குருத்தும் - கருத்தும்
கஸ்மீர் ரோச், சின்னமலை, சென்னை15, 9382709007

தவக்காலத்தின் முத்தாய்ப்பாய் குருத்து ஞாயிறு வந்தது.
காலையில் விரைவாகச் சென்றால் நல்ல குருத்து கிடைக்கும்.
இந்த வேகம் ஏன் மற்ற வாரங்களில் நம்மிடம் காணப்படுவதில்லை ?
வீட்டிலிருந்து வர இயலாதவர், வர மறுப்பவர் யாவருக்கும் உரிமையுடன் குருத்துப் பெற போராட்டம்.
அதே வேளையில் அவ்விதமே அவர்களுக்காகவும், அவர் தம் தேவைக்காகவும் செபிக்கிறோமா ?
கிடைக்கும் குருத்து நிமிர்ந்து நிற்கிறதா ? என ஓர் ஆதங்கம்.
இத்தவக்கால தவமும், செபமும், தியாகமும், நம்மை இறைவன் முன் நிமிர்ந்து நிற்க வைத்துள்ளதா ?
"தாவீதின் மகனுக்கு ஓசன்னா" என வழியெங்கும் பறை சாற்ற பாடகர் குழு தயார்.
பாடல் நமக்குத் தெரியாது என்றோ, வழியில் பாடுவதா ? என மௌன பவனியாக மாற்ற முயல்கிறோமா ?
பவனி முடிவில் அருமையான கூட்டுத் திருப்பலிக்கு அனைத்தும் தயார்.
ஆனால், நம் சிந்தனைத் திறமைகளைத் தட்டி விட்டு, விதவிதமான சிலுவைச் சிற்பிகளாக மாறி விட்டோமா ?
பாதித் திருப்பலியில் அரக்கப் பறக்க வந்து குருத்துக் கிடைக்காமல் நிற்கும் ஒருவருக்கேனும் நம் கையிலிருக்கும் குருத்துப் பரிமாறப்படுகிறதா ?
அவருக்கு ஒரு குருத்து ஓலைப் பகிர மனமில்லையென்றால் நம் தவக்கால முயற்சிகள் எப்படியிருக்கும் ?
மந்திரிக்கப்பட்ட ஒரு பொருளும் தரையில் வீணே எறியக் கூடாது என்பர் பெரியோர்.
ஆனால், இதோ திருப்பலி முடிவில் சிற்பிகள் செதுக்கியது போக
கிழித்தும், கசக்கியும், நசுக்கியும் மீதமான ஓலைகள் தரையில்.
நம் பங்கு என்ன?
இந்தக் குருத்தோலைகள் எப்படிப் பெறப்பட்டது ?
எங்கிருந்து வந்தது ?
இந்த வறட்சியிலும் மனமுவந்து தந்தவர்கள் யார் ?
தைரியமாக மரமேறி வெட்டிய இளைஞர் யாவர் ?
அறிய முயற்சிக்கிறோமா ? அவர்களை மனதாரப் பாராட்டியிருக்கிறோமா ?
இறுதியில் இவர்கள் அனைவருக்காகவும்,
அவர்கள் தியாகத்துக்காகவும் செபிப்போம்.
இவ்வருடக் குருத்து ஞாயிறன்றுக் குருத்தின் முக்கியத்துவத்தை
விடப் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்வோம்.
ஆண்டவரை மகிழ்வுடன் வரவேற்கப் பாக்கியமான
குருத்தோலையைப் பக்தியுடன் இல்லத்தில் அரியணையேற்றுவோம்.