அன்னை மரியாவின் மகிமை!
அருள்சகோதரி. ஜோவிட்டா, தூய சிலவை மடம், திருச்சி
அன்னைக்கு கரம் குவிப்போம்
மாதாவே துணை நீரே! உம்மை வாழ்த்தி போற்ற வரம் தாரும் என்று மாதாவின் மகிமையை போற்றுகிறது உலகம். அன்னைக்கு கரம் குவிப்போம் அவள் அன்பை பாடிடுவோம் என்று அன்னையின் அன்பை பாடல் மூலம் பாடிப் போற்றுகிறோம். எனவே, அம்மாவின் அன்பு துணை இருக்கும் போது நாம அஞ்ச வேண்டாம். எனவே, தான் பெருமையிணை, அவளின் தாழ்ச்சினை நாம் நன்கு அறிந்து அதன்படி வாழ மே மாத பக்தி முயற்சி பெரும் துணை புரிகின்றது. அம்மா என்றாலே தியாகம்! தியாகத்தின் தாய் என்பதால் நாம் அடைய தன் ஒரே மகனை சிலுவை சாவை ஏற்று தந்தையின் சித்தத்தை நிறைவேற்றிட துணை புரிந்தவர் நம் அன்னைமரி.
அன்னையின் அருங்குணங்கள்:
தாழ்ச்சி, பொறுமை, நம்பிக்கை, இடைவிடாது செபித்தல், குடும்ப பொறுப்பு, துன்பத்தை ஏற்றல். கரியேல் தூதரின் வாழ்த்தினை கேட்ட அன்னை கலங்கி இது எபடியாகும்? நான் கணவனை அறியேன் என்றார். உன் வழியாக உலகத்திற்கு மீட்பு உண்டு, நீ அஞ்சாதே, தூய ஆவி உன்னில் நிழலிட நீ கருவுற்று ஓர் ஆண் மகவைப் பெறுவாய் என்றதும், “இதோ, உமது அடிமை” என்று கீழ்ப்படிந்து இறைத் திட்டத்தை ஏற்றார்.
கீழ்ப்படிதலும், நம்பிக்கையும்:
“வயது முதிர்ந்த உன் உறவினர் எலிசபெத் கருவுற்று இது ஆறாம் மாதம்” என்று தூதர் கூறிட மரியா அதை நம்பினார். அது மட்டுமல்லாமல், உடனே விரைந்து சென்று எலிசபெத்திற்கு உதவி செய்து ஆறு மாதம் அங்கு தங்கி பணி செய்தார். நம்பியதால், கீழ்ப்படித்தால் உதவி செய்ய விரைந்து சென்றார். இருவரின் சந்திப்பால் இரு உள்ளங்க பொங்கிட ஒருவர் ஒருவரை வாழ்த்தி இறை அன்பில் நம்பிக்கையை வளர்த்தனர். இறைவனின் தாயாக போகிறோம் என்ற பெருமை இன்றி சாதாரண பெண்மணி போல் மாதா எசலிபெத்திற்கு உதவியது அவரின் அடக்கம், தற்பெருமை இல்லாமையை சுட்டிக் காட்டுகிறது.
துன்பத்தில் துணைபுரியும் தாய்!
கானாவூர் திருமண விழாவிற்குச் சென்ற தாய் பரிவு உள்ளத்தோடு அவர்களுக்கு இரசம் இல்லாமையை அறிந்தார். ஆனால் மற்றவர்கள்போல் கண்டும் காணாதிருக்கவில்லை. யார் எக்கேடு கெட்டால் என்று தன்னலமாக இருக்கவில்லை. தன் மகனிடம் சென்றார். பரிந்துபேசி "மகனே, இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். மகன் "என் நேரம் வரவில்லை” என்று கூறினாலும் மகன்மீது நம்பிக்கை கொண்ட தாய் பணியாளர்களிடம் "அவர் சொல்வதைச் செய்யுங்கள்” என்கிறார்.
துன்பத்தை தன் வாழ்வில் ஏற்றல்
குழந்தை பிறப்பதற்கு இடமின்றி நாடு விட்டு நாடு சென்றார் மாதா. பிறந்த குழந்தையை வளர்க்கும் முன், கனவில் தோன்றிய தூதரின் கட்டளையை ஏற்று எகிப்து சென்றார். ஆலய விழாவில் பங்கு பெற்று திரும்புகையில் குழந்தை இயேசு பெற்றோரிடம் திரும்பி வராது தலைவர்களின் மத்தியில் போதித்துக் கொண்டிருந்தார். மூன்று நாட்களுக்குப் பின் சூசையும், மரியும் மகனைக் கண்ட போதும், "நான் என் தந்தையின் பணியில் ஈடுப்பட்டுள்ளேன்' என்று கூறியதும் மாதாவிற்கு அதிர்ச்சி அளித்தது. இயேசுவை கோவிலில் காணிக்கையாக்கும் போது சிமியோன் கூறியவார்த்தை மாதாவின் இருதயத்தில் ஒரு வாள் ஊடுருவியது போல் ஆயிற்று. பெற்று வளர்த்த மகன், ஒரே மகன் சிலுவைச் சுமந்தபோது உடன் இருந்தது மாதாவிற்கு எத்தகைய துன்பமாக இருந்திருக்கும்! துன்பங்களின் மத்தியில் மாதா இறை சித்தத்தை ஏற்று, நமக்கு மீட்பின் தாயானது உலகு அறிந்த உண்மை. எனவே, உலகம் அன்னையின் அன்பைப் போற்றிப்பாடுகிறது.
சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகள் நம் தாயிடம் இல்லை. எங்கு மாதா காட்சி கொடுத்தாலும் செபம், தவம் மிகத் தேவை என்று கூறி நம்மை இறைவனோடு இணைந்து செயல்படத் துண்டுகிறார். "மனம் மாறுங்கள்" என்பதால், பாவத்திலிருந்து விடுதலை பெறுவது மிக முக்கியம் என்பதை மாதா பலமுறை உணர்த்துகிறார். போர்ச்சுக்கீசியர் வணிகத்திற்கு இந்தியா வரும்போது பெரும் காற்று, புயல் அடித்து படகு மூழ்குகையில் அன்னையிடம் செபிக்கவே மாதாவின் கருணையால் காற்று அடங்கி, கப்பல் வேளாங்கண்ணி அடைந்தது. உலகு போற்றும் வேளாங்கண்ணி ஆலயம் தம்மை நாடி வந்த யாவருக்கும் வரங்களை வாரிக் கொடுக்கிறது. எனவே, துன்பத்தில் துணை புரியும் அம்மா நம் தாய் மரி என்பது தெளிவாகப் புரிகின்றது.
மாதாவின் பல ஆலயங்கள்
பூண்டி புதுமை மாதா, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா, பாத்திமா மாதா, லூர்து மாதா, சலேத் மாதா, கார்மேல் மாதா, செபமாலை மாதா, உத்தரிய மாதா, அமலோற்பவ மாதா என்று மாதா பெயர் சூட்டப்பட்ட பல புண்ணிய ஸ்தலங்கள் மாதாவிற்கு உள்ளன. இலங்கையில் மடுமாதா, மெட்சுகோரியே மாதா, நற்கருணை மாதா என்றும் மாதாவைப் போற்றி மக்கள் புகழ்ந்துப் பாடுகின்றனர்.
குடும்பப் பெண்
இவ்வாறு பல பெயர்களால் சூட்டப்பட்டு பலரால் போற்றப்பட்டாலும் கற்புள்ள பெண்மணி மாதா கணவராம் சூசையப்பருடன் கடினமாக உழைத்து குடும்பக் கடமையைச் சரிவரச் செய்தார். இறைச் சித்தத்தை ஏற்று நடத்திட குடும்பப் பெண்ணாகிய மரியா பெரும் துணை நின்று அன்பு, அமைதி, மகிழ்ச்சி நிறைக் குடும்பமாக செயலாற்றிட மாதா குடும்பப் பொறுப்பை ஏற்று, சிந்தையில் தெளிவுடன் செயல் பட்டார். எனவே, வறுமையிலும் வளமுடன் வாழ தன் மகனுக்குக் கற்றுக் கொடுத்தார். எனவே தான் லூக்கா நற்செய்தி "இயேசு வளர வளர ஞானத்திலும், பக்தியிலும் வயதிலும் வளர்ந்தார்’ என்று கூறுகின்றது. தாய்மைநிலையில் இருக்கும் பெண்கள் அன்னை மரியாவைப்போல் உள்ளது போதும் என்ற மன நிறைவு பெற்று, மகிழ்ச்சியுடன் வாழும்போது அன்பு, அமைதி, மகிழ்ச்சி நிறைந்த தாயாக அவர்கள் மாறி புதிய சமுதாயம் உருவாக்கிட முடியும்.
இவ்வாறு நற்குணங்கள் பல பெற்ற அன்னைக்கு வணக்கம் செலுத்தவே மே மாதம் மாதாவின் வணக்க மாதம் என்று அழைக்கப்படுகின்றது. கோழை உள்ளத்தினராய் பயந்து வாழ்ந்த சீடர்களை மாதா ஒன்று கூட்டி சேர்த்து செபித்து, தூய ஆவியால் நிரப்பி இயேசுவைப் போதித்திடத் துணை நின்றார்.
முதலும் முடிவும், அகரமும் னகரமும், ஆதியும் அந்தமுமான இயேசுவை அகிலத்திற்கு அளித்தவர் நம் தேவதாய். எனவே, மாதாவின் பாத மலரின் அடிச்சுவட்டினைப் பின்பற்றி வாடாத மலராக நாம் வாழ்ந்திட அன்னையின் அருள் வேண்டி இடைவிடாது செபிப்போம். செபமாலை சொல்வோம். கூடிச் செபிப்போம். குடும்பத்தில் நம்பிக்கையின் ஒளி வீசி அமைதிப் பூங்காவாய் குடும்பம் மாறிட அன்னையின் அருள் வேண்டிச் செபிப்போம்.