தீர்ப்பை எழுதிக் கொண்டு தொடங்கிய வழக்கு
அ.அல்போன்ஸ்-திருச்சி
2000 ஆண்டுகளுக்கு முன்பு உரோம அரசியலில் ஆக்கிரமிக்கப்பட்ட எருசலேமில் இயேசுவை நீதிமன்றத்தில் விசாரணை செய்து மரண தண்டனை தந்த ஒரு வழக்கை வரலாற்றில் எங்குமே கண்டதில்லை.
பாஸ்கா திருவிழா
எகிப்திய அடக்கு முறையை விட்டு வெளியேறியதற்காகவும் மற்றும் வாக்களிக்கப்பட்ட தேசத்தின் வருகையைக் கொண்டாடுவதற்கும் பெருந்திரளான யூதர்கள் இந்தத் திருவிழா நகரத்திற்குள் வந்து கொண்டிருந்தனர். அப்போது நிராதிபதியான இயேசுவின் மீது குற்றங்கள் சுமத்தி சிலுவையில் அறையப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். இயேசுவின் மேல் வெறுப்பு எங்கே தொடங்கியது இயேசுவின் மேல் இவ்வளவு வெறுப்பு? ஏன்? எதற்காக இயேசுவின் மீது கோபப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தன. திரளான மக்கள் கூட்டத்தின் ஆரவாரத்திற்கு நடுவே இயேசு ஊர்வலமாக எருசலேம் நகருக்குள் நுழைந்தார். யூத சங்கம் இது பொது அமைதிக்கு ஆபத்தான கிளர்ச்சி செய்து விடுவாரோ என்று அஞ்சியது.
எருசலேம் பேராலயத்தில் வணிகர்களின் தவறான வியாபாரத்திற்கு எதிராக இயேசு சாட்டையை சுழற்றினார். “என் இல்லம் இறைவனின் வீடு. இதைக் கள்ளர் குறையாக்கிவிட்டீர்கள்” என்று அவர்களை விரட்டி அடித்தார்.
இலாசரை உயிர்ப்பித்தார். யூத சங்கத்தின் அதிகாரத்தை ஆட்டம் காண வைத்தார். யூத சட்டத்தை மறு விளக்கம் செய்துகொண்டிருந்தார். ஓய்வு நாளில் தொடர்பான சட்டங்களை உடைத்து எறிந்தார்.
தன்னை “மெசியா” என்று கூறிக்கொண்டார். இந்தக் கிளர்ச்சி உரோமை அரசுக்கும், யூதர்களுக்கும் இடையான உறவை ஆபத்தில் ஆழ்த்தும் என்று இயேசுவின் எழுச்சியை கண்டு அஞ்சினார்கள்.
யூதசங்கத்தின் திட்டம்
பரிசேயர், தலைமை குருக்கள் இயேசுவை கொல்ல வழி தேடினார்கள். அவர்களுக்குக் காட்டி கொடுக்க யூதாசு தானே முன் வந்தான். ஓநாய் ஒன்று ஆட்டுக்குட்டியை காட்டிக் கொடுக்க ஓடி வந்தது, காட்டியும் கொடுத்தது. இயேசு அதிகாலையில் 2 மணிக்குக் கெத்சமனித் தோட்டத்தில் யூதாசு காட்டி கொடுக்க, அவரைக் கட்டிப்பிடித்து இழுத்துக் கொண்டு வந்தவர்கள். மறுநாள் காலை 10 மணிக்குள் 8 மணி நேரம் ஆறு விசாரணைகளைப் பண்ணினார்கள்.
மூன்று யூதசங்கம் விசாரணைகளும் பிறகு 3 மணி நேரம் உரோமை அரசின் விசாரணையும் நடத்திய மரண தண்டனையை நிறைவேற்றினார்கள்.
சட்டத்தின் மீறல்கள்
இயேசுவை கைது செய்ததிலிருந்து எல்லா விசாரணைகளிலும் யூத சட்டத்தின் விதிமீறல்கள் அநேகம் இருந்தன. யூத தலைவர்கள் தங்கள் சொந்த சட்டங்களைத் தெரிந்து பலவற்றை புறக்கணித்தார்கள்.
இயேசுவை கைது செய்ய எந்த மாதிரி நடைமுறைகள் பின்பற்றினார்கள் என்பதே புரியவில்லை. கைது செய்வதற்கு ஏதாவது உருப்படியான காரணம் இருந்ததா? அந்த உருப்படியான காரணம் - இயேசுவை ஒழிக்க என்பது தான். இயேசுவின் விசாரணைகள் சட்டவிரோதமானவை என்பதற்கு பல காரணங்கள் உண்டு நாம் அதைப் பார்க்கலாம்.
கெத்சமனி தோட்டத்தில்
இங்கே இரவோடு இரவாக இரண்டு மணி அளவில் ஒரு தனிநபரை இயேசுவை கைது பண்ண உரோமானிய காவலர்கள், ஆலய காவல்துறையினர் என்று ஒரு பெரிய படையை யூதர்களின் தலைமையில் வந்து இயேசு
ஆட்டுக்குட்டியை பிடிக்க ஓராயிரம் ஓநாய்கள் ஓடி வருகின்றன. இங்கே விதிமீறல் என்ன?
ஒரு கைதுக்கு அடிப்படையான சரியான குற்றச்சாட்டு எதுவும் இல்லை. சட்டப்பூவமான குற்றப்பத்திரிகை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆயுதமேந்திய கும்பல் தான் கைது செய்தது. அவரைக் கட்டி இழுத்து வந்தார்கள். கயபா முன் கொண்டு வரும் வரை ஒரு குற்றச்சாட்டும் இல்லை.
யூத சட்டம் பண்டிகை காலத்திலும் ஓய்வு நாட்களிலும் மரண தண்டனை அல்லது இரவில் சோதனைகள் இரண்டையும் தடை செய்கிறது.
அன்னா வீட்டில்
கைது செய்த இயேசுவை இரவே அன்னா வீட்டிற்கு கொண்டு வந்தார்கள். யார் அந்த அன்னா? ஓய்வு பெற்ற தலைமை குரு. அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் இன்னும் அவனிடம் அதிகாரம் மையம் தொடர்பில் இருந்தது. அவனுடைய மருமகன் கயபா தான் தற்போதைய தலைமை குரு. உரோமை அரசுக்கும் அன்னாக்கும் உள்ள உறவு கொஞ்சம் அதிகம்.
அவன் வீட்டில் இயேசுவை அழைத்து வந்தது ஒரு சட்டப்பூர்வமான தோல்வியே ஆகும். அன்னா முன்னிலையில் இயேசுவுக்கு தூக்ககிலிட சமிக்ஞை கொடுக்கப்பட்டது. இயேசுவை விசாரித்துவிட்டு கயபா வீட்டிற்கு அனுப்பினான்.
கயபா வீட்டில்:
அதிகாலை 3.30 மணிக்குத் தலைமை குருவான கயபா நீதிமன்றத்திற்கு வழக்கு செல்லுமுன்னே விசாரிக்க ஆரம்பிகின்றான். இரவோடு இரவாக ரகசியமாக விசாரணை. அங்கே மறைநூல் அறிஞர்கள் மூப்பர்களும் கூடியிருந்தனர். இயேசுவை "கடவுளின் மகனாகிய மெசியா நீ தானா?" என்று கேட்க, இயேசுவும் "நான் தான்" என்று கூறியவுடன், கயபா தன் ஆடை கிழித்துக்கொண்டு மரணத்திற்கு தகுதியானவர் என்று கண்டனம் செய்தான்.
இங்கு என்ன விதிமீறல்?
கயபா அனைவரின் உணர்ச்சிகளைத் தூண்றிடுவதற்காகத் தன் மேலங்கியை கிழித்தார். திருப்பொழிவு எண்ணைய் ஊற்றப்பட்டு தலைமைகுருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தலையை அவிழ்க்கவோ, தன் உடைகளையோக் கிழிக்க கூடாது.(லெவி 21:10) விசாரணை நீதிமன்றத்தில் நடத்தப்படுவதற்கு பதிலாகக் கயபாவின் அரண்மனையில் நடக்கிறது. மரண தண்டனை வழக்குகள் இரவில் நடக்க முடியாது. கயபா நடத்திய விசாரணை சட்டவிரோதமானது.
யூத நீதிமன்றம்
விடியக் காலை 6 மணிக்கு இயேசுவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தார்கள். இரவில் அவர்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவே இந்த நீதிமன்றம் வழக்கைத் தொடங்கியது.
குற்றவாளி கூண்டில் இயேசுவை நிறுத்திவிட்டு சாட்சிகளைத் தேடினார்கள் மரண தண்டனைக்கான குற்றசாட்டுகளை கொண்டுவர முடியாததால், சாட்சிகளைத் தேடிக்கொண்டிருந்த நீதிமன்றத்திற்கு இரண்டு குற்றசாட்டுகளே வந்தன.
மரண தண்டனையாக இருப்பதால் சாட்சிகள் இரண்டும் அவர்கள் கூறும் குற்றங்களுடன் எல்லா விதத்திலும் ஒத்துப் போக வேண்டும். இங்கே ஒத்துப் போகவில்லை. பிறகு தள்ளுபடியாக வேண்டும்.
ஆனால் கயபா இயேசுவின் வாக்குமூலத்தை 'நான் மெசியா" என்றதை வைத்து மரணதண்டனை கூறினான். ஆக நீதிமன்றத்திற்கு இயேசுவின் மரணம் நிச்சயமாகப் பட்டுவிட்டது.
நீதிமன்றத்தில் நடைபெற்ற விதிமீறல்கள்
விசாரணை பிரதான உறுப்பினர்களைக் கொண்ட அமர்வு அமருவதற்கான மன்றத்தில் தான் மரண தண்டனை விசாரிக்க முடியும். காலை 6 மணிக்குச் சட்டப்படி நீதிமன்றம் திறக்கவில்லை.
கயபா ஏற்கனவே மரண தண்டனை என்று பகிரங்கமாக அறிவித்தவர், நீதிபதியாகச் செயல்பட்டது தவறு. இது யூத சட்டம்.
பெரும்பாலான நீதிபதியாக இயேசுவை விசாரிக்கச் சட்டப்பூர்வமான தகுதியற்றவர்கள். நியாயமற்ற முறையில் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நீதிபதிகள் பலர் எதிரிகள், லஞ்சம் வாங்கிக் கொண்டு வழக்குக்கு வந்தனர். எந்த விதமான லஞ்சமும் நீதிமன்றத்தில் உறுப்பினரான தகுதி நீக்கம் செய்கிறது. இயேசுவை பிடித்து லஞ்சம் யூதாசுக்கு கொடுக்கப்படுகிறது. சாட்சிகளுக்குச் சத்தியபிரமாணம் செய்யவில்லை. இரண்டு சாட்சிகள் ஒத்துப் போகவில்லை என்று இயேசுவை விடுதலை செய்ய உரிமை உண்டு.
மரண தண்டனைக்கு உட்பட்ட சாட்சிகள் பொய்யாய் இருந்ததால் அந்தச் சாட்சிகளும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவார். இந்தப் பொய் சாட்சிகள் எங்கே போனார்கள்? யூத குருக்களின் ஊழியரான மால்கு என்பவரின் வலது காதைப் பேதுரு அறுத்தவுடன் இயேசு சீடரைக் கடிந்து கொண்டு பின் காதைக் குணப்படுத்தினார். இந்த நிகழ்வு இறைவன் என்ற உண்மையைத் தெளிவாக நிரூபித்தது. இயேசுவை குற்றம் சாட்டபட்டபொழுது மால்கு எங்கே இருந்தார், காட்டிக் கொடுக்க லஞ்சம் வாங்கிய யூதாசையும் காணவில்லை. கயபா 'மெசியா" என்ற குற்றவாளியின் வாக்குமூலத்தினை அடிப்படையில் மரண தண்டனை கூறுகிறார். யூத சட்டப்படி குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்துத் தண்டனை தர முடியாது.
குற்றவாளிக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். இங்கே எதுவும் இல்லை. குற்றவாளிக்குத் தன்னை காத்துக் கொள்ள போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதுவும் இல்லை. யூதசங்க நீதிபதிகளே சாட்சிகளாகி தண்டனையை முடிவு செய்தனர்.
நீதித்துறையின் அப்பட்டமான விதி மீறல்.
நீதிமன்றம் வாக்குச்சீட்டு எடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு ஒரு மனதாகத் தீர்ப்பைச் சொன்னார்கள். இவ்வாறு ஒரு மனதாக எல்லோரும் தீர்ப்பளித்தால் இயேசுவே விடுவிக்க வேண்டும் என்பது யூத சட்டத்தின் விசித்திரமான விதி.
மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பதால் தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன் ஒரு இரவு கால அவகாசம் வேண்டும். ஆறு மணிக்குத் தொடங்கிய வழக்கில் தண்டனை பத்து மணிக்கு நிறைவேற்றப்பட்டது. அது மறுக்கப்பட்ட நீதியின் மற்றொரு எடுத்துக்காட்டு, இரவில் கைது செய்யப்பட்ட இயேசு மறுநாள் காலை 10 மணிக்குச் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.
நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் யூத வழக்கப்படி பிரதான யூத குருக்கள் அவரைக் கல் எரிந்து கொன்றிருக்கலாம். அப்படி செய்தால் எல்லோருமே கொண்டாடும் இயேசுவை கொன்றதால் மக்களிடையே மதிப்பிழந்து விடுவோம் என்று ரோமானிய நீதிமன்றத்தை நாடுகின்றன.
குருக்கள் இயேசு மீது வன்மத்தை கொலைவெறியை நெஞ்சில் வைத்திருந்த கலப்படமற்ற கொடியவர்கள். இயேசுவுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அதிகாரம் இல்லாமல் உரோமஆளுனர் பிலாத்துவிடம் நிறுத்தினார்கள். ஒரு மரண குற்றத்தில் தண்டனையை ரத்து செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தன. தூக்குத்தண்டனை நிறைவேற்றும் வரை. ஆனால் நீதிமன்றத்தின் எல்லா கதவுகளும் மூடப்பட்டன.
பிலாத்தின் அரண்மனை
காலை நேரம் 6:30மணி
இயேசுவைப் பிலாத்துவின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள் குருக்கள், பரிசேயர்கள் பாஸ்காத் திருநாள் தீட்டு என்று கூறி அரண்மனையின் முற்றத்திலேயே நின்று விட்டார்கள். இயேசு மட்டும் அரண்மனைக்குள்ளே அனுப்பப்பட்டார்.
உரோம அரசு இறையியல் காரணங்களுக்காக மக்களைத் தூக்கிலிட மாட்டார்கள். இது அவர்களின் சட்டம். யூத நீதிமன்றத்தில் மெசியா என்றதால் மரண தண்டனையாக உறுதி செய்தவர்கள் பிலாத்துவிடம் இயேசுவை தேசத் துரோகியாகக் குற்றம் சொன்னார்கள்.
செசாருக்கு வரி செலுத்த வேண்டாம் என்று வரி செலுத்துவதை தடை செய்கிறார். இது தேசத்துரோகம் என்றது யூத சங்கம். ஒரு விசாரணையிலிருந்து மறு விசாரணைக்குப் பிலாத்துவிடம் கொண்டு போகும்போது அது தேசத்துரோக வழக்காக மாறி விடுகிறது. இப்போது நாம் புரிந்து கொள்ளலாம். யூத சங்கம் என்ற வல்லரசின் வலிமை கொடூரமானது. தேசத்துரோக வழக்கிற்கு கட்டாயம் மரண தண்டனை தான் அளிக்கப்படும்.
இந்தக் குருமார்கள் அனைவருமே இயேசுவை கொல்ல வேண்டும் என்ற ஒரே முடிவோடு தான் இருந்தனர்.
ஒரு முறை குற்றம் சாட்டப்பட்டால் அது தொடர்ந்து தொடரப்பட வேண்டும் என்பது நீதி. குற்றச்சாட்டை அதன் செயல்முறையை நடுவில் மாற்றக் கூடாது. இயேசுவுக்கு எதிரான நக நடவடிக்கைகளில் துல்லியமாக நடந்தது.
ஓடையின் நடுவே குதிரைகளை மாற்றக் கூடாது என்று பழமொழி.
இயேசுவை விசாரித்த பிலாத்து இயேசுவிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்றார். பிறகு கலிலேயன் என்பதால் இயேசுவை ஏரோதிடம் அனுப்பிவிட்டார்.
இங்கே என்ன விதி மீறல்? முதலில் குற்றப் பத்திரிகையை மாற்றிவிட்டார்கள். பிறகு அவர் அவர்களின் தேசதுரோக வழக்கிற்கு சாட்சிகள் இல்லை. குற்றம் இல்லை என்றதும் இயேசுவை விடுவிக்க வேண்டும். இயேசு செசாருக்கு வரி செலுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை மாறாகச் செசாருக்குரியதை செசாருக்கு கொடுக்கச் சொன்னார்.
ஏரோதின் அரண்மனை
காலையில் நேரம் 7.00 மணி.
ஏரோத்தின் முன்பு இயேசு நிறுத்தப்பட்டார் அவன் கேட்ட கேள்விக்கு எல்லாம் இயேசு பதில் சொல்லவில்லை. ஆசாரியர்களும் குருக்களின் பிடிவாதத்தால் குற்றம் சாட்டினார்கள். ஏரோதே அவரைப் பிலாத்திடம் திரும்ப அனுப்பிவிட்டான்.
பிலாத்து எருசலேமில் இருந்ததால் ஏறுவதற்கு அதிகாரம் இல்லையே?
விதிமிறல் எதுவென்றால் குற்றம் எதுவும் சொல்லவில்லை. திரும்பிய அனுப்பியதால் இந்த ஒழுங்கற்ற நடவடிக்கையும் விதிமீறல் தான்.
மீண்டும் பிலாத்தின் அரண்மனை
காலை 7.30 மணி.
அரண்மனையில் உள்ளே இயேசு கைதியாய் முற்றத்திலே முற்றத்திலோ யூதசங்கம், தலைமை குழுக்கள் மற்றும் திரளான மக்கள் நிற்கின்றார்கள் பிலாத்தின் விசாரணையில் இயேசு குற்றம் அற்றவர் என்று மூன்று முறை கூறினார். தலைமை குழுக்களும் மக்களும் இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லும் என்று உரத்த குரல் கத்துகின்றனர்.
இயேசு ஊர்வலமாக எருசலேம் நகரில் நுழைந்தபொழுது மக்கள் ஓசன்னா என்று கூறி கூறிய சத்தத்தைவிட அதிகமாகக் கேட்டது.
இங்கு என்ன பிழை?
பிலாத்து திரளான மக்களிடம் அவர்களின் விருப்பத்தைக் கேட்கின்றார்.
குற்றமில்லை என்று தண்டனையைக் கொடுப்பது தவறு.
நீதிமன்ற தீர்ப்பை அதற்குண்டான இடத்தில் தான் தீர்ப்பளிக்க முடியும். ஆனால் அரண்மனை முற்றத்தில் இயேசு ஒப்படைக்கப்படுகிறார். அந்தத் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. அது செல்லாது.
பிலாத்தையும் தெரிந்தே ஒரு நிரபராதியை கொன்றுவிட்டார்.
ஒரு யூதர் ரோமானியன் மீது தேசத் துரோகம் குற்றச்சாட்டுக் குற்றம் சாட்டலாம் அல்லது ஒரு ரோமானியனின் யூதர் மீது தேசதுரோகம் குற்றம் சாட்டலாம். இங்கு விசித்திரம் என்னவென்றால் தேசத்தின் மிக முக்கியமான யூதர்கள் தங்கள் சொந்தநாட்டவரை இயேசுவை, நசரேயனான தச்சரை தேசதுரோகம் குற்றம் சாட்டுகின்றார்கள். இன்னும் விசேஷம் என்னவெனறால் யூத நீதிமன்றத்தில் இயேசு குற்றவாளியாகவும் உரோம நீதிமன்றத்தில் குற்றமற்றவராகவும் நிற்கிறார். நீதித் துறை நிர்வாகத்தின் வரலாற்றில் இது இருண்ட பக்கங்கள்.
நீதிமன்றத்தில் கருப்பு தினம்
குற்றம் சாட்டப்பட்ட இயேசுவை தாக்குவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி இல்லை. விசாரணையின் பொழுது இயேசுவே என்னவெல்லாம் செய்தார்கள். அன்னா விசாரணையின் பொழுது ஒரு அதிகாரி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.
கயபா முன் முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். கன்னத்தில் அறைந்தார்கள். பழித்துரைத்தார்கள். பிலாத்து இயேசுவை சாட்டையால் அடிக்கச் செய்தான். ஒரு முள்முடி பின்னி அவர் தலையில் வைத்து, செந்நிற மேலாடையை அணிவித்தான். பின் கன்னத்தில் அறைந்தார்கள்.
விசாரணையின் பொழுது இவ்வளவு கொடூரங்களா?
இல்லை
இன்னும் காத்திருக்கிறது
வாசலில் சிலுவை.
ஏழாவது விசாரணை
இயேசுவை ஆறு விசாரணைகளில் அன்னா, கயபா நீதிமன்றம் பிலாத்து மற்றும் ஏரோது எத்தனை எத்தனை பிழைகள், சட்ட விதிமீறல் மொத்தத்தில் நீதி மறுக்கப்பட்டு விட்டது.
கடைசியாக ஒரு விசாரணை. ஏழாவது விசாரணை. நம் மனது தான் நீதிமன்றம். இங்கே இப்போது இயேசுவை நிற்கின்றார். எவ்வாறு நாம் தீர்ப்பளிக்கப் போகின்றோம்?!