மரியன்னையின் விண்ணேற்பு (ஆகஸ்ட் 15)
அருள்பணி மரியஅந்தோணிராஜ் -பாளை மறைமாவட்டம்
மரியன்னையின் விண்ணேற்பைக் குறித்து சொல்லப்படும் தொன்மம். மரியா தன்னுடைய கடைசி காலத்தை சியோன் மலையருகிலே இருந்த ஓர் இல்லத்தில் செலவழித்தார். அவருக்கு 60 வயது நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் வானதூதர் அவருக்குக் காட்சி கொடுத்து, அவர் எப்படி இறப்பார், இறந்த பிறகு என்ன ஆவார் என்பது குறித்து சொல்லிவிட்டுச் சென்றார். அதுபோன்று ஒரு குறிப்பிட்ட நாளில் மரியாள் இறந்துபோனார். அவருடைய இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டு எல்லாச் சீடர்களும் அங்கு வந்தார்கள், தோமாவைத் தவிர. பின்பு அவர்கள் மரியாவைக் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டுத் திரும்பிவிட்டார்கள். இதற்குள் மரியாவின் இறப்புச் செய்தி தோமாவின் காதுகளை எட்டியது. அவர் சீடர்களிடம் வந்து, “நான் இறந்த மரியன்னையின் உடலைக் கண்டால் ஒழிய எதையும் நம்பமாட்டேன்” என்று சொன்னார். உடனே சீடர்கள் தோமாவை, மரியா அடக்கம் செய்து வைக்கப்பட்ட கல்லறைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு கல்லறையைத் திறந்து பார்த்தபோது, மரியாவின் உடல் இல்லாததைக் கண்டு, அவர் உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை நம்பத் தொடங்கினார்கள்.
வரலாற்றுப் பின்னணி
இன்று நாம் கொண்டாடும் மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவிற்கு நீண்ட நெடிய பாரம்பரியங்கள் உண்டு. மரியாவின் விண்ணேற்பைக் குறித்து தொடக்கத்தில் தூய ஜெர்மானுசும், தமஸ்கு நகர யோவானும்தான் பேசத் தொடங்கினார்கள். அவர்கள்தான் மரியாவின் விண்ணேற்பைக் குறித்து மறையுரை ஆற்றினார்கள். மூன்றாம் நூற்றாண்டில் மரியா விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைக் குறிக்கும் விதமாக மக்கள் விண்ணகம் நோக்கி ஜெபிக்கத் தொடங்கினார்கள். ஐந்தாம் நூற்றாண்டில் இவ்விழா மரியாவின் துயில் என்ற பெயரில் கொண்டாடப் பட்டது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அதிரியான் என்பவர் மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா என்ற பெயரிலேயே ‘மரியாவின் விண்ணேற்பைக் கொண்டாடத் தொடங்கினார்.
இப்படி வளர்ந்து வந்த இவ்விழா 1950 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அவர் எழுதிய Magnificatissimus Deus’ என்னும் திருமடலில் அதனை இவ்வாறு உறுதி செய்தார்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தினாலும், தூய திருதூதர்களான பேதுரு, பவுலின் அதிகாரத்தினாலும், நமது தனிப்பட்ட அதிகாரத்தினாலும் நாம் எடுத்தியம்பி, அறிவித்து கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட மறைகோட்பாடாக வரையறுப்பது என்னவென்றால், அமல உற்பவியாகிய கடவுளின் தாய், எப்பொழுதும் கன்னியான மரியா தனது மண்ணக வாழ்க்கைப் பயணத்தை முடித்தபின், விண்ணக மகிமைக்கு ஆன்மாவோடும் உடலோடும் எடுத்துக்கொள்ளப்பட்டார். எனவே, யாராவது வரையறுக்கப்பட்ட இதை மறுத்தாலோ, சந்தேகித்தாலோ, அவர் இறை விசுவாசத்திலிருந்தும் கத்தோலிக்க விசுவாசத்திலிருந்தும் பிரண்டு விட்டார் என்று அறிந்து கொள்ளட்டும்”. திருத்தந்தை அவர்கள் மரியாவின் விண்ணேற்பை ஒரு விசுவாசப் பிரகடனமாக அறிவித்ததில் இருந்து இன்றுவரை மரியாவின் விண்ணேற்பை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் கொண்டாடி மகிழ்கின்றோம்.
விவிலியப் பின்னணி
மரியா விண்ணகத்திற்கு உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது, அவர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்ததால், கடவுள் அவருக்குக் கொடுத்த மிகப்பெரிய கொடை என நாம் புரிந்துகொள்ளலாம்.
கடவுளால் படைக்கப்பட்ட மனிதனுடைய உடலும் அவனுடைய ஆன்மாவும் தூயது, மாசற்றது (தொநூ 2: 1-7) அப்படிப்பட்டதை மனிதன் தன்னுடைய தவற்றால் தூய்மையற்றதாக, மாசு உள்ளதாக மாற்றிக்கொண்டான். எனவே பாவத்தின் சம்பளம் மரணம் (உரோ 5:12) என்பதைப் போன்று மரணமில்லா பெருவாழ்வைக் கொடையாகப் பெற்றிருந்த மனிதன், தான் செய்த பாவத்தினால் அக்கொடையை இழந்தான்; மரணத்தைத் தழுவினான். இது ஒரு பக்கம் இருந்தாலும் பாவக்கறையோடு இந்த மண்ணுலகத்தில் பிறந்தாலும், கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தனால் மரணத்தைத் தழுவாமல் விண்ணகத்திற்கு இருவர் எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் வேறுயாருமல்ல ஏனோக்கும், இறைவாக்கினர் எலியாவுமே ஆவார் (தொநூ 5:24, 2 அர 2:1). ஏனோக்கு கடவுளோடு நடந்தார். அதனால் அவர் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இறைவாக்கினர் எலியா கடவுளுக்கு உகந்த இறைவாக்கினராய் விளங்கினார். அதனால் அவரும் நெருப்புத் தேரோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
மரியாவைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது அவர் கருவிலே பாவக்கறையில்லாமல் பிறந்தாள், ஆண்டவரின் தூதரால் ‘அருள்மிகப் பெற்றவளே’ என அழைக்கப்பட்டாள் (லூக் 1:28). அது மட்டுமல்லாமல் ஆண்டவர் இயேசுவையே தன்னுடைய உதிரத்தில் தாங்கிடும் பேறுபெற்றாள், இறைவனுக்கு உகந்த வாழ்ந்தாள். இத்தகைய பேற்றினால் மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என நாம் உறுதியாகச் சொல்லலாம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்” (யோவா 12:26). மரியா தலை சிறந்த சீடத்தியாக வாழ்ந்ததனால் அவர் இயேசு இருக்கும் விண்ணக வீட்டில் இருப்பார் என நாம் உறுதிபடச் சொல்லலாம்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
கடவுளுக்கு உகந்த வாழ்ந்த வாழ்தல்
மரியாவின் விண்ணேற்பு என்பது அவர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்ததனால் கிடைத்த மிகப்பெரிய பேறு என்று சொன்னால் அது மிகையாகாது. மரியா தன்னுடைய வாழ்வை கடவுளுக்கு உகந்த தூய, மாசற்ற பலிபொருளாகத் தந்தார்; தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார்; தேவையில் இருந்த மக்கள்மீது அன்பும் அக்கறையும் கொண்டு அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்தார்; எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுடைய திருவுளத்தை இறுதி வரைக்கும் கடைப்பிடித்து வாழ்ந்தார்; அதற்காக பல்வேறு இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்தார். இத்தகையதோர் வாழ்க்கை வாழ்ந்ததால்தான் மரியாவை இறைவன் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார். நாம் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழும்போது இறைவன் அளிக்கும் விண்ணக மகிமையைப் பெறுவோம் என்பது உறுதி.
லேவியர் புத்தகம் 19:2 ல் வாசிக்கின்றோம், “தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவராக இருக்கின்றேன்” என்று. ஆம், கடவுளின் மக்களாகிய நாம் அனைவரும் கடவுளைப் போன்று தூயவராக இருக்கும்போது அவர் மரியாவுக்கு அளித்த அதே பேற்றினை நமக்கும் அளிப்பார் என்பது வெள்ளிடை மலை. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் தூய மாசற்ற வாழ்க்கை வாழ முற்படுவோம்.
நம் அன்னையருக்கு மதிப்பளிப்போம்
மரி(அன்னை)க்கு விழா எடுத்து அவரை மகிமைப்படுத்தும் இந்த நாளில் நம்மோடு வாழும் நம் அன்னையருக்கும் நாம் மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். ஏனென்றால் பல நேரங்களில் நாம், பல்வேறு இடங்களில் உள்ள அன்னையின் ஆலயங்களுக்குச் சென்று, அவரை வழிபடுகிறோம். அவர் முன்பாக உருகி நிற்கின்றோம். ஆனால் நம் அன்னையரை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிடுகின்றோம். இது ஒருவிதத்தில் வெளிவேடம்தான். மரியன்னையின் மீது அன்பு வைத்திற்கும் நாம், நம்மைப் பெற்றெடுத்த அன்னையின்மீது அன்புகொண்டு அவருக்கு தக்க உதவிகளைச் செய்யவேண்டும். அப்போதுதான் நாம் அன்னையின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளமுடியும்.
இன்றைக்கு நாம் நம்முடைய அன்னையரை எப்படி பார்த்துக்கொள்கிறோம் என்பதைச் சுட்டிகாட்ட வேடிக்கையாகச் சொல்லப்படும் நிகழ்வு.
அன்று அன்னையர் தினம்! தங்கள் அன்னையை எங்கேனும் வெளியே சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று மகிழ்விக்கவேண்டும் என்று விரும்பிய அவள் பிள்ளைகள், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்வதற்கு ஏற்றவகையில் ஓர் வாகனத்தை ஏற்பாடு செய்தார்கள். சுற்றுலாவுக்கு எடுத்துச் செல்லவேண்டிய தின்பண்டங்கள் தயாரிப்பதில் அவர்களின் அன்னை மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருக்கப் (பாவம்! அந்தத் தாய்க்கு அன்றுகூட ஓய்வு இல்லை!) பிள்ளைகள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு வாகனத்தில் இடம்பிடித்து அமர்ந்தார்கள். கடைசியில் மிஞ்சியிருந்ததோ ஒரே ஓர் இடம்! ஆனால் அங்கே அமர்வதற்காக எஞ்சியிருந்ததோ இருவர்!
ஒருவர் அந்த அன்னையின் கடைசிப் பிள்ளையான மரியான் எனும் சிறுவன், இன்னொருவர் ’விழா நாயகியான’ அந்த அன்னை. இருவரில் யாரை அழைத்துச் செல்வது என்று புரியாமல் வண்டியில் அமர்ந்திருந்தோர் விழிக்க, சுற்றுலாச் செல்லவேண்டும் என்று மிகுந்த ஆசையோடு புத்தாடைகளையெல்லாம் அணிந்துகொண்டு வண்டியில் ஏறத் துடித்துக் கொண்டிருந்த அந்தக் கடைக்குட்டிப் பையன் மரியான், தன் அன்னையின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தான். அந்தப் பார்வையின் பொருளை உடனே புரிந்துகொண்டுவிட்டாள் அன்புவடிவான அந்த அன்னை!. உடனே அவள், ”நான் வயதானவள்; பிறிதொரு சமயம் சுற்றுலாவுக்கு வருகிறேன். மரியானை அழைத்துச் செல்லுங்கள்! அவன் மகிழ்ச்சியாக இருக்கட்டும்!” என்று அன்போடு கூறித் தன் மகனை வாகனத்தில் ஏற்றி அமரச் செய்தாள். வாகனத்தில் அமர்ந்திருந்த அனைவருக்கும் அந்த அன்னை அன்போடு கையசைத்து விடைகொடுக்க, அவளை ஏற்றிக்கொள்ளாமலேயே அந்த வாகனம் மற்றவர்களோடு சுற்றுலாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.
அன்னைக்கு விழா எடுத்த நாளில் அன்னையையே மறந்துபோனது வேதனையிலும் வேதனையான ஒரு செயல். பல நேரங்களில் நாமும் இதே தவற்றைத்தான் செய்துகொண்டிருக்கிறோம்.
ஆகவே, மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவான இன்று மரியன்னைக்கு மகிமை செலுத்துவோம், அதே நேரங்களில் நம்முடைய அன்னையருக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.