தவக்காலத்தின் தனிச் சிறப்பு

அருள் சகோதரி இமல்டா. தூத்துக்குடி

மனிதனை புனிதனாய் மாற்றத் தகுந்த ஒரு காலம் தான் தவக்காலம். தவக்காலம் ஒரு பொன்னான காலம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னை ஆய்வு செய்து தவறுகளை அகற்றி சரியானவைகளை ஏற்று புனிதனாக வாழ அழைப்பு விடுக்கும் காலம்.

பாவங்களைப் போக்க பரமன் இடுக்கும் அழைப்பு
    மனித நேயத்தை மண்ணிலே வளர்க்க அழைப்பு
    இயேசுகிறிஸ்துவின் திருப்பாடுகளைத் தியானிக்க அழைப்பு
    இயேசுவின் பாதையில் பணிவுடன் செல்ல அழைப்பு
    மனிதனை மனிதனாக மதித்து வாழ விடுக்கும் அழைப்பு
    மன்னித்து மனம் மாறிப் புனிதனாய் வாழ அழைப்பு

இத்தகைய அரியதோர் அழைப்பை ஏற்று, திருமறை நமக்குக் கற்றுத்தந்துள்ள ஒருசில தவழுயற்சிகளை கடைப்பிடிப்பது நமது கடமையும் கட்டளையுமாகும். ஆனால் தவக்காலம் என்றதுமே, நாம் ஒருசில பாரம்பரியங்களையும், படி முறைகளையும் கடைப்பிடிக்கப் பழக்கப்பட்டுள்ளோம்.

திருநீற்றுப்புதன் முதல், பெரிய சனி வரை உபவாசம் இருப்பது, உணவைக் குறைப்பது, மீன், முட்டை, இறைச்சி இவைகளைத் தவிர்ப்பதும், பெண்கள் ஆடம்பரமான காரியங்களைத் தகிர்த்து பூ, பொட்டு வைக்காமயிருப்பது போன்றவைகளைக் கடைப்பிடிப்பது, தான் தவக்காலத்தின் சிறப்பான தவ முயற்சிகளாகக் கருதுகிறோம்.

இரண்டவதாக ஒவ்வொரு நாளும் திருப்பலியில் பங்கேற்பது சிலுவைப்பாதை செய்வது ஜெயமாலை ஜெபிப்பது போன்ற பக்தி முயற்சிகள் தான் தவக்காலத்தில் முக்கியமாகச் செய்ய வேண்டியவைகள் என்று நினைத்துச் செய்பவர்களாக இருக்கின்றோம்.

மூன்றாவதாக, பஸ், வேன்கள் தயார் செய்து பல ஊர்களுக்குச் சென்று 14 சிலுவைப்பாதை செய்வதுதான் தவக்காலத்தின் நிறைவு என நினைத்துச் செயல்பட்டு வருகிறோம்.

நான்காவதாக 40 நாட்களும் காவி உடைகளை உடுத்திக் கொண்டு ஒருசில தவமுயற்சிகளைச் செய்து போன்றவைகளில் ஈடுபாடுள்ளவர்களாகவும் இருக்கின்றோம். இவைகளைத் தான் தவக்காலத்தின் தவமுயற்சிகளாகக் கருதி நாம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

நாம் நடைமுறைப்படுத்தும் அனைத்துமே நல்லதும் வரவேற்கத்தக்கதும், பாராட்டிற்குரியதும் தான். ஆனால் கடந்த காலங்களில் நாம் நடைமுறைப்படுத்திய இத்தவமுயற்சிகள், நம்மில் எத்தனை பேர் உள்ளத்திலோ, எண்ணத்திலோ, சிந்தனையிலோ, வாழ்க்கைமுறையிலோ மாற்றம் அடைந்திருக்கின்றோம். அல்லது மாற்றம் அடைந்தார்களை இனம் கண்டு பாராட்டியிருக்கின்றோம். அவர்கள் நம் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகவும், கிறிஸ்துவின் சாட்சியாக இருப்பதை அறிந்து நாமும் மாற்றமடைய சவால் எடுக்கிறோமா... நம் வாழ்க்கை முறையைப் பற்றிச் சற்று சிந்தித்தும் பார்ப்போமா... சிந்தனையார்கயே சிறந்த மனிதர்களாக முடியும்.

நாம் வழக்கமாக நடைமுறைப்படுத்துவதை செய்யப் வேண்டாம் என்று நான் தடை செய்யவில்லை. அத்துடன் ஒருசிலவற்றை வித்தியாசமாகச் செயல்படுத்திப் பார்க்கலாமே என்பது தான் என் கருத்து. எனவே நமது உணர்வுகளில், நினைவுகளில், சிந்தனைகளில் எண்ணங்களில், வார்த்தைகளில், கண்ணோட்டத்தில் எழும் ஒரு சிலவற்றை செயல்படுத்திப் பார்ப்போமா... ஆரம்பத்தில் கடினமாக இருக்கலாம். இருப்பினும் முயற்சி செய்தால் நம் வாழ்வே முழுமையாக மாறும் என்பது நம் நம்பிக்கையாக இருக்கட்டும். ஆகவே நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் செயல்படுவோம்.

நாம் பொருட்கள் வாங்க சந்தைக்குச் செல்வோமானால், ஒருசில இடங்கள் நாற்றமாக இருக்கும். இது நமக்குக் கஷ்டமாக இருக்கும். ஆனால் அதே இடங்களிலிருந்து பழக்கப்பட்ட மக்களுக்கு அந்த இடம் நாற்றமாகத் தெரியாது. அது போன்று தான் நமக்கும் இருக்கும் மக்களுக்குச் பெலவீனங்களை, பிறரை எவ்வளவு பாதிக்கின்றது என்று நமக்குத் தெரியாது. எனவே நமக்குள் இருக்கும் பெலவீனங்களை அறிந்து அவைகளை மாற்றி நல்ல மனிதர்களாகப் புனிதர்களாக வாழ்வதற்கு உதவியாகக் கொடுக்கப்படும் பண்புகளைப் பயிற்சி செய்து பார்ப்போமா...

யோவான்.2: 16 “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்: என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” நம் உள்ளம் தூய ஆவியின் ஆலயம். அதில் உள்ள தேவையற்ற உணர்வுகளை அப்புறப்படுத்தித் தூய்மையாக வைத்துக்கொள்வோம். சாதாரணமாக நாம் பிறரை இவர்கள் இப்படித்தான் என்று தவறாகத் தீர்ப்பிடுவோம்.

--- தவறாகத் தீர்ப்பிடுதை தவிர்த்து நல்லவர்கள் என்று நினைக்க முயற்சி செய்வோம்.
    --- அடிக்கடி கோடப்படுவதைத் தவிர்த்துப் பொறுமையாக இருக்க முயற்சிப்போம்.
    --- பொறாமை என்ற புற்றுநோய்யை மாற்றிப் பாராட்டக் கற்றுக்கொள்போம்.
    --- சந்தேகம் என்ற துர்க்குணத்தை மாற்றி நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்ள முயற்சிப்போம்.
    --- மன்னிக்க முடியாமல் பகையாக இருப்பவர்கள் உறவை வளர்க்க முயற்சிப்போம்.
    --- பிடிவாதம் என்ற முரட்டுத்தனத்தில் இருப்பவர்கள் விட்டுக் கொடுக்கும் பண்பைப் பயிற்சி செய்வோம்.
    --- அகங்காரத்திலும் ஆணவத்திலும் இருப்பவர்கள் தாழ்ச்சி என்ற பண்பை நமதாக்கிக்கொள்ள முயற்சிப்போம்.
    --- வெறுப்பில் இருப்பவர்கள் அன்பாய் பேச முயற்சிப்பேம்.
    --- பயமும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தைரியாகச் செயல்பட முயற்சிப்போம்.

இன்னும் எத்தனையோ பெலவீனங்கள் நம்முள் மறைந்திருக்கும் அவைகளையும் இனம் கண்டு கொள்வோம். மனிதனின் உள்ளத்திலிருந்து வருவதே தீமைகளை விளைவிக்கும். வெளியிலிருந்து வருவது அல்ல' என்று இயேசு கூறியிருக்கிறார்.

கிறிஸ்து இயேசு நமக்காக நொறுக்கப்பட்டு, காயப்பட்டு, நிந்தை அவமானங்களை ஏற்று கொடூர சிலுவை மரணம் மடைந்த நம் மீட்பர் இயேசுவின் பாடுகளைத் தியானிப்போம். இயேசுகிறிஸ்து கொண்டிருந்த மனநிலையை நமதாக்குவோம். அவரையே ஆடையாக அணிந்துகொள்வோம். நாம் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது புதிதாகப் படைக்கப்பட்டவர்களாய் இருப்போம். பழையன களைத்து புதியனவத்தை உருவாக்கிக் கொள்வோம். நம் பெலவீனங்களிலிருந்து விடுபட்டு மனமாற்றம் பெற்று புது மனிதனாகப் புனிதனாக மாற எடுக்கும் முயற்சியை இயேசுகிறிஸ்து ஆசீர்வதிப்பார். நம் சாட்சிய வாழ்வு பிறரையும் மனமாற்றத்திற்கு இட்டுச் செல்லும். எனவே சோர்த்து போகாமல் வெற்றி பெற அருள் தாரும் என்று ஜெயித்து செயல்படுவோம். ஜெயம் பெறுவோம். இத்தவக்காலம் நம் வாழ்வின் பொன்னான காலமாக இருக்கட்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலம்