சகல புனிதர்கள், சகல ஆன்மாக்கள் நினைவு

பேராசிரியர் அ.குழந்தை ராஜ் - காரைக்குடி

all saints இறைவாக்கினர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டபோது, மண்ணில் மறைந்திருந்த உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழுந்தன. வானதூதர்களை நாம் பார்ப்பதில்லை. புனிதர்களின் பூத உடல்களைப் பார்த்திருக்கிறோம். புனிதர்கள் வரலாற்றில் புகுந்தவர்கள். நம்மைப் போன்று மண்ணில் வாழ்ந்து விண்ணைச் சொந்தமாக்கிக் கொண்டவர்கள். அவர்களின் உறவை நாம் நாடுகிறோம். எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் தேதியில் சகல புனிதர்களின் விழாவையும் மறுநாள் சகல ஆன்மாக்களின் விழாவையும் கொண்டாடுகிறோம்.

வானதூதர்களை சற்றுப்பார்ப்போம். அவர்கள் பலவிதம், ஒன்பது வகையினர் அவரவர் பணிகள், தனித்தன்மை, பொறுப்பு, கடமை வரையறுக்கப்பட்டுள்ளது. அவர்களை "நவ விலாச வானதூதர்கள்" என அழைக்கிறோம்.

  1. சேராபீம் (Seraphim) - பக்தி சுவாலர்கள். இறைவனின் அன்பைப் பெற்றுத் தருபவர்கள் (எசாயா 6:1-7)
  2. கெருபுகள் (Cherubim) - ஞானதிக்கர்கள் இறை ஞானத்தைப் பெற்றுத் தருபவர்கள் (தி.வெ. 4:6)
  3. அரியாசனர்கள்(Thrones) - பத்திராசனர்கள் நீதியைப் பெற்றுத் தருபவர்கள்
  4. மேலாதிக்கர்கள்(Dominions) - நாத கிருத்தியர்கள். மனித எண்ணங்களை மாற்றி இறை சித்தத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை நமக்குத் தருபவர்கள்.
  5. புண்ணியர்கள்(Virtues) - இறைபலத்தைத் தருபவர்கள்.
  6. அதிகாரமிக்கோர் (Powers) - தீயசக்திகளை வென்ற ஆன்மீகத் தூய்மையைத் தருபவுர்கள்.
  7. முதன்மையானவர்கள்(Principalities) - பிராமிதர்கள். நாட்டையும் வீட்டையும் ஆள்வோருக்கு வலிமை தருபவர்கள். (உரோ 8:38, 1கொரி 15:24)
  8. அதிதூதர்கள்(Archangel) - இறைவன் முன்னால் நின்று அவரின் கட்டளைகளை நிறைவேற்றுபவாகள் - புனித மிக்கேல், புனித கபிரியேல், புனித இரபேல்(யூதா 9, 1தெச 15:24, எபே 1:21)
  9. காவல்தூதர்கள்(Guardian Angels) சம்மனசுகள்.

பத்தாவது நிலையில் உள்ளவர்கள் தான் புனிதர்கள் (Saints). இவர்கள் நம் காலத்தில் வாழ்ந்தவர்கள். மனிதர்களின் உணர்வு, பயம், அச்சம், நோய்களை உணர்ந்தவர்கள். நமக்காக இறைவனிடம் பரிந்து பேசி மன்றாடுபவர்கள்.

புனிதர்களைப் பற்றிப் பார்போம். அவர்களிலும் வேறுபாடுகள் உண்டு.

  1. மறைச்சாட்சிகள் - Martyrs - இயேசுவை ஏற்றுக் கொண்டதற்காகவும், பிற தெய்வங்களை மறுத்ததற்காகவும் கொல்லப்பட்டவர்கள், வாளால் அறுப்பட்டோர், சிரச்சேதம் செய்யப்பட்டோர், நெருப்பில் தூக்கி எறிப்பட்டோர் இப்படி பல உபாதைகளை அனுபவித்தவர்கள்.
  2. துறவிகள் - Monks - துறவு வாழ்க்கை வாழ்ந்து பிறருக்கு முன் மாதிரிகையாய் விளங்கினோர். வனத்துச் சின்னப்பர், வனத்து அந்தோணியார்.
  3. செபவாழ்வு வாழ்ந்தவர்கள் - Contemplatives - காட்சித் தியானம் கண்டோர். புனித குழந்தை தெரசாள், புனித பாஸ்டினா, புனித அல்போன்சா
  4. எழுத்தாளர்கள் - Commentators - புனித தாமஸ் அக்குவினாஸ், புனித கிறிஸ்தோம், புனித இஞ்ஞாசியார்.
  5. இறைவாக்கினர் - Prophets - தவறுகளைச் சுட்டிக்காட்டி மனம் மாற்றியவர்கள். திருமுழுக்கு யோவான், புனித அருளானந்தர், புனித தாமஸ் மூர்
  6. பாடகர்கள் - Choir - புனித செசீலியம்மாள், புனித கிரகோரி
  7. நோயுற்றோரைப் பராமரித்தவர்கள் - Care Takers - புனித தமியான், புனித கொல்கோத்தா தெரசா
  8. சமாதானம் செய்தோர் - Peace Makers - புனித சீயன்னா
  9. ஏழைகளுக்கு இரங்குதல் - புனித மார்ட்டின், புனித பியோ
  10. மறையுறை ஆற்றும் பணி - புனித அசிசியார், புனித அந்தோணியார், புனித சவேரியார்.

நம் ஒவ்வொருவருக்கும் வானதூதர், புனிதர்கள் ஒன்பது பேர் உண்டு. அவர்கள் நம்மைப் பாதுகாக்கும் AK47 படையினர். 'வானதூதர்கள், புனிதர்கள் உண்மையிலே இருக்கிறாகளா?' எனப் பலரைக் கேட்டால் அவர்கள் சந்தேகப்படுவார்கள் 'பேய்களை நம்புகிறாயா?' எனக் கேட்டால் பலவிதமான பேய்கள், அவைகளின் பெயர்கள், தங்கியிருக்கும் குடியிருப்பு, விலாசம், எல்லாம் சொல்வார்கள். தீமையையும், நோயையும், இருட்டையும் மனிதன் தேடிப்பிடித்துத் தக்கவைத்துக் கொள்கிறான். ஆனால் நன்மை, உடல்சுகம், ஒளியை ஒதுக்கி ஓடுகிறான். ஆதாம் ஏவாளின் குணம் இவர்களை விட்டபாடில்லை.

இதற்கு விடிவே கிடையாதா? ஏன் இல்லை நிச்சயம் உண்டு. அதுதான் நாம் இயேசுவின் மீது வைக்க வேண்டிய விசுவாசம். நம்மீது அவருக்கு கரிசனை உண்டு. நாம் அவரை அணுகுதில்லை. "உலகம் முடியுமட்டும் உங்களோடு இருப்பேன்" என வாக்குத்தத்தம் கொடுத்துள்ளார். அவர்வழி செல்வோம். பயத்தினை வேரறுப்போம் - இயேசுவின் பங்காளிகளாவோம்.

வத்திக்கானுக்கு வெளியே பல்வேறு புனிதர்களின் திருப்பண்டங்கள் உள்ள இடம் ஒன்று உண்டென்றால், அது சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றின் கரையில் உள்ள இடைக்காட்டூர் ஆகும். அங்கே நாற்பது புனிதர்களின் புனிதப்பண்டங்கள் (Relics) உள்ளன.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு நவம்பர்