கார்மேல் - உத்தரியமாதா திருவிழா - ஜூலை-16
திருமதி அருள்சீலி அந்தோணி
பரிசுத்த பூமியாம் பாலஸ்தீன நாட்டின் மேற்குத் திசையில் மத்தியதரைக் கடலுக்கு அருகாமையில் ஓர் உயர்ந்த மலை இருக்கிறது. இதற்குக் கார்மேல் மலை என்று பெயர். கடற்கரையோரத்தில் இருக்கும் இம்மலையைப் பற்றி விவிலியத்தில் அருமையான வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.
அதன் அழகிய சிகரம் எபிரேய மொழியில் ” தோட்டம்” அல்லது ”நடப்பட்ட திராட்சைத் தோட்டம்” என்ற சிறப்புப் பெயர் பெற்றிருக்கின்றது. இந்த மலையில் எலியாஸ் இறைவாக்கினரும் அவருக்குபின் எலிசேயுஸ் என்பவரும் தங்கிச் செப,தபங்களால் பல அரிய வல்லச் செயல்கள் செய்து வந்தனர். இவர்கள் கார்மேல் மலை சன்னியாசி என்ற அழைக்கப்பட்டனர்.
இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் என்னும் கார்மேல் மாதா சபையைச் சார்ந்த ஒரு மடம் இருந்தது. இச்சபையின் தலைவர் புனித சைமன்ஸ்தாக் என்பவராவார்.
1251ஆம் ஆண்டு ஜீலை மாதம் 16 ஆம் நாள் தேவான்னையின் அடைக்கலத்தை நாடிப் பக்தியாகச் செபித்துக் கொணடிருந்தார். அச்சமயத்தில் அன்னை மரியா தமது கரத்தில் ஓர் உத்தரியத்தை ஏந்திவளாய் அவர்க்குக் காட்சி தந்தார்.
அவரைப் பார்த்து “என் பிரிய மகனே, இதோ இந்த உத்தரியத்தை என் விருதாக (வெற்றிச்சின்னமாக) ஏற்றுக் கொள். இதை அணிந்து கொண்டு மரிக்கின்றவன் நித்திய நரக ஆக்கினையின்று தப்பித்துக் கொள்வான். இது பாதுகாப்பின் சின்னமாகவும், அட்டையாளமாகவும், ஆபத்தானச் சமயத்தில் கேடயமாகவும், என்னுடைய உதவியின் ஆரம்பமாகவும் இருக்கிறது.” என்று சொன்னார்கள்.
1301 ஆண்டு உத்தரியமாதா 22ஆம் அருளப்பர் என்ற திருதந்தைக்குக் கனவில் தரிசனமாகி உத்தரியம் அணிந்த உத்தரியச் சபையார் மரித்து உத்தரிக்கிறஸ்தலத்திற்குப் போயிருந்தால் கூடிய விரைவில் நான் அவர்களை மீட்டுக் கொள்வோன். என்றார். மேலும் மரணத்திற்குப் பிறகு வரும் முதல் சனிக்கிழமைகளில் அவர்கள் அவ்விடத்திலிருந்து விடுதலை ஆவார்கள் என மொழிந்தர்கள்.
கார்மேல் மாதாவுடைய பேருதவியைக் கார்மேல் சபையினர் மட்டுமல்ல, அவரது உத்தரியத்தை அணியும் அனைவரும் பலன் அடைவார்கள். உத்தரியத்திற்குப் பதிலாக உத்தரியச் சுருபத்தை அணியலாம். இந்தப் பக்தியானது மோட்ச இராக்கினியின் ஞானபிள்ளைகளாக வாழ்வதற்கு உதவிபுரியும்.
புனித கன்னிமரியாளைப் பின்பற்றி அவரைப் போல் பரிசுத்தமாய் வாழ்ந்து அவர்களுக்குச் சொந்தமானவர் என்று வெளிப்படையாக வாழ்ந்துக் காட்டுவது பெரும் பாக்கியமாகும்.
பரிசுத்த உத்தரியத்தை நாமும் அணிந்துத் தீயோனிடமிருந்து நம்மைக் காப்போம். எல்லா நேரங்களிலும் உத்தரியமாதா நம்மைக் காத்திடுவாள் என்பது திண்ணம்.
உத்தரியமாதாவே! எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துப் பேசுவீராக!