நல்லாயன் இயேசு கிறிஸ்து

திருமதி ஜெபா ராபர்ட் - திருச்சி
good shepherd

பலதரப்பட்ட மக்களையும் வேறுபாடுகளைக் கடந்து கவர்ந்த ஓவியம். இயேசு நல்லாயனாக சித்தரிக்கப்பட்டுள்ள ஓவியம். இயேசுவை பல பெயர்களில் மக்கள் அழைத்தாலும், இயேசு தமக்குத் தாமே சூட்டிக் கொண்ட பெயர்களில் ஒன்று ஆயன். நானே நல்ல ஆயன் என யோவான் 10:11 இல் குறிப்பிடுகிறார். நமக்காக மரித்து, உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியை கொண்டாடும் இந்நாட்களில் நல்லாயனாம் இயேசுவைப் பற்றி தியானிப்பது சாலச்சிறந்ததாகும்.

ஆடுகள்

நல்ல ஆயன் யார்? இயேசு எவ்வாறு நல்ல ஆயனாக செயல்படுகிறார் என்பது பற்றி சிந்திக்கும் முன், ஆடுகளைப் பற்றியும் அதன் குணநலன்களைப் பற்றியும் அறிய வேண்டியது அவசியம். ஆடுகள் ஒன்றை ஒன்று சார்ந்து கூட்டமாக வாழும். அவற்றால் சுயமாக செயல்பட முடியாது. வழி தவறி விடும். ஓன்றை ஒன்று எப்போதும் பின் தொடரும். அவை மிகவும் பலவீனமாளவை. எளிதல் பிற விலங்குகளுக்கு இறையாகும்.

ஆடுகள்-மக்கள்

மேற்கண்ட கூற்றுகளை நோக்கும் போது இயேசுவும் இம்மக்கள் வலக்கைக்கும் இடக்கைக்கும் வேறுபாடு அறியாமல் செய்கிறார்கள் என்ற தந்தை கடவுளின் ஆதங்கத்தை அறிந்தவராய் சுயமாய் செயல்பட முடியா ஆடுகளோடு, மக்களையும் ஓப்புமைப்படுத்தி, தம்மை நல்ல ஆயனாகவும், மக்களை ஆடுகளாகவும் உருவகப்படுத்துகிறார்.

நல்ல ஆயன்

நல்ல ஆயன் எப்படிப்பட்டவர்?, அவர் குணநலன்கள் என்ன? என்பதை திருப்பாடல் 23லும் மற்றும் யோவான் 10லும் காணலாம்.

Good Shepdherd நல்லஆயன் திருடனைப்போல் வேறுவழியாக வராமல் உரிமையுடையவராய் வாயில் வழியே ஆட்டுப்பட்டிக்குள் நுழைவார். நல்லஆயன் தம் ஆடுகளுக்கு பெயர் சொல்லி அவைகளை அழைக்கிறார். பழக்கமான ஆயனின் குரலை ஆடுகளும் அறியும். ஆடுகளைப் பசும்புல் உள்ள இடங்களைக் கண்டறிந்து அங்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார். ஆடுகளின் முன்னே சென்று வழி நடத்துவார். அப்போது தான் காட்டு விலங்குகள் வருவதை முன்னறிந்து, அவற்றிலிருந்து ஆடுகளை மீட்க முடியும். தேவையனில் ஆயன் தன் உயிரையும் கொடுப்பார். ஆனால் கூலியாள் சொந்த ஆயனைப் போல ஆடுகளைக் காப்பாற்றுவதில்லை. தனக்கு இடர் வரும் என அறிந்தால் ஆடுகளை விட்டுவிட்டு ஓடிவிடுவார். நல்ல ஆயன் தம் மந்தையின் ஒரு சிறு ஆடு காணமல் போனாலும் அதை கண்டுபிடித்து மீண்டும் மந்தையில் சேர்க்கும் வரை ஓயமாட்டார்.

நல்ல ஆயன்-இயேசு

இயேசுவும் நல்ல ஆயனாக இருக்கிறார். நம் இதயமென்னும் வாசல் வழியே ஆடுகளாகிய நம்முன் நுழைந்து நம்மை ஆண்டு கொள்கிறார். நாள்தோறும் தம் வார்த்தை எனும் உணவைத் தருகிறார். தூய ஆவி எனும் நீரைத்துந்து இளைப்பாற்றுகிறார். சாவின் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கு போல துன்பங்கள் வரும்போதும் உடன் இருந்து வழி நடத்துகிறார். ஆறுதல் தருகிறார். ஆடுகளாகிய நம்மை மீட்க தம்மையே சிலுவையில் பலியாக்கினார். அதை நாள்தோறும் திருப்பலியில் நிகழ்த்துகிறார். தாம் தேர்ந்தெடுத்த மக்களுக்காக மட்டும் அன்று எல்லா மக்களுக்காகவும் பலியாகிறார். இதனால் ஓரே மந்தையும் ஓரே ஆயனும் எனும் நிலையை ஏற்படுத்துகிறார். ஆடுகளாகிய நாமும் அவரது குரலுக்கு செவிசாய்த்து, அவரின் வழி நடத்துதலை பின்பற்றும் போது வழி தவறாமல் நிலைவாழ்வை சென்று அடைவோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது

தமிழ்க் கத்தோலிக்க இணையத்தளம்-அன்பின்மடல்
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.

https://anbinmadal.org | 2002-2025 | Email ID: anbinmadal at gmail.com