மனமாற்றம் தேவை!

அருள்சகோதரி ஜோவிட்டா, தூய சிலுவை மடம், திருச்சி

உலகம்:

இன்றைய நாகரீக உலகில் பகட்டான வாழ்வையே விரும்புகிறான் மனிதன். பணமும், பகட்டும் நிறைந்த உலகில் உண்மையான அன்பு இல்லை. எங்கு பணமும், பகட்டும் உண்டோ அங்கு அன்பு விலை பேசப்படுகிறது. பாசத்தை பெரிது என்று கருதி குடும்பத்தில் உண்மையான அன்பு செலுத்துபவனை முட்டாள் என்கிறது உலகம். அதனால் அவனது வாழ்வும் நாசமாகிறது. மாறாகத் திருக்குடும்பம் என்று கருதப்படும் இயேசு மரி சூசை வாழ்ந்த குடும்பம் அன்பு, அமைதி, மகிழ்ச்சி நிறைந்த குடும்பமாக ஒருவரை ஒருவர் மதித்து, விட்டு கொடுத்து, மனித மாண்புடன் வாழ்ந்தது. இவர்கள் மூவருமே இறைத் திட்டத்தை ஏற்று வாழ்ந்தனர். அதனால் இயேசு தம் நிலையை விட்டுவிட்டு தந்தையை அன்பு செய்து நமக்காக மண்ணில் பிறந்து உலகின் மீட்பரானார். எனவேதான் அவரின் போதனையை ஏற்று வாழ்ந்த புனித பவுல், "ஒப்பற்ற என் செல்வமே, ஓ எந்தன் இயேசு நாதா! உம்மை நான் அறிந்து உறவாட உள்ளதெல்லாம் இழந்தேன்" என்கிறார். எனவே பணத்தை நம்பியே வாழ்வதை விட்டு, இயேசுவை உற்றுநோக்குங்கள்.

புது வாழ்வு வாழ சகோதர சகோதரிகளே, "நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன் மாதிரியின்படி வாழுங்கள்" என்கிறார் புனித பவுல் (பிலி 3:17). அவர் இவ்வாறு கூறியபடி இயேசுவை தன் மீட்பராக ஏற்று வாழ்ந்தார். "தம்மையே வெறுமையாக்கி, இறைமகன் என்ற நிலையில் இருந்து தாழ்ந்து, அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவிற்குக் கீழ்ப்படிந்து தம்மைத் தாழ்த்திக்கொண்டார்" (பிலி 2:8) இயேசு. அவரின் வழியினைப் பின்பற்றி வாழ்ந்த புனித பவுலுக்கு இயேசுதான் கடவுளின் இறைமகன் என்ற அதிகாரமோ, வல்லமையோ எதையும் வெளிப்படையாகக் காட்டாது தமது பிறப்பு, பாடுகள் வழியாக அன்பு செலுத்தி, மனத்தாழ்ச்சி எனும் பண்புகளால் மனித மாண்பை இம்மண்ணில் விதைத்து பூமியில் புதைக்கப்பட்டார். ஆனால், வெற்றி வீரராக உயிர்த்து, நமக்கு புது வாழ்வு தந்தார்.

அன்பின் சிறப்பு:

அன்பு உள்ள இடத்தில் அமைதி ஆறுபோல் பொங்கி ஓடும். அமைதியும், மகிழ்ச்சியும் அங்கு பொங்கி வழியும். ஆதலால் அன்பு மிகவே மனிதன் மனிதனை இறைசாயலாகக் கொண்டு, அவனை மதித்து அன்பு செலுத்துகின்றான். "நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைபிடித்து, அவரது அன்பில் நிலைத்து இருப்பதுபோல் நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால் என் அன்பில் நிலைத்து இருப்பீர்கள். என் மகிழ்ச்சி நிறைவு பெறவும், இவற்றை உங்களிடம் சொல்லி" (யோவா 15:1-11) முழுமனதோடு பிறரை அன்பு செய்து, மனித மாண்புடன் வளர இயேசு விரும்புகின்றார். எனவேதான் "அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும், அடித்தளமுமாக அமைவதாக" (எபேசி 3:17) என்கிறார் இயேசு. மேலும் அவர் கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதர, சகோதரிகளிடம் அன்பு செலுத்தி (1யோவா 4:21) மனித நேயத்துடன் வாழ்ந்தால்தான் இறைப்பணி செய்ய முடியும் என்கிறார்.

உறவு மலர பகிர்வு தேவை:

நமது அன்றாட வாழ்வில் சக உறவினர்களுடன் பழகும்போது பணம் படைத்தோர் ஒருபுறம், வசதியற்றோர் ஒரு பிரிவு என்ற வேறுபாடு காணப்படுகிறது. காரணம் பணத்திமிர் நம்மை ஆட்டிப் படைக்கிறது. உதவி கேட்டு வரும்போது மனக்கசப்பு ஏற்பட்டு கொடுக்க மறுத்து, உறவு முறிகிறது. ஆயினும் இயேசுவோடு இருந்து சீடர்களும் பணம் தேடியே மீண்டும் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டனர். அவர்கள் இயேசு நம்மோடு இருக்கிறார் என்று நம்பாது, பணம்தான் முக்கியம் என்று எண்ணி சீடத்துவப் பணியை மறந்து விட்டனர். ஏனெனில் அவர்களுள் ஒருமைப்பாடு இல்லை. உண்மையான அன்பும் இல்லை. எப்படியும் வாழலாம் என்று நம்பிக்கை இழந்த சீடர்கள் "தூய ஆவியால் நிரப்பப்பட்ட உடனே தனது பழைய நெறியில் ஊழியம் செய்வதை விட்டு விட்டு தூயஆவி அருளும் புதிய நெறியில் ஊழியம் செய்து (உரோ 7:6) புது வாழ்வு வாழ்ந்தனர். அப் பொழுது பணத்தை மறந்த அவர்கள் பணி வாழ்வில் ஈடுபட்டு "எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்யும் ஆற்றல் உண்டு" (பிலிப் 4:11) என புது வாழ்வு வாழ்ந்து, மன உறுதியுடன் சீடத்துவப் பணியில் ஈடுபட்டனர். அவர்களை நோக்கி இயேசு கூறியதாவது: "தன்னைத்தானே உயர்த்துகின்ற எவரும் தாழ்த்தப் பெறுவர். தன்னைத்தானே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப் பெறுவர்" (மத் 23:12) என்றார். எனவே இறைமகன் இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்கி, பணத்தை மறந்து உண்மையான இறைஊழியம் செய்தனர் சீடர்கள்.

மனமாற்றம் பணி செய்யத் தூண்டுகிறது

தாவீது அரசர் அதிகாரம், பணபலத்தால் தவறு செய்தார். ஆனால் எப்போது தன் தவறை உணர்ந்து கடவுளை அன்பு செலுத்தினாரோ அப்போது மனம் மாறி இறைஅருளைப் பெற்று புதுவாழ்வு வாழ்ந்தார். "கடவுளே, தூயதோர் உள்ளத்தை என் னுள்ளே படைத்தருளும்! உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கிய ருளும்" (திபா 51:10) என்ற அவரது மன்றாட்டும் கேட்கப்பட்டது. எனவேதான் "நான் துன்பத்தில் நடந்தாலும் என் உயிரைக் காப்பவரே" (திபா 138:7) என்றும், "என் துன்ப நிலையைப் பார்த்து என்னை விடுவிப்பவரே" என்றும் இறைவனைப் போற்றுகின்றார். அவ்வாறே விடுதலை பயணத்தில் மக்களுக்காக மன்றாடிய மோசேயின் வேண்டுதலுக்கு இணங்கி, தவறு செய்த மக்களைத் தண்டிக்காது அவர்களை அன்பு செலுத்தி புதிய வழியில் வாழத் தூண்டுகின்றார் கடவுள்.

இறைஇயேசுவும் தம் பணி வாழ்வு முழுவதும் பாவிகளையும். பாவச் செயல்களையும் மன்னித்து அவர்களுக்குப் புது வாழ்வு தந்தார். "அப்பெண் தன் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று, நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள் (யோவான் 4:28) என்று கூறி இறைப்பணியைத் செய்யத் தொடங்கினாள் சமாரியப் பெண். சக்கேயுவும் இயேசுவால் தொடப்பட்டவுடன் மனம்மாறி தன் சொத்தை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தார்.

திரு இருதய ஆண்டவர் இருகரம் விரித்து "சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத் 11:28) என்று இருகரம் விரித்து இதயம் திறந்து தம்மிடம் வர அன்போடு நம்மை அழைக்கிறார். நமது பணியைச் சிறப்புடன் செய்யத் தூண்டுகின்றார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது