புனித பதுவா அந்தோணியார்

சந்தியாகு

இவர் போர்த்துக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில் 1195 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்தார். திருமுழுக்குப் பெயர் பெர்திநாந்து. 15வது வயதில் புனித அகுஸ்தினார் சபையில் சேர்ந்தார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மொராக்கோ நாட்டிற்குச் சென்று வேதசாட்சிகளாக மரித்த ஐந்து பிரான்சிஸ்கன் சபையின் துறவியரின் சடலங்கள் போர்த்துக்கல் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட பொழுது, தானும் ஒரு வேதசாட்சியாக மரிக்க வேண்டும் என்ற ஆவல் இவர் உள்ளத்தில் அனல் விட்டு எரிந்தது. பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து 'அந்தோணி' என்று பெயர் கொண்டார். மெய் மறையைப் பரப்ப மொராக்கோ அனுப்பப்பட்டார். கொடிய வியாதி தாக்கவே திரும்பி வரவேண்டிய நிலை ஏற்பட்டது. கடல் கொந்தளிப்பால் கப்பல் சிசிலி தீவை அடைந்தது. அங்கிருந்து இத்தாலி நாடு சென்றார்.

1221 ஆம் ஆண்டு அசிசி நகரில் பிரான்சிஸ்கன் சபையின் பொதுக்கூட்டம் நடக்க இருந்ததால் அங்கு சென்று 3000 துறவிகளுடன் புனித பிரான்சிஸ் அவர்களை சந்தித்தார். தாழ்ச்சியின் காரணமாகத் தனது அறிவுத்திறனை யாரிடமும் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. இவருக்கு தாழ்ந்த வேலைகள் சபையில் கொடுக்கப்பட்டன. ஒரு சமயம் குருக்கள் பட்டமளிப்பு விழாவில் சில வார்த்தைகள் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்போது இவரிடம் வெளிப்பட்ட ஆழ்ந்த ஞானத்தின் பொருட்டு புனித அசிசி பிரான்சிஸ் அந்தோணியாரை குருமாணவர்களுக்கு கல்வி கற்பிக்க கேட்டுக் கொண்டார்.

அந்தோணியார் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளுக்கும் சென்று இறைவார்த்தை உரைத்து அநேக பாவிகளை மனம் திருப்பினார். காமவெறி, பேராசை, அநியாய வட்டி, ஏழைகளை வதைத்துத் துன்புறுத்துதல், குடிவெறி இவற்றைப் பற்றியெல்லாம் முகத்தாட்சண்ணியத்திற்கு இடம் எதுவுமின்றி கடுமையாகச் சாடினார்.

ஓர் ஊரில் திசே என்னும் நல்ல மனிதர் இருந்தார். அந்தோணியார் அந்தப் பக்கம் அடிக்கடி செல்வதைக் கண்ட அவர் அந்தோணியாரைத் தன் இல்லத்தில் தங்கும்படி ஓர் அறையை அவருக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். ஒருமுறை அந்தோணியார் அங்கு தங்கி இருக்கையில் ஓர் அபூர்வ ஒளியை நள்ளிரவில் திசோ அங்கு கண்டார். காரணத்தை அறிய விரும்பி சாவித் துவாரத்தின் வழியாக உற்று நோக்கினார். அதிசய, அழகு வாய்ந்த குழந்தை ஒன்று மேஜைமீது திறக்கப் பட்டுக்கிடந்த புத்தகத்தின் மீது அமர்ந்திருப்பதைக் கண்டார். அது குழந்தை இயேசு!

அவரது பத்து ஆண்டு கால மறைபரப்புப் பணியின் கடைசி இரண்டு ஆண்டுகளைப் பதுவா நகரில் செலவழித்தார். 36 வது வயதில் (13-6-1231) இறைவனடி சேர்ந்தார்.

இப்புனிதரின் பெயர் கொண்ட ஆலயங்களைச் சந்திக்க மதப்பாகுபாடற்ற முறையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வருகின்றனர். திருமணத்தை நல்ல முறையில் நடத்திக் கொடுக்க, பிள்ளைகள் வரம் பெற்றுத்தர, காணாமற் போனதைக் காட்டிக் கொடுக்க அந்தோணியாரிடம் வேண்டிக் கொள்ளும் வழக்கம் எங்கும் காணப்படுகிறது. இவர் ஏழைகளின்மீது கொண்டிருந்த பரிவிரக்கத்தை அறிக்கையிடும் வகையில் இன்றும் ரொட்டிகள் ஆலய வளாகங்களில் ஏழைகளுக்கு அளிக்கப்படும் வழக்கத்தை நாம் பார்க்கிறோம்.

"மரியாவின் நாமம் தேனைவிட நாவுக்கு இனிமையானது. பரவசப் பாட்டைவிட செவிக்கு அதிக இனிமை தருவது. மிக தூய மகிழ்ச்சியைவிட இதயத்திற்கு அதிக இன்பளிப்பது"- புனித அற்தோணியார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது