திருச்சிலுவையில் திருப்பலியும் திருமுழுக்கும்

Ag. அல்போன்ஸ் திருச்சி


புனித வெள்ளி என்பது, மனித வரலாற்றின் மிக ஆழமான வேதனையும், அதே நேரத்தில் மிக உயர்ந்த மீட்பும் நிகழ்ந்த நாள். அந்த நாளில் இயேசு கிறிஸ்து, மனிதரின் பாவங்களுக்காகத் தம்மையே முழுமையாக அர்ப்பணித்தார்

படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன. (யோவான் 19:34).

1. சிலுவையிலிருந்து வழிந்த இரத்தமும் நீரும்.

இது ஒரு மருத்துவ விவரணம் மட்டும் அல்ல; அது ஒரு தெய்வீக அறிவிப்பு. யோவான் இதைச் சாதாரணமாகக் குறிப்பிடவில்லை. இரத்தமும் நீரும், சிலுவையின் தத்துவத்தைத் திறக்கும் விசையாக இருக்கின்றன.
சிலுவையின் பக்கவாட்டிலிருந்து திருச்சபை பிறக்கிறது. ஆதாமின் பக்கவாட்டிலிருந்து ஏவாள் பிறந்தது போல, புதிய ஆதாமான கிறிஸ்துவின் பக்கவாட்டிலிருந்து புதிய மனித சமூகம் உருவாகிறது. திருச்சபை ஒரு நிறுவனம் அல்ல; அது கடவுளின் ஒரே மகனிடமிருந்து பிறந்த வாழ்க்கை.n இரத்தமும் நீரும் ஒன்றாக வெளிவந்தது என்பது மிகவும் முக்கியமானது. கிறிஸ்தவ தத்துவத்தில் ஆழமான மீட்சி அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. இரட்சிப்பு மன்னிப்பாக மட்டும் அல்ல; மாற்றமாகவும் இருக்க வேண்டும். இரத்தம் பாவத்தை மன்னிக்கிறது; நீர் மனிதனைப் புதுப்பிக்கிறது.


2. இரத்தம் - பாவமன்னிப்பின் அடையாளம்

நற்செய்தியில் இரத்தம் என்பது உயிரின் அடையாளம். இயேசுவின் இரத்தம் வழிந்தது என்பது, அவர் தம் உயிரையே மனிதருக்காகக் கொடுத்தார் என்பதன் வெளிப்பாடு.
ஆட்டுக்குட்டியின் இரத்தம் கதவு திண்ணையில் பூசப்பட்டபோது மரணம் கடந்து சென்றது; இங்குக் கிறிஸ்துவின் இரத்தம் மனித வரலாற்றின் வாசலில் ஊற்றப்பட்டு, மரணத்தின் அதிகாரம் உடைக்கப்படுகிறது. ஒரே முறை, முழுமையான மீட்பை அளிக்கிறது.
இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். (மத்தேயு 26:28)
இரத்தம் சிந்துதலின்றி பாவமன்னிப்பு இல்லை (எபிரேயர் 9:22)
என்பதை விவிலிய பக்கங்களில் வாசிக்கின்றோம்

3. நீர் – தூய்மை மற்றும் புதிய பிறப்பு

நீர், பாவத்திலிருந்து சுத்திகரிப்பு மற்றும் புதிய வாழ்க்கையின் அடையாளம்.
நற்செய்தியில் நீர் என்பது தூய்மை, புதிய வாழ்வு. இயேசு யோர்தானில் திருமுழுக்குப் பெற்றபோது, நீர் அவருடைய பணியின் தொடக்கமாக இருந்தது. இப்போது சிலுவையில், அதே நீர் அவரது பணியின் நிறைவாக வழிகிறது.
சிலுவையில் வழிந்த நீர், திருமுழுக்கின் அடையாளமாக வ
ிளங்குகிறது. “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” (யோவான் 3:5)
இயேசுவின் விலாவிலிருந்து வழிந்த தண்ணீர் திருமுழுக்கு சடங்கை அடையாளப்படுத்துகிறது, இது பாவங்களைத் தூய்மை செய்து புதிய ஆன்மீக வாழ்வை அளிக்கிறது.
திருமுழுக்கு தண்ணீர் மூலம் நிகழும் சுத்திகரிப்பு, இயேசுவின் பக்கவிலாவிலிருந்து வந்த தண்ணீரைப் போல, பாவ மாசை நீக்கி கிறிஸ்துவின் மரணத்தால் உண்டான புதிய பிறவியைச் சேர்க்கிறது. இது யோவான் 3:5 இல் கூறப்பட்டபடி, தண்ணீராலும் ஆவியாலும் பிறப்பதைக் குறிக்கிறது.

4. இரத்தமும் நீரும் – மன்னிப்பும் மாற்றமும்

இரத்தமும் தண்ணீரும் திருமுழுக்கும் நற்கருணையும் ஆகியவற்றால் திருச்சபையை உருவாக்குகிறது; பரிசுத்த இறைவழிபாட்டின் அடையாளங்கள் இரத்தம் பாவத்தை மன்னிக்கிறது;
நீர் மனிதனை மாற்றுகிறது.தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” (யோவான் 4:14)
இரட்சிப்பு என்பது மன்னிப்போடு நிற்காது; புதிய வாழ்வாக மாறுகிறது.n சிலுவையிலிருந்து வழிந்த இரத்தமும் நீரும் கடந்த கால நிகழ்வு அல்ல; அவை இன்றும் திருப்பலியிலும், திருமுழுக்கிலும், விசுவாசிகளின் வாழ்விலும் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

5. சிலுவையில் ஏன் முதலில் இரத்தம், பின்னர் நீர்?

“இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.” யோவான் 19:34
யோவான் இதை வரிசையாகவே எழுதுகிறார். அது தற்செயலானது அல்ல.
இரத்தம் – முதலில் விலை.
நற்செய்தியில், மீட்பு எப்போதும் இரத்தத்தால் தான் தொடங்குகிறது.
இரத்தம் சிந்துதலின்றி பாவமன்னிப்பு இல்லை (எபிரேயர் 9:22)👉
சிலுவையில்:
முதலில் இரத்தம். - பாவத்தின் விலை செலுத்தப்பட்டது
நீதியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
மனிதன் சுத்தமாக்கப்படுவதற்கு முன், பாவத்தின் கடன் அடைக்கப்பட வேண்டும்.
பின்னர் நீர் – மறுபடி பிறக்கும் புதிய வாழ்வு.
சிலுவையில் இரத்தம் முதலில் வந்தது, ஏனெனில் பாவத்தின் விலை முதலில் செலுத்தப்பட வேண்டும். அந்த இரத்தத்தின் பலனாகவே நீர் பாய்ந்தது; அது மனிதனை சுத்தப்படுத்தும் அருளாக மாறியது. இரத்தம் மீட்பை உருவாக்கியது; நீர் அந்த மீட்பை மனிதனுக்குள் கொண்டு வந்தது. அதனால் சிலுவையில் இரத்தம் முதலில், பின்னர் நீர் வந்தது.
நற்செய்தியில் “இரத்தமும் நீரும்” நேரடியாக ஒன்றாக வெளிப்பட்ட ஒரே நிகழ்வு சிலுவையில் தான்.

6. பழைய ஏற்பாட்டில்:

ஆரோனையும் அவன் புதல்வரையும் வரவழைத்து, பாவம்போக்கும் பலிக்காக ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் பலி செய்து …….. தண்ணீரில் குளிக்கச்செய்தார். (லேவியராகமம் 8:2-6)
முதலில் இரத்தப்பலி, அர்ப்பணிப்பு, பின்னர் நீரில் கழுவுதல்.
அதே வரிசை சிலுவையிலும் இயேசு முதலில் இரத்தம் சிந்தி பின்னர் நீரால் சுத்தம் செய்கிறார் மீட்பு இல்லாமல், திருமுழுக்கு அர்த்தமில்லை

7. புனித வெள்ளியின் மறைபொருள்.

இந்த நாளில் இயேசு சிலுவையில் தம்மை மனிதகுலத்திற்காக முழுமையாக அர்ப்பணித்த அன்பை திருச்சபை தியானிக்கிறது. சிலுவை தோல்வியின் அடையாளம் அல்ல; அது தியாகத்தின், மன்னிப்பின் மற்றும் மீட்பின் அடையாளமாக நிற்கிறது. சிலுவையில் அவரது விலாவில் ஈட்டியால் குத்தப்பட்டபோது வெளியே வந்த இரத்தமும் நீரும் இந்த மறைபொருளை மேலும் ஆழமாக வெளிப்படுத்துகின்றன.
இரத்தம் மனிதகுலத்தின் மீட்புக்காகச் சிந்தப்பட்ட தியாகத்தை நினைவூட்டுகிறது;
நீர் மனிதனை சுத்திகரித்து புதிய வாழ்வுக்குள் அழைக்கும் அருளின் அடையாளமாகிறது.
ஆகவே புனித வெள்ளி என்பது துக்கத்தில் முடியும் நாள் அல்ல; சிலுவையிலிருந்து பாயும் இரத்தமும் நீரும் மனிதனை புதுப்பித்து, தேவனுடைய அன்பில் புதிய நம்பிக்கையுடன் வாழ அழைக்கும் இரட்சிப்பின் நாளாகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது