இன்னல் நிறைந்த இன்ப வாழ்வு
நவீன உலகில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாலும் இடைவிடாது இறைவனிடம் வேண்டுதல் செய்யும் அன்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இல்லை என்ற சொல்லெல்லாம். இருந்த போதிலும் செபங்கள் மூலம் எதையும் அடைய முடியும் என்ற நம்பிக்கை இறைப்பற்று கொண்டவர்களிடம் இருப்பதை நாம் மறுக்க இயலாது. வேண்டுதலின் பலமும் அதன் அர்த்தமும் இறைவனின் அடி சேர ஏணிப்படி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர் புனித அல்போன்சா முட்டத்துபடத்து கேரளாவில் 60 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அவர். இன்று விண்ணகத்தில் தன்னிடம் வேண்டுவோருக்கெல்லாம் அவர், அவர்களுக்காக தனது வேண்டுகோளை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
அருட் சகோதரி அல்போன்சா புனிதர் பட்டம் அடைந்தால் இந்தியாவின் முதல் பெண்மணி புனிதராகவும், இரண்டாவது இந்தியாவில் வாழ்ந்தவர்களில் புனிதராகும் என்ற நிலையை பெரும் பெயர் பெற்றவராவார்கள். முதலாவது புனிதர் கான்சாலோ கர்சியா, மும்பை அருகிலுள்ள வானச என்ற ஊரில் பிறந்த கப்பூச்சியன் அருட் சகோதரர். ஜப்பானில் உள்ள நாக சாக்கில் 1597-ல் வேத சாட்சியாக மரித்தவர். அன்னாருக்கு 9-ம் பத்தி நாதரால் 1862-ல் "புனிதர்" பட்டம் அருளப்பட்டது.
அருட் சகோதரி அல்போன்சா கொல்கத்தாவில் வாழ்ந்த அருட்சகோதரி தெரேசா போன்று சமூகத் தொடர்புடைய சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளவில்லை, மாறாக நான்கு சுவர்களுக்கிடையே தனது புனித வாழ்வை தமது மடத்தில் நோயின் காரணமாக படுக்கையிலேயே தமது பணியை செய்து கொண்டிருந்தார். பல்லாண்டுகள் தனது இன்னல் நிறைந்த சுகவீனத்தை இயேசுவுக்கு அன்புக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்துக் கொண்டே வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
தனது நாட் குறிப்பேட்டில் அவரது இன்னல்களைப் பற்றிக் கூறும் பொழுது " கோதுமை மணிகள் இயந்தரங்களால் அரைபட்டு மாவாகிய பின்னர் அது நாம் உட்கொள்ளும் திவ்விய நற்கருணையாக மாறுகின்றது. திராட்சைக் கனி நன்றாக அரைத்து பிழியப்பட்ட பின் ரசமாக மாறுகிறது. இதுவே நாம் பருகும் இயேசுவின் குருதியாகிறது. இது போன்ற வருத்தங்களாலும், உடல் துன்பங்களாலும் அல்லல்படும் நாம் அதன் மூலமாக சிறந்த மனிதர்களாக மாற்றப்படுகின்றோம். " இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே அருட் சகோதரி இன்னல்களை வாழ் நாட்கள் முழுவதும் ஏற்றுக் கொண்டார்கள்.
என்றும் தனியாத இயேசுவின் பால் கொண்ட ஆர்வமும், எந்த விதமான கோட்பாட்டிற்கும், உள்ளடங்காத கட்டுப்பாட்டிற்கும் மேற்பட்டு இயேசுவின் பாதங்களில் அவர் முழுவதுமாக தன்னை அர்ப்பணித்தார். அவரிடம் அடைக்கலமானார். இதுவே " அன்னாக் குட்டி " என்று தனது ஊரில் செல்லமாக அழைக்கப்பட்ட சிறுமியின் வாழ்வு. எந்த விதமான சிறப்பம்சங்களும் இல்லாதிருந்தது.
1910-ம் ஆண்டு ஆகஸ்டு 19 நாள் கேரளாவின் தென்பகுதியில் சங்கனாச்சேரி மறைமாவட்டத்தில் கூடமலூர் என்ற கிராமத்தில் பாரம்பரியம் நிறைந்த கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த இவர், தனது தாயை அவர் பிறந்தவுடன் இழந்தார். இவரது தந்தை ஜோசப் முட்டப்படத்து, தாய் மரியாம் இவர்களுக்கு குடும்பத்தில் 4 வது குழந்தையாகப் பிறந்தார் அன்னக்குட்டி. பிறந்து 3 மாதங்கள் ஆகும் போதே தன் தாயை இழந்தார். தம் அன்னையின் சகோதரியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். அவருக்குத் திருமணம் செய்து வைக்க வீட்டில் திட்டமிட்டபோது துறவியாக வாழ விரும்பிய அன்னக்குட்டி நெற் பயிர் பதரை எரிப்பதற்கு மூட்டியிருந்த நெருப்புக் குழிக்குள் குதித்து தான் அப்படிச்செய்தால் எவரும் மணம் முடிக்கச் சம்மதிக்கமாட்டார்கள் என்ற அவள் எண்ணியிருந்தாள். அவரது தீக்காயங்கள் குணமாக 3 மாதங்களாகின.
தனது ஆகஸ்டு 2, 1928 ஆம் ஆண்டு 17-வது வயதில் பரணஞானம் புனித பிரான்சிஸ் கிளாரிஸ்ட் கன்னியர் துறவற சபையில் சேர்ந்து " அல்போன்சா " என்ற மறு பெயரை பெற்றார். ஆகஸ்ட் 12, 1936 ஆம் ஆண்டு தமது இறுதி வார்த்தைப்பாட்டை எடுத்துக் கொண்டார். அருட் சகோதரியாக இருந்த பொழுது அவர் சில காலம் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து பல முறை வியாதியால் தாக்கப்பட்டார். அவர் சொல்லொன்னாத இன்னல்கள் நடுவே 1946-ம் ஆண்டு ஜுலை 28-ம் நாள் தன் ஆன்மாவைத் தன் இதயவேந்தன் இயேசுவுக்குக் கையளித்து இயேசு, மரியாள், சூசையப்பர் திரு நாமங்களை உச்சரித்தவாறு விண்ணுலகில் மலர்ந்தார்.
இறந்த சில தினங்களிலேயே அவரது மாணவர்கள் அன்னாரது கல்லறையை தரிசித்து வேண்டுதல் நிறைவேற்றினார்கள். அருட் சகோதரியிடம் தொடர்ந்து வேண்டுதல் செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்க ஆரம்பித்தது. இதன் பயனாக அவரது கல்லறைக்கு இறைப் பற்று கொண்டவர்களின் வரவு அதிகமாகி ஒரு புண்ணிய பூமியாக மாறியது. இன்று " கோட்டயம் " மாவட்டத்திலுள்ள "பரண்ங்கஞானம்" இந்தியாவின் " லிசியூக்ஸ் " என அழைக்கப்படுகிறது. இந்த பெயர் புனித தெரசா அவர்கள் பிரான்சு நாட்டில் பிறந்த இடமான "லிசியூக்ஸ்" குறிக்கிறது.
கத்தோலிக்க திருச்சபையில் ஒருவர் "புனிதர்" பட்டம் பெற பல விதமான இடர்பாடுகளையும், தடைகளையும், பல ஆண்டுகளையும் தாண்டி வர வேண்டும். நிபந்தனைகள் கடினமானவை இறந்து போன கத்தோலிக்கரின் ஆய்வுகள் பிறந்த மண்ணிலிருந்து ஆரம்பமாகிறது. தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட நபர்கள் தமது ஊரிலுள்ள கத்தோலிக்க இறை மாவட்டத்தில் எடுத்துரைத்த பின்னர் அங்கே ஆய்வு ஆரம்பமாகிறது. இந்த பணியில் பயணைக் கண்டால் அவருக்கு "கடவுளின் ஊழியர்" ((Servant of God)) என்ற பட்டம் வழங்கப்படுகிறது.
அருட் சகோதரி அல்போன்சாவின் அருள் அடையாளங்கள் பாலா மறை மாவட்டத்தில் 1953-ம் ஆண்டு ஆய்வு தொடங்கப்பட்டது. பின்னர் இது வத்திகானிலுள்ள புனிதர் பட்டமளிக்கும் பேராலயத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக "கடவுளின் ஊழியர்" என்பவர் புதிய பட்டமாகிய "வணக்கத்துக்குரியவர்" (Venerable) என்பதற்கு தகுதியுடையவராவர்.
பின்னர் மூன்றாம் நிலை தொடங்கப்படும். "புனிதர் பட்டமளிக்கும் பேராலயத்தால் தீவிரமான நடவடிக்கைகளும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும். அன்னாரது தனிப்பட்ட வாழ்க்கை, எழுதப்பட்ட குறிப்பேடுகள் - இவற்றின் அடிப்படையில் அவர் தமது பரிசுத்த நிலையில் பல புனித செயல்கள் புரிந்தாரா அல்லது திருச்சபைக்காக தனது உயிரை தியாகம் செய்தாரா என்பனவற்றை கவனமாக கையாண்டு ஓர் முடிவுக்கு வரும். இதன் பின்னர் அன்னாருக்கு முத்திப் பெறு பெற்றவர் (Blessed) என்ற பட்டம் கொடுக்கப் பரிந்துரைக்கப்படும். 2-ம் அருள் சின்னப்பரால் 1986 பெப்ருவரி திங்கள் 8ம் நாள் அருட் சகோதரி அல்போன்சா அவர்கள் "முத்திப் பெறு பெற்றவர்" என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
இறுதியான நிலை தான் "புனிதர்" (Saint) பட்டம் பெறுதல். இந்த இறுதி நிலைக்கு மிகவும் அவசியமானது அன்னாரால் ஒரு அருள் அடையாளம் அல்லது புதுமை நடைபெற வேண்டும். இவ்வாறான அருள் அடையாளம் சகோதரி அல்போன்சாவால் நடைபெற்றுள்ளது.
குருப்பன் தாரா என்ற ஊரில் "ஜினில்" என்ற பத்து வயது சிறுவன் அவனது கால்கள் முறுக்கப்பட்ட (Twisted Legs) நிலையில் பிறந்தான். அவனது பிறப்பை மேற்பார்த்த மருத்துவ நிபுணர்கள் ஊனமுடன் பிறந்த அவனுக்கு வாழ்நாள் முழுவதும் ஊனமாக இருக்க நேரிடும் என அத்தாட்சி கொடுத்தார்கள். ஆனால் 1999-ம் ஆண்டு அவனது பெற்றோர்கள் அருட் சகோதரி அல்போன்சாவின் கல்லறைக்கு எடுத்துச் சென்று திருத்தலத்தில் வேண்டுதல் செய்தார்கள். அதன் பின்னர் அவனது கால்கள் சரியான நிலைக்கு திரும்பி பூர்ண குணமடைந்து அவன் நடக்கத் தொடங்கினான்.
கத்தோலிக்க திருச்சபையில் இயற்கைக்கு எதிராக நமது உணர்வுகள் மூலம் அறிந்து கொள்ளக் கூடிய அருள் அடையாளங்களும், புதுமை நிகழ்ச்சிகளும் நம்பத்தக்கதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அருட் சகோதரி அல்போன்சா தனது இன்னல் நிறைந்த வாழ்க்கையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு வாழ்ந்தமையால் அவர் விண்ணுலகில் தனிப்பட்ட அங்கம் வைத்துக் கொண்டு தமது அடியார்களுக்கு பலவித விசேசமான அருட் கொடைகளை அருள்கிறார் என்ற பூரண நம்பிக்கையுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவரது திருத்தலத்திற்கும், கல்லறையை தரிசித்தும் வேண்டவும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஆசியக் கத்தோலிக்க செய்தி நிறுவனத்தின் அதிபராகிய அருட் சகோதரர் பிரான்சிஸ் வடக்கேல் "அருட் சகோதரி அல்போன்சாவுக்கு புனிதர்" பட்டம் கொடுப்பதற்கு தேவையான எல்லா முறையான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுவிட்டன. வருகிற நவம்பர் மாதம் வத்திகானில் கூடும் "புனிதர் பட்டம் அருளும் சபையில் ஒரு நாள் குறிக்கப்படலாம்" என அறிவித்துள்ளார். இந்த நற்செய்தியை இந்திய திருச்சபையும், சிரியன் மலபார் கத்தோலிக்கரும் மிகவும் ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டு காத்திருக்கிறார்கள்.
கேரளாவிலும் பல மாநிலங்களிலும் அருட் சகோதரியின் பெயர் தாங்கிய திருத்தலங்கலும், சிறு ஜெபக் கூடங்களும் உள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் வாழும் ஒரு லட்சம் சிரியன் மலபார் கிருஸ்தவர்களில் இரண்டு பங்குகள் அருட் சகோதரி அல்போன்சா பெயர் தாங்கி செயல்படுகின்றன.
அருட் சகோதரி அல்போன்சாவின் "இன்னல் நிறைந்த இன்ப வாழ்வின்" மகிமையை எல்லோரும் உணர்ந்து அதனது முடிவில்லா பயன்களைப் பெற்று உலகம் முழுவதும் அவருக்கு பல செபக் கூடங்களும், திருத்தலங்கள் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
2007-ம் ஆண்டு ஜுன் முதல் தேதியன்று புனிதர் பட்டமளிக்கும் பேராலயத்தின் தலைவர் மேன்மை மிகு கர்தினால் ஜோ சே சரேய்வா மாட்டினஸ் அவர்கள் திருத்தந்தை 16-ம் பெனிடிக்ட் அவர்களை தனியாக பேட்டி கண்டார். அப்பொழுது கேரளாவைச் சார்ந்த புனித கிளாரம்மாள் சபையின் அருட் சகோதரி அல்போன்சா (1910 - 1946) அவர்களுக்கு அக்டோபர் 12, 2008யில் புனித பட்டமளிக்கும் ஆவணத்தை வெளியிட அனுமதி வழங்கினார்.
புனித அல்போன்சாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.