திருநீற்றுப் புதன்


கடந்த ஆண்டில் புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட சாம்பல் இன்றைய திருப்பலியில் புனிதப்படுத்தப்பட்டுப் பூசப்படுகின்றது.

தொடக்கச் சடங்குகளும் வார்த்தை வழிபாடும்

வருகைப் பல்லவி காண். சாஞா 11:24,25,27
ஆண்டவரே, மனிதர் அனைவர் மீதும் நீர் இரக்கம் காட்டுகின்றீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. மக்கள் மனம் வருந்தும்போது அவர்களுடைய பாவங்களைப் பாராமல் இருக்கின்றீர்; நீர் அவர்களை மன்னிக்கின்றீர். ஏனெனில் நீரே எங்கள் இறைவனாகிய ஆண்டவர்.
பாவத்துயர்ச் செயல் விட்டுவிடப்படும்; அதற்குப் பதிலாகத் திருநீறு பூசுதல் இடம் பெறும்.
திருக்குழும மன்றாட்டு
ஆண்டவரே, புனித நோன்புகளின் வழியாகக் கிறிஸ்தவ வாழ்வின் போராட்டத்தைத் தொடங்க எங்களுக்கு உதவியருளும்; அதனால் ஆன்மீகத் தீமைகளுக்கு எதிராக நாங்கள் போரிட்டு, தன்னடக்கத்தின் உதவியால் காக்கப்படுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருநீற்றைப் புனிதப்படுத்துதலும் பூசுதலும்

மறையுரைக்குப்பின் அருள்பணியாளர் நின்றவாறு தம் கைகளைக் குவித்துச் சொல்கின்றார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே, தந்தையாம் கடவுளை நோக்கிப் பணிவுடன் மன்றாடுவோம். தவத்தின் அடையாளமாக நம் தலைகளின் மீது இடப்படும் திருநீற்றைப் புனிதப்படுத்த அவர் இரக்கம் கொள்வாராக.

அமைதியாகச் சிறிது நேரம் மன்றாடியபின், அருள்பணியாளர் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

இறைவா, எங்கள் தாழ்ச்சியின் பொருட்டு நீர் மனம் இரங்குகின்றீர்; பரிகாரங்களினால் மகிழ்கின்றீர்; பக்தியுள்ள எங்கள் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்த்தருளும்: திருநீற்றைப் பூசிக்கொள்ளும் உம் அடியார்கள் மீது உமது ஆசியின் ✠ அருளைக் கனிவுடன் பொழிந்தருளும்; அதனால் நாங்கள் தவக் காலத்தின் தவ முயற்சிகளைப் பின்பற்றி உம் திருமகனின் பாஸ்கா மறைநிகழ்வைக் கொண்டாடவும் தூய்மைப்படுத்தப்பட்ட மனதுடன் வாழவும் தகுதி பெறுவோமாக. எங்கள்.

பதில் : ஆமென்.
அல்லது

இறைவா, பாவிகளின் இறப்பை அன்று, மாறாக அவர்களின் மனமாற்றத்தையே விரும்புகின்றீர். எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருளும். எங்கள் தலைகள் மீது பூசப்பட இருக்கின்ற இச்சாம்பலை உமது பரிவிரக்கத்துக்கு ஏற்பப் ✠ புனிதப்படுத்தத் திருவுளம் கொள்வீராக. அதனால் நாங்கள் சாம்பலாக உள்ளோம் எனவும் மீண்டும் மண்ணுக்கே திரும்புவோம் எனவும் அறிந்துள்ள நாங்கள் ஆர்வமிக்க தவ முயற்சிகளின் பயனாகப் பாவங்களுக்கு மன்னிப்பையும் உயிர்த்தெழும் உம் திருமகனின் சாயலுக்கு ஏற்பப் புது வாழ்வையும் அடைந்திட வலிமை பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். பதில் : ஆமென்.

அருள்பணியாளர் அமைதியாகத் திருநீற்றின்மீது புனித நீரைத் தெளிக்கின்றார்.
பின்னர் அங்கு இருக்கும் அனைவரும் அவரிடம் வருகின்றனர். அவர் ஒவ்வொருவர் மீதும் திருநீற்றைப் பூசிச் சொல்வது:
மனம் மாறி, நற்செய்தியை நம்புங்கள்.
அல்லது
நினைவில் கொள் மனிதா! நீ மண்ணாய் இருக்கின்றாய். மண்ணுக்கே திரும்புவாய்.
இந்நேரத்தில் கீழுள்ள பல்லவிகளைப் பாடலாம்.

பல்லவி-1
நம் உடையை மாற்றி, சாம்பலைப் பூசி, கோணியை அணிந்து கொள்வோம். நோன்பிருந்து ஆண்டவர்முன் அழுவோம்; ஏனெனில் நம் இறைவன் மிகுந்த இரக்கத்துடன் நம் பாவங்களை மன்னிக்கின்றார்.

பல்லவி-2 காண். யோவே 2:17; எஸ் 4:17 ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுத வண்ணம் கூறுவார்களாக: “இரக்கம் கொள்ளும் ஆண்டவரே, உம் மக்கள் மீது இரக்கம் கொள்ளும்; ஆண்டவரே, உம்மைப் புகழ்ந்தேத்தும் வாயை அடைத்துவிடாதேயும்.”

பல்லவி-3 திபா 50:3 ஆண்டவரே, என் குற்றங்களைத் துடைத்தருளும்.

50ஆம் திருப்பாடலின் ஒவ்வோர் அடிக்குப் பின்னும் இப்பல்லவியைப் பாடலாம்.

பதிலுரைப் பாடல் காண். பாரூ 3:2; திபா 78:9

பதில்:
நாம் அறியாமல் செய்த பாவங்களை விலக்கித் திருந்தித் கொள்வோம். ஏனெனில் சாவின் நாள் திடீரென நம்மை எதிர்கொண்டு வந்தால், மனந்திரும்ப நேரம் தேடினாலும் கிடைக்காமல் போகக்கூடும்.

*ஆண்டவரே, எங்களுக்குச் செவிசாய்த்து இரக்கம் காட்டும்; ஏனெனில், உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.

மு.மொ.: எங்களுக்கு மீட்பு அளிக்கும் இறைவா, எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு, ஆண்டவரே, எங்களை விடுவித்தருளும்.

*ஆண்டவரே, எங்களுக்குச் செவிசாய்த்து இரக்கம் காட்டும்; ஏனெனில், உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.

பொருத்தமான வேறு பாடலையும் பாடலாம்.
திருநீறு பூசுதல் முடிந்ததும், அருள் பணியாளர் தம் கைகளைக் கழுவுகின்றார். பொது மன்றாட்டைச் சொன்னபின் வழக்கம் போலத் திருப்பலியைத் தொடர்கின்றார். "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படுவதில்லை.

நற்கருணை வழிபாடு

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, தவக் காலத் தொடக்கமாக அமையும் இப்பலியைச் சிறப்பாக உமக்கு ஒப்புக்கொடுக்க உம்மை வேண்டுகின்றோம்: தவச் செயல்களாலும் பிறரன்புச் செயல்களாலும் நாங்கள் தீய ஆசைகளை அடக்குவோமாக; இவ்வாறு பாவத்திலிருந்து தூய்மை பெற்று, உம் திருமகனின் பாடுகளை ஆர்வமுடன் கொண்டாடத் தகுதி உள்ளவர்களாகத் திகழ்வோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
தவக் காலத்தின் தொடக்கவுரை II அல்லது IV (பக். 525 - 526).

திருவிருந்துப் பல்லவி காண். திபா 1:2-3

ஆண்டவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் உரிய காலத்தில் அதன் கனி தருவார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருவிருந்து எங்களுக்கு உதவ வேண்டும் என உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் நோன்புகள் உமக்கு ஏற்புடையனவாகி நாங்கள் நலம் அடைய உதவுவனவாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு

பிரியாவிடையை முன்னிட்டு அருள்பணியாளர் மக்களை நோக்கி, தம் கைகளை இம்மன்றாட்டைச் சொல்கின்றார்:

இறைவா, மாண்புக்கு உரிய உம் திருமுன் தலைவணங்குபவர்களுக்கு, ஆழமான மனத்துயரைக் கனிவுடன் தந்தருளும்; தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பரிசுகளைத் தவம் புரிவோர் இரக்கத்துடன் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவார்களாக. எங்கள்.

திருப்பலிக்குப் புறம்பே திருநீற்றைப் புனிதப்படுத்திப் பூசலாம். வசதி போல, முதலில் வருகைப் பல்லவி, திருக்குழும மன்றாட்டு, வாசகங்கள், பொருத்தமான பாடல்கள் ஆகியவற்றைத் திருப்பலியில் உள்ளவாறு அதற்குப் பயன்படுத்தலாம். பின்னர் மறையுரையும் திருநீற்றைப் புனிதப்படுத்தி, அதைப் பூசுதலும் நடைபெறும். பொது மன்றாட்டு, ஆசி, நம்பிக்கையாளரின் பிரியாவிடை ஆகியவற்றோடு சடங்கு முடிவுறும்.


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்