இதுவே தகுந்த காலம்
கேப்டன் பி. சிலுவை, அருள்வாழ்வு-மார்ச் 2014
அன்புடையீர்,
தவக்காலம் ஆண்டு முழுவதும் நாம் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி, மனம் திருந்தும் காலமாகும். இயேசு ஆண்டவர் மனுக்குலத்திற்கு தந்தையிடமிருந்து கொண்டு வந்த நல்ல செய்தி "காலம் நிறைவேறி விட்டது. இறையாட்சி நெருங்கி விட்டது. மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற்கு 1:15)
இந்நாட்களில் ஊடகங்களின் வழியாக நற்செய்தி கூறுபவர்களும் நற்செய்தி கூட்டங்களில் இயேசுவின் கடைசிகால வருகையை பற்றியே அதிகமாக கூறுகின்றார்கள். நம் தாய்திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் நாம் செய்த தவறுகளினால் இறைவனோடு உள்ள உறவில் ஏற்படும் முறிவை புதுப்பிக்க இந்த தவக்காலத்தை மனமாற்றத்தின் காலமாக பிறகடனப்படுத்திக் கொடுத்துள்ளது. இயேசு ஆண்டவர் இந்த நல்ல செய்தியை சொல்லுமுன்பே " இதோ என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உனக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் வழியை ஆயத்தமாக்குங்கள். அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்."(மாற்கு 1:2,3) என்று எசாயா இறைவாக்கினர் முன் மொழிந்தபடி இயேசுவிற்கு முன் வந்த திருமுழுக்கு யோவானும், யூதேயாவில் பாலைநிலத்தில் வந்து, "மனம் மாறுங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கிவிட்டது"(மத்தேயு 3:2) என்று கூறினார்.
எனவே நாம் செய்த தவறுகளினால் இழந்துபோன இறை உறவை புதுப்பிக்கவும், நம்முடைய வாழ்வில் இறைவனது இரக்கத்தையும், ஆசீரையும் பெற இதுவே தகுந்த காலம். பவுலடிகளார் கொரிந்திய சபைக்கு இரண்டாம் திருமுகத்தில் எழுதும்பொழுது "நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றகொண்ட அருளை நீங்கள் வீணாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகிறார். "தகுந்த நேரத்தில் நான் உனக்கு பதிலளிப்பேன். விடுதலை நாளில் உமக்கு துணையாய் இருந்தேன்" (எசா. 49:8) என கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம். இன்றே மீட்பு நாள். (கொரி.6:2,3) என்று பவுலடிகளார் கூறுகிறார். எனவே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற இந்தக் காலத்தை தகுந்த முறையில் பயன்படுத்தி இறைவனோடு உள்ள உறவை அன்பாய் வளர்த்திடுவோம்.
இந்த தவக்காலத்தில் இறைவனின் இரக்கத்தைப் பெற நாம் தவம், செபம், உபவாசம் வழியாக ஆண்டவரை நாம் நமதாக்கி கொள்வோம். யோவேல் தீர்க்கதரிசி வழியாக நம் ஒவ்வொருக்கும் மனமாற்றத்திற்கு ஆண்டவர் அழைப்பு கொடுத்திருக்கிறார்.
"இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் என்கிறார் ஆண்டவர். நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்: நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர்: செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்." (யோவேல் 2:12,13) எனவே கடவுளது அருளையும் இரக்கத்தையும் பெற நம்மையே சோதித்து நம் வாழ்வில் செய்த தவறுகளுக்கு எல்லாம் மனம் வருந்தி மனம் திருந்தி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து கடவுளுடைய உறவில் வளர அன்பாய் கேட்டு கொள்கிறேன். இயேசு ஆண்டவர் பாவத்தில் வாழந்திருந்த சமாரியப் பெண்ணைச் சந்தித்து அவளை மனம் மாற்றினார். அவர் சமாரியப் பட்டணம் முழுவதும் மனம் மாற ஒருகருவியாக தன்னை பயன்படுத்தினாள்.
நாமும் மனமாற்றம் பெற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்களை மனம் மாற்ற முயற்சி செய்வோம்.