விண்ணக மண்ணக அன்னைக்கு பிறந்தநாள்.....!
திருமதி அருள்சீலி அந்தோணி -ஆலந்தூர்
நம் அன்னைக்கு இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்களை அர்ச்சனை மலர்களாகத் தூவி பாதங்களில் சமர்ப்பிப்போம். நம் மரியன்னை வானகத் தந்தையின் சிந்தனையில் வரையப்பட்ட சிறந்த ஓவியம் நமது வாழ்வில் செதுக்கப்பட வேண்டிய காவியம். சிதைக்கப்பட்ட மனித இனத்தின் பெருஞ்செல்வம் தான் மரியாள் உலகமெல்லாம் உதயம் ஆகும் இடம் தாய்மை. உருவாகித் தங்கி உறையுமிடம் தாய்மை கலையில் மூலம் கமழுமிடம் தாய்மை.
இம்மாதம் முழுவதும் அன்னைக்கு விரதம் பூண்டு வீறு நடைபோட்டு விழாக் கோலம் காணச் செல்லும் யாத்திரிகள் கூட்டம் ஏராளம். செப்டம்பர் 8ல் மாபெரும் விசுவாச நாயகி, மண்ணில் அதாவது எருசலேமில் யாவேயின் எளியோர் வழிவந்த சுவக்கின் அன்னம்மாள் தம்பதியருக்கு வயது முதிர்ந்த, தளர்ச்சியுற்றக் காலத்தில் இயற்கையும் கைவிரித்த நேரத்தில், வானகத் தந்தை இறைவன் தன் மானிடத்தின் மீது கொண்ட வேட்கையால் தன் மகனின் பிறப்பை இம் மண்ணில் அவதரிக்கத் தகுதியான அனைத்து வரங்களாலும் நிரம்பிய ஒரு முதிர்ந்தத் தம்பதியரைத் தேர்வு செய்து அவர்கள் வழியே மரியாவைப் பிறக்கச் செய்த நாள் தான் செப்டம்பர் 8.
அன்னை மரியாள் கருவின்போதே கறையொன்றும் இல்லாத இறை மகளாய் அமையப் பெற்றவள் அருள் நிறைந்தவளே! என்று இறைவனின் தூதரால் அழைக்கப் பெற்றவள்! அனைத்து நலன்களுடன் அழகுற மிளிர்பவள் அன்னை மாமரி! இதோ ஆண்டவனின் அடிமை எனத் தன்னையே தாழ்த்தி, இத்தரணிச் சிறக்கத் தன்னையே இறைவனின் திட்டத்திற்கு அர்ப்பணித்து மெசியாவைப் பெற்றெடுத்த புதிய ஏவாள்! மாண்பு நிறைந்த அன்னை, முதல் நற்செய்தியைப் பெற்றுக்கொண்டு மலை நாட்டிற்கு விரைந்து (அதாவது - தூய ஆவியைக் கருவில் தாங்கியதால்) சென்ற பெருமைப் பெற்ற முதல் பெண் நற்செய்தியாளர். அங்கே இரு கருவறைகள் சங்கமத்தில், எலிசபெத்துக்கும், திருமுழுக்கு யோவானுக்கும் இடையே இணைப்பாளர் நம் மாமரி! இங்கே அன்னையின் மனித நேயம் நிறைந்து வழிகின்றது. இங்கே தான் நம் அன்னை அன்பின் நிறை மகுடமானார். இறைவனுக்கும், மனிதனுக்குமிடையே தோன்றிய முதல் உறவுப் பாலமே நம் மாமரியின் பிறப்பு, இவளே இறைவனின் முதல் பிரதிநிதி ! இவளே முதல் பெண் சீடத்தியாகவும், சமூகசேவகியாகவும், இறைவாக்கினளாகவும் அனுப்பப்பட்டாள்.
இறைவனின் மகனைத் தன் உதிரத்தில் தாங்கியதால் அவளது பிறப்பு ஒரு முழுமை பெறுகின்றது. எனவேதான் நம் அன்னை பிறர் குறைகளை நீக்கும் மென்மையான உணர்வுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றாள். நாங்களும் இயேசுவின் மதிப்பீடுகளின் படி வாழ்வோம் என்று உமது பிறந்த நாள் பரிசாக இத்தரணியை அர்ப்பணிக்கின்றோம். அன்னையே! உமது பிறந்த நாள் எங்கள் வாழ்வு மாறும் நாள். உமது பிறப்பை எமது வாழ்வாக்கி எமது பணியை, உமது பாத கமலங்களில் காணிக்கையாக்கி வணங்குகின்றோம்! வாழ்த்துகின்றோம்! வழிபடுகின்றோம்!