இறுதி யாத்திரை வழங்கும் சித்தாந்தம்

திருமதி அருள்சீலி அந்தோணி
 funeral

பிரஜோத் என்ற 62 வயது மன்னன், புத்தரிடம் வந்து "ஐயா, மரணம் மனிதனை ஒரேயடியாக வீழ்த்தி விடுமா?" என்று கேட்டான்.

அதற்குப் புத்தர், "நீ இளைஞனாக இருந்தபோது உன் முகம் எப்படி இருந்தது, இன்று எப்படி உள்ளது?" என்று கேட்டார்.

அதற்கு மன்னன் "நான் சிறுவனாக இருந்தபோது என் முகம் மலரைப் போன்று இருந்தது. ஆனால், இப்போது, அதில் சுருக்கங்களும், நரைத்துப்போன முடிகளும், பார்க்கவே அருவெறுப்பாக உள்ளது" என்றான்.

"திடீரென்று ஏன் உன்முகம் அப்படி மாறியது" என்று புத்தர் கேட்டார். "இல்லை மாற்றங்கள் படிப்படியாகத் தான் வந்தன. இந்த மாற்றம் மரணத்திற்கு அறிகுறியோ, என்று எனக்குத் தோன்றியது. எனக்கு ஒரே பயம் நித்தம் என்னைப் பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றது" என்று புலம்பினான் மன்னன்.

புத்தர் - "ஆமா நீ கங்கையைப் பார்த்திருக்கிறாயா? "என்று கேட்டார்.

"ஆமாம் சுவாமி, மூன்று முறைப் பார்த்திருக்கின்றேன். முதலில் 5 வயதில், இரண்டாவது 13 வயதில் மூன்றாவது 62 வயதிலும் பார்த்துள்ளேன்" என்றான் மன்னன்.

"மூன்று வயதில் பார்த்த கங்கைக்கும், பதிமூன்று வயதில் பார்த்த கங்கைக்கும் ஏதாவது மாற்றம் உள்ளதா? என்று உன் அறிவுநிலைக்குத் தோன்றியதா?" என்று புத்தர் கேட்டார்.

"இல்லை சுவாமி - மூன்று வயதில் மட்டுமல்ல அறுபத்திரண்டு வயதிலும் கங்கையை நான் பார்க்கும் போது அதைப்பற்றிய அறிவலையும் உணர்வும் அப்படியேதான் உள்ளது" என்றான் மன்னன்.

"இதிலே ஓர் உண்மை அறிந்து கொள்ள வேண்டும். உனக்கு வயது கூடக் கூட உன் முகத்தில் சுருக்கங்கள் வந்ததே ஒழிய, உன் அறிவு நிலையும், உணர்வும் எப்போதும் போல ஒரே நிலையில் இருந்திருக்கிறது".

"ஆக மாற்றத்திற்குப்படுகிற எல்லாம் அழிந்து விடும். எது மாற வில்லையோ, அதற்குத் தொடக்கமும், முடிவும் இல்லை. எனவே உடல் அழியும் போது ஒட்டு மொத்த அழிவும் வந்து விடுமோ என்று பயப்படவோ, அச்சமடையவோ தேவை இல்லை" என்றார் புத்தர்.

இந்தச் சந்திப்பு பிரஜோத் மன்னனுக்கு மரணப் பயத்திலிருந்து விடுதலையளித்தது. மரண வாசல் அவனுக்கு மாபரனின் சன்னதியாகக் கண்ணில் தெரிந்தது.

இறுதி மூச்சுவரைக் கடமையே கண்களாகக் கருதுபவர்களுக்கு மரண நித்திரை, ஒரு மகிழ்ச்சி யாத்திரையாகவே இருக்கும்.

வாழும் வரை தன்னுடைய ஒவ்வொரு அங்கத்தையும், மனிதனுக்காக வழங்கும் வாழையாக நாம் விளங்க வேண்டும்.

சாவுக்கு முந்திய வினாடி வரை பிறர் வாழ்வுக்கு உதவும் துடுப்பாக நாம் இருக்க வேண்டும். மரண இலட்சியம் தான் மனிதனின் இவ்வுலகில் வாழ்ந்தற்கான அர்த்தம் ஆகிறது. ஒரு மரம் அதன் கனியுடன் அழிந்துப் போவதில்லை. தன் வாழ்வை அந்தக் கணிக் குள்ளிருக்கும் விதையாக முடக்கி வைத்துக் கொள்கிறது. நேரம் வரும் போது அவ்விதை மண்ணில் புதைந்துத் தன் வாழ்வை மீண்டும் தொடர்கிறது.

மரம் அதன் தன்மைக்கேற்றபடித் தன் விதையை விட்டுச் செல்வது போல், மனிதனும் அவனவன் ஏற்றுக் கொண்ட வாழ்விற்குப் பயனுள்ள விதையாக மரணிக்க வேண்டும்.

இதையே "ஒரு வீரன் நோய் வாய்பட்டுச் சாவதை விரும்புவதில்லை.போர்க்களத்தில் வீரமரணமடைவதையே விரும்புகிறான். மரணம் எப்போதும் ஆனந்தமானது. அதுவும் இலட்சியத்தோடு இருக்கும் வீரனுக்குப் பன்மடங்கு மகிழ்ச்சி கொடுக்கின்றது. மரணம் ஒர் பேய் அல்ல, உண்மையான நண்பன். அவன் எப்போதும் நமக்குப் புதிய சந்தர்பங்களையும் புதிய நம்பிக்கையையும் அளிக்கின்றான். தூக்கத்தினைப் போல, சோர்வை நீக்கி இனிமையான புதியபாதையைக் கொடுக்கின்றான்" என்றார் மகாத்மா காந்தி.

எனவே நாம் நல்ல அறங்களைச் சேமித்து வைத்து மரணிக்கவேண்டும். அப்படிப்பட்ட மரணம் ஒரு போதும் மண் பசிக்குச் சோளப் பொரியாக மாறாது. அது மண்ணைக் கிழித்துக் கொண்டு வளரும் வாழ்வுச் செடியாகத் தோன்றும்.

உன்னதக் கிறிஸ்துவின் மரணவிதை இந்த உலகிற்கு உணர்த்திய சித்தாந்தம் இதுதான். மண்ணில் மடிந்த மூன்றாம் நாள் முழு ஆளுமையுடன் முளைத்தது அந்த முளைப்புத் தன்மையினை நம் முடைய மரணமும் பெற்றாக வேண்டும் என்பதே இறைவனின் திட்டம். இயேசுவின் மரணப் பங்கீடு ஒன்றுதான் கிறிஸ்துவம் நமக்கு வழங்கிய பேரின்பம்! பேரானந்தம்! அருங்கொடை அருள்வரம்!

மரணம் தான் இவ்வுலகில் நாம் எழுதும் இறுதிப் பரீட்சை, இதில் தேர்ச்சிப் பெற வேண்டுமானால் வாழ்க்கை நுணுக்கங்களைத் தெளிவாக, நல்ல ஆசிரியர்களிடம் கற்றிருக்க வேண்டும். ஞான விளக் கங்களை ஆன்மீகக் குருக்கள் வழியாகக் கேட்டுத் தெளிவுப் பெற வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்திப் பிறகிந்தனைகளை விலக்கி, அகத்திலிருக்கும் தூய ஆவியை உணரவேண்டும். மரணப் பயம் ஒரு துளி கூட இருக்கக் கூடாது. இவையே இவ்வுலகை வெல்லும் படிக்கற்கள்!

மரணம் ஒரு புதிய பாதை, புதிய பார்வை, புதிய அத்தியாயம், கழுவும் தியான விருட்சிகம். ஆசை விலங்குகளைப் பாவங்களைக் கண்ணீரால் உடைத்தெறியும் ஞான உளி அதுவே தன்னை முழுமையாக ஆட்கொள்ளும் ஞானஒளி.

கனத்த இதயத்தைத் தளரவிடுங்கள் இறுக்க மான மனதை மலர விடுங்கள்! கவலைகளைக் கழுவி விடுங்கள்! பொறுமையை ஆடையாக அணிந்து கொள்ளுங்கள் உலகிற்கு வெறுமையாக நாம் வந்தோம் என்பதை நினைவு கூறுங்கள்! விரக்தியை விரட்டுங்கள்.

தவம் நம்மை வசந்தத்திற்கு அழைத்துச் செல்லும் வழியாக ஏற்றுக் கொள்ளுங்கள் ஜெபத்தினால் வல்லமை பெறுங்கள் தவத்தினால்தீமையை அழியுங்கள்!

இயேசுவின் பாதசுவடுகளில் நம் பாதசுவடைப் பதிப்போம். இயேசுவின் உயிர்ப்பு நமக்கு மறு வாழ்வு! தூய்மையான உறவுகளைக் கரங்களில் படர விட்டு இயேசுவோடு இணைந்து மரணத்தை வெல்வோம்.


மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  நவம்பர்