புனித அந்தியோக்கியா இஞ்ஞாசியார்
கி.பி 45-107
கிறிஸ்துவை வழிபடுவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள் இல்லை. கிறிஸ்து கூறிய உபதேசங்களை அப்படியே பின் பற்றுபவர்களே உண்மையான கிறிஸ்தவர்கள் ஆவார்கள். கிறிஸ்துவின் போதனைகளை மக்களுக்கு பரப்பியதால், பலர் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் புனித அந்தியோக்கியா இஞ்ஞாசியார் ஆவார்.
இவர், நற்செய்தியாளரான புனித யோவானின் சீடராக இருந்தார் . புனித பேதுரு இவரை அந்தியோக்கியா நகரின் ஆயராக்கினார். 40 ஆண்டுகள் திருச்சபையை ஆண்டு வந்தவர் இவர். திவ்விய நற்கருணயில் இறைவன் இருக்கின்றார் என்பதை முதன்முதலாக குறிப்பிட்டார். கிறிஸ்துவைப் பற்றி மக்களுக்கு அறிவித்ததற்காக இவர் தண்டனை பெற்றார். கிறிஸ்துவுக்காக தமது இரத்தததையும் கொடுக்க முன் வந்தார். இவரைக் கைது செய்த அரசன் நீ யார்? என்று கேட்டதற்கு 'கடவுளை என்னுள் கொண்டு செல்கிறவன் நான்" என்று மிகவும் துணிவுடன் பதில் அளித்தார். அதனைக் கேட்ட அரசன், இவரை பசித்திருக்கும் சிங்கங்கக்கு இரையாகப் போட்டு கொல்ல ஆணைப் பிறப்பித்தான்.
தமது மரணம் நெருங்கியும் கூட மகிழ்ச்சியுடன் 'நான் கிறிஸ்துவின் கோதுமை" என்ற கூறினார். மேலும் விலங்குகளுக்கு இரையா, நெருப்பா சிலுவை மரமா எனது ஆண்டவரிடம் போவததற்கு இவை உதவியாக இருக்குமாயின் நான் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். சாகும் முன் மக்களிடம் 'நீங்கள் சாதாரண வாழ்வு வாழவில்லை. இயேசு கிறிஸ்துவின் வாழ்வையே வாழ்கிறீர்கள் என்றும், உங்கள் உடல் கடவுளுடைய ஆலயம், அதனால் அதைத் தூய்மையாக வைத்திருங்கள். கிறிஸ்து பிதாவின் கட்டளைப்படி நடந்ததைப் போல் நீங்களும் கிறிஸ்துவின் கட்டளைப்படி நடந்து கொள்ளுங்கள்" என்றும் கூறி, சிங்க மனத்துடனே சிங்கங்களுக்கு உணவானார்.