இளைஞர்களுக்கு அன்னை மரியா
அருட்தந்தை தம்புராஜ் சே.ச.
இளைஞர்களுக்கு அன்னை மரியா ஒர் எடுத்துக்காட்டாக, ஒரு முன்மாதிரியாக இருக்கின்றார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. அன்னை மரியா இளம் பெண்ணா? என்ற கேள்விக்குறி பலரிடம் எழலாம்.இறைவல்லுநர்கள் ஆராய்ச்சி செய்து என்ன கூறுகிறார்கள் தெரியுமா? கன்னி மரிக்கு வானதூதர் மங்கள வார்த்தை சொன்னபொழுது அவருக்கு வயது 14. யோசேப்புக்கு வயது 17.
அக்காலத்தில் நம் நாட்டைப்போல் பாலிய விவாகம் நடப்பது ஒரு பாரம்பரியமாக இருந்தது. இந்த இளம்பெண்ணை தான் இறைவன் தாம் வைத்திருந்த ஒரு பெரிய திட்டத்திற்கு ஒப்புமை கொடுக்க அழைப்பு விடுக்கின்றார். அத்திட்டம் - மனுக்குலத்தை மீட்க ஒரு மீட்பரை மரியாவிடமிருந்து பிறக்க வைப்பது, எவ்வளவு பெரிய பொறுப்பு!
சாதாரண, சாமானியப் பெண்ணை இறைவன் தேர்ந்தெடுக்கின்றார். கன்னியாக இருந்து கொண்டே தாயாக மாற வேண்டும். ஒரு பெரிய புரியாத புதிர்தான். இளைஞர்கள் அடிக்கடிக் கேள்வி கேட்டுப் புதுப்புதுக் காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
கன்னி மரியாவும் வானதூதரிடம் "இது எப்படி நிகழும்?" என்ற கேள்வியைக் கேட்கின்றார். வானதூதர் பொறுமையோடு இறை திட்டத்தை விளக்கிக் காட்டுகின்றார். புரியாவிட்டாலும் இச்சவாலை ஏற்றுக் கொள்கின்றார். ஏன் இது ஒரு சவாலாக இருக்கின்றது!
இஸ்ரயேல் நாட்டில் ஒர் இளம்பெண் திருமணம் ஆவதற்கு முன் கர்ப்பமானால் அதற்கு என்ன தண்டனை தெரியுமா? அவள் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். மரியா இவ்வளவு பெரியஆபத்து நிறைந்த சூழ்நிலையைச் சந்திக்கத் தயாராகின்றார். கடவுள் சித்தம் இதுதான் என்று தெரிந்தவுடன் அதற்கு அடிபணிகின்றார். இவரால் இதை எப்படிச் சந்திக்க முடிந்தது? கடவுள் இத்திட்டத்தைத் தனக்கு வெளிப்படுத்தினாரென்றால் கட்டாயம் அவர் தன்னைக் காப்பாற்றுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவரிடம் இருந்தது.
இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை வந்து விட்டால் எதையும் செய்துகாட்டத் தயங்கமாட்டார்கள். துணிந்து செயலில் இறங்குவர். அவர் ஏமாந்து போகவில்லை. ஏனென்றால் இறைவன் திருமண ஒப்பந்தம் மட்டுமே செய்திருந்த யோசேப்புக்குத் தோன்றி (கனவில்) மரியாவை மனைவியாக ஏற்றுக் கொள்ளப் பணிக்கின்றார். யோசேப்பும் விசுவாசத்துடன் இந்த மறைபொருளை ஏற்று, அதன் படி நடக்கின்றார்.
இளைஞர்களுக்குரிய மற்றொரு துணிவும் மரியாவிடம் இருந்தது. இஸ்ரயேல் சமுதாயத்தில் ஒர பெண் தன்னந்தனியாக வெளி இடங்களுக்குச் செல்லக்கூடாது. ஆயினும் இந்த மறைபொருளை எலிசபெத்தோடு பகிர்ந்து கொள்ள தன்னந்தனியாக மலைநாட்டுக்குப் பயணம் செய்கின்றார். இத்துணிவு எப்படி அவருக்கு வந்தது? யாரை அவர் தாங்கி செல்கின்றாரோ அவர் தன்னைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆகவே தான் அவரை நம்பிக்கையின் நட்சத்திரம் என்று வாழ்த்துகிறோம். இளைஞர்க்குப் புரட்சி என்றால் உடனே தங்களது வலது கரத்தை வைத்து செயலில் குதிப்பர். கன்னி மரியா ஒரு புரட்சிப் பெண் என்று நாம் கூற முடியும். எலிசபெத்தைச் சந்தித்தபின் ஒரு புரட்சிப் பாடலை இயக்கி இறைவனை நோக்கி தனது இதயத்தை எழுப்பிப் பாடுகின்றார்.
இந்த புரட்சி பாடலை நாம் சிறிது அலசிப் பார்த்தோமென்றால் மூன்று வகையான புரட்சிக் கருத்துக்களை நம் முன் வைக்கின்றார்:
1. பொருளாதாரப் புரட்சி 2, சமுதாயப் புரட்சி 3. ஆன்மீகப் புரட்சி.
இளைஞர்கள் இப்பாடலைப் படித்துத் தியானித்துக் செயலில் இறங்கவேண்டும். "எனக்கு ஒரு கனவு உண்டு" என்று கர்ஜித்த மார்ட்டின் லூத்தார் கிங் அவர்கள் அமெரிக்காவில்; உள்ள கறுப்பு இனத்தவர்களின் விடுதலைக்கு வித்திட்டார். இதன் விளைவாக இன்று அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக நுழைந்து அரசு அமைத்திருக்கிறார். மனுக்குலத்தின் விடுதலைக்கு வித்திட்டவர் கன்னி மரியா. அப்புரட்சியின் வித்தையே தனது உதிரத்தில் தாங்கியவர்.
இளைஞர்கள் தங்களது நேரத்தை, திறனை, பணத்தை பிறர் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று துடிதுடிப்பாகச் செயல்படுபவர்கள். இவ்வகையான துடிதுடிப்பை இளம்பெண் அன்னை. மரியாவின் வாழ்க்கையில் நாம் காண்கின்றோம்.
கானாவூர் திருமணத்தில் வந்த பற்றாக்குறையை அக்கறையோடு அகற்ற களத்தில் குதிக்கின்றார். இறை தந்தை திட்டமிருந்த நேரத்தை இயேசுவின் வாழ்க்கையில் முன்கூட்டியே வரவழைக்கின்றார்.
எத்துணைத் துணிவு! இதன் வழியாக மூன்று காரியங்களுக்குக் காரணியாகத் திகழ்கின்றார்:
1. இயேசுவின் பணி வாழ்க்கையில் அவர் செய்த புதுமைகளில் இந்நிகழ்வு முதல் புதுமையாக அமைகின்றது.
2.இயேசுவின் மாட்சிமையை எல்லோரும் கண்டு பாராட்ட வழிவகுக்கின்றார்.
3.இப்புதுமையின் வழியாக சீடர்கள் இயேசுவின் மீது ஆழ்ந்த விசுவாசம் கொள்ள ஓர் உந்து சக்தியாக இருக்கின்றார்.
ஆகவே இளைஞர்களே, அன்னை மரியாவை முன்மாதியாகக் கண்முன் வைத்து இளைஞர்கள் இயேசுவின் மாட்சியை உணர இயேசுவின்மீது விசுவாசம் வைக்க, ஏழை எளியோர்களின் விடுதலைக்கு தம் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தூண்டுகோலாய் இருந்து செயல்படுங்கள்.
நன்றி ஆவியின் அனல்- அக்டோபர் 2010