எது உண்மையான நோன்பு

அருட்தந்தை அந்தோனிராஜ் - பாளையங்கோட்டை
prayer

பக்தன் ஒருவன் கடுந்தவம் (நோன்பு) புரிந்துவந்தான். ஒரு நாளில் அவன் கடவுளிடத்தில் முறையிடத் தொடங்கினான்.

“கடவுளே! நான் என்னுடைய மதம் போதிக்கின்ற எல்லாக் கோட்பாடுகளையும் தவறாமல் கடைப்பிடித்து வருகிறேன்; கடுந்தவம் புரிந்து, நேரம் தவறாமல் ஜெபித்து வருகிறேன். அப்படி இருக்கும்போது என்னை ஆசீர்வதிக்காமல் என்னுடயை பக்கத்து வீட்டுக்காரனை ஆசீர்வதித்திருக்கிறீர்கள்?, இது உங்களுக்கே நியாயமா? அவன் ஒரு குடிகாரான், ஒழுங்கம் கெட்டவன். ஒருபோதும் ஜெபிப்பதில்லை. அவனைப் போய் ஆசீர்வதித்திருகிறீர்களே?” என்றான்.

உடனே கடவுள் அவனுக்கு முன்பாகத் தோன்றி, “அவனை நான் ஆசீர்வதிப்பதற்குக் காரணம், அவன் உன்னைப் போன்று வளவளவென்று பேசி என்னைப் போரடிக்கமாட்டான், அதனால்தான்” என்றார்.

ஜெபம் என்று சொன்னால் வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இக்கதை ஒரு சாட்டையடி.

நற்செய்தியில் இஸ்ரயேல் மக்கள் கடவுளிடம், “நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்?, நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்று முறையிடுகிறார்கள். அதற்கு கடவுள், “ ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும், சாம்பலையையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும், ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்?.

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!” என்கிறார்.

ஆக உண்மையான நோன்பு / ஜெபம் என்பது வறியவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, அவர்களை மனித மாண்போடு நடத்துவது தானே ஒழிய ஜெபத்தை தவறாது சொல்லிக்கொண்டிருப்பது அல்ல.

நற்செய்தி கூட நோன்பு பற்றிய கேள்வி எழுகிறபோது, அதாவது யோவானின் சீடர்கள் இயேசுவிடம், “நாங்களும், பரிசேயர்களும் நோன்பு இருக்கிறபோது உம்முடைய சீடர்கள் மட்டும் ஏன் நோன்பிருப்பதில்லை?” என்று கேட்கிறபோது இயேசு, “மணமகன் மனவீட்டாரோடு இருக்கும்போது நோன்பிருக்க முடியுமா?, மணமகன் மனவீட்டாரைப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்கள் நோன்பிருப்பார்கள்” என்கிறார்.இங்கே இயேசு கிறிஸ்து நோன்பிருக்க ஒரு காலம் உண்டு என்று சொல்லி அவர்களுக்கு பதிலடி தருகிறார்.

பொதுவாக பெரியவர்கள் சொல்லக்கூடிய கருத்து, “மதத்தைப் பின்பற்றுவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதில் மற்றவர்கள் மூக்கை நுழைக்கக்கூடாது” என்று. யோவானின் சீடர்கள் தவறாது நோன்பிருந்ததில் எந்தவிதத் தவறும் இல்லை. அதற்காக இயேசுவின் சீடர்களும் நோன்பிருக்கவேண்டும் என்று வற்புறுத்தியதுதான் மிகப்பெரிய தவறு.

ஆகவே இந்தத் தவக்காலத்தில் நோன்பு / ஜெபம் என்பதை வெறுமனே கடமைக்காகச் செய்யாமல் பொருள் உணர்ந்து செய்வோம். குறிப்பாக வறியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம். அப்போது எசாயா இறைவாக்கினர் சொல்வது போல “உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்;ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்”.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்