புனித பொனிபாஸ்

திரு.சந்தியாகு

புனித பொனிபாஸ் (St. Bconiface) (673-755) இங்கிலாந்தில் உள்ள டெவன்ஷியரில் பிறந்தார். இவரது திருமுழுக்குப் பெயர் வினிபிரட். இவருக்கு ஐந்து வயதாகும்போது ஆசீர்வாதப்பர் சபையைச் சேர்ந்த சில துறவிகள் இவரது குடும்பத்தினரை வந்து சந்தித்தனர். அங்கிருந்த அவர்களது துறவு மடத்தில் சேர்ந்து கல்வி கற்றார். படிப்பை முடித்தபின் அதே பள்ளியில் ஆசிரியரானார். முப்பது வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப் பட்டார்.

குருப்பட்டம் பெற்றபின் பிரிஸ்லாந்து நாட்டில் மறைபரப்புப் பணிக்குச் சென்றார். சூழ்நிலை உகந்ததாக இல்லையென உணர்ந்து சில மாதங்களுக்குப் பின் தாயகம் திரும்பினார். திருத்தந்தையின் ஆசீரோடு போனால் தான் பயன் உண்டு என்று நினைத்து, உரோமை சென்று திருத்தந்தை இரண்டாம் கிரகோரியாரைப் பேட்டி கண்டார். இவரை ஆயர் பதவிக்கு உயர்த்தி திருத்தந்தை இவரது பெயரைப் பொனிபாஸ் என்று மாற்றினார்.

ஜெர்மனி முழுவதிலும் மறைபரப்புப் பணியின் பொறுப்புத் தரப்பட்டது. பிரீஸ்லாந்தில் மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்து இவர் மறைபரப்புப் பணிபுரிந்தார். மற்ற பகுதிகளிலும் பரவியிருந்த அஞ்ஞானக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பூண்டோடு அழிக்க இவருக்குத் துணிச்சல் ஏற்பட்டது.

ஒருமுறை ஹெங் என்ற பகுதியில் மக்கள் தெய்வமாக வழிபட்டு வந்த ஓக் மரத்தின் முன் னால் வந்து கூடுமாறு மக்களுக்கு அறிக்கை விடுத்தார். இவரே ஒரு கோடாரியினால் அம்மரத்தை வெட்டினார். மக்கள் எல்லோரும் இதைப் பார்த்துப் பேராபத்தும், கடவுளின் சினமும் வரப்போகிறது என்று கதிகலங்கி இருந்த வேளையில், ஓக் மரம் விழுந்து நான்கு துண்டுகளாக முறிந்தது. எந்த ஓர் ஆபத்தும் இல்லாமற் போகவே, அவர்கள் நம்பிய தெய்வங்கள் பயனற்றவை என்ற முடிவுக்கு வந்தனர். இதன் பின்னர் புனிதருக்கு அப்பகுதியில் மறைபரப்புப் பணி மிக எளிதாயிற்று. அங்கிருந்து துரிஞ்சியா பகுதிக்கு மறைபரப்புப் பணிக்குச் சென றார். இங்கிலாந்திலிருந்து ஏராளமான துறவிகளையும், கன்னியர்களையும் அழைத்து வந்தார். இதற்குப் பின் மெயின்ஸ் நகரைத் தலைநகராகக் கொண்டு அவர் கர்தினாலின் அதிகாரங்களுடன் பணியில் ஈடுபட்டார்.

புனிதர் தனது வயது முதிர்ந்த நிலையை உணர்ந்தார். தனக்கு உடன் ஊழியராக இருந்த லல் என்பவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். பின்னர் முதன் முதலாகத் தன் கையால் திருமுழுக்குப் பெற்ற பிரீஸ்லாந்து நாட்டினரிடையே சென்று பணியாற்றினார். அப்போது வயது 75.

பிரீஸ்லாந்தின் வடகிழக்குப் பகுதி இன்னும் இருள் மண்டிக் கிடந்தது. அங்கு இவர் சென்ற தால் ஏராளமான மக்கள் கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றனர். தனது 82வது வயதில் ஈஸ்டர் பெருவிழாவுக்கு மறு ஞாயிறு அன்று உறுதிபூசுதல் கொடுக்க டொக்கும் என்ற இடத்தில் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். புதிய கிறித்தவர்களின் வருகைக்காகத் தன் குடிசையில் பொனிபாஸ் காத்துக் கொண்டிருந்த வேளையில் முரடர்களின் கூட்டம் குடிசைக்குள் புகுந்தது. பொனிப்பாசின் உடன் பணியாளர்கள் ஆயரைக் காப்பாற்ற முயன்றனர். "கிறிஸ்துவுக்காக உயிரைக் கொடுப்போம்" என்று சொல்லி அவர்களை ஊக்குவித்தார். இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தபோதே முதல் அடி ஆயர்மேல் விழ அவர் உயிர் பிரிந்தது. மற்றவர்களும் கொல்லப்பட்டனர்.

புனிதரின் திருநாள் : சூன் 5.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது