அன்னை மரியாளின் பிறப்பு -வரலாறுக்குறிப்பு
இரான்சம் அமிர்தமணி
புனிதர்களான அன்னம்மாள் - சுவக்கீன் ஆகியோரின் மகளாக, ஜென்ம பாவத்தின் கறைகள் இல்லாத மாசற்ற நிலையில் தன் தாயின் உதரத்தில் தூய கன்னி மரியா கருவாக உருவாகிய திருவிழாவை பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 8-ஆம் நாளன்று கத்தோலிக்கத் திருஅவை சிறப்பிக்கின்றது. அதே பாரம்பரிய மரபை பின்பற்றி, சரியாக ஒன்பது மாதங்கள் கழித்து, அதாவது செப்டம்பர் மாதம் 8-ஆம் நாளன்று, கன்னி மரியாவின் பிறந்த நாளை திருஅவை வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றது.
கன்னி மரியாவின் குழந்தைப் பருவம் மற்றும் இளவயதில் அவர் வளர்ந்த வாழ்க்கைச் சூழல் குறித்த நேரிடையான பதிவுகள் எதுவும் திருவிவிலியத்தில் இல்லை; ஆயினும், அவருடைய பிறப்பின் சூழ்நிலைகளை எடுத்தியம்புகின்ற ஏனைய ஆவணங்களும், மரபுவழி கருத்துக்களும் திருஅவையின் தொடக்க காலத்திலிருந்தே கிறிஸ்தவ நூலாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இத்தகைய ஆவணங்களும், கருத்துக்களும் திருவிவிலியத்தைப் போன்ற அதிகாரபூர்வமானப் பதிவுகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், திருஅவையின் மரபுவழி நம்பிக்கைகளைக் கோடிட்டுக் காட்டுகின்றன.
இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் இறுதிவடிவம் கொடுக்கப்பட்டதாகக் கருதப்படுகின்ற புனித யாகப்பர் எழுதிய (முறைசாரா) நற்செய்தி நூல், “மரியாவின் தந்தை சுவக்கீன் இஸ்ராயேலின் பன்னிரண்டு குலங்களில் ஒன்றைச் சார்ந்த செல்வந்தராக இருந்தார்” எனக் குறிப்பிடுகிறது. தங்களுக்கு வெகுகாலமாக குழந்தைப்பேறு இல்லாத நிலைகுறித்து சுவக்கீனும், அன்னம்மாளும் மிகவும் வருத்தமுற்றிருந்தார்கள். “தங்கள் குலத்தின் முதுபெரும்தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவரது கடைசி காலத்தில் ஈசாக்கு என்ற மகனை கடவுள் அளித்ததை சுவக்கீன் நினைவுகூர்ந்தார்” என்று தொடக்ககால கிறிஸ்தவ நூலாசிரியர்கள் எழுதுகிறார்கள்.
“கடவுள் தங்கள் மீது கொண்டிருக்கும் வெறுப்பும், அதிருப்தியுமே, தங்களுக்கு குழந்தைபேறு இல்லாமல் இருப்பதற்குக் காரணம்” என்று எண்ணிய சுவக்கீனும், அன்னம்மாளும் ஆழ்ந்த இறைவேண்டலிலும், கடுமையான நோன்பிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். ஆனால், ‘ஆபிரகாம்-சாரா’வைக் காட்டிலும் மேன்மையான வகையில் சுவக்கீனையும், அன்னம்மாளையும் ஆசீர்வதித்திட கடவுள் திருவுளம் கொண்டார். இதனையே அன்னம்மாளுக்கு காட்சி தந்த வானதூதர் “பிறக்கவிருக்கும் உங்கள் குழந்தையை தலைமுறைகளெல்லாம் போற்றி வணங்கும்” என்று முன்னறிவித்து, “கடவுள் உங்கள் மன்றாட்டுக்கு செவிமடுத்தார்; நீர் கருதரித்து பெற்றெடுக்கப் போகும் குழந்தை, உலகெல்லாம் வியந்து பேசப்படும் பெருமை பெற்றதாயிருக்கும்” என்று உரைத்தார்.
“மரியா பிறந்த பின்னர், குழந்தையின் அறையின் உள்ளேயே தனியாக “தூய திருவிடம்” ஒன்றை உருவக்கிய அன்னம்மாள், குழந்தையின் தனிசிறப்பான புனிதத்தன்மையைக் கருத்தில் கொண்டு, கீழ்த்தரமான அல்லது அசுத்தமான எதையும் அந்த அறையினுள் அனுமதிக்கவில்லை” என்று புனித யாகப்பர் எழுதிய (முறைசாரா) நற்செய்தி நூல் எடுத்துரைக்கிறது. மேலும், “மரியாவுக்கு ஒரு வயது நிறைவடைந்தபோது, குருக்களையும், மறைநூல் அறிஞர்களையும், மூப்பர்களையும் மற்றும் இஸ்ராயேல் மக்கள் எல்லோரையும் மரியாவின் தந்தை சுவக்கீன் அழைத்து, அந்த நாளை ஒரு விழாவாகக் கொண்டாடினார்” எனவும் அதே நற்செய்தி நூலின் பதிவுகள் தெரிவிக்கின்றன.
புனித யாகப்பர் எழுதிய (முறைசாரா) நற்செய்தி நூல் பதிவுகள் மேலும் கூறுவதாவது: சுவக்கீன் குழந்தையை குருக்களிடம் கொண்டுவந்தார். அப்போது அவர்கள், “எங்கள் மூதாதையரின் கடவுளே! இந்தக் குழந்தையை ஆசீர்வதிப்பீராக! தலைமுறைகளைக் கடந்தும் நீடிக்கின்ற நிலையான பெயரை இவருக்கு அருள்வீராக!” என்று வாழ்த்தி மரியாவுக்கு ஆசி வழங்கினார்கள். குழந்தையை தலைமைக் குருக்களிடம் கொண்டு வந்தபோது அவர்களும் மரியாவை ஆசீர்வதித்து, “உன்னதராகிய எங்கள் இறைவா! இந்தக் குழந்தையைக் கண்ணோக்கி பாரும்; என்றன்றும் நிலைத்திருக்கின்ற வண்ணம் மேலான ஆசியை இவருக்கு வழங்கியருளும்” என்று வாழ்த்தினார்கள்.
ஆலய குருக்களோடு கலந்துரையாடிய மரியாவின் பெற்றோர், “இறைவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கன்னியாக தன் வாழ்நாளை அவர் கழித்திட வேண்டுமென்று மரியாவை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார்கள்” என்றும், “கற்புநிலை பிறழாத இல்லறம் மேற்கொள்வதற்காக மரியாவுக்கு தச்சரான யோசேப்புவுடன் மணஒப்பந்தம் செய்தார்கள்” என்றும் புனித யாகப்பரின் (முறைசாரா) நற்செய்தி நூல் மேலும் கூறுகிறது.
நான்காம் நூற்றாண்டில் ஆயராக இருந்த புனித அகுஸ்தீன், ஆழமான தனது இறையியல் கருத்துகளால் அக்காலத்தில் பாவம் மற்றும் மனித இயல்பு குறித்து மேலைநாடுகளில் திருஅவையின் புரிதலை வடிவமைத்தவராவார். இவர், “வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கியத்துவம் கொண்ட கன்னி மரியாவின் பிறப்பு, இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு பொருத்தமான முன்னுரை போன்றது” என்றும் “அழகிய லீலி மலர் பூக்கின்ற வயல்வெளியில் விளைந்த எழில்மிக்க மலர், மரியா” என்றும், “முதல் பெற்றோரிடமிருந்து மனித குலம் பெற்றுக்கொண்ட இழிவான இயல்புநிலை, மரியாவின் பிறப்பின் வழியாக மாற்றியமைக்கப்பட்டது” என்றும் எடுத்துரைக்கிறார்.