அன்னை மரியின் பிறப்பு விழா.
திருமதி அருள்சீலி அந்தோணி-சென்னை.

செப்டம்பர் 8ஆம் நாள் அன்னையின் பிறப்பு விழா. அன்னையின் பிறப்பு மானிடர் அனைவருக்கும் சிறப்பு! இது திருச்சபையின் மாபெரும் சிறப்பு விழா. உலகின் பிறப்புகள் அனைத்திற்கும் மீட்பின் வித்திட்டநாள்! வாழ்வின் வித்தான விந்தைகளை நன்றி விதைகளாக தரணியில் முளைத்துள்ளாய். கருவின்போதே கறையொன்றும் படியாத இறைமகளாய் அழைப்பு பெற்றவளே மாமரி. அருள் நிறைந்த மரியே! என்று அன்று வானதூதரால் வாழ்த்துப் பெற்று அழகின் முழுமையானவள். அனைத்து அருள் வரங்களோடுஅழகில் மிளர்பவள்! ஆதவனை ஆடையாய் அணிந்த சுடரொளி! படைப்புகளிலே ஜென்ம பாவம் அறியாதவள்! சாலமோனின் எழினிகளைப் போல் அழகு வாய்ந்தவள் அன்னை மாமரி! காண்போரை கவர்ந்திழுக்கும் காந்தசக்தி மரியா! மரகதம் சூடிய வானவில் போன்ற அரியணை அவள்! மாந்தரை காத்திடும் ஓர் உன்னத ஓவியம்! தவறிய மாந்தரை வென்றெடுக்க இறைவன் சுவக்கின் அன்னம்மாள் கருவறையில் வரையப்பட்ட வண்ண ஓவியம் மரியா! நமது பார்வைகள் பெலிவு பெற! எண்ணங்கள் ஏற்றம் பெற! அன்னையின் வழி தூயதாக்கிட நம் சிந்தையில் ஏற்போம் மாமரியின் பதம் சேருவோம்.. அன்று வான தூதரின் வார்த்தைகளை "அப்படியே ஆகட்டும்" என்று தாழ்ந்து ஏற்றவளே! நற்செய்தியின் முதல் சீடத்தியாக யூதேயா மலைநாட்டிற்கு கடந்து சென்றவளே! மனிதநேயம் இங்கே நிரம்பி வழிகிறது! மரியா அருள் ஊற்றாகி முழுமையானாள்! அன்னை அன்பின் நிறைகுடம்! பிறர்குறை நீக்கும் மணிமகுடம்! கருணையின் ஊற்று! மீட்பின் அருள்கொடை மாமரியே! உம் பிறப்பு விழாவில் மானிடர் யாம் இன்புற எம் பாவசேற்றில் செந்தாமரையாய் மலர்பவளே! எம்மை காத்தருள்வாய் மரியே! அன்னையின் ஆசீரை நாளும் பெற்றிட இந்நாள் நம் வாழ்வின் பொன்னான நாள். அன்னையின் அருள்வரங்களை நாளும் பெற அன்னையின் தாழ்ச்சியை ஆடையாக அணிவோம்! வறியோர் எங்களின் வாழ்த்துக்களை ஏற்றருள்வாய். இத்தரணியரை மகிழ்விப்பாய் தாயே! அழகோவியமே! உமை வணங்குகின்றோம்!


