புனித கொன்சாலோ கார்சியா (1556 - 1597)
கொன்சாலோ கார்சியா கி.பி. 1557 ஆம் ஆண்டு மும்பையிலுள்ள வாசையில் ஒரு போர்த்துக்கீசிய தந்தைக்கும் கொங்கண் மொழி பேசும் தாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவர் தன்னுடைய கல்வியை மும்பையில் இயேசு சபையார் நடத்தி வந்த கல்வி நிறுவனங்களில் பெற்றார். அப்போதுதான் இவருக்கு செபஸ்தியோ கான்கால்வ்ஸ் என்னும் இயேசுசபை குருவின் அறிமுகம் கிடைத்தது. அவர் எப்போதுமே ஜப்பானுக்குச் சென்று மறைபோதகப் பணியாற்றவேண்டும் என்று சொல்லி வந்தார். இதனால் கொன்சாலோ கார்சியோவுக்கும் ஜப்பானுக்குச் சென்று மறைபோதகப் பணியை ஆற்றவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஓராண்டு காலம் ஜப்பான் மொழியைக் கற்றுக்கொண்ட இவர் தன்னுடைய 15-ஆம் வயதில் செபஸ்தியோவுடன் ஜப்பான் சென்றார்.
ஜப்பானிய மொழியை இவர் ஏற்கனவே கற்றிருந்ததால், அம்மக்களின் நன்மதிப்பைப் எளிதாகப் பெற முடிந்தது. இவர் இயேசு சபையில் சேர்ந்து ஒரு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அது முடியாமல் போகவே அங்கிருந்து ஆல்கோ என்னும் இடத்திற்குச் சென்று சிலகாலம் வணிகம் செய்தார். அது தென்கிழக்காசியா முழுவதும் பல கிளைகள் கொண்டு பரவியது. பின்னர் இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவுக்குச் சென்று அங்கே பொதுநிலை மறைபணியாளராகப் பணியாற்றினார். அங்கேதான் இவர் நிழக்கிழார்களையும் அரசியையும் மனமாறச் செய்தார். அப்போது இவர் பிரான்சிஸ்கன் சபைக் குருவான பீட்டர் பாப்திஸ்டி என்பவரைச் சந்தித்தார். அவரால் தூண்டப்பட்டு அச்சபையில் பொதுநிலை சகோதரராக சேர்ந்தார். அங்கே தொழு நோயாளர்களோடு பணியாற்றினார். அப்போதே அவர் அச்சபையில் திருநிலைப்பாட்டினைப் பெற்றார்.
அதன்பிறகு இவர் 1592 ஆம் ஆண்டு, மே 26 ஆம் நாள், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஸ்பானிய ஆளுனரால் அரசு சார்பாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார். அங்கு நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தபின், அப்போதைய ஜப்பானிய சர்வாதிகாரியால் ஆட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் தங்கியிருந்த மியாகோ என்னும் இடத்திலிருந்த மடத்திலேயே 1596 ஆம் ஆண்டு, டிசம்பர் 08 ஆம் நாள் அவரோடு பணிசெய்த மற்ற 25 கிறிஸ்தவர்களோடு சிறைவைக்கப்பட்டார். இதில் மூன்று இயேசு சபை துறவிகளும் அடங்கும். சிலநாட்களுக்கு பின் மாலை செபம் செய்துகொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். 1597 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேடி தேதி கைது செய்யப்பட்ட 26 பேர்களது இடது காதுகள் அறுத்தெறியப்பட்டன. அவற்றை கிறிஸ்தவர்கள் எடுத்து பாதுகாத்து வந்தனர்.
1597 ஆம் ஆம் பிப்ரவரி 5 ஆம் நாள் அவர்களை சிலுவையில் அறைய ஆணை பிறப்பிக்கப்ப்பட்டது. சிலுவையில் அறையும் இடத்தை முதலில் கொன்சாலோ கார்சியாதான் அடைந்தார். அவர் முதலில் அங்கிருந்த ஒரு சிலுவையின் அருகில் சென்று, "இது எனக்கானதா?" என்றார். "இது இல்லை" என்று பதில் கூறி அவரை வேறு சிலுவையிடம் கூட்டிச்சென்றனர். அந்த சிலுவையை அடைந்ததும் முழந்தாள் படியிட்டு பணிந்து அதனைத் தழுவினார். பின்னர் அவரோடு கைது செய்யப்பட்ட மற்றெல்லோரையும் சிலுவையில் அறைந்தார்கள். பின்பு அவரை இரண்டு ஈட்டி கொண்டு இதயத்தில் குத்தினர். இவர் சிலுவையில் சாகும்வரை இறைப்புகழ் பாடிக்கொண்டே இருந்தார்.
1862 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் நாள், திருத்தந்தை ஒன்பதாம் பயஸால் கொன்சாலோ காசியாவுக்கும் அவரோடு மறைசாட்சியாக உயிர் துறந்தவர்களுக்கும் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவ்வாறாக கொன்சாலோ கார்சியா தன்னுடைய மரணத்தால் இயேசுவுக்கு சான்று பகர்ந்தார்.
இந்திய மண்ணில் பிறந்து புனிதர் பட்டம் பெற்ற
முதல் இந்தியர் இவர் என்பதை இங்கு குறிப்பிடப்பட வேண்டியது!


