சீமோன் பேதுருவும் யூதாஸ் இஸ்காரியோத்தும்

இான்சோம் அமிர்தமணி

இயேசுவின் மண்ணுலக வாழ்வின்போது அவரோடு உடன் பயணித்த பன்னிருத் திருத்தூதர்களில் சீமோன் பேதுரு, யூதாஸ் இஸ்காரியோத்து ஆகிய இரண்டு சீடர்களும் இருந்தனர்; அவர் ஆற்றிய அருஞ்செயல்களை கண்ணுற்றார்கள்; விண்ணரசு குறித்த அவரது போதனைகளை நேரிலே கேட்டு அறிந்திருந்தார்கள். ஆயினும், அவர்கள் இருவருமே பாவத்தின் பிடியில் சிக்கி போராடிக் கொண்டிருந்தார்கள். பாஸ்கா விருந்து நடந்து முடிந்த இரவிலே இந்த இரண்டு சீடர்களும் இயேசுவுக்கு எதிரான துரோகச் செயலைச் செய்யத் துணிவதை காண்கிறோம். பண ஆதாயம் பெறும் பொருட்டு யூதாஸ் போதகரைத் தலைமை சங்கத்தாருக்குக் காட்டிக் கொடுக்கிறார்; தான் ஆண்டவர் என்றழைத்தவரோடு கொண்டிருந்த பிணைப்பைப் பேதுரு துண்டித்துக் கொள்கிறார். ஆனால், ஒருவர் இயேசுவே மீட்பர் என்பதை தன் ஆழ்மனதில் உணர்ந்திருந்தார். மற்றவர் உடனிருந்த மீட்பரை உணர்ந்து கொள்ளாமல், நம்பிக்கை இழந்து, மீட்படைகின்ற வாய்ப்பையும் இழந்து, தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறார். இருவருமே தங்கள் ஆண்டவருக்கு எதிராகத் துரோகம் செய்தார்கள். ஆனால், ஒருவர் மட்டுமே தனது குற்றத்திற்காக மனம் வருந்தி இயேசுவிடம் திரும்பி வருகின்றார்.

யூதாஸின் வாழ்க்கையிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது ஒன்று உண்டு. “அயலாரை அன்பு செய்”, “தவறேதும் செய்யாமல் நல்வழி நட” - இது போன்ற அருமையான கருத்துகளை எடுத்துச் சொன்ன சீர்மிகு போதகர் இயேசு என்று மட்டுமே இயேசுவைக் கண்ட யூதாஸின் பார்வை சரியானதல்ல. தனது சிலுவைச் சாவை ஏற்பதற்கு முன்பாக நோயுற்றோரை நலமடையச் செய்தல், பசியாய் இருந்த பெரும் மக்கள் கூட்டத்திற்கு உணவு படைத்தல், இறந்தோரை உயிரோடு எழுப்புதல் போன்ற பற்பல அருங்குறிகளால், தான் ஒரு போதகரினும் மேலான வல்லமை கொண்ட தெய்வபிறவி என்பதை இயேசு எண்பித்திருந்தார். உடனிருந்த யூதாஸும் இந்த அருங்குறிகளையெல்லாம் நேரிலே கண்டவர்தான். ஆயினும், இயேசுவை ‘ஆண்டவர்’ என்று விளித்திட யூதாஸ் முனையவில்லை; வெளிதோற்றத்தில் ஏனையத் திருத்தூதர்களைப் போலவே காணப்பட்டாலும், உள்ளத்தின் ஆழத்தில் இயேசுவிடம் திண்மையான பற்றுறுதியை யூதாஸ் கொண்டிருக்கவில்லை. இத்தகைய நம்பிக்கையின்மையே இறுதியில் யூதாஸின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.

ஆனால், மனித வலுவின்மையின் காரணமாகச் சீமோன் பேதுரு, பலமுறை தவறிழைப்பவராக இருந்தாலும், ஆண்டவர் இயேசுவின் மீது உண்மையான நம்பிக்கைக் கொண்டவராக இருந்தார். “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில், நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” (மத்தேயு 16:23) - என்று இயேசு சீமோனை கடிந்து கொள்வதை வாசிக்கிறோம். சீமோன் பேதுருவின் பலவீனம் இயேசுவுக்கு தெரிந்தே இருந்தது. மனதளவில் சீமோன் வலுவற்றிருந்தாலும், தூய ஆவியாரின் துணையோடு இயேசுவின் போதனைகளை ஏற்று, அவரைப் பின்தொடர்ந்தார். இயேசு சிறைபடுத்தப்பட்ட இரவில், தலைமை குருவின் மாளிகை முற்றம் வரையில் வந்த சீமோன், தலைமை சங்கத்தின் கட்டுபாடுகளுக்கு பயந்து, தான் இயேசுவின் சீடர் தான் என்று துணிவோடு சொல்ல அச்சங்கொண்டு, “அந்தப் போதகரை நான் அறியேன்” என்று மறுதலிக்கிறார். ஆயினும், இந்தச் சம்பவத்திற்கு பின்னர் உடனே விசாரணை கூடத்தின் வெளியே வந்து, தான் இழைத்தத் தவறுக்காகத் துயருற்று மனம் வருந்திய சீமோன் பேதுரு, மீண்டும் ஆண்டவரை பின்பற்றிச் செல்வதற்கான உறுதியை மேற்கொள்கிறார்.

பேதுருவின் இந்தச் செயல், கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லோரும் இன்றைய காலக்கட்டத்தில் பின்பற்ற வேண்டிய ஒரு முன்னுதாரணம் ஆகும். கடவுளின் அழைப்பிற்கு செவிமடுத்து, நல்ல நேரத்திலும், கடினமான நேரத்திலும் அவரைப் பின்தொடர்ந்து செல்வோம். தவறிழைத்து குற்றம் புரிந்தாலும், கடவுள் நம்மை மன்னித்து ஏற்றிட எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்திடல் அவசியம்.

தனது பிழையை உணர்ந்து மனம் வருந்தி, ஆண்டவரிடம் திரும்பி வந்து, தனது குற்றங்களை அவரிடம் முறையிடப் பேதுருவின் உள்ளத்தைத் தூண்டியது எது? ஆண்டவரிடம் திரும்பி வந்து, அவருடைய அன்பை ஏற்றுக் கொள்ள தடை செய்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதே தன் தவறுக்கு பரிகாரம் செய்யும் ஒரே வழி என்னும் எண்ணத்தை யூதஸின் மனதிலே உண்டாக்கியது எது? நமது யூகங்கள் எதுவாயினும், மனித மனங்களை அறிந்து கொள்பவர் கடவுள் ஒருவரே என்பதால், பேதுருவும், யூதாஸும் இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்ட அந்த நேரத்தில் அவர்களுடைய எண்ண ஓட்டங்களையும் அவரே அறிந்திருப்பார்.

இயேசு போதித்த அன்பின் செய்தியையும், பாவத்திற்காக மனம் வருந்திட வேண்டும் என்னும் செய்தியையும் இந்த இரண்டு சீடர்களுமே கேட்டிருந்தார்கள். தான் துன்பப்படவும், உயிர் துறக்கவும், பின்னர் உயிர்த்தெழவும் வேண்டும் என்று இயேசு அறிவித்திருந்ததையும் இருவருமே கேட்டிருந்தார்கள். இருவரில் ஒருவர் தன்னைக் காட்டிக் கொடுப்பார், மற்றொருவர் தன்னை மறுதலிப்பார் என்று இயேசு முன்னறிவித்ததும் இவர்கள் இருவருக்கும் தெரியும். தாங்கள் இழைத்த தவறுக்காக இருவருமே மனம் வருந்தினார்கள். கிறிஸ்துவின் அன்பை நாடி மீண்டும் அவரிடம் வருவதற்கான இறையருள், இந்த இரண்டு சீடர்களுக்கும் சந்தேகமின்றி கிடைத்திருந்தது. அவ்வாறு இயேசுவிடம் திரும்பி வரும் சமயத்தில், தனக்கெதிராகக் குற்றம் இழைத்த இவர்களை இயேசு நிச்சயமாக ஏற்றுக்கொள்வார் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமோ, திடமான தடயமோ அல்லது உறுதியான உத்தரவாதமோ அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆக, இருவருமே ஒரே மாதிரியான மனநிலையில், தவறிழைக்கக்கூடிய சாதாரண மனித மனநிலையில் தான் இருந்திருக்கிறார்கள். தங்கள் குற்றத்தை உணர்ந்த உடன், அதற்காக மனம் வருந்துகின்ற உளபாங்கும் அவர்கள் இருவருக்கும் இருந்துள்ளது. பேதுருவிடம் இருந்த ஆழமான பற்றுறுதி, அவருடைய தவறை உணர்ந்து மனங்கசிந்து அழவும், பின்னர் ஏனைய சீடர்களோடு இணைந்து நம்பிக்கையோடு காத்திருக்கவும் தூண்டுகோலாக அமைந்தது. ஆனால், யூதாஸ் தன் தவறை எண்ணி மனம் வருந்தி, தான் பெற்றுக்கொண்ட வெள்ளி காசுகளைத் திருப்பித் தர முன்வந்தாலும், அவருடைய நம்பிக்கை வலுவற்றதாக இருந்ததால், இயேசுவிடம் திரும்பிச் செல்லும் எண்ணத்தை ஏற்படுத்தவில்லை. ஆகவே தான், ஒருவர் திரும்பி வருகிறார்; மற்றவர் தனது உயிரை மாய்த்துக் கொள்கிறார்.

இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டு, தங்கள் தவறை உணர்ந்த பிறகு, இவ்விருவருடைய எதிர்வினைச் செயல்பாடே, பேதுரு - யூதாஸ் ஆகிய இருவருக்கும் இடையே இருந்த வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது. தவறிழைத்தோர் இயேசுவை விட்டு விலகிச் சென்றாலும், இயேசு ஒருபோதும் அவர்களை விட்டு விலகுவதில்லை. நாம் செய்கின்ற பாவங்கள் மிகுந்த பாதிப்பும், வேதனையும் தந்து, கடவுளிடமிருந்து நம்மைப் பிரித்துப் போட்டாலும், கடவுளை நோக்கித் திரும்பிடவும், உடைந்துபட்ட இறைஉறவை சீர்படுத்திக் கொள்ளவும் தேவையான இறையருள் எப்போதுமே நம்முடன் இருக்கிறது. “பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது” என்று புனித பவுல் (உரோ 5:20) கூறுகிறார். பேதுருவும், யூதாஸும் தவறிழைத்து இருண்ட மனநிலையில் இருந்த வேளையிலும், இந்த இறையருள் சந்தேகமின்றி அவர்களிடம் இருந்தது. பேதுரு இந்த இறையருளுக்கு செவிமடுத்து அதன்வழி நடக்கிறார்; யூதாஸோ அந்த அருளை ஏற்றுக் கொள்ளாமல், வேறு பாதையைத் தேர்ந்து கொள்கிறார்.

இரண்டு மனிதர்கள்… இரண்டு மறுதலிப்புகள்… ஆனால், ஒரே பாடத்தைக் கற்றுத் தருகின்ற இருவேறு விளைவுகள்… உண்மையான நம்பிக்கையோடும், உள்ளார்ந்த மனத்துயரோடும் ஆண்டவரிடம் நாம் திரும்பி வரும்போது, ஆண்டவர் இயேசு நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது