பாத்திமா திருக்காட்சிகளின் நூறு ஆண்டு நிறைவு

பாதசந்தரன்

annai fatima1917 ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள் முதல் அக்டோபர் மாதம் 13-ஆம் நாள் வரை (ஆறு மாதங்களாக ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாதத்தின் 13-ஆம் நாளன்று) போர்த்துக்கல் நாட்டிலுள்ள பாத்திமா என்னும் கிராமத்தின் வயல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறார்கள் மூவர் இறையன்னை கன்னி மரியாவின் திருக்காட்சியைக் காண்டார்கள் என்பது நாம் அறிந்ததே. இந்த 2017-ஆம் ஆண்டில் பாத்திமா திருக்காட்சிகளின் நூற்றாண்டு விழா உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.

இந்தத் திருக்காட்சிகளில் கத்தோலிக்கத் திருமறையின் விசுவாசக் கோட்பாடுகளான சில மறையுண்மைகளையும், பக்தி முயற்சிகளையும் முதன்மைப்படுத்தி, சிறப்பாக மூவொரு கடவுள், திருநற்கருணை, தவமுயற்சிகளின் பயன், ஜெபமாலை ஜெபிப்பதன் அவசியம், பாவிகள் மனந்திரும்ப நாம் செய்யவேண்டிய ஒறுத்தல்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு இறையன்னை சில செய்திகளை அளித்தார். மேலும், நிறைவாழ்விற்கு நம்மை கூட்டிச்செல்லுகின்ற மெய்யான வழியாகவும், அன்னையின் அன்புக்கு இலக்கணமாகவும், அல்லல்படுவோருக்கு அடைக்கலமாகவும் திகழ்கின்ற "மரியாவின் மாசற்ற இதயம்" குறித்த முக்கிய செய்திகளை, இறையன்னை தன் வாய்மொழியாகவே வெளிப்படுத்தினார். மனிதகுலத்தின் மேல் தீயோன் தொடுத்துள்ள போரில், மரியாவின் மாசற்ற இதயமே இறுதியில் வெற்றி பெறும் என்றும் அன்னை எடுத்துரைத்தார்.

பாத்திமாவில் இறையன்னையின் திருக்காட்சிகள் நிகழ்ந்த காலமும், அந்தக் காலகட்டத்தில் உலகத்தில் நிலவிய சூழ்நிலையும் மிகவும் முக்கியமானவை ஆகும். உலக வரலாற்றில் அதுவரை மனித இனம் கண்டிராத மோசமான போராயுதங்களும், யுத்த நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு, 1914 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டு வரை நடந்த முதல் உலகப் போரின் தாக்கத்தால் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் மக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி இருந்தனர். மூன்றரை கோடிக்கும் மேலான இராணுவ வீரர்கள் அந்தப் போரிலே இறந்து போனார்கள். மேலும், ரஷ்யாவின் சமூக வாழ்வியல் முறைகளையும், கடவுள் நம்பிக்கையையும் முற்றிலும் புரட்டிப்போட்டு, ஏறக்குறைய பாதியளவு உலக மக்களின் வாழ்வையே மாற்றியமைக்கக் போகின்ற மாபெரும் கம்யூனிஸ புரட்சி ஒன்றுக்கு லெனின் வித்திட்டுக் கொண்டிருந்த நேரம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், மக்களின் மனக்குழப்பங்களை நீக்கி, இறைநம்பிக்கையை நெறிப்படுத்திட இறையன்னை தன்னை வெளிப்படுத்த முற்பட்டு, விண்ணிலிருந்து இறங்கிவந்தார். பாத்திமா திருக்காட்சிகளில் அன்னை உரைத்தபடியே, இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவில் கம்யூனிஸ ஆட்சி தகர்ந்து வீழ்ந்தது, உலக வரலாற்றில் ஒரு உண்மைப் பதிவு.

13.05.1917 அன்று தான் பாத்திமா நகரில் அன்னையின் முதல் காட்சி நிகழ்ந்தது. அதே நாளில் திருச்சபையின் தலைமைப் பீடமாகிய வத்திக்கானில் இன்னொரு முக்கியமான நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அன்றைய தினம் வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் யூஜினியோ பசேலி என்ற குரு, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் அவர்களால் ஆயராக அருள்பொழிவு செய்யப்பெற்றார். இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், 1939 ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் பயஸ் என்ற பெயரில் பாப்பரசராக தேர்வு செய்யப்பட இந்த அருள்தந்தை தான், 1940 ஆம் ஆண்டில் பாத்திமா திருக்காட்சிகளுக்கு திருப்பீடத்தின் முத்திரையை பதித்து, அதிகாரபூர்வமான அங்கீகாரத்தை அளித்தார்.

Fatima 1001917 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் தான் பாத்திமாவில் இறை அன்னையின் முதல் திருக்காட்சி நிகழ்ந்தது. 1981 ஆம் ஆண்டு அதே மே மாதம் 13 ஆம் நாளில் தான், அப்போதைய பாப்பரசர் இரண்டாம் ஜான்பால் வத்திக்கானில் புனித பேதுரு சதுக்கத்தில் நடந்த கொலை முயற்சியிலிருந்து தப்பினார். பாத்திமா நகர் அன்னைதான் அன்று தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றினார் என்று திருத்தந்தை உறுதியாக கூறினார். அன்று தனது உடலில் பாய்ந்தும் தன்னைக் கொல்ல இயலாத தோட்டாவை, பாத்திமா நகர் அன்னைக்கு காணிக்கையாக செலுத்தினார் திருத்தந்தை. பாத்திமா திருத்தலத்தில் அன்னையின் கிரீடத்தில் இந்தத் தோட்டா பொருத்தப்பட்டுள்ளது.

“கவலை தருகின்ற இன்றைய உலக நடப்புகளை பார்க்கும்போது, பாத்திமா திருக்காட்சிகளில் இறையன்னை மொழிந்த செய்திகளை இன்றைக்கும் மக்கள் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்” என்று கூறுகின்ற திருத்தந்தை பிரான்சிஸ், "அன்பிற்கும், கருணைக்கும் ஊற்றான இறைஇரக்கத்தை அவமதிக்கின்ற எந்தவொரு செயலையும் செய்வதை நாம் தவிர்க்கவேண்டும் என்பதே அன்னையின் வேண்டுகோள்" என்று சுட்டிக் காட்டுகின்றார்.

அன்னையை நேரிலே தரிசித்த மூன்று பேரில் ஒருவரான அருள்சகோதரி லூஸியா, 2005 ஆம் ஆண்டு ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, "புதுமைகள், இரகசிய செய்திகள் - இவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்ற மக்களின் மனநிலை ஏமாற்றம் அளிக்கின்றது. புதுமைகள், அருள் அடையாளங்கள் இவற்றைவிட, பத்துக் கட்டளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். இறுதி தீர்வை நாளில் பத்துக் கட்டளைகளின் அடிப்படையிலேயே நாம் தீர்ப்பிடப்படுவோம் என்பதை உணர்ந்தால், மீண்டும் மீண்டும் கடவுளை அவமதிக்கின்ற எந்த செயலையும், பாவத்தையும் தவிர்ப்பது இயலும். இதனை பதினொன்றாவது கட்டளை என்று நான் சொல்லுவேன். 'அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்று அன்னை கூறுவதன் பொருள் இதுதான்" என்றுக் கூறினார்.

Fatima+popeஆண்டுதோறும் உலகெங்கிலுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் திருப்பயணமாக வருகின்ற பாத்திமா திருத்தலத்திற்கு, நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்ற 2017-ஆம் ஆண்டில் இன்னும் அதிகமான திருப்பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பாத்திமா திருத்தலத்திற்கு இந்த ஆண்டு திருப்பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஒரு முக்கிய திருப்பயணியாக நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பது, அந்தக் கொண்டாட்டங்களுக்கு இன்னும் சிறப்பு சேர்க்கின்றது.

கடவுளை வெறுத்து ஒதுக்குவதை உலகம் தொடர்ந்து செய்துவந்தால், அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாத்திமா செய்திகள் நமக்கு நினைவூட்டுகின்றன. ஆனால், இன்றைய உலகில் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறுகின்ற போர்கள், தீவிரவாத செயல்கள், புலம் பெயர்ந்த அகதிகளின் துயர நிலை, பெண்கள்-சிறுவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள், பற்பல வல்லரசு நாடுகள் போட்டிபோட்டுக் கொண்டு உற்பத்தி செய்து அடுக்கிவைத்திருக்கும் அபாயகரமான போர்க்கருவிகள், மதத்தின் பெயரால் நடத்தப்படும் வெறியாட்டங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் - இவையெல்லாம் உலகம் தொடர்ந்து கடவுளை ஒதுக்கியே வைத்திருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. நூறு ஆண்டுகள் கடந்த பின்னும் பாத்திமாவில் அன்னை விடுத்த வேண்டுகோள், இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்ற செய்தியாகவே இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு மரியாளின் பக்கங்கள்