நம்பிக்கையின் அன்னை மரியா
மேதகு ஆயர் முனைவர் .செ. சூசைமாணிக்கம்
குலமுதுவர் ஆபிரகாம் நம்பிக்கையின் தந்தையாக (உரோ 4:17-21) விளங்குகிறார் என்றால் மரியா நம்பிக்கையின் தாய் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. நம்பிக்கை பற்றி நாம் பெற்றுள்ள புதிய புரிதலின் ஒளியில் மரியா எவ்வாறு நம்பிக்கையின் அன்னையாகத் திகழ்கிறார் என இப்பொழுது காண்போம்.
'வரலாற்று மரியா' என இறையியலார் சுட்டும் நாசரேத்து மரியா இறை வார்த்தைக்கு முற்றிலும் திறந்த மனத்துடன் செவிமடுத்து அவரை முழுவதும் நம்பினார். தாம் கேட்டதைத் தம் வாழ்வில் கடைப்பிடிப்பதிலும் மிகக் கருத்தாய் இருந்தார் என்னும் உண்மையை லூக்கா நற்செய்தி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
1.இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு நிகழ்ச்சியில் வானவரின் வாழ்த்துரையைக் கேட்ட மரியா குழப்பமும் மனக்கலக்கமும் அடைந்தார். "இது எப்படி ஆகும்? நான் கன்னி ஆயிற்றே!" என்று வியப்பு மேலிட்டவராய் விளக்கம் வேண்டி நியாயமான ஒரு வினாவைப் பெற்றார். அச்செய்தியின் உள்ளீட்டை முழுமையாகப் புரிந்து கொள்ளாத நிலையிலும் கடவுளை முற்றிலும் நம்பினார். தம் ஆற்றல் அனைத்தையும் இணைத்துத் தம்மை முழுவதும் இறைவனுக்குக் கையளித்தார்.(லூக் 1:26-38)
சொந்த விருப்பம் இன்றிச் சூழ்நிலை, சந்தர்ப்பத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டு மரியா கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார் எனச் சொல்வதற்கு இடமே இல்லை. மனமகிழ்ச்சியுடனும், தன்னுரிமையுடனும் இறைவனின் மீட்புத்திட்டதோடு ஒத்துழைக்கத் தமது முழு ஒப்புதலையும் தெரிவித்தார். "நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக் 1:38-48) என்று கூறித் தம்மை முழுவதும் இறைவனின் கைகளில் ஒப்படைத்தார்.
" தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும் (லூக் 22:24) என்ற இறைமகன் இயேசுவின் கூற்று இறைவனின் அன்னை மரியாவின் கூற்றை ஒத்திருக்கின்றது. தூய அகுஸ்தின் கூறுவது போன்று மரியா இறைவார்த்தையை முதலில் தம் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டார். அதன் பின்னரே அதைத் தம் உதரத்தில் ஏற்றுக் கருவுற்றார்.
அன்றொரு நாள் கானாவில் நடந்த திருமண விழாவில் (யோவான் 2:1-12) திராட்சை இரசம் தீர்ந்திடவே மரியா தம் மகனிடம் முறையிட்டுக் குறை தீர்த்து வைக்க வேண்டுகிறார். "எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்று தெளிவுபடுத்திய நிலையிலும் "அவர் (இயேசு) உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்பது மரியா இயேசுவில் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. புரிந்து கொள்ளாத நிலையிலும் மரியா கடவுளை நம்பினார். தம்மை முழுவதும் இறைவனுக்குக் கையளித்தார். மரியா கடவுளை நம்பினார். தம்மை முழுவதும் இறைவனுக்குக் கையளித்தார். மரியா கடவுள் மட்டில் கொண்டிருந்த நம்பிக்கையின் உறவு நிலையை இது காட்டுகிறது.
மரியாவுடன் கடவுளுக்கு இருந்த மிக நெருக்கமான உறவை மரியாவினுடைய ஆன்மாவின் சொல்லோவியம்" என அழைக்கப்பெறும் பாடல் (லூக் 1:47-55) சிறப்பாக எடுத்துரைக்கிறது
2. சாரா போன்று காலம் போன காலத்தில் கருவவுற்றிருந்த தம் உறவினர் எலிசபெத்து ஒரு மகனைத் தன் வயிற்றில் கருவற்றிருப்பது கடவுளின் அரிய செயல் என்பதை அறியவந்த மரியா (லூக் 1:36) உடனடியாக அவருக்க உதவி தேவைப்படும் என்பதை முன்னுணர்ந்தார். தான் வாழ்ந்து வந்த நாசரேத்திலிருந்து ஏறத்தாழ 150 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த எலிசபெத்தின் ஊரான அயீன்கரிமுக்குச் செல்ல மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும். பயணம் செய்வதில் பல தொல்லைகள் இருந்தன. இவற்றை எல்லாம் கணக்குப் போட்டுப் கவனத்தில் கொள்ளாது எலிசபெத்தைச் சந்திக்க அவர் உடனடியாகச் சென்றார்(லூக் 1:39) "விரைந்து" என்பதற்கு மிகுந்த ஆர்வத்தோடு "தாம் பெற்றிருந்த இறைவெளிப்பாட்டுக்குக் கீழ்ப்படிந்து" (லூக் 2:16) என்றும் பொருள் கொள்ளலாம். அப்பொழுது மரியாளிடம் விளங்கிய மனநிலையை இச்சொல் விளக்குகிறது.
ஏறத்தாழ மூன்று மாதம் - அதாவது எலிசபெத்து பிள்ளை பெற்றெடுக்கும் வரை அங்கேயே தங்கி அவருக்கு தேவைப்பட்ட உதவிகளைச் செய்த பின்பு மரியா தம் வீடு திரும்பினார் (லூக் 1:56) குறிப்பறிந்து செயல்படும் பணியாளராக அன்பின் திருத்தூதராக மரியா இங்கு அடையாளம் காட்டப்படுகிறார்
மேலும் இயேசுவின் பிறப்பை அடுத்துப் பல்வேறு காலக்கட்டங்களில் இடம் பெற்ற மரியாவின் தூய்மைச் சடங்கு. இயேசுவின் விருத்தசேதனம், பெயர் சூட்டுதல், அர்ப்பணம் ஆகிய நான்கு சமயச் சடங்குகள் திருச்சட்டப்படி முறையாக நடைபெறுகின்றன. (லூக்கா 2:21-24,27,39)