திருவிருந்தில் உனைஅருந்தி
திருச்சபையின் ஆண்டுத் திருவிழாக்களில் மிக ஆழமான தெய்வீக அர்த்தம் கொண்ட நற்கருணை விழாவைக் கொண்டாடுகிறோம். (Corpus Christi). இந்தத் திருவிழா இயேசு கிறிஸ்து திருவிருந்தில் தம்முடைய உடலும் இரத்தமும் உண்மையாகவே இருக்கின்றன என்பதை நினைவுகூரும் ஒரு விசேஷமான ஆராதனை நாளாகும். திருவிருந்தின் மறைநிலை உண்மையை மக்களுக்குள் வெளிப்படுத்தும் ஒரு தெய்வீக திருநாளில் ஊர்வலமாகச் செல்கிறோம்.
இயேசு “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே” (யோவான் 6:51) என்று கூறிய வாக்குறுதியின் நிறைவேற்றத்தை இந்தத் திருவிழா நமக்கு நினைவுபடுத்துகிறது
1. திருவிருந்தின் தெய்வீக அடித்தளம்
நற்கருணை திருவிழாவின் மையத்தில் திருவிருந்து இருக்கிறது. கடைசி இரவுச்சாப்பாட்டில் இயேசு தமது சீடர்களிடம் அப்பத்தையும் திராட்சரசத்தையும் எடுத்து, “இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்………இது பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்” (மத்தேயு 26:26–28) என்று கூறினார். இந்த நிகழ்வு ஒரு சாதாரண உணவு நிகழ்வு அல்ல; அது ஒரு புதிய உடன்படிக்கையின் ஆரம்பமாகும்.
பழைய ஏற்பாட்டில் கடவுள் மக்களுடன் உடன்படிக்கையை நிறுவியபோது பலி மற்றும் இரத்தம் முக்கியமான அடையாளங்களாக இருந்தன. ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசு தம்மையே பலியாக அர்ப்பணித்து, மனிதகுலத்திற்கான நிரந்தர மீட்சியை வழங்கினார். அதனால் திருவிருந்து என்பது வெறும் நினைவுச்சின்னம் அல்ல; அது கிறிஸ்துவின் தியாகத்தின் உயிருள்ள நிகழ்வாகத் திருச்சபையில் தொடர்ந்து நிகழ்கிறது.
2. திருச்சபையின் ஒற்றுமையின் சின்னம்
நற்கருணை திருவிழா திருவிருந்தை தனிப்பட்ட ஆன்மீக அனுபவமாக மட்டுமல்ல, திருச்சபையின் ஒற்றுமையின் சின்னமாகவும் காட்டுகிறது. ஒரே அப்பத்தில் அனைவரும் பங்கேற்பதால் விசுவாசிகள் அனைவரும் ஒரே உடலாக இணைகின்றனர்.
புனித பவுல் கூறுகிறார்: “அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்.”(1 கொரிந்தியர் 10:17).
இதனால் திருவிருந்து ஒரு சில மனிதர்களை மட்டும் அல்ல; முழு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் தெய்வீக சக்தியாகச் செயல்படுகிறது. இந்த ஒற்றுமை மனிதர்களுக்குள் அன்பு, மன்னிப்பு மற்றும் பகிர்வு ஆகியவற்றை வளர்க்கிறது.
3. திருச்சபையின் பொது சாட்சி
நற்கருணை திருவிழாவில் பல இடங்களில் திருவிருந்தின் ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலம் கிறிஸ்துவின் திரூடல் உலகின் மத்தியில் இருக்கிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் ஒரு விசுவாச சாட்சியாகும். எனவே நற்கருணை திருவிழா நமக்கு ஒரு ஆழமான உண்மையைக் கற்றுக்கொடுக்கிறது: உடைந்த அப்பத்தில் கடவுளின் அன்பு மறைந்துள்ளது; பகிரப்பட்ட அப்பத்தில் மனிதகுலத்தின் ஒற்றுமை பிறக்கிறது. இந்தத் திருவிழா நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்:
- கிறிஸ்து அப்பமாக உடைந்தார்;
- உடைந்த அப்பத்தில் தியாகம் இருக்கிறது.
- பகிரப்பட்ட அப்பத்தில் ஒற்றுமை இருக்கிறது.
- திருவிருந்தில் கடவுளின் அன்பு இருக்கிறது
அப்பத்தை எடுத்து, பிட்டு எம்மாவு சீடர்களுக்குக் கொடுக்கும் வேளையில் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை அறிந்தனர். (லூக்கா 24:30–31) இது திருவிருந்தின் மறைரகசியத்தை மிகவும் ஆழமாக வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு. அவர்கள் கண்கள் திறந்து கிறிஸ்துவை உணர்ந்தது “அப்பம் பிடுதல் மூலமாகவே”. இதைப் போலவே நற்செய்தியில் பல நிகழ்வுகள் உள்ளன; அவை அனைத்தும் திருவிழாவின் தெய்வீக அர்த்தத்தை ஆழமாக விளக்குகின்றன.
முதலில் நினைவுகூர வேண்டியது ஐயாயிரம் பேருக்கு அப்பம் வழங்கிய நிகழ்வு (மத்தேயு 14:13–21). அங்கே இந்த நிகழ்வு ஒரு அற்புதமாக மட்டுமல்லாமல், அது திருவிருந்தின் முன்குறியாகவும் பார்க்கப்படுகிறது. அப்பம் உடைக்கப்பட்டுப் பலருக்குப் பகிரப்பட்டது. உலகத்தின் பசியைத் தீர்க்கும் உண்மையான அப்பம் கிறிஸ்துவே.
இதேபோல் கடைசி இரவு உணவு (மத்தேயு 26:26) திருவிருந்தின் நேரடி நிறுவல் நிகழ்வாகும்.
மேலும் ஒரு முக்கியமான நிகழ்வு. திபேரியக் கடற்கரையில் உயிர்த்தெழுந்த இயேசு சீடர்களுடன் உணவு பகிர்ந்தது (யோவான் 21:9–13). அங்கே சீடர்கள் இரவு முழுவதும் மீன்பிடித்தும் எதையும் பெறவில்லை. உயிர்த்தெழுந்த இயேசு அவர்களை அழைத்துக் கரைக்கு வரச் செய்து, அப்பமும் மீனும் கொடுத்து அவர்களுடன் உணவு பகிர்ந்தார். இந்த நிகழ்வு உயிர்த்தெழுந்த கிறிஸ்து தனது சீடர்களுடன் மீண்டும் ஓர் ஒன்றிப்பை ஏற்படுத்திய தருணமாகும்.
மேலும் மன்னா வழங்கிய நிகழ்வு (யாத்திராகமம் 16) பழைய ஏற்பாட்டில் ஒரு முக்கியமான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. பாலைவனத்தில் இஸ்ரவேல் மக்கள் பசியால் துன்பப்பட்டபோது கடவுள் வானத்திலிருந்து மன்னாவை வழங்கினார்.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றாகக் கவனித்தால் ஒரு ஆழமான தெய்வீக உண்மை வெளிப்படுகிறது. வேதாகமத்தின் பல இடங்களில் அப்பத்தைப் பிடுதல் நிகழ்வு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான சந்திப்பின் தருணமாக இருக்கிறது.
இதுவே திருவிழாவின் ஆழமான தெய்வீகச் செய்தி: அப்பத்தைப் பிடுதல் நிகழ்வில் மறைந்திருப்பவர் உயிர்த்தெழுந்த ஆண்டவர்;
அந்த அப்பத்தைப் பகிரும் திருச்சபையில் அவர் இன்னும் வாழ்கிறார். கிறிஸ்தவ விசுவாசத்தில் அப்பம் மிகவும் முக்கியமான சின்னமாகக் கருதப்படுகிறது. இது வெறும் உணவைக் குறிக்கும் பொருள் அல்ல; அது மனித வாழ்க்கை, கடவுளின் அருள், மற்றும் கிறிஸ்துவின் தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஆழமான ஆன்மீக அடையாளமாக மனித வாழ்க்கையின் அடிப்படை உணவாகவும், கடவுளின் பரிசாகவும், ஒற்றுமையின் சின்னமாகவும் உள்ளது.
கிறிஸ்தவ விசுவாசத்தில் அப்பம் மூன்று முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்துகிறது:
- அது வாழ்க்கையின் அடையாளம்,
- அது கடவுளின் அருளின் பரிசு,
- அது கிறிஸ்துவின் தியாகத்தின் சின்னம்.


