விழிகளில் ஒரு வானவில்

எருசலேம் ஆலயத்தின் அமைதியான ஒரு தருணத்தில், வரலாறு மாறும் ஒரு சந்திப்பு நிகழ்கிறது. சட்டத்திற்குக் கீழ்ப்படிந்த பெற்றோர்களாக மரியாளும் சூசையப்பரும், குழந்தை இயேசுவை ஆண்டவருக்குச் சமர்ப்பிக்க ஆலயத்துக்குக் கொண்டு வருகின்றனர்.
அந்தக் கணத்தில், நீண்ட நாட்களாக ஆவியின் வழிநடத்தலால் காத்திருந்த முதியவர் சிமியோன், ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். குழந்தையைத் தன் கைகளில் ஏந்துகிறார்.
சிமியோனின் விழிகளில்.
“சிமியோன் இயேசுவைக் கண்டபோது” அவர் விழிகளில் ஒரு வானவில்”.
வானவில் என்பது புயலுக்குப் பிறகு தோன்றும் சமாதானத்தின், உடன்படிக்கையின். நிறைவேற்றத்தின் அடையாளம். நோவாவின் காலத்தில் பெருவெள்ளத்தின் முடிவில் வானில் தோன்றிய வானவில் போல, நீண்ட காலக் காத்திருத்தலுக்குப் பிறகு, சிமியோனின் விழிகளில் இயேசு ஒரு வானவில்லாக எழுந்தார். அவரது கண்களில் அந்தக் குழந்தை வெறும் மனிதக் குழந்தையல்ல; அது சட்டமும் தீர்க்கதரிசனமும் வாக்குறுதியாகக் கூறிய அனைத்திற்கும் இறைவன் தந்த உடன்படிக்கையின் வண்ணவிளக்கு.
இயேசு மனிதகுலத்துடன் கடவுள் செய்த உடன்படிக்கையின் அமைதியின் அடையாளமாக இருந்தது “இனி பயமில்லை” என்ற உறுதியை தருகிறார்; இஸ்ரயேலின் காத்திருப்பும், உலகின் மீட்பும் ஒன்றாகக் கலந்த ஒளியே அந்த விழிகளில் பிரதிபலிக்கிறது. ஆகவே, சிமியோன் இயேசுவைக் கண்ட தருணம், அவரது கண்களில் நம்பிக்கை நிறமாயும், சமாதான ஒளியாயும் மாறிய இறை–மனித சந்திப்பின் வானவில் ஆகும்.
ஒன்று வானத்தில் வண்ணங்களாக மலர்ந்த வாக்குறுதி, மற்றொன்று மடியில் அமைதியாக உறங்கிய குழந்தை இயேசு. இரண்டும் மனிதகுலத்திற்கு “இனி பயம் இல்லை, நம்பிக்கை உண்டு” என்று மௌனமாகச் சொன்ன தெய்வ சாட்சிகளே.
“மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ளஉமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன.” (லூக்2:30–31) என்று மகிழ்ந்தார்.
கரங்களில் குழந்தை, கண்களில் மீட்பு. பின்னும் மரியாளிடம் ஒரு தீர்க்கதரிசனமாக உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் என்று கூறுகின்றார்.
என் கண்கள் கண்டுகொண்டன.
இங்கே ஒரு விசேஷத்தைக் கவனிக்கலாம்.
சிமியோன் கூறும்பொழுது நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன என்றார்.
“கண்டுகொண்டேன்” என்று மட்டும் சொன்னாலும் பொருள் நிறைவு பெறும். ஆனால் வெகுதெளிவாக “என் கண்களால்” என்று சேர்ப்பது ஒரு ஆழமான–தெய்வீக அர்த்தத்தை உருவாக்குகிறது.
“என் கண்களால்” என்று ஏன் சேர்க்கப்படுகிறது? இங்கே பார்ப்பது கற்பனை அல்ல, கேள்விமூலம் வந்த அறிவு அல்ல பிறர் சொன்ன நம்பிக்கை அல்ல. இது நேரடி, உடல் சார்ந்த, அனுபவச் சாட்சி என்பதைக் காட்டுகிறது. இங்கு “கண்கள்” என்பது வெறும் உடல் கண்கள் அல்ல. அவை: மீட்பை எதிர்பார்த்து விழித்த கண்கள். நம்பிக்கையால் தூய்மையடைந்த கண்கள். தூய ஆவியால் வழிநடத்தப்பட்ட கண்கள். அது ஒரு தெய்வதரிசனம்.
அதனால், “என் கண்களால் கண்டேன்” எனும்பொழுது, நான் வாழ்நாளெல்லாம் காத்திருந்த தரிசனம், இப்போது நிஜமாக என் முன் நின்றது. என்ற தெய்வீக உணர்வைப் பெறுகிறார். விவிலியத்தில் பல இடங்களில் இம்மாதிரி சாட்சி, தரிசன உணர்வையும் தரும் பல சொற்றொடர்கள் காணப்படுகின்றன. ஆம். இவை எல்லாம் நேரடி அனுபவம், வாழ்நாள் சாட்சி, தெய்வீக வெளிப்பாடு என்பவற்றை வலியுறுத்தும் அர்த்தமுள்ள சொற்கள். கொஞ்சம் பார்ப்போம்.
யோவான் நற்செய்தி.
மூன்று அதிகாரங்களை எழுதிய யோவான் தன் முதல் அதிகாரத்திலேயே வெகு அழகாகத் தொடங்குகிறார். தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டுணர்ந்தோம். வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம் என்றனர். (1.யோவான்1:1–2)
யோபு ஆகமம்.
யோபு அனுபவித்த துன்பம் தண்டனை அல்ல; அது மனிதனை திருத்தவும் ஆழப்படுத்தவும் வரும் என்பதாகக் கூறுகிறார். யோபு தன் குறுகிய புரிதலை உணர்ந்து, தாழ்மையுடன் கடவுளை ஒப்புக்கொள்கிறார். “உம்மைப் பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன். ஆனால் இப்பொழுது, என் கண்களே உம்மைக் காண்கின்றன.” (யோபு 42:5). என்று புகழ்கின்றார் இது ஆன்மீக வளர்ச்சியின் உச்ச நிலை.
திருத்தூதர்கள் பணியில்.
சீடர்கள் பயப்படாமல் இயேசுவின் உயிர்த்தெழுதலை சாட்சி சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் நம்பிக்கையில் இணைந்து, திருச்சபை உருவாகிறது. இதற்குக் காரணம் “நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர்” (திருத்தூதர் பணி. 4:20).
இறைவன் வாக்குறுதியின் நிறைவேற்றத்தை உணர்ந்து, உறுதி செய்து, சாட்சியமளிக்கும் மனித அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. என் கண்கள்” என்ற சொல்லாட்சி, விசுவாசம் இப்போது பார்வையாக மாறிய தருணத்தைக் குறிக்கிறது.
இவ்வாறு, பார்வை விசுவாசமாகவும், விசுவாசம் நிறைவேற்றமாகவும் மாறிய உச்ச தருணமே அந்தச் சொல்லாட்சியின் ஆழ்ந்த தத்துவச் சிறப்பு.
உள்ளத்தை ஊடுருவிய வாள்.
சிமியோனின் கண்கள் சுடர்விடத் தொடங்கி உலக மீட்பின் உதயத்தை கண்டன. ஆனால் அவர் கண்ட ஆன்மீகக் காட்சி சிலுவையின் சாயல் கொண்டது. அதைத்தான் மரியாளிடம் ஒரு தீர்க்கதரிசனமாக உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் என்று கூறுகின்றார். அந்த வாள் விவிலியம் முழுவதும் பல நிகழ்ச்சிகளில் மரியாளின் உள்ளத்தைத் துளைத்தது.
சந்தேகத்தின் வாள்.
திருமணத்திற்கு முன் கர்ப்பம், அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். சூசையின் குழப்பமும் மரியாளின் உள்ளத்தில் ஊடுருவிய முதல் நிலை (மத் 1:19)
ஏழ்மை மற்றும் நிராகரிப்பின் வாள்.
வானத்தின் அரசருக்குத் தாயானவள், மண்ணில் தங்க இடம் இல்லை. விடுதி இல்லை. மாடத்தொழுவில் பிரசவம்
பயம் மற்றும் அகதித்தனத்தின் வாள்.
ஏரோதின் கொலை அச்சம். இரவோடு இரவாக எகிப்துக்குத் தப்புதல். குழந்தையைக் காக்க தாய் அனுபவித்த துயரம்.
மகனை இழந்த வேதனையின் வாள். (லூக் 2:41–48)
பன்னிரண்டு வயதில் இயேசு காணாமல் போனார். பதட்டம், கவலை, தேடல் மூன்று நாட்கள் தாயின் உள்ளம் துடித்த நாட்கள்.“
ஆலயத்தில், இயேசு: “என் தந்தையின் காரியத்தில் இருக்க வேண்டும்” என்றது. இது அந்த வாளின் மேலும் ஒரு வேதனை. மகன் தனது தந்தையின் பணியை முன்னுரிமையாகக் கொள்வதை அவள் ஏற்க வேண்டிய நிமிடம்.
புரியாமையின் வாள்.
- இதயத்தில் எழுந்த குழப்பம்
இயேசு போதிக்கும்போது (மாற்கு3:33–35) அவர்களைப் பார்த்து, “என்தாயும் என் சகோதரர்களும் யார்?” என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார். “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்றபொழுது இயேசுவின் பணியை உறவினர்கள் புரியவில்லை. தாய் கூட முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத தருணங்கள்.
இயேசு காட்டிய உறவு இரத்தத்தால் அல்ல. தந்தையின் சித்தத்தை
ஏற்கும் விசுவாசத்தால் என்பதை மரியாள் அடக்கத்திலும் தாழ்மையிலும் ஏற்றுக்கொண்டார்.
நிராகரிப்பைக் காணும் வாள்.
இஸ்ரயேலின் அரசர் என்று ஆடைகளைத் தரையில் விரித்து வரவேற்கப்பட்டவர், பின்னர் மக்கள் அவரைச் சிலுவையில் அறையும் என்றனர்.
சிலுவையின் வாள்.
இயேசுவின் பாதையில், மூத்த ஆசாரியர்கள், பரிசேயர்களின் எதிர்ப்புகள். அவரைச் சிறையடித்து, சாட்டையால் அடித்து, ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிலுவையில் அறைய பட்ட காட்சிகள். மரியாள் மனதில் வாளின் அச்சுறுத்தல் வளர்ந்தது. சிலுவை சுமந்ததை கண்டு இதயம் நொறுங்கினாள். .
சிலுவையின் அடியில்.
மரியாள் நேரில் தன் மகன் கொல்லப்படுவதை கண்டார். இது சிமியோன் கூறிய தீர்க்கதரிசனத்தின் உச்சமான நிறைவு.
இயேசுவின் விலாவில் குத்திய ஈட்டி, மரியாள் இதயத்திலும் வலித்தது. மரியாள் இயேசுவின் உயிரற்ற உடலை மடியில் ஏந்திய காட்சி அந்த வாள் இதயத்தை முழுவதும் ஊடுருவியது.
ஆகவே, சிமியோன் தன் விழிகளில் கண்டது ஒரு குழந்தை அல்ல; ஒரு காலத்தின் நிறைவு, புதிய காலத்தின் தொடக்கம். அவரது கண்களில் மலர்ந்த அந்தப் பார்வை, இன்று நம்மையும் இயேசுவை வெறும் வரலாற்றுப் பாத்திரமாக அல்ல, வாழ்வை மாற்றும் மீட்பராகக் காண அழைக்கிறது


