து வந்தார். ஒருவர் பக்தி நிறைந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும் தான் ஓர் இல்லறத் தலைவி என்பதை மறந்துவிடக்கூடாது -என்பது இவரது கருத்து.

"சில நேரங்களில் இல்லத் தலைவி பீடத்தில் வீற்றிருக்கும் இறைவளை விட்டு விட்டு அதே இறைவனைக் குடும்பப் பொறுப்பான செயல்களில் கண்டு மகிழ வேண்டும்" என்று பிரான்செஸ் சொல்லியிருக்கிறார்.

உரோமை நகரில் கடுமையான பஞ்சமும், கொள்ளை நோயும் ஏற்பட்டது. இவரது கணவர் நாடு கடத்தப்பட்டார். துன்பங்கள் ஏராளமாக வந்தன. இவரது பிள்ளைகளில் இருவர் கொள்ளை நோயால் அடுத்தடுத்து இறந்தனர்.

இறைவன்மீது வேட்கை கொண்ட இப்புனிதவதி ஏழை எளியோருக்கு பணிவிடை செய்வதில் தம் நாட்களைச் செலவழித்தார். தமது உறவினரான வனோஜாவையும் அழைத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று மக்களுக்குச் சேவை செய்தார். தம் வீட்டின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு மருத்துவமளையாக மாற்றி ளார். அத்தகைய தொண்டுதான் அன்றைய உலகுக்கு இன்றிய மையாதது என்று மேலும் மேலும் உணர்ந்தார்,

இவரது தன்னலமற்ற பணிகளை அறிந்த உயர்குடிவாழ் பெண்கள் இவரோடு சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தனர். இந்த இல்லறப் பெண்கள் ஒன்றாய்க் கூடித் துறவற வார்த்தைப்பாடு இல்லாத ஒரு சபையை உருவாக்கினர். இது நற்பணிக்காக அர்ச்சிக்கப்பட்ட சபை என்று அழைக்கப்பட்டது. உரோமை நகரில் இன்றும் இச்சபை செயல்பட்டு வருகிறது.

இத்தகைய சபையை நிறுவி அது நடைபெறுவதை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டுத் தம் குடும்பத்தில் வந்து சேர்ந்து கணவன் இறக்கும்வரை கணவருடன் வாழ்ந்தார். கணவன் இறந்தபின் மீண்டும் இந்தச் சபையினரோடு சேர்ந்து பணியாற்றி வந்தார்.

பிரான்செஸ் இறைவாக்குரைக்கும் ஆற்றலும், மற்றவர் உள்ளங்களை அறியும் ஆற்றலும் பெற்றிருந்தார். தனது காவல் தூதர்கள்மீது நம்பிக்கை கொண்டிருந்தார், 23 ஆண்டுகளாய் எப்பொழுதும் காவல் தூதர்களைப் பார்க்கும் வரத்தை கடவுள் இவருக்கு அளித்தார்,

கணவர் இறந்தபின் நான்கு ஆண்டுகள் தனது சபையில் உழைத்து 1440 ஆம் ஆண்டு தனது 58வது வயதில் பிரான்செஸ் இறைவனிடம் சேர்ந்தார்.

புனிதையின் திருநாள்: மார்ச் 9

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது