நீத்தார் நினைவு கொண்டாட்டம்

தந்தை தம்புராஜ் சே.ச.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் நீத்தார் நினைவைக் கொண்டாடுகிறோம். ஆம், இது ஒரு கொண்டாட்டம், விழா என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால் நாம் அன்பு செய்த, அவர்களது அன்பைப் பெற்ற நாம் அவர்கள் மரித்து, இவ்வுலகிலிருந்து மேலான ஓர் உலகிற்குச் சென்று இறைவனின் அரவணைப்பில் இருக்கின்றார்கள் என்பதை நம்புகிறோம்.

நவம்பர் மாதத்தில் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற நல்ல உள்ளங்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காகச் செபிக்கின்றோம். தங்களுடைய நல்ல வாழ்க்கையால் நமக்குத் தங்கள் மரணசாசனத்தை விட்டுச் சென்றுள்ளார்கள். அவர்கள் இவ்வுலகில் இருந்தபொழுது தாங்கள் செய்ய நன்மைகளைத் தங்களோடு எடுத்துச் செல்கின்றார்கள். இந்த நன்மையை வைத்துத்தான் இறைவன் இவர்களுக்குச் சன்மானம் வழங்குகின்றார்.

இத்தருணத்தில் மேலுலகில் உள்ள மூன்று நிலைகளைப் பற்றி நாம் சிந்திப்பதும் முறையாகும். மோட்சம், நரகம், உத்தரிக்கும் நிலை அல்லது இடம். நாம் பரகதியில் இருக்க எப்பொழுது தகுதி பெறுகிறோம் என்றால், நாம் பிறருக்கு உதவிக்கரம் நீட்டி, பிறாது வாழ்வை வளமாக்கும் பொழுதுதான்.

அண்மையில் ஓர் இந்தியருக்கும். ஒரு பாகிஸ்தான் நாட்டின் இளம் பெண்ணுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. திரு. கைலாஷ் சத்தியார்த்தி (இந்தியா), செல்வி மலாலா (பாகிஸ்தான்). குழந்தைகளின் மேம்பாட்டிற்காக உழைத்தவர்கள் இவர்கள்.

இந்த அமைதிப் பரிசு எப்படி உருவானது என்பதைப் பார்ப்போம்.

1888 ஆம் ஆண்டு ஒரு நாள் அதிகாலையில் ஆல்ஃரெட் நோபல் எழுந்தார். இவர்தான் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். வெடிமருந்து அழிவின் கருவாய்ச் செயல்பட்டது. இதைச் செய்து விற்பனை செய்ததால் இவர் ஏராளமான செல்வத்தைச் சேர்த்தார். இவர் வாசித்த செய்தித்தாள்களில் இவருடைய மரண அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது

. உண்மையாகவே இறந்தது இவரல்ல; இவருடைய சகோதரர் தான் இறந்திருந்தார். செய்தித்தாள் நிருபர் இவருடைய பெயரைத் தவறாக வெளியிட்டிருந்தார்.

முதன் முதலாக ஆல்ஃபெரட் நோபல் உலகம் இவரை எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்ததோ அதே கண்ணோட்டத்தில் ஆல்ஃ பெரட் தன்னைக் கண்டார். 'வெடிகுண்டு மன்னர்“ என்று மட்டுமே இவரைக் குறித்து குறிப்பு வெளியாயிருந்தது. மனிதர் மனிதருக்கிடையே நிலவி வந்த ஏற்றத்தாழ்வுகளையும், கருத்து வேறுபாடுகளையும் களைந்தெறிவதற்கு இவர் அரும்பாடுபட்டதைக் குறித்து எல்லாம் ஒன்றும் சொல்லப்படவில்லை. மரணத்தை விற்கும் வியாபாரியாகக் கருதப்பட்டார். இதற்காக மட்டுமே இவர் வருங்காலத்தில் நினைவு கூறப்படுவார்.

இந்த நினைவு இவரை உறைந்துபோகச் செய்தது. நடுநடுங்கச் செய்தது. தம்முடைய வாழ்வின் உண்மையான குறிக்கோளை உலகினர் மனத்தில் பசுமரத்து ஆணிபோல் பதியும்படிச் செய்ய உறுதி பூண்டார். எனவே, தனது மரண சாசனத்தை எழுதினார். பரிசுகளிலெல்லாம் தலைசிறந்த பரிசாகிய சமாதானத்திற்கான நோபல் பரிசை வழங்க தம் சொத்தையெல்லாம் விற்றுச் சென்றார். உலக முடிவுவரை இவரது பெயர் இவ்வுலகில் நிலைத்து நிற்கும்.

இதோ ஒரு சிறுகதை: சீன நாட்டு ஞானி ஒருவருக்கு விண்ணுலகையும், நரகத்தையும் காணும் வாய்ப்புக் கிடைத்தது. முதலில் ஞானி நரகத்திற்குச் சென்று பார்த்தார். நரகத்தில் ஏராளமான அறுசுவை உணவும், பழவர்க்கங்களும் குவிந்து கிடந்தன. எனினும் அங்குள்ளவர்கள் எல்லாம் சூம்பிப்போன கை கால்களுடனும், ஒட்டிக் காய்ந்துபோன வயிற்றுடனும், எலும்பும் தோலுமாகக் காட்சி அளித்தனர். பசிப்பிணியால் மடிந்து கொண்டிருந்தனர். காரணம் என்னவென்றால் அவர்களுடைய கரங்களில் நீண்ட கரண்டிகள் உறுதியாகக் கட்டப்பட்டிருந்ததால் கரங்களில் எடுக்கும் உணவை வாய்க்குக் கொண்டுபோகக் கரங்களை மடக்க இயலவில்லை. ஒவ்வொருவரும் தன் தன் வயிற்றை நிரப்பி, தன் தன் பசியைப் போக்கிக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்களே ஒழிய, அயலாரைப் பற்றி எள்ளளவும் சிந்திக்கவில்லை.

அடுத்தபடியாக அந்தச் சீன ஞானி நரகத்திலிருந்து விண்ணுலகிற்குச் சென்றார். நரகத்தில் இருந்தது போலவே விண்ணுலகிலும் ஏராளமான அறுசுவை உண்டியும், கனிவர்க்கங்களும் மலைபோல் குவிந்து கிடந்தன. நரகத்திலுள்ளவர்களுடைய கைகளில் எவ்வாறு நீண்ட கரண்டிகள் கட்டப்பட்டிருந்தனவோ, அவ்வாறே இவர்களு டைய கைகளிலும் கரண்டிகள் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தன. இருப்பினும் இவர்களுடைய கை கால்கள் உருண்டு திரண்டு உடல் கட்டழகுடன் காட்சியளித்தன. காரணம் என்னவென்றால் ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி எண்ணாமல், அயலாரைப் பற்றியே எண்ணுவதில் கருத்தாய் இருந்தனர். கையை மடக்க முடியாவிட்டாலும் கரண்டியால் எதிரில் உள்ளவருக்கு ஊட்டிவிட்டனர். இவ்வாறு ஒவ்வொருவரும் பிறருக்கு 2 உதவியதால் பிறருடைய உதவி ஒவ்வொருவருக்கும் கிடைக்க ஏதுவாயிருந்தது. 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானாகவே வளரும் என்பார்கள் அல்லவா?' இக்கூற்று இங்கே முழுக்க முழுக்க உண்மை என்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது.

ஆம், அன்பார்ந்தவர்களே! நாமும் இவ்வுலகம் பயன்பெறும் பொருட்டு பிறருடைய மேம்பாட்டிற்காக உழைப்போம். தன்னலத்தைத் தவிர்த்து, பிறர் நலத்திற்காக நம்மையே அர்ப்பணிப்போம்.

சிறு சிறு நன்மை பயக்கும் செயல்களால் நம் மரண சாசனத்தை அழியாத வகையில் காலம் என்ற மண்ணில் தடம் பதித்து, அது என்றும் அழியாதவாறு விட்டுச் செல்வோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு