வியாகுல அன்னை
திருமதி அருள்சீலி அந்தோணி ஆலந்தூர்- சென்னை
உன் இதயத்தையும் ஒரு நாள்
ஒரு வாள் ஊடுருவு மென
நீதிமான் சிமியோன்
உம்மிடம் கூறிய நாளிதுவோ
மரியே!
கொல்கதா மேட்டில்
நின்மகனைப் பறிக் கொடுத்து நின்றபோது
விம்மி அழ இம்மியும்
கண்ணீரின்றி வற்றியதோ உமது கண்கள்?
தாயே!
உயிரற்ற மைந்தனின் உடலை
நின்மடியில் தாங்கி
பயிரற்றப் பாலைநிலமாக
உளம் வெடித்துக் கதறினீரே அன்னையே!
துயரத்தின் சிகரத்தைத் தொட்டுவிட்ட
நும் இதயம் குமிறிச் சிதறியதோ!
கள்ளம் கபடமற்ற நின் மைந்தனின்
உடலில் பாரம் நின் இதயத்தைச் சிதைத்ததோ?
உமதுள்ளம் புயலெனச் சீறிச் சூறாவளியாக வீசியதோ!
நின் இதயத்தை ஊடுருவிய வாளிதுவென அறிந்தாயோ!
விழிமேல் விழிவைத்துக் காத்திருந்து
முப்பத்திமூன்று ஆண்டுகள் இதனைக் காணவா!
எம் தாயே!