எங்கள் சந்தோஷத்தின் காரணமே!

" எங்கள் சந்தோஷத்தின் காரணமே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் " என்று மாதா பிராத்தனையில் நாம் தவறாதுச் செபித்துவருகின்றோம். ஆனால் அந்தச் சந்தோஷத்தின் காரணங்கள் என்னவாக இருக்கும் என்று தியானித்துப் பார்த்தால் விவிலியத்தில் தக்க ஆதாரம் கிடைக்கும். மூன்று நிகழ்வுகள் உள்ளன, மரியாளின் உடனிருப்பையும் அதன் மகிழ்ச்சியை எடுத்துரைக்க...


எலிசபெத்து -மரியாள் சந்திப்பு: லூக்கா நற்செய்தி முதல் அதிகாரம் 23ஆம் வசனத்திலிருந்து 56ஆம் வசனங்கள் வரையிலான நிகழ்வுகளில் ஒரு மகிழ்ச்சிகரமான உண்மையை உணரலாம்.

மரியாளுக்குக் கபிரியேல் வானதூதர் அருளிய வாக்குகளின்படி எலிசபெத்துக் கருத்தாங்கியிருப்பது மாபெரும் அதிசயம். மரியாள் ஆவியானவரின் தூண்டுதலால் 70 வயது முதாட்டியைச் சந்திக்கச் சுமார் 120 கிலோமீட்டர் தூரத்திலுள்ள யூதேய மலைநாட்டிற்கு நடந்து செல்கிறார். தானும் ஓரு கர்ப்பணிப் பெண் என்பதைக் கூட நினையமால் அன்னையின் கரிசனையோடு எலிசபெத்துச் சந்திக்கின்றார். யூதர்கள் குலமுறைப்படி ஒருபெண் அதுவும் திருமணத்திற்கு முன்பே கருத்தாங்கிய பெண் வெளியே செல்வது என்பது இயலாத காரியம். அன்னை மரியாளின் அன்புக்குத் தடையேதும் உண்டோ?

கருத்தாங்கிய இருவர் அதுவும் 70ம், 18ம் சந்திப்பது என்பது எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும்!? எத்தனை மகிழ்ச்சியைத் தந்திருக்கும்! கற்பனைக்கு எட்டாத ஓர் அதிசயம். ஆண்டவரின் தாயார் தன்னிடம் வரக் கண்ட எலிசபெத்து மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் மரியாளை வரவேற்க வந்தகாட்சி எப்படி இருந்திருக்கும்! இந்த மகிழ்ச்சின் காரணம், மரியாளின் அர்ப்பண அன்புத் தானே!

இருவரும் ஒருவர் ஒருவரை வாழ்த்துக்கூறவும், எலிசபெத்தின் வயிற்றில் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியதும், ஆவியானவரின் அருள்பொழிவும் பெற்றதும், அங்கே நிறைவான மகிழ்ச்சி தந்தது. எலிசபெத்தின் பயம் நீங்கிச் சந்தோஷம் நிறைகிறது என்றால் அதன் கனியே மரியாளின் பாடலாக ஒலிக்கிறது. மரியாளின் உடனிருப்பு, நிறைவு, ஆவியின் அருள்பொழிவு என எத்தனை நிகழ்வுகளைத் தந்தது. இது தான் நாம் சந்தோஷத்தின் முதல் விவிலியப் பதிவு.

கானவூர் திருமணம்: கானவூர் திருமணத்திற்கு இயேசுவுடன் மரியாள் செல்லுகிறார். மணவீடு மகிழ்ச்சியின் எல்லை இருக்கவேண்டிய இடம். ஆனால் திராட்சை இரசம் பற்றக்குறையால் சோகமாய் மாறுகிறது. இதனை உணர்ந்த மரியாள் மணவீட்டாரின் துன்பத்தில் பங்குக் கொள்ளுகிறார்.அங்கே மகிழ்ச்சி நிறைந்திட எழுந்தார். மகனிடம் சென்றார்.முதல் அற்பும் நிகழ்த்திட அமைத்தார்.அன்னை மரியாள் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார். இறைமகனும் அன்னையின் பரிந்துரையை உணர்ந்தார்.கற்சாடியிலுள்ள தண்ணீர் இயேசு கண்ட மாத்திரத்தில் இரசமாகியது. எங்கும் கிடைக்காத இனிய திராட்சைஇரசத்தை அன்னையின் பரிந்துரையில் பெற்றார்கள் அந்த மணவீட்டார்கள். சோகம் நிறைந்த இடத்தில் மகிழ்ச்சி நிறைகொள்வது அன்னையின் உடனிருப்பலே.சந்தோஷத்தின் இரண்டாவது விவிலியப் பதிவு ஆகும்.

ஆவியானவரின் அருள்பொழிவு: உயிர்த்த இயேசு வானகம் சென்றபின் சீடர்கள் அஞ்சி நடுங்கியவர்களாய் ஒரு வீட்டின் மாடி அறையில் தங்கி இருந்தனர். அன்னை மரியாளும் அவர்களுடன் இருந்தார். வெளியே செல்வதற்கும் பயம்,எங்கே தங்களையும் கொன்றுவிடுவார்களோ என்று. இயேசுவின் உடனிருப்பு இல்லாததால் சோகமே உருவாகி இருந்தார்கள். அனைவரும் ஓன்றாய் செபத்தில் கூடியிருந்தபோது ஆவியானவர் நெருப்பு வடிவில் வந்து பெரும் அருள்பொழிவைச் செய்கிறார். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். சோகம் மறைந்து மகிழ்ச்சியும்,கோழையாக இருந்தவர்கள் தைரியமும் பெற்றனர்.சந்தோஷத்தின் முன்றாவது விவிலியப் பதிவு ஆகும்.

இப்போது நமது உண்மையான சந்தோஷத்தில் மரியாளின் உடனிருப்பின் பங்கு எவ்வளவு என்பது விவிலியச் சான்றுகளுடன் நிருபிக்கப்பட்டுள்ளது. அன்னையின் கரம் பற்றி இறைமகன் இயேசுவைப் பின்பற்றிச் செல்வோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு மரியாளின் பக்கங்கள்